ராஜாவை வழிபட்டார்கள்! Dr.தியோடர் வில்லியம்ஸ் பாகம் 3

ராஜாவை வழிபட்டார்கள்! Dr.தியோடர் வில்லியம்ஸ் பாகம் 3 5. குழந்தையைப் பணிந்துகொண்டார்கள் வீட்டில் பிள்ளையையும், அதன் தாயையும் கண்டு சாஷ்டாங்கமாய் விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டார்கள். பதினோராவது வசனத்தை நன்றாகக் கவனியுங்கள். மரியாளை அவர்கள் பணிந்துகொண்டார்கள் என்று கூறவில்லை. மரியாளை யாராவது வணங்கினார்கள் என்று புதிய ஏற்பாட்டிலே நாம் வாசிப்பது கிடையாது. மரியாளை வணங்குவது சரியானதல்ல. மரியாளை வணங்காதபடி பிள்ளையை வணங்குகிறார்கள். இதிலிருந்து இயேசு மாத்திரமே தேவன் என்பது தெளிவாகிறது. இயேசுகிறிஸ்துவைக் கடவுளல்ல எனக் கூறுவது வேதபுரட்டு. கிறிஸ்துவைத் தெய்வம் என்று ஏற்றுக்கொண்டு சாஸ்திரிகள் பணிந்து கொண்டார்கள். அவரைப் பணிந்துகொள்வது மட்டுமல்ல. அவரிலே தங்களுடைய உள்ளத்தின் தேவை தீர்க்கப்படுமென்பதை உணர்ந்துகொள்ளுகிறார்கள். அவரே போது மானவர் என்பதையும் அவர்கள் அறிந்துகொள்ளுகிறார்கள். அந்தக் குழந்தை தேவனானபடியினாலே அவரைத் தொழுதுகொண்டனர். கிறிஸ்துமஸ் நாட்களிலே நம்முடைய வாழ்க்கையிலே தொழுகை இருக்கிறதா என்று நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். எத்தனை விசுவாசிகள் இயேசுவை ஆராதிக்கத் தவறிவிடுகிறார்கள்! காலையில் எழுந்தவுடன் அவருடைய சமுகத்தில் தரித்திருந்து அவரை நீ ஆராதிக்கிறாயா? ஆலயத்திற்குப்போய் மற்ற விசுவாசிகளோடு ஆராதிக்கிறாயா? அவரைத் தனியாக ஆராதிக்கவேண்டும். நம்முடைய ஆராதனைக்கு உரியவர் அவர். வெளிப்படுத்தின விசேஷத்திலே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை இருபத்து நான்கு மூப்பர்களும், சகல சிருஷ்டிகளும் பணிந்து கொள்ளுவதை நாம் பார்க்கிறோம். 6. பொக்கிஷங்களைத் திறந்து காணிக்கை படைத்தார்கள் சாஸ்திரிகள் தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். அவர்கள் கொடுத்தவை விலையேறப்பெற்ற பொருட்கள், அவர்களால் கொண்டுவரக்கூடிய பொருட்கள். அவர்கள் தங்களாலானதைச் செய்தார்கள். கிரயம் செலுத்தி விலையுயர்ந்த பொருட்களை இயேசுவுக்கு ஈவாக அவர்கள் கொடுத்தார்கள். பொக்கிஷங்களைத் திறந்தார்கள் என்று பார்க்கிறோம். நாமும் கிறிஸ்துவுக்குக் காணிக்கை படைக்கும்போது பொக்கிஷங்களைத் திறக்கவேண்டும். எது நமக்கு விலையுயர்ந்ததாகக் காணப்படுகிறதோ, எதை அதிகமாய்ப் பேணி வைத்திருக்கிறோமோ அதை அவருக்குக் கொடுக்கவேண்டும். ஏமி கார் மைக்கேல் அம்மையார் அடிக்கடி “இயேசுவை விட எதுவும் விலையுயர்ந்ததாயிருக்கக் கூடாது” என்று கூறுவார்கள். இயேசுவைவிட எதற்காவது நாம் அதிகமான மதிப்பு கொடுத்திருக்கிறோமா? நம்முடைய வாழ்க்கையைத் திறந்து முழுவதுமாய் அவருக்கு ஒப்புக்கொடுப்போம். உள்ளத்தின் ஆழத்திலே நாம் பேணி வைத்திருக்கும் காரியங்களை ஒப்புக்கொடுப்போம். அவர் நம் முடைய அர்ப்பணத்திற்கும் ஆராதனைக்கும் தகுதியுள்ளவர். 7. வேறுவழியாய்த் திரும்பிப்போனார்கள் மத்தேயு 2:12இல்“பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள்”என்று எழுதியிருக்கிறது. அவர்கள் வந்த வழியே செல்லக்கூடாது, வேறுவழியாகச் செல்லவேண்டுமென்று கடவுள் அவர்களோடு பேசினார். தேவன் அவர்களோடு நட்சத்திரத்தின் மூலமாகவும், வேதவசனங்களின் மூலமாகவும், பிரதான ஆசாரியர்கள் வேதபாரகர்கள் மூலமாகவும் பேசினார். இப்பொழுது சொப்பனத்தின் மூலமாய்ப் பேசினார். நம்மோடு எப்படிப் பேசினாலும் கேட்பதற்கும் கீழ்ப்படிகிறதற்கும் ஆயத்தமுள்ளவர்களாய் நாம் இருக்க வேண்டும். சாஸ்திரிகள் கீழ்ப்படிந்து வேறு வழியாய்ப் போய்விட்டார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் மாறுதல்கள் இருக்க வேண்டும். அவரைத் தொழுதுகொண்டு, அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்ததன் பலனாய் நாம் வேறு வழியிலே செல்லவேண்டும். சுய சித்தத்தின் பாதையிலே சென்றவர்கள் கடவுளின் சித்தத்திலே செல்லவேண்டும். சுய இன்பத்தையும், இச்சையையும் நாடிச் சென்றவர்கள் அவருக்காக வாழவேண்டும். பொய்யைப் பின்பற்றி நடந்தவர்கள் சத்தியத்தின் பாதையிலே நடக்கவேண்டும். அசுத்தத்திலே ஜீவித்தவர்கள் பரிசுத்தத்திலே செல்லவேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.