என்ன!!! ஜாதியை ஒழிக்க வேண்டுமா?

கிறிஸ்தவத்தில் ஜாதி என்றதுமே எனக்கு சாது சுந்தர்சிங் சொன்ன ஒரு கதைதான்
நினைவுக்கு வருகிறது.

அது:

" நான் இங்கு யானைக்கால் வியாதியினால்
பாதிக்கப் பட்ட ஒருவரை பார்த்தேன்.
அவ்வியாதியினால் அவர் கால்கள் வீங்கி பெரிதாக இருந்தபடியினால் அவரால்
சரியாக நடக்க முடியவில்லை.

இந்தியாவை ஒரு
மனிதனுக்கு ஒப்பிடலாம்.

தலை-
ஜம்மு காஷ்மீர்,

வலதுகை-
குஜராத்,

இடது கை-
மேற்குவங்காளம்,

கால்கள்-
தென் இந்தியா.

ஒரு மனிதன் நன்றாக நடப்பதற்கு கால்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியம்.
இல்லையேல் அந்த யானைக் கால்
வியாதிக்காரனுடைய நிலைதான்.

இங்கு தென் இந்தியாவில் தான் கிறிஸ்தவம் நன்றாக வேரூன்றியுள்ளது. ஆனால்
அவர்களிடையே ஜாதி, இனவெறி ஆகியவை காணப்படுகிறது.

இந்த ஜாதி, இனவெறி அவர்கள் சீராக நடப்பதற்கு தடையாக உள்ளது. அது
கிறிஸ்தவம் பரவுவதற்கும் பெரிதும் தடையாக உள்ளது.

இந்திய கிறிஸ்தவர்களின் கால்களைப் போன்ற தென் இந்திய கிறிஸ்தவர்களின்
இக்குறையினால் இந்தியாவில் கிறிஸ்தவம் மற்ற மாநிலத்தவரை தாங்குவதற்குப்
பதிலாக தள்ளாடிக்கொண்டு இருக்கிறது*.

" இது அவர் 1916ல் கேரளா வந்திருந்தபோது சொன்ன சம்பவமாகும்.

இன்று வரை அதே நிலைமை நீடித்துக் கொண்டிருப்பது
வெட்கக்கேடு அல்லவா?

ஐயா வேதாகமத்தில் ஜாதிகள் இல்லையா என்று யாரோ முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது.

வேதாகமத்தில் ஜாதிகள் என்று குறிப்பிடப் பட்டிருப்பவை எல்லாமே அந்த
தேசங்களைத் தான் குறிப்பிடுகின்றன.

சந்தேகமெனில் உங்களிடம் ஆங்கில வேதாகமம் இருந்தால் அதில் பார்க்கவும்.

அப்படியெனில் ஆபிரகாம் ஏன் தன் இனத்தாரிடம் சென்று ஈசாக்கிற்கு பெண்
பார்க்கும் படி கேட்டுக் கொண்டான்.

அதன் காரணமென்னவெனில் ஆபிரகாம் வாழ்ந்த கானான் தேசத்தார் கொடிய விக்கிரக
வணக்கத்தாராயிருந்தனர் என்பதே.

இந்த தலைப்பு (ஜாதியை ஒழிப்பது)குறித்து ஒரு நல்ல கட்டுரை
எழுதவேண்டுமென்று என் நண்பர் பாஸ்டர் இரப்பேல் (இவர் கிறிஸ்தவளாக மாறிய
முஸ்லீம் பெண்ணை மணம் புரிந்தவர்) அவர்களிடம் விவாதித்துக்
கொண்டிருந்தபோது அவர் ஒரு நல்ல கருத்தை முன் வைத்தார்.

அது கலப்புத் திருமணம் ஜாதி அரக்கனுக்கு கல்லறை கட்டக் கூடிய வலிய ஆயுதம்
என்பதே. அதோடல்லாமல்

வேதாகமத்திலிருந்து அவர் கலப்புத்திருமணங்களுக்கான ஆதாரங்கள் பலவற்றைக் கூறினார்.

அவை:

1.மோசே -- மீதியானாகிய எத்திரோவின் மகளை மணந்தவர்.

