பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 7(1)
தேவாலயத்தின் கட்டடங்கள்
காண்பிக்க வருகிறார்கள்
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள் (மத் 24:1).
இயேசுகிறிஸ்து தேவாலயத்தைவிட்டு புறப்பட்டுப்போகிறார். சற்று நேரத்திற்கு முன்பு, இயேசுகிறிஸ்து யூதர்களிடம் ""உங்கள் வீடு உங்களுக்கு பாழாக்கிவிடப்படும்'' என்று கூறியிருந்தார். அதன்பின்பு இப்போது இயேசு தேவாலயத்தைவிட்டு புறப்பட்டுப்போகிறார். இங்கிருந்து புறப்பட்டு போன இயேசு, அதன்பின்பு தேவாலயத்திற்குள் திரும்பி வரவேயில்லை. தேவாலயத்தைவிட்டு புறப்பட்டு போனவுடன் இயேசுகிறிஸ்து தேவாலயத்தைவிட்டு வெளியே போகும்போது அது பாழாக்கிவிடப்படும். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தாமாக தேவாலயத்திலிருந்து வெளியே புறப்பட்டுப் போகவில்லை. யூதர்கள் அவரை அங்கிருந்து துரத்திவிடுகிறார்கள். இயேசுகிறிஸ்து ஒருபோதும் இஸ்ரவேல் புத்திரரை புறக்கணித்து ஒதுக்கிவிடவில்லை. அவர்களே இயேசுகிறிஸ்துவை முதலாவதாக புறக்கணித்து ஒதுக்கிவிடுகிறார்கள்.
இயேசுகிறிஸ்து தேவாலயத்தைவிட்டு புறப்பட்டுப்போனாலும், தம்முடைய சீஷர்களைவிட்டு அவர் அகன்றுபோகவில்லை. இயேசுகிறிஸ்து ஆலயத்தைவிட்டு புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீஷர்களும் அவரோடுகூட ஆலயத்தைவிட்டு புறப்பட்டுப் போய்விடுகிறார்கள். இப்போது சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடம் வருகிறார்கள். இயேசுகிறிஸ்து இருக்கும் இடத்தில் நாம் இருப்பது நமக்கு நல்லது. அவர் புறப்பட்டுப்போகும்போது நாமும் அந்த இடத்தைவிட்டு புறப்பட்டுப்போய்விடவேண்டும். இயேசு இல்லாத இடத்தில் நாம் இருக்கவேண்டுமென்று விரும்பக்கூடாது.
சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்கு காண்பிக்கிறார்கள். தேவாலயம் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், கலை நயத்துடனும் கட்டப்பட்டிருக்கிறது. ஏராளமான காணிக்கைகளினாலும், வெகுமதிகளினாலும் தேவாலயம் ஆடம்பரமாக அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. இவையெல்லாவற்றையும் சீஷர்கள் இயேசுவுக்கு காண்பிக்கிறார்கள். தேவாலயத்தின் அழகையும் ஆடம்பரத்தையும் இயேசு பார்க்கவேண்டுமென்று சீஷர்கள் விரும்புகிறார்கள்.
தேவாலயத்தின் அழகை சீஷர்கள் ரசிக்கிறார்கள். அதை விரும்புகிறார்கள். தங்களைப்போலவே இயேசுகிறிஸ்துவும் அந்த அழகை பார்த்து ரசித்து சந்தோஷப்படவேண்டுமென்று சீஷர்கள் விரும்புகிறார்கள். சீஷர்கள் தங்களுடைய வாழ்நாளில் அதிக காலம் கலிலேயாவிலேயே வாழ்ந்தவர்கள். இது எருசலேமின் தேவாலயத்தைவிட்டு வெகு தொலைவில் உள்ளது. கலிலேயாவிலுள்ளவர்கள் அடிக்கடி தேவாலயத்தை வந்து பார்க்கமுடியாது. எப்போதாவது எருசலேமுக்கு வந்தால்தான் அவர்களால் தேவாலயத்தை பார்க்கமுடியும். சீஷர்கள் இங்கு தேவாலயத்தைப்பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார்கள். இந்த மகிமையெல்லாம் இயேசுகிறிஸ்து கண்டு ரசிக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள்.
நம்மில் பலர் சீஷர்களைப்போலவே வெளித்தோற்றத்தையும், வெளி ஆடம்பரத்தையும், வெளி அழகையும் ரசிக்கிறோம். அதில் மூழ்கிப்போய்விடுகிறோம். தேவனுடைய காரியங்களில்கூட வெளி அலங்காரங்களையே நாம் விரும்பி ரசிக்கிறோம். தேவனுடைய ஆலயம் மகிமையுள்ளதுதான். ஆனால் இந்த மகிமை ஆசாரியர், வேதபாரகர், பரிசேயர் ஆகியோரின் பாவங்களினால் மாசுபட்டிருக்கிறது. கிறிஸ்துவின் சமுகம் தேவாலயத்தைவிட்டு வெளியேறிப் போய்விட்டதினால், தேவாலயத்தில் தேவமகிமை மங்கிப்போயிற்று.
இந்த ஆலயம் பாழாக்கிவிடப்படும் என்று இயேசுகிறிஸ்து முன்னறிவித்திருக்கிறார். ஆனால் சீஷர்களோ அவருக்கு தேவாலயத்தின் கட்டடங்களை காண்பிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சாப வார்த்தைகளை அவர் திரும்ப பெற்றுக்கொள்ளவேண்டுமென்று ஒருவேளை சீஷர்கள் நினைத்திருக்கலாம். இயேசுகிறிஸ்து எருசலேம் நகரத்தைப்பார்த்து அதற்காக கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார் (லூக் 19:41). அதிலுள்ள அழிந்துபோகும் ஆத்துமாக்களைக் குறித்து இயேசு கரிசனையோடிருக்கிறார். இயேசுகிறிஸ்து மனுஷருடைய உள்ளான ஆத்துமாவையும் இருதயத்தையும் பார்க்கிறார். ஆனால் சீஷர்களோ ஆடம்பரமான கட்டடங்களை பார்க்கிறார்கள். தேவனுடைய சிந்தனையும் நம்முடைய சிந்தனையும் எப்போதும் ஒன்றுபோல் இருப்பதில்லை.
""தேவாலயத்தின் கட்டடங்கள்'' என்பது ஏரோது ராஜா கட்டின தேவாலயம் ஆகும். இது சுமார் 500 சதுர கெஜம் பரப்பளவு உள்ளது. வெள்ளைச் சலவைக் கற்களால் கட்டப்பட்டது. பழங்கால அற்புதங்களில் ஏரோதுவின் தேவாலயமும் ஒன்று.
எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும்
இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்-ன்மேல் ஒரு கல்-ராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 24:2).
தேவாலயத்தின் கட்டடங்கள் இருக்கும் இடத்தில் இயேசுவும் சீஷர்களும் இருக்கிறார்கள். இந்த இடத்தில் தேவாலயத்தின் அழிவை இயேசு முன்னறிவிக்கிறார். ""தேவாலயம் மிகவும் அழகாக இருக்கிறது. ஆடம்பரமாக இருக்கிறது. ஆகையினால் இது அழிந்துபோகாது. இதன் மகிமை எப்போதும் நிலைத்திருக்கும்'' என்று சீஷர்கள் நினைக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோ தமது சீஷர்களைப்பார்த்து ""இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே'' என்று கூறுகிறார். தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்கு காண்பிப்பதற்காக சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடம் வருகிறார்கள். தங்களைப்போலவே இயேசுவும் தேவாலய கட்டடங்களின் அழகையும் ஆடம்பரத்தையும் ரசித்துப் பார்ப்பார் என்று நினைக்கிறார்கள்.
தேவாலயம் வெளிதோற்றத்திற்கு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் பார்வையோ தேவாலயத்து கட்டடங்களை ஊடுருவிப்பார்க்கிறது. அவருடைய பார்வை தேவாலயத்தின் முடிவை நோக்கிப் பார்க்கிறது. இயேசுகிறிஸ்து தேவாலயத்தின் கட்டடங்களைப்பார்த்து, தமது சாப வார்த்தைகளை அவர் விலக்கிக்கொள்வார் என்று சீஷர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்முடைய வார்த்தைகளை உறுதிபண்ணுகிறார்.
""இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒருகல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும்'' என்று இயேசு அறிவிக்கிறார். ரோமப்பேரரசனாகிய தீத்துராயன் எருசலேம் பட்டணத்தை கைப்பற்றியபோது, அதிலுள்ள தேவாலயத்தை பாதுகாப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் அவனுடைய படைவீரர்களோ தேவாலயத்தை இடித்துப்போட்டார்கள். இந்த துர்ச்செயலை தீத்துராயனால் தடைபண்ண முடியவில்லை. இதன் பின்பு டர்னஸ்ரூபன் என்னும் ராயன் தேவாலயம் இருந்த இடத்தின் நிலத்தை உழுது பயிரிட்டதாக வரலாறு கூறுகிறது. இயேசுகிறிஸ்து முன்னறிவித்த பிரகாரமாக, தேவாலயம் இருந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒருகல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போயிற்று.
யோசபஸ் என்னும் திருச்சபை வரலாற்று ஆசிரியர் தேவாலயத்தின் கற்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதிலுள்ள கற்களில் சில 94 அடி நீளமுள்ளவை. பத்தரை அடி உயரமும், 13 அடி அகலமும் உடையவை. அந்தத் தேவாலயத்தில் 162 தூண்கள் இருந்தன. 52 அடி உயரமுள்ள மண்டபங்களை அவை தாங்கிப்பிடித்திருந்தன. தேவாலயத்திலுள்ள எல்லா கற்களும் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடிக்கப்பட்டது. மீகா 3:12-இல் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறிற்று. ""சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம். ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்''.
எப்பொழுது சம்பவிக்கும்
பின்பு, அவர் ஒ-வமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள் (மத் 24:3).
இயேசுகிறிஸ்து தேவாலயத்திலுள்ள கட்டடங்களெல்லாம் அழிந்துபோகுமென்று முன்னறிவிக்கிறார். இது எப்போது சம்பவிக்கும் என்றும், இது சம்பவிக்கப்போகும் காலத்திற்கு அடையாளம் என்ன என்றும் சீஷர்கள் அவரிடத்தில் கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்து ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கிறார். சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து இந்தக் கேள்வியைக்கேட்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவும் சீஷர்களும் எருசலேமிலிருந்து பெத்தானியாவுக்கு திரும்பி போய்க்கொண்டிருக்கிறார்கள். போகும் வழியில் ஓய்வெடுப்பதற்காக ஒலிவமலையில் அமர்ந்திருக்கிறார்கள். ஒலிவமலை தேவாலயத்திற்கு எதிரே, அதை பார்க்கும் வண்ணமாக அமைந்துள்ளது. தேவாலயத்திலிருந்து ஒலிவமலை சற்று தூரத்திலிருந்தாலும், இந்த மலையிலிருந்து தேவாலயத்தை முழுமையாக தரிசிக்கலாம்.
தேவாலயம் இருந்த இடத்தில் ஒருகல்லின்மேல் ஒருகல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார். இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் என்றும், இயேசுகிறிஸ்துவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் யாருக்கும் அடையாளம் என்ன என்றும் சீஷர்கள் இயேசுவிடம் கேட்கிறார்கள். வேதபண்டிதர்கள் இந்த கேள்விகளுக்கு பலவிதமாக வியாக்கியானம் கூறுகிறார்கள். தேவாலயம் அழியும்போது உலகம் முடிவுக்கு வந்துவிடும் என்பது சிலருடைய கருத்து.
""இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்'' என்பது ""எருசலேமுக்கு அழிவு எப்பொழுது சம்பவிக்கும்'' என்று பொருள்படும் என்பதாக வேதபண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள். தேவாலயம் இடிக்கப்படுவதும், இயேசுகிறிஸ்துவின் வருகையும் உலகத்தின் முடிவில் நடைபெறும் என்றும் இவர்கள் வியாக்கியானம் கூறுகிறார்கள். வருங்காலத்தில் நடைபெறப்போகும் சம்பவங்களைக்குறித்து வேதபண்டிதர்கள் பலவிதமாக கருத்து கூறுகிறார்கள்.
அடையாளம் என்ன
சீஷர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்விகள்
1. எருசலேம் எப்போது அழிக்கப்படும்? இதற்கு மத்தேயு பதில் கூறவில்லை. இதற்குரிய பதிலை லூக்கா எழுதின சுவிசேஷத்தில் நாம் வாசிக்கலாம். (லூக்கா 21:12-24)
2. உம்முடைய வருகைக்கு அடையாளம் என்ன? இதற்குரிய பதில் மத் 24:4-26, 37-39 ஆகிய வசனங்களில் உள்ளது.
3. உமது வருகையின்போது என்ன நடைபெறும்? இதற்குரிய பதில் மத் 24:27-31,40-51; மத் 25:1-46 ஆகிய வசனங்களில் உள்ளது.
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு அடையாளங்கள்
1. வஞ்சனைகள் (மத் 24:4-5,11,24)
2. கள்ளக்கிறிஸ்துக்கள் (மத் 24:5, 23-26)
3. யுத்தங்களும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளும் (மத் 24:6-7)
4. பஞ்சங்கள் (மத் 24:7; வெளி 6:5-6)
5. கொள்ளைநோய்கள் (மத் 24:7; வெளி 6:8)
6. பூமியதிர்ச்சிகள் (மத் 24:7; வெளி 6:12-17)
7. தேவனுடைய பிள்ளைகளுக்கு உபத்திரவங்கள் (மத் 24:9; மாற்கு 13:9,13)
8. இடறல்கள் (மத் 24:10; மத் 18:1-10)
9. காட்டிக்கொடுக்கப்படுதல் (மத் 24:9; மாற்கு 13:12)
10. பகை (மத் 24:10; 2தீமோ 3:1-9)
11. கள்ளத்தீர்க்கதரிசிகள் (மத் 24:11,24; வெளி 13)
12. அக்கிரம மிகுதி (மத் 24:12)
13. அன்பு தணிந்துபோதல் (மத் 24:12-13; 2தீமோ 3)
14. சுவிசேஷ ஊழியப் பிரபலியம் (மத் 24:14)
15. பாழாக்குகிற அருவருப்பு (தானி 9:27; மத் 24:15; 2தெச 2:4; வெளி 13)
16. யூதேயாவில் புதிய யூததேசம் (எசே 37; தானி 9:27; மத் 24:9,15-26)
17. யூதருடைய புதிய தேவாலயம் (தானி 8:9-13; தானி 9:27; தானி 11:45)
18. மூன்றரை வருஷங்களுக்கு மஹா உபத்திரவம் (தானி 12:1; மத் 24:21)
19. இரத்தச்சாட்சிகள் (மத் 24:9,22)
20. யூதேயாவிலிருந்து யூதர்கள் ஓடிப்போதல் (சங் 60:4-8; ஏசா 16:1-5)
21. சாத்தானுடைய வல்லமை அதிகரித்தல் (மத் 24:24; 2தெச 2:8-12; வெளி 13)
22. குடிவெறி (மத் 24:38; லூக்கா 17:28; லூக்கா 21:34)
23. பாலியல் பலாத்காரங்கள் (மத் 24:38; லூக்கா 17:27)
24. உணர்வின்மை (மத் 24:39)
இயேசு கிறிஸ்துவின் வருகை பரோசியா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு கிரேக்கச்சொல். காணக்கூடிய விதத்தில் தோன்றுதல், மறுபடியும் தோன்றுதல் என்பது இதன் பொருள்.
இயேசு கிறிஸ்துவின் வருகைகள்
1. சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மத்திய ஆகாயத்திற்குப் பரிசுத்தவான்களை எடுத்துக் கொள்வதற்காக இயேசு கிறிஸ்து வருவார். இந்த வருகையில் அவர் பூமிக்கு வராமல் மத்திய வானத்திற்கு மட்டுமே வருகிறார். (யோவான் 14:1-3; 1கொரி 15:23,51-58)
2. இரண்டாம் வருகை. இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்களோடு ஆளுகை செய்வதற்காகப் பூமிக்கு வருவார். (மத் 24:3,27-51; மத் 25:31-46)
எச்சரிக்கையாயிருங்கள்
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; (மத் 24:4).
இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் என்று சீஷர்கள் கேட்கிறார்கள். ஆனால் இயேசுவோ இந்தக் கேள்விக்கு பதில் கூறவில்லை. இதை தொடர்ந்து ""இவற்றிற்கு அடையாளம் என்ன'' என்று மற்றொரு கேள்வியையும் கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த கேள்விக்கு விரிவாக பதில்கூறுகிறார். இயேசு தம்முடைய சீஷர்களிடம் ""ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்'' என்று கூறுகிறார்.
இயேசுகிறிஸ்து முன்னறிவித்த தீர்க்கதரிசனங்கள் எப்போது நிறைவேறும் என்பதை தெரிந்துகொள்ளவேண்டுமென்று சீஷர்கள் ஆவலோடிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோ அவர்களுடைய ஆவலை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அவர்களை எச்சரிக்கிறார். அந்த சம்பவம் நடைபெறும்போது, சீஷர்கள் பயந்துபோய்விடக்கூடாது. ஏமாந்துவிடக்கூடாது. நடைபெறப்போகும் சம்பவங்களை எதிர்கொள்வதற்கு இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை ஆயத்தப்படுத்துகிறார்.
ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று கூறுகிறார். சீஷர்களோ இவை எப்போது சம்பவிக்கும் என்பதை தெரிந்துகொள்வதிலேயே ஆவலாக இருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ அவர்களுடைய ஆவல்களை நிறைவேற்றுவதில் எந்த ஆர்வமும் காண்பிக்கவில்லை. அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றி இயேசுகிறிஸ்துவை பின்பற்றவேண்டும். இயேசுகிறிஸ்துவை பின்பற்றாமல் அவரை விட்டு விலகிப்போய்விடுமாறு ஒரு சிலர் சீஷர்களை வஞ்சிப்பார்கள். சபைகளை உபத்திரவப்படுத்துகிறவர்களைவிட வஞ்சிக்கிறவர்கள் ஆபத்தான சத்துருக்கள்.
இந்த சம்பாஷணையில் இயேசுகிறிஸ்து மூன்றுமுறை கள்ள தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரித்துக் கூறியிருக்கிறார். அநேக கள்ள தீர்க்கதரிசிகள் எருலேமிலே எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள். எருசலேமில் தான் யூதமார்க்கத்துத் தலைவர்கள் கர்த்தருடைய உண்மையான தீர்க்கதரிசிகளை கொன்றுபோட்டார்கள். மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவை எருசலேமின் ஜனங்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். அதே ஜனங்களை இப்போது கள்ளக்கிறிஸ்துக்கள் வஞ்சிக்க வந்திருக்கிறார்கள். இந்த கள்ளக்கிறிஸ்துக்கள் தங்களையே கிறிஸ்து என்று வெளிப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு இது ஒரு சோதனைக்காலம். இந்த சோதனையில் அவர்கள் வெற்றி பெறவேண்டும். சோதிக்கப்பட்ட பின்பு அவர்கள் பூரணமடைவார்கள்.
விசுவாசிகள் எப்போதும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். சாத்தான் தேவப்பிள்ளைகளை எப்படி வஞ்சிக்கலாம் என்று வழிபார்த்துக் கொண்டிருக்கிறான். ஆகையினால் இதற்கு எச்சரிப்பாக வேதத்தில் பல வசனங்கள் கூறப்பட்டிருக்கிறது.
கள்ளக்கிறிஸ்துக்கள்
ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்-, அநேகரை வஞ்சிப்பார்கள் (மத் 24:5).
சாத்தான் வஞ்சகமாக சுற்றித்திரிகிறான். ஜனங்களை வஞ்சிப்பதற்காக வஞ்சகமான கிரியைகளை செய்கிறான். ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்து, யாரை வஞ்சிக்கலாம் என்று அலைந்து திரிகிறான். ஒளி என்பது பொதுவாக நன்மைக்கு அடையாளம். இருள் தீமைக்கு அடையாளம். சாத்தானோ ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்து, தன்னை நல்லவன்போல் காண்பிக்கிறான். நன்மை என்னும் போர்வையில் தீமை மறைந்திருக்கிறது.
அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். தாங்கள் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு பேசுவதாக இந்த கள்ளத்தீர்க்கதரிசிகள் கூறுவார்கள். ஆனால் இவர்கள் கூறுவது எதுவும் மெய்யல்ல. எல்லாமே பொய். ஜனங்களை வஞ்சிக்கிறவர்கள் சபைகளில் வேதவசனங்களை போதிக்கும் போதகர்களாககூட இருக்கலாம். இவர்கள் சத்தியத்தை புரட்டி ஜனங்களை வஞ்சித்துவிடுவார்கள். இவர்களின் உண்மையான சுபாவத்தை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். தங்கள்மீது யாரும் சந்தேகப்படாதவாறு, இயேசுகிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு, அநேகரை வஞ்சிப்பார்கள்.
நமது கோட்டைக்குள் வஞ்சிக்கிறவர்கள் இருக்கும்போது அது நமக்கு பேராபத்தாக இருக்கும். ஆயிரம் எதிரிகளைவிட நம்மோடுகூட இருந்து நம்மை வஞ்சிக்கிற ஒருவன் மிகவும் பயங்கரமானவன்.
இயேசுகிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக்கொண்டு அநேகர் வருவார்கள். நானே கிறிஸ்து என்று சொல்லி அவர்கள் அநேகரை வஞ்சிப்பார்கள். இயேசுகிறிஸ்து இந்த உபதேசத்தை கூறிய காலத்தில், யூதர்கள் மத்தியில் மேசியாவைக் குறித்த பொதுவான எதிர்பார்ப்பு இருந்தது. அவர்கள் மேசியாவைக் குறித்து அதிகமாக பேசினார்கள். அவர் வரப்போகிறார் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள். மேசியாவாகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். ஆனால் மேசியாவை எதிர்பார்த்திருந்த யூத ஜனங்களோ, அவரை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்கள்.
ஆயினும் ""மேசியா'' என்னும் வார்த்தை யூதர்கள் மத்தியிலே மிகவும் பிரபலமாயிற்று. அந்த நாமத்தை ஒரு சிலர் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தங்களுக்கு புகழ்ச்சி வேண்டும் என்பதற்காக, தங்களையே மேசியா என்று கூறிக்கொள்கிறார்கள். தாங்களே கிறிஸ்து என்று அவர்கள் சுயவிளம்பரம் செய்கிறார்கள். இவர்கள் கள்ளக்கிறிஸ்துக்கள். இந்த கள்ளக்கிறிஸ்துக்களுக்கும், கள்ள தீர்க்கதரிசிகளுக்கும் கள்ள ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வஞ்சனையாகவும் விறுவிறுப்பாகவும் செயல்பட்டு ஜனங்களை அவர்கள் பக்கமாக திருப்புகிறார்கள்.
தங்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்போது ஜனங்கள் மெய்யாகவே கிறிஸ்துவை தேடுவார்கள். அப்போது கிறிஸ்து இங்கே இருக்கிறார் என்றும், அதோ அங்கே இருக்கிறார் என்றும் பலர் பலவிதமாக கூறுவார்கள். உண்மையான கிறிஸ்து தம்மைப்பற்றி சுயவிளம்பரம் செய்யமாட்டார். இதோ இங்கே என்றும் இதோ அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது (லூக் 17:21). கிறிஸ்து சர்வ வியாபகர். எல்லா இடத்திலும் இருக்கிறவர். இவர் அங்கும் இங்குமாக இருக்கிறவரல்ல. எங்கும் இருக்கிறவர். தம்முடைய நாமத்தை உண்மையாய் தொழுதுகொள்கிற ஜனங்கள் மத்தியில் இயேசுகிறிஸ்து இருக்கிறார்.
கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இவை மெய்யான அற்புதங்களல்ல. மெய்யான அற்புதங்களுக்கு தெய்வீக முத்திரை இருக்கும். இயேசுகிறிஸ்து தம்முடைய வார்த்தைகளை அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதிபண்ணினார். ஆனால் இவர்களோ தங்கள் வார்த்தைகளை உறுதிபண்ணுவதற்காக அற்புதங்களை செய்யவில்லை. தங்கள் விளம்பரத்திற்காகவும், தங்கள் சுய பெருமைக்காகவும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிப்பதற்காகவும், இவர்கள் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறார்கள். இவையெல்லாமே மாய்மாலம். வெளிவேஷம்.
கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து, தங்களுடைய வஞ்சகமான நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். கூடுமானால் அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து வஞ்சித்துக்கொண்டிருப்பார்கள். ஆத்துமாக்களை வஞ்சிப்பதில் சாத்தானும் அவனுடைய கருவிகளாக பயன்படுகிறவர்களும் எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். பலரை வஞ்சிக்கிறார்கள்.
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பவர்கள் தேவனால் தம்முடைய பிள்ளையாக தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களை நிற்கிறவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களோ உறுதியாக நிற்கவில்லை. ஆகையினால் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சித்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட சோதனை வேளைகளில் கர்த்தருடைய கிருபை மாத்திரமே நம்மை பாதுகாக்கும். நமது சுயபலத்தில் சாத்தானோடு எதிர்த்து நிற்கக்கூடாது. தேவனுடைய கிருபையை நாம் பெற்றுக்கொள்ளும்போது, அதுவே நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.
கள்ளத்தீர்க்கதரிசிகளும் கள்ளக்கிறிஸ்துக்களும் எப்படியாவது தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கவேண்டுமென்று முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களால் வஞ்சிக்கமுடியாது. ஆயினும், கூடுமானால் எப்படியாவது வஞ்சிக்கவேண்டுமென்று தொடர்ந்து முயற்சி செய்வார்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தேவனுடைய பாதுகாப்பில் இருக்கிறார்கள். இந்த பாதுகாப்பு தேவவல்லமையினால் உண்டாயிருக்கிறது. கள்ளக்கிறிஸ்துக்களாலும், கள்ளத்தீர்க்கதரிசிகளாலும் தேவனுடைய பாதுகாப்பை தகர்க்கமுடியாது.
இயேசுகிறிஸ்து இந்த எச்சரிப்பின் சத்தத்தை மறுபடியுமாக கூறுகிறார். ""இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்'' (மத் 24:25) என்று கூறுகிறார். கிறிஸ்துவின் எச்சரிப்புக்கு நாம் செவிகொடுத்து, மிகுந்த எச்சரிப்போடு ஜீவிக்கவேண்டும். நமது விசுவாசத்தை காத்துக்கொள்ளவேண்டும். கிறிஸ்துவின் வார்த்தையில் நமது விசுவாசம் நிலைத்திருக்கவேண்டும். அவர் எல்லாக் காரியங்களையும் நமக்கு முன்னதாக அறிவித்திருக்கிறார். இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் அந்த பொய் வார்த்தைகளை நம்பக்கூடாது. ஏனெனில் என்ன சம்பவிக்கும் என்பதை இயேசுகிறிஸ்து முன்னதாகவே நமக்கு அறிவித்திருக்கிறார்.
இயேசுகிறிஸ்து தமது பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். எங்கே இரண்டு பேர் மூன்றுபேர் தம்முடைய நாமத்தில் கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவில் கிறிஸ்துவின் ஆவிக்குரிய பிரசன்னம் இருக்கிறது. இந்த விசுவாசத்தைவிட்டு நாம் விலகிப்போய்விடக்கூடாது. நம் மத்தியில் இருக்கும் இயேசுகிறிஸ்துவை அங்கீகரியாமல், அவரை வேறு எங்கும் தேடிப்போகக்கூடாது.
நமது விசுவாசம் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்கவேண்டும். தேவன் கூறிய எல்லா வார்த்தைகளையும் நாம் அப்படியே விசுவாசிக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், மற்றவர்களுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, கர்த்தரை தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கக்கூடாது. ""அதோ வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள். இதோ அறைவீட்டிற்குள் இருக்கிறாரென்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்'' (மத் 24:26).
புதிய கிறிஸ்துவையும், புதிய சுவிசேஷத்தையும் நமக்கு யாராவது அறிமுகப்படுத்தினால் அவர்களை பின்பற்றக்கூடாது. பலர் புதுமையை நாடி அங்கும் இங்கும் அலைகிறார்கள். முடிவில் தேவதூஷணம் என்னும் கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்கள். மெய்யான கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையையும் நாம் பின்பற்றுவதில் மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டும்.
முடிவு உடனே வராது
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது (மத் 24:6).
தேசங்கள் மத்தியில் நடைபெறப்போகும் யுத்தங்களைப்பற்றி இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார். இயேசுகிறிஸ்து இந்த பூமியில் பிறந்தபோது இங்கு சந்தோஷமும் சமாதானமும் உண்டாயிற்று. அவருடைய நாமம் சமாதானப்பிரபு என்பதாகும். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தமது உபதேசத்தில் ""நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ, சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன்'' (லூக் 12:51) என்று கூறியிருக்கிறார். யுத்தங்களால் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை தடைபண்ணமுடியாது. குழப்பமான காலங்களிலும், பிரச்சனையான வேளைகளிலும்கூட இயேசுகிறிஸ்துவின் நகரமும், அவருடைய அலங்கங்களும் கட்டியெழுப்பப்படும்.
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள் என்று இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார். யுத்தங்கள் வரும்போது அதைப்பற்றிய செய்திகளையும் நாம் கேள்விப்படுவோம். இது மிகவும் பயங்கரமான செய்தியாக இருக்கும். நமது இருதயத்திற்கு கலக்கமான செய்தியாக இருக்கும். தேசத்தில் எவ்வளவுதான் சமாதானம் இருந்தாலும், யுத்தத்தைப்பற்றிய செய்தியை கேட்கும்போது அந்த தேசத்தில் கலக்கம் உண்டாகிவிடும்.
சுவிசேஷத்தின் செய்தியை கேட்க மறுப்பவர்களுக்கு இதுதான் சம்பவிக்கும். அவர்கள் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவார்கள். சுவிசேஷம் சமாதானத்தின் செய்தி. சுவிசேஷத்தை கேட்க விரும்பவில்லையென்றால், அவர்களுடைய காதுகளில் யுத்தத்தின் சத்தம் தொனிக்கும். நாம் சுவிசேஷத்தைக் கேட்கவேண்டுமா அல்லது யுத்தத்தின் செய்தியை கேட்கவேண்டுமா என்று நாமே தீர்மானம்பண்ணவேண்டும்.
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு கூறுகிறார். நாம் யுத்தத்தை எதிர்பார்க்கவேண்டும். யூதர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இதன் மூலமாக தேவனுடைய நீதியும், இரட்சகருடைய மகிமையும் உறுதிபண்ணப்படும். ஆகையினால் யுத்தங்களைப்பற்றி இயேசுகிறிஸ்து கூறும்போது ""இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே'' என்று கூறிவிடுகிறார். நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் காரியங்களை தேவன் நிறைவேற்றுகிறார். சம்பவிக்கவேண்டியவை சம்பவித்தே தீரும். ஆகையினால் நாம் கலங்காதிருக்க வேண்டும். ""அசையாதவைகள் நிலைத்திருக்க தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள் போல் மாறிப்போம்'' (எபி 12:27).
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவது முடிவு அல்ல. முடிவு உடனே வராது. முடிவு யுத்தத்தைவிட மிகவும் மோசமானதாக இருக்கும். ஆகையினால் நாம் மிகவும் பயங்கரமானதை எதிர்பார்க்கவேண்டும். அந்த உபத்திரவம் இன்னும் ஆரம்பமாகவில்லை. அந்த உபத்திரவத்தின் முடிவும் இன்னும் ஆரம்பமாகவில்லை. மிகவும் கொடிய காலம் இனிமேல் வரப்போகிறது. அந்த செய்திகளைப் பற்றி கேள்விப்படும்போது நாம் கலங்காதபடி எச்சரிக்கையாயிருக்கவேண்டும். தற்காலத்து பாடுகளில் மனம் சோர்ந்துபோய் மூழ்கிவிடக்கூடாது. நமக்கு இருக்கிற பலத்தோடே, தேவனுடைய கிருபையினால், நமக்கு முன்பாக இருக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் சந்தித்து, முன்னேறிச் செல்லப்பழகிக் கொள்ளவேண்டும்.
காலால் நடக்கிறவர்களோடு நம்மால் சேர்ந்து நடக்கமுடியவில்லையென்றால், குதிரைகளோடு நம்மால்கூட ஓடமுடியாது. சிறிய குளத்திலுள்ள தண்ணீருக்கே நாம் பயந்தால் யோர்தான் பெருகிவரும்போது அதை நம்மால் சமாளிக்கமுடியாது. ""நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படி சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்?'' (எரே 12:5).
வேதனைகளுக்கு ஆரம்பம்
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் (மத் 24:7,8).
இஸ்ரவேல் ஜனத்தார் மீது விரைவில் வரப்போகும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்களில் மேலும் சிலவற்றை இயேசுகிறிஸ்து இங்கு வெளிப்படுத்துகிறார். பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் அவர்களுக்கு உண்டாகும். தாவீதின் காலத்தில் தேவன் இந்த மூன்று வாதைகளில் ஏதாவது ஒன்றை தெரிந்துகொள்ளுமாறு தாவீதிடம் கூறினார். இந்த மூன்றுமே மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கும் வாதைகள். ஆகையினால் இவற்றில் எதை தெரிவுசெய்வது என்று தெரியாமல் தாவீது குழம்பியிருந்தார்.
இஸ்ரவேல் தேசத்தார் போதுமான அளவு யுத்தங்களை சந்தித்திருக்கிறார்கள். மூன்றாம் முத்திரையில் கருப்பு குதிரையின் மூலமாக பஞ்சம் வெளிப்படுத்தப்படுகிறது (வெளி 6:5,6). எருசலேம் முற்றிக்கையிடப்பட்டபோது அங்கு மிகப்பெரிய பஞ்சம் உண்டாயிற்று. நான்காம் முத்திரையில், மங்கின நிறமுள்ள குதிரையின் மூலமாக கொள்ளைநோய் வெளிப்படுத்தப்படுகிறது (வெளி 6:7,8).
பூமியதிர்ச்சிகள் பல இடங்களில் உண்டாகும். பூமியதிர்ச்சியின் மூலமாக பூமியின் பல பாகங்கள் அசைக்கப்படும். ஏராளமானோர் மடிந்துபோவதற்கு பூமியதிர்ச்சி காரணமாக இருக்கும். இதனால் உண்டாகும் பயங்கரம் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த வாதைகளெல்லாம் இஸ்ரவேல் தேசத்தாருக்கு வரும் என்று இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார். இவற்றின் மூலமாக வேதனைகள் அதிகமாக இருந்தாலும், இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் மாத்திரமேயாகும்.
பகைக்கப்படுவீர்கள்
அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள் (மத் 24:9).
தம்முடைய ஊழியக்காரர்களுக்கும், தம்முடைய ஜனங்களுக்கும் வரப்போகும் உபத்திரவங்களை இயேசுகிறிஸ்து இங்கு முன்னறிவிக்கிறார். தேவதூஷணம் அதிகரிக்கும். மார்க்கக்காரியங்களில் ஜனங்களுடைய ஈடுபாடு வெகுவாக குறைந்துபோகும்.
தம்முடைய ஜனங்களின் உபத்திரவங்களை முன்னறிவிக்கும்போது இங்கு சிலுவை வெளிப்படுத்தப்படுகிறது. எல்லோருமே வருங்காலங்களை நோக்கிப்பார்க்க ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். நமக்கு பாடுகளும் வேதனைகளும், உபத்திரவங்களும் வருங்காலத்தில் வரும் என்றால், அது எப்படிப்பட்டதாகும் என்று சிந்தித்துப்பார்ப்பார்கள். தம்முடைய சீஷர்கள் இனிமேல் அனுபவிக்கப்போகும் உபத்திரவங்களை இயேசுகிறிஸ்து இங்கு முன்னறிவிக்கிறார். அவர்கள் இதுவரையிலும் அனுபவித்த பாடுகள் மிகவும் சொற்பம். இனிமேல் அனுபவிக்கப்போகும் பாடுகள் அநேகம். ஆகையினால் அந்த பாடுகளை குறித்து இயேசுகிறிஸ்து பல சமயங்களில் தம்முடைய சீஷர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.
இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள். சங்கிலிகளால் கட்டப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவார்கள். கொலை செய்யப்படுவார்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் அவருடைய சீஷர்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவார்கள். இந்த உலகம் பொதுவாகவே கிறிஸ்தவ மார்க்கத்தாருக்கு விரோதமாக எழும்பி நிற்கிறது. இந்த விரோதம் அதிகரிக்கும். கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கு பாடுகளும் உபத்திரவங்களும் அதிகரிக்கும். இதன் மூலமாக பலர் கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாக மரிக்கவேண்டியது வரும். கிறிஸ்துவின் நிமித்தமாக இரத்தசாட்சியாக மரிப்பது அவருடைய பிள்ளைகளுக்கு மிகப்பெரிய சிலாக்கியம். இந்த சிந்தனை அவர்களுக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுக்கிறது.
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே
அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் (மத் 24:10-13).
தம்முடைய பிள்ளைகளுக்கு வரப்போகும் மூன்றுவிதமான உபத்திரவங்களை இயேசுகிறிஸ்து இங்கு முன்னறிவிக்கிறார். அவையாவன : 1. அநேகர் இயேசுகிறிஸ்துவைவிட்டு பின்வாங்கிப்போவார்கள். 2. ஒருவரையொருவர் பகைத்து, காட்டிக்கொடுப்பார்கள். 3. அக்கிரமம் மிகுதியாகும். அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
இயேசுகிறிஸ்துவை பின்பற்றும்போது, நம்மைநாமே வெறுத்து, நமது சிலுவையை சுமந்துகொண்டு நாம் அவரைப்பின்பற்றிச் செல்லவேண்டும். சிலுவைப்பாதை எளிதான பாதையல்ல. நாம் கிரயம் செலுத்தவேண்டிய பாதை. இதனால் அநேகர் சிலுவைப்பாதையில் இடறலடைகிறார்கள். கிறிஸ்துவை விட்டு பின்வாங்கிப்போகிறார்கள். இறுதியில் இவர்கள் கிறிஸ்துவையே மறுதலித்துவிடுகிறார்கள். கிறிஸ்துவைவிட்டு மறுதலிப்பது புதுமையான காரியமல்ல. நீதியின் பாதையை நன்றாக தெரிந்தவர்கள்கூட பல சமயங்களில் அதைவிட்டு விலகிப்போய்விடுகிறார்கள்.
நமக்கு பாடுகள் வரும்போது அந்த பாடுகள் நம்மை அசைக்கிறது. பாடுகளின் காலம் நம்மை அசைக்கும் காலமாக இருக்கிறது. புயல்காற்றில் மரங்கள் அசைவதுபோல பாடுகளில் நாம் அசைக்கப்படுகிறோம். ஒரு சில மரங்கள் புயல்காற்றில் கீழே சாய்ந்தாலும், மாரிக்காலம் வரும்போது அவை மறுபடியும் தழைத்து முளைக்கும். மறுபடியும் எழும்பி நிற்கும்.
இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களில் அநேகர் நிலையில்லாமல் இருக்கிறார்கள். காலத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப தங்களுடைய நிலமையை மாற்றுகிறார்கள். எல்லாம் சாதகமாக இருக்கும்போது கிறிஸ்துவை சந்தோஷமாக பின்பற்றுகிறார்கள். பாடுகளும் வேதனைகளும் வரும்போது கிறிஸ்துவைவிட்டு விலகிப்போய்விடுகிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் உபத்திரவங்களினால், அவருடைய பிள்ளைகளில் அநேகர் இடறலடைகிறார்கள். ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கிறார்கள். ஒருவரையொருவர் பகைக்கிறார்கள். கிறிஸ்துவை விட்டு விலகிப்போகிறவர்கள், மற்ற விசுவாசிகளையும் அவரைவிட்டு விலகிப்போகுமாறு தொந்தரவு பண்ணுகிறார்கள். மற்ற விசுவாசிகளை காட்டிக்கொடுத்து, அவர்களை பகைத்து, அவர்களையும் இயேசுவின் அன்பை விட்டு விலகிப்போகச் செய்கிறார்கள். கிறிஸ்துவைவிட்டு பின்வாங்கிப்போனவர்கள் தான் கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய சத்துருக்களாகவும், அவர்களை அதிகமாக துன்புறுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
உபத்திரவ வேளையில்தான் ஒருவருடைய உண்மையான சுபாவத்தை நாம் கண்டுகொள்ள முடியும். ஆடுகள் மத்தியில் ஓநாய்கள் வேஷம் தரித்து உள்ளே வரும். ஓநாய்கள் ஆட்டுத்தோல்களைப் போர்த்துக்கொண்டிருக்கும். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் ஓநாய்கள். உபத்திரவக்காலத்தில் ஆடுகளையும் ஓநாய்களையும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ஆட்டுக் கூட்டத்திற்குள் ஓநாய்கள் வெளிப்படும்போது, ஆடுகளுக்குள் குழப்பம் உண்டாகும். ஆடுகள் ஒன்றையொன்று காட்டுக்கொடுத்து, ஒன்றையொன்று பகைக்கும். உபத்திரவத்தின்காலம் மெய்யான சுபாவத்தை கண்டுபிடிக்கும் காலமாகும்.
உபத்திரவக்காலத்தில் அக்கிரமம் மிகுதியாகும். அநேகருடைய அன்பு தணிந்துபோகும். உலகத்தில் இப்போதே அக்கிரமம் மிகுதியாகத்தான் இருக்கிறது. இந்த அக்கிரமத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். இதன் விளைவாக அநேகருடைய அன்பும் தணிந்துபோகும். தேவபக்திக்கு அன்பே ஆதாரம். அன்பு தணிந்துபோகும்போது பக்தியும் குறைந்துபோகும். அக்கிரமமும், துன்மார்க்கமும் அதிகரிக்கும்போது, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் சோர்ந்துபோவார்கள். சகோதரர்களுக்குள்ளே சிநேகத்தை காண்பிக்கமாட்டார்கள். உபத்திரவமும், அக்கிரமமும், பாடுகளும் அதிகரிக்கும்போது, ஊழியக்காரர்களுடைய வார்த்தையில் சோர்வு காணப்படும். கிருபை குறைந்து, அன்பு குறைந்து சோர்ந்து போயிருப்பார்கள். ஒருவரையொருவர் சந்தேகத்தோடே பார்ப்பார்கள். அந்நியோநியமாக யாரோடும் பழகமாட்டார்கள்.
