துன்மார்க்கன் சங் 1 :4,5
சங் 1:4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்
சங் 1:5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும் பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை
காற்றுப் பதறடிக்கும் பதர்
துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள் (சங் 1:4).
துன்மார்க்கனுடைய சுபாவத்தைப்பற்றி சாங்கீதக்காரர் விரிவாகச் சொல்லுகிறார். இவர்களுடைய சுபாவம் நீதிமான்களுடைய சுபாவத்திற்கு நேர் எதிரிடையாக இருக்கிறது. இவர்கள் தங்களுடைய ஜீவியத்தில் நல்ல கனிகளைத் தருவதில்லை. சோதோமின் கசப்பான திராட்சக்காய்களே இவர்களிடத்திலிருந்து வெளிப்படுகிறது. இவர்கள் நிலத்திற்குப் பாரமாயிருக்கிறார்கள். இவர்களினால் யாருக்கும் ஒரு பிரயோஜனமும் உண்டாகப்போவதில்லை.
நீதிமான்கள் பிரயோஜனமுள்ளவர்கள். கனிதரும் விருட்சத்திற்கு ஒப்பானவர்கள்
விலையேறப்பெற்றவர்கள். துன்மார்க்கரோ காற்று பறக்கடிக்கும் பதரைப்போல இருக்கிறார்கள். பதருக்கு எந்தவிதமான பிடிமானமும் இல்லை. காற்று எந்த திசையில் அடித்தாலும் அந்த திசையில் பதர் அடித்துச் செல்லப்படும். பதரினால் யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இருக்காது. வீட்டு எஜமான் தன்னுடைய தரையில் தூசியை துடைத்து எடுத்து அகற்றிப்போடுவதுபோல, துன்மார்க்கரும் நீதிமான்கள் மத்தியிலிருந்து நீக்கப்படுவார்கள்
துன்மார்க்கர் எப்படி இருக்கிறார்கள்
1. காற்றுப் பறக்கடிக்கும் பதர் (சங் 1:4)
2. சீக்கிரமாய் அறுப்புண்டு வாடிப்போகும் புல் (சங் 37:2)
3. அழிந்து போகும் மிருகங்கள் (சங் 49:20)
4. பாம்பாட்டிகள் ஊதும் சத்தத்திற்குச் செவி கொடாத செவிட்டு விரியன் (சங் 58:4)
5. துவண்டு போகிற வில் (சங் 78:57; ஓசி 7:16)
6. மாயை (சங் 144:4)
7. வெள்ளிப் பூச்சு பூசிய ஓடு (நீதி 26:23)
8. கொந்தளிக்கும் கடல் (ஏசா 57:20)
9. வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர் நிலத்திலும் தங்குபவன் (எரே 17:6)
10. வனாந்தரங்களிலுள்ள நரிகள் (எசே 13:4)
11. கெர்ச்சிக்கிற சிங்கம் (எசே 22:25)
12. இரையைக் கவ்வுகிற ஓநாய் (எசே 22:27)
துன்மார்க்கருக்கு நியாயத்தீர்ப்பு
ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை (சங் 1:5).
துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பில் நிலைநிற்பதில்லை. இவர்கள் குற்றமுள்ளவர்களாக காணப்படுவார்கள் இவர்கள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. துன்மார்க்கருக்கு நீதிமான்கள் இருக்கிற இடத்தில் ஒருவேலையும் இல்லை. புதிய எருசலேமிலே அசுத்தமானவர்கள்
பிரவேசிப்பதில்லை
துன்மார்க்கர் இந்த உலகத்தில்
மாய்மாலக்காரராயிருக்கிறார்கள். வேஷம் போடுகிறார்கள். பாவமான காரியங்களைச் செய்தாலும் தாங்கள் நற்கிரியைகளைச் செய்வதாக பொய்சொல்லுகிறார்கள். நீதிமான்களுடைய சபையிலே துன்மார்க்கர் மாய்மாலமாய் பிரவேசித்தாலும், அவர்களால் அங்கு நிலைத்து நிற்கமுடியாது. பரிசுத்தமான இடத்தில் அசுத்தத்திற்கு சம்பந்தமில்லை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகள் மத்தியிலே துன்மார்க்கரை அனுமதிப்பதில்லை
துன்மார்க்கரின் வழி
சங் 1:6. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்
நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும், துன்மார்க்கர் அழிந்துபோவதற்கும் காரணமுண்டு. தேவன் நீதிமான்களின்வழியை அறிந்திருக்கிறார் அவர்களுடைய நீதியான சுபாவங்களை கர்த்தர் அங்கீகரிக்கிறார். நீதிமான்களின் வழியில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார். அவர்களும் கர்த்தருடைய கிருபையினால் செழிப்பாயிருக்கிறார்கள். அவர்களுடைய முடிவும் நன்மையாய் முடிகிறது
துன்மார்க்கரின் வழியின்மீது கர்த்தர் கோபமாயிருக்கிறார். துன்மார்க்கர் எப்போதுமே கர்த்தருக்கு விரோதமான காரியங்களைச் செய்கிறார்கள். கர்த்தரோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் அழிந்துபோவார்கள். துன்மார்க்கரின் வழி அழியும் துன்மார்க்கரின் வழி அழியும்போது, அதோடு துன்மார்க்கரும் சேர்ந்து அழிந்துபோவார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இந்த சங்கீத வசனங்களை தியானித்து, கர்த்தருடைய சமுகத்தில் பயபக்தியாய் ஜெபம்பண்ணவேண்டும் துன்மார்க்கருடைய காரியங்களைக் குறித்து நாம் எச்சரிப்பாயிருக்கவேண்டும். அவர்களுடைய வழிகளில் நில்லாமல் விலகிப்போய்விடவேண்டும். துன்மார்க்கரோடு நாம் ஐக்கியம் வைத்துக்கொள்ளக்கூடாது
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், நம்முடைய சிந்தனைகளையும் செயல்களையும் கர்த்தருடைய சமூகத்தில் பரிசுத்தம்பண்ணவேண்டும். தேவனுக்குப் பிரியமான காரியங்களை செய்வதில்
கவனமாயிருக்கவேண்டும். நம்முடைய
முழு இருதயத்திலும் பரிசுத்தம்
நிரம்பியிருக்கவேண்டும். கர்த்தர் நம்முடைய
வழிகளை அறிந்திருக்கிறார் என்னும் எண்ணம் நமக்குள் எப்போதும் காணப்படவேண்டும். நீதிமான்கள் தேவனுடைய கிருபைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று, பாக்கியவான்களாய் ஜீவிப்பார்கள்