சங்கீதம் 28 விளக்கம்

  சங்கீதம் 28 விளக்கம்

(தாவீதின் சங்கீதம்.)

நியாயத்தீர்ப்புக்காக மூன்றாவது ஜெபம் 

பொருளடக்கம்

    1. ஜெபத்தைக் கேட்க வேண்டுமென்று தேவனிடம் ஏறெடுக்கப்பட்ட இரண்டு விண்ணப்பங்கள் - (28:1-2) 


    2. துன்மார்க்கன் மீது நியாயத்தீர்ப்பு வரவேண்டுமென்று நான்கு விண்ணப்பங்களும், அதற்கு பத்துவிதமான காரணங்களும் - (28:3-5) 


    3. கர்த்தர் கொடுத்த ஏழு ஆசீர்வாதங்களுக்காக அவரைத் துதித்தல் - (28:6-9) 


இருபத்தெட்டாவது சங்கீதத்தின் முதல்பகுதி, தாவீது கர்த்தரிடத்தில் ஏறெடுக்கிற ஜெபவிண்ணப்பமாகும் (சங் 28:1-3). கர்த்தர் தாமே தன்னுடைய சத்துருக்களுக்கு சரிக்குச்சரிகட்டுமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார் (சங் 28:4,5). இந்த சங்கீதத்தின் இரண்டாவது பகுதி, தாவீது கர்த்தருடைய சமுகத்தில் அவரைத்  துதித்து, ஸ்தோத்திரம்பண்ணுவதாகும் (சங் 28:6-8). கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் தேவஆசீர்வாதம் வருமென்று தாவீது தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார் (சங் 28:9).


தாவீதின் ஜெபம் சங் 28 : 1-5

என் கன்மலையாகிய கர்த்தாவே வச.1,2

என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்  (சங் 28:1,2).  


தாவீது இப்போது மிகுந்த நெருக்கத்திலிருக்கிறார்.  சத்துருக்கள் மூலமாய் அவருடைய ஜீவனுக்கு ஆபத்து உண்டாயிற்று. தாவீது தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்.  கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினால், தன்னுடைய விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து, அவற்றிற்கு பதில் கொடுக்கவேண்டும் என்றும் தாவீது ஜெபம்பண்ணுகிறார். 


தாவீது கர்த்தரைப்பற்றிச் சொல்லும்போது, ""என் கன்மலையாகிய கர்த்தாவே'' என்று சொல்லுகிறார். இந்த வாக்கியம் தேவனுடைய  வல்லமையைக் குறிப்பிடுகிறது. தாவீது கர்த்தருடைய சர்வவல்லமையில் நம்பிக்கை வைத்திருக்கிறார். தாவீது வல்லமையுள்ள கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார். தாவீது இப்போது மிகுந்த நெருக்கத்திலிருக்கிறார்.  ஜலப்பிரவாகத்தில் மூழ்கிவிடுவதுபோல மிகுந்த ஆபத்திலிருக்கிறார். கர்த்தர் தாவீதைக் காப்பாற்றினால் மாத்திரமே அவருடைய ஜீவன் பிழைக்கும். இல்லையென்றால் தாவீதுக்கு அவருடைய சத்துருக்கள் •மூலமாய் மரணம் நிச்சயம் உண்டாகும். 


தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணும்போது, ""நீர் கேளாதவர்போல மௌனமாயிராதேயும்'' என்றும் சொல்லுகிறார். தாவீதுக்கு  கர்த்தருடைய கிருபையும் அநுக்கிரகமும் தேவை. கர்த்தர் தாவீதின் விண்ணப்பத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பாதுகாக்கவேண்டும்.  கர்த்தர் மௌனமாயிருந்தால், தாவீது குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார். இந்த வாக்கியம் மரித்துப்போனவர்களைக் குறிக்கிறது.  மரித்துப்போனவர்களை குழியில் இறக்குவார்கள். 


கர்த்தரே தாவீதுக்கு சிநேகிதராகயிருக்கிறார்.  கர்த்தரே தாவீதின் நம்பிக்கை. கர்த்தர் மாத்திரமே தாவீதுக்கு உதவி செய்யக்கூடியவர்.  கர்த்தர் தாவீதின் விண்ணப்பத்திற்குச் செவிகொடுக்காமல் மௌனமாயிருந்தால், தாவீதுக்கு உதவிசெய்ய வேறு ஒருவருமில்லை.  தாவீதின் நம்பிக்கையும், அவருடைய பாதுகாப்பும், அவரும் அழிந்துபோவார்கள். தாவீதுக்கு கர்த்தருடைய உதவி தேவைப்படுகிறது.  இதற்காக அவர் கர்த்தருடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுக்கிறார். தன்னுடைய கரங்களை விரித்து கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தருடைய பரிசுத்த சந்நிதியிலிருந்து  தாவீதுக்கு பதில் கிடைக்கும். 


