அப்போஸ்தலர் 5 விளக்கவுரை

14. அனனியா; சப்பீராளின் மரணம் (அப்போஸ்தலர் 5:1-11)


அப்போஸ்தலர் 5:1-6
1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். 2 தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். 3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? 4 அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். 5 அனனியா இந்த வார்த்தைகளைக்கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. 6 வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள்.
செய்யப்படும் ஒவ்வொரு பாவமும் குற்றம் மட்டும் அல்ல, அது சட்டத்திற்கு எதிரான ஒரு செயல் ஆகும். எதிரான ஒவ்வொரு செயலும் கவனத்திற்குரியது. இறைவனின் மகிமைக்கு எதிரான மீறுதல் ஆகும். தனது சொந்த நடத்தையை பிறருடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவன் தன்னைத்தானே, மனுஷீகமாக நியாயம் தீர்க்கிறான். அவன் தன்னைத்தானே மன்னித்து இவ்விதம் கூறுகிறான், “நாங்கள் அனைவரும் பலவீனர்கள். இறைவனை அறிந்தவன் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் வாழுகிறான். ஒவ்வொரு பாவமும் சிறிதானாலும் அல்லது பெரிதானாலும், மரணத்தைக் கொண்டு வரும் என்று அறிந்துள்ளான். அனனியா, சப்பீராளுக்கு நிகழ்ந்த காரியம் நமக்கும் ஓர் பாடமாகும். இறைவன் விசுவாசிகளையும் பட்சிக்கும் உரிமையுடையவர் என்று இது காண்பிக்கிறது.
பரிசுத்தமான இறைவன் நம்மிடம் பொ
றுமையாய் இருக்கிறார். அனனியா தனது சொத்தின் பெரும்பகுதியை கொடுக்க முன்வந்தான். ஆனால் அனனியாவை உடனடியாக அழித்துவிட்டார். ஏன் இப்படி இறைவன் செயல்பட்டார் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். இறைவனின் நியாயத்தீர்ப்பின் இரகசியங்களை நாம் அறிய முடிவதில்லை. அந்த தம்பதியர் கவனக்குறைவினால் அந்த பாவத்தை செய்யவில்லை என்பதை வசனம் 2-ல் பார்க்கிறோம். அவர்கள் முன்பாகவே தீர்மானித்து, அப்போஸ்தலர்களை ஏமாற்ற முயற்சித்தார்கள். பேதுருவில் சர்வ வல்லமையுள்ளவர் பிரசன்னமாயிருந்ததை அவர்கள் நம்பவில்லை. பரிசுத்தமான இறைவன் தம்முடைய விசுவாசிகளில் வாழ்கின்றார். அவர்களது இருதயங்களை அறிகின்றார்.
பணத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த குடும்பம் எதிர்கால பாதுகாப்பிற்காக முயற்சித்திருக்கலாம். அனனியா என்ற பெயரின் அர்த்தம் “இறைவன் கிருபையுள்ளவர்". இருப்பினும் அவர்கள் இறைவனை முழுமையாக நம்பவில்லை. அவர்கள் இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முயற்சித்தார்கள். அது இயலாத காரியம். இறுதியில் அவர்கள் சிருஷ்டிகரை விட பணத்தை அதிகமாக நேசித்தார்கள்.
அனனியாவும், சப்பீராளும் தங்களது சொத்து முழுவதையும் சபைக்கு கொடுக்க கடமைப்பட்டவர்கள் அல்ல. அது தன்னார்வமாக செய்யப்பட வேண்டிய ஒன்று. சிலர் தங்களுக்கென்று ஒரு பகுதியை வைத்துக்கொண்டார்கள். அதை பொதுவாக, வெளிப்படையாக பேசினார்கள். அனனியா, சப்பீராள் இறைபக்தியை காண்பிக்க நினைத்தார்கள். திருச்சபையில் தங்களுக்கென்று உயர்ந்த பெயரை ஏற்படுத்த எண்ணினார்கள். தங்களுடையது அனைத்தையும் கொடுத்துவிட்டார்கள் என்று சபையில் அங்கீகாரம் ஏற்படும் என்று நம்பினார்கள். உண்மையாகவே அவர்கள் கொடுத்தார்கள். ஆனால் ஒரு பகுதியைத் தான் கொடுத்தார்கள். கூட்டத்திற்கு பற்றுறுதி, பயபக்தியுடன் அனனியா வந்தான். அவன் அப்போஸ்தலரின் பிரசங்கபீடத்திற்கு முன்சென்றான். தன்னுடைய பணத்தை வழங்கினான். அவன் பண ஆசையிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டவன் போல நடித்தான். அவன் தன்னைத் தானே இறைவனுக்கு முழுமையான பலியாக ஒப்புக் கொடுப்பதைப் போல காண்பித்தான். ஆனால் அவன் தனக்கென்று ஒரு பகுதி பணத்தை மறைத்து வைத்திருந்தான். இயேசு இப்படிப்பட்ட நடத்தையை “மாய்மாலம்"என்று அழைக்கிறார். இது சபையில் உள்ள மிகவும் வெறுக்கத்தக்க பாவம் ஆகும். இது பொய்களின் பிதாவாகிய சாத்தானிடமிருந்து நேரடியாக வருகிறது.
நாம் செய்யக்கூடிய அநேக பாவங்களை நாம் அறிந்திருக்கிறோம். இருப்பினும் உலகில் சிறந்த மக்களைப் போல காண்பிக்கிறோம். நாம் அனைவரும் மாய்மாலக்காரர்கள். நமது மனச்சாட்சியில் பொய்கள், ஒழுங்கீனங்கள், பிறர் பணத்தை அபகரித்தல், கோள் சொல்லுதல் மற்றும் இச்சைகள் போன்றவை தெளிவாக பதியப்பட்டிருந்தும், நமது குடும்பங்கள், சமுதாயம், சபை நம்மை துதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மை பரிபூரணமானவர்களாக, நேர்மையானவர்களாக, நம்பிக்கை வாய்ந்தவர்களாக கருதுகிறோம். நாம் அனைவரும் பெருமையுள்ள மயில்களைப் போல நடந்து கொள்கிறோம். நாம் சாவுக்கேதுவான விஷம் நிறைந்த கல்லறைகள் என்று சத்தியம் கூறுகிறது. அருமையான சகோதரனே நீ இறைவனுடைய நியாயத்தீர்ப்பின் வெளிச்சத்தில் உனது உண்மையான சுயத்தை ஆராய்ந்து பார்க்கிறாயா?
அனனியாவும், அவன் மனைவி சப்பீராளும் (அர்த்தம் – “அழகான) இறைவனுக்குப் பதிலாக பணத்தை தெரிந்தெடுத்தார்கள். அதுமட்டுமல்ல, எல்லா மனிதர்களும் செய்வதைப்போல மாய்மாலம் என்ற பாவத்தை அவர்கள் செய்தார்கள். கிறிஸ்துவின் கிருபை என்ற கோட்டிலிருந்து அவர்கள் படிப்படியாக விலகிச் சென்றார்கள். சாத்தான் அவர்களுடைய இருதயத்தை நிரப்பினான். இதைப் போலவே அவன் யூதாசுக்கும் செய்திருந்தான். பணத்தை நேசிப்பவன் சாத்தானின் முன்பக்கத்திற்கு பறந்து செல்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் சபைக்கு ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள். தீமையானவன் தனது கெட்ட கொள்கைகளை இரகசியமாக உட்செலுத்த முயலுகிறான். பொறாமை, கஞ்சத்தனம், பெருமை போன்றவற்றை இறைவனின் அரசில் கொண்டுவர முயலுகிறான். பரிசுத்தவான்களின் ஐக்கியம் ஒரே இருதயத்துடன் ஒரே ஆத்துமாபோல் காணப்பட்டது. ஒவ்வொருவரும் மற்றவருக்கு தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். அவர்களது பரலோகப் பிதாவின் பராமரிப்பில் வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இறைவனுக்கு தங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார்கள்.
