கேடகம்
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர் (சங் 3:3).
தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். ஆனால் தாவீதோ கர்த்தரையே நம்பியிருக்கிறார்."தேவனிடத்தில் தாவீதுக்கு உதவி இல்லை" என்று சத்துருக்கள் சொல்லுகிறார்கள். தாவீதோ, முழுநிச்சயத்தோடு, "கர்த்தர் என்னுடைய கேடகமாயிருக்கிறார்" என்று சொல்லுகிறார். தாவீதைச் சுற்றிலும் சத்துருக்கள் சூழ்ந்திருக்கிறார்கள். கர்த்தர் தாவீதை எல்லா திசைகளிலுமிருந்தும் பாதுகாத்துக்கொள்கிறார். கர்த்தரே தாவீதைப் பாதுகாக்கிற கேடகமாகயிருக்கிறார்.
தாவீது இப்போது தன்குமாரன் அப்சலோமுக்கு தப்பி ஓடிப்போகிறார். இந்தச் சூழ்நிலையிலும் கர்த்தர் தன்னுடைய மகிமையும், தன் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறார் என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு துன்பமும், பாடுகளும் வேதனைகளும் வரும் இப்படிப்பட்ட சமயங்களில் நாம் நம்முடைய சூழ்நிலைகளை நோக்கிப் பார்த்தால்
சோர்ந்துபோய்விடுவோம். நமக்கு வேதனையைக் கொடுக்கும் சூழ்நிலைகளை நோக்கிப் பார்க்காமல் நமக்கு ஆதரவாகயிருக்கும் கர்த்தரையே நோக்கிப் பார்க்கவேண்டும்.
கர்த்தரை நம்புகிறவர்களுக்கு சகலமும்
நன்மைக்கேதுவாக நடைபெறும் என்று நாம் விசுவாசிக்கவேண்டும். இந்த நம்பிக்கையோடு நாம் சந்தோஷமாய், நம்முடைய தலைகளை உயர்த்தி கர்த்தரைத் துதிக்கவேண்டும். கர்த்தரே நம்முடைய தலைகளை உயர்த்துகிறவர். கர்த்தருக்குள் நாம் எப்போதும் சந்தோஷமாயிருக்கவேண்டும். நம்முடைய சுயமுயற்சியினால் நம்முடைய தலைகளை நம்மால் உயர்த்த முடியாது. தாவீதைப்போல நாமும் "கர்த்தரே என்னுடைய தலைகளை உயர்த்துகிறவர் என்று விசுவாசத்தோடு சொல்லவேண்டும். நம்முடைய இருதயத்தில் இப்படிப்பட்ட விசுவாசமும் நம்பிக்கையும் இருக்குமென்றால், நம்முடைய இருதயத்தில் சந்தோஷமும் நிரம்பியிருக்கும் கர்த்தருக்குள் நாம் வைத்திருக்கிற விசுவாசமே நம்முடைய சந்தோஷத்திற்கு ஆதாரம்.