கர்த்தர் வெறுக்கும் காயீனின் வழி பாகம் 2

(2) அந்தகார
ஆதியாகமம் 4:5ஆ

காயீனுடைய வழி அவிசுவாசத்தின் வழியாக மட்டுமல்ல, அது அந்தகார வழியாகவும் இருந்தது.

அவிசுவாசியாக இருந்த காயீன் மனந்திரும்பி
வெளிச் சத்திற்கு வர மனமற்றவனாக இருளிலேயே இருந்தான். மனிதர்கள்
மனந்திரும்பி தம்மிடம் வருவதற்குத் தேவன் பல சந்தர்ப்பங்களை அவர்களுக்கு
கொடுக்கிறவராக இருக்கின்றார்.

தேவன் காயீனுடைய காணிக்கையை நிராகரித்த போதிலும், அவனுடைய உள்ளத்தின்
நிலைமை மாற்றமடைவதற்காக அவனோடு பேசினார்.

தேவன் தன்னுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளாதது காயீனுக்கு நியாய
மானதாகத் தென்படவில்லை. தேவன் என்ன
காரணத்திற்காகத் தன்னுடைய
காணிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவன் ஆராய்ந்து பார்க் காமல்,
தேவனுடைய செயல் நியாயமற்றது என்னும் எண்ணத்தில் இருந்தான்.

இவ்வசனங்களில்
"எரிச்சல்" என்பது மூலமொழியின்படி
"கோபம்" என்றே இருக்க வேண்டும். காயீன் தேவன்மீதும் தன் சகோதரன் மீதும்
கடும் கோபத்துடன் இருந்தான். அந்தகாரத்தில் இருந்த காயீனின் உள்ளத்தின்
நிலையை மாற்றமடைந்த அவனுடைய முகபாவம் வெளிப்படுத்தியது.

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, தேவன் எவ்வாறு அவர்களைத் தேடி
வந்தாரோ, அதேவிதமாக கோபத்தோடு இருந்த காயீனையும் தேவன் தேடி வந்தார்.

தேவன் காயீனிடம் கேட்ட கேள்விகள், அவன் எதற்காகக் கோபமாக இருக்கிறான்
என்பதை அறியாத நிலையில் கேட்கப்பட்டவைகள் அல்ல. மாறாக, காயீன் தான்
இருக்கும் நிலையை அறிந்துகொள்வதற்காகவே தேவன் அவனிடம் நீ ஏன்
கோபமாயிருக்கிறாய்? உன் முகம் மாற்றமடைந்ததற்கான காரணம் என்ன என்று
அவனிடம் கேட்டார்.

காயீன் தான் எதற்காகக் கோபமாயிருக்கின்றேன் என்பதை ஆராய்ந்து பார்த்து,
தன்னுடைய கோபம் நியாயமானதா என்று சிந்தித்துப் பார்ப்பதற்காகத் தேவன்
அவன்
கோபமா யிருப்பதற்கான காரணத்தைக் கேட்டார்.

தேவனுடைய கூற்று 7ம் வசனத்தில் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது
சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது.

இதற்குக் காரணம், மூலமொழியில் இவ்வசனம் தெளிவற்றதாக இருப்பதோடு,
பிற்காலத்தில் திருத்தப்பட்டும் உள்ளது. எனினும்,"நீ நன்மை செய்தால்
மேன்மையில்லையோ"
என்னும் வாக்கியத்தில்
"நன்மை செய்தால்" என்பது
"சரியானதைச் செய்தால்"
என்றும்,
"மேன்மையில்லையோ"
என்பது நீ
"ஏற்றுக் கொள்ளப்படுவாய்"
அல்லது
"மன்னிக்கப்படுவாய்"
என்றும் அர்த்தமுடையது.

அதாவது, அவன் மனமாற்றம் அடைந்தவனாக சரியான நோக்கத்துடன் இன்னுமொரு
காணிக்கையைச் செலுத்தினால் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்றே தேவன் அவனிடம்
கூறியுள்ளார்.

காயீன் தன்னுடைய மனப்பாங்கை
மாற்றிக்கொள்ளாவிட்டால், "பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்" என்கிறார் தேவன்.

"பாவம் இரைக்காகக் காத்திருக்கும் பயங்கரமான ஒரு மிருகமாக இங்கு
உவமிக்கப்பட்டுள்ளது.

7ஆம் வசனத்தின் கடைசி இரண்டு வாக்கியங்களிலும் "அவன்" என்பது "அது"
என்றும் "அவனை" என்பது "அதை" என்றும் இருக்க வேண்டும்.

அதாவது
"பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்". அதன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும்
நீ அதை ஆண்டுகொள்வாய்
என்பதே சரியான மொழிபெயர்ப்பாகும்.

பாவம் காயீனைத் தன்னிடமாய் வைத்திருக்க விரும்பும். ஆனால் அவன் அதை மேற்
கொண்டு தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க வேண்டும்.

பாவம் செய்யும் ஆசை காயீனை ஆட்கொள்ளலாம். அதை அவன் மேற்கொள்ள வேண்டும்.

(இ) அன்பற்ற வழி
(ஆதி.4:8).

அந்தகாரத்திலிருந்த காயீன் வெளிச்சத்திற்கு வராதிருந்தமையால், அவனுடைய
வழி அன்பற்றதாக இருந்தது.

தன் சகோதரன்மீது கோபம் கொண்ட காயீனின் உள்ளத்தில் பகை காணப்பட்டது.
உள்ளத்திலிருக்கும் பகை கொலைக்கு சமமானது என்று வேதம் கூறுகிறது
(மத்.5:21-22,
1யோவா.3:15).

காயீனின் அன்பற்ற வழி இது உண்மை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தன்
சகோதரன் மீது கோபப்பட்ட காயீன் அவனைக் கொலை செய்தான்
(ஆதி.4:8).

இத்தகைய காயீனின் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று வேதம் கூறுகிறது (1யோவா.3:12).

————————————
(கட்டுரையாசிரியர் Dr.M.S. வசந்தகுமார் (தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம்)
————————————

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.