பூமியில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை சிறந்த அதிகாரத்துடன் சாத்தானின் சோதனையை எதிர்க்கும் திறமை உடையதாக இருந்தது. ஆவிகளைப் பகுத்தறியும் வரத்தின் மூலம் பேதுரு அனனியாவின் பொய்யை முன்னறிந்தார். அவனுடைய முகத்திரையை கிழித்தார். அவனுடைய வஞ்சகத்தை பரிசுத்த ஆவிக்கு எதிரான பொய் என்றழைத்தார். அனனியா இதற்கு முன்பு கிறிஸ்துவின் உள்ளான இரட்சிப்பை பெற்று அனுபவித்திருந்தான். பின்பு படிப்படியாக வீழ்ச்சியடைந்து, பரிசுத்த ஆவிக்கு எதிராக பாவம் செய்தான்.
இறைவனின் ஆவியானவர் அப்போஸ்தலரின் வார்த்தையை உறுதிப்படுத்தினார். கடவுளுடைய நியாயத்தீர்ப்பாகிய மரணம் உடனடியாக நேரிட்டது. இப்படிப்பட்ட காரியத்தில் அப்போஸ்தலரின் வார்த்தைகளுக்கு எதிரான குற்றத்தை சத்திய ஆவியானவர் மன்னிக்கவில்லை. மாறாக மனந்திரும்பும்படி பாவியை நியாயந்தீர்த்தார். நம்முடைய இறைவன் அன்புள்ளவர் மட்டுமல்ல, அவர் பரிசுத்தமானவர். அவர் மன்னிப்பதில் விருப்பமுள்ளவராய் இருக்கிறார். இருப்பினும் சத்திய ஆவியானவருக்கு எதிராக தன்னை கடினப்படுத்துபவன், இறைவனின் அன்புக்கு எதிராக தன்னுடைய இருதயத்தை மூடுபவன், தன்னில் தானே தீய பிசாசாக மாறுபவனுக்கு இறைவனின் இரக்கம் காண்பிக்கப்படுவதில்லை.
முதல் திருச்சபை இறைவனுக்கு அருகில் வாழ்ந்தது. இதின் மத்தியில், சாத்தானுடன் இணைந்த விசுவாசத் துரோகத்தை இறைவன் தீவிரமாக நியாயந்தீர்த்தார். பாவத்தின் சம்பளம் மரணம் என்ற முக்கியமான சத்தியத்தின் நிறைவேறுதலாக இந்த நியாயந்தீர்ப்பு இருந்தது.

அப்போஸ்தலர் 5:7-11
7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். 8 பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். 9 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். 10 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள். 11 சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.
இறைவனின் இந்த நியாயந்தீர்ப்பினால் திருச்சபை அதிர்ந்தது. ஒவ்வொருவரும் ஆண்டவருடைய வெளிச்சத்தில் தங்கள் சொந்த பாவ வாழ்வின் தீமைகளைக் கண்டார்கள். இறைவனின் கோபத்தினால் அடிக்கப்படுவதை எண்ணிப் பயந்தார்கள். அநேகர் இறைவனுக்கு முன்பாக கண்ணீரோடு, பாவத்திலிருந்து, மனந்திரும்பினார்கள். பயத்துடனும், நடுக்கத்துடனும் பரிசுத்தாமாக்கப்பட்டார்கள்.
வாலிபர்கள் வந்து மரித்த மனிதனின் சரீரத்தை துணிகளால் சுற்றி கொண்டு போனார்கள். நடுங்கிய இருதயத்துடன் அவர்கள் அவனுடைய சரீரத்தை கொண்டு போனார்கள். இடிமுழக்கம் வந்து தாக்குவதைப் போல பரிசுத்த ஆவியானவரின் வார்த்தை வந்து தாக்கியதை அவர்கள் பார்த்திருந்தார்கள். சரீரத்தை சுமந்து சென்றவர்கள் நிச்சயம் விண்ணப்பம் செய்திருப்பார்கள், இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்திருப்பார்கள். அவர்கள் பண ஆசையை முற்றிலும் தவிர்த்துவிட்டார்கள்.
மரித்த மனிதனின் மனைவியிடம் அவளது கணவனின் வஞ்சகத்தை இறைவன் தண்டித்ததின் மூலம் ஏற்பட்ட சடுதியான மரணத்தைப் பற்றிக் கூற சபை அங்கத்தினர்களில் ஒருவருக்கும் துணிவில்லை. அவளிடம் இதைப் பற்றி அவர்கள் கூறாதபடி பரிசுத்த ஆவியானவர் தடைபண்ணினார். ஏனெனில் அவர்கள் அனைவரும் ஓர் தனிப்பட்ட நியாயத்தீர்ப்பை ஆண்டவருடைய ஆவியானவர் கொண்டு வந்தார் என நினைத்தார்கள். மூன்று மணி நேரம் கழித்து சப்பீராள் வந்தாள். அவர்கள் கொடுத்த பெருந்தொகையை எண்ணி சபையார் பாராட்டுவார்கள் என்ற பெருமையுடன் வந்தாள். பேதுரு அவளருகில் உடனடியாக சென்று, “நிலத்தை இவ்வளவுக்குத் தான் விற்றீர்களா?” என்று கேட்டான். அந்தப் பெண்ணுக்கு மனந்திரும்பும் படியான ஓர் வாய்ப்பை கொடுக்கும்படி அப்போஸ்தலர் விரும்பினார். இறைவனைப் பற்றிய சத்தியத்தை அவள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அவள் கணவனுக்கு சரியான ஆலோசனை கொடுக்க தவறினாள். கணவனுடன் இணைந்து அவளது விருப்பத்தின்படி தவறான காரியத்தை செய்தாள். அவள் சத்தியத்திற்காக நிற்கும்படி அவனை வேண்டிக்கொள்ளவில்லை, தன்னை தாழ்த்தவில்லை. அவனது வஞ்சகமான எண்ணத்திற்கு அவளும் துணை நின்றாள். ஒருவேளை அவள் எல்லாப் பணத்தையும் கொடுக்காதபடி அவனிடம் பேசியிருக்கலாம். நம்முடைய குடும்பத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கலாம்.அவள் தனது பொய், பெருமை மற்றும் மாய்மாலத்தினால் தனது கணவனுடன் ஒத்திசைந்தவளாய் உள்ளே பிரவேசித்தாள்.
பேதுரு அவளது கணவனுக்குச் செய்தது போலவே, இவளுடைய மாய்மாலத்தின் முகத்திரையையும் கிழித்தார். திருச்சபையின் நடுவிலே அவளது வஞ்சக எண்ணத்தில் உருவான தீமையை குறித்து ஆச்சரியத்துடன் அவர் அவளிடம் கேட்டார். ஆண்டவருடைய ஆவியானவரை சோதிக்கிறதற்கு நீயும், உனது கணவனும் ஒருமித்தது என்ன? கணவனுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதற்கு முன் இறைவனுக்கு கீழ்ப்படிவது திருமண வாழ்வில் முக்கியம். நமது குடும்பங்களில் மனிதனுக்கு கீழ்ப்படிவதை விட இறைவனுக்கு கீழ்ப்படிவது முக்கியம். கணவன் தீமை செய்யத் தூண்டப்பட்டபோது, அவனது மனைவி அவளை எச்சரித்திருக்க வேண்டும். அவனது வார்த்தையை தவிர்த்திருக்க வேண்டும், அவனுக்காக விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அப்போது அவன் குற்றம், பொறாமை மற்றும் சுயநலத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கக் கூடும்.
