எருசலேமின் குமாத்திகளே, உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். Ps.Sam Sundaram

 


எருசலேமின் குமாத்திகளே, உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.

Ps.Sam Sundaram


“திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழு கிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக் காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” (லூக்கா 23:27,28).


அன்று பெரியவெள்ளிக்கிழமை அல்லது நல்லவெள்ளிக் கிழமை. இயேசு கிறிஸ்து தம்முடைய சிலுவையைச்சுமந்து கொண்டு எருசலேம் நகரத்தின் வீதிகளின் வழியாகக் கல்வாரி மலையை நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நடந்துசென்றார். அக் கோரக் காட்சியினைக் கண்ட எருசலேம் நகரத்தின் பெண்ணின் நல்லார்கள் அழுது புலம்பிக்கொண்டு அவருக்குப் பின்னே சென் றார்கள். பாரச்சிலுவையைச் சுமந்துகொண்டு தள்ளாடிச் சென்ற அந்நிலையிலும் இயேசு பின்னே திரும்பி அப்பெண்மணிகளைப் பார்த்து, ''எருசலேம் குமாரத்திகளே! நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" என்று சொன்னார்.


அன்று எருசலேம் குமாரத்திகள் இயேசுவுக்காகப் புலம்பி அழுதார்கள். அதுபோலவே இன்றும் இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் தியானித்துக்கொண்டு அழுகின்றவர்கள் உளர். ஆயினும் இயேசுவோ தமக்காக அழுகின்ற மக்களைக் கண்டு திருப்தியடையமாட்டார். இன்றைக்கும் அவர்களைப் பார்த்து இயேசு, "எனக்காக அழாமல் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" என்றுதான் சொல்லுகிறார். நல்லவெள்ளிக்கிழமையில் நாம் அழவேண்டும். ஆயினும் நோக்க மில்லாமல் அழக்கூடாது. நாம் அழவேண்டுமாயின் அதன் நோக் கத்தை முதற்கண் அறிந்துகொள்ளுதல்வேண்டும். அப்போஸ் தலனாகிய யாக்கோபிடம் செல்லுவோம்; அவர் நாம் எதற்காக அழவேண்டுமென்பதனை நமக்கு விளக்கிக் காட்டுவார்.


தேவனிடத்தில் சேரும்படி அழுங்கள்


'தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களி டத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங் கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்த மாக்குங்கள். நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்" (யாக்கோபு 4:8-9).


விசுவாசிகளை அப்போஸ்தலன், "பாவிகளே!" என்றும், "இருமனமுள்ளவர்களே!" என்றும் அழைக்கிறார். விசுவாசிக ளாகிய நாம் நம்முடைய பாவங்களுக்காக அழவேண்டும். நம் முடைய கைகளைச் சுத்திகரித்துக்கொள்ளவேண்டும். கைகளில் அசுத்தமா? ஆம்; நம்முடைய கொடுக்கல் வாங்கல் முதலிய காரியங்களிலுள்ள உண்மைக்கேடுகளாகிய அசுத்தங்களை நாம், தேவனிடத்தில் சேரும்படி, முதற்கண் அகற்றிச் சுத்திகரித்துக் கொள்ளத்தான்வேண்டும். அப்போஸ்தலன் குறிப்பிடுகின்ற நம்மு டைய இரண்டாவது குற்றம் இருமனமாகும்.


"இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனா யிருக்கிறான்'' (யாக்கோபு 1:8) என்று அவர் கூறுகிறார்.


இருமனமுள்ளவர்கள் தங்கள் இருதயங்களைப் பரிசுத்த மாக்கவேண்டும். விசுவாசிகள் ஒரே சமயத்தில் தேவனுக்கும் உலகத்துக்கும் ஒத்துவாழமுடியாது. உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று நாம் அறிந்து கொள்ளவேண்டும். ஆகவே, தேவனிடத்தில் சேரக்கூடாதபடித் தடையாகவுள்ள நம்மு டைய பாவங்களையும் அக்கிரமங்களையும் அறிக்கைபண்ண வேண்டும். துயரப்பட்டு அழுது நாம் அறிக்கையிடவேண்டும்.


