அப்போஸ்தலர் நடபடிகள் 1 வேத பாடம்

அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

1. அப்போஸ்தலர் நடபடிகளுக்கான அறிமுகமும் கிறிஸ்துவின் இறுதி வாக்குத்தத்தமும் (அப்போஸ்தலர் 1:1-8)


அப்போஸ்தலர் 1:1-2
1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டபின்பு, 2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.
அநேக மனிதர்கள் அநேக நூல்களை எழுதியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் ஒன்றாக அடுக்கி வைத்தால் மிகவும் பெரிய உயர்ந்த மலைபோல அவை குவிந்துவிடும். ஒரு நாளில் அவை அனைத்தும் இறைவனுடைய கோபத்தின் சுவாலையினால் சுட்டெரிக்கப்படும், ஏனெனில் மனிதர்களுடைய வார்த்தைகள் மதிப்பற்றவைகளும், பெருமையுள்ளவைகளும், வெறுமையானவைகளுமாகவே இருக்கின்றன.
ஆனால் மருத்துவனாகிய லூக்கா எழுதிய இரண்டு நூல்களும் நியாயத்தீர்ப்பு நாளில் சூரியனைவிட அதிகமாக ஒளிரும். அவைகள் ஒருபோதும் அழிந்து போகாமல் இறைவனுடைய சிம்மாசனத்திற்கு முன்பாக எழுந்தருளும். நற்செய்தியாளனாகிய லூக்கா தன்னுடைய நற்செய்தி நூலில் கிறிஸ்துவின் வார்த்தைகளையும் செய்கைகளையும் விளக்கியிருக்கிறார். கிறிஸ்துவின் வார்த்தைகளை எழுதுவதற்கு முன்பாகவே லூக்கா அவருடைய செயல்களைப் பற்றி எழுதியிருக்கிறார். காரணம் கிறிஸ்து போதகராக மட்டும் இவ்வுலகத்திற்கு வராமல் இந்த முழு உலகத்தின் இரட்சகராகவும் வந்தார். நற்செய்தியாளன் அவரை மகிமைப்படுத்த விரும்பினார். இயேசுவின் முன்பு பாவிகள் எவ்வாறு தங்கள் பாவங்களை உணர்ந்து அறிக்கையிட்டு, கர்த்தருடைய கிருபையின் மேல் உள்ள விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டார்கள் என்பதை அவர் காண்பித்திருக்கிறார். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட அந்தத் திருடனும் அவரோடு பரதீசுக்குச் சென்றபோது இதையே அனுபவித்தார். லூக்காவின் நற்செய்தி நூல் மாபெரும் மகிழ்ச்சியின் நூலாகும். மாட்டுத்
தொழுவத்தில் கிறிஸ்து குழந்தையாகப் பிறந்தபோது, இந்த மகிழ்ச்சியான செய்தியை ஒரு வானதூதன் வந்து அறிவித்தான். இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவும் கர்த்தர் தாமே மனுவுருவில் தோன்றினார். லூக்காவினுடைய இந்த நற்செய்தியினால் அநேக மக்கள் விடுதலையைப் பெற்றிருக்கிறார்கள் என்று நாம் இன்று இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த நற்செய்தி நூலின் எழுத்துக்களிலிருந்து விசுவாசிகளுடைய சிந்தைக்குள்ளும் இருதயத்திற்குள்ளும் முடிவற்ற வாழ்வின் வல்லமை பாய்ந்தோடுகிறது.
ரோம அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகிய தியோப்பிலு கிறிஸ்து தரும் இந்த விடுதலையின் அனுபவத்தைப் பெற்றிருந்தார். அதனால்தான் அவர் நாசரேத்து இயேசுவினுடைய வாழ்வைக் குறித்த விவரங்களைச் சேகரித்து ரோமப் பேரரசின் காலத்தில் நடைபெற்ற விடுதலையின் நற்செய்தியைக் குறித்த துல்லியமான வரலாற்றை எழுதும்படி தன்னுடைய நண்பரும் மருத்துவருமாகிய லூக்காவினிடத்தில் பணித்தார். அந்த ரோம ஆளுநர் வெறும் உணர்வுபூர்வமான காரியங்களோடு திருப்தியடையாமல் தன்னுடைய உயிருள்ள விசுவாசத்தின் வரலாற்று ஆதாரத்தை அறிந்துகொள்ள விரும்பினார். அந்த அதிகாரி தன்னுடைய ஆன்மீக வாழ்வில் நிலைபெற்று, ரோமப் பேரரசின் ஒரு முக்கியமான சேவகனாக இருக்கும் அவர் ஒரு விசுவாசியாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கல்வி அறிவுடையவராயிருந்த லூக்கா இந்த இரண்டு நூல்களையும் அவருக்கு எழுதுகிறார். பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் நம்முடைய உலகத்திற்கு உயிருள்ளவராகிய இயேசு கிறிஸ்துவாலே அன்றி வேறெங்கும் நம்பிக்கை இல்லை என்று லூக்கா அவருக்குச் சாட்சி கொடுத்தார்.
நம்முடைய உலகத்தில் இருக்கும் நாடுகள் அனைத்தும் அழிந்து போகும். தங்கள் அறிவைக் குறித்த ஆதாரங்களை முன்வைத்தாலும் அனைத்துத் தத்துவ ஞானிகளும் பயனற்றவர்களே. மாபெரும் சிந்தனையாளர்களுடைய அறிவையோ, பெரும் பலம் கொண்ட இராணுவத்தையோ நம்பி இறைவன் தம்முடைய அரசைக் கட்டாமல் சாதாரண மனிதர்களாக இருந்த கல்வி அறிவற்ற மீனவர்களை அப்போஸ்தலராக அழைத்து, அவர்கள் மூலம் தம்முடைய அரசை நிறுவினார். எளிமையானவர்களையும் சமூகத்தில் தாழ்வான நிலையில் உள்ளவர்களையும் தெரிந்துகொண்டதன் மூலம் இவ்வுலகத்தில் மேன்மையானவர்களையும், பெலமுள்ளவர்களையும், புத்திமான்களையும் இறைவன் புறக்கணிக்கிறார். பெருமையுள்ளவர்களுக்குக் கர்த்தர் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ அவர் கிருபை அளிக்கிறார்.
பெலனற்றவர்களுக்கு பெலன்கொடுத்து, சோர்ந்து போகிறவர்களுக்கு வாழ்வளிப்பதே பரிசுத்த ஆவியின் செயல்முறையாகும். கிறிஸ்து ஒருபோதும் சுயமாகச் செயல்படுவதில்லை. அவர் எப்போதும் பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் பிதாவின் சித்தத்தையே உறுதியாக நிறைவேற்றினார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கிடையிலான முழுமையான ஐக்கியத்தை நம்முடைய அறிவினால் புரிந்துகொள்ள முடியாது. தொலைந்து போன இந்த உலகத்தில் தம்முடைய திருச்சபையைக் கட்ட வேண்டும் என்றும் இவ்வுலகில் இறந்து கிடக்கும் மக்கள் நடுவில் பரலோகத்தை பரப்ப வேண்டும் என்றும் பரிசுத்த திரித்துவம் நித்தியத்திலேயே தீர்மானித்துவிட்டது. கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொண்டு, அழைத்து, பயிற்சியளித்து, நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி கட்டளைகொடுத்து அனுப்பியதிலிருந்து இறைவன் தரும் விடுதலையின் வரலாறு ஆரம்பமாகிறது. இந்த சாதாரண மீனவர்களில் இறைவனுடைய அன்பின் வல்லமை தங்கியிருந்தது என்பதை அறிந்துகொண்ட லூக்கா கர்த்தர் தெரிந்துகொண்ட இந்த மனிதர்களுடைய செயல்பாட்டை விளக்கினார். அவைகள்தான் உலகத்தில் நடைபெற்ற புதிய அற்புதங்களாகவும் மேன்மையான எதிர்காலத்தின் ஒரே நம்பிக்கையாகவும் இருக்கின்றன.
இந்த அற்புதம் நடைபெற வழிசெய்யும்படி, உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம்முடைய சீடர்களோடு அரசனாக இருந்து அவர்களை ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அரசாகப் பரப்பும் செயலில் ஈடுபடவில்லை. அதற்கு மாறாக அவர் பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனார். தம்முடைய சீடர்கள் தவறுசெய்து விடுவார்களோ என்று அவர் பயப்படவில்லை. காரணம் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் வாழ்ந்து அவர்கள் பணியை முடிக்கும்படி அவர்களை வழிநடத்துவார் என்று அவர் அறிந்திருந்தார். அவர் எந்தக் கவலையும் பயமும் இல்லாமல் பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனார். அவர் தம்முடைய பிதாவினிடத்திற்கு எழுந்தருளி, அவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருந்து, அவரோடு ஆளுகை செய்து, அவருடைய பரிசுத்த திருச்சபையை இந்த தீமைநிறைந்த உலகத்தில் கட்டிவருகிறார். அதற்காக அவர் இறைவனுக்கு எதிரான சக்திகளை மேற்கொண்டு, இலட்சக்கணக்கான மக்களை விடுதலை செய்கிறார். மறைவாக இருக்கும் இறைவனுடைய அரசு இந்த உலகத்தில் வளர்ச்சியடைவதைக் கண்டு லூக்கா பெரிதும் ஆச்சரியப்படுகிறார். அவர் தம்முடைய இரண்டாவது புத்தகத்தில், எருசலேமில் தொடங்கி ரோமாபுரிவரை அது எவ்விதமாகப் பரவியது என்பதை விளக்குகிறார்.