2.சல்மோன் -- எரிகோ பட்டண வேசி ராகாபை மணந்தவர்.

3.போவாஸ் -- மோவாபியப் பெண்ணான ரூத்தை மனத்தவர்.

ஏன் இன்னும் சொல்லப் போனால் இயேசுகூட புற ஜாதியான நம்மைத்தான் தமக்கு
மணவாட்டியாக தெரிந்து கொண்டார்.

பின்னர் ஏன் வேதாகமம் கலப்புத் திருமணங்களை எதிர்க்கிறது என்ற கேள்வி
எழுவது நியாயமே.

அதேனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் புறஜாதியாரை திருமணம் செய்து அவர்களின்
அஞ்ஞான விக்கிரக ஆராதனைக்குள் அவர்கள் சென்று விடக்கூடாது என்பதற்காகவே.

(உ.ம்) எண்ணாகமம் 25.
ஆனால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் வரும் போது அவன் புது சிருஷ்டியாகிறான்.
ஆகவே அவர்களிடம் ஜாதி வேறுபாடு இருத்தல் கூடாது. கிறிஸ்தவர்கள் ஆண்டவரை
ஏற்றுக்கொள்ளாத மற்றவர்களை திருமணம் செய்வதில்தான் மிகவும்
எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

(அதற்காக சபைகளையும் ஆலயங்களையும் காதல் கூடாரங்களாக்கி விடக் கூடாது.
ஆனால் நடப்பது என்ன?)

அப்படியென்றால் கலப்புத்திருமணங்கள் தான் இறுதி தீர்வா எனில் இல்லவே இல்லை.

கலப்புத்திருமணங்கள் ஒரு துவக்கமே.முடிவு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
வருகை மற்றும் அவரின் ஆட்சியில் தான் கிட்டும்
(ஏசாயா 11ல் கூறியபடி).

நடைபெறுகிற
கலப்புத்திருமணங்களிலும் ஒரு பிரச்சனை பாருங்கள். அது என்ன தெரியுமா?

கலப்புத் திருமண தம்பதிகள் ஏதாவது ஒரு ஜாதியை தெரிந்துகொள்ளும்
கட்டாயத்தில் அல்லது அதிக பயனடையக்கூடிய ஜாதியை தெரிந்து கொள்கின்றனர்.
இது மாறுமோ?

தற்போது அனேகம்பேர் அரசாங்கம் சாதி கேட்கும்போது தான் தங்கள் சாதியை
அறிந்துகொள்கின்றனர் என்று சமீபத்தில் ஒரு சகோதரர் சொன்ன செய்தி என்னை
அதிர்ச்சியடையச் செய்தது.

ஆகவே அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி ஜாதியை ஒழிப்பது எட்டாக்கனிதான்

ஒரு நற்செய்தி.

தற்போது மோகன் சி லாசரஸ் போன்ற தேவ மனிதர்கள் இதுகுறித்து கண்டித்து பேச
ஆரம்பித்துள்ளனர். இதுவும் ஒரு நல்ல ஆரம்பமே.

"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்"
"ஒன்றே குலம்"
"சாதி இரண்டொழிய வேறில்லை" என்று உலக மக்களே பாடி வைத்து சென்றுள்ளனர்.

ஆனால் நம்
கிறிஸ்தவர்களிடமோ ஜாதி உணர்வு என்பது புரையோடி போயிருக்கிறது. இதில் நம்
சிறிய முயற்சி என்ன மாற்றத்தை
உண்டுபண்ணிவிடமுடியும் என்று நினைக்காமல் "சிறுதுளி பெருவெள்ளம்" என்று
உணர்ந்து செயல்படுவோம் வாரீர்.

"மனிதரால் கூடாதவைகள் தேவனால் கூடும்"
ஆதியில் இல்லாது
பாதியில் வந்து-மனு
ஜாதிக்கு பீதியை
அளித்த ஜாதியை
அழிக்க வாரீர்

* சாது சுந்தர்சிங் பிரசங்கங்கள்
இக்கட்டுரை 2007 ல் tamilchristians.comல் எழுதியது
Arputharaj Samuel
_________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.