சப்பீராளும், அவளது கணவனும் சாத்தானின் ஆவிக்கு இடம் கொடுத்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக செயல்பட்டார்கள். அவர்கள் பெருமை, பொய் மற்றும் மாய்மாலத்தின் ஆவிக்கு இடம் கொடுத்தார்கள். நீதி மற்றும் இறைபக்தி நிறைந்த வட்டத்திற்குள் இத் தீய ஆவியுடன் அவர்கள் நுழைய முற்பட்டார்கள். அது பரிசோதிக்கப்படவில்லையென்றால் திருச்சபையில் உள்ள பரஸ்பர அன்பை கொன்றுவிடும். சத்தியத்தை அவர்களது காலடியின் கீழ் போட்டுவிடும். நிலத்தை விற்ற தொகையில் முழுப்பணத்தையும் கொடுக்கும்படி அப்போஸ்தலர்கள் கேட்கவில்லை. சபை முன்பு தங்கள் பெருமையை நிலை நாட்ட, அவர்கள் இருவரும் இந்த பொய்யைச் சொன்னார்கள்
இந்த வஞ்சகம் நிறைந்த பெண்ணின் மீதும் இறைவனின் நியாயத்தீர்ப்பு வந்தது. வாழ்வு தரும் ஆண்டவர் அப்போஸ்தலர் பாதத்தில் அவள் மரிக்கும்படி செய்தார். தனது வாழ்வை முழுமையான பலியாக ஒப்புக்கொடுக்க விருப்பமற்றவளாக செயல்பட்ட அதே இடத்தில் அவள் மரித்தாள். அவளது வீழ்ச்சி பயங்கரமானதாய் இருந்தது. திருச்சபையில் ஒவ்வொரு பெண்ணும் வீட்டில் கணவன் முன்பு தங்கள் ஆவிக்குரிய பொறுப்பின் அர்த்தத்தை குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்கள். பெண்கள் தங்கள் கணவன்மாரை பரலோகிற்கு நேராக ஈர்க்க முடியும் அல்லது நரகத்தில் தூக்கி எறிய முடியும். இறைவன் மீது நம்பிக்கை வைத்த தாழ்மை மற்றும் கவனமுள்ள பெண்கள் தங்கள் விண்ணப்பங்கள் மூலம் கணவனால் வரும் சோதனைகளை மேற்கொண்டார்கள். தனது கணவனை மேன்மைப்படுத்தும் ஒவ்வொரு பெண்ணும் தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து சாத்தானின் பிடியிலிருந்து புகழ், பகட்டு மற்றும் செல்வவளம் போன்ற காரியங்களில் வீழ்ச்சியடையாமல் தங்களை காத்துக்கொண்டனர்.
கிதரோன் பள்ளத்தாக்கில் கணவனை அடக்கம் பண்ணிய இடத்திற்கருகில் இப்பெண்ணையும் அடக்கப்பண்ண வாலிபர்கள் சுமந்து கொண்டு சென்றபோது அவர்களின் இருதயம் படபடத்தது. சபை மக்கள் அனைவருக்கும் இச்சம்பவம் ஒரு பாடமாய் அமைந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான தம்பதியர், ஒரு அப்பா, ஒரு அம்மா இருவரும் ஒரே நாளில் ஒரே சபையில் மரித்தார்கள். பரிசுத்த ஆவியானவருக்குள் ஒருவருக்கொருவர் தங்களை பெலப்படுத்திக் கொண்ட விசுவாசிகள் அனைவருக்கும் இது மிகப்பெரிய அடியாக காணப்பட்டது. அவர்கள் பிரமிப்புடன் காணப்பட்டார்கள். இந்த தம்பதியர் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்வோம். இச்சம்பவம் தரும் எச்சரிப்பை அலட்சியம் பண்ண வேண்டாம்.
நமது இருதயங்ளின் நிலையைப் பார்க்கும் போது நாம் அவர்களைவிட சிறந்தவர்களா? எல்லா காலங்களிலும் உள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அனனியா, சப்பீராள் ஓர் எச்சரிப்பாக மாறினார்கள். நமது இறைவன் வைராக்கியமுள்ளவர் மற்றும் பட்சிக்கிற அக்கினி போன்றவர் என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகிறார்கள்

15. எழுப்புதல் மற்றும் அநேகர் சுகமாகுதல் (அப்போஸ்தலர் 5:12-16)


அப்போஸ்தலர் 5:12-16
12 அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். 13 மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். 14 திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். 15 பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். 16 சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.
பரிசுத்தவான்கள் தங்களது ஐக்கியத்தில் சுயநலமில்லாமல் பிறருக்காகவே வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் மாய்மாலத் துதி என்னும் தூபம் போடவில்லை. அவர்கள் முழுவதும் இரக்கத்தினால் நிறைந்து இருந்தார்கள். தங்களது தேசத்தின் பிரச்சினைகளுக்காக அவர்களும் பாடுபட்டார்கள். அவர்கள் பிரசங்கம் பண்ணியது மட்டுமல்லாமல் குணமாக்குதலையும் நிறைவேற்றினார்கள். இறைவனின் கரத்தில் இருந்து உதவியை கேட்டார்கள். அவர்கள் தங்கள் பேச்சினால் மட்டுமல்ல, அவர்களது கைகள் மற்றும் தோள்வலிமையினாலும் இறைவனுக்கு சேவை செய்தார்கள்.
தங்கள் சொந்த சுய வல்லமையை அந்த பரிசுத்தவான்கள் நம்பி போகவில்லை. அவர்கள் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கவில்லை அல்லது ஏழைகளுக்காக பணத்தை சேகரிக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்கு அருளப்பட்ட இறைவனின் வல்லமையோடு காணப்பட்டார்கள். அதன் விளைவாக அவர்களது சேவை இயேசுவை மகிமைப்படுத்தும் ஓர் வெளிப்படையான அடையாளமாக இருந்தது. இரட்சகர் அவர்கள் மூலமாக அநேக அடையாளங்கள்,அற்புதங்கள் செய்தார். இவைகள் அனைத்தும் அதிகாரம் 4:24-30-ல் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது விண்ணப்பத்திற்கான பதில் ஆகும். இறைவன் தம்முடைய கரத்தை நீட்டி தனது அப்போஸ்தலர்கள் மூலமாக வியாதிகள்,பிசாசுகள் மற்றும் போராட்டங்கள் அனைத்தையும் மேற்கொண்டார். அவருடைய ராஜ்யம் வெளிப்படையாகவும்,அறியக் கூடியதாகவும் வந்திருந்தது.
கரங்களினால் செய்யப்பட்ட சபையை விசுவாசிகள் கட்டவில்லை. இறைவனுக்கு பரிசுத்த வீடு தேவையில்லாதிருந்தது. ஏனெனில் அவர்கள் இருதயங்கள் இறைவன் தங்கும் இடமாக இருந்தன. அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் சிறு குழுக்களாக கூடினார்கள். மேலும் இயேசு ஏற்கெனவே மக்களுக்கு போதித்திருந்த ஆலயத்து பிரகாரத்தில் மொத்தமாக கூடினார்கள். அங்கே அவர்கள் சங்கீதங்களைப் பாடினார்கள்,பேசினார்கள், இணைந்து விண்ணப்பம் செய்தார்கள். அவர்களது ஐக்கியம் அனைத்து மக்களும் நன்கு அறியும்படி காணப்பட்டது. அவர்கள் அன்புள்ளவர்களாக,மதிப்புள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் எப்போதும் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லவில்லை. பரிசுத்த ஆவியானவர் மூலமாக அவர்கள் ஒருவரையொருவர் அறிந்தார்கள். அவர்கள் ஐக்கியத்திற்காக இணைந்துவரும் நேரத்திற்காக வாஞ்சையோடு இருந்தார்கள்.
அந்த கூட்டத்தார் அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டியிடவில்லை. அப்போஸ்தலர்கள் பொதுவாக வைத்திருந்த நிதியானது எப்போதும் தேவையுள்ள மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதற்கு ஆயத்தமாயிருந்ததை அறிந்திருந்தார்கள். அவருடைய ஊழியக்காரர்களிடம் இருந்து தாராளமாய் வெளிப்பட்ட இறைவனுடைய வல்லமையை அறிந்து கொள்ளும்படியாக முயன்றார்கள். அவர்கள் காத்திருந்து,நடுநிலையுடன்,பயத்துடன் இருந்தார்கள். இந்த விசுவாசிகள் மத்தியில் இறைவன் பிரசன்னமாயிருக்கிறதை அவர்கள் உணர்ந்தார்கள். உறுதியாய் விசுவாசித்த ஆண்களும், பெண்களும் மனந்திரும்பி கிறிஸ்தவ சபையில் இணைந்தார்கள். அவர்கள் புதுப்பிக்கப்பட்டார்கள். வல்லமை மற்றும் கர்த்தருக்குள் பாதுகாப்பினால் அணிவிக்கப்பட்டார்கள்.
