அகில உலக மிஷினரி இயக்கம் இம்மானுவேல் கிறிஸ்தவ சபை, வேப்பங்குப்பம், வேலூர் .21 நாள் உபவாச ஜெப தியானங்கள்
நாள் 1: தலைப்பு:-
மகிமையின் விசுவாசம்
போதகர். M.சார்லஸ் சதீஷ் குமார்
ஆதார வசனம்:
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். யோவான் 11:40
ஆண்டவரும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பின் நல்வாழ்த்துக்கள். மகிமையின் விசுவாசம் என்கிற தலைப்பின் கீழ் இன்றைக்கு நாம் வேதத்தை தியானிக்க இருக்கிறோம். நாம் விசுவாசம் என்னும் வார்த்தையை பரவலாக கேட்டிருக்கிறோம் அறிந்திருக்கிறோம். மகிமையின் விசுவாசம் என்கிற இந்த வார்த்தையை நாம் அதிகமாக கேள்விப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை. அவிசுவாசம், அற்ப விசுவாசம் போன்ற
வார்த்தைகளை வேதத்தில் வாசித்து இருப்போம். ஆனால் மகிமையின் விசுவாசம் என்கிற வார்த்தையை நேரடியாக வேதத்தில் காணமுடியாது ஆனால் வேத வசனங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும் பொழுது மகிமையின் விசுவாசம் என்கிற உன்னதமான வார்த்தையை காணமுடியும்.
மகிமையின் விசுவாசம் என்றால் என்ன..?
சோதனையை ஜெயிக்கும் விசுவாசத்திற்கு மகிமையின் விசுவாசம் என்று பெயர்.
யோவான் பதினோராம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று கூறுகிறார். இந்த அதிகாரத்தை முழுவதுமாக நாம் உற்று நோக்கும் போது பல ஆவிக்குரிய ரகசியங்கள் புதைந்து கிடக்கிறதை அறிந்து கொள்ளலாம். அதில் மிக முக்கியமான சிலவற்றை கீழே தருகிறேன்.
1. இயேசுக்கிறிஸ்து அதிகமாய் நேசித்த லாசரு என்கின்ற வாலிபனுக்கு மரண வியாதி வருகிறது.
2. தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டால் என்று கூறிய மரியாளுக்கு பெரிய இழப்பு வருகிறது.
3. நீ விசுவாசிக்க வேண்டும் என்ற வார்த்தை இயேசு கிறிஸ்துவிடம் இருந்து மார்தாளுக்கு வருகிறது.
4. உடனடியாக போகவில்லை என்றால் லாசரு மரித்து விடுவான் என்று அறிந்தும் இயேசு கிறிஸ்து போகாமல் தான் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாட்கள் தங்க வேண்டும் என்கிறார்.
மேலே குறிப்பிட்ட இந்த குறிப்புகளை நாம் சற்று ஆழமாக சிந்தித்தால் கர்த்தர் ஏன் இதை அனுமதித்தார் என்கிற உண்மை புலப்படும். அவைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால் கீழே உள்ள வசனத்தை வாசித்து பாருங்கள்.
இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது, தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். யோவான் 11:4
நாம் வாசித்த இந்த வசனம் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தம்முடைய மகிமையை வெளிபடுத்த விரும்புவதையும் அதை நிறைவேற்றுவதன் மூலம் கிறிஸ்து மகிமை படுவார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. இங்கு தேவனும் குமாரனாகிய கிறிஸ்துவும் மகிமை படவும் மகிமையை வெளிப்படுத்தவும் அவருடைய பிள்ளைகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது அதைத்தான் இயேசு நீ விசுவாசி என்று சொல்லுகிறார். நம்முடைய விசுவாசம் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தவும் தேவன் மகிமை பாடவும் தேவையாயிருக்கிறது. இந்த விசுவாசம் அடிப்படை விசுவாசத்தை போன்றது அல்ல. மகிமையின் விசுவாசமாய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
அதை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் மேலே நான் குறிப்பிட்ட முதல் இரண்டு குறிப்புகளை ஆராய வேண்டும். தேவனை நேசித்தவர்கள் தேவனால் நேசிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் தான் பாடுகளும் வியாதிகளும் இழப்புகளும் சோக செய்திகளும் வருகின்றன. கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு இதை அனுமதிப்பது மரணத்துக்கு ஏதுவான போராட்டமாக அல்ல மாறாக தேவனும் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவும் மகிமை படவும் தம்முடைய மகிமையை தம்முடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்தவுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இங்கு லாசருக்கு மரண வியாதியை தேவனே அனுமதித்திருக்கிறார் எதற்காக என்றால் தான் நேசிக்கும் பிள்ளைகளுக்கு தம்முடைய மகிமையை வெளிப்படுத்தவும் அவர்கள் மூலம் மகிமை படவும் ஆகும். தன்னை நேசிக்கும் பிள்ளைகள் வாழ்க்கையில் பாடுகளும் இழப்புகளும் சோதனைகளும் வருகிற போது அவர்கள் மேல் வைத்திருக்கும் விசுவாசம் எத்தகையது என்பதை அறியவே ஆகும். இன்றைக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் திடீர் இழப்புகள் பாடுகள் வேதனைகள் யாவற்றையும் அனுமதிக்க காரணம் அந்த சூழலில் நம்முடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது மேல் கொண்டுள்ள விசுவாசம் எத்தகையது என்பதை அறிந்து கொள்ளவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தேவன் மார்த்தாள் மரியாள் லாசரு ஆகிய இவர்கள் மூலமாக மகிமை படவேண்டும் என்றும் இவர்கள் வழியாக தேவனுடைய மகிமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தேவன் தீர்மானிக்கிறார். தீபன் மகிமையை வெளிப்படுத்தவும் மகிமை படவும் விசுவாசம் அவசியம். இந்த விசுவாசம் சோதிக்கப்பட்டு அந்த சோதனையில் ஜெயம் எடுக்கும்பொழுது தேவனுடைய மகிமையைக் காண முடியும்.