அன்பு தணிந்துபோனாலும், எல்லோருடைய அன்பும் தணிந்துபோவதில்லை. அநேகருடைய அன்பு மாத்திரமே தணிந்துபோகிறது. அன்பு தணிந்துபோகாத தேவஜனங்களும் இருப்பார்கள். எல்லாக்காலத்திலுமே, தேவன் தமக்கென்று ஒரு கூட்டம் ஜனத்தை வைத்திருப்பார். அவர்கள் தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்வார்கள். பக்திவைராக்கியமாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட உபத்திரவங்கள் வந்தாலும் தங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப்போகமாட்டார்கள். தன்னுடைய காலத்தில் தான் மாத்திரமே கர்த்தருக்கு வைராக்கியமாக இருப்பதாக எலியா நினைத்தார். ஆனால் இந்தக்காலத்திலும் கர்த்தர் தம்மை ஆராதிக்கும் ஒருக்கூட்டம் ஜனத்தை தமக்காக வேறு பிரித்து வைத்திருந்தார்.
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்து மாத்திரமே போகும். அந்த அன்பு மரித்துப்போகாது. குறைந்துபோகும். ஒரு மரம் கீழே சாய்ந்தாலும், •பூமிக்குள் இருக்கும் அந்த மரத்தின் வேர்களில் ஜீவன் இருக்கும். மாரிக்காலம் வரும்போது, அது மறுபடியும் முளைத்து, வசந்தகாலத்தில் தழைக்கும். அதுபோலவே குறைந்துபோகும் அன்பு ஒருக்காலத்தில் மறுபடியும் பெருகும்.
அக்கிரமம் மிகுதியானாலும், அநேகருடைய அன்பு தணிந்துபோனாலும், அநேகர் இடறலடைந்தாலும், அநேகர் ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்தாலும், அநேகர் ஒருவரையொருவர் பகைத்தாலும், முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். கர்த்தருடைய பிள்ளைகளில் பலர், உபத்திரவத்தின் வழியாக கடந்து வந்தாலும் முடிவுபரியந்தம் நிலைத்து நிற்கிறார்கள். அவர்கள் இரட்சிப்படுவார்கள். உபத்திரவங்களை சகித்துக்கொண்டு முடிவுபரியந்தம் நிலைத்துநிற்பவர்களுக்கு கர்த்தர் ஆறுதலான வார்த்தைகளை கூறுகிறார். நீடிய பொறுமையுள்ளவன் இந்த கிரீடத்தை தரித்துக்கொள்கிறான். இரட்சிப்பு தேவனுடைய இலவசமான கிருபை. இந்த இரட்சிப்பை நாம் அணிந்துகொள்ளவேண்டும். முடிவுபரியந்தம் நிலைநிற்கும்போது நாம் இரட்சிக்கப்படுவோம். மகிமையின் கிரீடம் நமக்கு தரிப்பிக்கப்படும். உபத்திரவப்படுத்துகிறவர்களோடு அரண்மனையில் வாசம்பண்ணுவதைவிட, உபத்திரவப்படுகிறவர்களோடு இரத்தசாட்சியாக மரிப்பது நமக்கு சிலாக்கியம்.
அப்போது முடிவு வரும்
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் (மத் 24:14).
சுவிசேஷம் உலகமெங்கும் பிரசங்கிக்கப்படும். இந்த சுவிசேஷம் ராஜ்ஜியத்தினுடைய சுவிசேஷம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் சுவிசேஷம் கிருபையின் ராஜ்ஜியத்தை வெளிப்படுத்துகிறது. மகிமையின் ராஜ்ஜியத்திற்குள் நம்மை வழிநடத்துகிறது. இந்த சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும். தேவனுடைய சித்தமும், அவருடைய சிந்தையும் இந்த சுவிசேஷத்தின் மூலமாக சாட்சியாக பிரசங்கிக்கப்படுகிறது.
எருசலேம் அழிந்துபோவதற்கு முன்பாக, ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் பூலோகமெங்கும் பிரசங்கிக்கப்படும். சுவிசேஷத்தை கேட்காதவர்களுக்கெல்லாம் அதைக்கேட்கும் சிலாக்கியம் கிடைக்கும். அக்காலத்தில் அறியப்பட்டிருந்த எல்லா தேசங்களுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும். இயேசுகிறிஸ்து மரித்து நாற்பது வருஷங்களுக்குள் சுவிசேஷத்தின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்தில் கடைசிவரைக்கும் சென்றிருக்கிறது (ரோம 10:18). அப்போஸ்தலர் பவுல் சுவிசேஷத்தின் நற்செய்தியை எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் வரையிலும் பிரசங்கம்பண்ணினார். மற்ற அப்போஸ்தலர்களும் சும்மாயிராமல் அவர்களும் பல தேசங்களுக்கும் சென்று சுவிசேஷச் செய்தியை பிரசங்கம்பண்ணினார்கள். எருசலேமில் விசுவாசிகளுக்கு மிகுந்த உபத்திரவம் உண்டாயிற்று. இதனால் அவர்கள் பூமியெங்கும் சிதறிப்போனார்கள். சிதறிப்போனவர்கள் எங்கும் திரிந்து சுவிசேஷ வசனத்தை பிரசங்கித்தார்கள் (அப் 8:1-4).
உபத்திரவம், பாடுகள் , வேதனைகள் ஆகியவற்றின் மத்தியில் ராஜ்யத்தின் சுவிசேஷம் மிகுந்த வல்லமையோடு பலவந்தமாக பிரசங்கிக்கப்படுகிறது. சபையின் சத்துருக்கள் பற்றியெரிந்தாலும், சபைக்கு ஆதரவாக இருக்கிறவர்கள் தணிந்துபோனாலும், சுவிசேஷம் தொடர்ந்து பிரசங்கிக்கப்படுகிறது. கர்த்தரை தங்கள் தேவனாக ஏற்றுக்கொண்டிருக்கும் ஜனங்கள், அவருடைய வார்த்தையினால் உபதேசிக்கப்பட்டு, பெலனடைந்து, சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு பிரசங்கிக்கிறார்கள்.
சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும். அப்போதுதான் முடிவுவரும். அதுவரையிலும் முடிவு வராது. தேவனுடைய ரகசியங்களெல்லாம் எல்லாருக்கும் அறிவிக்கப்படும். சபையின் ஊழியம் நிறைவடையும். அப்போதுதான் முடிவுவரும். அதுவரையிலும் முடிவு வராது.
யூதஜனங்கள்மீதும், அவர்களுடைய பட்டணங்கள்மீதும், தேவாலயத்தின்மீதும், யூததேசத்தின்மீதும் வரப்போகும் அழிவை இயேசுகிறிஸ்து இங்கு முன்னறிவிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் அவருடைய சீஷர்களுக்கு உதவியாக இருக்கிறது. அவை அவர்களுக்கு ஆறுதலாகவும், அவர்களை நெறிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. இயேசு தமது சீஷர்களுக்கு எச்சரிப்பின் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்.
செப்துவஜிந்த் பழைய ஏற்பாட்டில் சுவிசேஷம் என்னும் வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிற விதம்
1. எந்த நற்செய்தியும் (1சாமு 31:9; 2சாமு 1:20; 1நாளா 10:9)
2. தேவனுடைய கிருபை (சங் 36:10; சங் 96:2)
3. மேசியாவின் ஆசீர்வாதங்கள் (ஏசா 40:9; ஏசா 61:1)
புதிய ஏற்பாட்டில் சுவிசேஷம் என்னும் வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிற விதம்
1. தேவனுடைய ராஜ்யமும், பரலோக ராஜ்யமும் (மத் 4:23; மத் 9:35; மத் 24:14; மாற்கு 1:14)
2. தேவன் (ரோமர் 1:1; ரோமர் 15:16)
3. இயேசு கிறிஸ்து (மாற்கு 1:1; ரோமர் 1:16; ரோமர் 15:29; 1கொரி 9:12-18)
4. இரட்சிப்பு (மாற்கு 16:15; லூக்கா 4:18; எபே 1:3)
5. தேவனுடைய கிருபை (அப் 20:24)
6. சமாதானம் (ரோமர் 10:15; எபே 6:15)
7. வாக்குத்தத்தங்கள் (எபே 3:6; எபி 8:6)
8. சத்தியம் (எபே 1:13; கொலோ 1:5)
9. விசுவாசம் (பிலி 1:27)
10. நம்பிக்கை (கொலோ 1:23)
11. நித்தியம் (2தீமோ 1:10)
12. புதிய உடன்படிக்கையின் பொதுவான ஆசீர்வாதங்கள் (மாற்கு 16:15; கலா 1:11; கலா 3:8)
சுவிசேஷம் ஒன்றே. மத்தேயுவிலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் உள்ள செய்தியே சுவிசேஷம். இதற்கு யூதரும், புறஜாதியாரும் கீழ்ப்படிய வேண்டும். (மத் 28:20; அப் 1:1-2; ரோமர் 10:12; 1கொரி 12:13)
ராஜ்யத்தின் சுவிசேஷம் என்பது வரப்போகிற ராஜ்யத்தையும் குறிக்கும். அதேசமயத்தில் இரட்சிப்பையும் கிறிஸ்துவின் நற்செய்தியினால் வரும் எல்லா ஆசீர்வாதங்களையும் குறிக்கும். (மத் 6:33; மத் 13:11-50; மத் 18:1-35)
ஜாதிகள் என்பது ஒவ்வொரு தேசத்திலுமுள்ள ஒவ்வொரு தனிமனிதர் என்று பொருள்படாது. ஏனெனில் ஆயிர வருஷ அரசாட்சி வரும்வரையிலும் பலர் சுவிசேஷத்தைக் கேள்விப்படமாட்டார்கள்.
எல்லா ஜாதிகளுக்கும் ராஜ்யத்தின் சுவிசேஷம் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அப்போது முடிவு வரும். இயேசு கிறிஸ்து ஆரம்பித்த சுவிசேஷ ஊழியம். பிரசங்கம் பண்ணுதல், உபதேசம் பண்ணுதல், நோய்களைக் குணமாக்குதல் ஆகியவை சுவிசேஷ ஊழியத்தில் அடங்கும். ஆதித்திருச்சபையாரும் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி கடைசிக் காலத்தில் தாராளமாகப் பொழியும். அப்போது புதிய ஏற்பாட்டின் சுவிசேஷ ஊழியம் முழுமையாக நடைபெறும் (அப் 2:16-21)
பாழாக்குகிற அருவருப்பு
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்-யிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, (மத் 24:15).
பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து வேதபண்டிதர்கள் பலவிதமாக வியாக்கியானம் பண்ணுகிறார்கள். பரிசுத்த தேவாலயத்தில் ரோமப்பேரரசின் அதிபதிகளில் சிலர் ஒரு விக்கிரகத்தை நிறுவியதாகவும் இதுவே அருவருப்பு என்றும் சிலர் வியாக்கியானம் பண்ணுகிறார்கள். தங்களுடைய தேவாலயத்தில் விக்கிரகங்களை ஸ்தாபிப்பது யூதருக்கு அருவருப்பான காரியம். பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின்பு, யூதருடைய தேவாலயத்தில் இதுபோன்ற அருவருப்பு இதுவரையிலும் சம்பவிக்கவில்லை.
வேதபண்டிதர்களில் சிலர் இந்த வசனத்திற்கு ஒத்த, வேறொரு வேதவசனத்தை பயன்படுத்தி இதை வியாக்கியானம் பண்ணுகிறார்கள். ""எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்'' (லூக் 21:20). எருசலேம் யூதருக்கு பரிசுத்தமான நகரம். கானான் யூதருக்கு பரிசுத்தமான தேசம். கானான் தேசத்திலுள்ள மோரியா மலை யூதருக்கு மிகவும் பரிசுத்தமானது. இந்த மலையின்தான் எருசலேம் பட்டணம் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு கர்த்தருக்கு தேவாலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. ஆகையினால் யூதர்கள் இந்த ஸ்தலத்தை பரிசுத்தமானதாக கருதுகிறார்கள். எருசலேம் நகரத்தைச் சுற்றிலும் ரோமப்பேரரசின் சேனை சுற்றிலும் நிறுத்தப்படுவது, அவர்களை பாழாக்கும் அருவருப்பாக கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தை தானியேல் தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். மேசியாவைக் குறித்தும், அவருடைய ராஜ்யத்தைக்குறித்தும், பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லா தீர்க்கதரிசிகளையும்விட, தானியேல் தீர்க்கதரிசியே அதிகமாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் தேவாலயத்தின் அழிவும், எருசலேமின் அழிவும் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து இங்கு முன்னறிவித்திருப்பதை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் உறுதிபண்ணுகின்றன. இயேசுகிறிஸ்து தமது உபதேசத்தினால் நியாயப்பிரமாணத்தை உறுதிபண்ணுகிறார். தம்முடைய முன்னறிவிப்புக்களினால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை உறுதிபண்ணுகிறார். ஆகையினால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களையும், இயேசுகிறிஸ்துவின் முன்னறிவிப்புக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து தியானம்பண்ணும்போது ஆவிக்குரிய சத்தியங்கள் தெளிவாகும்.
இயேசுகிறிஸ்து இங்கு முன்னறிவித்திருக்கும் செய்தி யூதருக்கு புரியாத ரகசியமாக இருக்கிறது. ஆகையினால் இயேசுகிறிஸ்து பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து கூறும்போது ""வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்'' என்று கூறுகிறார். வேதவாக்கியங்களை வாசிக்கிறவர்கள் அதை புரிந்துகொள்வதற்கும் முயற்சிபண்ணவேண்டும். புரிந்துகொள்ளாமல் வாசிப்பதினால் ƒபிரயோஜனமில்லை. நாம் புரிந்து கொள்ளாத சத்தியங்களை நம்மால் பயன்படுத்த முடியாது. புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் ""வெளிப்பாடு'' என்று அழைக்கப்படுகிறது. இது ரகசியமானதல்ல. வெளிப்படுத்தப்பட்டவை நமக்கே உரியவை. ஆகையினால் வேதவாக்கியங்களை தாழ்மையோடும், உற்சாகமாகவும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
மத் 24:15-ஆவது வசனத்திலிருந்து வரும் தீர்க்கதரிசனம் கடைசி மூன்றரை வருஷங்களில் நடைபெறும். தானியேல் 70 ஆவது வாரத்தைப் பற்றியும், அந்திக் கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் தீர்க்கதரிசனமாகக் கூறியிருக்கிறான். அவன் யூதேயாவிற்கு வந்து தனது தலைநகரமாக எருசலேமையும், தனது கட்டடமாக யூதருடைய தேவாலயத்தையும் கைப்பற்றிக்கொள்வான்.
இந்தக் காலத்தின் கடைசி மூன்றரை வருஷங்களில் எருசலேமிலுள்ள யூதருடைய தேவாலயத்தில் அந்திக் கிறிஸ்துவின் சொரூபம் இருக்கும். இதுவே பாழாக்குகிற அருவருப்பு எனப்படுகிறது.
நீங்கள் ஓடிப்போவது
யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்கா திருக்கக்கடவன். வய-ல் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஒய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள் ( மத் 24:16-20).
தானியேல் தீர்க்கதரிசி பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து கூறியிருக்கிறார். இயேசுகிறிஸ்து அந்த தீர்க்கதரிசனத்தை இங்கு மேற்கோளாக கூறுகிறார். வேதவாக்கியங்களை வாசிக்கிறவர்கள் அதன் பொருளை சிந்தித்துப்பார்க்கவேண்டும். சிந்தித்துப்பார்க்கிறவர்கள் பாழாக்குகிற அருவருப்பு சம்பவிக்கும்போது, தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு என்னசெய்யவேண்டும் என்பதையும் சிந்தித்துப்பார்ப்பார்கள். இந்த சம்பவத்தின்போது அவர்கள் செய்யவேண்டிய காரியங்களைக்குறித்து இயேசுகிறிஸ்து பல ஆலோசனைகளைக் கூறுகிறார்.
""யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்'' எருசலேமின் அழிவை இயேசுகிறிஸ்து இங்கு முன்னறிவிக்கிறார். அந்த அழிவை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. இருதயத்தில் எவ்வளவுதான் வலிமையுள்ளவர்களாக இருந்தாலும், இந்த பேரழிவை அவர்களால் தாங்கமுடியாது. எதிர்த்து நிற்கமுடியாது. ஆகையினால் இந்த அழிவிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் எருசலேமை விட்டு மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும். எருசலேம் அழியும்போது அந்த நகரத்தில் இருப்பதினால் யாருக்கும் எந்த பிரயோஜனமுமில்லை. ஒவ்வொருவரும் இந்த அழிவிலிருந்து தப்பிப்பதற்காக, எருசலேம் நகரத்தைவிட்டு ஓடிப்போகவேண்டும்.
இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு இந்த ஆலோசனையை கூறுகிறார். அவர்கள் என்ன செய்யவேண்டுமென்று முன்னறிவிக்கிறார். லோத்து சோதோமைவிட்டு வேகமாக ஓடிப்போனதுபோல, யூதேயாவில் இருக்கிறவர்களும், எருசலேம் நகரத்தைவிட்டு மலைகளுக்கு வேகமாக ஓடிப்போகவேண்டும். அழிவு வரும்போது அந்த அழிவிலிருந்து தப்பிப்பதற்காக ஓடிப்போவது கோழைத்தனமல்ல. இது ஞானமுள்ள செயல் என்று கர்த்தர் அங்கீகரிக்கிறார். நமக்கு ஆபத்துக்களும், பேரழிவுகளும் வரும்போது, இவற்றிலிருந்து தப்பிப்பதற்கு வாய்ப்புக்களும் வழிகளும் கிடைக்குமென்றால் அவற்றை நாம் பயன்படுத்தவேண்டும். நேர்மையான வழிகளை பயன்படுத்தி ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக்கொள்வது நியாயமான காரியம். இது நம்முடைய கடமை. ஆபத்துக்களில் சிக்கிக்கொண்டு கர்த்தரை சோதித்துப் பார்க்கக்கூடாது. தப்பிப்பதற்கு கர்த்தர் வழியை திறந்து கொடுக்கும்போது, அதை பயன்படுத்தி தப்பித்துச் செல்லவேண்டும். தப்பித்துச் செல்கிறவன் மறுபடியும் யுத்தம்பண்ண வருவான். அழிந்து போகிறவனால் ஒன்றும் செய்யமுடியாது.
எருசலேம் அழியும் போது அங்குள்ள ஜனங்களின் ஜீவன் ஆபத்தில் சிக்கியிருக்கும். ஆகையினால் வீட்டின் மேல் இருக்கிறவன், எருசலேமுக்கு ஆபத்து வரும்போது, தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். ஏதாவது ஒரு வழியில் இறங்கி தப்பித்துக்கொள்வதற்கு வழியை தேடவேண்டும். இதுபோலவே வயலில் இருக்கிறவனும், எருசலேமுக்கு அழிவு வரும்போது, தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு திரும்பாதிருக்கக்கடவன். தங்களுடைய சொந்த உடமைகளை பாதுகாப்பதற்குப் பதிலாக, தங்கள் ஜீவன் தப்பிக்க ஓடிச்செல்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
தன்னுடைய வீட்டில் எதையாகிலும் எடுப்பதற்காக இறங்கி வரும் நேரத்தில் ஆபத்து அவனுக்கு வந்துவிடும். தாமதிக்கும் ஒவ்வொரு க்ஷணமும் அவனுக்கு ஆபத்தானது. மரணம் வாசற்படியில் காத்திருக்கிறது. காலத்தை பிரயோஜனப்படுத்தினால் தப்பித்துக்கொள்ளலாம். தாமதப்படுத்தினால் மரணம் நேரிடும்.
ஜீவனுக்கு தப்பித்து ஓடும்போது, அவனுடைய பாரம் குறைவாகவே இருக்கவேண்டும். தன் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு ஓடுகிறவனுக்கு பாரம் அதிகமாக இருக்கும். விரைவாக ஓடமுடியாது. தன்னுடைய வஸ்திரங்களையும், உடமைகளையும், பொன்னையும், பொருளையும் பாதுகாக்கவேண்டுமென்று, அவற்றை எடுத்துக்கொண்டு ஓடுகிறவன், அவற்றையும் பாதுகாக்கமாட்டான், தன் ஜீவனையும் பாதுகாக்கமாட்டான்.
சீரியர்கள் தீவிரித்து ஓடுகையில் அவர்கள் தங்கள் வஸ்திரங்களையும், தட்டுமுட்டுக்களையும் எறிந்துபோட்டார்கள். வழியெல்லாம் அவை நிறைந்திருந்தது. அவர்கள் தங்கள் வஸ்திரங்களையும் தட்டுமுட்டுக்களையும் பாதுகாக்கவேண்டுமென்று நினைத்திருந்தால் தங்களுடைய ஜீவனை இழந்திருப்பார்கள். ஜீவன் போனபின்பு வஸ்திரங்களும் தட்டுமுட்டுக்களும் பிரயோஜனமற்றவை. நாம் ஓடும்போது தேவனுடைய கிருபையை நமது இருதயத்தில் சுமந்துகொண்டு ஓடவேண்டும். நாம் எல்லாவற்றையும் இழந்துபோனாலும், தேவனுடைய கிருபை நம்மோடுகூட இருக்கும்.
பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் முன்னறிவிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் 12 சீஷர்களில், யோவானைத்தவிர வேறு யாரும் இந்த பாழாக்குகிற அருவருப்பு சம்பவிக்கும்போது உயிரோடில்லை. தங்கள் ஊழியத்தினிமித்தமாக அவர்கள் பல தேசங்களுக்கு பிரயாணமாக சென்றுவிட்டார்கள். எருசலேமிலும் யூதேயாவிலும் இருந்த கிறிஸ்தவர்கள் பாழாக்குகிற அருவருப்பின் அழிவை எதிர்பார்த்து, ""பெல்லா'' என்னும் பட்டணத்தில் பாதுகாப்பாக குடியேறினார்கள். இந்த பட்டணம் யோர்தானுக்கு அக்கரையிலுள்ளது. எருசலேம் அழியும்போது ஏராளமான யூதர்கள் அதோடு சேர்ந்து அழிந்துபோனார்கள். ஆயினும் கர்த்தருடைய பிள்ளைகளோ ஒருவரும் அழிந்துபோகவில்லை.