எபிரெயர்கள் பாரம்பரியமாக ஆண்களை மட்டுமே கணக்கிடுவது வழக்கம். இருப்பினும் நற்செய்தியாளர் லூக்கா கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களை பெருந்திரளான பெண்கள் பின்பற்றி நடந்ததை பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமை,இரட்சிப்பை அனுபவித்தார்கள். அவர்கள் விசுவாசம் என்பது தத்துவம் சார்ந்த ஓர் நம்பிக்கை அல்ல. அவர்கள் இறைவனின் இரட்சிப்பில் உண்மையான பங்கை அடைந்தார்கள். அவர்கள் மத்தியில் வாசமாயிருந்த இறைவனின் வல்லமையில் பங்கடைந்தார்கள்.
இயேசுவின் நாட்களில் நடந்தது போல அந்நாட்களில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை வெளிப்பட்டு அநேக அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன. (மாற்கு6:56) இயேசுவின் காலத்தில் தெருக்களில் வியாதியஸ்தர்கள் சுமந்து கொண்டு வரப்பட்டார்கள். கிராமங்கள், பட்டணங்கள் தோறும் அவர்களது படுக்கைகள் ,இருக்கைகளில் இயேசுவின் வஸ்திரம் படும்படியாக வைத்தார்கள். ஆகவே அநேகர் இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தின் நிமித்தமாக குணமாக்கப்பட்டார்கள். அதுபோலவே இப்போது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை வெளிப்படும்படி பேதுருவின் நிழல்படும்படியாக வைத்தார்கள். கிறிஸ்துவின் அன்பு என்பது மனிதனின் ஆத்துமா சுகம் அடையும்படியான, அனைவரும் அறியக்கூடியதான ஆவிக்குரிய சூழ்நிலை ஆகும்.
யூத கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் இந்த எழுப்புதல் இயக்கத்தை அறியாதோர் இல்லை. சுற்றுப்புறப் பகுதியிலிருந்து மக்கள் வந்தார்கள். அப்போஸ்தலர்கள் வியாதியஸ்தரை சுகமாக்கினார்கள். பிசாசு பிடித்தோரையும் குணமாக்கினார்கள். அவர்களது இச் செயலால் கிறிஸ்துவின் இறுதிக் கட்டளையின் இரண்டாம் பகுதி நிறைவேறியதை அவர்கள் உணர்ந்தார்கள். அப்போஸ்தலர்கள் எருசலேமில் நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள், பின்பு யூதேயா முழுவதும் நற்செய்தி பரவியது. கிறிஸ்துவின் வல்லமையினால் அவர்கள் எல்லா வியாதியஸ்தரையும் குணமாக்கினார்கள். “எல்லாரும்” என்கிற வார்த்தையை ஒரு ஆசாரியன், ஒரு மூப்பன் அல்லது ஒரு பிஷப் பயன்படுத்தவில்லை. அனுபவம் வாய்ந்த மருத்துவர் இவ் வார்த்தையை சரியான அறிவுடன் பயன்படுத்துகிறார். மனிதனை நாசமாக்கும் ஊழல்படிந்த அதிகாரங்கள், வியாதிகள், தீய ஆவிகள் இவைகளை கருத்தில் கொண்டே எல்லாரும் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவரின் வல்லமை இப்போது இயங்கும் சபையில் பிரசன்னமாய் இருந்தது. சாத்தானின் அழிவுகள் அனைத்தையும் அது மேற்கொண்டது. இவ்விதமாய் ஆண்டவருடைய சீஷர்கள் அவருடைய வெற்றியின் வளர்ச்சியில் இணைந்து கொண்டார்கள். இன்றும் கிறிஸ்து அநேகரை பாவத்தின் சங்கிலியிலிருந்தும், சாத்தானின் கட்டுகளிலிருந்தும், வேதனை தரும் வியாதிகளில் இருந்தும் விடுவிக்கிறார். இக்காரியமானது அவர்கள் அன்பின் ஐக்கியத்தில் இணைந்திருப்பதை விசுவாசிகளுக்கு நினைவுப்படுத்தியது அவர்கள் இறைவனின் ஆலயமாக இணைந்து விண்ணப்பம் செய்தார்கள். அன்பிலும், சத்தியத்திலும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அருமையான சகோதரனே, கிறிஸ்துவின் சபையை நீ உன்னில் உணர்கிறாயா? அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தையும் அதில் கூறப்பட்ட காரியங்களின் விவரங்களையும் படியுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார்.

16. அப்போஸ்தலர்கள் சிறையிலடைக்கப்படுதலும் தூதர் அவர்களை விடுவித்தலும் (அப்போஸ்தலர் 5:17-25)


அப்போஸ்தலர் 5:17-25
17 அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, 18 அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். 19 கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: 20 நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 21 அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள். 22 சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: 23 சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். 24 இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள். 25 அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
ஆண்டவர் எங்கெல்லாம் தமது சபையைக் கட்டுகிறாரோ, அங்கெல்லாம் தனது தீய ஆவிகள் வாசம் பண்ணும்படியாக ஒரு ஆலயத்தை சாத்தான் கட்டுகிறான். இயேசுவின் நாமத்தில் மக்கள் மனந்திரும்பும்போது நரகத்தின் வல்லமை அவர்கள் மீது பொங்கி வருகிறது. இது இயற்கையாக நிகழக் கூடிய ஒன்று. எனவே பிரியமுள்ள விசுவாசியே,உனது நற்செய்திப் பணி முயற்சிகளை எதிரிகள் கொடூரமாக தாக்கினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இயேசு தனது மீட்பின் செயலுக்கு மையமாக சிலுவையில் தாமாகவே மரித்தார்.
இயேசுவின் நாமத்தைக் குறித்து பேசக் கூடாது என்று பிரதான ஆசாரியர்கள் இட்ட கட்டளையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே பிரதான ஆசாரியர்கள் முற்றிலும் பொறுமை இழந்து போனார்கள். இந்த விசுவாசத்தில் பெருந்திரளான மக்கள் இணைந்து கொண்டார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவின் வெற்றியின் வல்லமையை பெற்றார்கள். மேலும் அவருடைய வல்லமையினால் ஆயிரக்கணக்கான சாட்சிகள் இறைவனுடன் ஒப்புரவாக்கப்பட்டார்கள். பிரதான ஆசாரியன் மிகுந்த கோபமடைந்தான். அவன் ஒருவேளை தேசத்து ஒற்றுமையைக் கருதி பயந்திருக்கலாம். அவனே நாட்டு மக்களுக்கு மேய்ப்பனாக இருந்து இந்த புதிய பாழாக்கும் இயக்கத்தை அழிக்க வேண்டிய கடமையுள்ளவன் என்று கருதியிருக்கலாம். இப்படிப்பட்ட அநேக எண்ணங்களும், சுதந்திரமான சிந்தனைகளும் ஓர் செயலுக்கு நேராக அவனை கொன்டு சென்றது. மதத்தலைவர்கள் கிறிஸ்தவத்துக்கு எதிராக செயல்படுவதை இறைவனுக்கு செய்யும் தொண்டாக கருதினார்கள். அப்படி எதிராக செயல்பட்டோரில் முக்கியமாக சதுசேயரின் பிரிவினர் இருந்தார்கள். ஏனெனில் கிறிஸ்துவின் நற்செய்தியோடு அவர்களுக்கு தனிப்பட்ட விரோதம் இருந்தது. அவர்கள் உயிர்த்தெழுதலின் கொள்கையை முற்றிலும் மறுத்தார்கள். ஆனால் கிறிஸ்தவமோ மரித்தோரில் இருந்து உயிர்த்தெழும் கொள்கையை நிலைநிறுத்தும், உறுதிப்படுத்தும் நம்பிக்கையாக காணப்பட்டது. மரணத்தை தோற்கடித்த இயேசுவுக்கு வலிமையான சாட்சிகளாக அவரைப் பின்பற்றுவோர் இருந்ததினால், அவர்கள் மீது இவர்கள் கடுங்கோபத்தினால் நிறைந்து காணப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட ஓர் எதிர்ப்பு இருப்பதை அப்போஸ்தலர்களும், சபையாரும் உணர்ந்தார்கள். ஆனால் அவர்கள் ஒடிப்போகவில்லை அல்லது தங்களை மறைத்துக்கொள்ளவில்லை. எல்லா மக்கள் முன்பாகவும் ஆலயத்து பிரகாரத்தில் அவர்கள் கூடினார்கள். கிறிஸ்தவம் ஒருபோதும் தன்னை மறைத்துக் கொள்ள முடியாது. அது பெரிதான பகல் வெளிச்சத்தில் தெளிவாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகாரிகள் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களையும் கைதுசெய்து, சிறைச்சாலையில் அடைத்தார்கள். “நீங்கள் பாம்பின் தலையை வெட்டிவிட்டால் அதனுடைய வால் ஆடுவதைக் கண்டு பயப்படத் தேவையில்லை” என்ற பழமொழியின் படி இப்படி செய்தார்கள்.
