பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 6
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் யோவா 12 : 37-41
இத்தனை அற்புதங்கள்
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை (யோவா 12:37).
இயேசுகிறிஸ்து ஜனங்களுக்கு முன்பாக ஏராளமான அற்புதங்களைச் செய்திருக்கிறார். ஆனால் அவர்களோ அவரை விசுவாசிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தைப்பற்றிப் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறார்கள். ஜனங்கள் கிறிஸ்துவிடத்தில் விசுவாசம் வைக்கமாட்டார்கள் என்று தீர்க்கதரிசிகள் ஏற்கெனவே முன்னுரைத்து, ஜனங்களுடைய அவிசுவாசத்திற்காகப் புலம்பியிருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளில் ஏசாயா ஜனங்களுடைய அவிசுவாசத்தைப்பற்றி அதிகமாகத் தீர்க்கதரிசனம் கூறியிருக்கிறார். கிறிஸ்துவை அவர்கள் விசுவாசிக்கவில்லையென்றும், அவர்களால் விசுவாசிக்கமுடியவில்லையென்றும் ஏசாயா முன்னறிவித்திருக்கிறார்.
இயேசுகிறிஸ்து ஏராளமான அற்புதங்களை யூதர்களுக்கு முன்பாகச் செய்திருக்கிறார். ஆனால் அவர்களோ அவரை விசுவாசிக்கவில்லை. தாமே தேவனுடைய குமாரன் என்பதை நிரூபிப்பதற்கு இயேசுகிறிஸ்து செய்த இத்தனை அற்புதங்கள் போதுமானது. அவை எண்ணிக்கையில் அதிகம். ஒவ்வொன்றும் பலத்த அற்புதம். அவர் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்களைப்பற்றி யோவான் இரண்டு காரியங்களை விவரிக்கிறார். ""இத்தனை அற்புதங்கள்'' என்று கூறி இயேசுகிறிஸ்து செய்த அற்புங்களின் எண்ணிக்கையை எழுதுகிறார்.ஒவ்வொரு அற்புதமும் இயேசுகிறிஸ்துவின் தெய்வத்துவத்தை உறுதிபண்ணுகிறது. இயேசுகிறிஸ்து செய்த அற்புங்களெல்லாம் இரக்கத்தின் அற்புதங்களாகும். அவர் எத்தனை அற்புதங்கள் செய்தாரோ அந்த அளவுக்கு ஜனங்களுக்கு நன்மை உண்டாயிற்று.
இயேசு செய்த எல்லா அற்புங்களையும் அவர்கள் தங்கள் கண்களால் கண்ட சாட்சிகளாகயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய அற்புதங்களையெல்லாம் ஏதோ ஒரு மூலையில், யாருக்கும் தெரியாமல் இரகசியமாகச் செய்யவில்லை. அவர்களுக்கு முன்பாகவே இயேசுகிறிஸ்து இத்தனை அற்புங்களைச் செய்திருக்கிறார். அவர்களே அவற்றிற்குச் சாட்சிகளாகயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து செய்த இத்தனை அற்புதங்களை அவர்கள் தங்கள் கண்களால் பார்த்திருந்தும், இயேசுவைக் கிறிஸ்து என்றும், மேசியா என்றும், தேவனுடைய குமாரனென்றும், தேவனால் அனுப்பப்பட்டவரென்றும் விசுவாசிக்கவில்லை.
இயேசு கிறிஸ்து பல அற்புதங்களைச் செய்தார். அவர்களுக்கு முன்பாகவே அவைகளைச் செய்தார். தங்கள் கண்களால் அந்த அற்புதங்களையெல்லாம் கண்டார்கள். ஆனாலும் அவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை. இன்றைய தினமும் ஏராளமான ஜனங்கள் அற்புதங்களைக் காண்கிறார்கள். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் காண்பதில்லை.
விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள்
கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்: (யோவா 12:38,39).
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஏசாயா கூறிய தீர்க்கதரிசனம் இயேசுகிறிஸ்துவின் காலத்தில் நிறைவேறுகிறது. ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது என்று யோவான் எழுதுகிறார். நடைபெறுகிற சம்பவம் மிகவும் முக்கியமானதாக இருந்தாலும் ஒரு சிலர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்து செய்கிற அற்புதங்கள் அவருடைய தெய்வத்துவத்தை உறுதிபண்ணுவதற்காக செய்யப்படுகிறது. ஆனால் இவர்களோ அவர் செய்கிற அற்புதங்களைத் தங்கள் கண்களால் பார்த்தும் அவரை விசுவாசியாமலிருக்கிறார்கள். தேவனுடைய ராஜ்யத்தை நிரூபிப்பதற்காக இப்படிப்பட்ட அற்புதங்கள் வரலாற்றில் இதுவரையிலும் நடைபெற்றதேயில்லை. அதே வேளையில் யூதர்கள் இயேசுகிறிஸ்துவுக்கும் அவருடைய அற்புத செய்கைகளுக்கும் எதிர்த்து நிற்பதுபோல வரலாற்றில் எந்த ஜனங்களும் தேவனுடைய அற்புத செய்கைகளுக்கு இதுவரையிலும் எதிர்த்து நின்றதுமில்லை. ஜனங்களுடைய அவிசுவாசம் ""அற்புதமும் ஆச்சரியமுமானது'' என்று ஏசாயா கூறுகிறார் ""இதோ நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்'' (ஏசா 29:14).
ஜனங்களுடைய விசுவாசம் இயேசுகிறிஸ்துவுக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ""எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார். கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது'' (ஏசா 53:1) என்று ஜனங்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஏசாயா முன்னறிவித்திருக்கிறார். தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகள் மூலமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று ஏசாயா கேட்கிறார். ஏராளமானோர் சுவிசேஷச் செய்தியைக் கேள்விப்படுகிறார்கள். ஆனால் ஒருசிலர் மாத்திரமே அந்தச் செய்தியைத் தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கிறார்கள். இங்கு ஒருவரும், அங்கு ஒருவருமாக மாத்திரமே இரட்சிக்கப்படுகிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை எல்லோரும் விசுவாசிப்பதில்லையென்பது ஒரு துக்ககரமான சம்பவம். ஜனங்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மனதில்லாதிருக்கிறார்கள். அவர்களுடைய அவிசுவாசத்திற்கான காரணத்தையும் ஏசாயா முன்னறிவித்துக் கூறியிருக்கிறார். அவர்களுக்குக் கர்த்தருடைய புயம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆகையினால் அவர்கள் மேசியாவை விசுவாசிக்கவில்லை. யூதர்கள் இயேசுகிறிஸ்து செய்கிற அற்புதங்களைப் பார்க்கிறார்கள். ஆனால் அந்த அற்புதங்களில் இயேசுகிறிஸ்துவின் புயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதை அவர்கள் பார்க்கவில்லை.