கர்த்தருடைய பரிசுத்த சந்நிதி என்பது,  ஆசரிப்புக்கூடாரத்திலும், தேவாலயத்திலுமுள்ள  மகாபரிசுத்த ஸ்தலத்தைக் குறிக்கும். அங்கு தேவனுடைய உடன்படிக்கை பெட்டியும் கிருபாசனமும் வைக்கப்பட்டிருக்கிறது.  கர்த்தராகிய தேவன் மகாபரிசுத்த ஸ்தலத்திலே, கேருபீன்கள் நடுவிலே வாசம்பண்ணுகிறார். அங்கிருந்து அவர் தம்முடைய பிள்ளைகளோடு பேசுகிறார். 


""மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின்                     நடுவி-ருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்'' (எண் 7:89). 


கர்த்தருடைய பரிசுத்த சந்நிதி இயேசுகிறிஸ்துவுக்கு அடையாளம்.  புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நாம், நம்முடைய கைகளையும், கண்களையும் இயேசுகிறிஸ்துவை நோக்கி  ஏறெடுக்கவேண்டும். நமக்கு தேவனிடத்திலிருந்து வரும் எல்லா நன்மைகளும் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே வருகிறது.  


தாவீது  கர்த்தரை நோக்கி சத்தமிட்டு கூப்பிடுகிறார். அவர் கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக மௌனமாயிருக்கவில்லை. தன்னுடைய பிரச்சனைகளை மனுஷரிடத்திலே போய் சொல்லுவதற்குப் பதிலாக, கர்த்தருடைய சமுகத்திற்கு வந்து, கர்த்தருடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராக, தன்னுடைய கைகளை ஏறெடுக்கிறார்.   கர்த்தர் தாமே தன்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளுமாறு தாவீது பயபக்தியாய் ஜெபம்பண்ணுகிறார். 

தாவீதின் விண்ணப்பங்கள்

    1. நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்

    2.  என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும் (சங் 28:2)

என்னை வாரிக்கொள்ளாதேயும் வச.3

அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்-யும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்  (சங் 28:3). 


பாவிகளுக்கும் துன்மார்க்கருக்கும் அழிவு நியமிக்கப்பட்டிருக்கிறது.  தாவீது கர்த்தருடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராக நிற்கிறார். தாவீதுக்கு துன்மார்க்கரோடு பங்குமில்லை பாத்தியமுமில்லை. கர்த்தர் துன்மார்க்கரையும் அக்கிரமக்காரரையும் வாரிக்கொள்வார்.  அவர்களுடைய ஆத்துமாக்களை நித்திய அழிவுக்கு நேராக அனுப்பிவிடுவார்.  


துன்மார்க்கர்கள் தங்கள் அயலானுக்கு சமாதான வாழ்த்துதல்களைச் சொல்லுகிறார்கள். இவர்களுடைய வார்த்தை சமாதானமாயும், இனிமையாயும் இருக்கும். ஆனால் இவர்களுடைய இருதயங்களிலோ பொல்லாப்பு நிரம்பியிருக்கும். வார்த்தையினால் வாழ்த்துவார்கள்.  தங்கள் இருதயத்தினாலும், கிரியையினாலும் சபிப்பார்கள். தாவீதின் இருதயத்தில் பொல்லாப்பு இல்லை. அவர் கர்த்தருக்கு முன்பாக தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறார்.  


கர்த்தர் துன்மார்க்கரையும் அக்கிரமக்காரரையும் வாரிக்கொள்ளும்போது, தன்னை அவர்களோடு சேர்த்து வாரிக்கொள்ளவேண்டாமென்று தாவீது பணிவாய் விண்ணப்பம்பண்ணுகிறார். துன்மார்க்கருக்கு அழிவு வரும்போது கர்த்தர் தன்னை அந்த அழிவிலிருந்து  விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும் என்பதே தாவீதின் விண்ணப்பம்.