அப்போஸ்தலர் 1:3-6
3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். 4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். 5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
கிறிஸ்து மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தருளியதிலிருந்து இறைவனுடைய அரசு ஒளிரத்தொடங்கியது. மரணமடைந்த ஒருவர் உயிரோடு எழுந்து வந்து, நாற்பது நாட்கள் அவருடைய நண்பர்களுக்குக் காட்சியளித்து, அவர்களோடு அமைதியாக அமர்ந்திருந்து, உணவருந்தி, கதவு பூட்டப்பட்டிருக்கையில் அமைதியாக அறைகளுக்குள் வந்து போய்க்கொண்டிருந்தார் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். உயிரோடிருந்த, உயிர்த்தெழுந்து இயேசுவின் இந்த நடவடிக்கைகள் சீடர்களுடைய மனதில் ஆழமான பாதிப்பை உண்டுபண்ணியிருந்தது. ஏனெனில் அவர்கள் நியாயமற்ற முறையிலும் அவமானத்துக்குரிய வகையிலும் அவர் தண்டிக்கப்பட்டதை அனுபவித்திருந்தார்கள். அவர் எவ்விதமாக மக்களாலும் தலைவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு, பரிகசிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு சிலுவையில் மரணமடைந்தார் என்பதை அவர்கள் கண்டிருந்தார்கள். அவருடைய உடல் வெள்ளிக்கிழமையில் அடக்கம் செய்யப்பட்டபோது, அவருடைய மரணமும் அடக்கமும் அவர்களுடைய நம்பிக்கை அனைத்துக்கும் முடிவாக அமைப்போகிறது என்று அவர்கள் கருதினார்கள்.
ஆனால் அவருடைய உயிர்த்தெழுதலின் நாள் முடிவற்ற காலம் முடிவுறும் காலத்திற்குள் நுûழுந்தாற்போல ஒரு புதிய யுகத்தின் பேரொளியாக ஒளிரத்தொடங்கியது. கிறிஸ்து இவ்வுலகத்திற்கு மீண்டும் எழுந்தருளி வந்தது, அவருடைய அரசு இவ்வுலகத்திற்குரியதல்ல என்றும், அது சந்தோஷம், நீதி, அன்பு, உண்மை, தாழ்மை மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றினால் நிறைந்த, அழியாத, ஆவிக்குரிய அரசு என்றும் நிரூபித்தது. வெறுப்பும், அசுத்தமும், பெருமையும், பொய்யும், போர்களும், அநீதியும் நிறைந்த உலகத்திலே புதிய ஏற்பாட்டின் கடிதங்கள் அனைத்தும் பரலோக உண்மைகளை விளக்குவதாக அமைந்துள்ளன. நாற்பது நாட்களாக கிறிஸ்து, நியாயப்பிரமாணங்களிலும், சங்கீதங்களிலும், தீர்க்கதரிசன நூல்களிலும் நீதியுள்ள தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட அற்புதமான நிகழ்வுகளின் இரகசியங்களை தம்முடைய சீடர்களுக்கு விளக்கினார். அவர்கள் இறைவனுடைய அரசின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்களாகவும், அதன் ஒளிக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது பரலோக காரியங்கள் வந்துவிட்டது. நித்திய அரசன் தோன்றிவிட்டார். அவருடைய சீடர்களுடைய கண்களுக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கிறார்.
இறைவனுடைய தீர்க்கதரிசிகள் கொலைசெய்யப்பட்டதும், இறைவனுடைய மகன் சிலுவையில் அறையப்பட்டதுமான எருசலேமில் இறைவனுடைய அரசு ஆரம்பமாகிறது. சமாதானத்தின் நகரத்தில் தன்னுடைய உண்மையான சமாதானத்தை நிலைநிறுத்துகிறார். அங்கிருந்து கலிலேயாவின் மீனவர்களாகிய தம்முடைய சீடர்கள் திபேரியாக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று பணிக்கிறார். அவர்கள் தீமை செய்கிற அந்த நகரத்தில் தானே இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்வரை காத்திருந்து விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்படுகிறார்கள்.
தெய்வீக வாக்குத்தத்தின் உண்மையான பொருளை கிறிஸ்து ஆரம்பத்திலிருந்தே தம்முடைய சீடர்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார். அதன்படி அவர்கள் அவரைக் இறைவனாக அறிந்துகொள்வார்கள். அவர் தம்மை அவர்களுடைய தகப்பனாக வெளிப்படுத்துவார், அவர்கள் அவருடைய சிறப்பான, பாதுகாப்பைப் பெற்ற பிள்ளைகளாக மாற்றப்படுவார்கள். அவர்கள பயங்கரமாக அழிப்பவரையும் தாங்கள் அறியாத நீதிபதியையும் கண்டு பயப்படத் தேவையில்லை. கிறிஸ்துவின் சிறப்பான செய்தி இதுதான்: பரிசுத்தமுள்ள இறைவனே இரக்கமுள்ள தந்தையாகவும் இருக்கிறார். இந்த வெளிப்படுத்தலினால் நம்முடைய கலாச்சாரம் மாற்றமடைந்துள்ளது. வரப்போகிற இறைவனுடைய அரசு ஒரு தகப்பனுடைய அரசாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். அவருடைய பிள்ளைகள் சேவை செய்யும் இளவரசர்களாகவும் விண்ணப்பம் செய்யும் நீதிபதிகளாகவும் இருப்பார்கள். இறைவனுடைய நியாயமான கோபத்திலிருந்து நம்மை எல்லாம் தப்புவிக்க மரணத்தை ஏற்றுக்கொண்ட இயேசுவின் உதாரணத்தைப் அவர்கள் பின்பற்றுவார்கள்.
லூக்கா இயேசுவின் இறுதியான வார்த்தைகளில் சிலவற்றை நமக்காகப் பதிவு செய்திருக்கிறார். “பிதாவின் வாக்குறுதிகளை என்னிடமிருந்து நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்”. மாபெரும் பரிசுத்தராயிருந்து, நம்மை தம்முடைய பிள்ளைகளாகத் தத்தெடுத்து, அவருடைய தன்மையினால் நம்மை நிரப்பி, நம்மை இறைவனுடைய பிள்ளைகளாக்கும் அவருடைய ஒரே மகனுடைய அனைத்துப் போதனைகளின் சுருக்கமாக இந்த வாக்கியம் அமைந்திருக்கிறது. இதுதான் இயேசுவினுடைய சிலுவை மரணத்தின் நோக்கமாயிருந்தது. அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, நாம் இறைவனிடம் வந்து அவருடைய அன்பிற்கு உரியவர்களாகும்படி, நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறார். நம்முடைய நடத்தையினால் அவருடைய பெயர் பரிசுத்தமாக்கப்பட வேண்டும்.
இதற்கு முன்பாக, வானத்தையும் பூமியையும் அசைக்கப்போகின்ற ஒரு பெரிய மாற்றம் வரும் என்று திருமுழுக்கு யோவான் அறிந்திருந்தார். தீமையும் சுய நலமும் நிறைந்த மக்களுடைய கல்லான இருதயங்களும் புறக்கணிக்கிற மனங்களும் ஆயத்தப்படுத்தப்படாமல் இறைவனுடைய அரசு வராது என்பதை, வனாந்தரத்தில் வாழ்ந்த இயேசுவின் முன்னோடியாகிய இவர் அறிந்திருந்தார். அவர்கள் மரணத்திற்கு உரியவர்கள் என்பதைக் காண்பிக்கும்படி மனந்திரும்பியவர்களுக்கு அவர் யோர்த்தான் நதிக்கரையில் திருமுழுக்குக் கொடுத்தார். அவர்கள் திருமுழுக்குப் பெற்று தண்ணீரிலிருந்து எழுந்து வருவது அவர்களில் இறைவன் தரவிருக்கும் புதிய படைப்பாகிய புதிய தன்மையை அடையாளப்படுத்தியது. யோவான் தன்னுடைய திருமுழுக்கு அந்த மக்களை உண்மையில் மாற்றமடையச் செய்யாது என்று அறிக்கையிட்டு அவர்களுக்கு போதனை செய்தார். மக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்குவது எந்த மனிதனும் தன்னையோ மற்றவர்களையோ மாற்ற முடியாது என்பதையே காண்பிக்கிறது. நாம் அனைவரும் தீயவர்களாகவும், கீழ்த்தரமானவர்களாகவும், மாம்சத்திற்குரியவர்களாகவும் இருப்பதால் ஒருவரும் எந்த சடங்கினாலும் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ள முடியாது.
வனாந்தரத்தில் வந்த தீர்க்கதரிசியாகிய திருமுழுக்கு யோவான் மனந்திரும்புகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியினால் திருமுழுக்குக் கொடுக்கவிருக்கும் இறைவனுடைய ஆட்டுக்குட்டியை மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். அவர் பரிசுத்த ஆவியினால் பிறந்து, தொடர்ந்து பாவமில்லாதவராக வாழ்ந்தார். அவர் ஆவியில் பழுதற்ற பலியாகத் தம்மை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, நாமும் இந்த ஆசீர்வாதமான ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி, உண்மையுள்ளவர்கள் அனைவரையும் தம்முடைய பிதாவோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் பிதாவின் வாக்குறுதியை உணர்ந்துகொண்டிருக்கிறீர்களா? ஆவியானவர் உங்களில் வாழும்படி தீர்மானித்திருக்கிறார். அது நடைபெறும்போது கிறிஸ்து உங்கள் இருதயத்தில் இருப்பார், உங்கள் உடல், உயிருள்ள இறைவனுடைய ஆலயமாக மாறும். நீங்கள் இன்று இறைவனை பெற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறீர்களா?