கண்களைக் குருடாக்கினார்
அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான் (யோவா 12:40).
தேவன் அவர்களுடைய கண்களைக் குருடாக்கியிருப்பதினால் அவர்களால் இயேசுவைக் கிறிஸ்து என்று விசுவாசிக்க முடியவில்லை. இந்த வாக்கியம் மிகவும் கடினமானதாகயிருக்கிறது. இதை விவரிப்பது சற்று கடினம். தேவன் தம்முடைய தெய்வீக ஆதீனத்தில் யாருடைய கண்களையும் குருடாக்குவதில்லை. ஆனாலும் தாம் அற்புதம் செய்தும், தம்முடைய தெய்வீக வல்லமையை ஒருவர் விசுவாசிக்காவிட்டால், தேவன் அந்த நபருடைய கண்களைக் குருடாக்கிவிடுகிறார். ஆகையினால் அவர்கள் இயேசுவைக் கிறிஸ்து என்று விசுவாசிக்கமாட்டாமல் போய்விடுகிறார்கள்.அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருப்பதினால், அவர்களால் கிறிஸ்துவைக் காணவும் முடியாது, கிறிஸ்துவை விசுவாசிக்கவும் முடியாது.
அவர்களால் விசுவாசிக்க முடியாது. ஆகையினால்அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை. தங்களுடைய அவிசுவாசத்தில் தாங்கள் நிலைத்திருக்கவேண்டுமென்று அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். கிறிஸ்துவை விசுவாசிக்கவேண்டும் என்னும் சிந்தனை அவர்களிடத்தில் சிறிதும் இல்லை. ஆவிக்குரிய ரீதியாக அவர்கள் செயலற்றுப்போய்விட்டார்கள். ஒருசிலர் தீமையைச் செய்யவேண்டுமென்று விரும்பி, அதைச் செய்து, அதில் பழகிவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களால் தீமையை மாத்திரமே செய்யமுடியும். நன்மையைச் செய்யவே முடியாது. ""எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமையை செய்யப்பழகின நீங்களும் நன்மை செய்யக்கூடும்'' (எரே 13:23) என்று எரேமியா கூறுகிறார். அதுபோலவே அவிசுவாசத்தில் பழகிப்போன இவர்களால், கிறிஸ்துவை விசுவாசிக்கமுடியாது.
தேவன் இவர்களுடைய கண்களைக் குருடாக்கியிருக்கிறார். ஆகையால் இவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனர்கள். இவர்களால் கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது. தேவன் பாவத்திற்கு காரண கர்த்தா அல்ல. ஆனாலும் ஒரு சிலர் பிடிவாதமாக, வேண்டுமென்றே அவிசுவாசத்தில் நிலைத்திருக்கும்போது, தேவன் தம்முடைய நீதியினால் அவர்களை அப்படியே விட்டுவிடுகிறார். அவர்களுடைய ஆவிக்குரிய குருட்டுத்தன்மையைத் தேவன் அங்கீகரிக்கிறார். தேவனுடைய வெளிச்சத்திற்கு வரமாட்டோம் என்று இவர்கள் வைராக்கியமாக இருக்கிறார்கள். தேவன் இவர்களை நீதியாகத் தண்டிக்கும் வண்ணமாக, இவர்களுடைய ஆவிக்குரிய கண்களைக் குருடாக்கிவிடுகிறார். ஆகையினால் இவர்களால் தேவனை விசுவாசிக்கமுடியாது.
அவிசுவாசிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தேவனுடைய கிருபையை அவமாக்கிப்போட்டிருக்கிறார்கள். தம்முடைய கிருபையை மதிக்காத அவிசுவாசிகளிடமிருந்து தேவன் தம்முடைய கிருபையை நீக்கிப்போடுகிறார். அவர்கள் விரும்பிய ஆசை இச்சைகளுக்கு அவர்களை ஒப்புக்கொடுத்துவிடுகிறார். அதன்பின்பு அவர்களுடைய கண்களைக் குருடாக்கி, அவர்களுடைய இருதயங்களை கடினப்படுத்திவிடுகிறார். இதுவே தேவன் அவர்கள்மீது காண்பிக்கும் ஆவிக்குரிய நியாயத்தீர்ப்பு ஆகும்.
ஒரு பாவி மனந்திரும்பும்போது ஒவ்வொரு நிலையாக அவன் கடந்து வரவேண்டும். முதலாவதாக பாவிகள் தங்கள் கண்களால் காணவேண்டும். தேவனுடைய காரியங்கள் உண்மையானவை என்பதை அவர்கள் பகுத்தறிந்து உணரவேண்டும். அதன்பின்பு பாவிகள் தேவனுடைய காரியங்களைத் தங்கள் இருதயங்களில் உணரவேண்டும்.
தேவனுடைய காரியங்களை அங்கீகரித்தால் மாத்திரம் போதாது. அவற்றை உணர்ந்து தங்கள்இருதயங்களில் ஏற்றுக்கொள்ளவும்வேண்டும். இதற்குப் பின்பு அவர்கள் குணப்படவேண்டும். இவர்களுடைய இருதயம் மனமாற்றமடையவேண்டும். பாவத்தை வெறுத்து நீதிக்குத் திரும்பவேண்டும். மெய்யாகவே இவர்கள் பாவத்தைவிட்டு விலகி இயேசுகிறிஸ்துவிடம் திரும்பி வரவேண்டும். அப்போதுதான் தேவன் இவர்களை குணப்படுத்துவார். இவர்களுடைய பாவங்களை மன்னிப்பார். இவர்களிடத்தில் வியாதிகளைப் போலயிருக்கிற துன்மார்க்கமான சுபாவங்களை இவர்களைவிட்டு நீக்கிப்போடுவார்.
கண்களைக் குருடாக்குவது, இருதயங்களைக் கடினமாக்குவது ஆகியவை தேவன் துன்மார்க்கருக்குக் கொடுக்கும் தண்டனையாகும். இது மாம்சப்பிரகாரமானகுருட்டுத்தன்மையோ அல்லது இருதயக்கடினமோ அல்ல. இது தேவனுடைய நீதியின் பிரகாரம் உண்டாகக்கூடிய ஆவிக்குரிய குருட்டுத்தன்மையும், ஆவிக்குரிய இருதயக்கடினமும் ஆகும். தங்களுடைய துன்மார்க்கத்தில் தொடர்ந்து துணிகரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்போருக்கு தேவன் தமது நீதியினால் இப்படிப்பட்ட தண்டனையைக் கொடுக்கிறார். நாம் தேவனுடைய காரியங்களைக் கண்டு உணரும்போது அவருடைய கிரியைகள் எல்லாவற்றையும் கண்டு உணருவோம். நம்முடைய கிரியைகளையும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். நம்முடைய காரியங்கள் எதுவும் தேவனுக்கு முன்பாக மறைவாகயிராது. தம்மை யார் காட்டிக்கொடுக்கப்போகிறவன் என்பதை இயேசுகிறிஸ்து ஏற்கெனவே அறிந்திருக்கிறார்.