துன்மார்க்கர் வஞ்சகத்தினால் நிரம்பியிருக்கிறார்கள். சாதுரிய வார்த்தைகளைப் பேசுகிறார்கள். தாவீதுக்கு  ஆதரவாக இருப்பதுபோல நடிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பேச்சும் கிரியைகளும் தாவீதுக்கு விரோதமாகவே இருக்கிறது. தாவீது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, தன்னுடைய சத்துருக்களுக்குப் பொல்லாப்பு எதையும் செய்யவில்லை. அவர் உத்தமர்.  உத்தமமாய் சிந்திக்கிறவர். உத்தமமாய் கிரியை செய்கிறவர். சத்துருக்கள் தனக்கு விரோதமாய்ப் பொல்லாப்பு செய்தாலும், தாவீதோ யாருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், கர்த்தரையே நம்பியிருக்கிறார்.

தாவீதின் விண்ணப்பங்கள்

    1. துன்மார்க்கரோடு என்னை வாரிக் கொள்ளாதேயும் (சங் 28:3-4).

    2. அவர்களுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குச் செய்யும்

    3. அவர்கள் கைகளின் செய்கைக்குத் தக்கதாக அவர்களுக்கு அளியும்  (சங் 28:4)

    4.  அவர்களுக்கு சரிக்குச் சரிக்கட்டும்

சரிக்குச் சரிகட்டும் வச.4

அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்  (சங் 28:4). 


கர்த்தர் நீதியும் நியாயமுமுள்ளவர்.  அவரே நீதியுள்ள நியாயாதிபதி. அவர் துன்மார்க்கரை நீதியாய் விசாரித்து, அவர்களுடைய துர்க்குணத்திற்குத்தக்க பிரகாரம், அவர்களுக்கு நீதியான ஆக்கினைத்தீர்ப்பு கொடுப்பார். துன்மார்க்கருடைய கிரியைகள் பொல்லாங்கு நிரம்பியதாயிருக்கிறது.  கர்த்தர் தாமே துன்மார்க்கருடைய கிரியைகளுக்கும், அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாய், அவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு கொடுக்கவேண்டுமென்று தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். 


கர்த்தருடைய நியாயத்தீர்ப்பைப்பற்றிச் சொல்லும்போது, கர்த்தர் தாமே துன்மார்க்கருடைய கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு  தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்குத்தக்கதாக, கர்த்தர் அவர்களுக்கு சரிக்குச் சரிகட்டவேண்டும் என்றும் தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.  தாவீதின் விண்ணப்பத்தில் பழிவாங்கும் நோக்கம் எதுவுமில்லை. கர்த்தர் தம்முடைய நீதியை நிறைவேற்றவேண்டும் என்றே தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். 


நம்முடைய சத்துருக்களுக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டும்.  நம்மை சபிக்கிறவர்களையும் நாம் ஆசீர்வதிக்கவேண்டும். சத்துருக்களுக்காக ஜெபிப்பது நம்முடைய கடமை. நம்முடைய சத்துருக்களை நாமே பழிவாங்கவேண்டுமென்று விரும்பக்கூடாது. அவர்களை கர்த்தருடைய                    நீதியான நியாயத்தீர்ப்புக்கு ஒப்புக்கொடுத்துவிடவேண்டும். கர்த்தர் தம்முடைய நீதியை துன்மார்க்கர்மீது நிச்சயமாய் நிறைவேற்றுவார். 


துன்மார்க்கர்கள் தங்களுடைய துன்மார்க்கத்திலிருந்து மனந்திரும்பி கர்த்தருடைய சமுகத்தில் வந்தால் அவர்களுக்கு பாவமன்னிப்பு உண்டு.  தாங்கள் செய்த தப்பிதங்களுக்கு அவர்கள் மனம்வருந்தாமல், துணிகரமாய்த் துன்மார்க்கம் செய்து, பாவம் செய்தால் தேவன் அவர்களை நீதியாய் விசாரிப்பார்.  அவர்களுக்கு நீதியான தண்டனை கொடுப்பார். கர்த்தர் தம்முடைய நியாயத்தீர்ப்பு நாளிலே துன்மார்க்கருக்குத்தக்க தண்டனையைக் கொடுப்பார். துன்மார்க்கருடைய  துர்க்கிரியைகளுக்குத்தக்க பிரகாரம், கர்த்தர் அவர்களை சரிக்குச் சரிகட்டுவார். 


