இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு… சகோதரி சாந்தி பொன்னு பாகம் 1

இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு… சகோதரி சாந்தி பொன்னு பாகம் 1 ‘உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி’(யோவான் 1:9) எங்கள் கிராமத்திலே மின்சார வசதி இருந்ததில்லை. விளக்கு வெளிச்சத்தில்தான் நாங்கள் வளர்ந்தோம், வாழ்ந்தோம். அது எங்களுக்குப் பழக்கமாகிவிட்டிருந்தது. என் எட்டாவது வயதிலே கிராமத்திற்கு வெளியே பெரிய பள்ளியில் படிப்பதற்காக பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்டேன். விடுதியில் சேர்ந்த முதல் நாள் மாலை மங்கியது. நான் விளக்கைத் தேடினேன். ஒரு அக்கா வந்து, சுவரிலே இருந்த ஒன்றைத் தட்டினார்கள். ஆ! என்ன வெளிச்சம்! வாயைப் பிளந்தேன் நான். இப்படியும் ஒரு வெளிச்சமா! இப்போதுதான் ஏதோவொன்று விளங்கியது. இதுவரைக்கும், இரவின் முழு இருளிலும், வீடுகளில் எரிந்த மங்கிய வெளிச்சத்திலும்தான் இரவுகளைக் கழித்தேனா என்று ஆச்சரியப் பட்டதையும், வெளிச்சத்தின் மகிமையை அன்று என் பிஞ்சு மனதில் அனுபவித்ததையும் நான் இன்றும் மறப்பதேயில்லை. இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு வரும்போது அப்படியொரு மகிழ்ச்சி! எரிகோவிலே, பர்திமேயு என்ற ஒருவன் பார்வையற்றவனாக பிச்சைக்காரனாக வாழ்ந்தான். அவன் வாழ்வு முழுவதுமே இருட்டாயிருந்தது. அவனுக்கு இயேசுகிறிஸ்து பார்வை கொடுத்த சம்பவத்தை, அதாவது அவனுடைய வாழ்வு ஒளியடைந்த சம்பவத்தை மாற்கு 10:46-52வரையிலும் வாசிக்கிறோம். இதுவரையிலும் உலகத்தைப் பார்க்காத அவன் பார்வை பெற்றபோது எப்படிக் குதூகலித்திருப்பான் என்பதை நாம் கொஞ்சமாவது கற்பனை செய்து பார்க்கலாம். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே, அவருக்குப் பின்சென்றான் என்றும், ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள் என்றும் லூக்கா இதைக் குறித்து விபரமாக எழுதியுள்ளார். ஏன் இவ்வளவு சந்தோஷம்? அவன் இருளிலிருந்து ஒளிக்குள் வந்தான். இருண்டுபோன அவனது சரீரத்திற்கு ஒளி கிடைத்தது. அது அவனுக்கும் மகிழ்ச்சி, பிறருக்கும் மகிழ்ச்சி. ஆனால், இந்தப் பர்திமேயுவும் ஒருநாள் மரித்திருப்பான். அவனது சரீரமும் பார்வையடைந்த கண்களும் மண்ணுக்குள் போயிருக்கும். அப்படிப்பட்ட வாழ்வைக் குறித்தே இத்தனை சந்தோஷமென்றால், நித்திய நரகத்தில் தள்ளப்படவிருந்த நாம், அந்தகார இருளில் அடைபட்டுக்கிடந்த நாம், ஆச்சரியமானதும் நித்தியமானதுமான ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறோமே, இதைக் குறித்து நாம் எவ்வளவாக மகிழ்ச்சி அடைய வேண்டும்! நம்மைக் குறித்து பிறர் எவ்வளவாக தேவனைத் துதிக்க வேண்டும்!“இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்”என்று தேவதூதன் சொன்ன சந்தோஷம் இதுதான்.“புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது”என்று சிமியோன் சொன்னதும் இதுவேதான். அந்த ஒளிப்பிரகாசம் இன்று நமது வாழ்வில் பிரதி பலிக்கிறதா? அதற்கு மாறாக, நமது வாழ்வு சோகங்களும் துயரங்களும் நிறைந்து காணப்படுவது ஏன்? பிறருக்கும் நமக்குமுள்ள உறவுகள் கறைபட்டிருப்பது ஏன்? தேவனோடுள்ள ஐக்கியம்: “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. …நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம்”(1 யோவான் 1:5,6). இந்த வசனத்தில் நம்மையும் தேவனையும் இணைக்கின்ற ஒரு பாலமாக ஒரு சொல் அமைந்திருப்பதைக் கவனித்தீர்களா!“ஐக்கியம்”– இதற்கு இன்று பலவித வியாக்கியானங்களைக் கொடுத்து, நமது கிறிஸ்தவ வாழ்க்கையை குதூகலிக்கப்பண்ணிக் கொண்டிருக்கிறோம்.“ஐக்கியம்”என்பது“நேரான சரியான விடுபடாத பிணைப்பு”. நமது வீடுகளில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் செய்துவிட்டு, அழகான பல்புகளையும் தொங்கவிட்டுவிட்டால் வெளிச்சம் வந்துவிடுமா? இல்லை. ஏற்கனவே இருக்கின்ற மின்சார ஓட்டத்துடன் சரியான இணைப்பை நாம்தான் ஏற்படுத்தவேண்டும். அந்த பிளக் சரியாகப் பொருத்தப்படாவிட்டால் தொங்கி நிற்கும் பல்புகள் ஒளி கொடுக்காது. இதுதான் நமது வாழ்வும். தேவன் இருக்கிறார். நாமும் இருக்கிறோம். நமக்கும் அவருக்கும் இடையில் சரியான இணைப்பை நாம் ஏற்படுத்தாவிட்டால் அவருடைய வல்லமை நமக்குள் பாய்ந்துவர வாய்ப்பேயில்லை. அப்போது எப்படி நமது வாழ்வு ஒளிவீசும்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.