வாழ்க்கையின் இலட்சியத்தை அடைந்தவர் சிமியோன் சகோ.ஆ.பிரேம் குமார் பாகம் 4

வாழ்க்கையின் இலட்சியத்தை அடைந்தவர் சிமியோன் சகோ.ஆ.பிரேம் குமார் பாகம் 4 5. ஆண்டவரின் வார்த்தையை அறிவித்தவர். “பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்” (லூக்.2:34,35). சிமியோன் தீர்க்கதரிசனமாக அறிவித்த காரியங்களை மேற்குறிப்பிட்ட வசனங்களில் காண்கிறோம். அநேகர் கிறிஸ்துவைக் குறித்து இடறலடைவார்கள், விழுவார்கள், மற்றவர்கள் எழுவார்கள். ஒரு பட்டயம் மரியாளின் ஆத்துமாவை ஊடுருவும் என்கிறார். இங்கு கிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி சிமியோன் முன்னறிவிக்கிறார். அந்த கொடிய மரணத்தை மரியாள் கண்ணால் காணும் கொடிய வேதனையைப் பற்றியே, அவர் இப்படி ஒரு பட்டயம் ஆத்துமாவை ஊடுருவும் எனக் கூறுகிறார். சிமியோன் மேசியாவைப் பற்றியும் அவரது மரணம் பற்றியும், புறஜாதிகள் மேசியாவினால் ஆசீர்வாதமடைவது பற்றியும் அறிவிக்கிறார். சிமியோனின் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் 1. ஆண்டவர் உண்மையுள்ளவர், அவர் கொடுத்த வாக்கை அவர் நிறைவேற்றுவார். எனவே நம்பிக்கையை தளரவிடாமல் விசுவாசத்தோடே காத்திருக்க வேண்டும். 2. ஆண்டவர் பயன்படுத்துவதற்கு வயது ஒரு தடையல்ல. யோசேப்பு எகிப்தின் அதிபதியானபோது அவருக்கு வயது முப்பது. நாகமானை தேவஊழியனிடம் வழிநடத்தியது ஒரு சிறுமி. மோசே தேவ ஊழியத்திற்கு அழைக்கப்பட்டது 80 வயதில். காலேப் மலைப்பிரதேசத்தை கேட்டபோது அவரது வயது 85. வயது முதிர்ந்த சிமியோன் தாத்தாவை அந்த வயதிலும் ஆண்டவர் பயன்படுத்தினார். அவர் உங்களையும் பயன்படுத்துவார். 3. பரிசுத்த ஆவியினால் நாம் வழிநடத்தப் படும்படி நம்மை முற்றிலும் அவர் ஆளுகைக்கு விட்டுக்கொடுப்பது அவசியம். 4. ஆண்டவர் கொடுத்த தரிசனத்தோடு இலட்சியத்தோடு வாழ்வோம். அதற்கென்றே அர்ப்பணமாயிருப்போம். ஒருவேளை ஆண்டவர் உங்கள் வாழ்வில் வைத்திருக்கும் திட்டத்தை இலட்சியத்தை நீங்கள் இன்னும் அறியவில்லையென்றால் அதனை அவர் வெளிப்படுத்தும்படி முழுமையான விட்டுக் கொடுத்தலோடே ஜெபியுங்கள். 5. இருளில் வாழும் ஜாதிகள் தேசங்கள் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டு கொள்ளும்படி நாம் ஏதாவது செய்யவேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.