துன்மார்க்கரின் அழிவைக் குறித்து தாவீது இங்கு தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறார். கர்த்தர் துன்மார்க்கருடைய  கிரியைகளுக்கும், அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்வார் என்றும், துன்மார்க்கருடைய கைகளின் செய்கைக்குத்தக்கதாக  அவர்களுக்கு அளிப்பார் என்றும், துன்மார்க்கருக்கு கர்த்தர் சரிக்குச் சரிகட்டுவார் என்றும் தாவீது தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். 

அவர்களை இடித்துப்போடுவார் வச.5

அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக்கட்டமாட்டார் (சங் 28:5). 


துன்மார்க்கர் கர்த்தருடைய செய்கைகளையும், அவருடைய கரத்தின் கிரியைகளையும் கவனியாதிருக்கிறார்கள். கர்த்தருடைய வல்லமையை பார்க்கக்கூடாது என்று தீர்மானித்து, தங்களுடைய கண்களை  தாங்களே மூடிக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட துன்மார்க்கருக்கு அழிவு நிச்சயம் வரும் என்று தாவீது தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்.  


கர்த்தர் தம்முடைய  பலத்த செய்கைகளின் மூலமாயும், தம்முடைய கரத்தின் கிரியைகளின் மூலமாயும், தம்முடைய தெய்வீக வல்லமையை  மனுஷர் மத்தியிலே வெளிப்படுத்துகிறார். தம்முடைய பிள்ளைகளுக்கு தம்முடைய தெய்வீக சுபாவத்தை, தம்முடைய கிரியைகளின் மூலமாய் வெளிப்படுத்துகிறார்.  கர்த்தர் தம்முடைய பிள்ளைகளோடு, தம்முடைய கிரியைகளின் மூலமாய்ப் பேசுகிறார். 


கர்த்தர் துன்மார்க்கரை அழித்துப்போடுவார். துன்மார்க்கர் இம்மையிலும் மறுமையிலும் அழிவைச் சந்திப்பார்கள். கர்த்தர் அவர்களை இடித்துப்போடுவார். அவர்களைக் கட்டமாட்டார். அவர்களாலும் தங்களைக் கட்டிக்கொள்ள முடியாது. துன்மார்க்கர் கர்த்தருடைய செய்கைகளையும், அவருடைய கிரியைகளையும் கவனியாமல், துணிகரமாய்த் துன்மார்க்கம்பண்ணுகிறார்கள். தேவனுடைய மகத்துவத்தை அசட்டைபண்ணுகிறார்கள். கர்த்தருடைய சர்வவல்லமையைப் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறார்கள்.  கர்த்தருடைய கரத்தின் கிரியைகள் அவருடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. காணக்கூடாத இரகசியங்கள் கர்த்தருடைய கரத்தின் கிரியைகளினால் நமக்குப் பிரத்தியட்சமாய்த் தெரிகிறது. துன்மார்க்கரோ சரீரப்பிரகாரமான கண்கள் இருந்தும், ஆவிக்குரிய குருடராயிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு சரீர அழிவும் ஆவிக்குரிய அழிவும் உண்டாகிறது. 


தாவீதின் துதி சங் 28 : 6-9

என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார் (சங் 28:6).


தாவீது கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறார்.      தாவீது விசுவாசத்தோடு கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறார். கர்த்தர்      தன்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டதாக விசுவாசத்தோடு சொல்லுகிறார். அதே விசுவாசத்தோடு       கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்கிறார். விசுவாசத்தோடு ஜெபம்பண்ணுகிறவர்கள், அதே விசுவாசத்தோடு கர்த்தருக்குள்  சந்தோஷமாய்க் களிகூரவும்வேண்டும். ஜெபத்தினால் ஜெயித்ததை, துதியினால் அணிந்துகொள்ளவேண்டும். 

தேவனிடமிருந்து நமக்கு வரும்  சகாயங்கள்

    1. அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார் (சங் 28:6).

    2. அவர் என் பெலனாக இருக்கிறார் (சங் 28:7,8).

    3. அவர் என்னுடைய கேடகமாயிருக்கிறார் (சங் 28:7)

    4. என் சகாயர்

    5. என் இரட்சிப்பு (சங் 28:9).

    6. அவரே என் ஆசீர்வாதம்

    7. அவரே என் போஜனமும் ஆதரவும்

கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார் வச.7

கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்  (சங் 28:7). 


