ராஜாவை வழிபட்டார்கள்! Dr.தியோடர் வில்லியம்ஸ் பாகம் 1

ராஜாவை வழிபட்டார்கள்! Dr.தியோடர் வில்லியம்ஸ் பாகம் 1 மத்தேயு எழுதின நற்செய்தி நூலின் இரண்டாவது அதிகாரம் முதல் பன்னிரண்டு வசனங்களிலே ராஜாவைத் தொழுது கொண்டவர்களைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அவர்களை சாஸ்திரிகள் என்று மத்தேயு அழைக்கிறார். இந்தச் சம்பவம் மத்தேயு எழுதின நற்செய்தி நூலிலே மட்டும் கூறப்பட்டிருக்கிறது. சாஸ்திரிகளைப் பற்றி அநேக கதைகள் உண்டு. மூன்று சாஸ்திரிகள் என்று நாம் சாதாரணமாய் கூறுகிறோம். ஆனால் திருமறையிலே எத்தனை சாஸ்திரிகள் என்று கூறப்படவில்லை.“கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்”என்று மட்டும் முதல் வசனத்திலே குறிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பாரசீகராய் இருக்கவேண்டும் என்று அநேக வேத அறிஞர்கள் கருதுகிறார்கள். பாரசீகர்கள் அந்த நாட்களிலே பலவிதமான மார்க்க ஆசாரங்களிலே ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிலே சாஸ்திரிகள் என்று அழைக்கப்படுகிறவர்கள் ஆசாரியர்களாய் இருந்திருக்க வேண்டும். சாஸ்திரிகள் தத்துவ சாஸ்திரத்திலும் இன்னும் பலவிதமான விஞ்ஞானக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்தார்கள். கனவுகளுக்கு விளக்கம் கொடுப்பதும், எதிர்காலத்தை முன்னறிவிப்பதும் அவர்களுடைய பணியாய் இருந்தது. வானத்தை ஆராய்ந்துபார்த்து, நட்சத்திரங்களைக் கண்காணிப்பதிலும், அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தங்களுடைய நாட்களைக் கழித்தார்கள். வான சாஸ்திரத்திலே அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்தார்கள். வானத்திலுள்ள நட்சத்திரங்கள் மனிதர்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்றும் வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் படித்தால் பூமியில் நடக்கும் சம்பவங்களை அறிந்துகொள்ளலாம் என்றும் அவர்கள் நம்பினார்கள். அந்த சாஸ்திரிகள் உண்மையான கடவுளைத் தேடினவர்களாய் இருந்திருக்கவேண்டும். ஆகையினால்தான் கடவுள் இவ்விதமான ஒரு வெளிப்பாட்டை அவர்களுக்குக் கொடுத்தார். திருமறையிலே யூத குலத்தைச் சேராத மக்களும் உண்மையான கடவுளைத் தேடி நம்பினார்கள் என்று நாம் பார்க்கிறோம். மெல்கிசேதேக்கு அப்படிப்பட்டவர்களில் ஒருவன்; பிலேயாமும் ஒருவன். அதேபோல அந்த சாஸ்திரிகளும் அவ்விதமான விசுவாசமுள்ளவர்களாய் இருந்திருக்க வேண்டும். அவர்களைப்பற்றி இந்த வேத பகுதியிலே ஏழு காரியங்களைத் திட்டவட்டமாக நாம் காணலாம். 1. நட்சத்திரத்தைக் கண்டார்கள் முதலாவது, அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டார்கள். அவர்கள் தேவன் மூலமாக வழி நடத்தப்பட்டார்கள். ஆகையினாலே கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட அந்த நட்சத்திரத்தைக் கண்டார்கள். வானத்தை ஆராய்ந்து பார்த்து நட்சத்திரங்களைப் படிப்பதன் மூலமாய் மனித வாழ்வின் இரகசியங்களை அறிந்து கொள்ள எண்ணியிருந்த சமயத்திலே அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டார்கள். மனித வாழ்வின் இரகசியங்கள் வானத்திலேதான் இருக்கின்றன என்பதை