தேவ நாமத்துக்கு மகிமை உண்டாவதாக.
காலம் சமீபமாயிற்று,
காலம் நிறைவேறிற்று,
இனிக்காலம்செல்லாது,உலகம் ஒரு கடைசிக் காலத்துக்குள்ளாய் வந்திருக்கிறது.
உலகத்தை எத்தனை வல்லரசுகள் ஆள வேண்டுமென்று தேவன் தீர்மானித்து வைத்தாரோ,
அத்தனை வல்லரசுகளும் ஆண்டுமுடிந்த ஒரு கடைசிக் காலத்துக்குள்ளாய் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த எச்சரிப்பின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் சந்ததியின்
நாட்களிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை சம்பவிக்கலாம் என்று
தீர்க்கதரிசன ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவினுடைய எடுத்துக் கொள்ளலைக் குறித்து அநேகர் அது
சம்பவிக்காததினால் இனி அது சம்பவிக்காது என்ற எண்ணத்தினூடாகக் கடந்து
செல்லக் கூடிய ஒரு வாய்ப்பு ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலையில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரண்டாவது
வருகையைக் குறித்து நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் சொல்லப்
பட்டிருக்கின்றன.
பரிசுத்த வேதாகமத்தின் மிகவும் அடிப்படை உபதேசங்களில் ஒன்று ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையாகும்.
இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்கொள்ளல் வருகை உடனடியாய்ச்
சம்பவிக்காததினாலே, பல வருடமாய் இந்த எச்சரிப்புக்கள் கொடுக்கப்பட்டும்,
இயேசு கிறிஸ்துவினுடைய எடுத்துக் கொள்ளல் வருகை சம்பவிக்காததினாலே ஒரு
சிலர் இயேசு கிறிஸ்து வரமாட்டார் என்ற நம்பிக்கைக்குள்ளாய் கடந்து
செல்கிறதை நாம் காணுகிறோம்.
இயேசு கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகை பற்றிய சந்தேக வினாக்களை
எழுப்புகிறவர்களைப் பற்றி பேதுரு கூறுவதைப் பாருங்கள்.
2பேதுரு3:4ம் வசனத்தில்
அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள்
நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த
விதமாயிருக்கிறதே என்று சொல்வார்கள்.
அவரது வருகையைக் குறித்துக் கேள்வி கேட்கிறவர்களைப் பற்றி பேதுரு
முன்னறிவித்திருக்கிறார்.
9ம் வசனத்தைக் கவனியுங்கள்,
'தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது
வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதமாயிராமல்,
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி,
நம்மேல் பொறுமையுள்ளவராய்இருக்கிறார்'.
அவருடைய வருகை சம்பவிக்காததின் காரணம் என்ன?அவர் தாமதிக்கவில்லை,
ஒருநாளும், ஒருநாழிகையும் குறிக்கப்பட்டிருக்கிறது,அந்தநாளிலே அவர்
வரத்தான் போகிறார்.
ஏன் அவர் அதற்குமுன்னதாக வரவில்லை? எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்று
அவர் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
எப்படி இந்த நாட்கள் கடைசி நாட்கள் என்று சொல்லப்படுகின்றன? எப்படி இந்த
நாட்களைக் கடைசிக்காலம் என்று சொல்லலாம் என்ற கேள்வி ஒரு சிலருடைய
இருதயத்தில் எழலாம்.
அதற்குரியதான ஆராய்ச்சிச் சான்றுகளை சரித்திர ஆதாரங்களோடு உங்களுக்குத்
தெரிவிக்கப்போகிறேன்,
மேலும் உலகத்தில் நடக்கிற மிகமுக்கியமான ஒரு சம்பவம் எப்படி இயேசு
கிறிஸ்துவின் எடுத்துக்கொள்ளல் வருகைக்கு அடையாளமாயிருக்கிறது
என்பதையும், கடைசிநாளிலே எருசலேம் நகரத்தில் நிறைவேறப் போகிற, நிறைவேறிக்
கொண்டிருக்கிற தீர்க்க தரிசனங்களையும் தெரிவிக்கப் போகிறேன் இந்தச்
செய்திகளைக் கேட்கிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது,
வெளிப்படுத்தல்1:3 சொல்கிறது இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை
வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளை கைக்
கொள்ளுகிறவர்களும்பாக்கியவான்கள்,
காலம் சமீபமாயிருக்கிறது.
காலம் சமீபமாயிற்று,
காலம் நிறைவேறிற்று,
இனிக் காலம்செல்லாது.