தாவீது கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்.  தன்னுடைய விசுவாசத்தை அவர் தனக்குத்தானே உற்சாகப்படுத்திக்கொள்கிறார்.  கர்த்தர் தன்னைக் குறித்து ஒரு திட்டமும் தீர்மானமும் வைத்திருக்கிறார் என்பது தாவீதுக்குத் தெரியும். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமே  நமக்கு சகலமும் நடைபெறும். இதை நினைத்து நாம் எப்போதுமே சந்தோஷமாயிருக்கவேண்டும். 


கர்த்தருடைய பிள்ளைகள் சூழ்நிலைகளைப்பார்த்து பயப்படக்கூடாது.  மனம்கலங்கக்கூடாது. நம்முடைய ஜீவியத்தில் கர்த்தருடைய சித்தமே நிறைவேறும் என்று விசுவாசித்து, அதற்காக கர்த்தரைத் துதிக்கவேண்டும். நாம் எதைச் செய்தாலும் துதிக்க ஆரம்பிக்கவேண்டும்.  கர்த்தரை நம்புகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. 


தாவீதின் இருதயம் கர்த்தரை நம்பியிருந்தது.  அவர் கர்த்தரிடத்தில் சகாயம் பெற்றார். தாவீது கர்த்தருடைய வல்லமையிலும், வாக்குத்தத்தத்திலும் நம்பிக்கை வைத்திருந்தார்.  தாவீதின் நம்பிக்கை வீணாய்ப் போய்விடவில்லை. தம்மை நம்புகிறவர்களை கர்த்தர் கைவிடமாட்டார். அவர்களுக்கு ஏற்ற வேளையிலே சகாயம்பண்ணுவார்.  தாவீது கர்த்தரிடத்திலிருந்து சகாயம் பெற்றிருக்கிறார். 


கர்த்தருடைய உதவிகள் எல்லாமே அவருக்குச் சித்தமான வேளையில் நமக்குக் கிடைக்கும்.  கர்த்தருடைய உதவியை நாம் விசுவாசிக்கவேண்டும். விசுவாசத்தோடு காத்திருக்கவேண்டும். கர்த்தருடைய உதவி  நமக்கு நிச்சயம் கிடைக்குமென்று விசுவாசித்து, நாம் அவரைத் துதிக்க ஆரம்பிக்கவேண்டும். கர்த்தருக்காகக் காத்திருக்கும்போது, நம்முடைய வாயிலிருந்து ஸ்தோத்திரபலிகள்  ஏறெடுக்கப்படவேண்டும். 


 தாவீது கர்த்தரிடத்தில் உதவி பெற்றிருக்கிறார். இதனால் அவருடைய இருதயம் களிகூருகிறது.  தன்னுடைய பாட்டினால் தாவீது கர்த்தரைத் துதிக்கிறார். கர்த்தருக்காகக் காத்திருப்பதைப்பற்றி தாவீது இவ்வாறு பாடுகிறார்.  ""நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு''           (சங் 27:13,14). 


கர்த்தரைத் துதிக்கும் துதியின் அம்சம்


    1. தேவனால் சகாயம் பெற்றேன்  (சங் 28:6).       

    2. என் இருதயம் களிகூருகிறது  (சங் 28:7).

    3. என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.

கர்த்தர் அவர்களுடைய பெலன் வச.8

கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம் பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்  (சங் 28:8). 


கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவர்களுக்கும், விசுவாசமுள்ளவர்களுக்கும், தேவனுடைய உதவிகளும் ஒத்தாசைகளும், இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வரும். கர்த்தருடைய பிள்ளைகளெல்லோருக்கும், கர்த்தரே அவர்களுடைய பெலனாயிருக்கிறார். கர்த்தர் தாவீதுக்கு மாத்திரமல்ல, கர்த்தரை நம்புகிற எல்லாருக்குமே  அவர் பெலனாகயிருக்கிறார். 


கர்த்தர் நம்முடைய பெலனாயிருப்பதை விசுவாசிகள் ஒருவருக்கொருவர் சொல்லி தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும். கர்த்தர் மற்றவர்களுக்கு பெலனாயிருப்பதுபோல நமக்கும் பெலனாயிருக்கிறார். இயேசுகிறிஸ்து அவர்களுடைய தேவனாயிருப்பதுபோல நம்முடைய தேவனாயும் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்குள் விசுவாசிகளெல்லோருக்கும் ஐக்கியமுண்டாயிருக்கிறது. 