தேவன் முன்னறிவித்திருக்கும் காரியங்கள் நிச்சயமாகவே நிறைவேறும். ஆகையினால்தான் அவர்கள் தேவனை விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள். தேவன் சர்வஞானமுள்ளவர். எல்லாக் காரியங்களையும் அவர் முன்னறிந்திருக்கிறவர். எந்தக் காரியமும் அவருடைய முன்னறியும் ஆற்றலை வஞ்சிக்க முடியாது. அதே சமயத்தில் தேவன் எதை முன்னறிவிக்கிறாரோ அந்தச் சத்தியத்தை அவர் வஞ்சிப்பதோ அல்லது மாற்றுவதோ இல்லை.
ஏசாயா இந்தத் தீர்க்கதரிசனத்தைக் கூறும்போது, தான் இதை ஒரு குறிப்பிட்ட நபருக்குக் கூறுவதாக யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. யூததேசத்திற்கு ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அறிவிக்கப்படுகிறது. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவரை விசுவாசிக்கிறார்கள். இஸ்ரவேலில் மீதமுள்ள ஜனங்கள் தேவனிடத்தில் பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவனுடைய ஆசீர்வாதத்தின் வாசல்கள் திறந்தேயிருக்கிறது. ஆனாலும் ஒரு சிலர் குருட்டுக்கண்களோடு, இருதயத்தில் உணர்வில்லாமல் தேவனை விசுவாசியாமலிருக்கிறார்கள். இவர்களால் தேவனை விசுவாசிக்கவும் முடியாது.
ஜனங்களுக்கு கண்கள் இருந்தும், குருடராயிருக்கிறார்கள். இருதயம் இருந்தும் உணராமலிருக்கிறார்கள்.
விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குத்தத்தங்கள்
1. மனமாற்றம் - தேவனோடு நடப்பதற்கு ஏதுவாக நமது சரீரப் பிரகாரமான நடையில் மாற்றம். (சங் 19:7)
2. சரீர சுகமாதல் - தேவனிடத்தில் புதிய ஆரோக்கியதைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக சரீர ஆரோக்கியத்தில் மாற்றம். (யாத் 15:26)
மனுஷருடைய இரட்சிப்பு என்பது அவர்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பையும், சரீரத்தின் குணமாதலையும் குறிக்கும். இயேசு கிறிஸ்துவால் நமது பாவங்களையும் மன்னிக்க முடியும். நமது சரீர வியாதிகளையும் குணமாக்க முடியும். இதுவே பூரண சுவிசேஷம். இதுவே இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வல்லமை.
ஏசாயா இயேசு கிறிஸ்துவின் மகிமையைக் கண்டான். ஆறு இடங்களில் இயேசு கிறிஸ்து தம்மையும், ஏசாயாவையும் இணைத்து கூறியிருக்கிறார். இதன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவமும், அவர் எக்காலத்திற்கும் உரியவர் என்பதும் தெளிவாகிறது.
ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டார்
ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான் (யோவா 12:41).
ஏசாயா தான் கண்ட தரிசனத்தை இவ்வாறு எழுதுகிறார். ""உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது'' (ஏசா 6:1-4).
""பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்'' (ஏசா 6:8-10) என்றும் ஏசாயாதான் கண்ட தரிசனத்தைப் பற்றி எழுதுகிறார்.
ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை யோவான் இங்கு மேற்கோளாகக் குறிப்பிட்டு எழுதுகிறார். கர்த்தருடைய நாளைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறார். அவருடைய மகிமையைக் கண்டு அவரைக் குறித்து பேசுகிறபோது ஏசாயா இவைகளைச் சொன்னதாகவும் யோவான் எழுதுகிறார் (ஏசா 6:1-10)
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே ஏசாயாவுக்குத் தேவன் தம்முடைய செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். தேவன் தங்களுக்குச் சொல்லாமல், தீர்க்கதரிசிகள் எந்தச் செய்தியையும் முன்னறிவிக்கமாட்டார்கள். ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை அவர்கள் மாற்றியும் பேசமாட்டார்கள். தேவனுடைய மகிமையை ஏசாயா தீர்க்கதரிசி கண்டதை, யோவான் இயேசுகிறிஸ்துவின் மகிமையைக் கண்டதாக எழுதுகிறார். யூதர்கள் ஏசாயாவை விசுவாசிக்கிறார்கள். ஏசாயா பரலோகத்திலிருந்து செய்தியைப் பெற்றுக் கொண்டு தங்களுக்குத் தீர்க்கதரிசனமாக முன்னறிவித்திருப்பதையும் விசுவாசிக்கிறார்கள்.
தேவனுடைய மகிமையை ஏசாயா கண்டதாக விசுவாசிக்கிற யூதர்களால், அவன் இயேசுகிறிஸ்துவின் மகிமையைக் கண்டான் என்பதை விசுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் இவர்கள் செவிகள் மந்தமாகயிருக்கிறது. திரளான யூதர்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசியாமலிருந்தாலும், அப்படிப்பட்ட ஜனங்களுக்கு மத்தியிலும் இயேசுகிறிஸ்து மகிமைப்படுத்தப்படுகிறார். இஸ்ரவேலில் மீதியாகயிருப்பவர்களுக்குத் தேவனுடைய இரட்சிப்பு வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பார்கள். அவர்கள் மூலமாகவே கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும். ஏராளமான யூதர்கள் ஆவிக்குரிய குருடர்களாகயிருந்தாலும், முற்குறிக்கப்பட்டவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் பிரகாசமாகத் திறந்திருக்கிறது. இவர்களே கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார்கள்.
அதிகாரிகளின் விசுவாசம் யோவா 12 : 42,43
அறிக்கைபண்ணாதிருந்தார்கள்
ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள் (யோவா 12:42).