அவர்கள் திட்டவட்டமாய் நம்பினார்கள். தேவனைப் பற்றி அறிய அவர்கள் வாஞ்சையுள்ளவர்களாய் இருந்தபடியினாலே, அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த சித்தங்கொண்டார். மற்ற மார்க்கங்களிலே இயேசுகிறிஸ்துவைப் பற்றி கேள்விப்பட முடியாத நிலையில் இருக்கிறவர்களுக்குத் தம் சொந்த வழியிலே தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார். வடநாட்டிலே ஒரு வாலிபன் சிறுவயதிலேயே பாவ மன்னிப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தான். தன் பள்ளிக்கூட ஆசிரியர்களிடத்திலெல்லாம் அதைப்பற்றிக் கேட்டான். அவர்கள் தங்களுடைய மத நூல்களிலே அதைக் காணும்படி அவனுக்குப் புத்தி சொன்னார்கள். ஆனால் அவற்றில் அவனால் பாவ மன்னிப்பைக் கண்டு கொள்ள முடியவில்லை. அங்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள் ஒருவரும் கிடையாது, ஒரு கிறிஸ்தவனும் இல்லை. இப்பேர்பட்ட நிலையிலே ஒருநாள் அவன் சிலுவைக் காட்சியைத் தரிசனமாகக் கண்டான். குழப்பமுற்றவனாய் அதைத் தன் நண்பன் ஒருவனிடத்தில் கூறி விளக்கம் கேட்டபோது அந்த நண்பன், “ஐம்பது மைல் தூரத்தில் கிறிஸ்தவ பிரசங்கிமார் இருக்கிறார்கள், நீ போய் அவர்களைக் கேட்டால் விளக்கம் கூறுவார்கள்” என்று கூறினான். அவன் ஐம்பது மைல் கடந்துவந்து இந்தியன் இவாஞ்சலிக்கல் மிஷனைச் சேர்ந்த எங்களுடைய மிஷனெரிகளைச் சந்தித்தான். அவர்கள் மூலமாக கிறிஸ்துவைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரை நம்பினான். உண்மையான வாஞ்சையோடு தேடுகிறவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார் தேவன். கி.மு. பதினோராவது ஆண்டு, கி.மு. ஏழாவது ஆண்டு, கி.மு. ஐந்தாவது ஆண்டு இப்படிப் பல தடவைகள் வானத்திலே அடையாளங்கள் காணப்பட்டன. வால் நட்சத்திரம் காணப்பட்டது என்று அந்நாட்களில் வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையினாலே வானத்திலே ஏதோ ஒரு அடையாளம் அந்த சமயத்திலே ஏற்பட்டது என்பது நிச்சயமாகிறது. அது நட்சத்திரமாயிருந்திருக்க முடியாது. வால் நட்சத்திரமாயிருந்திருக்கலாம். அற்புதமான ஒரு அடையாளம் வானத்தில் காணப்பட்டது. அது அந்த சாஸ்திரிகளை வழிநடத்திற்று. கடவுள் அதன்மூலமாய் அவர்களோடு பேசினார். தேவன் நம்மைத் தம்முடைய வசனத்தின் மூலமாகவும் சூழ்நிலைகளின் மூலமாகவும் சம்பவங்களின் மூலமாகவும் மற்ற மனிதர் மூலமாகவும் நடத்துகிறார். அந்த சாஸ்திரிகள் வேத வசனங்களை அறிந்திராதபடியினாலே அவர்களுக்குத் தெரிந்த ஒருமுறையின் மூலமாய் அவர்களை நடத்துகிறார். அவர்கள் அறிந்ததெல்லாம் வானத்திலுள்ள நட்சத்திரங்கள்தான். ஆகையினாலே வானத்திலுள்ள ஒரு அடையாளத்தின் மூலமாய் அவர்களை அவர் நடத்துகிறார். ஒரு அதிசய ராஜா பிறந்து விட்டார். கடவுள் மனித உருவாய் தோன்றிவிட்டார் என்பதை அவர்கள் உணர்ந்து அவரைக் காண்பதற்காகப் புறப்பட்டார்கள். நம்முடைய ஆவிக்குரிய நிலைக்கேற்றபடியும் நமக்குக் கிடைத்த வெளிச்சத்திற்கு ஏற்ற படியும் தேவன் நம்மை நடத்துகிறார். ஆனால் நமக்குக் கிடைத்த வெளிச்சத்திலே நாம் நடக்கவேண்டும். தங்களுக்குக் கிடைத்த வெளிச்சத்திலே சாஸ்திரிகள் நடந்தார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.