இருளிலிருந்து
ஒளியினிடத்திற்கு…
சகோதரி சாந்தி பொன்னு
பாகம் 2
“என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்”என்றார் ஆண்டவர் (யோவான் 12:46). ஆம், நாம் இயேசுகிறிஸ்துவைத்தான் விசுவாசிக்கிறோம்; அவரைத்தான் வணங்குகிறோம்; இன்னும் சொல்லப்போனால் அவரால் இரட்சிப்பும் பெற்றிருக்கிறோம். அப்படியானால் நமது வாழ்வில் எவ்வளவாக ஒளி வீசவேண்டும்!“இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன், இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்”(2கொரி.4:6) என்று பவுல் எவ்வளவு ஆணித்தரமாக எழுதியுள்ளார். அந்தப் பிரகாசம் எங்கே? பிரகாசம் மங்கியிருக்குமானால், அல்லது வாழ்க்கை இருளுக்குள்ளாகத் தோன்றுமானால், தேவனுடனான நமது பிணைப்பை, ஐக்கியத்தை சற்று சரிபார்க்க வேண்டியது மிக மிக அவசியம்.
இன்று சாத்தான் தேவபிள்ளைகளை வஞ்சகமாகவே தேவனைவிட்டுப் பிரித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நம்மில் யார் உணருகிறோம். கிறிஸ்தவ சமுதாயம் முக்கியமாக வாலிப சமுதாயம் இதனைக் காணவும் உணரவும் கூடாதபடிக்கு அவர்களது கண்கள் குருடாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை யார் சிந்திக்கிறார்கள்? துதி ஆராதனைகள், பாடல் ஆராதனைகள், சங்கீத விருந்துகள், ஐக்கிய விருந்துகள், ஒன்று கூடல்கள், பெரிய பெரிய மகாநாடுகள் என்று எத்தனை! இவை யாவும் நல்லது, தேவையானது. ஆனால், இவற்றையே தன் வஞ்சகக் கூடமாக மாற்றி, தேவனுடனான நல்லிணைப்பை, வசனத்தின் படியான அந்த ஐக்கியத்தை அவன் வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருக்கிறான் என்பதை நிதானித்துப் பார்ப்பது நல்லது. கிறிஸ்து பிறப்பை நினைவுகூரும் இந்த நாட்களில் எத்தனை சிமியோன்களை, எத்தனை அன்னாள்களை நம்மால் காண முடிகிறது? இன்று நமக்கு வருகின்ற சோதனைகள் வெளியிலிருந்து அல்ல; நமக்குள்ளிருந்து தான் வருகின்றன. நாம் எல்லோரும் ஏதோ விதங்களில் சபைக்கடுத்த, கிறிஸ்தவத்திற்கு அடுத்த காரியங்களிலே அதிகமதிகமாக ஈடுபடும்படியான சூழ்நிலைகள் இன்று உருவாகிவிட்டன. நாம் எல்லோருமே தேவனுடைய காரியங்களிலேதான் ஈடுபடுகிறோம். நேரமே இல்லை, இரவு பகலாக அவ்வளவு வேலை. இதனால், தேவனோடு தனித்திருந்து, உறவாடி, கற்றுக்கொண்டு அவரோடுள்ள ஐக்கியத்தில் வளர முடிகிறதில்லை.
அன்று பவுல் எழுதியது இன்றும் நம் மத்தியில் மலிந்துகிடக்கிறது. களியாட்டும், வெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் ஏன் நாம் நடக்கவேண்டும்? (ரோமர் 13:13) இவை எதுவும் ஒளியின் கிரியைகள் அல்லவே! அன்று மோசே சீனாய் மலையுச்சியில் நாற்பது நாட்கள் தேவனோடு தனித்திருந்தார். திரும்பி வந்தபோது, அவருடைய முகப்பிரகாசம் அவருக்கே தெரியவில்லை. ஆனால், மக்கள் அதைக் கண்டு பின்வாங்கினார்கள் என்று வாசிக்கிறோம். அத்தனை பிரகாசம்! பின்னர் மங்கிப்போன அந்தப் பிரகாசத்திற்கே இத்தனை மகிமை இருக்குமானால்,ஒருபோதும் மங்கிப்போகாத மகிமைப் பிரகாசத்தைப் பெற்றிருக்கிற நாம் எவ்வளவாக உலகில் ஒளிவீசவேண்டும்!
