பாடுகளின் வாரம்- வியாழக்கிழமை நிகழ்வு 8,9,10

 




பாடுகளின் வாரம்- வியாழக்கிழமை நிகழ்வு 8,9,10

நிகழ்வு 8

பேதுரு இயேசுவை மறுதலிக்கிறான்

மத்தேயு 26:58,69-75 ; மாற்கு 14:54,66-72 ; லூக்கா 22:54-62 ; யோவான் 18:15-18,25-27


பிரதான ஆசாரியனுடைய வீட்டில் இயேசு


அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்  (லூக் 22:54). 


பேதுரு தன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறான். இயேசுகிறிஸ்துவை பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விடுகிறார்கள். பிரதான ஆசாரியனுக்கு முன்பாக இயேசுகிறிஸ்து விசாரிக்கப்படும் சம்பவம் மற்ற சுவிசேஷங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் லூக்கா எழுதின சுவிசேஷத்தில் இது எழுதப்படவில்லை. இயேசுகிறிஸ்துவை அவர்கள் பிடித்த பின்பு, அவரை பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விடுகிறார்கள் என்று மாத்திரமே  இந்த சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 


இயேசுகிறிஸ்துவை பிடித்தவர்கள் மிகுந்த குழப்பத்திலிருக்கிறார்கள். அவரை என்ன செய்வதென்று தெரியாமல், அவரை பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டு விடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவைப் பிடிக்கும்போது அவர்கள் பார்த்த சம்பவத்தையும், அவர்கள் கேட்ட வார்த்தையையும் குறித்து  மனக்கலக்கத்திலிருக்கிறார்கள். பயம் அவர்களை ஆளுகை செய்கிறது. இயேசுகிறிஸ்துவை பிடித்தாலும், அவரை என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. சீக்கிரமாக இந்த பயத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமென்று விரும்பி, அவரை பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுகிறார்கள். 


இயேசுவை அறியேன்


அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி,  அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். அப்பொழுது ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து:  இவனும் அவனோடிருந்தான் என்றாள். அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுத-த்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான். ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் க-லேயன்தான் என்று சாதித்தான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று (லூக் 22:55-60). 


பேதுரு இதுவரையிலும் இயேசுகிறிஸ்துவை நெருக்கமாக பின்பற்றிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போதோ தூரத்திலே அவருக்குப் பின்செல்கிறான். இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பது இவனுடைய மனச்சாட்சியில் பதிந்திருக்கிறது. ஆகையினால் தன்னுடைய மனச்சாட்சியை திருப்திபண்ணுவதற்காக அவரைப் பின்பற்றிச் செல்கிறான். ஆனால் அவருக்கு தூரத்திலே பின்செல்கிறான். தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இயேசுகிறிஸ்துவுக்கு வரப்போகிற தண்டனைகளிலிருந்து தன்னை தப்புவித்துக்கொள்வதற்காகவும் மிகவும் கவனமாக அவரோடுகூட நெருக்கமாக பின்செல்லாமல், அவருக்கு தூரமாகவே பின்செல்கிறான். 


இயேசுகிறிஸ்துவுக்கு தூரமாக விலகிப்போகிறவர்கள் துன்மார்க்கருடைய கூட்டத்திலே சேர்ந்துவிடுவார்கள். பேதுருவும் பிரதான ஆசாரியருடைய வேலைக்காரரோடே  சேர்ந்துகொள்கிறான். அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள். பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்காருகிறான். அவர்களில் தானும் ஒருவன்போல தன்னைக் காண்பித்துக்கொள்கிறான். இயேசுகிறிஸ்துவோடு தனக்கு இதுவரையிலும்  எந்தவிதமான தொடர்பும் இல்லாததுபோல நடிக்கிறான். ஏனெனில் இயேசுகிறிஸ்து இப்போது மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார். அவரோடுகூட தானும் அந்த ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதவாறு தப்பித்து விடவேண்டுமென்று அவரைவிட்டு விலகியே செல்கிறான். 


அப்போது ஒரு வேலைக்காரி அங்கு வருகிறாள். பேதுரு பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களோடு நெருப்பண்டையில் உட்கார்ந்திருக்கிறான். இந்த வேலைக்காரி அந்த இடத்தில் அவனை உற்றுப்பார்த்து, இவனும் இயேசுவோடு கூடயிருந்தவன் என்று கூறுகிறாள். அவளுடைய வார்த்தையை அங்கீகரிக்க பேதுருவுக்கு துணிச்சலில்லை. அவளுக்கு பிரதியுத்தரம் கூற பேதுருவுக்கு பெலனில்லை. தான் இயேசுவோடு கூடயிருந்தவன் என்பதை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, தனக்கு இயேசுவையே தெரியாது என்று மறுதலித்துவிடுகிறான். ""ஸ்தீரியே அவனை அறியேன்'' என்று பேதுரு ஒட்டுமொத்தமாக இயேசுகிறிஸ்துவை மறுதலித்துவிடுகிறான். 


பேதுருவின் பிரச்சனை இத்துடன் முடிந்துவிடவில்லை. சற்று நேரத்திற்குப் பின்பு  வேறொருவன் அங்கு வந்து அவனைக் காண்கிறான். ""நீயும் அவர்களில் ஒருவன்'' என்று பேதுருவிடம் கூறுகிறான். அதற்குப் பேதுரு ""மனுஷனே, நான் அல்ல'' என்று  மறுபடியும் தனக்கும் தன் ஆண்டவருக்குமுள்ள ஐக்கியத்தை ஒட்டுமொத்தமாக மறுதலித்துவிடுகிறான். 


தன்னுடைய பிரச்சனை  இத்துடன் முடிவடைந்துவிட்டது என்று பேதுரு நினைத்துக்கொண்டிருக்கிறான். ஆனால் ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப் பின்பு வேறொருவன் அவனைப் பார்க்கிறான். ""மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான்'' என்று அந்த மனுஷன் சாதிக்கிறான். பேதுருவின் தோற்றம், பேச்சு ஆகியவை அவன் ஒரு கலிலேயன் என்பதை  நிரூபிக்கிறது. ஆகையினால் இவனும் இயேசுவோடு கூடயிருந்தவன் என்று அந்த மனுஷன் உறுதியாக சாதித்துப் பேசுகிறான். அதற்குப் பேதுரு தான் இயேசுவின் சீஷன் என்று சாதாரணமாக மறுதலிப்பதற்குப் பதிலாக, ""மனுஷனே நீர் சொல்லுகிறதை அறியேன்'' என்று கூறிவிடுகிறான். இயேசுகிறிஸ்துவின் வார்த்தையின் பிரகாரம் சேவல் கூவுகிறதற்கு முன்னே பேதுரு இயேசுகிறிஸ்துவை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிக்கிறான். 


இயேசு பேதுருவை நோக்கிப் பார்க்கிறார்


அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ மூன்றுதரம்  மறுத-ப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்  (லூக் 22:61,62).


பேதுரு இயேசுகிறிஸ்துவை தனக்குத் தெரியாது என்று மூன்றுமுறை மறுதலித்துக் கூறினவுடனே சேவல் கூவிற்று. அந்தவேளையில் இயேசுகிறிஸ்துவும் அவனை நோக்கிப் பார்க்கிறார். தன் ஆண்டவரை    சேவல் கூவுகிறதற்கு முன்னே மூன்றுமுறை தான் மறுதலிப்பான் என்று இயேசுகிறிஸ்து கூறிய வார்த்தையை பேதுரு நினைவுகூருகிறான். வெளியே போய் மனங்கசந்து அழுகிறான். சிறிய காரியம்கூட பெரிய மனமாற்றத்திற்கு தூண்டுதலாக அமைகிறது.