பாழாக்குகிற அருவருப்பு சம்பவிக்கும் அந்த நாட்களில் கர்ப்பவதிகளுக்கும், பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரிக்கப்போகும்போது ""திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக் கொள்ளுங்களென்றும் சொல்லத் தொடங்குவார்கள்'' (லூக் 23:27-30) என்று கூறினார்.
எருசலேமின் ஜனங்களுக்கு பஞ்சம் மிகவும் கொடுமையான உபத்திரவமாக இருந்திருக்கும். பட்டயத்தின் அழிவு பஞ்சத்தைவிட பயங்கரமாக இருந்திருக்கும். இதைவிட பேரழிவு தங்கள் ஜீவன் தப்பிக்க ஓடிப்போகும்போது உண்டாகும். கர்ப்பவதிகளாலும், பால்குடிக்கிற பிள்ளைகளை சுமக்கும் தாய்மார்களாலும், வேகமாக தப்பித்து ஓடமுடியாது. அதிக தூரம் ஓடமுடியாது. பால்குடிக்கிற தங்கள் பிள்ளைகளை விட்டு விட்டு ஓடவும் அவர்களுக்கு மனதிராது. கர்ப்பவதிகளும், பால்கொடுக்கிற பிள்ளைகளை சுமந்துகொண்டு ஓடுகிறவர்களும், வேகமாக ஓடமுடியாமல், பாழாக்குகிற அருவருப்பில் சிக்கி அழிந்துபோவார்கள். ஆகையினால் அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ என்று இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார்.
பாழாக்குகிற அருவருப்பு எருசலேமுக்கு சம்பவிக்கும்போது அங்குள்ளவர்கள் எல்லோரும் ஓடிப்போவார்கள். அவர்கள் ஓடிப்போவது மாரிக்காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள் என்று இயேசுகிறிஸ்து அவர்களுக்கு அறிவிக்கிறார். பாழாக்குகிற அருவருப்பு வருவதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. ஆயினும் அது சம்பவிக்கவேண்டிய காலத்தைக்குறித்து சீஷர்கள் ஜெபிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு பல வேதனைகளும் உபத்திரவங்களும் உண்டாயிற்று. அப்போதெல்லாம் சீஷர்கள் ஜெபத்தில் அதிகமாக தரித்திருந்தார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. ஒவ்வொன்றும் அதனதன் காலத்தில் நடைபெறும். பாழாக்குகிற அருவருப்பு அதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் காலத்தில் சம்பவிக்கும். பாழாக்குகிற அருவருப்பை யாராலும் எதிர்த்து நிற்கமுடியாது. அதற்கு தப்பித்து ஓடிப்போகவேண்டும்.
பாழாக்குகிற அருவருப்பு நியமிக்கப்பட்டிருக்கிறது. அது நடைபெறக்கூடாது என்று எவ்வளவுதான் விசுவாசத்தோடு ஜெபித்தாலும், அது நடைபெற்றே தீரும். பாழாக்குகிற அருவருப்புக்கு தப்பித்து ஓடுவதே கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் ஆலோசனை. இந்த சூழ்நிலையில் கர்த்தருடைய கிருபைக்காக ஜெபிக்கலாம். பாழாக்குகிற அருவருப்பு சம்பவிக்கும்போது, நாம் ஓடிப்போகவேண்டும். இந்த அருவருப்பு சம்பவிக்கும் காலம் நாம் ஓடிப்போவதற்கு ஏற்ற காலமாக இருக்கவேண்டுமென்று ஜெபிக்கலாம். கர்த்தர் தமது கிருபையினால் நமக்கு சாதகமான காலத்தில் பாழாக்குகிற அருவருப்பு சம்பவிப்பதற்கு அனுமதிகொடுப்பார்.
உபத்திரவத்தின் பாத்திரம் நம்மைவிட்டு அகற்றப்படாவிட்டாலும், நாம் அதற்காக ஜெபிக்கும்போது, உபத்திரவத்தை தாங்கிக்கொள்வதற்கு கர்த்தர் நமக்கு கிருபை கொடுப்பார். உபத்திரவத்தின் உக்கிரத்தை குறைத்துப்போடுவார்.
ஒவ்வொரு சம்பவங்களையும் கர்த்தர் ஒவ்வொரு சூழ்நிலையில் நடைபெறச்செய்கிறார். நாம் கர்த்தரிடத்தில் ஜெபிக்கும்போது, அவர் அந்த சம்பவங்களை மாற்றிப்போடவில்லை யென்றாலும், அவை நடைபெறும் சூழ்நிலைகளை தமது கிருபையினால் மாற்றிப்போடுகிறார். ஆகையினால் உபத்திரவக்காலத்தில், நாம் உபத்திரவத்தை நோக்கிப்பார்க்காமல், நமக்கு கிருபை கொடுக்கும் கர்த்தரையே நோக்கிப்பார்க்க வேண்டும். பாழாக்குகிற அருவருப்பு வரும்போது தம்முடைய பிள்ளைகள் தம்மிடத்தில் ஜெபிக்கவேண்டுமென்று கர்த்தர் உற்சாகப்படுத்துகிறார். பாழாக்குகிற அருவருப்பின்போது தாங்கள் ஓடிப்போவது மாரிக்காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடி நாம் ஜெபிக்கவேண்டும். கர்த்தர் ஜெபிக்கவேண்டுமென்று கூறும்போது, எதற்காக ஜெபிக்கவேண்டுமென்றும், எப்படி ஜெபிக்கவேண்டுமென்றும் கற்றுக்கொடுக்கிறார்.
உபத்திரவம் நமக்காக காத்திருக்கும்போது, நாம் பயந்துபோகாமல், கர்த்தரைநோக்கி பார்க்கவேண்டும். அப்போது கர்த்தரின் கிருபை நமக்கு கிடைக்கும். உபத்திரவம் தூரத்திலிருக்கும்போதே, நாம் கர்த்தரிடத்தில் ஜெபிக்க ஆரம்பித்துவிடவேண்டும். பயந்துபோய், சோர்ந்துபோய் ஜெபிக்காமல் இருந்துவிடக்கூடாது.
பாழாக்குகிற அருவருப்பு வரும்போது கர்த்தருடைய பிள்ளைகள் ஓடிப்போகவேண்டு மென்பது தேவனுடைய சித்தம். பாழாக்குகிற அருவருப்புக்கு அவர்கள் எதிர்த்து நிற்கக்கூடாது. அவர்களால் எதிர்த்து நிற்கவும் முடியாது. அவர்கள் ஓடிப்போயே ஆகவேண்டும். இவர்கள் ஓடிப்போவது மாரிக்காலத்தில் சம்பவிக்கலாம். மாரிக்காலத்தில் பாதை சகதியாக இருக்கும். சீதோஷ்ணம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். பிரயாணத்திற்கு கடினமாக இருக்கும். மாரிக்காலத்தில் குடும்பத்தாரோடு ஓடிப்போவது இயலாததாக இருக்கும்.
ஓடிப்போவது நம்முடைய சரீரத்திற்கு கடினமாக இருக்கும். களைப்பைத்தரும். ஓடிப்போகும்போது யாருடைய சரீரத்திற்கும் சொகுசாகயிராது. தேவன் பாழாக்குகிற அருவருப்பை அனுமதிக்கும்போது, நம்முடைய சரீரத்தின் வசதிகளைக்குறித்து விசாரிக்கமாட்டார். தேவன் அனுமதிப்பது நிறைவேறியே தீரும். தேவனுடைய சித்தம் நிறைவேறும்போது, நமது சரீரத்தின் பிரச்சனைகளை கர்த்தரிடம் ஜெபத்தில் விண்ணப்பிக்கலாம். கர்த்தர் நமக்கு கிருபையாக உதவிபுரிவார். பாழாக்குகிற அருவருப்பு சம்பவிக்கும்போது நாம் கட்டாயம் ஓடிப்போகவேண்டும். நாம் ஓடிப்போவது மாரிக்காலத்தில் இருக்குமென்றால் நமது உபத்திரவம் அதிகரிக்கும். மாரிக்காலத்தில் நாம் ஓடிப்போகாமல் வேறுகாலத்தில் ஓடிப்போனால், நமது உபத்திரவம் ஓரளவு குறைந்திருக்கும்.
நாம் ஓடிப்போவது ஓய்வுநாளில் சம்பாவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள் என்று இயேசுகிறிஸ்து நமக்கு ஆலோசனை கூறுகிறார். ஓய்வுநாளின்போது உலகப்பிரகாரமான வேலைகளுக்கும், பிரயாணங்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். ஆயினும் ஓய்வுநாளில் அனுமதிக்கப்பட்ட வேலைகளை மாத்திரம் செய்து கொள்ளலாம். பாழாக்குகிற அருவருப்பின்போது ஓடிப்போவது சத்துருவின் கையிலிருந்து நம்முடைய ஜீவனை காத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் பிரயாணமாகும். ஓய்வுநாளில் தேவனை ஆராதிக்காமல், ஜீவனுக்குப் பயந்து ஓடிப்போவதை தேவபக்தியுள்ள மனுஷர்கள் விரும்புவதில்லை. இதை ஒரு பாவமாகவே நினைப்பார்கள். ஓய்வுநாளை பரிசுத்தக் குலைச்சலாக்கக்கூடாது. ஓய்வுநாளில் ஓய்வுநாளுக்குரிய வேலைகளைத்தவிர வேறு எந்த வேலையையும் செய்யக்கூடாது. எந்த இடையூறுமில்லாமல் ஓய்வுநாளில் கர்த்தரை ஆராதிக்கவேண்டும். மாரிக்காலத்தில் ஓடிப்போவது சரீரத்திற்கு பிரச்சனையாக இருக்கும். ஓய்வுநாளில் ஓடிப்போவது ஆத்துமாவிற்கு பிரச்சனையாக இருக்கும்.
யூதேயாவிற்கு அந்திக் கிறிஸ்து வந்து அவன் தேவாலயத்தைக் கைப்பற்றும்போது இஸ்ரவேல் ஜனங்கள் யூதேயாவிலிருந்து ஓடிப்போவார்கள். (தானி 9:27; தானி 11:40-45) ""மலைகள்'' என்பது ஏதோம், மோவாப் ஆகிய மலைகளைக் குறிக்கும். இவை அந்திக் கிறிஸ்துவிடமிருந்து தப்பித்துக் கொள்ளும். (வெளி 12:6,14)
யூதேயாவிலிருந்து ஓடிப்போகிறவர்கள் காலம்தாழ்த்தாமல் விரைந்து தப்பியோடி விடவேண்டும். காலம் தாமதித்தால் அந்திக்கிறிஸ்து அவர்களை ஆட்கொள்வான். ஆகையினால் தப்பியோடும்போது தங்களுடைய பொருட்களைத் தேடி எடுத்துக்கொண்டு மெதுவாகப் போகலாம் என்று இறுமாப்பாய் இருக்கக்கூடாது.
இஸ்ரவேல் ஜனங்கள் யூதேயாவிலிருந்து தப்பி ஓடும்போது கர்ப்பவதிகளுக்கு மிகுந்த சிரமமாக இருக்கும். சாதாரணமாக கர்ப்பதிகளால் நடக்கக்கூடமுடியாது. அப்படிப்பட்டவர்கள் இந்தக் காலத்தில் ஓடவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பார்கள். பால்கொடுக்கிற தாய்மார்கள் கூட தங்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அந்திக்கிறிஸ்துவிற்குத் தப்பி ஓடவேண்டும்.
மாரிக்காலம் என்பது குளிர்காலம். குளிர்காலத்தில் பிரயாணம் பண்ணுவதற்கு அதற்குரிய ஆயத்தம் தேவை. குளிரைத் தாங்கக்கூடிய வஸ்திரங்கள் இருந்தால்தான் அவர்களால் சமாளிக்க முடியும். குளிர்காலத்தில் பிரயாணம் பண்ணுவது மிகவும் கடினம். இதற்கு ஆயத்தம் செய்வதினால் காலம் தாமதம் ஏற்படும். அப்போது அந்திக்கிறிஸ்து இவர்களைப் பிடித்துக்கொள்ளுவான். யூதருடைய பிரமாணத்தின் பிரகாரம், ஓய்வுநாளில் அவர்கள் ஒரு மைல் தூரம் மட்டுமே பிரயாணம் பண்ண முடியும். அவர்கள் ஓடிப்போவது ஓய்வுநாளாக இருக்குமென்றால் அவர்கள் ஒருமைல் தூரம் மட்டுமே பிரயாணம் பண்ணுவார்கள். ஏதோம் மலைக்கும், மோவாப் மலைக்கும் அவர்களால் தப்பியோட முடியாது. (அப் 1:12) இவர்கள் ஒருமைல் தூரமே பிரயாணம் பண்ணியிருப்பார்கள் என்றால் அந்திக்கிறிஸ்து அவர்களை அங்கு பிடித்துக்கொள்வான்.
மிகுந்த உபத்திரவம்
ஏனெனில், உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும் (மத் 24:21).
பாழாக்குகிற அருவருப்பின்போது மிகுந்த உபத்திரவம் உண்டாகும். இந்த உபத்திரவத்தின் அளவு பூரணமாக இருக்கும். உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். நகரத்தில் பஞ்சம் கடுமையாக இருக்கும். கொள்ளைநோய் கொடுமையாக பாதிக்கும். கர்ப்பவதிகளும் பால்கொடுக்கிறவர்களும் தங்கள் ஜீவனுக்குப் பயந்து ஓடிப்போவார்கள். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். ஒவ்வொருவனும் தன் அயலானுக்கு விரோதமாக தன் பட்டயத்தை ஓங்குவான். யூதமார்க்கத்தின் சரித்திரத்தை எழுதிய யோசபஸ் என்னும் சரித்திர ஆசிரியர், வரலாற்றில் யூதர்கள் அனுபவித்த இந்த மிகுந்த உபத்திரவத்தைக்குறித்து எழுதியிருக்கிறார். இந்த உலகத்தில் வேறு எந்த ஜாதிக்கும் உண்டாயிராத உபத்திரவம் யூதர்களுக்கு உண்டாயிற்று.
இந்த உபத்திரவத்தை வேறு எந்த உபத்திரவத்தோடும் ஒப்பிடமுடியாது. இதுபோன்ற உபத்திரவம் உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவிக்கவில்லை. இனிமேலும் இதுபோன்ற உபத்திரவம் சம்பவியாது. உலக வரலாற்றில் பல பட்டணங்களும், பல ராஜ்ஜியங்களும் அழிந்து போயிற்று. ஆயினும் எருசலேம் நகரத்தைப்போல, யூததேசத்தைப்போல எந்த நகரமும், எந்த தேசமும் இதுவரையிலும் அழிவுற்றதில்லை. அவர்களுடைய அழிவு பேரழிவாயிற்று. அவர்களுடைய உபத்திரவம் மிகுந்த உபத்திரமாயிற்று.
எருசலேமின் உபத்திரவம் அதிகமானதற்கு அவர்களுடைய அதிகமான பாவமே காரணம். எருசலேம் நகரத்தாரைப்போல தேவனுக்கு விரோதமாக இந்த உலகத்தில் வேறு எந்த ஜாதியாரும் இவ்வளவு அதிகமாக பாவம் செய்யவில்லை. தங்களுடைய பாவத்தின் உச்சநிலையாக அவர்கள் இயேசுகிறிஸ்துவையே சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டார்கள். தேவனுக்கு அருகாமையில் இருந்தபோதிலும், இவர்கள் தேவனுக்கு விரோதமாக கிரியை செய்தார்கள். தேவனிடமிருந்து அதிக சிலாக்கியங்களையும், அதிக கிருபைகளையும் பெற்றுக்கொண்டவர்கள்மீது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு அதிகமாக வரும். ஆகையினால் தேவனுடைய பிள்ளைகள் மிகுந்த எச்சரிப்போடு பரிசுத்த ஜீவியம் ஜீவிக்கவேண்டும்.
கடைசி மூன்றரை வருஷத்தில் மிகுந்த உபத்திரவம் உண்டாயிருக்கும். ஆகையினால் இக்காலம் மகா உபத்திரவக்காலம் என அழைக்கப் படுகிறது. இது மகா உபத்திரவக்காலத்தின் ஆரம்பம்.
ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும் (மத் 24:22).
உபத்திரவத்தின் நாட்கள் கர்த்தருடைய கிருபையினால் குறைக்கப்படும். உபத்திரவம் குறைக்கப்படாமல், அதிகநாட்கள் நீடிக்குமானால், அதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. அந்த உபத்திரவத்திற்கு ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை. மனுஷருடைய சரீரம் தப்பிப்போகவில்லையென்றாலும், அவர்களுடைய ஆத்துமா தப்பிப்போவதற்கு வாய்ப்புள்ளது. சரீரத்தின் அழிவு கர்த்தருடைய நாளில் ஆத்துமாவின் இரட்சிப்புக்கு ஏதுவாக இருக்கும்.
மகா உபத்திரவமாக இருந்தாலும் உபத்திரவத்தின் நாட்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம் குறைக்கப்படும். தேவன் நியமித்த நாட்கள் வரையிலும் உபத்திரவம் இருக்கும். அவர் நியமித்ததை யாராலும் குறைக்கமுடியாது. ஆயினும் எவ்வளவு காலம் உபத்திரவம் இருக்கவேண்டுமென்று கர்த்தர் நினைத்தாரோ அதை தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தமாக குறைத்துக்கொள்வார். அவர் நியமித்ததை குறைக்கவில்லை. ஆனால் அவர் நினைத்ததை குறைத்துக்கொண்டார். மனுஷருடைய பாவத்தின் அளவுக்கேற்ற பிரகாரம், மனுஷருக்கு உபத்திரவம் வரவேண்டுமென்று கர்த்தர் நினைத்தார். ஆயினும் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் நிமித்தமாக, தாம் நினைத்த முழு அளவிற்கு உபத்திரவத்தை அனுமதிக்கவில்லை. உபத்திரவக்காலத்தை சற்று குறைத்துக்கொண்டார். இதுபோன்ற உபத்திரவக் காலத்தில்கூட, கர்த்தருடைய பிள்ளைகளின் நிமித்தம் மனுஷர் மத்தியில் தேவகிருபை வெளிப்படுகிறது.
கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவருக்கு பொக்கிஷங்களாக இருக்கிறார்கள். கர்த்தருடைய பார்வையில் இவர்கள் விசேஷித்தவர்கள். எல்லாவிதமான அழிவுகளுக்கு மத்தியிலும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை பாதுகாக்கவேண்டுமென்று கர்த்தர் சித்தங்கொண்டிருக்கிறார். உபத்திரவத்தின் நாட்கள் குறைக்கப்படுவது தேவனுடைய கிருபையை வெளிப்படுத்துகிறது. நம்முடைய ஜீவியத்தில் நாம் உபத்திரவத்தின் வழியாக கடந்து செல்லும்போது, கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுக்ககூடாது. நம்முடைய பாவத்தின் அளவை கணக்கில் பார்த்தால், நம்முடைய உபத்திரவம் அதிகநாட்கள் நீடிக்கவேண்டும். ஆனால் கர்த்தரோ நம்மீது தமது கிருபையை காண்பித்து, நமது உபத்திரவத்தின் நாட்களை குறைத்திருக்கிறார். குறைக்கப்பட்டிருக்கும் உபத்திரவத்திற்காக நாம் கர்த்தருக்கு நன்றி கூறவேண்டும். பாடுகளின்போது புலம்பி தவிக்காமல், இம்மட்டுமாக நம்முடைய பாடுகளை குறைத்திருக்கும் கர்த்தருக்கு நன்றி கூற பழகிக்கொள்ளவேண்டும். நாம் நிர்மூலமாகாதிருப்பது தேவனுடைய சுத்த கிருபை.
மூன்றரை வருஷம் என்பது 1260 நாட்களாகும். உபத்திரவம் எல்லா நாட்களும் நடைபெறாமல் அந்த நாட்கள் குறைக்கப்படும். (தானி 12:7; வெளி 11:1-3; வெளி 12:6,14; வெளி 13:5)
""தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்'' என்னும் வாக்கியம் சபையைக் குறிக்காது என்று வேதபண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள். இதற்காக அவர்கள் கூறும் காரணங்கள்:
1. இயேசு யூதருக்குப் பதில் கூறுகிறார். (மத் 24:3; மத் 25:31-46; அப் 1:6)
2. கள்ளக்கிறிஸ்துக்கள் இஸ்ரவேலில் இருந்தார்கள் (மத் 24:5,23-26)
3. யூதமார்க்கத்திற்கு எதிரான உபதேசங்கள் (மத் 24:9)
4. இஸ்ரவேலின் துன்பம் (மத் 24:8)
5. பாழாக்குகிற அருவருப்பு யூதருக்கு மட்டுமே பொருந்தும் (மத் 24:15)
6. யூதருடைய தேவாலயம் (மத் 24:15)
7. இஸ்ரவேல் ஜனங்கள் தப்பியோடுதல் (மத் 24:16)
8. யூதருடைய ஓய்வுநாள் (மத் 24:20)
9. மகா உபத்திரவம் (மத் 24:21)
10. யூதர்கள் மட்டுமே கூட்டிச்சேர்க்கப் படுவார்கள். (மத் 24:31)
11. இஸ்ரவேல் ஜனங்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்து வருகிறார். (சக 14; மத் 24:29-31; மத் 25:31-46)
12. இஸ்ரவேல்மீது நடப்பித்த கிரியைகளின் அடிப்படையில் தேசங்களின் நியாயத்தீர்ப்பு இருக்கும். (மத் 25:31-46)
13. இஸ்ரவேலின் மீட்பின்போது முற்குறிக்கப்பட்ட காரியங்கள். (எசே 39:17-22; மத் 24:28; லூக்கா 17:34-37; வெளி 19:17-21)
14. இதற்கு முன்பாக சபை எடுத்துக் கொள்ளப்படும்.