யூதமதத்தில் அதிகாரிகளாகயிருக்கிற அநேகர் இயேசுகிறிஸ்துவிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். இது இயேசு கிறிஸ்துவுக்குக் கிடைத்திருக்கும் கனமும் மகிமையும் ஆகும். ஆனால் இந்த அதிகாரிகளோ இயேசுவைக் கனப்படுத்தவில்லை. தாங்கள் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் வைத்திருப்பதை அறிக்கைபண்ணுவதற்கு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். இக்காலத்தில் அநேக விசுவாசிகள் அதிகாரிகளுக்கு நேர்மாறாக இருக்கிறார்கள். தங்களுக்கு இயேசுகிறிஸ்துவிடத்தில் மெய்யாகவே இருக்கும் அன்பைவிட, தங்களுக்கு அவரிடத்தில் அதிக அன்பு இருப்பதாக அறிக்கை செய்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்துவின் ஊழியக்காரர்களில் அநேகர் தாங்கள் இயேசுகிறிஸ்துவுக்காக மெய்யாகவே செய்யும் ஊழியத்தைவிட, அதிகமாகச் செய்வதாக அறிக்கைபண்ணுகிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் வார்த்தை வல்லமையும் அதிகாரமுமுள்ளது. மனுஷருடைய இருதயத்தை அவருடைய வார்த்தை உணர்த்துகிறது. பாவத்தைக்குறித்தும் நீதியைக்குறித்தும் இயேசுகிறிஸ்துவின் வார்த்தை மனுஷருடைய உள்ளத்தில் பேசுகிறது. அதிகாரிகளில் அநேகர் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்திருக்கிற போதகரென்று, நிக்கொதேமுவைப்போல அநேக அதிகாரிகள் விசுவாசிக்கிறார்கள். ஆனாலும் இயேசுகிறிஸ்துவினிடத்தில் தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை இவர்களால் வெளிப்படையாக அறிக்கை செய்ய முடியவில்லை. இவர்களுடைய இருதயத்தில் வெட்கமும் பயமும் நிரம்பியிருக்கிறது.
மனுஷரில் அநேகர் நல்லவராகவும் தீயவராகவும் இருப்பார்கள். அவர்கள் வெளிப்பழக்க வழக்கத்தில் எப்படிப் பேசுகிறார்கள் என்பதை வைத்து அவர்களுடைய சுபாவத்தை அறிந்துகொள்வது கடினம். ஒரு சிலரை நாம் நல்லவரென்று நினைப்போம். ஆனால் அவர்களோ நாம் நினைப்பதற்கும் அதிகமாக மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் நம்முடைய பார்வைக்கு சாதாரண ஜனங்களாக இருப்பார்கள். ஆனால் மெய்யாகவே அவர்கள் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். மனுஷருடைய தவறுகள் வெளிப்படையாகத் தெரியும். ஆனால் அவர்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பியிருப்பது அவர்களுடைய இருதயத்திற்கு மாத்திரமே தெரியும். அவர்கள் அதை அறிக்கை செய்தால்தான் அவர்கள் மனந்திரும்பின அனுபவம் மற்றவர்களுக்கும் தெரியவரும்.
மனுஷருடைய நற்குணம் பல சமயங்களில் அவர்களுடைய கூச்ச சுபாவங்களினால் மூடிமறைக்கப்படுகிறது. அவர்களிடத்தில் சில பலவீனங்கள் இருக்கலாம். இந்தப் பலவீனங்களை அவர்கள் பெரிதாக நினைத்து, தங்களிடத்திலுள்ள நற்குணத்தை வெளிப்படுத்தாமலேயே இருப்பார்கள். இவர்கள் மெய்யாகவே மனந்திரும்பியிருப்பார்கள். ஆனாலும் தாங்கள் மனந்திரும்பியிருப்பதைக் குறித்து இவர்களுக்குள் சந்தேகம் இருக்கும். வேறு சிலர் மனந்திரும்பாமலேயே தாங்கள் மனந்திரும்பியிருப்பதாக எல்லாரிடத்திலும் சொல்லுவார்கள். ஆனால் இவர்களுக்குள் பாவமான சிந்தனைகளும், பாவமான கிரியைகளும் நிரம்பியிருக்கும்.
மனுஷர் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தாலும், இந்த உலகமானது மனுஷருடைய உள்ளத்தில் வல்லமையாகக் கிரியை செய்கிறது. சிலர் இயேசுவையும் நேசிக்கிறார்கள். உலகத்திற்கும் பயப்படுகிறார்கள். இங்கு இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிற அதிகாரிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். அதிகாரிகளில் அநேகர் இயேசுகிறிஸ்துவிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஜெபாலத்திற்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர் நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவைக் கர்த்தரும் ஆண்டவரும் என்று அறிக்கைப்பண்ணாதிருப்பதே பாவம்தான். இவர்களுடைய உள்ளத்தில் இயேசுகிறிஸ்துவைக்குறித்து வெட்கமோ அல்லது பயமோ நிரம்பியிருக்கிறது. இயேசுகிறிஸ்து மாத்திரமே நம்முடைய உள்ளத்தில் பூரணமாக நிரம்பியிருக்கவேண்டும். ஜெபாலயம் என்பது யூதருடைய மார்க்க வழிபாட்டு ஸ்தலம். யூதருடைய சமுதாய பழக்கவழக்கங்களில் ஜெபாலயம் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒருவரை ஜெபாலத்திற்குப் புறம்பாக்கும் அதிகாரம் பரிசேயரிடத்தில் உள்ளது. ஜெபாலத்திற்கு புறம்பானவர்களால் சமுதாயத்தில் அங்கம் வகிப்பது மிகவும் கடினம்.
இயேசுகிறிஸ்துவிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிற அதிகாரிகள் கர்த்தருக்கும் பயப்படுகிறார்கள். பரிசேயருக்கும் பயப்படுகிறார்கள். தங்களைப் பரலோகத்திலிருந்து புறம்பாக்கிவிடுவாரோ என்று கர்த்தருக்கும், ஜெபாலத்திலிருந்து புறம்பாக்கிவிடுவார்களோ என்று பரிசேயருக்கும் இவர்கள் பயப்படுகிறார்கள். கர்த்தரிடத்தில் விசுவாசம் வைக்கும்போது நம்மிடத்தில் இருக்கும் மனுஷபயம் நம்மைவிட்டு நீங்கும். ஆனால் இவர்களிடத்திலோ தேவபயமும் மனுஷபயமும் இணைந்து காணப்படுகிறது. ஜெபாலயத்திலிருந்து தாங்கள் புறம்பாக்கப்பட்டால், அது தங்களுக்கு அவமானம் என்றும், தங்களுடைய குடும்ப வாழ்க்கையும் சமுதாய வாழ்க்கையும் இதனால் பாதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் பயப்படுகிறார்கள்.