திருச்சபையின் தலையாக அப்போஸ்தலர்கள், பிஷப்மார்கள், ஊழியர்கள் இல்லை. கிறிஸ்துவே சபையின் தலையாக இருக்கிறார். அவர் வேறுவிதமான திட்டம் வைத்திருந்தார். அவர் சிறைச்சாலைக் கதவுகளை சத்தமின்றி திறக்கும்படி தன்னுடைய தூதனை இரவில் அனுப்பினார். சோதனையின் மத்தியில் விண்ணப்பம் செய்து தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த, குழப்பமடைந்த அப்போஸ்தலர்கள் முன் திடீரென்று மகிமையுள்ள இந்த தூதன் தோன்றி நின்றான். ஆச்சரியமான காரியம் என்னவென்றால், இச் சோதனையிலிருந்து அப்போஸ்தலர்கள் விடுவிக்கப்படும்படி அவன் முயற்சிக்கவில்லை. அவர்களுக்கு ஒரு படுக்கை, வசதியான விரிப்பு இவைகளை கொண்டு வரவில்லை. ஒடிப் போங்கள் என்று அவர்களுக்கு கட்டளையிடவில்லை. மாறாக தூதன் கூறினான். “நீங்கள் தேவாலயத்திற்குப் போய் கிறிஸ்து நிறைவேற்றி முடித்ததை எல்லாருக்கும் அறிவியுங்கள். இந்த நற்செய்தியின் ஜீவ வார்த்தைகளில் இருந்து வெளிப்பட்ட வல்லமை கேட்பவர்களின் இருதயங்களை ஆட்கொண்டது. எதிர்பபு மற்றும் பயமுறுத்தலுக்கு மத்தியில் இறைவனின் ஜீவ வார்த்தைகளை மக்களிடம் பேசுங்கள் என்று தூதன் கட்டளையிட்டான். “எல்லா வார்த்தைகளையும்” என்பதை கவனித்துப் பாருங்கள். அங்கே ஒரு வார்த்தையும் விட்டுவிடக்கூடாது,எதிரிகள் மீதான பயம் இருக்கக் கூடாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அருமையான சகோதரனே, இதுவே உனக்கு இறைவனின் கட்டளை ஆகும். ஒவ்வொரு விசுவாசிக்கும் இது பொருந்தும். உங்கள் மக்களிடம் எல்லா ஜீவ வார்த்தைகளையும் பேசுங்கள். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், சொற்பிரயோகம் இவைகள் முக்கியம் அல்ல. மக்கள் மரணத்தினால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். கிறிஸ்து தரும் நித்திய வாழ்வு, அவரை விசுவாசிப்பவர்களுக்கு கிடைக்கும் என்பதற்கான சாட்சிகளாக வாழுங்கள்.
பன்னிரெண்டு காவற்காரர்கள் மத்தியில், சிறைச்சாலையிலிருந்து எழுந்து வெளியே புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் அதிகாலையில் தேவாலயத்து பிரகாரத்தில் நுழைந்தார்கள். அங்கே வந்திருந்த யாத்திரிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சற்று குழப்பமான நிலையில் அவர்களுடைய கர்த்தரின் திட்டத்தை குறித்த முழு நிச்சயம் அற்றவர்களாக காத்திருந்தார்கள். அவர்கள் ஏதோ மிகப்பெரும் காரியம் நடக்கப் போவதை உணர்ந்தார்கள். அவர்களது உயிருள்ள ஆண்டவர் மிகவும் வல்லமையாய் இடைபட்டு தமது மகிமையுள்ள தூதன் மூலம் நிறைவேற்றிய செயல்களை அடிப்படையாகக் கொண்டு அப்படி எண்ணினார்கள்.
யூத தேசத்தின் மிகப்பெரும் சனகெரிப் ஆலோசனைச் சங்கம் அந்த காலை வேளையில் கூடியது. அதில் கனத்திற்குரிய மூப்பர்கள், தந்திரம் வாய்ந்த சட்ட நிபுணர்கள், பிரதான ஆசாரியர்கள் உட்பட எழுபது பேர் இருந்தார்கள். மேலும் மக்கள் மத்தியில் செல்வாக்குடைய சிலரை பிரதான ஆசாரியன் அழைத்திருந்தான். நாசரேத்தூர் இயேசுவை குறித்த இந்த புதிய இயக்கத்தை முற்றிலும் துடைத்தெறிவது அவனது திட்டமாய் இருந்தது. எல்லா மனிதரும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தார்கள். ஆலோசனைச் சங்கத் தலைவன் சிறைபிடிக்கப்பட்ட அப்போஸ்தலரை தங்கள் முன்பு கொண்டுவந்து நிறுத்தும்படி கட்டளையிட்டான். காவல் அதிகாரிகள் சிறைச்சாலைக்கு வந்தார்கள். சிறைச்சாலை பத்திரமாக பூட்டப்பட்டிருந்தது. பூட்டுகள் உடைக்கப்படவில்லை. ஆனால் சிறைபிடிக்கப்பட்டோர் மறைந்துவிட்டார்கள். எனவே பயத்துடன், நடுங்கி ஆச்சரியப்பட்டார்கள். அவர்களை கண்டுபிடிக்க எந்த ஒரு சுவடும் அங்கில்லை. ஆலோசனைச் சங்கத்தார் அனைவரும் அவர்கள் மறைந்துபோன செய்தியைக் கேட்ட போது பிரமிப்புடன் கலங்கினார்கள். அப்போஸ்தலர்கள் மூலம் நடைபெற்ற அற்புதங்கள் குறித்து அவர்கள் அறிந்திருந்தார்கள். பேதுருவின் நிழல்பட்டு வியாதியஸ்தர் சுகமானது பற்றி அறிந்திருந்தார்கள்.
ஆழ்ந்த யோசனை செய்து திட்டம் தீட்டிய அவர்கள் அனைவருக்கும் இந்த அறிக்கை மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தீர்ப்பு சொல்ல முற்பட்ட அவர்களுக்கு இது பெரிய அவமானமாக இருந்தது. இதற்கு முன்பு இப்படிப்பட்ட நியாயதிபதிகளை இறைவன் அதிரச் செய்திருக்கிறார். நாட்டின் மக்கள் மத்தியில் இருக்கும் உண்மையான அப்பாவி விசுவாசிகளை நியாயம் தீர்ப்பதில் கவனமாய் இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு தெளிவாக காண்பித்திருக்கிறார். கிறிஸ்துவின் கரம் அவருடைய அப்போஸ்தலர்களை பாதுகாத்தது. அவர்கள் முற்றிலும் கீழ்ப்படிந்து முழுமையான ஜீவ வார்த்தையை அவருடைய மக்களுக்கு பிரசங்கித்தார்கள்.

