பாடுகளின் வாரம் திங்கட்கிழமை நிகழ்வு - 2
விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களும்
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, (மாற்கு 11:15)
இயேசுகிறிஸ்து தேவாலயத்திற்கு வருகிறார். அங்கு விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களும் நிறைந்திருக்கிறார்கள். காசுக்காரர் தங்கள் பலகைகளோடும், புறா விற்கிறவர்கள் தங்கள் ஆசனங்களோடும் அமர்ந்திருக்கிறார்கள். தேவனுடைய ஆலயம் ஒரு சந்தைவெளிபோல இருக்கிறது. போவோர் வருவோருக்கெல்லாம் தேவாலயம் ஒரு பொது நடைபாதையைப்போல இருக்கிறது.
இயேசுகிறிஸ்து எருசலேமுக்கு பசியோடு வருகிறார். எருசலேமுக்கு வந்தவுடன் அவர் தேவாயத்திற்குள் பிரவேசிக்கிறார். முந்தினநாள் இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் கண்ட அசுத்தமான காரியங்களெல்லாம் இன்றும் சுத்தமாகாமல் அப்படியே இருக்கிறது. தம்முடைய ஆவியில் வைராக்கியம் கொண்டு இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிடுகிறார். காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்துப்போடுகிறார். இயேசுகிறிஸ்து தேவாலயத்தை அழிக்க வந்ததாக அவருடைய சத்துருக்கள் அவர்மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தேவாலயத்தை அழிக்க வராமல் சுத்திகரிக்கவே வந்திருக்கிறார்.
காசுக்காரருடைய பலகைகளை கவிழ்த்துப்போடும்போது அதிலுள்ள காசுகளெல்லாம் தரையில் விழுந்திருக்கும். அதுதான் அந்த காசுகளுக்கு ஏற்ற இடம். இயேசுகிறிஸ்து விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்தும்போதும், காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்துப்போடும்போதும் அவருக்கு எதிர்ப்பு எதுவும் உண்டாகவில்லை. இயேசு எதை செய்தாலும் அது நன்மையாகவே இருக்கும். அது சரியானதாகவே இருக்கும். விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களும் தங்களுடைய வியாபாரத்தின் மூலமாக காசுகளை சம்பாதிக்கிறார்கள். அவர்கள்கூட இயேசுகிறிஸ்துவின் செய்கையை தங்கள் மனச்சாட்சியில் அங்கீகரித்து, அதை எதிர்க்கவில்லை.
தீமைக்கு எதிராக போரிடுகிறவர்கள் எதிர்பை நினைத்து பயப்படக்கூடாது. மறுமலர்ச்சி வேண்டுமென்றால் வைராக்கியத்தோடு போராடவேண்டும். சமுதாயத்திலுள்ள துன்மார்க்கத்தை அகற்றவேண்டுமென்றால் அஞ்சாமல் அதை எதிர்த்து போரிடவேண்டும். தொடர்ந்து போரிடும்போது நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமான வெற்றியை நம்மால் காணமுடியும்.
இந்த வசனத்தில் ""தேவாலயம்'' என்பது தேவாலயத்தின் பிரகாரங்களைக் குறிக்கும். இது தேவாலயத்திற்கு உள்ளே இருக்கும் மகாபரிசுத்த ஸ்தலம் அல்ல.
இயேசு கிறிஸ்துவின் இறுதி வார ஊழியத்தில் இரண்டாம் முறையாக அவர் தேவாலயத்தைச் சுத்திகரித்தார். மொத்தம் மூன்று முறை அவர் தேவாலயத்தைச் சுத்திகரிப்பதாக வாசிக்கிறோம். (யோவான் 2:13; மத் 21:12-16) தேவாலயத்தை அவர் எவ்வாறு தனிநபராக இருந்து, சுத்திகரித்தார். அவருக்குப் பலத்த எதிர்ப்பு இருந்தபோதிலும், அதற்கு நடுவில் எவ்வாறு இந்தக் காரியத்தைச் செய்தார். இதற்கெல்லாம் தேவனுடைய வல்லமை அவர்மூலமாக வெளிப்பட்டதே காரணம். இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் இப்படிப்பட்ட கிரியையைச் செய்ததினால் தேவாலயத்துத் தலைவர்கள் அவரைக் கொலைசெய்வதற்காகச் சதியாலோசனை பண்ணினார்கள். (மாற்கு 11:18)
கள்ளர்குகை
ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டு போகவிடாமல்: என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்- உபதேசித்தார் (மாற்கு 11:16,17).
யூதருக்கு தேவாலயம் ஒரு புனிதமான ஸ்தலம். அவர்களுக்கு அது ஒரு நடை பாதையோ, அல்லது ஒரு வியாபார ஸ்தலமோ அல்ல. அது தேவனுடைய வாசஸ்தலம். யூதர்கள் தேவாலயத்திற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள். தேவாலயத்தை பொது நடைபாதையைப்போல பயன்படுத்தி, அதன் வழியாக புறஜாதியார் பண்டங்களை கொண்டு போவதற்கு அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் காலப்போக்கில் தேவாலயத்தில் அசுத்தம் நிறைந்துவிடுகிறது. அது வியாபார ஸ்தலமாயிற்று. புறஜாதியாரின் பொது நடை பாதையாயிற்று. ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு பண்டம் பாத்திரங்கள் எடுத்துச்செல்லும் குறுக்கு வழிபோல தேவாலயத்தை ஜனங்கள் பயன்படுத்துகிறார்கள்.