இயேசுகிறிஸ்து திரும்பி பேதுருவை நோக்கிப் பார்த்த சம்பவம் லூக்கா எழுதின சுவிசேஷத்தில் மாத்திரமே விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. பேதுருவைவிட்டு சற்று தூரத்தில் இயேசுகிறிஸ்து நிற்கிறார். அவருடைய முதுகு பக்கத்தில் பேதுரு பிரதான ஆசாரியனுடைய மற்ற வேலைக்காரரோடு அமர்ந்திருக்கிறான். பேதுரு தம்மை மூன்றுமுறை மறுதலித்ததையும், உடனே சேவல் கூவியதையும்  இயேசுகிறிஸ்துவும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் முதுகுப் பக்கமாக இருப்பதினால், தான் அவரை மறுதலித்தது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லையென்று பேதுரு நினைக்கிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவுக்கு மறைவான காரியம் ஒன்றுமேயில்லை. நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில்கூட நாம் பேசியது, செய்தது எல்லாம் இயேசுவுக்கு மறைவாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் நமக்கு நம்மைப்பற்றி தெரிந்திருப்பதைவிட, நம் ஆண்டவர் இயேசுவுக்கு நம்மைப்பற்றி நன்றாகவே தெரியும்.  


பேதுரு தன் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை மூன்றுமுறை மறுதலிக்கிறான். அவரை அறியேன் என்று கூறுகிறான். அவரோடு இருந்தவன் தான் அல்ல  என்று மறுதலிக்கிறான். தன்னையும் இயேசுவையும் சம்பந்தப்படுத்தி சொன்னதை தனக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறிவிடுகிறான். பேதுரு இயேசுகிறிஸ்துவை கைவிட்டாலும், இயேசுகிறிஸ்து அவனை கைவிடவில்லை. நாம் கர்த்தரோடு எப்படி பழகுகிறோம் என்பதன் அடிப்படையில் அவர் நம்மோடு ஐக்கியம் வைத்திருப்பதில்லை. நாம் தேவனுக்கு செய்கிற பிரகாரம் அவர் நமக்கு பதில் செய்வதில்லை. அவர் கிருபை நிறைந்தவர். எல்லா சூழ்நிலைகளிலும் அவர் நம்மைக் கைவிடாத தேவன். 


பேதுரு தன்னுடைய உதடுகளினால் தன் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறான்.  ஆயினும் அவனுடைய கண்களோ இன்னும் இயேசுகிறிஸ்துவையே பார்த்துக்கொண்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவும் திரும்பி பேதுருவை நோக்கிப் பார்க்கிறார். தன்னை அவர் நோக்கிப் பார்க்கும்போது, அந்த பார்வையிலுள்ள அர்த்தம் பேதுருவுக்கு நன்றாக புரிகிறது. இயேசுகிறிஸ்துவின் பார்வை உறுதியாக இருக்கிறது. இயேசுவை நான் அறியேன் என்று பேதுரு மறுதலித்தான். இயேசுகிறிஸ்து அவனை நோக்கிப் பார்த்தபோது, ""பேதுரு, மெய்யாகவே நீ என்னை அறியவில்லையா'' என்று அவனிடம் கேட்பது போன்றுள்ளது. 


இயேசுகிறிஸ்துவின் பார்வை மிகவும் தீர்மானமுள்ள பார்வையாகும். உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லாததென்றும்  தீர்மானம் பண்ணும் பார்வை இயேசுவின் பார்வை. பேதுரு இயேசுகிறிஸ்துவை மறுதலித்தபோது, ""பேதுரு என்னை நீ ஏன் மறுதலித்தாய், மற்றவர்களெல்லாம் என்னைப்பற்றி சாட்சி கூறுவதற்கு முன்பாக,  நீ என்னை தேவனுடைய குமாரனென்று அறிக்கை செய்தவனல்லவா, அப்படிப்பட்ட நீ என்னை மறுதலிக்கலாமா'' என்று இயேசு கேட்பது போன்றுள்ளது. 


இயேசுகிறிஸ்துவின் பார்வை மனதுருக்கமுள்ள பார்வையாகும். அவர் பேதுருவை மிகவும் கனிவாகவும், அன்பாகவும், கரிசனையோடும் பார்க்கிறார். ""பேதுரு நீ ஏன் என்னை மறுதலித்தாய், உன்னுடைய ஆபத்து வேளைகளில் நான் உன்னோடு கூடயிருந்து  உனக்கு உதவிபுரிகிற தேவனல்லவா'' என்று கேட்பது போன்றுள்ளது. 


இயேசுகிறிஸ்துவின் பார்வை வழிநடத்தும் பார்வையாகும். தம்முடைய பார்வையினால் இயேசுகிறிஸ்து பேதுருவின் உள்ளத்தை வழிநடத்துகிறார். அவனுடைய மனச்சாட்சியோடு பேசுகிறார். அவன் தம்மை மறுதலித்தாலும், அவனுடைய மனச்சாட்சி தம்மைப்பற்றி எப்படி சிந்திக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து தம்முடைய பார்வையினாலேயே உணர்த்துகிறார்.  இயேசுகிறிஸ்துவின் பார்வை ஒரு விசேஷித்த பார்வையாகும். பேதுருவின் இருதயத்தில் இயேசுகிறிஸ்துவின் பார்வை அவருடைய இரக்கத்தை ஊற்றுகிறது. 


சேவல் கூவிய சத்தத்தைக் கேட்டு பேதுரு மனந்திருந்தவில்லை.  இயேசுகிறிஸ்து தன்னை பார்த்திருக்காவிட்டால் பேதுரு மனந்திரும்பியிருப்பதற்கு வாய்ப்பில்லை.  சேவல் கூவியபோது, கர்த்தரும் அவனைத் திரும்பிப்பார்த்ததினால் பேதுரு மனந்திரும்புகிறான். அப்போது பேதுரு இயேசுகிறிஸ்து தன்னோடே சொன்ன வசனத்தை நினைவுகூருகிறான். ""சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்'' என்று இயேசுகிறிஸ்து பேதுருவிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.  இதை நினைவுகூர்ந்து பேதுரு வெளியேபோய் மனங்கசந்து அழுகிறான். கர்த்தருடைய கிருபையுள்ள ஒரு பார்வை பேதுருவின் இருதயத்தை உருக்குகிறது. தன்னுடைய பாவத்தைக் குறித்து அவனுக்குள் குற்றவுணர்வும் துக்கமும் உண்டாயிற்று. இதன் விளைவாக அவன் மனங்கசந்து அழுகிறான். 


கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். இயேசு கிறிஸ்துவின் இந்தப் பார்வையை பேதுருவால் மறக்கவே முடியாது. அந்தப் பார்வையில் பேதுரு தன்னுடைய உணர்வுகளுக்குத் திரும்பி வருகிறான். தான் செய்த பாவங்களுக்கு மனம் வருந்துகிறான்.


நிகழ்வு 9

ஆலோசனைச்சங்கத்தார் இயேசுவை விசாரிக்கிறார்கள்

மத்தேயு 27:1 ; மாற்கு 15:1 ; லூக்கா 22:66-71


நீ கிறிஸ்துவா


 விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி: நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள். நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்                  (லூக் 22:66-68). 


விடியற்காலம் ஆயிற்று யூதருடைய ஆலோசனைச்சங்கத்தில் ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். பொதுவாக  எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் இவர்கள் இவ்வளவு சீக்கிரமாக கூடிவருவதில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவை விசாரிக்க வேண்டும் என்பதற்காக பொழுது எப்பொழுது விடியுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  விடியற்காலம் ஆனவுடனேயே, இவர்கள் கூடிவந்து தங்கள் ஆலோசனைச்சங்கத்தில் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறவர்கள் நற்காரியங்களைச் செய்வதற்கு சுறுசுறுப்பாக செயல்பட்டால் எல்லோருக்கும் நன்மையாக இருக்கும். ஆனால்  இப்படிப்பட்டவர்கள் தீயகாரியங்களுக்கே ஒன்றுகூடி விரைந்து செயல்படுகிறார்கள். 


யூதருடைய ஆலோசனைச்சங்கத்தார் இயேசுகிறிஸ்துவிடம் ""நீ கிறிஸ்துவா'' என்று கேட்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து ஏராளமான வார்த்தைகளினால் உபதேசம் பண்ணியிருக்கிறார். ஆனால் அவர் ஒருமுறைகூட தம்முடைய சொந்த வார்த்தைகளினால் அவர் தம்மை கிறிஸ்து என்று கூறியதில்லை. ஆகையினால் தம்முடைய சொந்த வார்த்தையினால் தாமே கிறிஸ்து என்பதை அவர் அங்கீகரிக்க வேண்டுமென்று அவரைக் கட்டாயப்படுத்துகிறார்கள். 


