"தேவன் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது அதை உறுதிப்படுத்தும்
அடையாளம் ஒன்றை கொடுப்பது வழக்கம்.
அதை வேதாகமத்தில் நாம் அவதானிக்கலாம்.
உலகளாவிய ஜலப்பிரளய அழிவின்பின் இனிமேல் ஜலப்பிரளயத்தினால் உலகம் அழியாது
என நோவாவிற்கு வாக்களித்த தேவன் .அதனை உறுதிப்படுத்த வானவில்லைத்
தோன்றப்பண்ணினார். அவ்வானவில்லானது தேவனுடைய வாக்குத்தத்ததை
உறுதிப்படுத்தும் அடையாளமாக இருந்தது. (ஆதி 9:8-17).
யாத்திரகாமம் 3.12 இல் இஸ்ரவேல் ஜனங்கள் ஓரேப் எனப்படும் சீனாய் மலையில்
தேவனுக்கு ஆராதனை செய்வது தேவன் மோசேயை அனுப்புவதற்கான அடையாளமாக
சொல்லப்பட்டது.
(ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக தேவன் தன் வார்த்தையை உறுதிப்படுத்த ஒரு
அடையாளத்தைக் கொடுத்தார். ஏசாயா 7:11-14).
"இவ்வாறு ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக அடையாளங்கள் கொடுக்கப்படுவது
அக்காலத்தில் சாதாரண ஒரு வழக்கமாய் இருந்தது.
1 சாமு 16:7,
2இராஜா 19:29,
எரே 44:29 இலும் இதை நாம் அவதானிக்கலாம்.
இதேவிதமாக காயீனைக் கண்டுபிடிக்கின்ற எவனும் அவனை கொலை செய்ய மாட்டான்
எனத் தேவன் அவனுக்கு
உறுதிப்படுத்துவதற்காக அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்துள்ளார்.
எனினும் அவ்வடையாளம் என்ன என்பது பற்றி வேதாகமத்தில்
குறிப்பிடப்படாமையினால் அதைப்பற்றி நம்மால் அறிய முடியாதுள்ளது.
காயீனுடைய
அடையாளத்தோடு தொடர்புடைய மூன்றாவது சர்ச்சை தேவன் அவனுக்கு கொடுத்த
பாதுகாப்பு நியாயமானதா என்பதாகும்.
ஆதி 9:6 இல் மனிதக் கொலைக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று தேவன்
அறிவுறுத்தியுள்ளார். இதனால் தன் சகோதரனைக் கொலை செய்த காயீனுக்கு தேவன்
மரண தண்டனை கொடுக்காமல் அவனை உயிரோடு விட்டதோடு, வேறுஎவரும் கொன்று
விடாதபடி பாதுகாப்பதாக கூறியதோடு அதை உறுதிப்படுத்தும் அடையாளமொன்றையும்
அவனுக்கு கொடுத்தது எவ்விதத்திலும் நியாயமான செயலாகுமா என பலர்
கேட்கின்றனர்.
அதாவது கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை விதித்த தேவன், காயீனுக்கு ஏன்
அத்தண்டனையைக் கொடுக்கவில்லை என்பதே அவர்களது கேள்வியாகும்.
உண்மையில்
கொலைக்குற்றத்திற்கு மரணதண்டனை என தீர்ப்பு வழங்கிய தேவன் உலகின்
முதலாவது குற்றவாளியைத் தண்டிக்காது விட்டது நமக்கு ஆச்சரியத்தையே
ஏற்படுத்துகின்றது.
இதற்கு
தேவவியாக்கியானிகள் சில காரணங்களை
கற்பித்துள்ளனர்.
"மரண தண்டனையை விட தேவன் அவனுக்கு அளித்த தண்டனை கடுமையானது என்பது
சிலரது விளக்கமாகும்
அதாவது காயீன் வாழ்நாள் முழுவதும் பூமியில் நிலையற்று
அலைகின்றவனாய் தீர்ப்பளித்தது (ஆதி 4.14)
மரண தண்டனையை விட கடுமையானது என்பதே இவர்களது எண்ணமாகும்.
அதேசமயம் தேவனுடைய சமூகத்திலிருந்து துரத்தப்படுவதும் மரண தண்டனையை விட
கடுமையானதாகக் கருதப்படுகின்றது.
எனவே தேவ சமூகத்திற்கு விலகி வாழ்ந்த காயீன்
(ஆதி 4:14) கடுமையான தண்டனையை
அனுபவித்துள்ளான் என்று சிலர் கூறுகின்றனர்.
காயீன் முதல் மனிதரான ஆதாம் ஏவாள் என்போரின் மகனாக இருந்தமையால் "மானிட
வம்சம் விருத்தியடைவதற்காக
என்று கருதுபவர்களும் நம்மத்தியில் உள்ளனர்.
தேவகட்டளையை மீறி பாவம் செய்த முதல் மனிதரான ஆதாமும் ஏவாளும் தேவ
அறிவுறுத்தலின்படி பாவம் செய்த உடனேயே மரணமடையாமல் பாவத்தின் பின்பும்
நீண்டகாலம் உயிர்வாழ
அனுமதிக்கப்பட்டது போலவே (ஆதி 2:17,) தன் சகோதரனைக் கொலைசெய்த காயீன்
உடனடியாகத் தண்டிக்கப்படாமல், உலகில் வாழ்வதற்கு
அனுமதிக்கப்பட்டுள்ளான் என சிலர் கருதுகின்றனர்.
கொலை செய்த காயீனுக்கு மரண தண்டனை கொடுக்கப்படாதமைக்கான காரணம்
எதுவாயிருப்பினும், கொலை குற்றத்திற்கு மரணதண்டனை என தேவன்
தீர்ப்பளித்ததிற்கும் முன்பே அதாவது அத்தகு தண்டனையை பற்றி தேவன்
அறிவிப்பதற்கும் முன்பே காயீன் தன் சகோதரனை கொலை செய்துள்ளான் என்பதை
நாம் மறக்கலாகாது.
ஆதி. 9ம் அதிகாரத்திலேயே கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை கொடுக்கப்பட
வேண்டும் எனத் தேவன் அறிவித்தார். ஆனால் ஆதி. 4ம் அதிகாரத்திலேயே தன்
சகோதரனை கொன்றுள்ளான். எனவே குறிப்பிட்ட தண்டனை பற்றிய அறிவிப்பு
கொடுக்கப்படுவதற்கு முன்பே காயின் கொலைகாரனாகியமையால் தேவன் தன்
நீதியின்படியே அவனுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுத்துள்ளார்.