ஆதி 6.3 அடிப்படையாகக் கொண்டு மனிதனின் ஆயுட்காலம் 120 என கூறுவது ஏற்படையதுதானா? பாகம் 1

ஜலப்பிரளயத்தினால் உலககை அழிப்பதற்கு முன்பதாக தேவன்
"என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே,
அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். (ஆதி 6.3)

தேவனுடைய இக்கூற்றின் சரியான அர்த்தம் என்ன என்பதைச் சரியாக புரிந்து
கொள்ளமுடியாதவாறு இவ்வசனமானது பலவிதமான முறைகளில்
மொழிபெயர்க்கப்பட்டும் அர்த்தவிளக்கம் செய்யப்பட்டும் வந்துள்ளது.

உண்மையில் இவ்வசனத்தில் இருவிதமான சிக்கல்கள் உள்ளன. இவை அவ்வசனத்தின்
இரு பகுதிகளிலும் சரியான அர்த்தம் பற்றியதாகும்.

முதலாவது "என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை" எனும்
வாக்கியத்தின் அர்த்தம் பற்றிய சிக்கல்.

இரண்டாவது மனிதன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் எனும்
தேவனின் அறிவித்தல்.

தேவனுடைய கூற்றின் இவ்விரு விடயங்களின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ள
அவற்றைத் தனித்தனியாக ஆராய்ந்து பார்ப்போம்.

ஆதியாகமம் 6ம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களை அர்த்தவிளக்கம் செய்யும்போது
அவை ஜலப்பிரளயத்தினால் தேவன் அழிப்பதற்கு முன்பானவை என்பதை நாம்
மறுக்கலாகாது.

தேவன் உலகை ஜலப்பிரளயத்தினால் அழிப்பதற்கு முன்பே என் ஆவி
என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; என்று கூறியுள்ளார். எனினும்
இவ்வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையும்
சர்ச்சைக்குரியனவாய் மாறியுள்ளன. எனவே இவ்வாக்கியத்தின் மூலம் தேவன்
கூறும் விடயத்தை அறிந்து கொள்வதற்கு அதன் ஒவ்வொரு வார்த்தையும் எதைக்
குறிக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாக்கியத்திலுள்ள
முதல் வார்த்தை
"என் ஆவி"
எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாக பலர் கருதுகின்றனர்.

எனினும் "என் ஆவி" என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள "ருஆ"
எனும் எபிரேயப் பதம் "ஆவி,
காற்று,
சுவாசம்"
எனும் அர்த்தங்களையுடையது.
அதேசமயம் இப்பதம் ஆவியைக் குறிக்கும் இடங்களில் அது ஒன்றில் பரிசுத்த
பரித்த ஆவியைக் குறிக்கும்" பழைய ஏற்பாட்டில் இப்பதம் 388 தடவைகள்
உள்ளபோதும் இவற்றில் 97 தடவைகள் மட்டுமே பரிசுத்த ஆவியானவருக்கு
உபயோகிக்கப்பட்டுள்ளது.
84 தடவைகள் மானிட ஆவியைப் இப்பதம் குறிக்கின்றது.

ஆதியாகமம் 6:3 இல் ஆவி என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக் கூறினால்
ஜலப்பிரளயத்துக்கு முற்பட்ட காலத்தில் எல்லா மனிதர்களுக்குள்ளும்
பரிசுத்த ஆவியானவர் இருந்துள்ளார் எனும் தவறான ஒரு விளக்கத்திற்கு
வழிவகுக்கும் (இவ்வாக்கியத்தின் இறுதி வார்த்தையான போராடுவதில்லை எனும்
வார்த்தையின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ளும்போது இவ்வுண்மை நமக்குப்
புலப்படும்)

எனவே ஆதியாகமம் 6:3 இல் "ஆவி என்பது மானிட ஆவியையே குறிக்கின்றது.
அதாவது "மனிதனை உயிரோடு வைத்திருக்கும் ஆவியாகும்.

மானிட ஆவியைத் தேவன் "என் ஆவி" என்று கூறுவது நமக்கு குழப்பத்தை
ஏற்படுத்தலாம். ஆனால் தேவன் மனிதனைச் சிருஷ்டித்த முறையைக்
கருத்திற்கொள்ளும்போது இத்தகைய ஒரு குழப்பம் ஏற்பாடாது.

தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது அவனது சரீரத்தை மண்ணினால் உருவாக்கி அதை
உயிருள்ளதாக்குவதற்காகத் தன் ஜீவசுவாசத்தை அவனுக்குக் கொடுத்தார். (ஆதி
2.7)

தேவனுடைய ஜீவ சுவாசமே மண்ணாயிருந்த மனிதனை உயிருள்ளவனாக்கியது. "தேவன்
மனிதனுக்கு கொடுத்த ஜீவசுவாசமே அவனை உயிரோடு வைத்திருக்கும் ஜீவ
ஆவியாகும்.

இந்த ஆவியைப் பற்றியே தேவன் ஆதி 6.3 இல்
"என் ஆவி"
எனக்குறிப்பிட்டுள்ளார். இத்தகைய விபரணத்தை எசேக்கியேல் 37.14 இலும்
அவதானிக்கலாம்.

மரித்தவர்களை உயிர்ப்பிப்பதைப் பற்றித் தேவன் அவ்வசனத்தில் கூறும்போது
"என் ஆவியை
உங்களுக்குள்ளே வைப்பேன் நீங்கள் உயிரடைவீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வசனத்திலும் தேவன் பரிசுத்த ஆவியானவரைப் பற்றியல்ல மாறாக மனிதனை
உயிருள்ளவனாக்குவதற்காக அவனுக்கு அவர் கொடுக்கும் ஜீவ ஆவியைப் பற்றியே
கூறுகிறார். மனிதனை உயிரோடு வைத்திருக்கும் ஜீவஆவியானது தேவனால்
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஆவியாக இருப்பதனாலேயே தேவன் அதை "என் ஆவி" எனக்
கூறுவதற்கான காரணமாகும்.

ஆதி. 6:3 இல் மனிதனை உயிரோடு வைத்திருக்கும் ஆவியையே தேவன்
"என் ஆவி" என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு அவ்வார்த்தை இடம்பெறும்
வாக்கியத்தின் இறுதி வார்த்தையின் அர்த்தத்தை நாம் அறிந்துகொள்வது
அவசியம். எனினும் "போராடுவதில்லை" எனத் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள "யாடொன்" எனும் எபிரேயப் பதத்தின் சரியான
அர்த்தம் என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து
முரண்பாடுகள் இருப்பதனால் அவர்கள் இவ்எபிரேயப் பதத்தினை வித்தியாசமான
முறைகளில் மொழிபெயர்த்துள்ளனர்.

சிலர் இப்பதத்தின் அர்த்தம் தாழ்வடைதல்
எனக்கூறுகின்றனர்.

இதன்படி "என்ஆவி எப்போதும் மனிதனிடம் அபகீர்த்தியடையாது"
என
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எனினும் மானிட பாவம் தேவனை இழிவுபடுத்தும் எனக் கூறும் இவ்விளக்கம்
தவறானதாகவே உள்ளது.

இதனால் சிலர் இவ்வாக்கியத்தின் கடைசிவார்த்தையைத் தனிப்பட்ட பிரதியீடு
எனும் அர்த்தத்தில் "என் ஆவி எப்போதும் மனிதனுக்கு பதில்
அளித்துக்கொண்டிருக்காது என மொழிபெயர்த்துள்ளனர்.

அதாவது இனிமேல் மனிதர்கள் தாங்களே பாவங்களின் விளைவுகளை ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்று தேவன் இவ்வசனத்தில் அறிவிப்பதாக இவ்விளக்கம் கருதுகிறது.

எனினும் "ஆரம்பத்திலிருந்தே மனிதனின் பாவங்களுக்கு அவனே பொறுப்பாளியாக
இருந்து வந்துள்ளமையால் அதுவரை காலமும் மனிதனுக்குப் பதிலாக தேவஆவி
அவனுடைய பாவங்களுக்கான பொறுப்பை ஏற்று தேவனுக்குப் பதிலளித்துக்
கொண்டிருந்தது எனும் விளக்கம் அர்த்தம் அற்றதாகவே உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.