இயேசுகிறிஸ்துவை கிறிஸ்து என்று தாங்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இவர்கள் கூறியிருந்தால் இவர்களுடைய எண்ணம் மேன்மையானதாக இருக்கும். இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிப்பது இவர்களுடைய நோக்கமல்ல. அவரை ஒரு கண்ணியில் சிக்க வைக்கவேண்டும் என்பதே இவர்களுடைய சதிஆலோசனை.


ஆலோசனைச்சங்கத்தாருடைய சதிஆலோசனை நிறைந்த இருதயத்தை இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். அவர்கள் நீதியும் நேர்மையுமில்லாதவர்கள். அவர்களுடைய வாயின் வார்த்தையில் உண்மையில்லை. ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களுடைய கேள்விக்கு நேரடியாக பதில்கூறாமல் ""நான் கிறிஸ்து என்று உங்களுக்குச் சொன்னாலும் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்'' என்று கூறிவிடுகிறார். 


இயேசுவைக் குறித்து ஆலோசனைச்சங்கத்தார் தங்களுடைய உள்ளத்தில் ஏற்கெனவே ஒரு தீர்மானம் செய்திருக்கிறார்கள். இயேசுவைப்பற்றி ஏற்கெனவே தீர்மானம் செய்துவிட்டு, அவரிடம் ""நீ கிறிஸ்துவா'' என்று கேட்பது முறையல்ல. 


இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் ஏதாவது கேள்வி கேட்டாலும் அதற்கும் அவர்கள் பதில் சொல்லமாட்டார்கள். தம்மை விடுதலை பண்ணவும் மாட்டீர்கள் என்று இயேசு அவர்களிடம் கூறிவிடுகிறார். இயேசு தம்முடைய வார்த்தையினாலும் செய்கையினாலும் தம்மைக் கிறிஸ்து என்று நிரூபித்தால், அவர்கள் இயேசுவை விடுதலை பண்ண வேண்டும். இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிக்க வேண்டும். ஆனால் அவர்களோ இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசிக்கவும், அவரை விடுதலை பண்ணவும் மனதில்லாதவர்களாக இருக்கிறார்கள்.  


விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் இயேசுகிறிஸ்துவை கொண்டுவந்து  நிறுத்தினார்கள். இரவுமுழுவதும் இயேசு கிறிஸ்துவை விசாரித்தார்கள். நடுஇரவிற்கு முன்பாகவே யூதர்களும், பிலாத்துவும் இயேசுவை விசாரித்தார்கள். (யோவான் 19:14) இயேசு கிறிஸ்துவை ஏற்கெனவே வாரினால் அடித்துவிட்டார்கள்.  (யோவான் 19:1) நடுஇரவிலிருந்து காலை வரையிலும் அவரைக் கொல்ல வேண்டும் என்னும் முயற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். விடியற்காலத்தில் இயேசு கிறிஸ்துவை யூதருடைய ஆலோசனைச் சங்கத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். தேவனுடைய குமாரனா, கிறிஸ்துவா என்று இயேசு கிறிஸ்துவிடம் கேள்வி கேட்கிறார்கள். இயேசு கிறிஸ்து கூறும் பதில் அவர்களுக்குத் தேவதூஷணமாக ஆயிற்று. ஆகையினால் அவர்கள் இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடம் அழைத்துச் செல்கிறார்கள். (லூக்கா 22:66-23:5). பிலாத்து இயேசுவை ஏரோதிடம் அனுப்புகிறான். ஏரோது இயேசுகிறிஸ்துவைப் பரியாசம் பண்ணிவிட்டு, அவரை மறுபடியும் பிலாத்துவிடமே அனுப்பி விடுகிறான். பிலாத்து கடைசியில் இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக் கொடுக்கிறான்.  (லூக்கா 23:6-26)


 இயேசுகிறிஸ்துவே மேசியா. இதை நிரூபிப்பதற்கு அவர் ஏற்கெனவே பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். ஆனால் அவர்கள் இயேசுவைக் கிறிஸ்து என்று விசுவாசிக்கவில்லை. ஆகையினால் இப்போது இயேசு அவர்களிடம் ""நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலை பண்ணவுமாட்டீர்கள். இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார்'' என்று கூறுகிறார். 


மனுஷகுமாரன்


இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார் (லூக் 22:69).


தாமே கிறிஸ்து என்பதை பூரணமாக நிரூபிப்பதற்கு, இயேசுகிறிஸ்து தம்முடைய இரண்டாம் வருகையைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறார். ""இது முதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார்'' என்று கூறுகிறார். அதைக் காணும்போது இவர்கள் இயேசுவிடம் ""நீர் கிறிஸ்துவா'' என்று கேட்கமாட்டார்கள். இயேசுவை கிறிஸ்து என்று கூறுவதற்கு எங்களுக்கு மேலும் சில ஆதாரம் தேவையென்று ஒருவரும் சொல்லமாட்டார்கள்.  இயேசுவைக் கிறிஸ்து என்று விசுவாசிப்பதற்கு இதைவிட வேறு அடையாளமோ, நிருபணமோ தேவையில்லை.


தேவகுமாரன்


அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்  (லூக் 22:70). 


இயேசுகிறிஸ்து தம்மை மனுஷகுமாரன் என்று அறிவிக்கிறார். அவர்களோ அவரிடம் ""நீ தேவனுடைய குமாரனா'' என்று கேட்கிறார்கள். தானியேலின் தரிசனத்தை ஆதாரமாக வைத்து இயேசுகிறிஸ்து தம்மை மனுஷகுமாரனென்று வெளிப்படுத்துகிறார். தானியேல் தன்னுடைய தரிசனத்தில் மனுஷகுமாரனை கண்டதைக்குறித்து இவ்வாறு வெளிப்படுத்துகிறார். ""இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இட மட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்'' (தானி 7:13,14). 


இயேசுகிறிஸ்து மனுஷகுமாரனாக இருப்பாரென்றால், அவர் தேவகுமாரனாகவும் இருப்பார் என்பதை ஆலோசனைச்சங்கத்தார் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறபடியே தாம் தேவனுடைய குமாரனென்பதை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். 


எபிரெய மொழியில் ஒரு காரியத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்குப் பயன்படுத்தும் வார்த்தையில்,  இயேசு கிறிஸ்து தம்மைத் தேவனுடைய குமாரன் என்று கூறினார். இது யூதருக்கு தேவதூஷணமாகத் தெரிகிறது. இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு அவர்கள் இதை ஒரு காரணமாகக் கூறினார்கள். 


இனி வேறு சாட்சி வேண்டுவதென்ன


அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்  (லூக் 22:71). 


இயேசுகிறிஸ்துவின் வார்த்தையினாலேயே அவரைக் குற்றப்படுத்த வேண்டுமென்பது ஆலோசனைச்சங்கத்தாருடைய வஞ்சகமான திட்டம். இயேசுகிறிஸ்து தம்மை தேவனுடைய குமாரனென்று அங்கீகரித்துக் கூறியவுடன் ""இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன'' என்று கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய வாயினாலே தம்மைப்பற்றி கூறிய வார்த்தைகளே அவரைக் குற்றப்படுத்துவதற்கு போதுமானது என்று தீர்மானம் செய்துவிடுகிறார்கள். மெய்யாகவே இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று நிரூபிப்பதற்கு, அவருடைய வார்த்தையைத் தவிர வேறு சாட்சி எதுவும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை.  இயேசுகிறிஸ்துவின் வாயினாலே அந்த சத்திய வார்த்தையே அவர்கள் கேட்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவை மேசியா என்று அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை. தங்களுக்கு ஒரு மேசியா வரும்போது அவர் உலகத்தின் மற்ற இராஜ்யங்களின் ராஜாக்களைப்போல ஆடம்பரமாகவும் விளம்பரமாகவும் வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ உலகத்திற்குரிய எந்த ஆடம்பரமுமில்லாமல், மிகவும் எளிமையாக இருக்கிறார். மிகவும் அமைதியாக தம்மை தேவனுடைய குமாரனென்று அங்கீகரிக்கிறார். தாங்கள் எதிர்பார்க்கிறபடி இயேசுகிறிஸ்து இல்லாததினால் அவரை மேசியாவாக அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை. 