கிறிஸ்து எப்போதுமே தாழ்மையுள்ளவராயிருந்தது போல நீங்களும் உங்களைத் தாழ்த்தி இறைவனுடைய வாக்குறுதிக்காக ஆயத்தப்படுங்கள். திருமுழுக்கு யோவான் சொன்னதைப் போல “நான் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினால் திருமுழுக்குக் கொடுப்பேன்” என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அந்த மகிமையை அவர் தம்முடைய பிதாவிற்குக் கொடுத்துவிட்டார். பரிசுத்த ஆவியானவரே அவர்களிடம் வருவதற்குத் தீர்மானித்திருக்கிறார் என்று அவர்களுக்குப் போதித்தார். பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியானவரை வழங்குவதில் முழுவதும் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். ஏனெனில் பிதாவினிடத்திலிருந்தும் குமாரனிடத்திலிருந்தும் புறப்பட்டு வரும் இந்த ஆவியானவர் அன்பின் ஆவியானவராயிருக்கிறார். அன்புள்ள சகோதரனே, நீங்கள் இறைவனுடைய அன்பை உணர்ந்திருக்கிறீர்களா? தம்முடைய சீடர்கள் காத்திருந்து, விண்ணப்பிக்க வேண்டும் என்று கிறிஸ்து கட்டளையிட்டிருப்பதற்கு இணங்க நீங்களும் அவரைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பதுடன் ஆயத்தப்படுகிறீர்களா?

அப்போஸ்தலர் 1:6-8
6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். 7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. 8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
சீடர்கள் இந்த இவ்வுலகத்திற்குரிய, அரசியல் ரீதியான கேள்வியைக் கேட்க இயேசுவிடம் வந்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் இன்னும் யூதர்களாக தங்கள் தேசப்பற்றைப் பற்றியும் எருசலேமில் தங்களுக்கு என்ன பங்கு கிடைக்கும் என்றும் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருக்கும் அரசனாகிய கிறிஸ்து, எருசலேமிலிருந்து மகிமையோடும் மகத்துவத்தோடும் அனைத்து மக்களையும் ஆளுகை செய்வார் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். இயேசு இந்தக் கேள்வியைப் புறக்கணித்துவிடவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாயிருக்கிறது. ஆனால் தெய்வீக அரசாட்சி நிச்சயமாக வரும் என்பதை அவர் உறுதிசெய்தார். ஆனாலும் பரலோக அரசு மனிதர்களுடைய கற்பனைகளின்படி நிறுவப்படாது என்றும், உடனடியாக அந்த நிகழ்வு நடந்துவிடாது என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்கு உறுதிசெய்கிறார்.
இறைவனிடம் சிறப்பான திட்டம் ஒன்றிருந்தது. உலகத்தின் முழு வரலாற்றையும் அவர் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே தம்முன் கொண்டவராக, ஒவ்வொரு கோத்திரமும் இனமும் மனந்திரும்புவதற்கும் உயிருள்ள விசுவாசத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் அவர் போதிய அளவு காலம் கொடுத்திருந்தார். மேலும் அவர் தம்முடைய பொறுமைக்கு காலத்தையும் எல்லையையும் குறித்திருந்தார். இந்த வரலாற்றின் திட்டவட்டமான போக்கு அழிவிற்குரிய தலைவிதியைப் போலவோ அல்லது பயங்கரமான தெய்வீக ஆணையாகவோ நமக்கு முன்பாக நிற்பதில்லை. மாறாக நம்முடைய தகப்பன் காலத்தின் போக்கை இவ்விதமாக நிர்ணயித்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அவருடைய அன்பு எப்போதும் இவ்வுலகத்திற்கு நன்மையைத்தான் கொண்டு வந்திருக்கிறது என்றும் கொண்டு வருகிறது என்றும் நாம் அறிவோம். அவருடைய அன்பு காலங்களையும் தன்வசம் வைத்திருப்பதால் நாம் பயப்பட வேண்டிய தேவையே இல்லை எனலாம். நம்முடைய தகப்பன் ஆட்சியாளராகவும் உண்மையான அதிகாரியாகவும் இருக்கிறார். எந்தவித புரட்சியின் நடவடிக்கைகளோ, ஆயுதங்களின் குவியல்களோ அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. ஏனெனில் அவருடைய அரசு ஆவிக்குரிய நிலையில் மட்டுமல்ல, மகிமையோடும், வல்லமையோடும் தவறேதுமின்றி நிச்சயமாக வரும். இறைவனுடைய அதிகாரம் அன்பிலும் சத்தியத்திலும் கட்டப்பட்டிருக்கிறது, அநியாயத்திலும் அக்கறையின்மையிலும் கட்டப்படவில்லை. யார் இறைவனைத் தகப்பனாகக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து மகிழ்ச்சியுடையவர்களாயிருப்பார்கள்.
கிறிஸ்து தம்முடைய சீடர்களுடைய மனதில் இருந்த அனைத்து அரசியல் சிந்தனைகளையும் துடைத்தெறிந்துவிட்டு, காணக்கூடியதாக இருக்கும் பிதாவின் வாக்குறுதிக்காக அவர்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்களை ஆயத்தப்படுகிறார். அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் போது அவர்கள் “வல்லமையைப் பெற்றுக்கொள்வார்கள்” என்று கிறிஸ்து குறிப்பிடுகிறார். அன்பார்ந்த வாசகரே, நீங்கள் பலவீனமானவர் என்றும், மற்ற மனிதர்களைப் போலவே நீங்களும் இறந்து போவீர்கள் என்றும் அறிந்திருக்கிறீர்களா? இறைவனுடைய பரிசுத்தத்தோடும், மகிமையோடும், ஞானத்தோடும் ஒப்பிடும்போது நீங்கள் முட்டாள் என்றும் அசிங்கமானவர் என்றும் தீமையுள்ளவர் என்றும் அழிந்துபோகக் கூடியவர் என்றும் உங்களுக்குத் தெரியுமா? அவருடைய வல்லமை இயற்கையான சுபாவமுள்ள மனிதர்களிடத்தில் இறங்குவதில்லை. உங்கள் சொந்த பலத்தினால் உங்களை நீங்களே சீரமைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் எல்லா மனிதர்களைப் போல நீங்களும் பெலவீனர்களாகவும் பாவத்திற்கு அடிமைகளாகவும் இருக்கிறீர்கள். கிறிஸ்து தம்முடைய மறைவான அரசை நிறுவும்போது முதலாவதாக தம்முடைய சீடர்களுக்கு அவர் வல்லமையைக் கொடுக்கிறார். வல்லமை என்று கிரேக்க வார்த்தைக்கு “வெடிகுண்டு” என்று பொருள். இறைவனுடைய வல்லமை நம்முடைய கல்லான இருதயத்தை உடைத்து நொறுக்கி, இரக்கமுள்ள இருதயத்தை நமக்குக் கொடுத்து, நாம் இறைவனுக்குரிய காரியங்களைச் சிந்திக்கத்தக்கதாக நம்முடைய மனக்கடினத்தை மேற்கொள்கிறது. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தெய்வீக ஈவு அவர் உலகங்களைப் படைத்தபோது பயன்படுத்திய அதே தெய்வீக வல்லமையே ஆகும். இந்த இறைவனுடைய வல்லமையை இயேசுவில் நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாயிருந்தது.
நீங்கள் இறைவனுடைய வல்லமையைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா அல்லது இன்னும் உங்கள் பாவத்தில் மரித்த நிலையிலேயே இருக்கிறீர்களா? நீங்கள் பிதாவின் அன்பில் வாழ்கிறீர்களா? உங்களை விடுவித்தவரினால் நீங்கள் அனைத்தையும் செய்கிறீர்களா? அவருடைய பெலன் உங்கள் பெலவீனத்தில் உதவி செய்கிறதா? நீதிமானின் ஊக்கமான வேண்டுதல் அதிக பெலமுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?
இறைவனுடைய வல்லமை என்பது ஒரு இரகசியமல்ல. பரிசுத்த வல்லமையாகிய அவர் நித்திய நித்தியமாக இருப்பவராகவும், இறைவனுடைய பரிசுத்த திரித்துவத்தில் ஒருவராகவும், நம்முடைய ஆராதனைக்கும் ஒப்படைப்புக்கும் பாத்திரராகவும் இருக்கிறார். முழு நம்பிக்கையோடும் நன்றியறிதலோடும் நாம் இந்த தெய்வீக ஆவியானவரைத் தொழுதுகொண்டு, பிதா மற்றும் குமாரனுடைய வெளிச்சத்திலே அவரை மகிமைப்படுத்துகின்றோம். அவர் ஏழைகளாகிய நம்மில் உண்மையாகவே வாழ்ந்து, கிறிஸ்துவிலுள்ள நம்முடைய இரட்சிப்பை உறுதிசெய்து, இறைவனை அறிந்துகொள்ளும்படி நம்முடைய மனக்கண்களைத் திறந்தருளுகிறார். அவர் நம்முடைய பரலோக தகப்பன். இயற்கையான எந்த மனிதனுக்குள்ளும் இவ்விதமான தெய்வீகத் தன்மை குடிகொண்டிருப்பதில்லை. அது நமக்கு வெளியே இருந்து உள்ளே வந்து, கிறிஸ்துவை நேசிப்பவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து, அவர்களைத் தம்முடைய உயிரினாலும், அன்பினாலும், அமைதியினாலும் நிரப்புகிறது.
