பாடுகளின் வாரம் : திங்கட்கிழமை நிகழ்வு -1

 











பாடுகளின் வாரம் : திங்கட்கிழமை நிகழ்வு -1

கனியை புசியாதிருக்கக்கடவன்

மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவி-ருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்               (மாற்கு 11:12-14). 


இயேசுகிறிஸ்து பெத்தானியாவில் இருக்கிறார். காலைவேளையில் பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு புறப்பட்டுப் போகிறார். காலைவேளை இயேசு தமது வேலைகளை ஆரம்பிக்கும் நேரம்.   பெத்தானியாவிலிருந்து புறப்பட்ட போது ஒருவேளை அவர் போஜனம்பண்ணாமல் புறப்பட்டு வந்திருக்க வேண்டும். ஆகையினால் அங்கிருந்து புறப்பட்டு வரும்போது அவருக்கு பசியுண்டாயிற்று. 


இயேசுகிறிஸ்து வரும் வழியில் ஒரு அத்திமரத்தை காண்கிறார். அந்த மரத்தில் ஏராளமான இலைகள் தளிர்த்திருக்கிறது. இலைகள் அதிகமாக இருப்பதினால் அந்த மரத்தில் பழம் இருக்குமென்று இயேசு எதிர்பார்க்கிறார். அந்த மரத்தில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்ப்பதற்காக அதன் அருகில் வருகிறார். ஆனால் மரத்திற்கு அருகில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல் அவர் வேறொன்றையும் காணவில்லை. 


இந்தக் காலம் அத்திப்பழ காலமுமில்லை.  அத்திப்பழக் காலத்தில் மரத்தில் ஏராளமான பழங்கள் இருக்கும். இது பழக்காலம் இல்லையென்றாலும், மரத்தில் ஏராளமான இலைகள் இருப்பதினால், அதில் ஏதாவது ஒரு சில பழங்களாவது இருக்குமென்று இயேசு எதிர்பார்க்கிறார். இயேசு அந்த மரத்தைப் பார்த்து சபிக்கிறார். இது முதல் ஒருக்காலும் ஒருவனும்  உன்னிடத்தில் கனியை புசியாதிருக்கக்கடவன் என்னும் சாபவார்த்தைகளை கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் சாபம் மனுஷருக்கு ஒரு எச்சரிப்பின் வார்த்தையாக கூறப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து அத்திமரத்தை சபித்ததினால், மரங்களுக்கு எச்சரிப்பின் வார்த்தையை அறிவிக்கவில்லை. அவர் மனுஷர்மீதே எச்சரிப்பின் வார்த்தையைக் கூறுகிறார்.


அத்திமரம் யூதருடைய சபைக்கு உவமையாக இருக்கிறது. யூத சமுதாயத்தில் ஏதாவது நற்கனி கிடைக்குமா என்று தேவன் தேடிப்பார்க்கிறார். ஆனால் யூதர்கள் மத்தியிலோ ஒரு நற்கனியும் காணமுடியவில்லை.  திராட்சத்தோட்டத்தில் ஒருவன் ஒரு அத்திமரத்தை நட்டியிருந்தான். அவன் வந்து அதிலே கனியை தேடினபோது ஒன்றுங்காணவில்லை (லூக் 13:6,7). இந்த அத்திமரமும் கனிகொடாமல், ஏராளமான இலைகளை மாத்திரம் தளிர்க்க வைத்திருக்கிறது. 


இயேசுகிறிஸ்து அத்திமரத்தை சபித்ததை  சீஷர்களும் தங்கள் காதுகளால் கேட்கிறார்கள்.  இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து வரும் ஆசீர்வாத வார்த்தைகளை நாம் மறந்துவிடாமல்  நமது நினைவில் வைத்திருக்கவேண்டும். அதுபோலவே அவருடைய வாயிலிருந்து வரும் சாபவார்த்தைகளையும் நாம் மறந்துவிடாமல் நமது நினைவில் வைத்திருக்கவேண்டும்.


 இரண்டு வகையான அத்திமரங்கள் உண்டு. முதலாவது வகை சீக்கிரமாகவே பழுக்கக்கூடியவை (ஏசா 28:4; எரே 24:2) இரண்டாம் வகை காலம்தாழ்த்திப் பழுக்கக்கூடியவை (எரே 8:13; எரே 29:17). அத்திமரத்தில் இலைகள் இருந்தால் அதில் கனிகள் இருக்கும். பழக்காலம் வராவிட்டாலும், மரத்தில் இலை காணப்படுமானால் அதில் பழங்கள் இருக்கும் என்பதற்கு அடையாளம்.


    ""இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன்'' (மாற்கு 11:14) என்னும்  இந்த வசனத்திற்கு பலவிதமான விளக்கவுரைகளைக் கூறுகிறார்கள். இந்த அத்திமரம் யாருக்குச் சொந்தமானது என்பதைப் பற்றியும், இயேசு கிறிஸ்து அந்த மரத்தைச் சபித்ததைப் பற்றியும் ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த ஆராய்ச்சிகளை விட இயேசு கிறிஸ்துவே சிருஷ்டிகர் என்பதையும், அவருக்குச் சர்வ சிருஷ்டியின்மீதும் அதிகாரம் உள்ளது என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.   பிதாவாகிய தேவன் தமது குமாரன் மூலமாகக் கிரியை செய்கிறார். தேவனுடைய கிரியையைத் தர்க்கம் பண்ணுவதற்கு நமக்கு உரிமையில்லை. (ரோமர் 9:14-24)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.