நிகழ்வு 10

இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து நான்று கொண்டு செத்துப்போகிறான் மத்தேயு 27:3-10


யூதாசின் மனஸ்தாபம்


அப்பொழுது, அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: (மத் 27:3).


இயேசுவைக் காட்டிக்கொடுக்க பிரதான ஆசாரியர் யூதாஸ்காரியோத்திற்கு முப்பது வெள்ளிக்காசுகளை கொடுத்திருக்கிறார்கள்.  அவர்கள் இயேசுவை மரணாக்கினைக்குள்ளாக தீர்த்துவிடுகிறார்கள். இதைக்கண்ட யூதாஸ் மனஸ்தாபப்படுகிறான். தன்னுடைய மனதின் வேதனையில் நான்று கொண்டு செத்துப்போகிறான். பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இந்த முப்பது வெள்ளிக்காசினால் யூதாசை தங்களுக்கு சாதகமாக கிரயத்திற்கு வாங்கினார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவனே இந்த முப்பது வெள்ளிக்காசிற்காக  இயேசுவை காட்டிக்கொடுக்கிறான்.  


யூதர்கள் இயேசுவை துன்புறுத்துகிறார்கள். அவரை மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கிறார்கள். இதைக்கண்ட யூதாஸ்காரியோத்து மனஸ்தாபப்படுகிறான். குற்றமில்லாத இரத்தத்தை தான் காட்டிக் கொடுத்ததினால்  பாவம் செய்ததாக மனம் வருந்துகிறான். 


இயேசுகிறிஸ்து தமது பாடுகளின் மத்தியிலும் மகிமையடைந்தவராக இருக்கிறார்.  இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக பிசாசு யூதாசுக்குள் புகுந்தான். ஆனால் இயேசுவோ பிசாசின் சதித்திட்டத்தை முறியடித்து மகிமையடைந்தவராக வெற்றி சிறக்கிறார். இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து தன் பாவமான செய்கைக்காக மனஸ்தாபப்படுகிறான். யூதாஸ்காரியோத்து செத்துப்போனது ஆலோசனைச்சங்கத்தாருக்கு ஓர்       எச்சரிப்பாக இருக்கவேண்டும். இயேசுவை மரணாக்கினைக்குள்ளாக தீர்த்தவர்களுக்கு மன்னிப்பேயில்லை என்பதை யூதாசின் மரணம் உறுதிபண்ணுகிறது.


இயேசுகிறிஸ்துவை மறுதலித்த பேதுருவும்  மனங்கசந்து அழுதான். அவனுடைய மனந்திரும்புதலும் யூதாசின் மனஸ்தாபத்திற்கும் வித்தியாசமிருக்கிறது. பேதுரு மனந்திரும்பி, இயேசுவை விசுவாசித்து தனது பாவமன்னிப்பை  பெற்றுக்கொண்டான். ஆனால் யூதாசோ மனந்திரும்பி, மனஸ்தாபப்பட்டு தனது அழிவை தேடிக்கொண்டான்.


இயேசுகிறிஸ்து மரணாக்கினைக்குள்ளாக  தீர்க்கப்படுகிறார். இதைக் கண்ட யூதாஸ் மனஸ்தாபப்படுகிறான். யூதருடைய கைகளிலிருந்து இயேசுகிறிஸ்து தமது அற்புத வல்லமையினால் தப்பித்துக்கொள்வார் என்று  யூதாஸ் ஒருவேளை எதிர்பார்த்திருக்கலாம். தமக்கு மகிமையாகவும், யூதருக்கு அவமானமாகவும் இயேசு அற்புதம் செய்து அவர்கள் மத்தியில் தப்பிப்பார் என்றும், ஆகையினால் தான் பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசு பாவமான காசாயிராது என்றும்  யூதாஸ் ஒருவேளை நினைத்திருக்கலாம். இயேசுகிறிஸ்து ஏற்கெனவே தம்முடைய முடிவைப்பற்றி சீஷர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எழுதப்பட்டிருக்கும் வார்த்தைக்கு விரோதமாக நாம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றி என்ன வெளிப்படுத்தி இருக்கிறாரோ அது நிச்சயமாகவே நிறைவேறும். எழுதப்படாத ஒன்றை நாம் கற்பனை செய்து பார்த்து, கண்ணியில் சிக்கிக்கொள்ளக்கூடாது. 


யூதாசைப்போலவே நம்மில் பலரும் தேவனுடைய தெய்வீக பிரமாணத்திற்கு முக்கியத்துவம் தராமல், நமது சுயசித்தத்திற்கும், சுயசிந்தனைக்கும், சுயவிருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அழிந்துபோகிறோம். பாவத்தின் பாதை எப்போதுமே சறுக்கலாக இருக்கும். சறுக்கும் பாதையில் நம்மால் நிலைத்து நிற்க முடியாதபோது, வேறு யாராவது வந்து நமக்கு உதவிபுரிவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. பாவத்தின் பாதையிலிருந்து நாம்தான் மனந்திரும்பி வரவேண்டும். நாம் இரட்சிக்கப்படுவதற்கு யாரும் உதவிபுரியவில்லையென்று மற்றவர்களை குறைகூறி ஒரு பயனுமில்லை. 


யூதாஸ்காரியோத்து தனக்குத்தானே மனஸ்தாபப்படுகிறான். இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுத்தபோது அவனுக்கு முப்பது வெள்ளிக்காசுகள் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அது அவனுடைய கண்களின் பார்வைக்கு அருமையாக இருந்தது. ஆனால் இயேசுகிறிஸ்து மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டதை கண்டபோதோ, அந்த முப்பது வெள்ளிக்காசுகள் அவனுக்கு அருவருப்பாக தோன்றுகிறது. 


 யூதாசின் குற்றமனச்சாட்சி  அவனுடைய சரீரம் முழுவதையும் வேதனைப்படுத்துகிறது. தன்னுடைய பாவமான செய்கைக்காக வருத்தப்படுகிறான். இயேசு மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டதில் தனக்கும் பங்குள்ளது என்று நினைத்து மனஸ்தாபப்படுகிறான். இயேசுவைக்கட்டி, அவர் முகத்தில் துப்பி, அவரை கன்னத்தில் அறைவதற்கு தானே காரணம் என்று  நினைத்து யூதாஸ் வேதனைப்படுகிறான். இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்கு பிரதான ஆசாரியர் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசை கொடுக்க உடன்பட்டபோது யூதாசின் மனசு சந்தோஷத்தினால் நிறைந்திருந்தது. ஆனால் இயேசு மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டதைக் கண்டவுடன் யூதாஸ் மனஸ்தாபப்படுகிறான். 


இயேசுகிறிஸ்து தனக்கு செய்த நன்மைகளையெல்லாம் யூதாஸ் நினைவு கூருகிறான். தனக்கு நன்மையை மாத்திரமே செய்த இயேசுவுக்கு விரோதமாக துரோகம் செய்தததை நினைத்து மனஸ்தாபப்படுகிறான்.  அவனுடைய குற்ற மனச்சாட்சி அவனைக் குத்துகிறது. தம்மைக் காட்டிக் கொடுக்கப்போகிற மனுஷனைக்குறித்து ""அந்த மனுஷனுக்கு ஐயோ, அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும்'' என்று இயேசு கூறிய வார்த்தையை யூதாஸ் இப்போது நினைவுகூருகிறான்.  பாவம் செய்யும்போது அது இனிப்பாக இருக்கும். செய்தபின்பு அது கசப்பாக மாறிவிடும். பாவத்தின் பின் விளைவுகளை நாம் புரிந்துகொள்ளாமல் சில சமயங்களில் பாவத்தின் கண்ணியில் சிக்கிவிடுகிறோம்.