17. ஆலோசனைச் சங்கம் முன்பு அப்போஸ்தலர்கள் (அப்போஸ்தலர் 5:26-33)


அப்போஸ்தலர் 5:26-33
26 உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப்போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். 27 அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: 28 நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். 29 அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. 30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, 31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார். 32 இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள். 33 அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்
இறைவன் தன்னுடைய எதிரிகளை நேசிக்கிறார். நம்முடைய மனம் கற்பனை பண்ணுவதற்கு அப்பாற்பட்டு அவர் தீமைக்கு எதிராக அதிகமான இரக்கம் உள்ளவராக இருக்கிறார். பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் மூலமாக சொல்லப்பட்ட வார்த்தைகள் மூலம் மனந்திரும்புதலுக்கான அழைப்பு கொடுக்கப்பட்டது. யூதர்களின் அதிகாரிகளான அனைவருக்கும் அவர்களுடைய ஆண்டவரிடம் திரும்பும்படியான அழைப்பு அது. அந்த ஆலோசனைச் சங்கத்தில் அப்போது அங்கிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, முழு ஆலோசனைச் சங்கத்தாருக்கும் உரிய அழைப்பு அது.
கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாக இருந்தவர்களிடம் ஆலயத்து தலைவன் சென்றான். அவர்கள் அவனுடன் ஆலோசனைச் சங்கத்துக்கு பணிவுடன் சென்றார்கள். அவர்கள் விலங்கிடப்பட்ட குற்றவாளிகளாக செல்லவில்லை. மரியாதையுடன் சுதந்திரமாக நடத்தப்பட்டார்கள். அவர்களை கைது செய்ய ஆலயத்து தலைவனுக்கு துணிச்சலில்லை. இறைவனின் தூதுவர்களை மக்கள் ஆதரித்து, தங்கள் மேல் கல்லெறிந்து விடுவார்களோ என்று பயந்தான். ஆலயக் காவற்காரர்களை பின் தொடர்ந்து அப்போஸ்தலர்கள் மனமுவந்து நடந்தார்கள்.
பிரதான ஆசாரியனின் வீட்டில் எழுபது மூப்பர்களும் கூடினார்கள். அவனுடைய இருதயம் நிதானமிழந்து, அமைதியற்று இருந்தது. மேலும் வெறுப்பு, பொறாமை, குரோதத்தினால் நிறைந்திருந்தது. மக்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் முன்னிலையில் சிறைச்சாலையில் இருந்து அபூர்வமாய் தப்பிச் சென்ற அப்போஸ்தலர்கள் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக எண்ணினான். எனவே அவன், அப்போஸ்தலர்கள் வந்த போது அவர்களை கடுமையாக திட்டினான். “நாங்கள் இயேசுவின் நாமத்தைக் குறித்து பிரசங்கிக்கக் கூடாது என்று உறுதியாகக் கட்டளையிட்டிருந்தும் ஏன் நீங்கள் இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து போதகம் பண்ணுகிறீர்கள்?” என்று கேட்டான். எங்களுடைய உறுதியான கட்டளைகளை மீறி நீங்கள் எருசலேம் பட்டணம் முழுவதையும் உங்களுடைய உப்பு சப்பில்லாத நகைப்பிற்குரிய கொள்கையினால் நிரப்பியுள்ளீர்கள். எங்களை மக்கள் முன்பாக அவமானப்படுத்துவதே உங்கள் திட்டமாய் இருக்கிறது. எங்களை அநீதியுள்ள நியாயதிபதிகளாக காண்பிக்கிறீர்கள். இயேசு நீதிமான் போலவும், நாங்கள் அனைவரும் குற்றவாளிகள் போலவும் காண்பிக்கப்படுகிறோம். இயேசு மரித்தார். அவருடைய சரீரம் கல்லறையில் வைக்கப்பட்டது. நாங்கள் அந்த பிரச்சனையிலிருந்து சற்று ஒய்ந்திருந்தோம். ஆனால் நீங்கள் ஆலோசனைச் சங்கத்தாரை பரியாசம் பண்ணுகிறீர்கள், அவமதிக்கிறீர்கள், எங்களுக்கு எதிராக பொய் கூறுகிறீர்கள், மாயவித்தை செய்கிறீர்கள், ஏமாற்றுகிறீர்கள்,
இந்த குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து, பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு பேதுருவும், மற்ற அப்போஸ்தலர்களும் எழுந்து நின்று தைரியமாய் பேசினார்கள். நாங்கள் திட்டமிட்ட கட்டுக்கதைகளைப் பின்பற்றவில்லை, எங்களுக்கு எந்த தீய நோக்கமும் இல்லை. நாங்கள் இறைவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றிருக்கிறோம். ஆகவே எங்கள் சாட்சியை முன்னிட்டு ஆண்டவருக்கு கீழ்ப்படியுங்கள். உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவது முடியாத காரியம். ஏனெனில் இறைவன் உங்களைவிடப் பெரியவர். அவர் நம்முடைய ஆண்டவர். அவருடைய சத்தியங்களைப் பேச முடியாதபடி எங்கள் நாவை அடக்கினால் எங்களுக்கு ஐயோ, நாங்கள் பேசத் தவறினால் எங்கள் உதடுகள் எரியூட்டப்படும். இறைவன் எங்களுக்கு நேரடியாக வெளிப்படுத்திய காரியங்களை நாங்கள் பேசுகிறோம்.
அந்த மூப்பர்கள் அவர்களைப் பார்த்து இவ்விதமாக கேட்டிருக்கலாம். “உங்களுக்கு கிடைத்த இறைவனுடைய வெளிப்பாட்டின் சாராம்சம் என்ன?” அப்போஸ்தலர்களில் ஒருவர் பின்வருமாறு நன்கு பதிலளித்திருப்பார். மரித்தோரிலிருந்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற உண்மையைத் தவிர எங்களுக்கு வேறு வெளிப்பாடு இல்லை. அவர் ஒரு ஆவியைப் போல எங்களுக்கு காட்சியளிக்கவில்லை. இறைவன் அவருடைய மாம்சத்தில் அவரை உயிரோடு எழுப்பியுள்ளார். எல்லா காலங்களிலும், நித்தியமாக இறைவனுடன் இயேசு இருக்கிறார். இறைவன் அவருடன் இருக்கிறார்.
நியாயதிபதிகளில் ஒருவர் இவ்விதமாய் உரத்த சத்திமிட்டார். “நீங்கள் இவ்விதமாகப் பேசினால், நாங்கள் இறைவனின் எதிரிகளோ?” பேதுரு அவருக்கு தைரியமாகவும், உறுதியாகவும் பதிலளித்தார். “நீதியுள்ள இயேசுவை நீங்களே நியாயந்தீர்த்தீர்கள், நீங்கள் அதிபதி பிலாத்துவை வற்புறுத்தி, இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். நீங்கள் இயேசுவை கொலை செய்தீர்கள். நீங்கள் இறைவனின் எதிரிகளாக இருக்கிறீர்கள். இயேசு பரிசுத்தமானவர் இருப்பினும் அசுத்தமான மனிதர்கள் கைகளினால் சபிக்கப்பட்ட சிலுவையில் நீங்கள் அவரை அறைந்தீர்கள்.
நியாயதிபதிகள் கோபத்துடன் பற்களை நரநரவென்று கடித்துக் கொண்டிருந்த போது, அப்போஸ்தலர்களில் ஒருவர் எழுந்து பேசினார். “இறைவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியது மாத்திரமல்ல, அவர் தம்முடைய வலது பாரிசத்திற்கு அவரை உயர்த்தினார். அவர் திருச்சபைக்கு தலையாக அவரைத் தந்தருளினார். உலகிற்கு இரட்சகராக தந்தார். இயேசுவே கர்த்தராக இருக்கிறார். அவருக்குள் இறைவனின் அனைத்து தன்மைகளும் இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்திருந்த மேசியா அவரே. அவர் இறைவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர் உங்களிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். “இது முதற்கொண்டு மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்”.