தேவனால் வருகிற மகிமை
அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள் (யோவா 12:43).
பரிசேயர்களுடைய பயத்திற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. இவர்கள் மனுஷரால் வருகிற மகிமையை விரும்புகிறார்கள். அதே வேளையில் தேவனால் வருகிற மகிமையையும் விரும்புகிறார்கள். தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்புகிறார்கள். இவ்விரண்டு மகிமையையும் சீர்தூக்கிப்பார்த்து, மனுஷரால் வருகிற மகிமையே சிறந்தது என்று தீர்மானித்திருக்கிறார்கள். மனுஷர்கள் தங்களைப் புகழவேண்டுமென்றும், மனுஷர் மத்தியில் தங்களுக்கு உயர்ந்த அந்தஸ்து வேண்டுமென்றும் அதிகாரிகள் விரும்புகிறார்கள். மனுஷரைப் புகழுவதும் மனுஷரிடத்திலிருந்து புகழ்ச்சியைப் பெற்றுக்கொள்வதும் இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. பரிசேயர் இவர்களைத் தேவாலயத்திலிருந்து புறம்பாக்கிவிட்டால், இவர்களால் மனுஷரோடு சமுதாய உறவுகொள்ள முடியாது. மனுஷரைப் புகழமுடியாது. மற்ற மனுஷரும் இவர்களைப் புகழமாட்டார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்துவினிடத்தில் தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை அறிக்கைபண்ணாதிருக்கிறார்கள்.
இவர்கள் பரிசேயருக்குப் பயப்படுகிறார்கள். பரிசேயர் மூலமாக தங்களுக்குக் கிடைக்கும் சிலாக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களேயல்லாமல், தேவன் தங்களுக்குக் கொடுக்கும் சிலாக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இல்லை. பரிசேயர்கள் அவர்களை குற்றவாளிகளைப்போலத் தூஷிக்கிறார்கள். ஜெபாலயத்திற்கு வருகிற ஜனங்களும் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை மதிப்பதில்லை. தங்களுக்கு மனுஷர் மூலமாக மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்று இந்த அதிகாரிகள் விரும்புவதினால், இவர்கள் கிறிஸ்துவை அறிக்கைபண்ணாதிருக்கிறார்கள்.
அதிகாரிகளுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. இதுவரையிலும் இவர்கள் இந்த மகிமையை நன்றாக அனுபவித்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதினால், மனுஷர் மூலமாக வரும் இந்த மகிமையை இவர்கள் இழந்துபோக ஆயத்தமாகயில்லை. இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றினால் யூதசமுதாயத்தில் தாங்கள் தனிமைப்படுத்தப்படுவோம் என்னும் பயம் அதிகாரிகளுடைய உள்ளத்தில் நிரம்பியிருக்கிறது.
பரிசேயருக்குப் பயந்தாலும், அதிகாரிகள் தேவனால் வரும் மகிமையையும் சிந்தித்துப் பார்க்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்யும்போது, இவர்களுக்குத் தேவனைத் துதிக்கும் சிலாக்கியம் கிடைக்கும். தேவனும் தம்மை மகிமைப்படுத்துகிறவர்களை கனப்படுத்துவார். ஆனாலும் தேவனால் வரும் மகிமையைவிட மனுஷரால் வரும் மகிமையையே இவர்கள் அதிகமாய் விரும்புகிறார்கள். மனுஷர் மூலமாக வரும் மகிமையை அதிகாரிகள் அதிகமாக விரும்புவதினால், இவர்கள் தேவமகிமையை இழந்துபோகிறார்கள்.
மனுஷர் நம்மைப் புகழவேண்டும் என்று எதிர்பார்த்து ஊழியம் செய்வோமென்றால், நம்முடைய ஊழியம் மாய்மாலமாக இருக்கும். மனுஷருடைய புகழ்ச்சி நமக்கு உண்டாகும் எல்லா தீங்குக்கும் காரணமாகிவிடும். இயேசுகிறிஸ்துவையும் அவருடைய மார்க்கத்தையும் நாம் கனப்படுத்தாமல், மனுஷர் மூலமாக வரும் புகழ்ச்சியை மாத்திரம் நாம் கனப்படுத்தினால் நம்முடைய முடிவு பரிதாபமாக இருக்கும்.
அதிகாரிகள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். இந்த வசனத்தில் விரும்புதல் என்பதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும் கிரேக்கச் சொல் ""அகாபே'' மனுஷர் தங்களைப் புகழ வேண்டும். தங்களுக்கு ஐசுவரியம் பெருக வேண்டும். ஆதாயம் வரவேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நிந்தைகள் எதுவும் வரக்கூடாது என்று விரும்பினார்கள்.
இயேசு சத்தமிட்டுக் கூறியது யோவா 12 : 44-50
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன்
அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான் (யோவா 12:44,45).
இயேசுகிறிஸ்துவை நாம் மகிமைப்படுத்தினால்தான் அவருக்கு மகிமை உண்டாகும் என்பது தவறான சிந்தனை. அவர் தாமாகவே மகிமையுள்ளவராக இருக்கிறார். தம்முடைய ஊழியத்தைப்பற்றி இயேசுகிறிஸ்து எடுத்துக்கூறி தம்முடைய மகிமையை உறுதிபண்ணுகிறார். இயேசுகிறிஸ்து ஜனங்கள் மத்தியில் உபதேசம்பண்ணுகிற கடைசி உபதேசமாக, யோவான் இந்த சுவிசேஷத்தில் இதை எழுதுகிறார். இந்த சம்பவத்திற்குப் பின்பு இயேசுகிறிஸ்துவின் உபதேச ஊழியமெல்லாம் அவருடைய சீஷர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கொடுக்கப்படுகிறது.
இயேசுகிறிஸ்து தம்முடைய வார்த்தைகளை ஜனங்களுக்கு முன்பாகச் சொல்லும்போது ""சத்தமிட்டுப்'' பேசுகிறார். இயேசு சத்தமிட்டுப் பேசுவதினால் அவருடைய தைரியம் வெளிப்படுகிறது. சத்தியத்தைப் பேசுவதற்கு அவர் பயப்படவில்லை. தம்முடைய உபதேசத்தில் விசுவாசம் வைக்குமாறு ஜனங்களைத் தைரியமாக அழைக்கிறார். எல்லோருக்கும் முன்பாக வெளிப்படையாகப் பேசும் தைரியம் இயேசுகிறிஸ்துவிடம் உள்ளது. சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு இயேசுகிறிஸ்து வெட்கப்படவில்லை. இயேசுகிறிஸ்துவிடத்தில் தாங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தை அறிக்கைபண்ணுவதற்குஅதிகாரிகள் வெட்கப்படுகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்முடைய பிள்ளைகளை அங்கீகரித்து, அவர்களை எல்லோருக்கும் முன்பாக அறிக்கை செய்வதற்கு ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.