நம்முடைய பாவங்களுக்காகத்தானே இயேசு சிலுவையின்மீது பாடுபட்டார். நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படியாக அவர் பட்ட பாடுகளும், சிலுவையில் சிந்திய இரத்தமும் வீண்போகக் கூடாது. ஆகவே, நாம் இயேசுவுக்காக அழாமல், நம்முடைய பாவங்களுக்காக அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடு மாறு மனங்கசந்து அழவேண்டும்.


கிறிஸ்து நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி நாம் அழவேண்டும்


'ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும் படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களி னிமித்தம் ஒரேதரம் பாடுபட்டார்” (1 பேதுரு 3:18).


காட்டொலிவ மரங்களாகிய நம்மை நல்ல ஒலிவமரமாகிய தம்மோடும் பிதாவாகிய தேவனோடும் ஒட்டவைப்பதற்கும், நல்ல ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் நாம் உடன்பங்காளி களாகும் பொருட்டும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தின்மீது பாடுபட்டார். ஆகவே, அவருடைய பாடு களையும் மரணத்தையும் தியானித்துக்கொண்டிருக்கிறவர்களாகிய நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். நம்முடைய நடக் கைகளெல்லாவற்றையும் நாம் ஆராய்ந்துபார்க்கவேண்டும்.


நல்ல வெள்ளிக்கிழமையில் நாம் இயேசுவுக்காக அழாமல், அவரிடத்தில் சேரக்கூடாதபடி தடைகளாயிருக்கின்ற நமது பாவங்களுக்காகவே அழவேண்டும். நம்முடைய நடை, உடை, பாவனைகளை நாம் சற்று ஆராய்ந்துபார்க்க வேண்டும். நம்மு டைய உடையலங்காரங்கள், முடியலங்காரங்கள் ஆகியவை களைக் குறித்து நாம் சிந்தனை செய்யவேண்டும். உலகத்துக்கும் அதன் வழிபாடுகளுக்கும் இடங்கொடுத்து இப்பொழுதும் நாம் தேவனைவிட்டுத் தூரமாயிருக்கிறோமா? பிரியமானவர்களே! இன்றே நாம் ஆராயவேண்டும்.


பெரியவெள்ளிக்கிழமை என்றழைக்கப்படும் நாள் நம்முடைய வாழ்க்கையில் இன்றியமையாச் சிறப்புடைய நாளாகும். இந்த நாளில் நாம் ஒரு தீர்மானத்திற்குள் வரவேண்டும். "விசுவாசித்துப் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானத்தைப் பெற்றிருக்கிறோம்; மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பரிசுத்த ஆவியன் அபிஷேகத்தையும் பெற்றிருக்கிறோம்" என்று எண்ணிக்கொண்டு நம்மில் நாமே திருப்தியாயிருக்கின்ற நாம் சிந்தனைசெய்து தீர்மா னிக்கவேண்டும். தேவனைச் சேரும்படி நாம் தீர்மானிப்போமாக! நம்முடைய சிந்தனைகள், வாயின் வார்த்தைகள் நடக்கைகளாகிய எல்லாவற்றையும் ஆராய்வோம். இன்றே நம்முடைய குறை குற்றங்களையெல்லாம் அறிக்கையிட்டு, தேவனிடத்தில் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுவோம். நாம் பலவீனராயின் தேவன் தாமே தம்முடைய வல்லமையால் நிறைத்து நம்மைப் பலப் படுத்துவார்.


''நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், பாவங் களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம் மைச் சுத்திகரிப்பதற்குத் தேவன் உண்மையும் நீதியுமுள்ளவரா மிருக்கிறார்.'' ஆகவே, தேவனுடைய கிருபைக்காக அவரை நோக்கி இறைஞ்சுவோம்.