சத்திய ஆவியினால் வழிநடத்தப்படாத எந்த நபரும் இயேசுவைக் “கிறிஸ்து” என்று அறிக்கை செய்ய முடியாது. அவர் நம்மிலே உண்மையான விசுவாசத்தை ஏற்படுத்துகிறார். குமாரனுடைய ஆவியானவர் நம்முடைய வாய்களைத் திறந்து, பரலோக மொழியில் பேசும்படி நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். அவர் நமக்கு, “பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய அரசு வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படுவதாக” என்று விண்ணப்பிக்கும்படி கற்றுக்கொடுக்கிறார். இந்த நல்ல ஆவியானவருக்கு நீங்கள் உங்களைத் திறந்துகொடுத்திருக்கிறீர்களா? அவர் வந்து உங்களை நிரப்ப விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
பெலனற்ற சீடர்கள் பரிசுத்த ஆவியினால் பெலனைப் பெற்றுக்கொண்டு இயேசுவின் தெய்வீகத் தன்மையை அறிந்துகொண்டார்கள். அவர் அவர்களில் விசுவாசத்தை உண்டுபண்ணி, அவருடைய சத்தியத்திற்குச் சாட்சியிடவும், அவருடைய சித்தத்தைச் செய்யும்படி தங்களைத் தாழ்த்தவும் அவர்களுக்கு பெலன் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவின் சாட்சிகளாக்குகிறார். நாம் நம்மையே புதுப்பித்துக்கொள்ளவோ, நம்முடைய மறுபிறப்பைக் குறித்து பெருமைகொள்ளவோ தேவையில்லை. நம்முடைய இரட்சகரும் நம்மைப் புதுப்பிப்பவருமாகிய கிறிஸ்துவை நாம் காண்பித்து, நம்முடைய பாவங்களை அவருக்கு முன்பாக அறிக்கை செய்து, பாவத்தை மன்னிக்கும் அவருடைய வல்லமைக்கு சாட்சி கொடுத்து, பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்கள் அனைவரும் உண்மையான இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்க வேண்டும். அவர் தம்முடைய இரத்தத்தினால் நம்மைப் பரிசுத்தப்படுத்தி, தம்முடைய ஆவியினால் நம்மை பெலப்படுத்துகிறார். கர்த்தராகிய இயேசு தம்முடைய நற்செய்தியின் ஆவியானவரினால் இன்றும் பலரை மாற்றுகிறார் என்பதை நாம் விசுவாசித்து மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும். அவர் தம்முடைய வசனத்தினால் பாவமுள்ள மனிதர்களிடத்திலிருந்து தீய ஆவிகளைத் தம்முடைய வார்த்தையினால் துரத்திவிட்டு, உடைந்துபோன இருதயங்களில் தம்முடைய அரசைக் கட்டுகிறார். “ஷாஹித்” என்ற அரபிய வார்த்தை “சாட்சி” என்பதையும் “இரத்த சாட்சி” என்பதையும் குறிக்கும் வார்த்தையாகும். இந்த உலகத்தின் ஆவி நமக்கு எதிராக எழுந்து வருமானால் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அது ஏற்கனவே எழுந்து நம்முடைய கர்த்தரை சிலுவையில் அறைந்திருக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் எருசலேமில் எழுந்தருள ஆரம்பித்தார். அது நெருப்பைப் போல யூதேயாவிற்குப் பரவி, சமாரியாவைச் சென்றடைந்து, அந்தியோகியாவிற்கு முன்னேறி, சின்ன ஆசியா முழுவதும் பரவியது. அதே வேளையில் அது வடக்கு ஆப்பிரிக்காவுக்கும், எத்தியோப்பியாவிற்கும், ஈராக்குக்கும் பரவி, கிரேக்கத்தில் நுழைந்து, தலைநகரமாகிய ரோமாபுரியைக் கைப்பற்றியது. இறைவனுடைய அன்பின் தீவிரமான பரவுதலை நற்செய்தியாளனாகிய லூக்கா உணர்ந்துகொண்டவராக அதைத் தன்னுடைய நூலில் பதிவு செய்திருக்கிறார். அன்புள்ள விசுவாசியே, இன்று நற்செய்தி உங்கள் கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் உங்களைப் பார்த்து: “இறைவனுடைய மகனுடைய அன்பை உங்கள் சுற்றுப்புறத்தில் எங்கும் ஒளிரச் செய்யுங்கள். ஏனெனில் நீங்களே உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள்” என்று சொல்கிறோம். ஆனால் முதலில் உங்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இறைவனுடைய வல்லமையைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாழ்கிறாரா? இல்லையென்றால், பிதாவினுடைய வாக்குத்தத்தம் உங்களில் நிறைவேறும்படி காத்துக்கொண்டிருங்கள். விண்ணப்பத்தோடு கேளுங்கள் அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். நற்செய்தியை வாசிக்கும்போது பிதாவின் வாக்குறுதியை நீங்கள் கண்டுகொள்வீர்கள். அது உங்களுக்கு முன்பாக திறந்து வைக்கப்படும்.

2. கிறிஸ்துவின் பரமேறுதல் (அப்போஸ்தலர் 1:9-12)


அப்போஸ்தலர் 1:9-12
9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. 10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: 11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். 12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் என்றும் அவருடைய உடல் இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்படாத ஆவிக்குரிய உடல் என்றும் சீடர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் உண்மையான மனிதனாகவும் உண்மையான இறைவனாகவும் இருந்தார். அவர் தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நாற்பது நாட்கள் தம்முடைய சீடர்களுடன் இருந்து பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் அதிலும் தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் எத்துணை மெய்யானவை என்பதை விளக்கிக் காண்பித்தார். இறுதியாக அப்போஸ்தலர்களை நிரப்பப்போகும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்த வாக்குறுதியை வழங்கியதன் மூலம் தம்முடைய போதனைகள் அனைத்திற்கும் அவர் மணிமகுடம் சூட்டினார்.
இவ்வுலகத்தில் வாழ்ந்த கிறிஸ்துவின் இறுதி அறிக்கை இதுவாகத்தான் இருந்தது. இதைவிட மேலானதொன்றும் தேவைப்படவில்லை. ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் பணியை நிறைவேற்றி முடித்துவிட்டார். அவர் தம்முடைய பிதாவினிடத்திற்குப் புறப்படத் தயாராயிருந்தார். அவர் சீடர்களோடிருந்த அந்த நாற்பது நாட்களில் சிலவேளைகளில் திடீரெனத் தோன்றி திடீரென மூடப்பட்ட கதவு அல்லது கட்டடத்தின் வழியாக ஊடுருவிச் சென்றதைப் போல இப்போது இரகசியமாக அவர் செல்லவில்லை. யாருமறியாமல் மரணத்திலிருந்து உயிர்தெழுந்த அவர் இப்போது தம்முடைய சீடர்களுடைய கண்களுக்கு முன்பாக பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனார். அவர் காற்றைவிடவும் அடர்த்தி குறைந்தவரைப் போல பூமியின் ஈர்ப்பு சக்தியை மேற்கொண்டு பரமேறினார். அவர் தம்முடைய பிதாவினிடத்திலிருந்த தமது அன்பினால் ஈர்க்கப்பட்டவராக மேலேறிச் சென்றார். மகிமையும் பரிசுத்தமும் உடைய இறைவனுடைய மேகங்கள் மெதுவாகவும் அமைதியாகவும் அவரைச் சூழ்ந்துகொண்டது. கிறிஸ்து தம்முடைய பணியை முடித்தவராக, மனிதர்களுடைய உலகத்தைவிட்டு, காணாத இறைவனுடைய மகிமைக்குள் சென்றார்.
நித்திய படைப்பாளியாகிய இறைவன் எப்போதும் மேலே வானத்தில் இருக்கிறார் என்று நாம் கூறுவதற்கில்லை. ஏனெனில் பூமி தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதால் வானம் சில வேளைகளில் பூமிக்கு மேலும் சில வேளைகளில் பூமிக்குக் கீழும் இருக்கிறது. சூரியன்கூட நமக்கு மேலாக இருப்பதில்லை. அது மிகப்பெரிய நெருப்பு உருண்டையாக, பல சூரியன்களில் ஒன்றாக காணாத இடத்தை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது. அப்படியானால் இறைவன் எங்கே இருக்கிறார்? கிறிஸ்து எங்கே இருக்கிறார்? இந்தக் கேள்விக்கு நம்முடைய கர்த்தர் தீர்க்கமான இறுதியான பதிலைக் கூறுகிறார்: “இதோ உலகத்தின் முடிவுபரிந்தம் நான் சகல நாட்களிலும் உங்களோடுகூட இருக்கிறேன்”.