யூதாஸ்காரியோத்து மனஸ்தாபப்பட்டு இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக தான் பெற்றுக்கொண்ட  முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்ப கொண்டு வருகிறான். இந்த முப்பது காசுகளைத்தான் யூதாஸ் சற்று நேரத்திற்கு முன்பு இயேசுவைவிட அதிகமாக நேசித்தான். இப்போதோ அந்த காசுகள் அவனுக்கு அருவருப்பாக இருக்கிறது. தீமையினால் சம்பாதித்த பணம் நமக்கு சந்தோஷத்தைத் தராது. 


இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்கு முன்பாக, யூதாஸ் மனந்திரும்பி, இயேசுவைக் காட்டிக்கொடுக்காமல், தான் பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசுகளை அவர்களிடமே திருப்பி கொடுத்திருந்தால், யூதாசிற்கு ஒருவேளை ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் இப்போதோ காலம் கடந்துவிட்டது. தான் செய்த தவறுகளை திருத்திக்கொள்வதற்கு யூதாசிற்கு இனிமேல் வாய்ப்பில்லை. 


தீமையினால் சம்பாதித்த பொருளை தன் வசமாக அவனால்  வைத்துக்கொள்ளவும் முடியவில்லை. முப்பது வெள்ளிக்காசுகளை அவன் பாவம் செய்து சம்பாதித்ததினால், அவனுடைய குற்ற மனச்சாட்சி அவனை குத்திக்கொண்டேயிருக்கிறது. அந்த வெள்ளிக்காசுகளை தன்னைவிட்டு அகற்றிப்போடவேண்டுமென்று யூதாஸ் முடிவுபண்ணுகிறான். தனக்கு அந்த காசுகளை யார் கொடுத்தார்களோ அவர்களிடமே திருப்பி கொடுத்துவிட்டு, தான் மனந்திரும்பி இருப்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறான். 


இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டான். யூதாஸ்காரியாத்திற்கு இப்போது தான் அவன் செய்த தவறு புரிகிறது. ஆயினும் யூதாஸ் பேதுருவைப் போல மனந்திருந்தவில்லை. இயேசு கிறிஸ்துவிடம் தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கோரவில்லை. சாத்தானுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான். இயேசுவை விட்டுபிரிந்து தனியாக இருந்தான். தன்னுடைய கோழைத்தனமான செயலுக்காக வெட்கப்பட்டு நான்றுகொண்டு செத்தான். 


இயேசு கிறிஸ்து மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதற்காக யூதாஸ் மனஸ்தாபப்பட்டான். தான் செய்த தவறுகளுக்காக யூதாஸ் மனஸ்தாபப் படவில்லை. யூதாஸ் இயேசுவோடுகூடவே இருந்தவன். இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்திற்கு பலமுறை ஆபத்து வந்த வேளைகளில் அவர் அந்தப் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து அப்புறம் போனார் என்பது யூதாசிற்குத் தெரியும். அதுபோலவே இயேசு தமது வல்லமையினால் இப்போதும் தப்பித்துக் கொள்வார் என்று யூதாஸ் நினைத்திருக்கலாம். ஆனால் யூதாஸ் நினைத்ததுபோல  அங்கு ஒன்றும் நடைபெற வில்லை. தமது ஜீவனைக் காப்பதற்காக அங்கிருந்து அவர் மறைந்து செல்லவில்லை. தன்னால் இயேசுவிற்கு மரணஆக்கினை வந்துவிட்டதே என்று மனஸ்தாபப்பட்டான்.


யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். முப்பது வெள்ளிக்காசு என்பது அந்நாட்களில் ஒரு வேலையாளுக்கு 115 நாட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்கு சமமான தொகை.


குற்றமில்லாத இரத்தம் 


குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள் (மத் 27:4).


யூதாஸ்காரியோத்து பிரதான ஆசாரியரிடத்திலும் மூப்பரிடத்திலும் வந்து அவர்களிடத்தில் பாவஅறிக்கை செய்கிறான். ""குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன்'' என்று அவர்களிடம் பாவஅறிக்கை பண்ணுகிறான். இயேசுகிறிஸ்துவுக்கு மகிமை உண்டாக்க, அவருடைய இரத்தத்தை குற்றமில்லாத இரத்தம் என்று யூதாஸ் அறிக்கை செய்கிறான். இயேசுவின் இரத்தம் குற்றமில்லாத  இரத்தம் என்று கூறுமாறு யாரும் அவனுக்கு பணம் கொடுக்கவில்லை. தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த சத்திய வார்த்தைகளை அவனாகவே பேசுகிறான். இயேசுவை யாரெல்லாம் குற்றவாளிகளென்று நியாயம் தீர்த்தார்களோ அவர்கள் முன்பாக யூதாஸ் நின்று ""அவருடைய இரத்தம் குற்றமில்லாத இரத்தம்'' என்று சாட்சி பகருகிறான். 


குற்றமில்லாத இரத்தத்தை தான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்று அறிக்கை செய்கிறான். இந்த பாவத்தை  அவன் யார்மீதும் சுமத்தவில்லை. தன் மீதே ஏற்றுக்கொள்கிறான். ""நான் பாவம் செய்தேன்'' என்று அங்கீகரிக்கிறான். தன்னுடைய மனந்திரும்பும் அனுபவத்தில் யூதாஸ்காரியோத்து இவ்வளவு தூரம் முன்னேறி கடந்து வந்திருக்கிறான். ஆயினும் அவன் தன் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை. 


யூதாஸ்காரியோத்து  தேவனிடத்திற்கு போவதற்குப் பதிலாக பிரதான ஆசாரியனிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போனான். தேவனிடத்தில் பாவஅறிக்கை செய்வதற்குப் பதிலாக பிரதான ஆசாரியரிடத்தில் பாவஅறிக்கை செய்கிறான். அவன் இயேசுகிறிஸ்துவிடம் வந்து ""ஆண்டவரே உமக்கு விரோதமாகவும், பாரத்திற்கு விரோதமாகவும் நான் பாவம் செய்திருக்கிறேன், என்னை மன்னியும்'' என்று யூதாஸ் பாவஅறிக்கை செய்திருந்தால், அவனையும் மன்னிப்பதற்கு இயேசுகிறிஸ்து கிருபை நிறைந்தவராக இருக்கிறார்.


பிரதான ஆசாரியரிடத்திலும், மூப்பரிடத்திலும் யூதாஸ் மனஸ்தாபப்பட்டு பாவஅறிக்கை செய்கிறான். ஆனால்  அவர்களோ அவனுடைய வார்த்தைகளை அலட்சியம்பண்ணுகிறார்கள். ""எங்களுக்கென்ன, அது உன்பாடு'' என்று கூறி அவனை கைவிட்டுவிடுகிறார்கள். யூதாஸ் இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுத்ததை ஆலோசனைச்சங்கத்தார் அலட்சியம்பண்ணுகிறார்கள். அதனால் எங்களுக்கென்ன என்று அலட்சியமாக பேசுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் குற்றமில்லாத இரத்தத்தின்மீது தாங்கள் தாகமாக இருந்ததினால் தங்களுக்கென்ன என்று அலட்சியமாக நினைக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்கு  முப்பது வெள்ளிக்காசுகளைக்கொடுத்து கூலி பொருந்தியதற்காக ""தங்களுக்கென்ன'' என்று கூறுகிறார்கள். குற்றமில்லாத இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை சிந்துவதற்கு தாங்கள் காரணமாக இருந்தாலும் ""அதனால் தங்களுக்கென்ன'' என்று அலட்சியம் பண்ணுகிறார்கள். 


யூதாஸ் பிரதான ஆசாரியனிடத்தில் வந்து  ""நான் பாவம் செய்தேன்'' என்று அறிக்கை செய்கிறான். ஆனால் அவர்களோ அவனுடைய பாவத்தையும், பாவஅறிக்கையையும் அலட்சியம் செய்து ""அதனால் எங்களுக்கென்ன'' என்று அலட்சியமாக கூறிவிடுகிறார்கள். நாம் மற்றவர்களோடு பாவத்தில் பங்காளிகளாக இருப்போமென்றால், அந்த பாவத்தினால் நமக்கும் தண்டனை கிடைக்கும்.   மற்றவர்கள் பாவம் செய்வதற்கு நாம் உடந்தையாக இருந்துவிட்டு, நமக்கு ஒரு தண்டனையும் வராது என்று நினைக்கக்கூடாது. 