இயேசுகிறிஸ்து சத்தமிட்டு உபதேசம்பண்ணும்போது உபதேசத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் உண்மையும் வெளிப்படுகிறது. தம்முடைய ஊழியத்தில் இயேசு உறுதியோடு இருக்கிறார். தம்முடைய வார்த்தைகள் ஜனங்களுக்கு நன்மையைக் கொடுக்கும் என்று விசுவாசத்தோடு அறிவிக்கிறார். தமக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கிற சத்தியத்தையே ஜனங்களுக்கு உபதேசமாகப் பேசுகிறார்.
எல்லோரும் தம்முடைய உபதேசத்தைக் கவனித்துக் கேட்கவேண்டும் என்பதற்காகவே இயேசுகிறிஸ்து சத்தமிட்டுப் பேசுகிறார். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில், தம்முடைய சரீரத்தில் செய்கிற ஊழியக்காலம் முடிவுக்கு வரப்போகிறது. அவருக்கு இன்னும் கொஞ்சக்காலம் மாத்திரமே நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர் பிரத்தியட்சமாக சுவிசேஷத்தை அறிவிக்கும் காலம் முடிவடையப்போகிறது. தம்முடைய உபதேசங்களையெல்லாம் இயேசுகிறிஸ்து மறுபடியும் சுருக்கமாக ஜனங்களுக்கு அறிவிக்கிறார். வனாந்தரத்தில் மோசே ஜனங்களுக்குப் பேசியதுபோல இயேசுகிறிஸ்து இங்கு இவர்களிடம் பேசுகிறார். ""இதோ ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்'' (உபா 30:15) என்று மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் தன்னுடைய வார்த்தையின் முடிவுரையாகப் பேசினார். அதுபோலவே இயேசுகிறிஸ்து தேவாலயத்தைவிட்டு புறப்பட்டுப்போகும்போது, தம்முடைய உபதேசத்தில் மூன்று காரியங்களைத் தெளிவுபடுத்துகிறார். அவையாவன: 1. இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறவர்களுக்கு கிடைக்கும் சிலாக்கியம். 2. இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களுக்கு வரப்போகும் ஆபத்தும் அழிவும். 3. இயேசுகிறிஸ்துவின் உறுதியான அதிகாரம்.
இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருப்பதன் மூலமாக, பிதாவாகிய தேவனோடு நமக்கு மகிமையான ஐக்கியம் உண்டாகிறது. ""என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன், என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்'' என்று இயேசு கூறுகிறார். நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற போது அவரைச் சாதாரண மனுஷனாக விசுவாசிக்கவில்லை. அவரைத் தேவனுடைய குமாரனாக விசுவாசிக்கிறோம். நம்முடைய விசுவாசம் இயேசுகிறிஸ்துவில் முடிவடைந்துவிடுவதில்லை. இயேசுகிறிஸ்துவின் மூலமாக நம்முடைய விசுவாசம் நம்மைப் பிதாவாகிய தேவனிடத்திற்கு அழைத்துச் செல்கிறது. இயேசுகிறிஸ்துவின் மூலமாக நாம் பிதாவாகிய தேவனிடத்திற்குச் செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
""என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்'' என்று இயேசு கூறுகிறார். நாம் இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருக்கும்போது தேவனைப்பற்றிய அறிவுக்கு நேராக கடந்து வருகிறோம். இயேசுகிறிஸ்துவின் முகத்தில் தேவன் தம்மைத்தாமே வெளிப்படுத்துகிறார் ""இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்'' (2கொரி 4:6) என்று அப்போஸ்தலர் பவுல் எழுதுகிறார். இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தினால் தரிசிக்கிறவர்களை, தேவனைப்பற்றி அறியும் அறிவுக்கு நேராக அவர் அழைத்துச் செல்கிறார். மனுக்குலம் பாவத்தில் விழுந்துவிட்டாலும் தேவன் தம்முடைய கிருபையினால் மனுக்குலத்திற்குத் தம்மை வெளிப்படுத்தச் சித்தமுள்ளவராகயிருக்கிறார். கிறிஸ்துவின் மூலமாகத் தம்மை வெளிப்படுத்துவது தேவனுக்குப் பிரியமாயிற்று.
இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் அவரோடு முடிந்துபோவதில்லை. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் அவருடைய பிதாவாகிய தேவனையும் நாம் விசுவாசிக்கிறோம். இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய ஒரேபேறான குமாரன் என்று நாம் விசுவாசிக்கிறோம்.
நாம் செய்ய வேண்டிய காரியங்கள்
1. கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசிப்பதற்கு ஏதுவாக நாம் அவைகளைக் கேட்க வேண்டும். (யோவான் 12:47; ரோமர் 10:14).
2. கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கைக்கொள்வதற்கு ஏதுவாக நாம் அவைகளை விசுவாசிக்க வேண்டும். (யோவான் 12:47; ரோமர் 10:14).
3. நாம் இரட்சிக்கப்படுவதற்கு ஏதுவாகக் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கைக்கொள்ள வேண்டும். (மத் 10:22)
நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன்
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன் (யோவா 12:46).
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் ஒளியாக வந்திருக்கிறார். அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிற எவனும் இருளில் இருக்கமாட்டான். இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நமக்கு அவரில் ஆறுதலும் சந்தோஷமும் கிடைத்திருக்கிறது. இயேசுகிறிஸ்து தமது சுபாவத்தை இங்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த உலகத்திற்கு கிறிஸ்துவே ஒளியாகயிருக்கிறார். அவர் ஒளியாகவே இந்த உலகத்தில் வந்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிற நாம் இருளில் இருக்கவேண்டியதில்லை. நமது பாவசுபாவத்தின் பிரகாரமாக நாம் இருளில் இருக்கவேண்டியவர்கள். நாம் இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறபடியினால், இந்த இருளில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்னும் அவசியமில்லை. நாமும் இந்த உலகத்திற்கு ஒளியாகயிருப்போம். இயேசுகிறிஸ்து நமக்கு ஒளியாகயிருக்கிறார். அவர் மூலமாக நாம் இந்த உலகத்திற்கு ஒளியாகயிருப்போம். தேவன் நம்மை இந்த இருளிலிருந்து மீட்டுக்கொண்டார். நாம் தேவனோடு இருக்கும்போது இருளில் இராமல் வெளிச்சத்தில் இருக்கிறோம்.