இறைவன் நமக்கு மேலாகவோ, கீழாகவோ இருப்பதில்லை. அவர் எப்போதும் எங்குமிருக்கிறார். அவர் காலத்தாலும் இடத்தாலும் கட்டுப்படாதவர். எந்த மனிதனும் இறைவனுடைய மகிமையின் மேன்மையை அறிந்துகொள்ள முடியாது. சீடர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இயேசு அவர்களுடன் பேசினார். பரலோகம் மேலிருக்கிறது என்று அவர்கள் நம்பியதால் அவர் அவர்களுக்கு முன்பாக மேலேறிச் சென்றார். இப்போது அவர் அவர்களை முற்றிலுமாக விட்டுத் தம்முடைய பிதாவினிடத்திற்குத் திரும்பி, அவருடைய வலதுபக்கத்தில் அமர்ந்து, அவரோடு ஒன்றித்து முடிவில்லாத காலமாக இவ்வுலகத்தை ஆளுகை செய்யப்போகிறார். கிறிஸ்துவும் பிதாவும் ஒன்றே. பிதாதான் குமாரன் குமாரன்தான் பிதா. கிறிஸ்துவைக் கண்டவர்கள் இறைவனைக் கண்டவர்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே பரிசுத்த திரித்துவ இறைவனை நாம் விசுவாசிக்கிறோம். இந்த ஒற்றுமையின் இரகசியத்தை எந்த மனிதனாலும் போதுமான அளவு விளக்க முடியாது. கிறிஸ்து தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நாற்பது நாட்கள் சென்று, மனிதர்களுடைய உலகத்தைவிட்டு இறைவனுடைய உலகமாகிய பரலோகத்திற்குச் சென்றார் என்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. அங்கு அவர் தம்முடைய பிதாவோடு கிருபையின் அரியாசனத்தில் முழுமையான அன்போடும், மகிமையோடும், அதிகாரத்தோடும் வீற்றிருக்கிறார்.
இயேசுவின் பரமேறுதல் சீடர்களுடைய வாழ்க்கையிலும் வரலாற்றிலும் அதிரடியான மாற்றத்தை உண்டுபண்ணியது என்று அவர்கள் அறிந்தார்கள். அவர்கள் தொடர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்களுடைய கர்த்தர் மேகங்களில் மறைந்து போனார். நாமும் பிதாவோடு கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்தை மேலோக்கிப் பார்த்து, நம்முடைய இதயங்களை அவரைநோக்கி எழுப்புவது நல்லது. நம்முடைய பிரயாணம் பரலோகத்தை நோக்கியது, நம்முடைய வீடு நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய வீடுதான்.
தம்முடைய சீடர்கள் பரலோகத்தையும் இனிவரும் வாழ்வையும் பற்றி நினைத்துக்கொண்டு, ஒரு ஆன்மீக மாயையில் வாழ வேண்டும் என்று உயிருள்ள கர்த்தர் விரும்பவில்லை. அவர் அவர்களை பூமியிலே நிலைநிறுத்த விரும்பினார். ஆகவே அவர் காணப்படாத உலகத்திலிருந்து இரண்டு தேவதூதர்களை அவர்களிடத்தில் அனுப்பினார். தூய்மையானவர்களாகிய அந்த தூதர்கள் கிறிஸ்து உள்ளபடியே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள் என்பதை அவர்களுக்கு அறிவித்தார்கள். அவருடைய பரமேறுதல் என்பது சீடர்களுடைய பகல்கனவல்ல என்றும் அது உண்மையில் நடைபெற்ற நிகழ்வு என்றும் அப்போது நிலைநிறுத்தப்பட்டது.
மேலும் அந்த இரண்டு தூதர்கள், விசுவாசிகளுடைய நம்பிக்கை இத்துடன் முடிவடைந்துவிடவில்லை என்றும் கிறிஸ்து தாம் பரலோகத்திற்குச் சென்ற விதமாகவே மீண்டும் மேகங்களில் இவ்வுலகத்திற்கு வருவார் என்றும் அவர்களுக்கு உறுதியளித்தார்கள். கர்த்தராகிய இயேசு திரும்ப வருவார் என்ற இந்த ஒரே அறிவிப்பில் வரலாற்றின் நோக்கம் முழுமையும் அடங்கியிருக்கிறது. இந்த விசுவாசத்தை கிறிஸ்தவம் உறுதியாகவும் அசையாமலும் பற்றிக்கொண்டிருக்கிறது. நம்முடைய கர்த்தர் வாழ்கிறார். அவர் திரும்ப வருவார். ஏனெனில் அவர் நம்மை நேசித்து, நமக்காக ஏங்குகிறார். அவர் எப்போது வருவார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவர் நிச்சயமாக சீக்கிரம் வருவார். நீங்கள் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்களா? உங்கள் சிந்தனைகளில் அவர் மையமாயிருக்கிறாரா? நீங்கள் கிறிஸ்துவை நேசிக்கிறீர்களா? நீங்கள் தினமும் அவரை நினைக்கிறீர்களா? உங்கள் விண்ணப்பங்களை அவரிடம் நீங்கள் கொண்டுவருகிறீர்களா? அவருடைய வருகைக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? அவருக்காக காத்திருப்பவர்களைத் தவிர யாராலும் இவ்வுலகில் ஞானத்தோடு வாழ முடியாது.
சீடர்கள் அதிக மகிழ்ச்சியுள்ள இருதயத்தோடு கிதரோன் பள்ளத்தாக்கிற்குச் சென்றார்கள். கெத்சமனேக்கு அருகிலுள்ள ஒலிவ மலையில்தான் அவர்கள் அவருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள். அங்கிருந்து அவர்கள் எருசலேமை நோக்கிச் சென்றார்கள். கர்த்தர் தம்முடைய மரணத்தோடும் இறைவனுடைய கோபத்தோடும் போராடிக்கொண்டிருந்தபோது அவர்கள் கெத்சமனேயில்தான் உறங்கிக்கொண்டிருந்தார்கள். இறுதியாக அவர் கைது செய்யப்பட்டு சங்கிலிகளால் கட்டப்பட்டவராக கொண்டு செல்லப்பட்டார். அந்த நிகழ்வுகள் நடந்தபோது அவர்களுக்கிருந்த பயம் இப்போது அவர்களுக்கில்லை. ஏனெனில் கிறிஸ்துவின் வெற்றியினால் அவர்களுடைய இருதயம் நிறைந்திருந்தது. இரண்டு தேவதூதர்களுடைய மகிமையான அறிவிப்புகளும் அவர்களுடைய மனங்களில் ஆலய மணியோசையாக ஒலித்துக்கொண்டிருந்தன: கர்த்தர் வருகிறார். அவர் சீக்கிரமாக வருகிறார்.

3. பரிசுத்த ஆவியானவருக்காக காத்திருப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் (அப்போஸ்தலர் 1:13-14)


அப்போஸ்தலர் 1:13-14
13 அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். 14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
இயேசு தம்முடைய சீடர்கள் உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார். அவர்கள் இந்தப் பணியைச் செய்யும்படி அவர்கள் தங்கள் சொந்த பெலத்தை நம்பிப் புறப்படவில்லை என்பது எவ்வளவு அற்புதமான ஒன்றாகும். மேலும் அவர்கள் வெறும் மனித வார்த்தைகளைப் பேசிக்கொண்டும் அவர்கள் புறப்பட்டுச் செல்லவில்லை. அவர்கள் விண்ணப்பிப்பதற்காக ஒரு தனி இடத்தில் ஒதுங்கி, பிதாவினுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும்வரை காத்திருந்ததன் மூலமாகவே கிறிஸ்துவின் இரண்டாம் கட்டளையை நிறைவேற்ற விளைந்தார்கள். உலகத்தின் நிலை பயங்கரமானது, பாவத்தில் மரணமடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருவெள்ளத்தைப் போன்றது. தங்கள் சுய ஞானத்தில் இவ்வுலகத்திற்குப் பிரசங்கிக்கச் செல்கிறவர்களுடைய கதி பயங்கரமானது. அவர்கள் அந்த வெள்ளத்திலே மூழ்கிப்போய்விடுவார்கள். உங்களுடைய தனிப்பட்ட திறமையினாலேயோ யுக்தியினாலேயோ நீங்கள் யாரையாவது மாற்றிவிடலாம் என்றோ, கிறிஸ்துவிடம் வழிநடத்திவிடலாம் என்றோ சிந்தித்துவிடாதீர்கள். அமைதியாயிருந்து விண்ணப்பம் செய்யுங்கள். கடவுள் செயல்படுவதற்காகக் காத்திருங்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் விண்ணப்பத்தில்தான் ஆரம்பமாகிறது, பெரிய வார்த்தை ஜாலங்களில் ஆரம்பிக்கவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். கிறிஸ்துவினுடைய சீடர்களின் முதல்பணி காத்திருந்து விண்ணப்பம்பண்ணுவதே. தங்களுடைய திறமையினால் எதையும் செய்ய முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் வழுவிப்போகக்கூடியவர்களாயிருக்கிறார்கள். ஆனால் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட உண்மையான மனிதன் மட்டுமே நமக்காகப் போராடுகிறார். உண்மையான வெற்றியாளர் யார் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவருடைய பெயர் இயேசு கிறிஸ்து. அவர் மட்டுமே இரட்சிக்கிறவர், மீட்கிறவர், வெற்றி பெறுகிறவர். நாம் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய வெற்றியையே சாட்சியிடுகிறோம்.
அவருடைய சீடர்கள் இவ்வுலகத்தை விட்டு தனித்திருக்கும்படி குகைகளை நோக்கியோ அல்லது வனாந்தரத்தை நோக்கியோ சென்றுவிடவில்லை. அவர்கள் மனமுடைந்த நிலையில் இவ்வுலகத்தின் அறியக்கூடாத இரகசியங்களைத் தியானிக்கும்படி சென்றுவிடவோ அல்லது தீமைநிறைந்த இவ்வுலகத்தை வெறுத்து ஒதுக்கவோ அவர்கள் முற்படவில்லை. அவர்கள் ஒன்றாகக் கூடி விண்ணப்பம் செய்தார்கள். ஐக்கியத்திற்கும் விண்ணப்பத்திற்கும் அவர்கள் தொடர்ச்சியாகத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். பொதுவான விண்ணப்பமே அவர்களுடைய ஒன்று கூடுதலின் பொருளாயிருந்தது. அவர்களே தங்கள் வாழ்வில் அனுபவித்திருந்த இயேசுவின் செயல்களுக்காக அவர்கள் இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் தங்கள் தோல்விகளை உணர்ந்து, உண்மையாகவே அவற்றிலிருந்து மனந்திரும்பி, தங்கள் அனுபவங்களையும் எதிர்பார்ப்புகளையும் குறித்து விண்ணப்பம் செய்தார்கள். அவர்கள் வாழ்விலிருந்த கவலைகளை தங்கள் பரலோக தகப்பனிடத்தில் எடுத்துச் சொல்லி, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அவருக்கு நன்றி செலுத்திக் கெஞ்சி, விண்ணப்பம் செய்தார்கள். விண்ணப்பம்தான் அவர்களுடைய முக்கிய தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும், முயற்சியாகவும் இருந்தது.