இயேசுகிறிஸ்துவை யூதாஸ் காட்டிக்கொடுத்தான். இது பாவம் என்றால் அது அவனை மாத்திரமே சேரும் என்று பிரதான ஆசாரியரும் மூப்பரும் கூறுகிறார்கள். யூதாஸ்காரியோத்து இயேசுவை அவர்களிடம்தான் காட்டிக்கொடுத்தான். ஆகையினால் யூதாசுக்கு அதிக பாவமுண்டு (யோவா 19:11). யூதாசுக்கு பாவமுண்டு என்பதினால், இந்த பாவத்திலிருந்து பிரதான ஆசாரியரும் மூப்பரும் தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கும் இந்த பாவத்தில் பங்கிருக்கிறது.


இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை குற்றமில்லாத இரத்தம் என்று யூதாஸ் அங்கீகரிக்கிறான். ஆனால் ஆலோசனைச்சங்கத்தாரோ இயேசுவை நியாயமாக தண்டிப்பதாக தீர்மானம்பண்ணியிருக்கிறார்கள். இயேசு யூதாசுக்கு குற்றமில்லாதவராக இருக்கலாம். ஆனால் ஆலோசனைச்சங்கத்திற்கோ இயேசு  குற்றவாளியாக இருக்கிறார். துன்மார்க்கர்கள் இதைப்போலத்தான் தங்களுடைய துன்மார்க்கமான கிரியைகளை, துன்மார்க்கமான ஆலோசனைகளினால் நியாயப்படுத்துகிறார்கள். ஒரு காரியத்தை பாவம் என்று நினைத்தால்தான் அது அவனுக்கு பாவமாக இருக்கும் என்று துன்மார்க்கர் விவாதம்பண்ணுகிறார்கள். ஒரு நல்லவனை துன்மார்க்கர்கள் துன்பப்படுத்தினாலும், அது துன்மார்க்கருடைய பார்வைக்கு நியாயமாக இருந்தால், அதனால் பாவமில்லை என்பது துன்மார்க்கரின் விவாதம். 


யூதாஸ்காரியோத்து மனஸ்தாபத்தில் இருக்கிறான். இயேசுவைக்காட்டிக் கொடுத்ததற்காக பயப்படுகிறான். தான் பாவம் செய்துவிட்டதாக புலம்புகிறான். அப்படிப்பட்டவனுடைய வார்த்தைகளை பிரதான ஆசாரியரும் மூப்பரும் அலட்சியம்பண்ணுகிறார்கள். இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு யூதாஸ் சம்மதித்தபோது  அவர்கள் அவனை சந்தோஷமாக பயன்படுத்திக்கொண்டார்கள். அவன்மீது தங்கள் அன்பை வெளிப்படுத்தி அவனுக்கு முப்பது வெள்ளிக்காசுகளை கூலியாக கொடுத்தார்கள். ஆனால் இப்போதோ யூதாஸ் தன் மனச்சாட்சியில் குத்தப்பட்டு மனஸ்தாபப்படும்போது, அவர்கள் அவனுக்கு ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை. அவனை அப்படியே கைவிட்டுவிடுகிறார்கள். 


நாம் துன்மார்க்கரோடு கூட்டுச்சேர்ந்து, துன்மார்க்கமான கிரியைகளைச் செய்து, கண்ணியில் சிக்கிக்கொண்டால், அந்த கண்ணியிலிருந்து நம்மை தூக்கிவிடுவதற்கு  துன்மார்க்கர்கள் நமக்கு உதவிபுரிய வரமாட்டார்கள். நாம் பாவத்தில் விழும்போது பாவத்தில் நமக்கு பங்காளிகளாக இருக்கிறவர்கள் நம்மை பார்த்து நகைப்பார்கள்.   பாவத்தில் பங்காளிகளாக இருக்கிறவர்களால் தங்களுடைய பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு அவர்களால் ஒருவருக்கொருவர் உதவிபுரிய முடியாது. பாவத்தில் பங்காளிகளான இவர்கள்  பாவத்தை நேசிப்பார்கள், பாவத்தில் தங்கள் உடன்பங்காளிகளாக இருந்தவர்களை வெறுப்பார்கள். இயேசுவோ பாவத்தை மாத்திரமே வெறுக்கிறார். பாவிகளையோ நேசிக்கிறார். 


""குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்''  என்று யூதாஸ் புலம்புகிறான். இன்றும் பலர் இப்படித்தான் புலம்புகிறார்கள். யூதாஸ் இயேசுவிடம் பாவஅறிக்கை பண்ணுவதற்குப் பதிலாக ஆசாரியரிடத்திலும், மூப்பரிடத்திலும் வந்து புலம்புகிறான். தம்மிடத்தில் வருகிற யாரையும் இயேசு கிறிஸ்து புறம்பே தள்ளமாட்டார். ஆனால் ஆசாரியரும், மூப்பரும் பாவியை இரட்சிப்பதற்குத் திராணியற்றவர்கள். ஆகையினால் யூதாசைப் பார்த்து, ""எங்களுக்கென்ன, அது உன்பாடு'' என்றார்கள். 


இயேசு கிறிஸ்துவின் இரத்தம் குற்றமில்லாதது. அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய குற்றமில்லாத இரத்தத்தைக் குறித்து பலர் சாட்சி கூறியிருக்கிறார்கள்.


    1. யூதாஸ் (மத் 27:4)

    2. பிலாத்துவின் மனைவி (மத் 27:19)

    3. பிலாத்து (மத் 27:24)

    4. ஏரோது (லூக்கா 23:15)

    5. கள்ளன் (லூக்கா 23:41)

    6. நூற்றுக்கதிபதி (லூக்கா 23:47)


யூதாசின் மரணம்


அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான் (மத் 27:5).


யூதாஸ்காரியோத்து பிரதான ஆசாரியரிடமும் மூப்பரிடமும் பாவ அறிக்கை செய்கிறான். ஆனால் அவர்களோ ""எங்களுக்கென்ன, அது உன்பாடு'' என்று அலட்சியமாக பேசி அவனை அனுப்பிவிடுகிறார்கள். யூதாஸ் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்தில் எறிந்துவிடுகிறான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசுகளை தேவாலயத்தின் காணிக்கை காசுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை.  அந்த காசில் குற்றம் இருப்பதாக கருதுகிறார்கள். இது இரத்தக்கிரயமான காசு என்பதினால் இதை காணிக்கை பெட்டியிலே போடலாகாது என்று கூறிவிடுகிறார்கள். 


யூதாஸ்காரியோத்தும் அந்த காசுகளை தன்னிடத்தில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அது அவனுக்கு பாவத்தின் கிரயமாக இருக்கிறது. அதை வைத்துக்கொள்வதற்கு அவனுடைய மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. இயேசுவைக் காட்டிக்கொடுத்ததினிமித்தமாக அவன் மனஸ்தாப்பட்டுக்கொண்டிருக்கிறான்.  அந்த வெள்ளிக்காசை யூதாஸ் தேவாலயத்தில் எறிந்துவிடுகிறான். பிரதான ஆசாரியர் அதை அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும் அது அவர்களுடைய பொறுப்பில் போய் விடும் என்று நினைத்து தேவாலயத்திலேயே அந்த காசுகளை எறிந்துவிடுகிறான். 


அதன்பின்பு யூதாஸ் அங்கிருந்து புறப்பட்டுப்போய் நான்றுகொண்டு செத்துப்போகிறான். தனிமையான ஓர் இடத்திற்கு புறப்பட்டுப்போகிறான். அவன் தனிமையான இடத்திற்கு போவதற்குப் பதிலாக, இயேசுகிறிஸ்துவிடம் போயிருந்தால் அவனுக்கு  ஆறுதல் கிடைத்திருக்கும். அவனுக்கு இப்போது மனஆறுதல் தேவைப்படுகிறது. அவனுடைய மனதில் ஆறுதல் இல்லாமையினால், மனஸ்தாபப்பட்டு, மனதில் குழப்படைந்து நான்று கொண்டு செத்துப்போகிறான்.


