இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு… சகோதரி சாந்தி பொன்னு பாகம் 3

இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு… சகோதரி சாந்தி பொன்னு பாகம் 3 பிறரோடுள்ள ஐக்கியம்: நாம் கிறிஸ்தவர்கள்தான், ஆனால் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுப்பார்ப்போமாக. ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். மாம்ச கண்களுக்குத் தெரியாத தேவனை நான் நேசிக்கிறேன் என்று சொல்லுவதா; எனக்கு அருகிலிருக்கும் அடுத்தவனை நான் நேசிப்பதை வாழ்ந்து காட்டுவதா எது எளிது? எது கடினம்? விடை உங்களுக்கே தெரியும். ஆம், நான் தேவனை நேசிப்பது உண்மையா பொய்யா என்பது, அடுத்தவனோடு எனக்குள்ள உறவுதான் நிரூபிக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.“அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்”(1யோ.1:7).“ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலை கொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக் கினபடியால்….”(1யோ.2:9-11). இந்த வசனங்களையெல்லாம் நாம் எத்தனை தடவைகள் படித்திருக்கிறோம். அப்படியிருந்தும், நமது உள்ளத்தில் மெய்யான அன்பு இல்லையானால் நாம் எப்படி தேவனுடைய பிள்ளைகளாக இருந்து அவருடைய பிரதிநிதிகளாக உலகில் பிரகாசிக்க முடியும்? இன்று, நமது வாழ்வில் இருளின் கிரியைகள் அதிகரிப்பதற்கு ஒரே காரணம்,“வார்த்தை”இதற்கு முக்கியத்துவம் கொடுக்காதபடிக்கு தந்திரமாக பிசாசானவன் வீசுகின்ற வஞ்சக வலைக்குள் நாம் சிக்கியிருப்பதுதான். உட்கார்ந்திருந்து பிரசங்கம் கேட்பதிலும், கூட்டங்கள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்ற நாம் இந்த வார்த்தைகளை நமது சொந்த வாழ்வில் உட்கொண்டு அதற்குக் கீழ்ப்படிந்து வாழ ஆயத்தமா? பிரிவினைகளும், போட்டி பொறாமைகளும், வஞ்சகங்களும் ஒருபுறத்தில், மறு புறத்தில் வஞ்சகமான சொற்பொழிவுகளும், கள்ளத்தனமான போதனைகளும், மக்களைப் பிரியப்படுத்தும் பிரசங்கங்களும், பாடல் ஆடல் என்றும் இன்றைய நவீன வசதிகளின் ஆரவாரமும் ஆதிக்கமும் என்று எல்லாம் நம்மிடையே மலிந்துவிட்டன. இவற்றின் மத்தியில் நமது சாட்சியுள்ள வாழ்வு என்னவாகும்? எனக்கு அருகிலிருக்கும் சகோதரனிடம் தூய்மையான அன்பு செலுத்தத் தெரியாவிட்டால், அவனை ஏற்றுக்கொண்டு புரிந்துகொண்டு, கிறிஸ்து நம்மில் காட்டிய அன்பை மன்னிப்பை தயவை அவனுக்குக் காட்டத் தெரியாவிட்டால், அடுத்தவனின் தவறுகளிலும் அவரைச் சரிப்படுத்தி அணைத்துக் கொள்ளத் தெரியாவிட்டால்,“நான் உம்மை நேசிக்கிறேன்”என்று பாடி ஆரவாரம் செய்வதில் அர்த்தம் என்ன?