பாலஸ்தீன கலாச்சாரத்தில் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த திருமண வைபவ சடங்காச்சார முறைகளே இதற்கான காரணம் என மறைந்த வேத வியாக்கியானி வில்லியம் பாக்ளே அறியத்தருகிறார்.“அவர்களது திருமண வைபவம் மூன்று படிமுறைகளைக் கொண்டிருந்தது. தம் பிள்ளைகள் சிறுவர் சிறுமியராயிருக்கும்பேது திருமணப் பொருத்தம் பார்த்து, இன்னார்க்கு இன்னார் என முடிவு செய்வது பெற்றோரின் வழக்கமாயிருந்தது, உரிய காலம்வரும்போது நிச்சயதார்த்தத்தின் மூலம் இது உறுதிப்படுத்தப்படும் இதன் பின் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்பட்டனர். கன்னிவிதவைகள் அக்காலத்தில் பலஸ்தீனாவில் இருக்க இதுவே காரணமாகும். நிச்சியதார்த்தமானது சட்டரீதியாக இருவரையும் இணைப்பதாயிருந்தமையினால், விவாகரத்தின் மூலமே இவ்விணைப்பை முறிக்கக் கூடியதாயிருந்தது. நிச்சியதார்த்தத்தை மேற்கொண்டவர்கள் ஒருவருடத்தின் பின்பே திருமணம் செய்து இல்லற வாழ்வை மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள்“ என தெரிவிக்கும் வில்லியம் பாக்ளே “மத்தேயு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் நிச்சியதார்த்தத்திற்குப் பின் நடைபெற்றவைகளாகும். இதனால்தான் மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டவளாகவும், அவனது மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளாள். இதனாலேயே யோசேப்பு அவனது புருஷனாகவும், அவளை விவாகரத்து செய்ய சிந்தனையுள்ளனாகவும் இருந்தான் என மத்தேயு எழுதியுள்ளார்.” என கூறுகிறார்.
உண்மையில் நிச்சியதார்த்தத்தின் பின்பு மரியாள் கர்ப்பவதியாயிருப்பதை யோசேப்பு அறிந்திருப்பான். மட்டுமல்ல, அவள் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதல்ல என்பதனாலேயே அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.(1:19) இச்சமயத்திலேயே, “மரியாளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்தாவியினால் உண்டானது“ என தேவதூதனால் அவனுக்கு அறிவிக்கப்பட்டது. (1:20) மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள். அவள் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் யோசேப்பு அவளை அறியாதிருந்தான். (1:25) எனினும் அவர்கள் நிச்சியதார்த்தம் செய்துகொண்டிருந்தமையால், அக்கால கலாச்சாரத்தின்படி கணவன்-மனைவியாக இருவரும் சமுதாயத்தினால் கருதப்பட்டமையே உறவு முறைப்பற்றி இரண்டுவிதமாக மத்தேயு எழுத காரணம் என்பதில் சந்தேகமுமில்லை.
மத்தேயுவினுடைய குறிப்பில் இயேசு யோசேப்பின் குமாரன் இல்லை என்பதற்கான இன்னுமொரு ஆதாரத்தை அவர் குறிப்பிட்டுள்ள வம்ச வரலாற்று அட்டவணையில் நாம் காணலாம். 42 பரம்பரைகளைக் கொண்ட இவ்வட்டவணையில் “பெற்றான்“ எனும் பதம் ஒவ்வொரு பரம்பரைக்கும் அதாவது ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்பதை சுட்டிக்காட்ட உபயோகிக்ப்பட்டதை அவதானித்திடலாம். ஆனால் இயேசுவைப் பற்றி குறிப்பிடும்போது மட்டும் யோசேப்பு அவரைப் பெற்றான் என கூறவில்லை. மாறாக, “மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகின்ற இயேசு பிறந்தார். (1:16) என எழுதியுள்ளார். யோசேப்பு இயேசுவினுடைய தகப்பன் அல்ல என்பதை கூட்டிக் காட்டவே, இவ்விடத்தில் மட்டும் “பெற்றான்“ எனும் பதம் உபாயோகிக்கப்படவில்லை. மரியாளை இயேசுவின் தாயாக காட்டும் மத்தேயு யோசேப்பை அவருடைய தகப்பனாக காட்டவில்லை. பிறப்பைப் பொறுத்தவரையில் இயேசுவுக்கும் யோசேப்புக்குமிடையில் எவ்விதமான சம்பந்தமுமில்லை. தேவகுமாரனாகிய அவர் மரியாளின் குழந்தை, யோசேப்பின் பிள்ளையல்ல அவர், அவருடைய மாம்சமும், இரத்தமும் மரியாளிடமிருந்து பெறப்பட்டதுயன்றி, யேசேப்புக்கு இதில் எவ்விதமான பங்குமில்லை. ஏனெனில் அவர் கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் பிறந்தவர்
கன்னிப் பிறப்பை பற்றிய மத்தேயுவினுடைய குறிப்பில் எவ்விதமான முரண்பாடும் எத்தகைய தெளிவின்மையும் இல்லை என்பதை அறிந்து கொண்டாலும் இதை லூக்காவின் குறிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டும் ஒருசில இடங்களில் வித்தியாசப்படுவது போல தென்படுவதை அவதானிக்கலாம். எனினும் இவை இரண்டிற்கும் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.மத்தேயு எழுதாமல் விட்டதை லூக்கா எழுதியுள்ளாதே தவிர, மத்தேயு எழுதியற்றை முரண்படுத்தும் விதத்திலோ அல்லது பொய்யாக்கும் விதத்திலோ அவர் எதையும் எழுதவில்லை.இயேசுவினுடைய பிறப்பில் யோசேப்புடன் சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தேயு எழுதுகையில் லூக்கா, மரியாளுடைய வரலாற்றை எழுதியுள்ளார். இரண்டையும் ஒன்றாக்கும்போது முழுமையான சத்தியத்தை அறிந்துகொளள்க் கூடியதாய் உள்ளது.
(வளரும்)