•யூதாஸ் தன் பாவத்தை உணருகிறான்.  தன்னுடைய பாவத்திற்கு தேவனிடமிருந்து கிருபையை எதிர்பார்க்க முடியாது என்று தீர்மானம்பண்ணிவிடுகிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ எல்லா பாவங்களையும் மன்னிப்பதற்கு கிருபை நிறைந்தவர். இயேசுவால்  மன்னிக்கக்கூடாத பாவம் என்று எதுவுமேயில்லை. தேவன் கொடுக்கும் மன்னிப்பை சிந்தித்துப் பார்ப்பதைவிட, தனது பாவத்தின் பாரத்தையே அதிகமாக சிந்தித்துப் பார்க்கிறான். தேவனுடைய கிருபையை நினைத்துப் பார்ப்பதைவிட இயேசுகிறிஸ்துவின் குற்றமில்லாத இரத்தத்தை தான் காட்டிக்கொடுத்ததையே நினைத்துப் பார்க்கிறான். 


யூதாஸ் நான்று கொண்டு செத்ததின் மூலமாக, அவன் நரகத்தில் பிரவேசிக்கிறான்.  நரக அக்கினியில் தன்னுடைய சரீரத்தை தள்ளிவிடுகிறான். தன்னுடைய மனஸ்தாபத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காக, அதைவிட பயங்கரமான நரக அக்கினியில் நித்திய வேதனையில்  சிக்கிக்கொள்கிறான். ஒருவனுக்குள் பிசாசு கிரியை செய்யும்போது அவனுடைய முடிவு இதைப்போன்று பரிதாபமாக இருக்கும். பணஆசை பிடித்தவர்களின் முடிவு யூதாசின் முடிவைப்போலவே பரிதாபமாக முடியும்.


பேதுரு தேவனுடைய நன்மையை கண்டவன். இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சித்து தமது கிருபையை வெளிப்படுத்தியதை  பேதுரு பல சமயங்களில் கண்டிருக்கிறான். யூதாஸ்காரியோத்தின் ஜீவியத்திலோ தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு வெளிப்படுகிறது. துன்மார்க்கரின் முடிவு பரிதாபமாக இருக்கும். மனஸ்தாபப்படுகிறவர்கள்  தேவனிடத்தில் வரவேண்டும். தேவனுடைய சமுகத்தில் மாத்திரமே ஆறுதலும், நம்பிக்கையும் உள்ளது. மனஸ்தாபப்பட்டுக்கொண்டு, பிசாசின் பிடியில் தொடர்ந்து சிக்கிகொண்டிருந்தால், பிசாசு நம்மை வஞ்சித்து, நமக்கு பரிதாபமான முடிவை ஏற்படுத்திவிடுவான்.


நம்முடைய மனச்சாட்சி நமது பாவத்தைக்குறித்து உணர்த்தும்போது நாம் தேவனுடைய கிருபாசனத்தண்டையில் பணிவோடு வரவேண்டும். தேவன் நம்மை கிருபையாக மன்னிப்பார் என்னும் நிச்சயம் நமக்குள் காணப்படவேண்டும். நமது சொந்த முயற்சியினால் நமக்கு நாமே உதவிசெய்து கொள்ளலாம் என்று இறுமாப்பாக இருக்கக்கூடாது. நமக்கு தேவனுடைய உதவி தேவை. தேவனுடைய கிருபையில்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. 


தேவனுடைய பார்வையில் தற்கொலை செய்வது பாவமான கிரியை. இது பிசாசின் கிரியை. பிசாசின் இந்த அந்தகார சக்தியிலிருந்து நம்மை விடுவிப்பதற்கு  இயேசுகிறிஸ்து வல்லராக இருக்கிறார். நம்மை இயேசுவின் கரங்களில் ஒப்புக்கொடுக்கும்போது நமக்கு சமாதானம் கிடைக்கும். நமது மனஸ்தாபம் நீங்கும். மனஆறுதல் உண்டாகும்.  அதை தொடர்ந்து நமது மனதில் தெய்வீக சமாதானமும், தெய்வீக சந்தோஷமும் உண்டாகும். 


யூதாஸ் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவன். இப்போது தன்னுடைய ஜீவனையே முடித்துக் கொண்டான். இயேசு கிறிஸ்துவிற்காகத் தனது ஜீவிய நாளெல்லாம் ஊழியம் செய்வதற்காக அழைக்கப்பட்டவன். இயேசுவிற்காக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ண வேண்டியவன். வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்க வேண்டியவன். இப்போது நான்றுகொண்டு செத்துப் போனான். 


குயவனுடைய நிலம்


பிரதான ஆசாôரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்-, ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.  இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று (மத் 27:6-10).


 இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ்காரியோத்து முப்பது வெள்ளிக்காசை பெற்றுக்கொண்டு, இயேசுவை காட்டிக்கொடுக்கிறான். குற்றமில்லாத இரத்தத்தை தான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்துவிட்டதாக மனஸ்தாபப்பட்டு, அந்த காசுகளை தேவாலயத்தில் எறிந்துவிட்டு புறப்பட்டுப்போய் நான்று கொண்டு செத்துப்போகிறான். 


பிரதான ஆசாரியரும், மூப்பரும் அந்தக் காசுகளை  இரத்தக்கிரயம் என்று தீர்மானம்பண்ணுகிறார்கள். தேவாலயத்தின் காணிக்கை பெட்டியில் இந்தக் காசுகளை போடக்கூடாது என்று தடைபண்ணுகிறார்கள். அந்தக் காசுகளை  என்ன செய்யலாம் என்று ஆலோசனைச்சங்கத்தார் ஆலோசனைபண்ணுகிறார்கள். அந்நியரை அடக்கம்பண்ணுவதற்காக குயவனுடைய நிலத்தை அந்த வெள்ளிக்காசுகளினால் கிரயத்திற்கு வாங்குகிறார்கள். இந்த நிலத்தில்       யூதரல்லாத அந்நியர்கள் மரித்தபின்பு அடக்கம்பண்ணப்படுவார்கள். 


அந்நியர்கள்மீது கூட யூதர்கள்     கருணை காண்பித்து, அவர்களையும் மனிதாபிமானத்தோடு அடக்கம்பண்ணுவதற்கு ஆவன செய்வதுபோல் தோன்றுகிறது. ஆனால் மெய்யாகவே யூதர்களுக்கு புறஜாதியார்மீது அக்கறையில்லை. யூதர்கள் அந்நியரை நேசிக்கிறவர்களாக இருந்தால் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கல்லறைகளில்,  தங்களுக்கு அருகாமையிலேயே அந்நியரை அடக்கம்பண்ணுவதற்கு அனுமதி கொடுத்திருப்பார்கள். ஆனால் யூதர்களோ அந்நியர்களை தங்கள் அருகில் நெருங்கவிடாமல் அவர்களை தூரத்திலேயே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அந்நியர்கள் உயிரோடிருந்தாலும், செத்துப்போனாலும் யூதருக்கு அருகாமையில் வரமுடியவில்லை. பாரபட்சமான, பட்சபாதமான இந்த பாவமான மனப்பாங்கு மண்ணில் அடக்கம்பண்ணப்பட வேண்டும். 


ஆலோசனைச்சங்கத்தார் குயவனுடைய நிலத்தை காலதாமதமில்லால் சடுதியில் வாங்கிவிடுகிறார்கள். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு பேதுரு இந்த நிலத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார். 


பிரதான ஆசாரியரும் மூப்பரும் யூதாஸ்காரியோத்து தூக்கியெரிந்த முப்பது வெள்ளிக்காசை கையாளும் விதத்தில்  அவர்களுடைய மாய்மாலம் தெரியவருகிறது. அந்த காசுகளை காணிக்கை பெட்டியில் போடலாகாது என்று தடைபண்ணுகிறார்கள்.  ஆனால் இதே காசுகளைத்தான் இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ்காரியோத்திற்கு கூலியாக கொடுத்தார்கள். ஆனால் அதே காசுகள் இப்போது அவர்களுடைய பார்வைக்கு  இரத்தகிரயமாக தெரிகிறது. இரத்தக் கிரயமான காசை காணிக்கை பெட்டியில் போடலாகாது என்று தடைபண்ணுகிறார்கள். 