‘நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்’ இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் நமது வாழ்வை தேவனுக்கு நேராக, தேவனுக்கு நேராக மாத்திரமே திருப்புவோமாக. என் வாழ்வில் வீசுவது போலித்தனமான வெளிச்சமா? கிறிஸ்துவிடம் பெற்றுப் பிரகாசிக்கிற வெளிச்சமா? இதனைச் சரிபார்ப்பதற்கு ஒரே வழி, கிறிஸ்துவின் ஒளியினிடத்திற்குத் திரும்புவதேதான். கிறிஸ்துவின் ஒளியினிடத்திற்குத் திரும்பும்வரையிலும், நமது பாவ நிலைமை, நமக்குள் இருக்கும் இருளின் கிரியைகள், நமக்கு ஒரு விடுதலை வேண்டும் என்றதான உணர்வு எதுவும் வரவே வராது. பலர் தங்கள் வாழ்வை கிறிஸ்துவின் வெளிச்சத்துக்குள் கொண்டுவர விரும்புவதில்லை. அதாவது, அவருடைய வார்த்தைக்கு நேரே தங்கள் வாழ்வை நிறுத்தி சோதித்துப்பார்க்க விரும்புவதில்லை. ஏனெனில், பயம்; தமக்குள் உள்ளது உள்ளபடியே வெளிவரும் என்ற தயக்கம். வீட்டுக்கூரையிலுள்ள சிறு துவாரத்தினூடாக உள்ளே வருகின்ற அந்த ஒளிக் கீற்றில் நமது வெறுமையான கண்களினால் பார்க்க முடியாத ஏராளமான தூசித்துகள்கள் தெரிகின்றனவே, அதுபோலவே,கிறிஸ்துவின் ஒளிக்குள் வந்தோமானால், நமது வாழ்வில் நமக்குத் தெரியாமலே ஒட்டியிருக்கிற கறைகளும் தெரியவரும். பிரியமானவர்களே, இருளின் அந்தகாரத்தி லிருந்து கிறிஸ்து நம்மை விடுதலையாக்கிவிட்டார் (கொலோ.1:13) என்ற நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க வேண்டிய நாமே இன்னமும் இருளின் பிள்ளைகள்போல சாத்தானின் நுகத்தடியைச் சுமப்பது ஏன்? படைப்பில் இருளிலே வெளிச்சத்தை உண்டாக்கிய தேவன், பாவ இருளுக்குள் மாண்டுபோன மானிடத்துக்கு ஒளி உண்டாகும்படிக்குத் தாமே ஒளியாக நம்மைத் தேடிவந்த தேவன், இன்னமும் இருளுக்குள் வாழுகின்ற இந்த சமுதாயத்திற்கு ஒளியாக இன்று நம்மைத்தான் வைத்திருக்கிறார்.நாம் உண்மை ஒளியாகிய இயேசு நடந்த பாதையில் அவரையே பின்பற்றி நடப்போமானால், பாவத்திற்குள் விழாதபடிக்கு நாம் தப்பிக்கலாம். ஒரு காரியத்தை மனதில் வைத்துக் கொள்வோம். இன்றைய கிறிஸ்தவ பிள்ளைகளை நேரடித் தாக்குதலால் இலகுவாகத் தாக்கி வீழ்த்தமுடியாது என்பதை சத்துரு நன்கு அறிந்து வைத்திருக்கிறான். அதனால், இன்று மறைமுகமாக, பதுங்கியிருந்து தாக்குகின்ற, அல்லது நல்ல காரியங்களாலேயே தாக்குகின்ற யுக்தியில் இறங்கியிருக்கிறான் என்பதைக் குறித்து எச்சரிக்கையடைவோமாக.விட்டுவந்த இருளுக்குள் மறுபடியும் அகப்பட்டு விடாதபடி, தினமும், ஒவ்வொரு விநாடியும் நம்மை கிறிஸ்துவின் ஒளியில் நிறுத்தி வைப்போமாக. நம்மைச் சூழ்ந்துள்ள மக்கள் மத்தியில், விசேஷமாக இந்த கிறிஸ்துமஸ் நாட்களில், நாம் ஒளிவீசும் பிள்ளைகளாக இருந்து,“எல்லோருக்கும் சந்தோஷம் உண்டாக்கும் நற்செய்தி”யின் நறுமணத்தை வாயினால் மாத்திரமல்ல, வாழ்வினாலும் வீசச் செய்வோமாக.“துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள்”(ரோ.13:14) . சத்தியவசன சஞ்சிகை வாசகர்களுக்கு என் அன்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.