நம்பாதேயுங்கள்
அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள் (மத் 24:23-26).
கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் தந்திரமாக தங்கள் கண்ணியை விரிக்கிறார்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்களைகூட வஞ்சிப்பதற்கு அவர்கள் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறார்கள். மகா உபத்திரவத்தின் காலம் மகா சோதனையின் காலமாகவும் இருக்கும். இப்படிப்பட்ட காலத்தில் நம்மை இரட்டிப்பாக வேலியடைத்து காத்துக்கொள்ளவேண்டும். கள்ளக்கிறிஸ்துக்களைக் குறித்தும், கள்ளத்தீர்க்கதரிசிகளைக் குறித்தும் பேசப்படும் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காமல், கர்த்தருடைய வார்த்தைக்கு மாத்திரமே செவிகொடுக்கவேண்டும்.
மனுஷகுமாரனுடைய வருகை
மின்னல் கிழக்கி-ருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் (மத் 24:27,28).
இயேசுகிறிஸ்து வரப்போகிற உபத்திரவங்களைக்குறித்து முன்னறிவிக்கிறார். இதைத் தொடர்ந்து மனுஷகுமாரனுடைய வருகையைக்குறித்தும் வெளிப்படுத்துகிறார். உபத்திரவக்காலமெல்லாம் முடிந்தவுடனே மனுஷகுமாரனுடைய வருகை இருக்கும். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். இந்த உலகத்தில் தம்முடைய ஆவிக்குரிய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக மனுஷகுமாரன் வரப்போகிறார்.
ராஜ்யத்தின் சுவிசேஷம் உலகம் முழுவதும் வேகமாக பரவும். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, சுவிசேஷமும் வேகமாக பிரகாசிக்கும். சுவிசேஷம் ஒளியாக இருக்கிறது (யோவா 3:19). இது மின்னலைப்போல திடீரென்று தோன்றி, உடனே மறையும் ஒளியல்ல. சுவிசேஷம் சூரிய ஒளியைப்போல பகல் முழுவதும் பிரகாசிக்கும் ஒளியாக இருக்கும்.
சுவிசேஷம் மின்னலைப்போலவும் இருக்கிறது. மின்னல் வானத்திலிருந்து உண்டாகிறது. மனுஷனல்ல, தேவனே வானத்திலிருந்து மின்னலை அனுப்புகிறார். அதுபோல சுவிசேஷமும் மனுஷரால் உண்டானதல்ல. தேவனே வானத்திலிருந்து சுவிசேஷத்தை நமக்கு அனுப்பித் தந்திருக்கிறார்.
மின்னலை பிரத்தியட்சமாக பார்க்கலாம். எல்லா இடத்திற்கும் மின்னல் ஊடுருவிச் செல்லும். அதுபோல சத்தியமும் ஒளிப்பிடத்தில் மறைந்துகொள்ளாது. எல்லா இடத்திற்கும் சத்தியம் பாய்ந்து செல்லும். இயேசுகிறிஸ்து சுவிசேஷத்தை வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினார் (யோவா 18:20). அவர் மறைவிடத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சுவிசேஷத்தை அடக்கிவைக்கவில்லை. இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களும் சுவிசேஷத்தை வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணினார்கள் (மத் 10:27).
மின்னல் திடீரென்று தோன்றும் திடீரென்று மறையும். மின்னல் வரும்போது உலகத்தாருக்கு ஆச்சரியமாக இருக்கும். மின்னல் தோன்றிவுடன் இருள் அகலும். அதுபோலவே சுவிசேஷம் என்னும் மின்னல் தோன்றிவுடன் அறியாமை என்னும் இருள் அகன்றுபோகும்.
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கும். வேகமாகவும் விரிவாகவும் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்லும். மின்னலின் வேகத்தை யாராலும் தடைபண்ணமுடியாது. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றும் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். இயேசுகிறிஸ்து கிழக்கு திசையிலிருந்து எழும்பி வந்திருக்கிறார் என்று வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். கிழக்கிலிருந்து தோன்றும் மின்னல் மேற்கு வரைக்கும் பிரகாசிக்கும். சுவிசேஷத்தின் வெளிச்சம் சூரியனோடு எழும்புகிறது. சூரியனோடு பிரயாணம் செய்கிறது. சூரியனின் ஒளிக்கதிர்களைப்போல சுவிசேஷத்தின் ஒளிக்கதிர்களும் பூமியின் முடிவு வரையில் பிரகாசிக்கிறது.
சுவிசேஷத்திற்கு எதிராக சில அந்தகார சக்திகள் எழும்பி கிரியை செய்கின்றன. ஆயினும் சுவிசேஷத்தை எந்த சக்தியாலும் தடைபண்ணமுடியாது. வனாந்தரமாக இருந்தாலும், ஒளிப்பிடமாக இருந்தாலும் சுவிசேஷம் எங்கும் பிரவேசிக்கும். ஒருக்காரியம் தேவனால் உண்டாயிருக்கும்போது அதை ஒழித்துவிட யாராலும் கூடாது என்று கமாலியேல் கூறுகிறார் (அப் 5:38,39).
சுவிசேஷம் எந்ததெந்த இடங்களிலெல்லாம் பிரவேசிக்கிறதோ, அந்தந்த இடங்களிலெல்லாம் தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகிறது. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் திரளாய் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வானத்தின் ஒருமுனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலுதிசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்.
இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையிலே அறையப்பட்டார். இந்த சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்போது ஜனங்கள் எல்லோரும் இயேசுகிறிஸ்துவை விட்டு விலகி ஓடிப்போவார்கள் என்று யூதர்கள் நினைத்தார்கள். ஆனால் கல்வாரி சிலுவையின் வல்லமை எல்லா ஜனங்களையும் இயேசுகிறிஸ்துவின் பக்கமாக கூட்டிச் சேர்க்கிறது. இயேசுகிறிஸ்து பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது எல்லாரையும் தம்மிடமாக இழுத்துக்கொள்வார் (யோவா 12:32).
இயேசுகிறிஸ்துவிடம் மாத்திரமே நித்திய ஜீவன் உள்ளது. ஆகையினால் ஆத்துமாக்களெல்லாம் அவரை தேடியே வரும். நல்ல மேய்ப்பனின் சப்தத்தை அவருடைய ஆடுகள் அறிந்துகொள்ளும். கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும், கள்ளக்கிறிஸ்துக்களுக்கும் கர்த்தருடைய ஆடுகள் செவிகொடாமல், கிறிஸ்துவுக்கே செவிகொடுக்கும். கிறிஸ்து எங்கே இருக்கிறாரோ அங்கே அவருடைய பரிசுத்தவான்கள் கூடியிருப்பார்கள். கள்ளக்கிறிஸ்துக்கள் இருக்குமிடங்களில் கர்த்தருடைய பரிசுத்தவான்கள் கூடிவரமாட்டார்கள். இயேசுகிறிஸ்துவின் கிருபை எல்லா பரிசுத்தவான்களையும் அவர் பக்கமாக கூட்டிச் சேர்க்கிறது.
எருசலேமை அழிப்பதற்காக மனுஷகுமாரனுடைய வருகை இருக்கும் என்று வேதபண்டிதர்களில் சிலர் இந்த வாக்கியத்திற்கு வியாக்கியானம் கூறுகிறார்கள். மின்னல் எதிர்பாராத நேரத்தில் வரும். அதுபோலவே மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். மின்னலைத் தொடர்ந்து இடி ஓசை கேட்கும். மின்னல் இடி ஓசைக்கு அடையாளமாக அதற்கு முன்பாக வருகிறது. இடி ஓசையும் ஆச்சரியமானது. மின்னலும் ஆச்சரியமானது.
பிணம் எங்கே இருக்கிறதோ அங்கே கழுகுகள் வந்து கூடும். பிணம் இருக்கும் இடங்களில் கழுகுகள் கூடிவருவதை நாம் எதிர்பார்க்கலாம். எருசலேமின் அழிவு நிச்சயமாகவே உண்டாகும். அங்கு ஏராளமான பிணங்கள் இருக்கும். அவற்றை சுற்றிலும் கழுகுகள் வந்து கூடும். யூதர்கள் துன்மார்க்கமாக ஜீவனம்பண்ணி தங்கள் ஆத்துமாக்களை கெடுத்துப்போட்டார்கள். ஆவிக்குரிய ஜீவன் இல்லாமல் மரித்த பிணங்களைப்போல இருக்கிறார்கள். தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு யூதர்கள்மீது வரும்.
ரோமப்பேரரசார் கழுகுக்கு ஒப்புமையாக இங்கு கூறப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ரோமப்பேரரசார் சென்று அவர்களை அழித்துப்போடுகிறார்கள். கழுகுகள் பிணங்களை மோப்பம் பிடித்து அவற்றை சுற்றி வந்து கூடுவதுபோல, ரோமப்பேரரசாரும் யூதர்கள் ஒழிந்திருக்கும் இடங்களை தேடி வந்து அவர்களை சுற்றி வளைக்கிறார்கள்.
இந்த வாக்கியம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நாளைக்குறிக்கும் என்று வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம் கூறுகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுகிறிஸ்து மின்னலைப்போல வருவார். அவர் வரும்போது, அவர் வனாந்தரத்தில் இருக்கிறார் என்று யாராவது சொல்வார்களானால், கர்த்தருடைய பிள்ளைகள் அதை நம்பி அங்கு புறப்பட்டுப்போய்விடக்கூடாது. இயேசுகிறிஸ்து அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று யாராவது சொல்வார்களானால், கர்த்தருடைய பிள்ளைகள் அந்த வார்த்தையை நம்பக்கூடாது. இயேசுகிறிஸ்துவை காண்பிக்கிறேன் என்று யாராவது கூறினால் அவர்களை நம்பி அவர்கள் பின்னால் போகக்கூடாது.
இயேசுகிறிஸ்துவை வனாந்தரத்திலோ, அறை வீட்டிற்குள்ளோ பார்க்கமுடியாது. அவரை வானத்தில் பார்க்கவேண்டும். வானங்களால் அவரை அடைக்கி வைத்திருக்கமுடியாது. மனுஷகுமாரன் இறங்கி வருவதை பார்க்கவேண்டுமென்றால் நாம் வானத்தை மாத்திரமே நோக்கிப் பார்க்கவேண்டும்.
மனுஷகுமாரன் வானத்தின் மேகங்கள்மேல் வரும்போது, கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எல்லோரும் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள். பரிசுத்தவான்கள் கூட்டிச்சேர்க்கப்படுவது மிகவும் வேகமாக நடைபெறும்.
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் வேளை
1. உபத்திரவம் முடிந்தவுடனே (மத் 24:29; மத் 25:31; வெளி 11:1-19:21)
2. ஆயிர வருஷ அரசாட்சியின் ஆரம்பத்தில் (வெளி 19:11-21; வெளி 20:1-10)
3. மூன்றரை வருஷங்கள் அந்திக்கிறிஸ்து ஆளுகை செய்த பின்பு (வெளி 13:5; வெளி 19:11-21; 2தெச 2:7-8)
4. இந்தக் காலத்தின் முடிவில் (மத் 13:38-43,47-50; மத் 24:3,29-31)
5. பத்து இராஜ்ஜியங்கள் எழும்பியிருப்பார்கள் (தானி 2:44-45; தானி 7:23-24)
6. லோத்தின் நாட்களிலும், நோவாவின் நாட்களிலும் இருந்ததைப் போன்று துன்மார்க்கம் பெருகியிருக்கும் நாட்களில். (மத் 24:37-51; லூக்கா 17:22-27)
7. சபைக் காலத்திற்குப் பின்பு (2தெச 2:7-8; அப் 15:13-18; யூதா 1:14; சக 14:5)
8. எருசலேம் சேனைகளால் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் பாதிப் பட்டணம் எடுத்துக்கொள்ளப்படும்போது. (சக 14:1-5,14-21; யோவேல் 3)
9. மரித்த நீதிமான்கள் உயிர்த்தெழுந்த பின்பு, துன்மார்க்கர் உயிர்த்தெழுவதற்கு ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு. (வெளி 20:1-15; சக 14:5; யூதா 1:14)
10. வெளி 4-19 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கிறவை நிறைவேறிய பின்பு. (வெளி 19:11-21; வெளி 20:1-10)
11. ஆயிர வருஷ அரசாட்சிக்கு முன்பு சாத்தான் கட்டப்பட்டிருக்கிற போது. (வெளி 20:1-7)
12. இஸ்ரவேல் ஜனங்கள் கூடிச்சேர்க்கப்பட்டு இரட்சிக்கப்பட்ட பின்பு, இயேசு கிறிஸ்து தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்து இஸ்ரவேலை நித்திய காலமாக ஆளுகை செய்ய ஆரம்பிக்கும்போது. (ஏசா 9:6-7; ஓசி 3:4-5; லூக்கா 1:32-33)
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்படியிருக்கும்?
1. மின்னலைப்போல (மத் 24:27)
2. அழிவோடு (மத் 24:38-51; மத் 25:31-46)
3. காணக்கூடிய விதமாக (மத் 24:29-31 2தெச 1:7-10; வெளி 1:7;வெளி 19:11-21; சக 14)
4. வெளிச்சத்தோடும், அக்கினியோடும் (2தெச 1:7-10; 2தெச 2:8; எசே 38:17-21; மல் 4:1-6)
5. வைராக்கியத்தோடும் கோபத்தோடும் (வெளி 14:14-20; வெளி 19:11-21; யூதா 1:14-15; 2தெச 1:7-10)
6. வல்லமையோடும் மகிமையோடும் (மத் 16:27; மத் 24:27-31; மத் 25:31-46)
7. பரிசுத்தவான்களோடும் தூதர்களோடும் (சக 14:5; மத் 24:29-31; மத் 25:31-46; 1தெச 1:7-10; யூதா 1:14; வெளி 17:14; வெளி 19:14)
8. மேகங்கள் நடுவில் (மத் 24:29-31; மத் 26:64; வெளி 1:7; தானி 7:13-14)
9. நியாயாதிபதியாகவும், இராஜாவாகவும். (வெளி 19:11-21; ஏசா 11; சக 14; மத் 25:31-46)
10. திருடனைப்போல (1தெச 5:2-4; வெளி 16:15)
பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். அர்மெகேதோனில் யுத்தம் நடைபெறும். அப்போது இயேசு கிறிஸ்து தமது சத்துருக்களைச் சங்காரம் பண்ணுவார். அவர்களுடைய மரித்த சரீரங்களைப் புசிப்பதற்காக கழுகுகள் அங்கே வந்து கூடும். இந்த யுத்தத்திற்கு முன்பாகவே சபை எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. இயேசு கிறிஸ்து இன்னும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டவராக இல்லை. அவர் உயிர்த்தெழுந்து விட்டார். அவர் இன்றும் ஜீவிக்கிறவர். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தவான்களும், நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வார்கள். அர்மெகதோனின் யுத்தம் ஆகாயத்தில் நடைபெறாது. பூமியில் நடைபெறும். (எசே 39:17; வெளி 19:11-21).
சூரியன் அந்தகாரப்படும்
அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்தி-ருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும் (மத் 24:29).
உபத்திரவம் முடிந்தவுடனே இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும். அப்போது சூரியன் அந்தகாரப்படும். இந்த வாக்கியத்திற்கு வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம் கூறும்போது, இது எருசலேமின் அழிவையும், யூததேசத்தின் அழிவையும் குறிப்பதாக விளக்குகிறார்கள். சூரியன் அந்தகாரப்படுவது, சந்திரன் ஒளியைக்கொடாதிருப்பது, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழுவது ஆகியவை யூததேசத்தின் மகிமை மங்கிப்போவதைக் குறிப்பிடுகிறது.
மனுஷகுமாரனுடைய அடையாளம் அப்போது வானத்தில் காணப்படும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையும் நீதியும் தோன்றுவதே அந்த அடையாளமாகும். கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவது என்பது தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் பாவத்திலிருந்தும் அழிவிலிருந்தும் மீட்கப்படுவதைக் குறிப்பிடுகிறது.
இந்த வாக்கியம் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறிக்கும் என்று வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம் கூறுகிறார்கள். இந்த கருத்துக்கு சிலர் மாற்றுக் கருத்துக்களையும் கூறுகிறார்கள். இந்த சம்பவங்களெல்லாம் உபத்திரவம் முடிந்தவுடனே நடைபெறும். பொதுவாக தீர்க்கதரிசிகள் விரைவில் சம்பவிக்கப்போகும் காரியங்களையே தீர்க்கதரிசனமாக கூறுவார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது உடனே நடைபெறப்போகும் சம்பவமல்ல. ஆயினும் கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறது (2பேது 3:8).
தம்முடைய இரண்டாம் வருகையின்போது நடைபெறப்போகும் சம்பவங்களை இயேசுகிறிஸ்து இங்கு முன்னறிவிக்கிறார். வானத்திலுள்ள கிரகங்களில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். சூரியன் அந்தகாரப்படும். சந்திரன் ஒளியை கொடாதிருக்கும். நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். இயற்கையில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். பழையவைகளெல்லாம் ஒழிந்துபோய் எல்லா புதியவையாகும்.
இயற்கையில் நடைபெறும் மாற்றங்கள் ரகசியமாக இராது. எல்லாமே பிரத்தியட்சமாக இருக்கும். உலகத்தின் எல்லாப் பகுதிகளில் உள்ளவர்களும், பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் இந்த மாற்றங்களையெல்லாம் காண்பார்கள். சூரியன் அந்தகாரப்படுவதும், சந்திரன் ஒளியைக் கொடாதிருப்பதும் சாதாரண மாற்றமல்ல. இது மிகப்பெரிய மாற்றம். பொதுவாக சந்திரன், சூரியன் ஆகியவை மாற்றமடையாது என்று தான் ஜனங்கள் நினைக்கிறார்கள். ஆனால் கர்த்தருடைய வருகையின்போது வானத்தின் இந்த சத்துவங்களெல்லாம் அசைக்கப்படும்.
இயற்கையில் உண்டாகும் மாற்றம் உலகத்தின் எல்லா பாகங்களிலும் ஏற்படும். இயேசுகிறிஸ்து இந்த பூமியில் நியாயம் விசாரிக்க வரும்போது, அவருடைய சமுகத்திற்கு முன்பாக வானமும் பூமியும் சந்தோஷமாக கெம்பீரிக்கும். இவற்றின் சந்தோஷத்திற்கு இயற்கையின் எந்த சக்தியும் தடையாகயிராது.
இயேசுகிறிஸ்து மரிக்கும்போது சூரியன் அந்தகாரப்பட்டது. இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாவதற்கு அடையாளமாக சூரியன் அந்தகாரப்பட்டது (யோவா 12:31).
மனுஷகுமாரன் வல்லமையோடும் மகிமையோடும் வானத்தின் மேகங்களின் மேல் வருவார். இயேசுகிறிஸ்துவின் மகிமை பிரகாசத்திற்கு முன்பாக, சந்திரன் சூரியன் ஆகியவற்றின் பிரகாசம் மங்கிப்போகும். மத்தியான வெயிலில் மெழுகுவர்த்தியின் வெளிச்சம் பிரகாசமாக தெரியாது. நீதியின் சூரியனாகிய இயேசுகிறிஸ்து இந்த பூமியில் உதிக்கும்போது, சூரியன் அந்காரப்படும். சந்திரன் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
மனுஷகுமாரன் வல்லமையோடும் மகிமையோடும் வானத்தின் மேகங்களின்மேல் வரும்போது, அவருடைய மகிமைப் பிரகாசமே மிகவும் பிரகாசமாக ஒளிகொடுக்கும். ஆகையினால் சந்திரன், சூரியன் ஆகியவற்றின் ஒளி தேவைப்படாது. நீதியின் சூரியனாகிய இயேசுகிறிஸ்துவின் மகிமைப் பிரகாச ஒளி மாத்திரமே போதுமானதாக இருக்கும். பரிசுத்தவான்களுடைய பொக்கிஷம் பரலோகத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பூமியில் சந்திரன், சூரியன் ஆகியவற்றின் மூலமாக வரும் ஆசீர்வாதங்களைவிட, மனுஷகுமாரனுடைய வருகையின் மூலமாக வரும் ஆசீர்வாதங்கள் பரிசுத்தவான்களுக்கு மிகுதியாக இருக்கும். மனுஷகுமாரன் வரும்போது சூரியன் சந்திரன் ஆகியவை பரிசுத்தவான்களுக்கு தேவைப்படாது.
மனுஷகுமாரனுடைய அடையாளம்
அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள் (மத் 24:30).
மனுஷகுமாரன் தம்முடைய இரண்டாம் வருகையின்போது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் இறங்கி வருவார். இதுவே மனுஷகுமாரனுடைய அடையாளமாகும். மனுஷகுமாரன் தம்முடைய முதலாம் வருகையின்போது, இஸ்ரவேலின் அநேகர் விழுகிறதற்கும், எழுந்திருக்கிறதற்கும், விரோதமாக பேசப்படும் அடையாளமாவதற்கும் நியமிக்கப்பட்டிருக்கிறார் (லூக் 2:34). மனுஷகுமாரனுடைய இரண்டாம் வருகையின்போது காணப்படும் அடையாளம் சகல கோத்திரத்தாரும் கண்டு பிரமிப்படைவதாக இருக்கும்.