மேலறை அவர்கள் வழக்கமாக கூடிவரும் இடமாக இருந்திருக்கலாம். அது இயேசு தம்முடைய சீடர்களுடன் தம்முடைய கடைசி இரவு உணவருந்திய இடமாகவும் இருக்கலாம். அவர்கள் அவ்வாறு உணவருந்திய போது அந்த அப்பம் அவர்களுடைய வயிற்றிற்குள் செல்லும்போது அவர் அவர்களில் வாழ்கிறார் என்றும் திராட்சைரசம் அவர்களுடைய நரம்புகளில் பாயும்போது அவருடைய இரத்தம் அவர்களை முழுமையாக சுத்திகரிக்கிறது என்றும் அவர் சொல்லியிருந்தார். அவர்கள் அவரை மையமாகக் கொண்டு வாழ்வதன் மூலமாக அவர்கள் முழுவதுமாகப் புதுப்பிக்கப்பட வேண்டியவர்களாயிருந்தார்கள்.
கிறிஸ்துவோடு புதிய உடன்படிக்கையினால் இணைக்கப்பட்டவர்களாக, இந்த பரிசுத்த இடத்தில் நடைபெறும் கூட்டத்தில் தொடர்ந்து பங்கு பெறும் இவர்கள் யார்? முதலாவதாக நாம் பேதுருவை அடையாளம் காண்கிறோம். அவர் ஒரு தீவிரமான மீனவர். அவர் மூன்று முறை கிறிஸ்துவை மறுதலித்திருந்தாலும், கலிலேயாக் கடற்கரையில் கிறிஸ்துவை மீண்டும் சந்தித்ததன் மூலமாக பாவமன்னிப்பைப் பெற்றுக்கொண்டவர். இரண்டாவதாக நாம் அடையாளம் காணும் வாலிபன், சாந்தமுள்ளவனும், அமைதியும் மென்மையான குணமுமுடைய சீடனாகிய யோவான். அவர் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தார். அவர் கர்த்தருடைய மகிமையைப் பார்த்தவராகவும் அதைப் பற்றி மற்ற எவரையும்விட அதிகமாக சாட்சியிடுபவராகவும் இருக்கிறார். அங்கு விண்ணப்பித்துக்கொண்டிருப்பவர்களில், நாம் அடுத்ததாக அடையாளம் காண்பது யாக்கோபு என்னும் சீடரையே. அவர் யோவானுடைய சகோதரனாகவும் ஒருமுறை கிறிஸ்து தம்முடைய அரசை நிறுவும்போது அவருடைய வலது பக்கத்தில் அமர வேண்டும் என்று விரும்பியவர். பின்னாட்களில் அவர்தான் தங்கள் மரணத்தின் மூலமாக கிறிஸ்துவை மகிமைப்படுத்திய இரத்த சாட்சிகளில் முதலாவது இடத்தைப் பெற்றவர். இந்த யாக்கோபு அந்திரேயாவின் நண்பராவார். அந்திரேயா அனைத்து சீடர்களுக்கும் முன்பாகவே இயேசுவை விசுவாசித்தவரும், உடனடியாக தம்முடைய நண்பராகிய பேதுருவை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தியவருமாகிய முக்கிய சீடராவார் (யோவான் 1:40-41). இன்னும் விண்ணப்பித்துக் கொண்டிருப்பவர்களில் பிலிப்புவையும் நாம் காணலாம். அவர் இயேசுவின் ஆரம்ப கால சீடர்களில் ஒருவராக, இயேசுவினால் கண்டுபிடிக்கப்பட்டு, “என்னைப் பின்பற்றி வா” என்ற கட்டளையை இயேசுவினிடத்தில் பெற்றவர் இவர் (யோவான் 1:43-45). அவர் பர்தலொமேயு என்று அழைக்கபட்ட நத்தான்வேலை உடனடியாகத் தேடி இயேசுவிடம் அழைத்துக்கொண்டு வந்தார். அவர் அத்திமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் போதே இயேசு அவரை அறிந்திருந்தார் என்பதை அறிந்தபோது தன்னுடைய இருதயத்தை அவரிடம் ஊற்றிவிட்டார். அதுமுதல் அவரும் அவருடனிருந்த சக சீடர்களும் மனுமகன் மீது தேவதூதர்கள் ஏறுகிறதையும் இறங்குகிறதையும் காணக்கூடிய பாக்கியத்தைப் பெற்றார்கள்.
கலிலேயாவிலிருந்த பெத்சாயிதாவைச் சேர்ந்த இந்த ஆறு சீடர்களைத் தவிர, தோமாவும் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கும்படி அவர்களோடிருப்பதை நாம் காணலாம். முன்பு நம்பிக்கையற்றிருந்த இந்த சீடர், இயேசுவைக் குறித்து சந்தேகக் கேள்வியைக் கேட்டதால், மற்ற அனைத்து சீடர்களைக் காட்டிலும் அவரைக் குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக்கொண்டவர். அதனால்தான் “என் ஆண்டவரே, என் இறைவனே” என்று அவர் இயேசுவைப் பணிந்துகொண்டார். பரிசுத்த ஆவியானவருக்குக் காத்திருக்கும் இந்த சீடர்களுக்கு நடுவில் வரிவசூலித்தவரும், வியாபாரியும், கணக்கரும், திறமைவாய்ந்த மொழிபெயர்ப்பாளருமாகிய மத்தேயுவையும் நாம் காணமுடிகிறது. அவர் கிறிஸ்துவின் அழைப்புக்கு உடனடியாகக் கீழ்ப்படிந்தவர். பின்னாட்களில் அவர் தன்னுடைய இரட்சகரின் வார்த்தைகளையும் செய்கைகளையும் தம்முடைய அற்புதமான நற்செய்தி நூலில் எழுதி அவரை மகிமைப்படுத்தியவர். மற்ற மூன்று அப்போஸ்தலருடைய வாழ்வைப் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே இவர்களும் பிசாசுகளைத் துரத்தவும் நோயாளிகளைக் குணமாக்கவும் தேவையான வல்லமையை கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து அவர்களும் சந்தோஷப்பட்டவர்களாக விடுதலையின் நற்செய்தியைத் தமது அயலகத்தாருக்கு அறிவித்ததன் மூலம் கிறிஸ்துவை மகிமைப்படுத்தினார்கள். அவர்களுடைய வாழ்வைக் குறித்த அதிக விவரங்கள் நமக்குக் கிடைக்காததைக் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அனைத்து அப்போஸ்தலருடைய வாழ்க்கையையும் விவரித்து எழுதுவது லூக்காவின் நோக்கமாக இருக்கவில்லை. தங்கள் இருதயத்தை பரிசுத்த ஆவியானவருக்கும் அவருடைய வழிநடத்தலுக்கும் திறந்துகொடுத்த மதிப்பிற்குரிய அப்போஸ்தலர்கள் மூலமாக உயிருள்ள கிறிஸ்துவின் செயல் எவ்வாறு வெளிப்பட்டது என்பதைக் காண்பிப்பதே லூக்காவினுடைய நோக்கமாக இருந்தது.
இந்தத் தொடர்ச்சியான கூடுகைகளில் பெண்களும் காணப்படுவது எத்தனை அற்புதமானது. அனைவரும் கிறிஸ்துவை விட்டுச் சென்றபோதும் இவர்கள்தான் சிலுவையருகில் தனிமையாக நின்று கொண்டிருந்தவர்கள். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த வாரத்தின் முதலாம் நாளிலே அந்த நற்செய்தியை தம்முடைய சீடர்களுக்கு அறிவிக்கும் கட்டளையைப் பெற்றுக்கொண்டவர்களும் இவர்களே. அந்தப் பெண்களும் மற்றவர்களுடன் சேர்ந்து பரிசுத்த ஆவியின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் ஆண்களுக்கு மாத்திரம் தரப்படாமல் பொதுவாகப் புறக்கணிக்கப்பட்டவர்களாயிருந்த பெண்களுக்கும் தரப்பட்டார்.
பிதாவின் வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்தவர்களில் இயேசுவின் தாயாகிய மரியாளும் இருந்தார். இந்த இடத்தில்தான் மரியாளைக் குறித்த இறுதியான குறிப்பை நாம் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். அவர் பரலோகத்தின் இராணியாக இங்கு நமக்குக் காட்சி தராமல், பரிசுத்த ஆவியின் வல்லமைமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ள ஒரு தாழ்மையும் விண்ணப்பமும் நிறைந்த பெண்மணியாக அவர் நமக்கு காட்சி தருகிறார்.
