கடவுள் நமக்காகவே மனிதன் ஆனார்!
சகோதரி சாந்தி பொன்னு
பாகம் 2
செய்தி இதுதான்:
மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு‘இயேசு’என்று பேரிடுவாயாக; ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்று கர்த்தருடைய தூதன் யோசேப்புக்குச் சொப்பனத்திலே சொன்னபோது,‘இயேசு’என்ற பெயர் மரியாளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்குச் சூட்டவேண்டிய பெயராயிற்று. ஆனால், தேவதூதர் வயல்வெளியிலே மேய்ப்பருக்குப் பகிரங்கமாக அறிவித்தபோது, ‘கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்’ தாவீதின் ஊரிலே உங்களுக்குப் பிறந்திருக்கிறார் என்று அறிவித்தனர். நம்மை விடுவிப்பதற்கென்று அபிஷேகம்பண்ணப்பட்டவர் பிறந்தார் என்ற செய்தியை, விடுவிக்கப்படவேண்டிய மக்களுக்குக் கூறி அறிவிக்கவேண்டிய அவசியம் இன்று கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமது கரங்களில்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
‘கர்த்தராகிய கிறிஸ்து’– ஆண்டவராகிய தேவன் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவாய்,
‘என்னும் இரட்சகர்’– மனுக்குலத்தின் மீட்புக்காக,
‘தாவீதின் ஊரிலே’– வாக்குப்பண்ணப்பட்ட படி, தீர்க்கர்களால் உரைக்கப்பட்டபடி,
‘உங்களுக்காக’– பாவத்திலே உழலுகின்ற மனிதராகிய நமக்காகப் பிறந்திருக்கிறார்.
ஆம், எல்லாவற்றையும் கடந்து நிற்கிற தேவாதி தேவன், தம்மைவிட்டுப் பிரிந்துவிட்ட மனிதனுக்காக, அவனைத் தம்மைவிட்டுப் பிரித்துப்போட்ட பாவத்தைப் பரிகரிப்பதற்காக மனிதனாகவே பிறந்தார். இது ஆச்சரியமல்லவா!‘இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.’ (ரோமர் 1:4,5)
நம்மைப்போலவே மனிதனாய் வந்து பிறந்து, தமது இரத்தத்தைச் சிந்தி, நம்மை மீட்டு, தமது பிள்ளையாக்கி, நமக்குள்ளே வாசம்பண்ணுமளவுக்கு நம்மை நேசிக்கிற ஒரு ஆண்டவர் நமக்கிருக்கிறார். அதாவது, ‘கடவுள் மனிதனாகி நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார்’. இந்த சத்தியம் எந்தளவுக்கு நமது வாழ்வைப் பாதித்திருக்கிறது? உண்மையாகவே இது நம்மைப் பாதிக்குமானால், இதுவே நமது சுவாசக்காற்றாக நமது வாழ்வில் மாறுமானால் பல காரியங்கள் மாற்றமடையும்.
தேவனுடனான நமது உறவு:
தேவன் எனக்காக மனிதனானார் என்று உளமார சிந்திக்கும்போது முதலாவது தேவனுடனான உறவு நிச்சயம் மாற்றமடையும். பிறப்பது வாழுவதற்கு என்று சொல்லுவோம். ஆனால், இயேசு பிறந்ததே மனுக்குலத்திற்காக மரிப்பதற்கே என்ற உண்மை நாம் அறிந்ததே. அப்படியே மரித்தார், உயிர்த்தார், வானத்துக்கு ஏறினார். திரும்பவும் நம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி திரும்பவும் வருவார். அவருடைய மரணத்தினால் தேவனுடைய கிருபாசனத்தண்டை சேரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். அந்த சுதந்தரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்?
தேவனோடு ஐக்கியம்கொள்ளக்கூடிய ஒரே பாலம் ஜெபமும் வேதமும்தான். இவை இரண்டும் நம் வாழ்வில் எவ்வளவுதூரம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இது இரண்டும் இல்லாமல் தேவனுடன் நல்லுறவில் நாம் வளரவே முடியாது. எனக்காகவா இயேசு வந்தார் என்று நம்மை நாமே கேட்டுப்பார்க்கவேண்டும். அவ்வளவாய் நம்மில் தேவன் அன்புகூர நாம் எம்மாத்திரம்! அவர் சாதாரண மனிதனாக வரவில்லை. கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக வந்து நமக்குள்ளே வாசம்பண்ணினார். (யோவா. 1:14) நமது வாழ்வில் கிருபையும் சத்தியமும் நிறைந்திருக்குமாயின் நம்மைப் பாவம் ஆட்கொள்வது எப்படி? பாவத்துக்கு இடமளித்துக்கொண்டு நாம் கிருபைபெற்றோம் என்று சொல்லுவது எப்படி?
பண்டிகைக் கொண்டாட்டங்கள்:
மீட்பர் என்னை மீட்கவே பிறந்தார் என்று உண்மையாகவே உணருவோமானால், நமது பண்டிகைக் கொண்டாட்டங்கள் மாறும். பண்டிகைகள் கொண்டாடுவது தவறல்ல; தேவனே அதை விரும்பினார் என்று பழைய ஏற்பாட்டிலே காண்கிறோம். ஆனால், அவற்றை என்ன நோக்கத்தோடு கொண்டாடுகிறோம், எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதே கேள்வி. ஓடுகின்ற நீரோடையிலே ஒற்றைக் காலை ஊன்றி நின்றுகொண்டு நீரில் துள்ளிக் குதிக்கும் மீன்களைக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் கொக்குவை அந்த மீன்களால் தடுக்கமுடியுமா? கொக்கு பார்க்கும், அது அதன் சுதந்திரம். தனக்கு இசைந்த நேரத்தில் தன் இரையைக் கவ்வும். அதை யார் தடுப்பது. கொக்குவின் குறிக்குத் தப்பும்படிக்கு மீன்கள்தான் தங்களைப் பாது காத்துக்கொள்ள வேண்டும்.