மனுஷகுமாரன் மேகங்கள் மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். இவர்கள் புலம்பும்போது கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சந்தோஷத்தினால் தங்கள் தலைகளை உயர்த்தி, வானத்தை நோக்கிப்பார்த்து துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்தி ஆர்ப்பரிப்பார்கள். தங்களுடைய இரட்சிப்பு நெருங்கி வருகிறது என்பதையும், தங்கள் மீட்பர் தங்களை நெருங்கி வருகிறார் என்பதையும் காணும்போது கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் சந்தோஷம் அதிகரிக்கும். மனந்திரும்பிய பாவிகள் கர்த்தரை நோக்கிப்பார்த்து, தங்கள் பாவங்களை நினைத்து கண்ணீர்விட்டு அழுவார்கள். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருவார். நியாயத்தீர்ப்பு நாள் மனுஷகுமாரனுடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கப்படும். அந்த நாளில் மனுஷகுமாரன் வானத்தின் மேகங்கள் மேல் வருவார். வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நியாயத்தீர்ப்பின் சம்பாஷணைகள் நடைபெறும். இயேசுகிறிஸ்து மரித்து மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, நாற்பதுநாட்களுக்கு பின்பு வானத்திற்கு உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி வானத்திற்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் (அப் 1:9,11).
மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வருவார். தம்முடைய முதலாம் வருகையின்போது மனுஷகுமாரன் பலவீனமுள்ளவராகவும் தாழ்மையுள்ளவராகவும் இந்த பூமிக்கு வந்தார் (2கொரி 13:4). ஆனால் அவர் தம்முடைய இரண்டாம் வருகையின்போது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வருவார்.
மனுஷகுமாரன் மனுஷரை நியாயந்தீர்க்கிற நியாயாதிபதியாக வருவார். பாவிகள் நியாயாதிபதியாகிய மனுஷகுமாரனைக்கண்டு புலம்புவார்கள். இந்த மனுஷகுமாரனை இஸ்ரவேல் ஜனங்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து, அவருக்கு விரோதமாக கலகம் செய்து, அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால் நாமோ நம்முடைய பாவங்களையும், மாம்சத்தின் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறோம். நம்முடைய நியாயாதிபதியாகிய இயேசுகிறிஸ்து நம்மை இரட்சிக்கும் இரட்சகராகவும் இருக்கிறார். ஆனால் பாவிகளுக்கோ நியாயாதிபதியாகிய மனுஷகுமாரன் அவர்களை நியாயம் விசாரிக்கிறவராக இருக்கிறார்.
எருசலேமிலும், அதற்கு அருகிலுமுள்ள ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் வருகையைக் காண்பார்கள். எருசலேம் பட்டணத்தைப் பிடிப்பதற்காக அதைச் சூழ்ந்து கொண்டிருக்கும் சேனைகளும், இயேசுவைக் காண்பார்கள். (சக 14:1-5; வெளி 1:7). பலர் இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து சகல ஜாதிகளையும் ஆளுகை செய்யும் வரையிலும் அவரைக் காண்பதில்லை. கர்த்தருடைய பரிசுத்தவான்கள் பூமி முழுவதும் சென்று இயேசு கிறிஸ்துவோடு பூமியை ஆளுகை செய்வார்கள். அப்போது ஜனங்கள் இயேசு கிறிஸ்துவிடம் வருவார்கள்.
இயேசு கிறிஸ்து வருவதை ஜனங்கள் தங்கள் சொந்தக் கண்களால் காண்பார்கள். அவருடைய வருகை காணக்கூடிய விதமாக இருக்கும். இது காணமுடியாத ஆவிக்குரிய காரியமல்ல.
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து நாற்பது நாட்களுக்குப் பின்பு வானத்தின் மேகங்கள் நடுவே எடுத்துக் கொள்ளப்பட்டார். எப்படி எடுத்துக்கொள்ளப்பட்டாரோ அப்படியே வானத்தின் மேகங்கள்மேல் திரும்பி வருவார்.
இயேசுகிறிஸ்து திரும்பி வரும்போது வல்லமையோடு வருவார். சாத்தானின் சேனைகளையும், பிசாசுகளையும், அவனுடைய தூதர்களையும் ஒரே நாளில் அழிக்கக்கூடிய வல்லமையோடு வருவார்.
எக்காள சத்தம்
வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள் (மத் 24:31).
இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவருடைய தூதர்கள் அவருக்கு பணிவிடை செய்வார்கள். அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தூதர்கள் காத்திருப்பார்கள். இப்போது அந்த ஆவிகளை நமக்கு பணிவிடை செய்வதற்காக இயேசுகிறிஸ்து அனுப்பியிருக்கிறார் (எபி 1:14). இந்த பணிவிடையின் ஆவிகள், இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதும் பணிவிடை செய்யும்.
இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்போது வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை முதலாவதாக அனுப்புவார். கடைசிநாளில் எக்காள சத்தம் தொனிக்கும். அப்போது கர்த்தருடைய பரிசுத்தவான்கள் நித்திய மகிமைக்குள் பிரவேசிப்பார்கள்.
கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை கர்த்தருடைய தூதர்கள் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது பரிசுத்தவான்களெல்லாம் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். தம்முடையவர்கள் யார் என்பதை கர்த்தர் அறிந்து வைத்திருக்கிறார். தம்முடைய அன்புக்கு பாத்திரமானவர்களை கூட்டிச்சேர்ப்பதற்காக தமது தூதர்களை இயேசுகிறிஸ்து அனுப்புவார்.
தேவதூதர்கள் இயேசுகிறிஸ்துவின் பணிவிடைக்காரர்களாகவும், பரிசுத்தவான்களின் சிநேகிதர்களாகவும் பணிபுரிவார்கள். அவர்கள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் கூட்டிச்சேர்ப்பார்கள். தேவனுடைய பிள்ளைகள் சிதறியிருக்கிறார்கள் (யோவா 11:52). இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது பரிசுத்தவான்கள் கூட்டிச்சேர்க்கப்படும் வேளையில், ஒரு பரிசுத்தவான்கூட கைவிடப்படுவதில்லை. அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், தேவதூதர்கள் அவர்களை கூட்டிச்சேர்ப்பார்கள். தேவஅன்புக்கு எல்லையில்லை.
வருகையின் உவமை
இயேசு கிறிஸ்து பூமிக்குத் திரும்பி வரும்போது அவரோடு தூதர்களும் கூடவருவார்கள். (2தெச 1:7-10) அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச்சேர்ப்பார்கள். (உபா 30:4; ஏசா 11:11-12) கோதுமை மணியிலிருந்து களைகளைத் தனியாகப் பிரிப்பார்கள். (மத் 13:38-50).
இஸ்ரவேல் ஜனங்கள் கூட்டிச்சேர்க்கப்படும்போதெல்லாம் எக்காளம் ஊதப்படும். இந்த எக்காளம் ஏசா 18:3; ஏசா 27:13; சக 9:14 ஆகிய வசனங்களில் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த எக்காளமும், வெளி 8:2,6 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிற ஏழு எக்காளங்களும் வெவ்வேறானவை. நீதிமான்கள் உயிர்த்தெழும் போது கேட்கும் எக்காள சத்தமும், இந்த எக்காள சத்தமும் வெவ்வேறானவை. (1தெச 4:16; 1கொரி 15:51-58)
அத்திமரத்தினால் ஒரு உவமை
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள் (மத் 24:32,33).
தம்முடைய இரண்டாம் வருகையின்போது என்னென்ன காரியங்களெல்லாம் சம்பவிக்கும் என்று இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார். இந்த முன்னறிவிப்பை பெற்றுக்கொண்ட நாம், அவர் முன்னறிவித்திருக்கும் சம்பவங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கவேண்டும், அதற்காக ஆயத்தத்தோடு இருக்கவேண்டும்.
அத்திமரத்தினால் நாம் ஒரு உவமையை கற்றுக்கொள்ளவேண்டுமென்று இயேசு அறிவிக்கிறார். நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கும் சத்தியத்தின் மூலமாக, இங்கு மற்றொரு சத்தியத்தை இயேசுகிறிஸ்து விளக்குகிறார். வசந்தகாலத்தில் அத்திமரத்தில் இளங்கிளை தோன்றி துளிர்விடும். இதுபோல இயேசுகிறிஸ்து தம்முடைய தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற ஆரம்பிக்கும்போது, முடிவு காலம் சமீபிக்கும். இளங்கிளைகள் தோன்றி, துளிர்விடும்போது வசந்தகாலம் நிச்சயமாகவே வரும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். நாம் எதிர்பார்க்கிற பிரகாரமாக வசந்தகாலமும் வரும்.
அதுபோலவே சுவிசேஷத்தின் நாள் ஆரம்பமாகும்போது, அது நிறைவேறும் பரிபூரண நாளும் நிச்சயமாகவே வரும். வசந்தகாலம் சமீபமாகும்போது மரத்தில் இளங்கிளைகள் தோன்றும். அவை துளிர்விடும். நீதியின் மரங்களில் இளங்கிளைகள் தோன்றி துளிர்விடும்போது கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அது வசந்தகாலத்தைப்போல சந்தோஷமான காலமாக இருக்கும். தம்முடைய வருகைக்காக கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் இருதயங்களை முதலாவதாக ஆயத்தப்படுத்துகிறார். அதன்பின்பு அவர்களை சந்திப்பதற்காக வருகிறார். கர்த்தர் முன்னறிவித்திருக்கும் அடையாளங்களெல்லாம் சம்பவிக்கும்போது, அவர் நமக்கு சமீபமாய் வந்திருக்கிறார்.
அத்திமரம் யூதருடைய தேசத்தைக் குறிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். அத்திமரத்தைப் பற்றிய உவமையிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் காரியம் என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு அடையாளமாகக் கூறப்பட்டிருக்கிற காரியங்கள் நடைபெறும்போது அவருடைய வருகை சீக்கிரமாக இருக்கும் என்பதே.
""அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்'' என்னும் இந்த வசனமும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையே குறிக்கிறது. சபை எடுத்துக் கொள்ளப்படுவதை இது குறிக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குத்தான் வேதாகமத்தில் நாம் அடையாளங்களை வாசிக்கிறோம். (பிலி 3:20-21; தீத்து 2:13) சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்கும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் இடையில் ஏழு வருஷ கால இடைவெளி இருக்குமென்று வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். மத்திய ஆகாயத்திலே இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்களைச் சந்தித்து, தம்மோடு அவர்களைப் பரலோகத்திற்கு அழைத்துச்செல்வார். (1தெச 2:19; 1தெச 3:13; வெளி 19:1-11) பரலோகத்திற்கு இயேசுவோடு சென்ற பரிசுத்தவான்கள் அங்கு அவரோடு சில காலம் இருப்பார்கள். அதன்பின்பு இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர்கள் இயேசுவோடு பூமிக்குத் திரும்பி வருவார்கள்.
ஒழிந்துபோம்
இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள் (மத் 24:34-36).
இயேசுகிறிஸ்து இனிமேல் நடைபெறப்போகும் சம்பவங்களை முன்னறிவித்து, அவை நிச்சயமாகவே நிறைவேறும் என்று உறுதி கூறுகிறார். வானமும் பூமியும் ஒழிந்துபோம். என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லையென்று மிகவும் உறுதியாக கூறுகிறார். வானத்தையும் பூமியையும்விட இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் நித்தியமானது, நிச்சயமானது.
பூமியிலுள்ள அஸ்திபாரங்கள்மீது கட்டுவதைவிட, வானத்தின் தூண்கள்மீது கட்டுவதைவிட, இயேசுகிறிஸ்துவின் வார்த்தையின்மீது கட்டுவது நிலைத்து நிற்கும். எல்லாம் அழிந்துபோனாலும் தேவனுடைய வார்த்தை மாத்திரம் நிலைத்து நிற்கும். தேவனுடைய காலமே நல்லகாலம். தேவனுடைய வழியே நல்ல வழி. தேவனுடைய காரியங்கள் நிச்சயமாகவே நிறைவேறும். இயேசுகிறிஸ்துவின் ஒவ்வொரு வார்த்தையும் பரிசுத்தமானது. ஆகையினால் அது மிகவும் நிச்சயமானது.
யூததேசம் அழியும் காலத்தை இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார். இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்த சந்ததி ஒழிந்துபோகாது என்று நிச்சயமாகவே கூறுகிறார். இப்போது ஜீவனோடு இருக்கிறவர்களில் சிலர், எருசலேம் அழிந்துபோவதை தங்கள் கண்களால் காண்பார்கள். இந்த சத்தியம் புதுமையாக இருக்கிறபடியினால், இயேசுகிறிஸ்து இதை வலியுறுத்துவதற்காக ""மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று உறுதி கூறுகிறார். இயேசுகிறிஸ்து முன்னறிவித்திருக்கும் காரியங்களெல்லாம் மிகவும் விரைவில் சம்பவிக்கப்போகிறது, இவை இப்போதே வாசலுக்கு அருகே காத்திருக்கிறது.
ஆயினும் இந்த காரியங்கள் சம்பவிக்கும் நாளையும் அந்த நாழிகையையும் பிதாவாகிய தேவனைத்தவிர வேறு ஒருவரும் அறிந்திருக்கவில்லை. நியாயத்தீர்ப்பு நாள் நிச்சயமாகவே உண்டு. நியாயத்தீர்ப்பின் வேளையும் நாழிகையும் நிச்சயமாகவே நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாள் கர்த்தருடைய நாளாகும். இந்த நாளும், நாழிகையும் மிகவும் ரகசியமானது. ஒரு மனுஷனுக்கும் இது அறிவிக்கப்படவில்லை. ஒருவன் இந்த பூமியில் எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும், கர்த்தருடைய நாளையும், நாழிகையையும் அவனுடைய ஞானத்தினால் கண்டுபிடிக்கமுடியாது. வேறு எந்த மாய்மாலத்தினாலும் வல்லமையினாலும் இதை கண்டுபிடிப்பதற்கு வழியில்லை. பிதாவாகிய தேவனுக்கு மாத்திரமே கர்த்தருடைய நாளும், அந்த நாழிகையும் தெரிந்திருக்கிறது.
இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாளை நாம் அறியாதிருக்கிறபடியினால், நாம் மிகவும் விழித்திருக்கவேண்டும். விழிந்திருந்து கவனமாக ஜீவித்தால் கர்த்தருடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளலாம். கவனக்குறைவாக ஜீவித்தால் மரணம் உண்டாகும். ஆகையினால் இந்த சம்பவம் நமக்கு எச்சரிப்பாக கூறப்பட்டிருக்கிறது.
இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது. இந்தச் சம்பவங்கள் நடைபெறும்போது பூமியில் இருக்கும் சந்ததியைக் குறிக்கும். இவை எல்லாமே ஒரே சந்ததியில் தொடர்ச்சியாக நடைபெறும் என்று தெரிகிறது. (மத் 11:16)
""ஒழிந்துபோம்'' என்னும் இந்த வார்த்தைக்கு இரண்டு விதமாகக் கருத்துக் கூறுகிறார்கள். ஒன்று இந்த வானமும், பூமியும் முற்றிலுமாக அழிந்துபோகும். மற்றொரு வியாக்கியானம் இந்த வானமும், பூமியும் மாற்றமடையும். அல்லது புதுப்பிக்கப்படும். இதற்கு இவர்கள் கூறும் காரணங்கள். என்னவெனில், வானமும், பூமியும் நித்தியமானவை. அவை மாற்றமடையும். அக்கினியினால் புடமிடப்படும். இந்தப் பூமி புதுப்பிக்கப்படும். (வெளி 21:1)
அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது என்பது எந்த மனுஷனுக்கும் தெரியாது. தேவதூதருக்கும் தெரியாது. இயேசு கிறிஸ்துவிற்குமே தெரியாது. (மாற்கு 13:32) அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா மட்டுமே அறிவார். (அப் 1:7) இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இந்த நாளில் இருக்குமென்று சிலர் ஒரு குறிப்பிட்ட நாளைக் கணிக்கிறார்கள். இதற்கு வேதவசனங்களின் அடிப்படையில் எந்தவித ஆதாரமும் இல்லை.
நோவாவின் காலம்
நோவாவின் காலத்தில எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும் (மத் 24:37-39).
கர்த்தருடைய நாளின்போது நடக்கும் என்று முன்னறிவிக்கப்பட்ட சம்பவங்களை நாம் எதிர்பார்க்கவேண்டும். அவற்றை சந்திப்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். நியாயத்தீர்ப்பு நாள் எப்படியிருக்கும் என்பதை இயேசுகிறிஸ்து இந்த வசனத்தின் மூலமாக விவரிக்கிறார். இந்த நாள் நமக்கு ஆச்சரியமான நாளாகவும், வேறு பிரிக்கப்படும் நாளாகவும் இருக்கும்.
இயேசுகிறிஸ்து தமது முதலாவது வருகையின்போது மனுஷரை இரட்சிப்பதற்காக வந்தார். இது தவிர அவர் நியாயத்தீர்ப்புக்காகவும் வந்திருக்கிறார். காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வந்திருக்கிறார் (யோவா 9:39).
மனுஷகுமாரனுடைய நியாயத்தீர்ப்பு தற்காலிகமானதாகவும், நித்தியமானதாகவும் இருக்கும். யூதஜனத்தார்மீதும், அவர்களுடைய தேசத்தின்மீதும் விரைவில் நியாயத்தீர்ப்பு வரப்போகிறது. இது அந்த காலத்திற்குரிய தற்காலிக நியாயத்தீர்ப்பு. அவர்களுக்கு பாவத்தைக்குறித்து போதுமான அளவு எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களோ கிறிஸ்து இல்லாமலேயே, தங்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். தங்களுக்கு பாதுகாப்பும் சமாதானமும் உண்டு என்று தங்கள் சுய முயற்சியை நம்புகிறார்கள்.
கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நித்திய நியாயத்தீர்ப்பாகவும் இருக்கும். மகா நாளின்போது இந்த நித்திய நியாயத்தீர்ப்பு உண்டாகும் (எபி 6:2). நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம் உண்டாயிற்று. அக்காலத்து ஜனங்கள் புசித்தும், குடித்தும், பெண்கொண்டும், பெண்கொடுத்தும், தங்களுக்கு நியாயத்தீர்ப்பு வரப்போவதை உணராதிருந்தார்கள். உலகப்பிரகாரமாக ஜீவித்தார்கள்.
அக்காலத்தில் நோவா மாத்திரமே கர்த்தருக்கு பயந்து ஜீவித்தார். தேவனுடைய எச்சரிப்பின் வார்த்தைகளுக்கு ஜனங்கள் செவிகொடுக்காமல் புறக்கணித்துவிட்டார்கள். ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போயிற்று. எச்சரிப்பின் சத்தத்தைக்கேட்டும் மனந்திரும்பவில்லை யென்றால் இப்படித்தான் பேரழிவு உண்டாகும்.
புசிப்பதும் குடிப்பதும் மனுஷருடைய ஜீவியத்தில் நடைபெறும் சாதாரண சம்பவம். மனுஷன் ஜீவனோடிருப்பதற்கு இவை அவசியம். அதுபோலவே மனுஷ இனம் விருத்தியடைவதற்கு பெண்கொள்வதும், பெண்கொடுப்பதும் தேவைப்படுகிறது. இவையெல்லாம் தேவையென்றாலும், நமது ஜீவனுக்கு இவை மாத்திரமே தேவையென்று இறுமாப்பாக இருந்துவிடக்கூடாது. நம்முடைய முழு கவனத்தையும் மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றுவதிலேயே செலவு செய்துவிடக்கூடாது. நோவாவின் காலத்திலிருந்த ஜனங்கள் மனந்திரும்பி ஜெபிப்பதற்குப் பதிலாக புசித்தும் குடித்தும் தங்கள் நேரத்தை வீணாக்கிவிட்டார்கள்.
நோவாவின் காலத்து ஜனங்கள் தங்களுக்கு ஒன்றும் நேரிடாது என்றும், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் நினைத்து கவனக்குறைவாக ஜீவித்தார்கள். ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் தங்கள்மீது வரும் நியாயத்தீர்ப்பை அவர்கள் உணராதிருந்தார்கள். தேவனுடைய எச்சரிப்பின் சத்தம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களோ அந்த சத்தத்திற்கு செவிகொடுக்காமல், அதை அசட்டைசெய்து, புசிப்பதிலும் குடிப்பதிலும், பெண்கொள்வதிலும் பெண்கொடுப்பதிலும் ஆர்வமாக இருந்தார்கள். இந்த உலகப்பிரகாரமான பாவத்தின் விளைவினால் தங்களை எதிர்நோக்கியிருந்த பேராபத்தை அவர்கள் உணராதிருந்தார்கள்.