அப்போஸ்தலர் பவுல் விசுவாசிகளுக்கு இடையேயுள்ள ஐக்கியத்தைப்பற்றி கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபத்தில்  இவ்வாறு சொல்லுகிறார். ""கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது'' (1கொரி 1:2). 

அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்  வச.9

தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்         (சங் 28:9).


தாவீது இந்த சங்கீதத்தின் ஆரம்பத்தில் கர்த்தரிடத்தில் தன்னுடைய விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார்.  இதன் பின்பு கர்த்தர் தன்னுடைய வேண்டுதல்களுக்குப் பதில்கொடுப்பார் என்று விசுவாசித்து அவரைத் துதிக்கிறார்.  இந்த சங்கீதத்தின் கடைசிப் பகுதியில், தாவீது கர்த்தருடைய பிள்ளைகளுக்காக ஜெபம்பண்ணுகிறார். கர்த்தருடைய இரட்சிக்கப்பட்ட ஜனமே  அவருடைய சபையாராயிருக்கிறார்கள். 


தாவீது இஸ்ரவேலுக்காக ஜெபிக்கிறார். அவர்களைப்பற்றிச் சொல்லும்போது,  ""என்னுடைய ஜனம்'' என்று சொல்லாமல், ""உமது ஜனம்'' என்று சொல்லுகிறார். கர்த்தர் தாமே தமது ஜனத்தை இரட்சிக்கவேண்டுமென்பது தாவீதின் விண்ணப்பம். இஸ்ரவேல் புத்திரர்கள் கர்த்தருடைய சுதந்தரராயிருக்கிறார்கள்.  கர்த்தர் தாமே தம்முடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். 

தாவீது இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தரிடத்தில் நான்கு காரியங்களை  விண்ணப்பம்பண்ணுகிறார் அவையாவன: 

1. கர்த்தர் தாமே தம்முடைய பிள்ளைகளை  அவர்களுடைய சத்துருக்களிடமிருந்து விலக்கி, மீட்டு இரட்சிக்கவேண்டும். 

2. கர்த்தர்   தாமே தம்முடைய பிள்ளைகளை எல்லா நன்மைகளினாலும் ஆசீர்வதிக்கவேண்டும். 

3.  கர்த்தர் தாமே  தம்முடைய பிள்ளைகளைப் போஷிக்கவேண்டும்.  

4. கர்த்தர் தாமே தம்முடைய பிள்ளைகளை என்றென்றைக்கும் உயர்த்தவேண்டும்.


இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய பிள்ளைகளாகயிருந்தாலும், அவர்களுக்கென்று சுயஆலோசனைகளும், சுயவிருப்பங்களும், சுயதிட்டங்களும் இருக்கும்.  கர்த்தர் இவையெல்லாவற்றையும் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவற்றை மாத்திரம் இஸ்ரவேலர் மத்தியிலே நடப்பிக்கவேண்டும். கர்த்தர் தாமே இஸ்ரவேல் புத்திரரின் சிந்தனைகளையும், கிரியைகளையும் ஆளுகை செய்யவேண்டும். 


கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைப் போஷித்து, அவர்களை ஆளுகை செய்யவேண்டும். அவர்களை ஆளுகை செய்ய ராஜாக்களையும்,  ஆசாரியர்களையும் கர்த்தர் தாமே நியமனம்பண்ணவேண்டும். இஸ்ரவேலை ஆளுகை செய்கிறவர்களும் ஞானத்தோடும், தேவபக்தியோடும் ஜனங்களை ஆளுகை செய்யவேண்டும்.


கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அவர்களுடைய எல்லா இக்கட்டுக்களுக்கும், ஆபத்துக்களுக்கும், விலக்கி, மீட்டு, இரட்சித்து அவர்களை உயர்த்தவேண்டும். தாவீதின் காலத்திலிருந்த  இஸ்ரவேலர்களுக்கு மாத்திரமல்ல, இனிமேல் வரப்போகிற காலத்தில் இருக்கப்போகிற இஸ்ரவேலருக்காகவும் தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் இஸ்ரவேலரை என்றென்றைக்கும் உயர்த்தவேண்டும் என்பதே தாவீதின் ஜெபம்.  கர்த்தர் அவர்களை முடிவுபரியந்தம் உயர்த்தவேண்டும் என்பதே தாவீதின் விண்ணப்பம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.