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 1 பேதுரு 1:7
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். எபிரேயர் 12:6
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எபிரேயர் 12:7
எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. எபிரேயர் 12:8
பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், 1 பேதுரு 4:12
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். 1 பேதுரு 4:13
பொன் எந்த அளவுக்கு சோதிக்கப்படுமோ அந்த அளவுக்கு அதனுடைய மதிப்பு கூடும் அதைப்போலவே தேவனுடைய பிள்ளைகள் எவ்வளவு சோதனைகளை சந்திக்கிறார்கலோ அவ்வளவு தேவ மகிமையை காண்பார்கள் அவர்கள் மூலமாகவும் அவ்வளவாய் தேவனும் மகிமை படுவார். நம்முடைய விசுவாசம் சோதிக்கப்பட வில்லை என்றால் அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. எனவேதான் தான் நேசித்த குடும்பத்திற்கு இப்படி ஒரு இழப்பை நேரிட கர்த்தர் அனுமதித்தார்.
நம்முடைய நினைவும் தேவனுடைய செயலும்:-
மார்த்தாலும் மரியாளும் இயேசுக்கிறிஸ்து வந்தாள் வியாதி நீங்கி தன் சகோதரன் சுகம் அடைவான் என்று அவரிடத்தில் ஆள் அனுப்புகிறார்கள். தாம் நேசிக்கும் பிள்ளைகளுக்கு வியாதியை சுகமாக்கும் அற்ப காரியத்தை அல்ல அதிலும் மேலான அதிசயங்களை செய்யவே கர்த்தர் விரும்புகிறார். இன்றும் அநேகர் சாதாரண தேவைகளுக்காக மனவருத்தம் அடைகிறார்கள் விசுவாசம் சோதிக்கப்படும் போது அந்த விசுவாச சோதனையில் நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படி சோதனையை மேற்கொண்டால் நீங்கள் எதிர்பார்த்த காரியத்தை அல்ல இந்த உலகமே உங்களை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பெரிய பெரிய காரியங்களை செய்யவே கர்த்தர் விரும்புகிறார். தாம் நேசிக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு சாதாரண அதிசயத்தை அல்ல அதிலும் மேலான அற்புதங்களை செய்து தேவனுடைய மகிமையை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இயேசு உடனடியாக வராமல் மேலும் இரண்டு நாட்கள் தங்கினார். கர்த்தர் செய்யும் செயல்கள் பல வேளைகளில் நம்முடைய அறிவுக்கு பைத்தியத்தை போல தோன்றும். அவருடைய நினைவுகளை நம்மால் கணிக்க முடியாது எனவே நம் வாழ்வில் வரும் சோதனைகளை கண்டு ஏதோ புதுமை என்று கலங்காமல் இந்த சோதனையின் வழியாக என் விசுவாசம் பரீட்ச்சை பார்க்கப்பட்டு தேவனுடைய மகிமையைக் காண செய்யப்போகிறார் என்ற விசுவாசத்தோடு அவைகளை சந்தோசமாக எண்ணக் கடவோம்.
நம்முடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு அந்த சோதனையில் நாம் திடமாக இருந்து கர்த்தர்மேல் நம்பிக்கையோடு இருந்து எவ்வளவு பெரிய பாடுகள் வந்தாலும் சோதனைகள் வந்தாலும் இழப்புகள் வந்தாலும் அவர்களுக்கு நடுவில் விசுவாசத்திலே நம் நிலைத்துநிற்போம் என்றால் நாம் தேவனுடைய மகிமையை காண்போம் சோதனையை ஜெயிக்கிற விசுவாசம் தான் மகிமையான விசுவாசம் எனப்படுகிறது. மகிமையான விசுவாசம் நம்முடைய வாழ்க்கையில் குடும்பத்தில் ஊழியத்தில் வேலை ஸ்தலத்தில் பெரிய காரியங்களை செய்ய வைக்கும் அற்புத அதிசயங்களை காணப்படும் அவற்றின் வழியாக தேவனுடைய மகிமையை நாமும் காண்போம் அனைவருக்கும் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும் பாத்திரங்களாக காணப்படுவோம். இனி நமக்குத் தேவையானது விசுவாசம் அல்ல மகிமையின் விசுவாசம். கர்த்தர் தாமே உங்களை யாவருக்கும் இப்படிப்பட்ட மகிமையான விசுவாசத்தை பெருக பண்ணுவார் ஆக ஆமென்.