நோவாவின் காலத்து ஜனங்கள் தங்கள் கண்களால் காண்பதை மாத்திரமே நம்பினார்கள். இனிமேல் சம்பவிக்கப்போகும் எச்சரிப்பின் சத்தத்தை அவர்கள் கவனிக்கவில்லை நம்பவில்லை. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட பிரகாரம் ஜலப்பிரளயம் உண்டாயிற்று. ஜலப்பிரளயம் வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் அது வந்துவிட்டது. அவர்களை வாரிக்கொண்டு போயிற்று. தாங்கள் அழிந்து போகும்போதுதான், தங்களுக்கு அறிவிக்கப்பட்ட எச்சரிப்பின் வார்த்தைகள் மெய்யானவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
நியாயத்தீர்ப்பு நாளும் ஜலப்பிரளயம் போலவே எதிர்பாராத சமயத்தில் வரும். நமது சொந்த முயற்சியினால் இந்த நாளை தள்ளிப்போடமுடியாது. தங்களுக்கு நியாயத்தீர்ப்பு வரும்போதுதான், நியாயத்தீர்ப்பு நாளைப்பற்றி இவர்கள் உணருவார்கள். அதுவரையிலும் அந்த நாளை உணராதிருப்பார்கள். நியாயத்தீர்ப்பு மிகவும் பயங்கரமாக இருக்கும். தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைக்கிறவர்களுக்கும் அழிவு வரும். ஜலப்பிரளயம் அனைவரையும் வாரிக்கொண்டு போனதுபோல, கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு பாவிகள் அனைவரையும் அழித்துப்போடும். இதிலிருந்து தப்பிப்பதற்கு வழியுமில்லை வாய்ப்புமில்லை.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை இயேசுகிறிஸ்து இங்கு கூறி, அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும் என்று அறிவிக்கிறார். கடைசி காலத்தில் அசட்டையாக இருப்பது, கவனக்குறைவாக ஜீவிப்பது, ஆபத்தை உணராதிருப்பது ஆகிய பாவங்கள் ஜனங்கள்மீது கொள்ளைநோயைப்போல வரும். தங்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டாலும், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஜனங்கள் நினைப்பார்கள். விழித்திருந்து ஜீவிக்கமாட்டார்கள். எச்சரிப்பாக இருக்கமாட்டார்கள். வரும் ஆபத்தை உணரமாட்டார்கள்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போயிற்று. அவர்களால் அந்த ஜலப்பிரளயத்திற்கு எதிர்த்து நிற்கமுடியவில்லை. அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. ஜலப்பிரளயம் வரும் முன்பாக அவர்கள் நோவாவையும், ஜலப்பிரளயத்தையும் அசட்டை பண்ணினார்கள். அதுபோலவே இக்காலத்தில் இயேசுகிறிஸ்துவையும் அவருடைய வருகையையும் அசட்டைபண்ணுகிற பாவிகள், கர்த்தருடைய நாளின்போது அழிந்துபோவார்கள். பரியாசம்பண்ணுகிறவர்களெல்லாம் பரிதாபமான முடிவை சந்திப்பார்கள்.
நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும் (ஆதி 6:4). நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரையிலும் ஜனங்கள் பாவம் செய்துகொண்டிருந்தார்கள். அப்படியே இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதும் இருக்கும். ஆயிர வருஷ அரசாட்சிக்கு முன்பாகவே இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும். (வெளி 19:11-20:10) ஆயிர வருஷ அரசாட்சியிலும் பாவம் தொடரும். (ஏசா 65:20-25; எபே 1:10; வெளி 20:7-10) எல்லா பாவங்களையும் அழிப்பதும் கலகத்தை அடக்குவதுமே ஆயிர வருஷ அரசாட்சியின் நோக்கம். (1கொரி 15:24-28)
அனைவரையும் ஜலப்பிரளயம் வாரிக்கொண்டது. (லூக்கா 17:27) அதாவது அழிக்கப்பட வேண்டியவர்கள் அழிந்து போனார்கள். நோவாவும் அவனுடைய குடும்பத்தாரும் பாதுகாக்கப்பட்டார்கள். அதுபோலவே இயேசு கிறிஸ்துவின் வருகையின்போது அவர் சிலரை அழித்துப் போடுவார். வேறு சிலரை ஆயிர வருஷ அரசாட்சியில் பலுகிப்பெருகுமாறு பூமியில் விட்டு விடுவார்.
ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்
அப்பொழுது, இரண்டுபேர் வய-ல் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள் (மத் 24:40,41).
கர்த்தருடைய நாள் வேறு பிரிக்கும் நாளாக இருக்கும். இரண்டுபேர் வயலில் இருப்பார்கள். வயல் என்பது சுவிசேஷ வித்து விதைக்கப்பட்டிருக்கும் நிலத்தைக்குறிக்கும். இந்த உலகத்தில் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது. சுவிசேஷம் உலகத்தை இரண்டாக பிரிக்கிறது. இரண்டு பிரிவினரில் ஒரு பிரிவினர் சுவிசேஷத்தை ஏற்று இயேசுகிறிஸ்துவை தங்கள் இரட்சகராக விசுவாசிக்கிறார்கள். மற்றொரு பிரிவினர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல், இயேசுகிறிஸ்துவை தங்கள் இரட்சகராக விசுவாசியாமல் அழிந்து போகிறார்கள்.
எருசலேமுக்கு அழிவு வரும்போது, எருசலேமிலுள்ள ஜனங்களும் இரண்டு பிரிவாக பிரிக்கப்படுவார்கள். ஒரு பிரிவினர் தேவனுடைய கிருபையையும் அவருடைய தெய்வீக பராமரிப்பையும் பெற்றிருப்பார்கள். மற்றொரு பிரிவினர் தேவனுடைய கிருபையை புறக்கணித்திருப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோருமே இந்த பேரழிவிலிருந்து இரட்சிக்கப்படுவார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு வலதுபுறத்தில் ஆயிரம்பேரும், இடது புறத்தில் ஆயிரம்பேரும் அழிந்துபோனாலும், இவர்களை ஒரு அழிவும் அணுகாது. இவர்கள் அக்கினியிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டைபோல் இருப்பார்கள். கர்த்தருடைய இரக்கங்களில் அவருடைய பிள்ளைகள் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்கள் நிர்மூலமாகாதிருப்பது கர்த்தருடைய சுத்தக் கிருபை.
இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது இந்த பூமியிலுள்ள ஜனங்களெல்லாம் இரண்டு பிரிவாக பிரிக்கப்படுவார்கள். இயேசுகிறிஸ்து ஏற்கெனவே முன்னறிவித்த பிரகாரமாக வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலுதிசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள் (மத் 24:31). பேரழிவிலிருந்து தப்பித்து ஜீவனோடிருக்கிறவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள். இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு மறுபடியும் வரும்போது ஒருவரும் அவரை எதிர்பார்த்து எச்சரிக்கையோடு ஜீவிக்கமாட்டார்கள். ஒரு சிலர் தங்கள் வயல் வேலைகளிலும், வேறு சிலர் ஏந்திரம் அரைக்கும் வேலையிலும் ஈடுபட்டிருப்பார்கள். தங்கள் வேலையிலேயே கவனமாக இருப்பார்கள். கர்த்தரை குறித்த கரிசனை இவர்களிடத்தில் இராது.
கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவருடைய வருகையின்போது ஏற்றுக்கொள்ளப்படுவது கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஆறுதலான செய்தியாகும். கர்த்தருடைய பிள்ளைகள் ஏழைகளாக இருந்தாலும், உலகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், வயல் வெளிகளில் சாதாரண வேலை செய்கிறவர்களாக இருந்தாலும், ஏந்திரம் அரைக்கும் அடிமை வேலைகளை செய்தாலும் கர்த்தர் அவர்களை கைவிடாமல் கூட்டிச்சேர்த்துக்கொள்வார் (யாத் 11:5). அவர்கள் தூரதேசத்தில் இருந்தாலும், ஜனங்கள் விரும்பாத அசுத்தமான இடங்களில் அவர்கள் இருந்தாலும் கர்த்தருடைய மகிமைக்கு சுதந்தரவாளிகளெல்லாம் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள். அவர்கள் வயல் வெளிகளில் இருந்தாலும், ஏந்திரம் அரைத்துக்கொண்டிருந்தாலும் கர்த்தருடைய தூதர்கள் அவர்களை தேடிக்கண்டுபிடித்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
வயல் வேலை செய்கிறவர்களுக்கும், ஏந்திரம் அரைக்கிறவர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் உண்டாகும். தங்களுடைய சாதாரண வேலை ஸ்தலங்களிலிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இவர்கள் பலவீனமானவர்கள். தங்கள் சொந்த பலத்தினால் இவர்களால் பரலோகத்திற்கு போகமுடியாது. ஆகையினால் தேவதூதர்கள் இவர்களை கூட்டிச்சேர்த்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்கிறார்கள். கர்த்தர் ஒருவரை கரம்பிடிக்கும்போது, தம்முடைய பிடியை ஒருபோதும் தளர்த்தமாட்டார். அவரை ஒரு போதும் கைவிடவுமாட்டார். கர்த்தருடைய பிள்ளைகள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், எந்த சமுதாயத்தில் வாழ்ந்தாலும், எந்த வேலைகளை செய்தாலும், எந்த ஜனங்களோடு சேர்ந்திருந்தாலும் கர்த்தர் அவர்களை வேறுபிரித்து தம்மோடு சேர்த்துக்கொள்வார். கோதுமையையும் பதரையும் ஒரே களத்தில் வெவ்வேறாக பிரிக்கிறவர் நம்முடைய தேவன். ஆகையினால் கர்த்தருடைய வருகையின் போது அவருடைய உண்மையான பிள்ளைகள் கலங்கவேண்டியதில்லை. சோர்வடைய வேண்டியதில்லை. பயப்படவேண்டியதில்லை. அவருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்க்கலாம்.
அப்பொழுது, இரண்டுபேர் வய-ல் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக் கொள்ளப் படுவான், ஒருவன் கைவிடப்படுவான். ""அப்பொழுது'' என்பது சபை எடுத்துக் கொள்ளப்படுவதைக் குறிக்காது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறிக்கும். (மத் 24:29-31; மத் 25:31-46)
ஜலப்பிரளயம் ஜனங்களை அழிப்பதுபோல இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போதும் பலர் அழிந்துபோவார்கள். (மத் 24:39; லூக்கா 17:27). அர்மெகதோன் யுத்தத்தில் மாண்டுபோனவர்களின் சடலங்களைப் புசிப்பதற்காக கழுகுகள் வட்டமிட்டு கூடிவரும். ஜலப்பிரளயத்தில் எல்லோரும் அழிக்கப்படவில்லை. நோவாவும், அவனுடைய குடும்பத்தாரும் அழிக்கப்படாமல் காப்பாற்றப் பட்டார்கள். அதுபோலவே அர்மெகதோன் யுத்தத்தில் எல்லோரும் சங்காரம் பண்ணப்படமாட்டார்கள். இயேசு கிறிஸ்து பூமியை ஆளுகை செய்யும்போது ஒரு கூட்டம் உயிரோடு வைக்கப்பட்டிருப்பார்கள்.
விழித்திருங்கள்
உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிற படியினால் விழித்திருங்கள் (மத் 24:42).
கர்த்தருடைய வருகையின்போது நாம் விழித்திருக்கவேண்டும். கிறிஸ்துவின் சீஷர்கள் எல்லோருக்குமே தொடர்ந்து விழித்திருக்கவேண்டிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பாவத்தின் வழியும், பாவஜீவியமும் நித்திரைக்கு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. பரிசுத்த ஜீவியமும் கிருபையின் வழியும் விழித்திருப்பதற்கு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய வருகைக்காக நாம் விழித்திருந்து காத்திருக்கவேண்டும். நாம் விழித்திருக்கும்போது கர்த்தர் வருவார் என்று நாம் விசுவாசிக்கிறோம், அதே வேளையில் அவருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம், அவருடைய வருகையைப்பற்றி எல்லா வேளைகளிலும் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
கர்த்தருடைய வருகைக்காக நாம் விழித்திருந்து காத்திருக்கும்போது நமது சிந்தை முழுவதும் அவருடைய நினைவுகளால் நிறைந்திருக்கும். நமது ஆவியும் ஆத்துமாவும் கர்த்தரை நினைத்து உற்சாகமாக இருக்கும். கர்த்தர் வரும்போது நம்மை தம்மிடமாக சேர்த்துக்கொள்வார் என்னும் எதிர்பார்ப்பு நமக்குள் காணப்படும். இரவு வேளை நாம் நித்திரை செய்யும் வேளை. இரவு வேளையில்தான் விழித்திருப்பது தேவைப்படும். நாம் இந்த பூமியில் இருக்கும் காலமெல்லாமே நமக்கு இரவு வேளையைப்போலவே இருக்கிறது. இந்த பூமியில் நாம் ஜீவிக்கும் காலம் முழுவதும் எல்லா பாடுகளையும் உபத்திரவங்களையும் சகித்துக்கொண்டு விழித்திருக்கவேண்டும்.
நாம் விழித்திருந்தால் மாத்திரம் போதாது. ஆயத்தமாகவும் இருக்கவேண்டும். நாம் ஆயத்தமாக இல்லையென்றால் விழித்திருப்பது விருதா. கர்த்தருடைய வருகைக்காக எதிர்பார்த்தால் மாத்திரம் போதாது. அவருடைய வருகைக்கு நாம் ஆயத்தமாகவும் காத்திருக்கவேண்டும். கர்த்தருடைய வருகையில் நாம் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்னும் ஆயத்தம் நம்மிடத்தில் பூரணமாக காணப்படவேண்டும்.
நம்முடைய ஆண்டவர் இன்னநாழிகையில் வருவார் என்று நாம் அறியாதிருக்கிறோம். நம்முடைய ஜீவனும் எப்போது எடுத்துக்கொள்ளப்படும் என்பது நமக்கு தெரியாது. சில சமயங்களில் நாம் எதிர்பார்ப்பதைவிட குறைந்த காலத்திற்கே உயிரோடிருப்போம். ஆகையினால் நாம் ஜீவனோடிருக்கும் காலம் வரையிலும் கர்த்தருடைய வருகைக்காக விழித்திருந்து ஆயத்தத்தோடு காத்திருக்கவேண்டும்.
விசுவாசிகள் எப்போதுமே விழித்திருக்கிறவர்களாய் இருக்க வேண்டும். அசந்துவிடக்கூடாது. சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம்போல எவனை விழுங்கலாம் என்று சுற்றிச்சுற்றி வருகிறான் (மத் 24:39-42)
ஆயத்தமாயிருங்கள்
திருடன் இன்ன ஜாமத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிட வொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள் (மத் 24:43,44).
நம்முடைய ஆண்டவர் இன்னநாழிகையில் வருவாரென்று நாம் அறியாதிருக்கிறோம். ஆயினும் அவர் வருவாரென்று நிச்சயத்தோடிருக்கிறோம். நாம் நினையாத நாளிகையில் மனுஷகுமாரன் வருவார். அவர் நிச்சயமாகவே வருவார். ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும் அவனுடைய எஜமான் வருவதுபோல, நம்முடைய ஆண்டவரும் வருவார். ஆகையினால் நாம் அவருடைய வருகைக்காக ஆயத்தமாயிருக்க வேண்டும்.
இந்த உலகத்தின் பிள்ளைகள் ஞானமுள்ள சந்ததிகளாக இருக்கிறார்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவனென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டை கன்னமிடவொட்டான். திருடன் நடுஜாமத்தில் வந்தாலும் வீட்டெஜமான் விழித்திருப்பான். நம்முடைய ஆண்டவரின் வருகை எப்போது இருக்குமென்று நமக்கு தெரிந்திருந்தால், அந்த நாழிகையில் அவரை அன்போடு வரவேற்பதற்கு நாம் ஆயத்தமாக இருப்போம். அந்த நாழிகை நடுஜாமமாக இருந்தாலும், நாம் அயர்ந்து நித்திரை செய்யும் வேளையாக இருந்தாலும், அவருக்காக விழித்திருந்து காத்திருப்போம். ஆனால் அவர் இன்னநாழிகையில் வருவாரென்று நாம் அறியாதிருக்கிறோம். நாம் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார். ஆகையினால் நாம் எப்போதுமே விழித்திருந்து ஆயத்தமாக இருக்கவேண்டும்.
இரவுவேளையில் திருடன் வருகிற விதமாக கர்த்தருடைய வருகை இருக்கும். கர்த்தர் வரும்போது நாம் நித்திரை செய்கிறவர்களாவும், ஆயத்தமில்லாதவர்களாகவும் இருப்போமானால், நாம் கைவிடப்படுவோம். திருடன் வரும்போது நாம் விழித்திருக்கவில்லையென்றால் அவன் நமது வீட்டை கன்னமிட்டு கொள்ளையிடுவான். நமது சொத்துக்கள் அனைத்தையும் திருடிக்கொண்டு போய்விடுவான். அதுபோலவே நம் ஆண்டவர் வரும்போது அவரை சந்திக்க நாம் ஆயத்தமில்லாமல் இருந்தால், நம்மிடத்திலுள்ளது அனைத்தையும் நாம் இழந்துபோவோம். ஆகையினால் நாம் எப்போதுமே ஆயத்தமாக இருக்கவேண்டும். விழித்திருக்கவேண்டும். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று அறிந்திருந்து விழித்திருக்கும் வீட்டெஜமான் போல நாமும் விழித்திருக்கவேண்டும்.
உண்மையும் விவேகமுமுள்ளவன்
ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 24:45-47).
கர்த்தருடைய வருகை அவருக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தோஷமாகவும், ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கும். ஆனால் அவருடைய வருகையை எதிர்பார்க்காமல் ஜீவிக்கும் துன்மார்க்கருக்கோ அது மிகுந்த துன்பமாக இருக்கும். இந்த சம்பவத்தை விளக்குவதற்கு இயேசுகிறிஸ்து இரண்டுவிதமான ஊழியக்காரர்களை உவமையாக கூறுகிறார். ஒருவன் உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன். மற்றொருவன் பொல்லாத ஊழியக்காரன். உண்மையுள்ள ஊழியக்காரன் தன் எஜமானுக்காக விழித்திருந்து காத்திருக்கிறான். பொல்லாதவனோ தன் எஜமான் வர நாள் செல்லும் என்று நினைத்து பொல்லாப்பான காரியங்களை செய்கிறான்.
இந்த உவமை ஊழியக்காரர்களுக்கு எச்சரிப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய ஊழியக்காரர்கள் உக்கிராணத்துவ ஊழியம் செய்கிறார்கள். இவர்கள் கர்த்தருக்கு உண்மையாகவும் விவேகமாகவும் ஊழியம் செய்யவேண்டும்.
உண்மையுள்ள ஊழியக்காரன் ஏற்றவேளையில் தன் வேலைக்காரருக்கு போஜனங்கொடுத்து விசாரிக்கிறான். இப்படிப்பட்டவன் தன் எஜமானுடைய ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் விசாரணைக்காரனாக வைக்கப்படுவான். இவனுக்கு நித்திய ஆசீர்வாதம் உண்டாயிருக்கும். இந்த ஊழியக்காரனைப்போலவே கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர் எல்லோருக்கும் ஊழிய ஸ்தலத்தையும் ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார். வீட்டு எஜமானே வேலைக்காரருக்கு போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி இந்த ஊழியக்காரனை வேலைக்கு வைத்தவர். அதுபோலவே கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களை ஊழியம் செய்வதற்காக நியமிக்கிறார்.
கிறிஸ்துவின் சபையானது ஒரு வீட்டைப்போலவும், ஒரு குடும்பத்தைப் போலவும் இருக்கிறது. திருச்சபை பிதாவாகிய தேவனோடு எப்போதும் ஐக்கியமாக இருக்கவேண்டும். தேவனுடைய சபையில் ஊழியம் செய்வதற்காக சுவிசேஷ ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் திருச்சபையில் அதிகாரிகளாக நியமிக்கப்படவில்லை. உக்கிராணக்காரர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் திருச்சபைக்கு கர்த்தராக்களல்ல. திருச்சபையாரை கர்த்தரிடம் வழிகாட்டி நடத்தும் வழிகாட்டிகள். கர்த்தரே இவர்களையும் ஆளுகை செய்கிறார். இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் கிறிஸ்துவிடமிருந்தே வந்திருக்கிறது.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் சபையாருக்கு ஏற்றவேளையில் ஆவிக்குரிய போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கவேண்டும். உக்கிராணக்காரர்களாக ஊழியம் செய்யவேண்டும். கொடுப்பதுதான் ஊழியக்காரர்களின் ஊழியம். சபையாருக்கு கொடுப்பதற்குப் பதிலாக தங்களுக்கு சொந்தமாக எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏற்றவேளையில் சபையாருக்கு ஆவிக்குரிய போஜனங்கொடுக்க வேண்டும். இதற்காகவே கர்த்தர் இந்த ஊழியக்காரர்களை நியமித்திருக்கிறார். சபையிலுள்ள ஒவ்வொரு ஆத்துமாவையும் இயேசுகிறிஸ்து தமது சுயஇரத்தத்தினாலே சம்பாதித்திருக்கிறார்.
ஊழியக்காரர்கள் ஆத்துமாக்களுக்கு தேவையான ஆவிக்குரிய போஜனங்களைக் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு உலகப்பிரகாரமான பிரமாணங்களையும், சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கொடுக்கக்கூடாது. சபையார் சத்துருவின் பிடிகளில் சிக்கியிருந்தால் ஊழியக்காரர்கள் அவர்களை விடுவிக்கவேண்டும். கள்ள உபதேசங்களை அவர்கள் பின்பற்றிச் சென்றால் அவர்களை மீட்டு அவர்களுக்கு மெய்யான உபதேசத்தைக் கொடுக்கவேண்டும். ஆவிக்குரிய போஜனத்தை தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும்போது அவர்களுடைய ஆத்துமாக்கள் வளர்ச்சியடையும்.