கிறிஸ்துவின் அன்பு என்றால் என்ன?


''உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக் கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங் களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்'' (மத்தேயு 5:44) என்றார் இயேசு.


இதுவே கிறிஸ்துவின் அன்பு. கல்வாரிச் சிலுவையின்மீது அவர் காண்பித்த அன்பு இதுவே. ஆகவே, கிறிஸ்துவினிமித்தம் வருகின்ற பாடுகளுக்காகவும் நிந்தைகளுக்காகவும் நாம் மகிழ்ந்து களிகூரவேண்டும். இவ்வாறு கிறிஸ்து சென்ற பாதை யில் செல்லமுடியாவிட்டால், அதற்காக அழுங்கள். அவருடைய சிலுவை மரத்தின் அடியில் நின்று, பாடுபடுகின்ற அவரை நோக்கி வேண்டிநிற்போம். அவர்தாமே நம்மைத் தம்முடைய சிந்தையினால் நிரப்புவாராக!


இயேசு கிறிஸ்துவின் பாடுபடுகின்ற சிந்தையைத் தரித்துக் கொள்ளுவதற்காக நாம் அழவேண்டும்


"இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்ட படியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாய்த் தரித் துக்கொள்ளுங்கள். ஏனென்றால், மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சை களின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக் கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்" (1 பேதுரு 4:1,2).


கிறிஸ்து நமக்காக மாம்சத்தில் பாடுபட்டபடியால், நாமும் அப்படிப்பட்ட சிந்தையை உரிமையாக்கிக்கொள்ளும்படி சொந்தம் பாராட்டலாம். கிறிஸ்துவின் சிந்தையை நாம் ஓர் ஆயுதமாகத் தரித்துக்கொள்ளவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய போராட்டத் தில் நமக்கு வெற்றியளிப்பது கிறிஸ்துவின் சிந்தையேயாகும். எப்பொழுதும் எல்லா இடங்களிலும் நாம் அதனைச் செயல் படுத்தும்படி தீர்மானம் செய்யவேண்டும். நம்முடைய சத்துருக் களை ஆசீர்வதிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும், அவர் களுக்கு நன்மைசெய்யவும் நாம் இயேசுவின் சிந்தையைத் தரித்துக்கொள்ளவேண்டும்.


இயேசுவின் சிந்தையே நம்மை இயேசுவைப்போலாக்கும். இயேசுவின் சிந்தையைத் தரித்துக்கொள்ளாதமட்டும் நாம் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையினை நடத்தமுடியாது. பிரியமானவர்களே! இப்பொழுதே இயேசுவின் சிந்தையைக்குறித்துத் தியானியுங்கள்.


கிறிஸ்துவும் நம்மைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராயிருந்தார்.(எபி.2:14)நாம் தேவனால் பிறந்தவர்கள் (யோவான் 1:12,13); தேவனுடைய வித்து நமக்குள் இருக்கிறது. தேவன்தாமே நம்மை அவருடைய வசனத்தினாலே ஜெநிப்பித்தார் என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகின்றார். ஆகவே, இவ்வுலகத்தின் மக்களைப்போலன்றி தேவனுடைய பிள்ளைகளாகிய நம்முடைய இரத்தத்திலும் மாம்சத்திலும் வேறுபாடுண்டு. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நமக்குள் பாய்கின்ற படியால், நாம் முற்றிலும் மாறுபட்ட மக்களாய் இவ்வுலகத்தில் இருக்கின்றோம்.


நாம் யார்? நாம் தேவனால் பிறந்தவர்கள். தேவனால் பிறந்த நாம் இப்பொது தேவர்களாயிருக்கிறோம்.(ச.82:6) ஆகவேதான் கிறிஸ்துவைப்போலவே நாம் பரிசுத்தமாய் வாழமுடியும். அவரு டைய பாடுபடுகின்ற சிந்தையை நாமும் தரித்துக்கொள்ளுவதற் காக மன்றாடுவோமாக!


