ராஜாவை வழிபட்டார்கள்!
Dr.தியோடர் வில்லியம்ஸ்
பாகம் 2
2. புறப்பட்டார்கள்
அவர்களைப்பற்றிக் கூறப்பட்டிருக்கிற இரண்டாவது காரியம் நட்சத்திரத்தின் மூலமாய் முன்னறிவிக்கப்பட்ட ராஜாவைப் பார்ப்பதற்குப் புறப்பட்டார்கள். எருசலேமுக்கு வந்தார்கள். மத்தேயு 2:1-2இல் “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? …அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்” என்று கேட்டுக்கொண்டு வந்தார்கள். இந்தப் பிரயாணமானது ஒரு எளிதான பிரயாணமல்ல. எத்தனையோ இடையூறுகள் உண்டு. கள்ளர்கள் மூலமாக இடையூறுகள் உண்டு. பல ஆறுகளைத் தாண்டி வரவேண்டும். இன்னும் பல மைல்கள் பாலைவனத்திலே பிரயாணஞ் செய்யவேண்டும். அதை யெல்லாம் அறிந்தும் அந்த நூற்றுக்கணக்கான மைல் பிரயாணஞ்செய்ய அவர்கள் ஆயத்தமாகிப் புறப்பட்டு வந்தார்கள்.
அவர்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தேடிவந்த ராஜா யார் என்று எருசலேமில் யாருக்கும் தெரியவில்லை. ஒருவேளை தவறாக வந்துவிட்டோமோ, தவறான ஒரு காரியத்தை நாடி வந்துவிட்டோமோ என்றெல்லாம் அவர்கள் சந்தேகப்பட்டிருக்கலாம். ஒரு மனிதன் உண்மையான இரட்சகரைத் தேடி புறப்பட்டுச் செல்லும்போது அவனுடைய அனுபவத்தில் பல குழப்பங்களும் சோர்வுகளும் ஏற்படலாம். சாத்தான் அவனைத் தடுத்து நிறுத்தப் பார்ப்பான். சாஸ்திரிகளின் அனுபவத்தில் இதைப் பார்க்கிறோம்.
ஏன் அவர்கள் தங்கள் வழியிலிருந்து தவறினார்கள்? கடவுளின் வழிநடத்தலுக்கு முழுவதும் தங்களை ஒப்புக்கொடுக்காமல் தங்கள் சுய புத்தியைச் சார்ந்துவிட்டார்கள். யூதருக்கு ராஜா பிறந்தால் எருசலேமில்தானே பிறந்திருக்க வேண்டும் என்று யூகித்து, தங்கள் யூகத்தின்படி எருசலேமுக்கு வந்தார்கள். தொடர்ந்து அந்த நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றிருந்தால் ஒருவேளை நேராக பெத்லகேமுக்குச் சென்றிருக்கலாம். நாமும் ஆண்டவரைப் பின்பற்றிச் செல்லும்பொழுது சிலசமயங்களில் அவருடைய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்காதபடி நம்முடைய சுய புத்தியை நம்பிவிடுகிறோம். இது தவறாகும். தேவன் அவர்களுடைய தவறுகளைத் திருத்தி மறுபடியும் அவர்களைச் சரியான வழியிலே கொண்டுவந்து சேர்க்கிறார். அது மிகவும் ஆறுதலான ஒரு காரியம். நாம் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும். அவர் சித்தத்தைச் செய்யவேண்டும் என்கிற உள்ளான வாஞ்சையிலே, அவருடைய பாதையிலே நடக்கும்போது சிலசமயம் தவறு செய்துவிடக்கூடும். அப்படித் தவறினாலும் நம்முடைய உள்ளான வாஞ்சையை அறிந்த தேவன் நம்மை மறுபடியும் திருப்பி சரியான பாதைக்குக் கொண்டு வருகிறார். ஆகையினாலே தீர்மானங்கள் செய்ய நாம் தயங்கக்கூடாது. தவறான தீர்மானத்தைச் செய்துவிடுவோமோ என்று சொல்லித் தயங்கி நிற்கக்கூடாது. நம்முடைய உள்ளத்தின் நோக்கமும் ஒப்புக்கொடுத்தலும் சரியாயிருந்தால், அவர் நம்முடைய தீர்மானத்தின் தவறுகளைத் திருத்தி நம்மைச் சரியான வழியிலே நடத்துவார். சாஸ்திரிகளின் வாழ்க்கையிலே இதைப் பார்க்கிறோம்.
எருசலேமுக்குப் போன சாஸ்திரிகள் ஏரோதினிடத்திலே, தாங்கள் எதற்காக வந்தோம் என்று கூறுகிறார்கள். ஏரோது உடனே பழைய ஏற்பாட்டு வசனங்களை அறிந்த பிரதான ஆசாரியர்களையும், வேதபாரகர்களையும் அழைத்து அவர்களிடத்தில் விசாரிக்கிறான். அவர்கள் மூலமாய் திருமறையிலிருந்து பெத்லகேமிலே யூதருக்கு ராஜா பிறப்பார் என்று கண்டுகொள்ளுகிறார்கள். இப்படி சாஸ்திரிகள் மறுபடியும் தங்களுடைய வழியைக் கண்டுபிடித்தார்கள். அவர்களால் வேத வசனங்களை அறியமுடிய வில்லையானாலும், பிரதான ஆசாரியர்கள் மூலமாகவும், வேதபாரகர்கள் மூலமாகவும் வேதம் அவர்களுக்கு விளக்கப்படுகிறது. கடவுள் நம்மை அற்புதமான வழிகளில் நடத்துகிறார். படிப்படியாக நடத்துகிறார்.
3. மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்
மத்தேயு இரண்டாம் அதிகாரம் பத்தாவது வசனத்திலே“மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்”என்று பார்க்கிறோம். தேவனால் அவருடைய சித்தத்தில் வழி நடத்தப்படுகிறவர்கள் நிச்சயமாக வாழ்க்கையிலே மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
4. வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்
“வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்”என்று மத்தேயு இரண்டாவது அதிகாரம் பதினோராவது வசனத்திலே பார்க்கிறோம்.“வீடு”என்று கூறப்பட்டிருக்கிறது. இயேசு பிறந்தது மாட்டுத் தொழுவத்திலே. ஆனால் இப்பொழுது மரியாளுக்கும், யோசேப்புக்கும், குழந்தை இயேசுவுக்கும் ஒரு வீடு கிடைத்துவிட்டது. ஆகையினாலே இயேசு பிறந்து சில மாதங்களாகியிருக்க வேண்டும். சாஸ்திரிகளை வழிநடத்திக் கொண்டுவந்த அந்த அற்புத நட்சத்திரம் அங்கே நின்றுவிட்டபடியினாலே அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்.