போஜனங்கொடுக்கும்போது ஊழியக்காரர்கள் திடமான ஆகாரத்தையும் பூரணமான ஆகாரத்தையும் கொடுக்கவேண்டும். ஏற்றவேளையில் கொடுக்கவேண்டும். ஒரு தடவை போஜனங்கொடுத்து விட்டு, அதன்பின்பு போஜனங்கொடுக்காமல் நிறுத்திக்கொள்ளக்கூடாது. அனுதினமும் போஜனங்கொடுக்கவேண்டும். கிடைக்கும் வாய்ப்புக்களையெல்லாம் பயன்படுத்தவேண்டும். ஏற்றவேளையில் போஜனங்கொடுக்கவேண்டும். அவர்களுடைய தேவைகளுக்குத் தகுந்தவாறு போஜனங்கொடுக்கவேண்டும். போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்காமல் விட்டுவிடக்கூடாது. அவர்களை விசாரிக்கவும் வேண்டும்.
உண்ையுள்ள ஊழியக்காரன் உண்மையுள்ள உக்கிராணக்காரனாக இருப்பான். நல்ல ஊழியக்காரன் நல்ல உக்கிராணக்காரனாக இருப்பான். உண்மையுள்ள ஊழியக்காரனை நம்பலாம். அவனை நம்பி அவனிடத்தில் பொறுப்புக்களை ஒப்படைக்கலாம். நம்பிக்கையானவர்களிடத்தில் அதிகமான பொறுப்புக்கள் கொடுக்கப்படும். அதிகமாக கொடுக்கப்படுகிறவர்களிடத்தில் அதிகமாக கணக்கு கேட்கப்படும். நம்மிடத்தில் ஆண்டவர் என்னென்ன பொறுப்புக்களையெல்லாம் ஒப்புக்கொடுத்திருக்கிறாரோ, அவற்றிற்கெல்லாம் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். உண்மையுள்ள ஊழியக்காரர்களிடத்தில் மாத்திரமே கர்த்தர் தம்முடைய ஊழியங்களை ஒப்புக்கொடுப்பார். இயேசுகிறிஸ்துவிடத்தில் பட்சபாதமில்லை. உண்மையுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தம்முடைய ஊழியத்தில் பயன்படுத்துவார். தாழ்மையுள்ளவனை உயர்த்துவார். பெருமையுள்ளவனை தாழ்த்துவார்.
நல்ல ஊழியக்காரன் தன்னுடைய ஊழிய பொறுப்புக்களையெல்லாம் நன்றாக புரிந்து வைத்திருப்பான். இவன் விவேகமுள்ளவனாக இருப்பான். தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மந்தைகளை விவேகமாக வழிநடத்துவான். தன் கரத்தின் கிரியைகளை விவேகமாக செயல்படுத்துவான். கண்ணியமுள்ளவன் நல்ல ஊழியக்காரனாக இருப்பான். விவேகமுள்ளவன் நல்ல உக்கிராணக்காரனாக இருப்பான்.
இயேசுகிறிஸ்துவின் ஊழியம் நன்மை செய்யும் ஊழியம். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் நன்மையை மாத்திரமே செய்யவேண்டும். தொடர்ந்து நன்மை செய்யவேண்டும். சோம்பேறியாக இருந்துவிடக்கூடாது. தனக்கு கொடுக்கப்படும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் உண்மையாகவும், விவேகமாகவும், உற்சாகமாவும் செயல்படவேண்டும். நம்முடைய ஊழியத்தை பேச்சில் நிறுத்திவிடக்கூடாது. செயலில் வெளிப்படுத்தி காண்பிக்கவேண்டும்.
உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனே ஏற்றவேளையில் தன் வேலைக்காரருக்கு போஜனங்கொடுத்து அவர்களை விசாரிப்பான். எஜமான் வரும்போது இப்படி செய்கிறவனாக காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். இவன் தொடர்ந்து ஊழியம் செய்துகொண்டிருக்கிறான். எஜமான் எப்போது வந்தாலும், இவன் ஊழியம் செய்கிறவனாகவே காணப்படுவான். அந்தந்த நாளுக்குரிய வேலைகளை அந்தந்த நாளிலேயே முடித்துவிடுவான். நம்முடைய தேவன் நல்லவர். அவர் எப்போதுமே தமது கிருபையையும் இரக்கத்தையும் காண்பித்துக்கொண்டிருக்கிறார். தமது கிருபையினால் அவர் ஒரு காரியத்தை நிறைவேற்றும்போது, மற்றொரு காரியத்தையும் ஆரம்பிக்கிறார். அதுபோலவே நல்ல ஊழியக்காரர்களும் எப்போதும் ஊழியம் செய்து கொண்டிருக்கவேண்டும். ஒரு கடமையை நிறைவேற்றியவுடன், அடுத்த கடமையை ஆரம்பித்துவிடவேண்டும். கர்த்தர் வரும் வரையிலும் உண்மையுள்ள ஊழியக்காரர்கள் தொடர்ந்து ஊழியம் செய்துகொண்டிருப்பார்கள்.
உண்மையுள்ள ஊழியக்காரனுக்கு எஜமான் வெகுமதி கொடுக்கிறான். அவனுடைய உண்மையும் விவேகமுமான ஊழியங்களை எஜமான் காண்கிறான். எப்போதும் நன்மைசெய்கிறவனே உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன். கர்த்தருடைய ஊழியக்காரர்களும் எப்போதும் நன்மை செய்கிறவர்களாகவே இருக்கவேண்டும். சோர்ந்துபோய் ஊழியம் செய்யாமல் இருந்துவிடக்கூடாது. தம்முடைய மகா நியாயத்தீர்ப்பு நாளின்போது, கர்த்தர் தம்முடைய உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்களுக்கு வெகுமதி கொடுப்பார். கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள். அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போகும் (வெளி 14:13).
உண்மையுள்ள உக்கிராணக்காரர்களுக்கு மிகப்பெரிய வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கிறது. கர்த்தர் இவர்களை எப்போது பார்த்தாலும், இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியங்களை உண்மையாகவும், விவேகமாகவும் செய்துகொண்டிருப்பார்கள்.
இரத்த சாட்சியாக மரிக்கிறவர்களுக்கு அவர்களுக்குரிய வெகுமதிகள் கொடுக்கப்படும். கர்த்தருடைய யுத்தக்களத்தில் மரித்துப்போகும் ஊழியக்காரர்களுக்கு அவர்களுக்குரிய வெகுமதிகள் கொடுக்கப்படும். ஊழிய ஸ்தலங்களில் மரித்துப்போகும் ஊழியக்காரர்களுக்கும் அவர்களுக்குரிய வெகுமதிகள் கொடுக்கப்படும். அதுபோலவே கர்த்தருக்காக உழுது, விதை விதைத்து, அறுவடை செய்து மரித்துப்போகும் உண்மையுள்ள ஊழியக்காரர்களுக்கும் அவர்களுக்குரிய வெகுமதிகள் கொடுக்கப்படும்.
உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனை அவனுடைய எஜமான் தன் ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும் விசாரணைக்காரனாக வைப்பான். பெரிய எஜமான்கள் தங்களுடைய ஆஸ்திகளின் பொறுப்புக்களை உண்மையுள்ள ஊழியக்காரர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். இந்த உலகத்தில் ஒருவர் எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும், கர்த்தருடைய பார்வையில் உண்மையும் விவேகமுமாக ஊழியம் செய்கிறவனே பாக்கியவானாக இருப்பான். உலக பிரகாரமான வேலைகளைவிட கர்த்தருடைய ஊழியமே உன்னதமானது. கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களை சோதித்துப்பார்ப்பார். அவர்கள் உண்மையுள்ளவர்களென்றும், விவேகமுள்ளவர்களென்றும் நிருபணமாகும் போது அவர்களுக்கு மேலும் பல பொறுப்புக்களைக் கொடுப்பார்.
பொல்லாதவன்
அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்-க்கொண்டு, தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், (மத் 24:48,49).
எஜமானுடைய ஊழியக்காரர்களில் ஒரு சிலர் பொல்லாதவர்களாகவும் இருப்பார்கள். கர்த்தருடைய ஊழியக்காரர்களிலும் சிலர் பொல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் துன்மார்க்கர்கள். கர்த்தர் இவர்களிடம் கொடுத்திருக்கும் ஊழியங்களை உண்மையாகவும் விவேகமாகவும் செய்யமாட்டார்கள். இவர்களுடைய உள்ளத்தில் இறுமாப்பு நிறைந்திருக்கும். கர்த்தர் தங்களுடைய துர்ச்செயல்களையெல்லாம் காணமாட்டார் என்று இவர்கள் இறுமாப்பாக இருக்கிறார்கள்.
பொல்லாத ஊழியக்காரன் தன் ஆண்டவன் வர நாள்செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டான். தன் ஆண்டவன் வரமாட்டான் என்று நினைத்து தன் உடன் வேலைக்காரரை அடித்தான், வெறியரோடே புசித்து குடித்தான். அவன் நினையாத நாளில் எஜமான் வந்து பொல்லாத ஊழியக்காரனை தண்டித்தான்.
கர்த்தர் மறுபடியுமாக இந்த பூமிக்கு வருவார். அவருடைய வருகையில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் மனந்திரும்புவதற்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காகவே கர்த்தர் தம்முடைய வருகையை தாமதப்படுத்தியிருக்கிறார். கிருபையோடும் பொறுமையோடும் காத்திருக்கிறார். ஆனால் பொல்லாத ஊழியக்காரர்களோ கர்த்தருடைய பொறுமையை அவமாக்குகிறார்கள். அவர் வரமாட்டார் என்று நினைத்து துன்மார்க்கமாக ஜீவிக்கிறார்கள். பொல்லாதவர்களாக கிரியை செய்கிறார்கள்.
மோசே சீனாய் மலையில் கர்த்தரோடிருந்தார். மலைக்கு கீழே இருந்த இஸ்ரவேல் ஜனங்களோ ""மோசேக்கு என்னாயிற்றென்று தங்களுக்குத் தெரியவில்லை'' என்று கூறி ""தங்களுக்கு தெய்வங்களை செய்துகொள்வோம்'' என்று கூறினார்கள். அதுபோலத்தான் இக்காலத்தில் பொல்லாத ஊழியக்காரர்களும் கிரியை செய்கிறார்கள். வருவேன் என்று சொன்ன கர்த்தர் வரவில்லையே, அவருக்கு என்னாயிற்றுறென்று தெரியவில்லையே என்று நினைத்து, தங்களுக்காக வேறு தெய்வங்களை உண்டுபண்ணுகிறார்கள். உலகம் இவர்களுக்கு ஒரு தெய்வமாக இருக்கிறது. இவர்களுடைய வயிறு இவர்களுக்கு மற்றொரு தெய்வமாக இருக்கிறது. இவர்களுடைய ஆடம்பரங்களும், வசதிகளும் மற்றொரு தெய்வமாக இருக்கிறது. மெய்யான தேவனை ஆராதித்து அவருக்கு ஊழியம் செய்யவேண்டியவர்கள், இந்த உலகத்தை ஆராதித்து விக்கிரகங்களுக்கு ஊழியம் செய்கிறார்கள்.
துன்மார்க்கமான ஊழியக்காரன் தன்னுடைய வயிற்றிற்கும், ஆசைகளுக்கும், போஜனத்திற்கும் அடிமையாக இருக்கிறான். தன் உடன் வேலைக்காரரை அடிக்கிறான். மற்றவர்களை உபத்திரவப்படுத்துகிறான். கர்த்தருடைய பொல்லாத ஊழியக்காரர்கள், சகவிசுவாசிகளையும், சக ஊழியக்காரர்களையும் துன்பப்படுத்துகிறார்கள். தங்களுக்கு கீழ்ப்படியவில்லை என்பதற்காகவும், தங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதற்காகவும், தங்களுடைய வார்த்தைகளுக்கு எதிர்த்து பேசுகிறார்கள் என்பதற்காகவும் பொல்லாத ஊழியக்காரர்கள் தங்களுடைய உடன் ஊழியக்காரர்களை துன்புறுத்துகிறார்கள்.
ஒரு ஊழியக்காரன் தன்னுடைய உடன் ஊழியக்காரனை துன்புறுத்தும்போது, அவன் தன் எஜமானுடைய அதிகாரத்தை தன்னுடைய கையில் எடுத்துக்கொள்கிறான். தன் எஜமானுடைய பெயரில் உடன் ஊழியக்காரரை அடிக்கிறான். எஜமானுடைய போர்வையை பொல்லாத ஊழியக்காரன் தன் மீது போர்த்துக் கொள்கிறான். தனக்கு கொடுக்கப்படாத அதிகாரத்தை பொல்லாத ஊழியக்காரன் தானாகவே எடுத்துக்கொண்டு, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறான். தன் எஜமானனை அவமதிக்கிறான்.
பொல்லாத ஊழியக்காரன் பெருந்தீனி உண்டு போஜனப்பிரியனாக இருக்கிறான். பரிசுத்தமாக ஜீவிக்காமல் பாவப்பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிறான். வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்படுகிறான். உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் பொல்லாதவர்களோடு பழக்கம் வைத்துக்கொள்ளமாட்டான். அவர்களைவிட்டும், அவர்களுடைய துன்மார்க்கங்களைவிட்டும் விலகியே ஜீவிப்பான். ஆனால் பொல்லாத ஊழியக்காரனோ துன்மார்க்கனோடு கூட்டு சேர்கிறான். அவர்களைப்போலவே பாவக்கிரியைகளை செய்கிறான். அவர்களோடு சேர்ந்து அவர்களைப்போல குடிக்கிறான், வெறிக்கிறான்.
துன்மார்க்கரோடு ஐக்கியம் வைத்துக்கொள்ளும்போது அவர்களுடைய துன்மார்க்கமெல்லாம் நமக்குள்ளும் வந்துவிடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆகையினால் நாம் மிகுந்த எச்சரிப்போடு ஜீவித்து நமது காவலை காத்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கம் பாவம். குடித்து வெறிப்பது பல பாவங்களுக்கு நம்மை வழிநடத்தும். குடித்து வெறிக்கிறவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமைகளாகிறார்கள். இவர்கள் ஒருபோதும் பாவத்தின்மீது வெற்றிபெற்று ஜெயஜீவியம் ஜீவிப்பதில்லை.
பொல்லாத ஊழியக்காரர்களிடமும் சில ஊழியவரங்கள் இருக்கும். மற்றவர்களைவிட அதிக கல்வி பெற்றிருப்பார்கள். வேதவசனங்களை அதிகமாக படித்திருப்பார்கள். மற்றவர்களைவிட நேர்த்தியாக பிரசங்கம்பண்ணுவார்கள். பிரசங்க மேடையில் அழகாக பேசினாலும், பிரசங்க மேடையைவிட்டு கீழே இறங்கியவுடன் இவர்களுடைய ஜீவியம் அசுத்தமாக இருக்கும். பேச்சில் பரிசுத்தம் இருக்கும். கிரியையில் பாவம் இருக்கும். இப்படிப்பட்ட பொல்லாத ஊழியக்காரர்கள் மிகவும் பரிதாபமானவர்கள்.
அழுகையும் பற்கடிப்பும்
அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் (மத் 24:50,51).
பொல்லாத ஊழியக்காரனுக்கு அழிவு நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும் அவனுடைய எஜமான் வருவான். அவனை கடினமாய் தண்டிப்பான். கர்த்தர் மறுபடியும் வருவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் வரமாட்டார் என்று நம்முடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டாலும் அவருடைய வருகையை யாராலும் தடைபண்ணமுடியாது. தாம் நியமித்த நாழிகையில் வந்துவிடுவார். இந்த பூமியிலுள்ள ஜனங்கள் கர்த்தருடைய வருகையைப்பற்றி பலவிதமாக கருத்துக்கூறலாம். நம்முடைய கருத்துக்கள் எப்படியிருந்தாலும் அது கர்த்தருடைய வருகையை தடைபண்ணப் போவதில்லை.
பொல்லாதவர்களுக்கும், ஆயத்தமில்லாதவர்களுக்கும் கர்த்தருடைய வருகை ஆச்சரியமாகவும் பயங்கரமாகவும் இருக்கும். பொல்லாத ஊழியக்காரர்கள் கர்த்தருடைய வருகையின்போது பரிதாபமான நிலமையில் இருப்பார்கள். அவர்கள் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும் கர்த்தர் வந்துவிடுவார். அவர் வரும்போது நம்மால் மாய்மாலம் பண்ணமுடியாது. கர்த்தரை ஏமாற்ற முடியாது. நம்முடைய சிந்தனைகளும், செயல்களும் கர்த்தருக்கு முன்பாக வெளியரங்கமாக இருக்கும்.
பொல்லாத ஊழியக்காரர்கள் கடினமாக தண்டிக்கப்படுவார்கள். மாயக்காரரோடு அவர்களுக்கு பங்கு நியமிக்கப்படும். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். பயங்கரமான அழிவு உண்டாகும். ஜீவனுள்ள தேசத்திலிருந்து பொல்லாங்கான ஊழியக்காரர்கள் அகற்றப்படுவார்கள். நீதிமான்களின் ஐக்கியத்திலிருந்து இவர்கள் வேறுபிரிக்கப்பட்டு மாயக்காரரோடும் துன்மார்க்கரோடும் சேர்க்கப்படுவார்கள்.
உண்மையுள்ள ஊழியக்காரனுக்கு மரணம் வரும்போது, அவன் உயர்ந்த ஸ்தானத்தில் உயர்த்தப்படுவான். பொல்லாத ஊழியக்காரனுக்கு மரணம் வரும்போது அவன் நரகத்தில் தள்ளப்படுவான். உண்மையுள்ள ஊழியக்காரன் மரித்தபின்பு கர்த்தருடைய சமுகத்தில் பிரவேசிப்பான். சந்தோஷமாக இருப்பான். ஆனால் பொல்லாத ஊழியக்காரனோ மாயக்காரரோடு சேர்ந்திருப்பான். நரகத்தில் தள்ளப்படுவான். அங்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
அழுகையும் பற்கடிப்புமான இடத்தில் தங்கியிருப்பது மிகவும் கஷ்டமான காரியம். இங்கு இவற்றைத் தவிர வேறு எதுவுமிராது. எங்கு பார்த்தாலும் அழுகையும் பற்கடிப்பும்தான் இருக்கும். அழுகையும் பற்கடிப்பும் என்பது ஆத்துமாவின் வேதனையையும், உபத்திவரத்தையும் குறிப்பிடுகிறது. தேவனுடைய உக்கிரகோபத்தினால் துன்மார்க்கருடைய ஆத்துமா வேதனையை அனுபவிக்கிறது.
தெய்வீக நியாயத்தீர்ப்பின் பிரகாரம் துன்மார்க்கருக்கு பொல்லாங்கரோடு பங்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. பாவிகள் நரகத்தில் பிரவேசிப்பதற்கு பாத்திரவான்களாக இருக்கிறார்கள். நரகத்தில் மாத்திரமே இவர்களுக்கு பங்கு இருக்கும். பரலோகத்தில் பங்கு இருக்காது.
தம்முடைய பிள்ளைகளுக்கு, கர்த்தர் நியாயாதிபதியாக இருந்தாலும், அவர்களுக்கு இரட்சகராகவும் இருக்கிறார். துன்மார்க்கருக்கோ கர்த்தர் நியாயாதிபதியாக மாத்திரம் இருந்து, அவர்களுடைய பாவத்திற்கு ஏற்ப தண்டனையை நியமிக்கிறார். அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை நித்திய தண்டனையாக இருக்கும். இந்த தண்டனை மாயக்காரரோடே பங்கு என்று அழைக்கப்படுகிறது.
இந்த பூமியில் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் உண்மையில்லாதவர்களாகவும், பொல்லாதவர்களாகவும் இருந்தால், அவர்கள் மரித்தபின்பு, மாயக்காரரோடே அவர்களுக்கு பங்கு நியமிக்கப்படும். மற்ற பாவிகளோடு நரகத்தில் வேதனை அனுபவிப்பார்கள். நரகம் பாவிகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில்லாத பொல்லாத ஊழியக்காரர்கள், பரலோகத்திற்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை இழந்து, நரகத்தில் பிரவேசிப்பார்கள்.
கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு இந்த வாக்கியம் எச்சரிப்பாக கூறப்பட்டிருக்கிறது. இந்த பூமியில் இருக்கும்போது கர்த்தருக்காக ஊழியம் செய்துவிட்டு நரகத்திற்கு போவது என்பது மிகவும் பரிதாபமான முடிவு. மற்ற ஜனங்களுக்கு பரலோகத்திற்கு செல்லும் பாதையை காண்பித்துவிட்டு, பொல்லாத ஊழியக்காரர் நரகத்தின் பாதையை நோக்கி போய்க்கொண்டிருப்பார். இந்த பரிதாபமான நிலமை கர்த்தருடைய ஊழியக்காரர் யாருக்கும் வரக்கூடாது. ஆகையினால் மற்றவர்களுக்கு பிரசங்கம்பண்ணும்போது, பயபக்தியோடு பிரசங்கம்பண்ணவேண்டும். நம்முடைய பிரசங்க செய்தி நமது இருதயத்திற்குள்ளும் போகவேண்டும். மற்றவர்களை மனந்திரும்புமாறு கூறும்போது நாமும் மனந்திரும்ப வேண்டும். மற்றவர்களை பரிசுத்தமாக ஜீவிக்கவேண்டுமென்று வலியுறுத்தும்போது நாமும் பரிசுத்தமாக ஜீவிக்கவேண்டும். நமது பிரசங்கமும் நமது ஜீவியமும் ஒத்துப்போகவேண்டும். ஒன்றுக்கொன்று முரண்படக்கூடாது.