வார்த்தையைக் கேட்டும் விசுவாசியாமற்போனால்
ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் (யோவா 12:47,48).
இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களுக்கு ஆபத்தும் அழிவும் காத்திருக்கிறது. ஒருவன் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவர் அவனை நியாயந்தீர்ப்பதில்லை. ஆனாலும் அவனுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு. இயேசுகிறிஸ்து உலகத்தை நியாயந்தீர்க்க வரவில்லை. அவர் இந்த உலகத்தை இரட்சிப்பதற்காகவே வந்திருக்கிறார். இந்த உலகத்தில் ஏராளமானோர் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள். அவருடைய வசனங்களைக் கேட்பதே மனுஷருக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய சிலாக்கியம். அவருடைய வார்த்தைகளைக்கேட்டும் சிலர் அவரை விசுவாசிப்பதில்லை. தம்மை விசுவாசிக்காதவர்களை இயேசுகிறிஸ்து நியாயந்தீர்ப்பதில்லையென்று கூறுகிறார்.
நாம் இப்போது ஒளியின் காலத்தில் இருக்கிறோம். சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும் சிலாக்கியம் இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது. ஒளியின் காலத்தில் நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறோமா, அல்லது விசுவாசியாமற்போனோமா என்பதன் அடிப்படையில் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். இயேசுகிறிஸ்து நம்மை நியாயந்தீர்க்கமாட்டார். அவருக்குப் பதிலாக அவர் சொன்ன வசனமே நம்மைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்.
இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவைத் தள்ளிவிடுகிறார்கள். சுவிசேஷம் எங்கெல்லாம் அறிவிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மனுஷர் தங்களுடைய விசுவாசத்தைக் குறித்துத் தீர்மானம்பண்ணவேண்டும். இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டுமா, அல்லது ஏற்றுக்கொள்ளவேண்டாமா என்று தீர்மானம்பண்ணவேண்டும். கிறிஸ்துவின் கொடி உயர்த்தப்படும்போது, நாம் கிறிஸ்துவின் பக்கமா அல்லது அவருடைய சத்துருவின் பக்கமா என்பதை தீர்மானம் பண்ண வேண்டும். இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை என்று எதுவுமில்லை. இயேசுகிறிஸ்துவைத் தள்ளிவிடுகிறவர்கள் உலகத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். உலகத்தைத் தள்ளிவிடுகிறவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இயேசுகிறிஸ்து தம்முடைய சத்திய வசனத்தை உபதேசம்பண்ணும்போது நீடியபொறுமையோடும் ஆத்தும பாரத்தோடு பேசுகிறார். அவர் யாரையும் நியாயந்தீர்ப்பதில்லை. உலகத்தை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக அவருக்கு வேறொரு முக்கியமான ஊழியம் இருக்கிறது. அவர் இந்த உலகத்தை இரட்சிக்கவேண்டும். உலகத்தை இரட்சிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்திருக்கிறார். நாம் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல், இரட்சிக்கப்படாமல் இருப்போமென்றால் அது இயேசுகிறிஸ்துவின் தவறு அல்ல. நம்முடைய தவறினால்தான் நாம் இன்னும் இரட்சிக்கப்படாமல் இருக்கிறோம். நம்மை இரட்சிப்பதற்கு இயேசுகிறிஸ்து எப்போதுமே ஆயத்தமாகயிருக்கிறார். இதுவே இரட்சணியக்காலம். கிருபையின் காலம். இந்தக் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொண்டு இயேசுகிறிஸ்து கொடுக்கும் இரட்சிப்பை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் அவரைத் தள்ளிவிடுகிறவர்கள் கடைசிநாளில் நியாயந்தீர்க்கப்படுவார்கள். அவிசுவாசிகளினால் இந்த நியாயத்தீர்ப்புக்குத் தப்பிப்போகமுடியாது. தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு இந்தக் கடைசிநாளில் வெளிப்படுத்தப்படும். இயேசுகிறிஸ்து இவர்களை நியாயந்தீர்க்கமாட்டார். இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களை நியாயந்தீர்க்கிறது ஒன்று இருக்கிறது.
இயேசுகிறிஸ்துவின் நீடிய பொறுமையையும் கிருபையையும் நாம் அசட்டை செய்துவிடக்கூடாது. தேவனுடைய கிருபையை அசட்டைபண்ணுவது அவருடைய நாமத்தைத் தூஷிப்பதற்கு இணையான பாவமாகும். இவர்களுக்கான இறுதி நியாயத்தீர்ப்பு கடைசிநாளில் நியமிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து சொன்ன வசனமே அப்போது அவர்களை நியாயந்தீர்க்கும். ""நான் சொன்ன வசனமே அவனை கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்'' என்று இயேசுகிறிஸ்து எச்சரித்துக் கூறுகிறார். அவிசுவாசிகளெல்லோரும் கடைசிநாளில் நியாயந்தீர்க்கப்படுவார்கள். கிறிஸ்துவின் வசனங்கள் அவிசுவாசிகளெல்லோரையும் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். அவர்களுடைய துன்மார்க்கத்தின் நிமித்தமாக அவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகும். இயேசுகிறிஸ்துவின் வசனம் அவர்களை ஆக்கினைக்குட்படுத்தும்.
இயேசு கிறிஸ்து இப்போது ஜனங்களை நியாயந்தீர்க்கமாட்டார். அவர் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்கவந்தார். அவருடைய வார்த்தைகள் கடைசி நாட்களில் அவிசுவாசிகளை நியாயம்தீர்க்கும்.
பிதா தமக்குச் சொன்னபடியே இயேசு பேசுகிறார்
நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார் (யோவா 12:49,50).
இயேசுகிறிஸ்து நம்முடைய விசுவாசத்தை எதிர்பார்க்கிறார். நம்மிடத்திலிருந்து எதிர்பார்ப்பதற்கு இயேசுகிறிஸ்துவுக்கு அதிகாரமுள்ளது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனிடத்திலிருந்து தம்முடைய தெய்வீக ஊழியத்தைப் பெற்றிருக்கிறார். ஆகையினால் அவர் எதையும் சுயமாய்ப் பேசவில்லை. அவர் பேசவேண்டியது இன்னதென்றும், உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும், அவரை அனுப்பின பிதாவே அவருக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இந்த சத்தியம் இதற்கு முன்னமே ஒரு முறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (யோவா 7:16). இயேசுகிறிஸ்துவின் உபதேசம் அவருடையது அல்ல. ஏனெனில் அவர் சுயமாய் எதையும் உபதேசிப்பதில்லை. இயேசுகிறிஸ்துவின் உபதேசம் எல்லாமே அவரை அனுப்பின பிதாவின் உபதேசமாகயிருக்கிறது. பிதாவாகிய தேவனே இயேசுகிறிஸ்துவுக்கு இந்த தெய்வீக ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்.