நற்செய்தியாளனாகிய லூக்காவுக்கும் இயேசுவின் தாயாகிய மரியாளை நன்கு தெரிந்திருந்தது. அவரிடமும் தமது மகனைப் பற்றிய கேள்விகளை லூக்கா கேட்டிருப்பார். இயேசுவுக்கு சகோதரர்கள் இருந்தார் என்று லூக்கா தெளிவுபடுத்துகிறார். அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு எந்தப் பாதகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இரட்சகராக இயேசு தம்முடைய பணியைச் செய்வதற்கு தடையாயிருந்தார்கள் (மத். 13:55; மாற்கு 3:21; 31-35; 6:3; யோவான் 7:3-8). இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் தம்முடைய சகோதரனாகிய யாக்கோபுக்கு தரிசனமானார் (1 கொரிந்தியர் 15:7). இயேசுவின் தெய்வீகத்தினால் கவரப்பட்ட அவர் பின்னாட்களில் தன்னுடைய மற்ற சகோதரர்களையும் அப்போஸ்தலருடைய வட்டாரத்திற்குள் கொண்டுவந்தார். அப்போஸ்தலர்கள் அவர்களுக்காக விண்ணப்பித்தபோது அவர்களும் மனமாற்றம் அடைந்தார்கள். அதன் பிறகு அவர்களும் பிதாவினுடைய வாக்குத்தத்தத்திற்காகக் காத்திருந்தார்கள். அதன் பிறகு யாக்கோபு பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்து, மாதிரியான விண்ணப்பத்தை ஏறெடுத்தார். பின்னாட்களில் திருச்சபையினுடைய தூண்களில் ஒருவராகக் கருதப்பட்டார் (அப். 12:17; 15:13; கலா. 2:9).
உயிரோடு எழுப்பப்பட்ட இயேசு தம்முடைய சீடர்கள், உண்மையுள்ள பெண்கள், உலக ரீதியான அவருடைய குடும்பத்தார் அனைவரையும் ஒன்றாகக் கூட்டி ஒரு விண்ணப்பிக்கும் திருச்சபையாக உருவாக்கியிருந்தார். அவர்கள் அனைவரும் ஒரே ஆத்துமாவும் ஒரே இருதயமும் உடையவர்களாக போராட்டமுள்ள விண்ணப்பத்திலே ஒன்றிணைந்து காணப்பட்டார்கள். எனக்கு அன்பான விசுவாசியே, மற்ற சகோதர, சகோதரிகளோடு ஐக்கியத்தில் இணைந்து, இறைவனுடைய சித்தத்திற்கான ஏக்கத்தோடு நீங்கள் விண்ணப்பம் செய்கிறீர்களா? அல்லது நீங்கள் தனிமையில் விண்ணப்பிக்கிறீர்களா? இந்த விண்ணப்பிக்கும் கூட்டம்தான் அப்போஸ்தல நடபடிகளுக்கும் முழுத் திருச்சபைக்குமான ஆரம்பமாயிருந்தது.

4. பாவியான யூதாஸின் இடத்தில் மத்தியா தெரிவு செய்யப்படுதல் (அப்போஸ்தலர் 1:15-26)


அப்போஸ்தலர் 1:15-20
15 அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று: 16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது. 17 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான். 18 அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. 19 இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது. 20 சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
இயேசுவின் சீடர்களுடைய உயிரோட்டமுள்ள ஐக்கியம் இரண்டு பயங்கரமான நிகழ்வுகளினால் சில நாட்கள் தடைப்பட்டது. அனைத்து மக்களையும் மீட்பதற்காக அவர்களுடைய ஆண்டவர் சிலுவையின் மரணத்தை ஏற்றுக்கொண்டது அவர்களில் பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. அவருடைய மரணம் அவர்களுக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. அதேவேளையில் இயேசுவைக் காட்டிக்கொடுத்த பிறகு, உடைந்துபோன யூதாஸ் தற்கொலை செய்துகொண்டதும் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயேசுவோ தெய்வத்துவத்தை எல்லாம் தம்முடைய சரீரத்தில் உள்ளடக்கியவராக இருந்தார். ஆனால் யூதாúஸô தனக்குள் நுழைந்த பிசாசினால் நிறைந்திருந்தான். அன்பார்ந்த சகோதரனே உமது வழியைத் தெரிவு செய்துகொள்ளும். இறைவனுக்காக பல பாவிகளுக்கு சேவை செய்வதில் உங்கள் வாழ்வைச் செலவிடப் போகிறீர்களா? அல்லது பாவமும், நம்பிக்கையின்மையும், இறைவனுடைய கோபாக்கினையின் மீதான பயத்தையும் சுமந்தவராக மரணத்தைச் சந்திக்கப் போகிறீரா?
யூதாஸின் மரணம் சீடர்களுடைய வட்டாரத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருந்தது. பன்னிரெண்டு கோத்திரங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியாக இயேசு பன்னிரெண்டு சீடர்களை ஏற்படுத்தியிருந்தார். அந்த பன்னிரெண்டு கோத்திரங்களும் இயேசுவை விசுவாசிக்கவில்லை என்றால் அவர் அவர்களை இறுதி நாளில் நியாயம் தீர்ப்பார். அந்தப் பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, அந்த சீடர்கள் ஒன்று கூடி இயேசுவைக் கண்ட சாட்சியாக ஒருவரை ஏற்படுத்த நினைத்தார்கள். ஒருவரையொருவர் நன்கு அறிந்த விசுவாசமுள்ள நூற்றியிருபது பேர் அங்கே கூடிவந்திருந்தார்கள். அவர்கள விண்ணப்பித்து பிதாவினுடைய வாக்குத்தத்தத்திற்காகக் காத்திருந்தார்கள். அந்தக் கூட்டம் மிகவும் அற்புதமாக இருந்திருக்கும்.
அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும்படி பேதுரு அவர்கள் நடுவில் எழுந்து நின்றார். அங்கிருந்த அனைவருக்கும் பேதுரு இயேசுவை மறுதலித்தவர் என்பது நன்கு தெரியும். நான்கு நற்செய்தி நூல்களிலும் அதைப் பற்றி வெளிப்படையாக நாம் வாசிக்கிறோம். ஆனாலும் அவர் தம்முடைய பாவத்தினிமித்தமாக மனமுடைந்து அழுத காரணத்தினால், இயேசு அவரை மன்னித்து விட்டார் என்பதையும் அனைவரும் அறிந்திருந்தார்கள். தம்முடைய உயிர்தெழுதலுக்குப் பிறகு பேதுருவே அவர்களை வழிநடத்திச் செல்வார் என்பதையும் இயேசு அவருக்கு உறுதிப்படுத்தியிருந்தார். ஆதித் திருச்சபையில் சத்திய ஆவியின் இருத்தலுக்கு இது குறிப்பிடத்தக்க ஆதரவாக இருந்தது. தங்களில் முதன்மையானவருடைய மறுதலிப்பை அவர்கள் பெரிதுபடுத்தவும் இல்லை. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவும் இல்லை. அதே வேளையில் அன்பின் ஆவியானவர் அவர்களில் அதிகமாகச் செயல்பட்டார். தம்முடைய மந்தையை மேய்க்க வேண்டும் என்ற கட்டளையை இயேசு பேதுருவிற்குக் கொடுத்திருந்தார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நபர் இந்தக் கூட்டத்தில் எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் தலைமை தாங்கும்படி எழுந்து நிற்பது எவ்வளவு அற்புதமானது. பேதுரு ஒருவேளை: “நான் மிகப்பெரிய பாவிதான் என்பதையும் கிறிஸ்து என்னை ஏற்றுக்கொண்டார் என்றும் நான் நிச்சயமாக அறிவேன். அவர் என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து எனக்குக் கட்டளை கொடுத்திருக்கிற காரணத்தினால், நான் தோல்வியுற்ற சீடனாயிருந்தாலும் அவரை இன்னும் நான் சேவிப்பேன்” என்று சொல்லியிருக்கக்கூடும். பேதுரு தன்னுடைய சொந்தப் பேரில் பேசவில்லை. அவர் தன்னை உயர்த்தவும் விரும்பவில்லை. அவருடைய செயல்கள், பேச்சுக்கள் அனைத்துமே உயிருள்ள கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காகவே இருந்தது.
பேதுரு மற்ற சீடர்களைக் காட்டிலும் தனக்கு அதிகமான அதிகாரம் இருப்பதைப் போல இன்றைய பிஷப்புக்களையோ அல்லது போப்புக்களையோ போல செயல்படவில்லை. மாறாக அவர் ஒரு மூப்பர் இன்னொரு மூப்பருடன் பேசுவதைப் போல சாதாரணமாகப் பேசுகிறார். அவர் அவர்களைச் சகோதரர்களே என்று அழைக்கிறார். காரணம் அவர்கள் அனைவருக்கும் இறைவனே பிதாவானவர். “சகோதரர்” என்பதைப் போன்ற தனிச்சிறப்பான பட்டம் வேறு எதுவும் இல்லை. ஏனெனில் இது இறைவனுடைய குடும்பத்திலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் பட்டமாகும்.
சீடர்கள் விண்ணப்பித்துக்கொண்டும் தியானித்துக்கொண்டும் இருக்கும்போது, நீதியுள்ளவராகிய கிறிஸ்துவை வஞ்சகமான முறையில் அநீதியுள்ளவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்து, இறைவனுடைய எதிரிகளின் வழிகாட்டியாக மாறிய யூதாஸின் முடிவைப்பற்றி சிந்தித்திருப்பார்கள். இயேசுவோடு அவர்கள் ஐக்கியத்திலிருந்த காலத்தில் யூதாúஸôடு அவர்கள் செலவிட்ட நாட்களை நினைத்துப் பார்த்தார்கள். யூதாஸ் இறைவனுடைய அரசின் உள்ளான அங்கத்தவராயிருந்தார். கர்த்தரால் அவர் அழைப்பையும், ஒரு பதவியையும், அதிகாரத்தையும் பெற்றிருந்தார். ஒரு காலகட்டத்தில் அவர் மற்ற சீடர்களுடன் சேர்ந்து இறைவனுக்கு சேவை செய்தார்.
