கடவுள் நமக்காகவே மனிதன் ஆனார்! சகோதரி சாந்தி பொன்னு பாகம் 3

கடவுள் நமக்காகவே மனிதன் ஆனார்! சகோதரி சாந்தி பொன்னு பாகம் 3
நம்மை உலகம் கவனிக்கிறது. அதை நம்மால் தடுக்கமுடியாது. அந்த உலகத்திற்கு சாட்சியாக நிறுத்தப்பட்டிருக்கிற நாமேதான் அந்த சாட்சியைக் காத்துக்கொள்ள வேண்டும். நமது பண்டிகைகளும் தேவனுக்கே சாட்சியாக அமையவேண்டும் என்பது மிக முக்கியம்.
பண்டிகை என்பது குறிப்பிட்ட காரியங்களை நினைத்து குறிப்பிட்ட காலத்திலே கொண்டாடப்படுவது. ஆனால், ஆராதனை என்பது எப்பொழுதும் ஏறெடுக்கப்பட வேண்டியது. நமது வாழ்க்கைமுறையே ஆராதனையாக மாறவேண்டிய அவசியத்தை நாம் உணரவேண்டும். அந்த ஆராதனை சீர்ப்படுமானால், நாம் ஏறெடுக்கும் சிலமணி நேர ஆராதனைகளும், நாம் கொண்டாடும் பண்டிகைகளும் தேவனுக்குச் சாட்சியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
இஸ்ரவேல் கொண்டாடவேண்டிய பண்டிகைகளை ஒழுங்குசெய்து கொடுத்த கர்த்தர் தாமே, பின்னர், ஆமோஸ் தீர்க்கன் மூலம் தன் வெறுப்புகளைக் கொட்டுகிறார். (ஆமோஸ் 5:21-23; 8:10)‘உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்’.பண்டிகைகளைத் துக்கிப்பாக மாற்றுவேன் என்றார். ஏன்? அவர்கள் தங்கள் இருதயத்தைத் தேவனைவிட்டு, தேவனுடைய வார்த்தையைவிட்டு, தேவ நோக் கத்தைவிட்டு விலக்கிப்போட்டார்கள். இன்று கிறிஸ்துமஸ் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கெல்லாம் கிறிஸ்து இருக்கிறாரா? இல்லை. கரோல் பாட்டுப் போட்டி, கிறிஸ்மஸ் மரம் வைக்கும் போட்டி, கேக் போட்டி என்று எத்தனை! இது யாரால் ஏற்பட்டது. கிறிஸ்தவர்களாகிய நாமே கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்திருக்கிறோம். இந்த நிலைமை மாறவேண்டும். நாம் புத்துணர்வு பெற்று இந்தக் கொண்டாட்டங்களை தேவனுக்கு மகிமையாக மாற்றவேண்டும். மனித நேயர்: உண்மையாகவே, எனக்காகவே, கிறிஸ்து பிறந்தார், மரித்து உயிர்த்து என்னை மீட்டுக்கொண்டார் என்று விசுவாசித்து வாழுகிற ஒருவனுடைய வாழ்வில், பிறரைக் குறித்ததான அன்பும் கரிசனையும் தானாகவே ஊற்றெடுக்கும். கிறிஸ்துமஸ் என்றதும் மனித நேயம் இன்று அதிகமாக பேசப்படுகிறதைக் காண்கிறோம். மனித நேயம் என்பதற்கு உலகம் கொடுக்கின்ற விளக்கம் உரிமைகளைப் பாதுகாத்தல், தேவைகளைச் சந்தித்தல் என்பதாகும். ஆனால், கிறிஸ்துவின் அன்பினால் நிறையப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் நமக்கோ இந்த மனிதநேயம் என்பது மிகவும் உயர்நிலையில் வைத்து நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். தேவன் நம்மீது வைத்த அன்பைப் புரிந்துகொண்டு, அந்த அன்பை நாம் பிறருக்குக் கொடுக்கவேண்டும். அங்கே நாம் அல்ல, தேவனே மகிமைப்படுகிறார். முன்பகுதி இல்லையானால் பின்பகுதி சுயத்திற்குரியதாக மாறிவிடும். ஆனால், இன்று, முன்பகுதி தெரிந்திருந்தாலும், அதை விடுத்து, மக்களின் உரிமைக்காகவும், தேவைகளைச் சந்திப்பதற்காகவும் பலர் பாடுபடுகின்றனர். அது அவசியம்தான்; ஆனால் அதிலே தேவநாமம் மகிமைப்படுகிறதா? மனிதநேயத்தின் மொத்த உருவமே இயேசுகிறிஸ்துதான். இது பண்டிகைகள்போல குறித்த காலத்தில் மாத்திரம் காட்டப்படுவது அல்ல. எல்லாக் காலத்திலும் எல்லா மக்கள் மத்தியிலும் இதை நாம் வெளிப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். மக்களுக்கு அன்றாட தேவைகள் பல உண்டு. அவை சந்திக்கப்படவேண்டிய அவசியங்களும் உண்டு. ஆனால் அதிலும் மேலாக அவர்களுடைய இருதயம் அன்புக்காக, ஒரு அரவணைப்புக்காக, ஆறுதலுக்காக ஏங்கித் தவிக்கிறது என்பதை நாம் உணருவதில்லை. ஆண்டவர் நமக்கு வாழ்ந்து காட்டிய ஒரு முன் மாதிரியை நாம் இந்நாட்களிலே சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஆம், ஆண்டவர், பாவிகளோடு, பரிதவிக்கும் மக்களோடு, அக்கிரமக்காரரோடு, வியாதிப்பட்டவரோடு, சிறைப்பட்டவரோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் பாவத்திற்கு விரோதி; ஆனால், அதே பாவத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு இருளுக்குள் வாழுகின்ற மக்களுக்கோ அவரே ஒளியாக இருக்கிறார். மனிதனை மீட்கும்படிக்குத் தம்மையே பலியாக்கினவர் ஆண்டவர். இந்த இயேசுவை இன்று, விசேஷமாக இந்த கிறிஸ்துமஸ் நாட்களில், பிறர் முன்னிலையில் நாம் பிரதிபலிக்கிறோமா என்பதை சிந்திப்போம்.‘கடவுள் எனக்காகவே மனிதனானார்’என்பதை அமர்ந்திருந்து சிந்தித்துப் பார்த்தால், நமது வாழ்வின் நோக்கம், பண்டிகைகளின் நோக்கம், நாம் வெளிக்காட்டும் மனித நேயம் எல்லாமே நிச்சயம் மாற்றமடையும். நாம் இருக்கும் இடங்களை விட்டு எழுந்து, வாழ்வின் இருளுக்குள் தடுமாறி நிற்கும் மக்களை நாடிச் செல்லுவோமாக. வெறும் மெழுகுவர்த்திகளை ஏற்றிப் பலனில்லை. வாழ்வுகளில் வெளிச்சம் பிரகாசிக்க, நாம் முதலில் பிரகாசிக்கவேண்டும்.‘கிறிஸ்து உனக்காகவே பிறந்தார்’என்ற நல்ல செய்தியை எடுத்துச் சொல்லுவோமாக. நாம் கிறிஸ்து மூலமாகப் பெற்ற கிருபையும் சத்தியமும் எல்லோருக்கும் கிடைக்கும்படி நம்மை அர்ப்பணிப்போமாக. சத்தியவசன சஞ்சிகை வாசகர்கள் யாவருக்கும் என் அன்பின் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்துக்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.