பிதாவின் ஆலோசனைகளை இயேசுகிறிஸ்து கட்டளை என்று குறிப்பிடுகிறார். இயேசுகிறிஸ்து நமக்குக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொடுப்பதற்கு முன்பாகவே, அவர் தாமாகவே கீழ்ப்படிதலை கற்றுக்கொண்டிருக்கிறார். அவர் தேவனுடைய குமாரனாக இருக்கிறபோதிலும், பிதாவுக்குக் கீழ்ப்படிகிறார். இயேசுகிறிஸ்து நமக்கு எல்லா விஷயத்திலும் முன்மாதிரியாக இருக்கிறார். தேவன் முதலாவது ஆதாமுக்கு ஒரு கட்டளையைக்கொடுத்தார். ஆதாமோ அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டான். அவனுடைய கீழ்ப்படியாமையினால் நாம் எல்லோரும் அழிந்துபோனோம். தேவன் இரண்டாவது ஆதாமுக்கு இப்போது கட்டளை கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவாகிய இரண்டாம் ஆதாம் தம்முடைய கீழ்ப்படிதலினாலே நம்மை இரட்சித்திருக்கிறார்.
தேவனுடைய கட்டளை மிகவும் முக்கியமானது. அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறது. மனுப்புத்திரருக்கு நித்திய ஜீவனையும் நித்திய சந்தோஷத்தையும் கொடுப்பதற்காக இயேசுகிறிஸ்து தேவனிடத்திலிருந்து நித்திய கட்டளையைப் பெற்றிருக்கிறார். இயேசுகிறிஸ்து பிதாவின் கட்டளையைப்பற்றி அறிந்திருக்கிறார். அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறது என்றும் அறிந்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியாமல் போகிறவர்கள் தங்களுடைய நித்திய ஜீவனை இழந்துபோகிறார்கள். கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்கள் நித்திய ஜீவனையும் மறுதலிக்கிறார்கள்.
தமக்குப் பிதாவினால் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளையையும் ஊழியத்தையும் பற்றி இயேசுகிறிஸ்து அறிந்திருக்கிறார். இயேசுகிறிஸ்து பேசுவது எல்லாமே, தம்மை அனுப்பின பிதா தமக்குக் கட்டளையிட்ட பிரகாரமாகவே பேசுகிறார். அவர் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. விசுவாசமுள்ள சாட்சி ஆத்துமாவை இரட்சிக்கும். இயேசுகிறிஸ்து சத்தியத்தை பூரணமாகப் பேசுகிறார்.
இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டு. கிறிஸ்துவின் உபதேசத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளும்போது பிதாவின் உபதேசத்தைப் புரிந்துகொள்கிறோம். நம்முடைய ஆத்துமாவை இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கிறோம். கிறிஸ்துவின் வார்த்தையை நம்பி அவருடைய பாதபடியில் நம்மைச் சமர்ப்பிக்கிறோம். இது நம்முடைய கீழ்ப்படிதலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இயேசுகிறிஸ்துவின் ஒவ்வொரு வார்த்தையும் பிதாவின் கட்டளையாக இருக்கிறது.
பிதாவின் சித்தத்தை ஜனங்களுக்கு தெரியப்படுத்தும் சிலாக்கியம் இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தமக்குச் சொன்னபடியே இயேசுகிறிஸ்து பேசுகிறார். ஆகையினால் அவருடைய பிள்ளைகளாகிய நாம் இயேசுகிறிஸ்து பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும். நம்முடைய முழு ஆத்துமாவையும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். கிறிஸ்துவின் நாமத்திற்குக் கொடுக்கவேண்டிய துதி கனமகிமையை நாம் அவருக்குச் செலுத்தவேண்டும். அவர் துதிக்குப் பாத்திரராகயிருக்கிறார். ஆகையினால் நாம் தம்மைத் துதிக்கவேண்டுமென்று தேவனுடைய நியாயத்தின் பிரகாரம் இயேசுகிறிஸ்து நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். நமக்கு அப்படிப்பட்ட கட்டளையையும் கொடுக்கிறார்.
இயேசு கிறிஸ்து தமது சுயமகிமைக்காக எதையும் செய்யவில்லை. அவர் பிதாவின் மகிமையையே தேடுகிறார். அவருடைய சித்தத்தையே செய்கிறார். இயேசு கிறிஸ்து உபதேசிக்க வேண்டிய சத்தியங்களை அவரை அனுப்பின பிதா அவருக்குக் கட்டளையிட்டுக் கூறியிருக்கிறார். அதை மட்டுமே இயேசு கிறிஸ்து உபதேசிக்கிறார்.
இயேசுகிறிஸ்து பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் அவரை அனுப்பின பிதாவே அவருக்குக் கட்டளையிட்டார்'' இதுவே நித்திய ஜீவனின் வல்லமை.
இயேசு கிறிஸ்து ஜனங்கள் மத்தியில் செய்யும் கடைசி ஊழியமாக யோவான் இந்தச் சுவிசேஷத்தில் குறிப்பிடுகிறார். பஸ்காவிற்கு முந்திய இரண்டாம் நாளில் அதாவது நிசான் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற எந்தக் காரியத்தையும் யோவான் இந்த சுவிசேஷத்தில் எழுதவில்லை.
இயேசு கிறிஸ்து எருசலேமிற்கு அதிகாலமே புறப்பட்டுச் செல்கிறார். அவருடைய சீஷர்கள் இயேசு கிறிஸ்துவிடம் அத்திமரத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார்கள். இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் உபதேசம் செய்து, மிகவும் முக்கியமான முதலாவது தீர்க்கதரிசனத்தைக் கூறுகிறார். இயேசு கிறிஸ்து தேவாலயத்தை விட்டு ஒலிவமலைக்குச் செல்கிறார். அங்கு முக்கியமான இரண்டாவது தீர்க்கதரிசனத்தைக் கூறுகிறார். அதன்பின்பு அவர் பெத்தானியாவிற்குத் திரும்பி வருகிறார். குஷ்டரோகியாக இருந்த சீமோனுடைய வீட்டிலே இரண்டாவது இராப்போஜனத்தில் பங்கு பெறுகிறார். அங்கு இயேசு கிறிஸ்துவிற்கு இரண்டாம் அபிஷேகம் நடைபெறுகிறது.