ஆலோசனைச் சங்கத்தார் இதைக் கேட்ட போது, அவர்களில் ஒரு சிலர் பாய்வதற்கு தயாரனார்கள். இருப்பினும் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டார்கள். வெறுப்பின் உச்சகட்டத்தில் இருந்தார்கள். அப்போஸ்தலர்களின் மீதமுள்ள வாதத்தையும் கேட்கும்படி காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கேட்டார்; “உங்களது ஆண்டவரை ஆராதிக்கும்படி எங்களை அழைப்பதற்கு இன்னும் உங்களிடம் என்ன மீதமிருக்கிறது?” சீஷர்களில் ஒருவர் பதிலளித்தார்; “இயேசு உங்களைத் தள்ளிவிடவில்லை. அவர் உங்களை மனந்திரும்புதலுக்கு அழைக்கிறார். முழு இஸ்ரவேலும் அவரிடம் திரும்புவதை அவர் எதிர்பார்கிறார். அவர் அன்புள்ளவராக இருக்கிறார். அவர் உங்களுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். அவரிடம் வாருங்கள். அவருடைய இரக்கம் உங்களுடைய பகையை விடப் பெரியது. நீங்கள் உண்மையாக மனந்திரும்பினால் இறைவன் உங்களை மன்னிப்பார்.
அந்தக் கூட்டத்தாரில் இருந்து ஒருவேளை சிலர் அந்த மீனவர்களைப் பார்த்து இவ்விதமாகக் கேட்டிருக்கக்கூடும். “எங்கிருந்து நீங்கள் இந்த தைரியத்தைப் பெற்றீர்கள்? உங்கள் நீதிபதிகளையே குற்றம் சாட்டுகிறீர்கள். அதே நேரத்தில் நீங்களே மன்னிப்பையும் வழங்குகிறீர்கள்? நீங்கள் யார்? நீங்கள் உங்களைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் உங்களையே கடவுள்களாக கருதுகிறீர்களா
சோதனையின் எந்த வலையிலும், பெருமை அல்லது தூஷணம் செய்தல் போன்றவைகளில் சீஷர்கள் சிக்கிக்கொள்ளாதபடி பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தினார். ஆகவே அவர்கள் இவ்விதமாக பதிலளித்தார்கள். “நாங்கள் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், அவருடைய பரமேறுதல் குறித்த உண்மைக்கு சாட்சிகளாக இருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் மிகவும் வல்லமையாய் எங்களுக்குள் தங்கியிருக்கிறார். நாங்கள் பரமேறிச் சென்ற கிறிஸ்துவின் விசுவாசிகளாக இருக்கிறோம். எங்களுக்கு கிடைத்த வெளிப்பாடு உண்மை என்பதை இந்த பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்துகிறார். நாங்கள் இறைவனுடன் இசைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்”.
அந்த மூப்பர்களில் ஒருவர் சிரித்துக்கொண்டே கூறினார். “நீங்கள் என்ன பெற்றுள்ளீர்கள்? படிப்பறிவற்றவர்கள் நீங்கள். பரிசுத்த ஆவியானவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”. அவர் கேட்ட அந்த கேள்விக்கு உடனடியாக பதிலை பெற்றுக்கொண்டார். “இறைவன் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டும் அவருடைய ஆவியானவரைத் தருகிறார். அவர்கள் கிறிஸ்துவின் வெளிப்பாட்டைப் பெறுகிறார்கள். அவரை விசுவாசியாதோர் அழிந்து போவார்கள். ஏனெனில் அவருடைய சாட்சியாகிய பரிசுத்த ஆவியானவருக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை. எல்லாப் பாவங்களும் மனிதனுக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவம் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை.
அப்போஸ்தலர்களின் அறிக்கைகளில் ஒவ்வொன்றும் தெய்வீக உண்மையின் அம்புபோல அவர்களது இருதயத்தை ஊடுருவிச் சென்றது. கனத்திற்குரிய ஆலோசனைச் சங்கத்து உறுப்பினர்கள் அனைவருடைய மதிப்பும் காயப்படுத்தப்பட்ட படியால், அவர்கள் அவமதிக்கப்பட்டபடியால் கோபத்தால் கொந்தளித்தார்கள். தூஷணம் செய்பவர்கள், தற்பெருமையுள்ள அகங்காரிகள் என்று அப்போஸ்தலர்களை அவர்கள் எண்ணினபடியால், அவர்களை கொலை செய்ய யோசனைபண்ணினார்கள். நரகமானது கிறிஸ்தவ திருச்சபைத் தலைவர்களைத் தாக்க ஆயத்தமாகியது. அவர்களை கல்லெறிந்து கொல்ல தீர்மானித்தது.

18. கமாலியேலின் ஆலோசனையும் அப்போஸ்தலர்கள் அடிக்கப்படுதலும் (அப்போஸ்தலர் 5:34-42)


அப்போஸ்தலர் 5:34-42
34 அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி, 35 சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 36 ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். 37 அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள். 38 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; 39 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான். 40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். 41 அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், 42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
பரிசேயர்கள் தூதர்கள் இருப்பதை நம்பினார்கள். மரித்தோரின் உயிர்த்தெழுதல் மற்றும் நம்முடைய உலகத்தில் இறைவனைக் காணக்கூடிய காரியங்களை நம்பினார்கள். ஆகவே பூட்டப்பட்ட சிறையிலிருந்து அப்போஸ்தலர்கள் வெளியேறினார்கள் என்பதை அவர்கள் கேட்டபோது, மிகவும் பயந்தார்கள், ஆகவே இயேசுவின் உயிர்த்தெழுதலையும், ஆலோசனைச் சங்கத்தில் அவருடைய தலையீட்டையும் மறுக்க முடியாதவர்களாக இருந்தார்கள்.
பரிசேயர்களின் தலைவன், நன்கு கற்றறிந்த மேதை, நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சி பெற்றவராயிருந்த கமாலியேல் எழுந்து நின்றார். அவர் தான் பவுலின் ஆன்மீக குருவாக பின்பு காணப்பட்டார். இந்த மனிதன் எல்லா மனிதர்களாலும் மதிக்கப்படத்தக்கவராக இருந்தார். கோபத்தினால் கொதிப்படைந்திருந்த ஆலோசனைச் சங்கத்தாரிடம் இவர் மிதமாக பேசினார். அப்போஸ்தலர்கள் மூலமாக இறைவனின் கரம் செயல்படுவதைக் குறித்த நிச்சயம் அற்றவராக கமாலியேல் இருந்தார். இவர்கள் மெய்யாகவே உன்னதமானவரால் அனுப்பப்பட்டவர்கள் என்பதைக் குறித்த நிச்சயம் அவருக்கு இல்லை. இந்த இறையியல் நிபுணர் அவர்களை உற்றுக் கவனித்துக் கொண்டே இருந்தார். அவர் எந்தவொரு சண்டை சச்சரவையும் அல்லது ஆணவத்தையும் அவர்களிடம் காணவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தைரியம், அன்பு மற்றும் நேர்மையைக் கண்டார். அவர்கள் கள்ளப் போதகர்களைப் போலவோ அல்லது தீய மனிதர்களைப் போலவோ தோற்றமளிக்கவில்லை. அவர் தன்னுடைய ஞானம் மற்றும் விவேகத்தினால், ஆலோசனைச் சங்கத்தில் இருந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மரணதண்டனைக்காக தீர்ப்பு பற்றி பேச அவர் அனுமதிக்கவில்லை. குற்றமற்றவர்களின் இரத்தம் மறுபடியும் சிந்தப்படுவதை அவர் விரும்பவில்லை. இறைவனுடைய சித்தத்திற்கு ஆலோசனைச் சங்கம் எதிர்த்து நிற்காத படி பார்த்துக் கொண்டார்.