தேவாலயத்தின் வழியாக ஒருவனும் யாதொரு பண்டத்தையும் கொண்டுபோக இயேசுகிறிஸ்து அனுமதிக்கவில்லை. தம்முடைய செய்கைக்கு இயேசு காரணம் கூறுகிறார். என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறார். தேவாலயம் ஸ்தாபிக்கப்பட்டபோது அது தேவனுடைய வீடாகவும், எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடாகவும் ஸ்தாபிக்கப்பட்டது. தேவாலயம் அப்படித்தான் இருக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்துவும் விரும்புகிறார்.
தேவாலயம் எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். யூதர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல் எல்லா ஜனங்களுக்குமே தேவாலயம் ஜெபவீடாக இருக்கிறது. கர்த்தருடைய நாமத்தை யாரெல்லாம் தொழுதுகொள்கிறார்களோ அவர்களெல்லோருமே இரட்சிக்கப்படுவார்கள். இயேசுகிறிஸ்து விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் தேவாலயத்திலிருந்து துரத்திவிடுவது அவருடைய ஆரம்ப ஊழியம் மாத்திரமே. இவர்கள் இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவின் வீட்டை வியாபார வீடாக்கியிருக்கிறார்கள் (யோவா 2:16). இப்போது இயேசு தேவாலயத்தை அசுத்தபடுத்தும் ஜனங்களைப்பார்த்து ""நீங்களோ அதை கள்ளர்குகையாக்கினீர்கள்'' என்று சொல்லி அவர்களுக்கு உபதேசிக்கிறார்.
உலகப்பிரகாரமான ஜனங்கள் உலகப்பிரகாரமான சிந்தையோடிருக்கிறார்கள். அவர்கள் தேவாலயத்திற்கு வரும்போது அவர்களுடைய உள்ளத்தில் மெய்யான தேவபக்தியில்லை. அவர்கள் ஜெபவீட்டை வியாபாரஸ்தலமாக்குகிறார்கள். பார்வைக்கு நீண்ட நேரம் ஜெபம்பண்ணுகிறார்கள். விதவைகளின் வீடுகளை பட்சித்துப் போடுகிறார்கள். தேவனுடைய ஆலயத்தை கள்ளர் குகையாக்கிவிடுகிறார்கள்.
எழுதப்பட்ட வார்த்தைக்கு இயேசு கிறிஸ்து விளக்கம் எதுவும் தரவில்லை. அவர் கூறுவதற்கு வியாக்கியானம்கூட தேவைப்படாது. புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும்.
வேதாகமமும் புரிந்து கொள்வதற்கு எளிமையானது. அதற்கான காரணங்கள்.
1. பரிசுத்த வேதாகமம் தேவனுடைய வெளிப்பாடு. (2தீமோ 3:16-17; 2பேதுரு 1:21; எபி 1:1)
2. ஏற்கெனவே கூறியுள்ள சத்தியத்தைப் பரிசுத்த வேதாகமம் மறுபடியும் வலியுறுத்துகிறது. (2கொரி 13:1) தேவன் என்ன சொல்கிறார் அதை எங்கே சொல்கிறார் என்பதை வாசித்து விட்டு, அதற்கு நாம் அப்படியே கீழ்ப்படிய வேண்டும்.
3. வேதாகமத்தின் மொழிநடை மிகவும் எளிமையானது. (லூக்கா 24:25,45).
4. பரிசுத்த வேதாகமத்திற்குக் கர்த்தரே ஆசிரியர். (2தீமோ 3:16-17; 2பேதுரு 1:21)
5. தேவனை நம்பும் ஜனங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் வேத வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது. (உபா 29:29; மத் 11:25; மத் 13:19-23; 2கொரி 4:1-6; 2தீமோ 3:16-17)
6. வேதவசனங்களைப் புரிந்து கொள்வதற்கு அதை வாசித்து, அதற்குக் கீழ்ப்படிந்தாலே போதுமானது. (சங் 1:2-3; 2தீமோ 2:15; மத் 11:15, மாற்கு 4:22-23)
7. பரிசுத்த வேதாகமத்தில் 80 சதவீதம் வரலாற்றையும், மனுஷர் எவ்வாறு வாழவேண்டும் என்னும் அறிவுரைகளையும் வாசிக்கிறúôம். மீதமுள்ள 20 சதவீதம் தீர்க்கதரிசன காரியங்களைக் கூறுகிறது. (மாற்கு 8:17)
வேதபாரகரும் பிரதான ஆசாரியரும்
அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலை செய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள் (மாற்கு 11:18).
வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் இயேசுகிறிஸ்துவின் செயலைக்கேட்டு மிகுந்த கோபமடைகிறார்கள். அவர்கள் இயேசுவை வெறுகிறார்கள். அதேவேளையில் அவருக்கு பயப்படவும் செய்கிறார்கள். காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்துப்போடுகிற இயேசுகிறிஸ்து, இதன் பின்பு தங்களுடைய பதவியின் ஆசனங்களையும் கவிழ்த்துப் போடுவாரோ என்று வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பயப்படுகிறார்கள்.
ஜனங்களெல்லோரும் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் உபதேசம் ஜனங்களுக்கு பிடித்திருக்கிறது. அதை அவர்கள் பிரமாணமாக அங்கீகரிக்கிறார்கள். ஜனங்கள் இயேசுவின் சுத்திகரிப்பு கிரியைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஜனங்கள் இயேசுவின் பக்கம் இருப்பதினால் வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் அவருக்கு பயப்படுகிறார்கள். இயேசுவை கொலை செய்வதற்கு வகை தேடுகிறார்கள். தங்களுடைய அதிகாரத்தையும் அந்தஸ்தையும் தக்க வைத்துக்கொள்வதற்காக இவர்கள் எந்த பாவச்செயலையும் செய்வதற்கு துணிந்தவர்கள்.