துரோகியாகிய யூதாஸ்காரியோத்தை கூலிக்கு அமர்த்துவது, ஒரே வேசியை கூலிக்கு அமர்த்துவது போன்ற பாவச்செயலாகும். துரோகியினுடைய கிரயம் ஒரு நாயின் கிரயத்திற்கு சமமானது. அவர்கள் இயேசுவை ஒரு துரோகியாகவே பாவிக்கிறார்கள். இயேசுவின் கிரயமாகிய இந்த முப்பது காசுகளை கர்த்தருடைய ஆலயத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்று ஆலோசனைச்சங்கத்தார் முடிவு பண்ணுகிறார்கள். இவர்கள் கொசு இல்லாதபடி  வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள். 


ஆலோசனைச்சங்கத்தார் தாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஜனங்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுப்பதற்காக கொடுக்கப்பட்ட முப்பது வெள்ளிக் காசை வைத்து ஜனங்களுக்கு நன்மை செய்ய முடிவு பண்ணுகிறார்கள். அந்நியரை அடக்கம்பண்ணுவதற்கு ஆலோசனைச்சங்கத்தார் தங்களுடைய சொந்த பணத்தில் நிலம் வாங்குவதற்குப் பதிலாக, யூதாஸ்காரியோத்து தேவாலயத்தில் எறிந்துவிட்ட வெள்ளிக்காசுகளில் குயவனுடைய நிலத்தை வாங்குகிறார்கள். தாங்கள் செய்த பாவத்திற்கு  பரிகாரம் செய்வதுபோல ஜனங்களுக்கு நன்மை செய்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக அந்நியருக்கும் புறஜாதியாருக்கும் பாவியாக இருக்கிற ஜனங்களுக்கும் நன்மை உண்டாகிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தக்கிரயத்தின் மூலமாக அந்நியர்கள் மரித்தபின்பு அவர்களை அடக்கம்பண்ணுவதற்கு  ஓர் இடம் கிரயத்திற்கு வாங்கப்படுகிறது. இதுவரையிலும் அந்நியரை அடக்கம்பண்ணுவதற்கு சரியான இடம் எதுவுமில்லை. அந்நியர்கள் உயிரோடிருக்கும்போதும், மரித்தபின்பும் கவனிக்கப்படாமலேயே இருந்தார்கள். இப்போது அவர்களுக்கென்று ஓர் இடம் வாங்கப்பட்டிருப்பதினால், அந்நியர்கள் மரிக்கும்போது அவர்களுக்கென்று ஓர் இடம் உண்டாயிற்று.  தங்களுக்கென்று ஒரு கல்லறை பூமி உள்ளது என்றும், அந்த பூமியில் யாருடைய தொந்தரவுமில்லாமல் தங்களுடைய சடலங்களை அடக்கம்பண்ணலாம் என்றும் அந்நியர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தக்கிரயத்தின் மூலமாக குயவனுடைய நிலம் அந்நியருக்கு சொந்தமாயிற்று.


இயேசுகிறிஸ்துவின் இரத்தக்கிரயத்தினால் வாங்கப்பட்ட குயவனுடைய நிலம் அக்கெல்தேமா என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இரத்த நிலம் என்று பொருள். பிரதான ஆசாரியர் இந்த நிலத்திற்கு  இரத்த நிலம் என்று பெயர் கொடுக்கவில்லை. இந்த நிலத்தை கிரயத்திற்கு வாங்கியதினால், தங்களுடைய துன்மார்க்கமான கிரியைகளும், அதைப்பற்றிய நினைவுகளும் இந்த நிலத்தில் புதைக்கப்பட்டுப்போகும் என்று நினைத்தார்கள். ஆனால் ஜனங்களோ பிரதான ஆசாரியருடைய கொடிய செயலை மறக்காமல், இயேசுகிறிஸ்துவின்  இரத்தக்கிரயத்தினால் வாங்கப்பட்ட நிலத்தை இரத்தநிலம் என்று அழைத்து, யூதர்கள் இயேசுவுக்கு செய்த துன்மார்க்கமான கிரியைகளை நினைவுகூருகிறார்கள். இரத்தக்கிரயத்தினால் வாங்கப்பட்ட நிலம் இந்நாள் வரைக்கும் ஜனங்களால் இரத்தநிலம் என்னப்படுகிறது. 


இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவத்தையும் தீர்க்கதரிசிகள் ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறார்கள். குயவனுடைய நிலத்தை கிரயத்திற்கு வாங்கியதைக்கூட எரேமியா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார்.  இந்த தீர்க்கதரிசனம் சகரியாவின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது (சக 11:12,13). சகரியாவின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனத்தை மத்தேயு மேற்கோளாக கூறும்போது ""இது எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது'' என்று எழுதியிருக்கிறார். சகரியாவை அவர் எவ்வாறு எரேமியா என்று கூறுகிறார் என்பது தெளிவாக விளக்கப்படவில்லை. புதிய ஏற்பாட்டு மூலபாஷை சுவடிகள் சிலவற்றில் எரேமியாவின் பெயர் குறிப்பிடப்படாமல், ""தீர்க்கதரிசி ஒருவரால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று'' என்று பொதுவாக உள்ளது. எரேமியாவின் ஆவி  சகரியாவிடமிருந்ததாக யூதர்கள் பொதுவாக கூறுவது வழக்கம். இதன் அடிப்படையில் சகரியாவுக்குப் பதிலாக இங்கு எரேமியாவின் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.


சகரியா புஸ்தகத்தில் இந்த  தீர்க்கதரிசனம் ஓர் அடையாளமாக முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் காலத்திலோ இந்த சம்பவம்  பிரத்தியட்சமாக நடைபெறுகிறது. முப்பது வெள்ளிக்காசுகளால் குயவனுடைய நிலம் கிரயத்திற்கு வாங்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவுக்கு அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு முப்பது வெள்ளிக்காசுகள் மாத்திரமே. அவைகளை குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்து விட்டேன் என்று சகரியா முன்னறிவிக்கிறார். இந்த முன்னறிவிப்பு இப்போது பிரத்தியட்சமாக நிறைவேறுகிறது.


முப்பது வெள்ளிக்காசுகள் குயவனுடைய நிலத்திற்காக மதிக்கப்பட்ட கிரயமாகும். இயேசுகிறிஸ்து விலைமதிப்பற்றவர். அவரை பொன்னாலும் வெள்ளியாலும் கிரயத்திற்கு கொள்ளமுடியாது. ஆயினும் இஸ்ரவேல் புத்திரர்  இயேசுவுக்கு கிரயமாக முப்பது வெள்ளிக்காசுகளையே மதிக்கிறார்கள். இஸ்ரவேல் புத்திரர்கள் தங்களுடைய கர்த்தரை சொற்ப கிரயத்திற்கு மதிக்கிறார்கள். அந்த கிரயத்தினால் குயவனுடைய நிலத்தை மாத்திரமே வாங்கமுடிகிறது. சகரியா இதைப்பற்றி கூறும்போது அந்த காசுகளை குயவனுக்கென்று  கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டதாக எழுதியிருக்கிறார். குயவன் சாதாரண மண்பாண்ட தொழில் செய்கிறவன். இஸ்ரவேல் புத்திரர்கள் விலைமதிக்க முடியாத இயேசுவுக்கு ஒரு சொற்ப கிரயத்தை மதிக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்து ராஜாக்களையும் இந்த உலகத்திலுள்ள எல்லா மனுஷரையும் மீட்பதற்காக தம்மையே மீட்பின் கிரயமாக செலுத்தியிருக்கிறார். ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு அடிமைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் கிரயத்தையே கொடுக்கிறார்கள் (யாத் 21:32). ஒரு குயவனுடைய நிலத்திற்கு என்ன கிரயம் கொடுக்கவேண்டுமோ அந்த கிரயத்தை இயேசுவுக்கு கொடுத்தால் போதுமானது என்று தீர்மானம்பண்ணுகிறார்கள். இவையெல்லாம் கர்த்தர் நியமித்தபடி, தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தபடி நிறைவேறுகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.