இயேசு கிறிஸ்துவின் சிந்தையை ஓர் ஆயுதமாக நாம் பயன்படுத்தவேண்டும். அவ்வாறு பயன்படுத்தும்போது என்ன நடைபெறுகின்றது? 1 பேதுரு 4:2,4 வசனங்களைப் பார்க்க. மாம்சத்திலிருக்கும்வரை, இவ்வுலகத்தின் மக்களுக்குரிய இச்சை களின்படி நடக்கமாட்டோம்; தேவனுடைய சித்தத்தின்படி வாழு கின்ற வாழ்க்கையின் பொருட்டு, நாம் பாவங்களை விட்டோய்ந் திருப்போம். இரட்சிக்கப்படுமுன்னர் வாழ்ந்த நம்முடைய பழைய பாவ வாழ்க்கையை வேண்டாமென்று உதறித் தள்ளிவிடுவோம். ஆகவே, பாவங்களை விட்டோய்ந்து தேவனிடத்தில் சேரும் படிக்கு நாமும் இயேசுவைப்போலவே தீங்கநுபவிக்கவும் விபரீதங் களைச் சகிக்கவும் முடியும்.


இயேசு, "குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படி தலைக் கற்றுக்கொண்டார்" (எபி. 5:8). அவர் தம்மைத் தாழ்த் தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது. (அப். 8:33)


இயேசுவைப்போல நன்மைசெய்து பாடுபடும்படிக்கு நாம் அவரைத் தொடர்ந்து பின்பற்றும்படி அவர் நமக்கு ஒரு நன் மாதிரியை வைத்துப்போனார்.


இயேசுவின் நன்மாதிரியான வாழ்க்கைதான் என்ன? "அவர் (இயேசு) பாவஞ்செய்யவில்லை; அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; அவர் வையப்படும்போது பதில் வையா மலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்" (1 பேதுரு 2:22,23).


விசுவாசிகளாகிய நாம் பரிசுத்தவான்களைப்போல ஜெபம் பண்ணுகிறோம்: பிரசங்கம்பண்ணுகின்றோம்; ஆயினும் ஏற்றமும் எடுத்துக்காட்டுமாய் விளங்கும் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை யோடு நம்முடைய வாழ்க்கையினை ஒப்புநோக்கும்பொழுதுதான், நாம் அவரைவிட்டு எவ்வளவு தூரத்திலிருக்கிறோமென்பது தெள் ளெனவிளங்கும். நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் தியானித்துக்கொண்டிருக்கின்ற நாம், அவரைப் போல வாழும் ஒப்பற்ற வாழ்க்கையை விரும்பிப் பற்றிக் கொள்ளும்படி தீர்மானிக்கவேண்டும். இன்று தேவன் நம்முடைய வாஞ்சையையும் தீர்மானத்தையும் காண்பாராயின், இயேசுவின் ஒப்பற்ற வாழ்க்கையை நமக்குத் தந்தருளுவார். நாமும் அதனைத் தேவனுடைய வரப்பிரசாதமாகப் பெற்றுக்கொள்ளு வோம். விசுவாசிக்கிற நமக்கு அது கைகூடும்.


இயேசு நம்மைப் பரிசுத்தப்படுத்தும்படியாக நாம் அழவேண்டும்


“அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத் தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்” (எபி. 13:12,13).


இரட்சிக்கும்படி மாத்திரமல்ல, நம்மைப் பரிசுத்தம் செய்யும்படியாகவும் இயேசு சிலுவையில் பாடுபட்டார். ஆகவே, இயேசுவின் பாடுகளும் மரணமும் நம்முடைய பரிசுத்தமான வாழ்க்கைக்கு ஆதாரமாயிருக்கின்றன.


நாம் பரிசுத்தமான வாழ்க்கையை நடத்தும்படி என்ன செய்யவேண்டும்? இயேசுவைப்போலவே நாமும் பரிசுத்தமாய் வாழ வேண்டுமாயின், அவருடைய நிந்தையினைச் சுமக்க வேண்டும்.