கமாலியேல் இயேசுகிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கவில்லை. அப்போஸ்தலர்களின் அழைப்புக்கு கீழ்ப்படியும்படி அவர் முடிவெடுக்கவும் இல்லை. இருப்பினும் நியாயப்பிரமாணத்தின் தாழ்மையுள்ள இந்த போதகரை, மிகவும் இக்கட்டான நேரத்தில் தன்னுடைய அப்போஸ்தலர்களைப் பாதுகாக்க உயிருள்ள ஆண்டவர் பயன்படுத்தினார். தொடர்ந்து தன்னுடைய உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக அப்போஸ்தலர்களை நிறுத்தினார்.
இந்த நியாயப்பிரமாண மேதை தனது வாதத்திற்கு ஆதாரமாக நியாயப்பிரமாணத்தை பயன்படுத்தவில்லை என்பது ஆச்சரியமான காரியம். மாறாக அவர் அனுபவ உண்மைகள் மூலம் அக்கூட்டத்தாரை சரியாக வழிநடத்தினார். அரசியல் தலைவர்களும், கள்ளப்போதனைத் தலைவர்களும் தங்களைப் பின்பற்றுபவர்களை தங்கள் நலத்திற்காக பயனப்டுத்துகிறார்கள். அவர்களில் இருக்கும் வல்லமை இறைவனுடையது அல்ல. அவர்களைப் பின்பற்றுபவர்கள், தலைவர்கள் மரித்தவுடன் விரைவில் அழிந்து விடுவார்கள். இறைவன் மாத்திரமே தன்னுடைய ராஜ்யத்தின் ஆரம்பம், வளர்ச்சி மற்றும் முடிவு வரை இருக்கிறார். மேலும் கிறிஸ்துவே தன்னைப் பின்பற்றுபவர்களில் விசுவாசத்தை துவக்குபவரும், முடிக்கிறவருமாய் இருக்கிறார்.
கமாலியேல் இயேசு என்னும் நபரைக் குறித்து தர்க்க ரீதியாக அறிந்திருந்த குறிப்புகளை இன்று நாம் ஆராய்ந்து பார்ப்போம். கிறிஸ்துவின் இயக்கம் அவருடைய மரணத்திற்கு பின்பு அழிந்து மறைந்து போகவில்லை. மாறாக அது வாழ்கிறது, தீவிரமாக என்றென்றம் விருத்தியடைந்து கொண்டிருக்கிறது. இன்று உலகில் பாதிக்கும் மேல் அது வளர்ந்துள்ளது. இது மனிதர்களால் அல்ல, இறைவனால் வந்தது என்பதை அது காண்பிக்கிறது.
ஆலோசனைச் சங்கத்து எழுபது உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாதிருந்தது. அவர்களில் பெரும்பான்மையானோர், இரக்கமற்ற தன்மையோடு நீதிமானாய் இருக்கிறது. பன்னிரெண்டு பேரையும் கூண்டோடு அழிக்கும் எண்ணத்துடன் இருந்தார்கள். இருப்பினும் அவர்கள் காத்திருக்கவும், உடனடியாக எந்த தீர்ப்பையும் வழங்காதிருக்கவும் ஒத்துக்கொண்டார்கள். மேலும் ஆலோசனைச் சங்கத்தில் கோபத்துடன் இருந்த உறுப்பினர்களும், பிரதான ஆசாரியனும் தங்கள் பழியை தீர்த்துக்கொள்ள கடுமையான தண்டனை வழங்க முற்பட்டார்கள். தைரியமிக்க குற்றமில்லாத இந்த நீதிமான்களை முதுகில் முப்பத்தொன்பது அடிகள் அடிக்கும் தண்டனையைக் கொடுக்கும்படி ஆலோசனைச் சங்கத்தை வற்புறுத்தினார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட சீஷர்களை காவற்காரர்கள் வெளியே கொண்டு போனார்கள். ஆலோசனைச் சங்கத்தின் அநீதியான முடிவை நிறைவேற்றும்படி, அவர்களுடைய முதுகில் வாரினால் அடிக்கும்படி கொண்டுபோனார்கள். அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாடுபடுவதை சந்தோஷமாய் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் மிகுந்த சந்தோஷமாய் அந்த அடிகளை ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்களுடைய சொந்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் பாடுபட்டார்கள். ஆண்டவர் அவர்களிடம் இவ்விதமாக கூறியிருந்தார். 11.என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;12.சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (மத்தேயு 5:11-12)
இந்த கடுமையான தண்டனை வழங்கியதால் ஏற்பட்ட விளைவு என்னவாக இருந்தது? இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசுவது தொடர்ந்து தடைசெய்யப்பட்டது. இன்று வரைக்கும் அந்த நாமத்தை உச்சரிப்பது யூதர்கள் மத்தியில் விரும்பப்படத்தக்க ஒன்றாக இல்லை. இருப்பினும் அந்த நாமத்தை உச்சரிப்பவர்கள் துன்புறுத்தப்படவோ அல்லது கொல்லப்படவோ இல்லை. திருச்சபையானது இந்த உபத்திரவத்திலிருந்து ஓர் தற்காலிக விடுதலையைப் பெற்றது. தடையிருந்தாலும் அவர்கள் இயேசுவின் நாமத்தைக் குறித்து வெளிப்படையாக பிரசங்கித்தார்கள். அவர்கள் தலைகளின் மேலே ஆபத்து என்னும் கத்தி தொங்கிக்கொண்டே இருந்தது.
கசையடிகள் வாங்கியபின்பு அப்போஸ்தலர்கள் மகிழ்ச்சியுடன், தைரியத்துடன் ஆலயத்து பிரகாரத்திற்கு சென்றார்கள். அங்கே அவர்கள் மரணத்திலிருந்து வெற்றியோடு உயிர்த்தெழுந்த இயேசுவைக் குறித்த சாட்சியை தொடர்ந்து பறைசாற்றினார்கள். அவர்கள் புயங்களிலும், முதுகுகளிலும் வாங்கின அடிகளின் காயங்களை பார்க்க முடிந்தது. இயேசுவை வெறுத்து அவருக்கு செய்ததைப் போலவே, அவர்களுடைய தேசத்து அதிகாரிகள் இவர்களுக்கும் செய்ததை மக்கள் உணர்ந்து கொண்டார்கள். அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் உபத்திரவத்தை எதிர்நோக்கியே இருந்தார்கள். இப்படிப்பட்ட ஆபத்து இருந்தாலும் இதன் மூலம் பதரானது கோதுமையை விட்டுப் பிரிக்கப்பட முடிந்தது. விசுவாசிகள் நிலைத்திருக்கவும், உறுதியோடிருக்கவும் செய்தது.
அப்போஸ்தலர்கள் வீடுகள் தோறும் சென்று விசுவாசிகளுக்கு உபதேசம் பண்ணுவதைத் தொடர்ந்தார்கள். அவர்களை வசனங்களிலும், சங்கீதங்கள், தீர்க்கதரிசனங்களிலும் வழிநடத்தினார்கள. இயேசுவின் வார்த்தைகளை அவர் நேரடியாக கேட்டு பெற்றுக்கொண்டிருந்த படியால், அவைகளை விளக்கிச் சொன்னார்கள். அதே சமயத்தில் மேய்ப்பர்களாகிய அவர்கள் காணாமற்போன ஆட்டைத் தேடி, ஆலயத்திலுள்ள திரளான மக்களுக்கு பிரசங்கித்தார்கள். அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசு தரும் முழுமையான இரட்சிப்பைக் குறித்து விளக்கினார்கள். அவர்கள் செய்தியின் உள்ளடக்கம் இரண்டு குறுகிய வாக்கியங்களில் தெளிவாகக் காண்பிக்கப்பட்டது. இயேசு மேசியாவாக இருக்கிறார். அவர் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, உயிர்த்தெழுந்தார். தள்ளப்பட்ட இந்த நசரேயன் தெய்வீக இராஜாவாக இருக்கிறார். அவர் இன்றும் பரலோகில் இறைவனின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து ஆளுகை செய்கிறார். அப்போஸ்தலர்கள் பயமின்றி, எல்லா மனிதர்களுக்கும் இயேசு கிறிஸ்துவே ஒரே நம்பிக்கை என்பதை நிச்சயப்படுத்தினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.