கடவுள் நமக்காகவே மனிதன் ஆனார்! சகோதரி சாந்தி பொன்னு பாகம் 1

கடவுள் நமக்காகவே மனிதன் ஆனார்! சகோதரி சாந்தி பொன்னு பாகம் 1 கடந்த ஆண்டிலே, 19வயது மாத்திரமே நிரம்பிய ஒரு அழகான வாலிபனுடைய சாவு பல கேள்விகளை எழுப்பிவிட்டிருந்தது. அந்தப் பையன் சாத்தானைத் தொழுது கொள்ளுகின்ற ஒருவன் என்றும், அவனுடைய நடவடிக்கைகளும் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்றும், சாத்தானைத் தொழுது கொள்ளும் ஒரு கூட்டம் மக்களும், தொழுகைக்கான இடமும் நமது தேசத்திலேயே இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலும் அந்த மரணவீட்டிலே நாங்கள் அறிந்த தகவல்கள். இன்று வீதிவிபத்திலே கொல்லப்படுகிறவர்களைக் குறித்தும், கொலைசெய்யப்படுவதால் இறந்துபோகிறவர்களைக் குறித்தும், தீமைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துகின்ற கும்பல்களைக் குறித்தும், இன்னும் பல வேதனையான சம்பவங்களைக் குறித்தும் தினமும் கேள்விப்படுகிறோம். இவர்கள் எல்லோரும் யார்? மனுஷரல்லவா! பாவ இருளில் வாழுகின்ற இவர்களை நாம் எப்போது அடையாளம் காணப்போகிறோம்? குடும்பங்களிலே, திருச்சபையிலே, சுற்றியிருக்கிற சமூகத்திலே வாழுகின்ற இவர்களுக்காகவும் இயேசு பிறந்தாரே! கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நமக்காக மாத்திரமல்ல, இவர்களுடைய பாவங்களுக்காகவும் இயேசு மரித்தாரே! இவர்களுக்கும் விடுதலை உண்டே! இதை யார் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவது! இவை எதையும் அறியாமலே அனுதினமும் செத்து மடிந்துகொண்டிருக்கும் பெருங்கூட்ட மக்களைக் குறித்த பொறுப்பு, கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுகிற கிறிஸ்தவர்களாகிய நம்முடையதுதான் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்”(லூக்.2:10). அன்று தேவதூதரால் மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்ட இந்த செய்தி இன்று நமக்குச் சொந்தமாயிருக்கிறது. அந்த மேய்ப்பர்கள் உடனே எழுந்துபோய் அந்த நற்செய்தியைக் கண்ணாரக் கண்டு, பின்னர் அந்த செய்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள் என்றும், மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள் என்றும் வாசிக்கிறோம் (லூக். 2:15-18). அந்த சுவிசேஷத்தை அறிந்து ஏற்று வாழ்வில் அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் இன்று அந்த சுவிசேஷத்தை என்ன செய்கிறோம்? சோதனையெல்லாம் முடிந்தபின்பு, நாசரேத்துக்கு வந்த இயேசுவானவர், ஓய்வு நாளில் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, எழுந்து நின்று ஏசாயா தீர்க்கனுடைய புத்தகத்தின் ஒரு பகுதியை வாசித்தார். ஏசாயா 61:1-3 வசனங்கள் அடங்கிய இந்தப் பகுதியைப் பார்க்கும் போது, இருதயம் நொறுங்குண்டவர்கள், சிறைப்பட்டவர்கள், கட்டுண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், எல்லாவற்றையும் சேர்த்து முதலாம் வசனத்தில்,‘சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்’என்றே எழுதப்பட்டுள்ளது. இந்த சுவிசேஷம் என்பது என்ன? அந்த சுவிசேஷம்தான் ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்து’. ஆக, இந்த சுவிசேஷம் இன்று சிறுமைப்பட்டவர்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. தேவன் தமது பிள்ளைகளை எழுப்பி, யுத்த பிரதேசங்களிலும், சிறைக்கூடங்களிலும், கவனிப்பாரற்றுக் கிடக்கிற கிராமங்களிலும், தள்ளப்பட்ட ஜனங்கள் மத்தியிலும் சுவிசேஷத்தை அனுப்பி, ஏராளமான மக்களை விடுவித்துக்கொண்டே இருக்கிறார். இந்தப் பிரதேசங்களில் தங்கள் உயிரையும் பாராமல் தேவனுக்காய் உண்மையாய் உழைக்கின்ற தேவஊழியருக்காய் ஆண்டவரைத் துதிப்போமாக. ஆனால், இந்த சுவிசேஷத்தை நாம் என்ன செய்கிறோம் என்பதே கேள்வி?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.