இன்று நாம் பரிசுத்தமாய் வாழமுடியாவிட்டால் அதற்குள்ள ஒரே காரணம், அவருடைய நிந்தையைச் சுமக்கவிருப்பமில்லை என்பதேயாகும்.


ஒருவேளை சரீரத்தின் பாடுகளையும் உபத்திரவங்களையும் நாம் சகித்துக்கொள்ளலாம். ஆயினும் நிந்தனைகளும் அவமானங் களும் நம்முடைய உள்ளங்களை உருவக்குத்தும்போது வேதனை அளிக்கின்றன. உடலின்மேலுள்ள புறப்புண்களும் காயங்களும் ஆறிவிடும்; இருதயத்தின் புண்களோ ஆறாதவையல்லவா? என்றும்


இயேசு கல்வாரி மலையை நோக்கிச் சிலுவையைச் சுமந்து செல்லும்பொழுதும், அங்கே சிலுவை மரத்தில் தொங்கும் பொழுதும் நிந்தைகளையும் பரியாசங்களையும் அவர் சகித்தார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் அவர் தம்முடைய வாயைத் திறக்கவில்லை. நிந்தையைச் சுமந்துகொண்டு பாளயத்துக்குப் புறம்பே நமக்காக, நம்முடைய பரிசுத்தத்திற்காகச் சிலுவையிலே பாடுபட்டார். ஆகவே, இயேசு கிறிஸ்துவின் நிந்தைகள் இன்று நம்முடைய பரிசுத்தத் திற்காகவே வைக்கப்பட்டுள்ளன.


எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான் மோசே. (எபி. 11:27) இன்று நாம் இயேசு கிறிஸ்துவினிமித்தம் ஏற்படும் நிந்தைகளுக்கும் பரியாசங்களுக்கும் பங்காளிகளாயிருக்கிறோமா? கிறிஸ்துவினிமித்தம் நாம் அனுபவிக்கும் பாடுகளிலும் நிந்தை களிலும் தேவன் பிரியப்படுகிறார். இதனைக்குறித்துப் பேசுகின்ற தேவனுடைய வார்த்தையைப் பாருங்கள்.


"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமை யுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்" (I பேதுரு 4:14).


ஆகவே, நீங்கள் கிறிஸ்துவினிமித்தம் நிந்திக்கப்பட்டால், பாக்கியவான்கள். நிந்திக்கப்படுகிறவர்கள் நீங்களல்ல, மகிமையுள்ள பரிசுத்த ஆவியானவரே நிந்திக்கப்படுகிறார். உங்களால் அவர் மகிமைப்படுகிறார்.


இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வாழ்ந்த நாட்களில் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தினார். அவருக்குப் பிரியமாக நடந்து கொண்டார். இன்று நாம் நம்முடைய நடக்கையின் வாயிலாக அவரைப் பிரியப்படுத்தவேண்டும். பிதாவாகிய தேவனுடைய வீட்டில் இயேசு நம்முடைய மூத்த சகோதரனாயிருக்கிறார். நம்மைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படவில்லை. பரிசுத்தம் செய்கிறவராகிய அவரும் பரிசுத்தம்செய்யப்படுகிறவர் களாகிய நாமும் தேவனுடைய வீட்டில் ஒன்றாயிருக்கிறோம்.


இயேசு கிறிஸ்து நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும் படியாகவும், பாடுபடும் சிந்தையை ஆயுதமாகத் தரித்து நாம் இவ்வுலகில் வாழவும், அவரைப்போல பரிசுத்தமாய் ஜீவிக்கும் படியாகவும் நாம் பெரியவெள்ளிக்கிழமை தினத்தன்று நம்மை ஒப்புக்கொடுத்து, அவர் பாதம் வீழ்ந்து அழுது மன்றாடு வோமாக!


"எருசலேமின் குமாரத்திகளே! உங்களுக்காகவும் உங்கள் பிள்கைளுக்காகவும் அழுங்கள்''.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.