ஆனால் யூதாஸ பணத்தையே நேசித்து, லூக்கா சொல்வதைப் போல அநீதத்தின் கூலியை நாடிச் சோரம்போனான். பாதிப்புக்குள்ளான தன்னுடைய ஆத்துமாவிற்கு பாதுகாப்பு வேண்டி, நகரத்திற்கு வெளியே ஒரு நிலத்தை வாங்கினான். ஆனால் இறைவனுடைய சாட்டையடி அவனது மனசாட்சியைக் காயப்படுத்தியிருந்த காரணத்தினால், அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. பிசாசும் தொடர்ந்து அவனைக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்த காரணத்தினால் அவன் நம்பிக்கை இழந்தவனானான். ஆகவே அவன் ஓடிப்போய் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டான். அவன் தூக்கில் தொங்கிய கயிறு அறுந்தபடியால் அவன் ஒரு கூர்மையான பாறையின் மேல் விழுந்து அவனுடைய குடல்கள் எல்லாம் வெளியேறியது. இப்படிப்பட்ட நிகழ்வு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை மருத்துவராயிருந்த லூக்காவினால் யோசித்து எழுத முடிந்தது.
எருசலேமில் இருந்த அனைவரும் அவனுடைய மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அது இறைவனுடைய கோபத்தினால் துரோகிக்கு கொடுக்கப்பட்ட தண்டனைதான் என்பதை உணர்ந்துகொண்டார்கள். இவ்வாறு சபிக்கப்பட்ட மனிதனுடைய இரத்தம்படிந்த நிலத்தைவிட்டு அவர்கள் விலகியிருந்தார்கள்.
யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்பதை கிறிஸ்து ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தினால் தம்முடைய பிரசங்களில் பலமுறை அவனை எச்சரித்திருக்கிறார். ஆனால் தன்னுடைய வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்கு உயிருள்ள கர்த்தருடைய வல்லமையைக் காட்டிலும் பணத்தின் வல்லமையையே அவன் அதிகமாக நம்பியிருந்தான். அதனால் அவன் தன்னுடைய பரலோக இடத்தையும் பூமியின் இடத்தையும் இழந்து போனான். அவனுடைய அப்போஸ்தல பணி இன்னொருவருக்குக் கொடுக்கப்பட்டது. அவன் புதிதாக வாங்கியிருந்த வீடு பாழாய்ப்போனது. அதன் சுவர்கள் இடிந்துபோய், அங்கே வெளவால்கள் குடிகொண்டன.
கடைசி இரவு உணவு வேளையில் இயேசு அவர்கள் ஒருவன் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று சொன்னபோது அவர்கள் யார் என்பதை அறியாதிருந்தார்கள். ஒவ்வொரு சீடருமே தாங்கள் அதற்குப் பொருத்தமானவர்களா என்று எண்ணிப்பார்த்தார்கள். ஆனால் காட்டிக்கொடுப்பவனுடைய வழியை இறைவனுடைய ஆவியானவர் முன்னறிந்திருந்தார் என்பதை தங்கள் கூட்டு விண்ணப்பத்தின் போது உணர்ந்துகொண்டார்கள். இந்தத் துரோகியைக் காட்டிக்கொடுக்கும் பாவத்தைச் செய்யும்படி பரிசுத்தமான இறைவன் வழிநடத்தவில்லை. காரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் சுயாதீன சித்தத்தைக் கொடுத்திருக்கிறார். எந்த மனிதனும் தன்னுடைய சுயாதீன சித்தத்தை மீறிப் பாவம் செய்யும்படி வற்புறுத்தப்படுவதில்லை. யூதாஸ் கிறிஸ்துவின் அன்பை உணராமல் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார். அதன் விளைவாக இறைவனுடைய சாபத்திற்குக் கீழாக இறந்துபோனான். இதைத்தான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே தாவீதின் மூலமாகப் பரிசுத்த ஆவியானவர் சொல்லியிருந்தார் (சங்கீதம் 69:26; 109:8).
அன்பான சகோதரனே பரிசுத்த ஆவியின் செயலுக்கு உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள். அவர் உங்களை பண ஆசையிலிருந்து விடுவித்து, தியாகத்தோடு அவருக்குச் சேவைசெய்யும்படி வழிநடத்த அவருக்கு இடம்கொடுங்கள். பணத்தையோ, மதிப்பையோ, அந்தஸ்தையோ, அதிகாரத்தையோ உங்களுக்கு நீங்கள் தேடாதீர்கள். தாழ்மையையும், திருப்தியையும், சாந்தத்தையும், எளிமையையும் நாடுங்கள். பொருளாதாரத்தில் ஏழையாகவும் பரிசுத்த ஆவியில் ஐசுவரியராகவும் இவ்வாறுதான் கிறிஸ்து தம்முடைய சீடர்கள் நடுவில் வாழ்ந்தார்.

அப்போஸ்தலர் 1:21-26
21 ஆதலால், யோவான் ஞானஸ்நானம்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும், 22 அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். 23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: 24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, 25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; 26 பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
ஏன் யூதாஸ் இயேசுவை மறுதலித்தான் என்ற தத்துவரீதியான கேள்யை சீடர்கள் கேட்காமல், இறைவனுடைய நியாயமான நியாயத்தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் கடந்த காலத்தை நோக்கிப்பார்த்து கலங்கி நிற்காமலும், தற்கால உணர்வுகளால் நிலைகுலையாமலும் இருந்து, உலகத்திற்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டிய தங்கள் கடமையை நோக்கி முன்னேறிச் சென்றார்கள். அப்போஸ்தலர்களுடைய எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவை நிறைவாக்கும்படி அவர்கள் இறைவனிடம் விண்ணப்பித்தார்கள். அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது அவர்கள் எண்ணிக்கை சரியானதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள்.
அப்போஸ்தலனாக ஏற்படுத்தப்பட இருப்பவர் ஆரம்ப முதல் தொடர்ந்து இயேசுவோடு இருந்தவராயிருக்க வேண்டும். இயேசுவின் வாழ்வையும் பணிகளையும் கண்களினால் கண்ட சாட்சியாயிருப்பதுடன் அவருடைய உயிர்தெழுதலுக்கும் நேரடியான சாட்சியாயிருக்க வேண்டும். இயேசு ஒவ்வொரு நகரங்களாகச் சுற்றித்திரிந்து ஊழியம் செய்யும்போது, பன்னிரவர் மட்டும் அவரோடு இருக்கவில்லை. மேலும் அநேகர் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். கலிலேயாவில் தம்முடைய பணியைச் செய்யும்படி இயேசு எழுபது சீடர்களை அனுப்பினார். ஆகவே அப்போஸ்தலருடைய பணிக்கு முன்வரக் கூடியவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி அதற்கான தகுதியை அவர்கள் கடுமையாக்கினார்கள். அவர்கள் யோவான் ஸ்நானகனுக்குச் சீடர்களாக அவருடன் நிலைத்திருந்து, தங்கள் பாவங்களை அவருக்கு முன்பாக அறிக்கையிட்டு, இறைவனுடைய அரசு வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களே அப்பணிக்குத் தகுதியானவர்கள். உண்மையில் யோவானுடைய சீடர்களில் பலர் அவருடைய அழைப்பைக் கேட்டிருந்தார்கள். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆகவே அவர்கள் மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தவராகிய அவரைவிட்டு, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பராகிய கிறிஸ்துவைப் பின்பற்றினார்கள்.
இடைவிடாமல் இயேசுவைப் பின்பற்றியவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் ஞானமும் முதிர்ச்சியும் உள்ளவர்களாக மாறியிருப்பர்கள் என்று நாம் எதிர்பார்ப்போம். ஆனால் சீடர்களுடைய நடத்தை அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் மெய்யான விசுவாசத்திற்கும், மேலான அன்பிற்கும், பரந்த விசுவாசத்திற்கும் யாருடைய இருதயம் பரிசுத்த ஆவியினால் ஆயத்தப்படுத்தப்பட்டதோ அவர்களைத் தவிர வேறு யாரும் பொருத்தமானவர்களாயிருக்கவில்லை. சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டிருந்தபோதிலும், அவர்கள் இருதயம் பெருமையுள்ளதாகவே இருந்தது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவருடைய மகிமையை அவர்கள் கண்டிருந்தும், அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இன்னும் வந்து தங்காத காரணத்தினால் அவர்கள் நித்திய வாழ்வற்றவர்களாயிருந்தார்கள். சில வேத வியாக்கியானிகளுடைய கருத்துப்படி, யூதாஸின் இடத்திற்கு அப்போஸ்தலர்கள் வேறு ஒருவரைத் தெரிவுசெய்யும் இந்த செயல் மனித ஞானத்தின்படி மேற்கொள்ளப்பட்ட அவசர முடிவாகும். ஏனெனில் கர்த்தர் ஏற்ற காலத்தில் புறவினத்து மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி யூதாஸின் பணியையும் அதிகாரத்தையும் கொடுத்து அப்போஸ்தலனாகிய பவுலை அழைத்தார்.
ஆயினும் ஆரம்பத்தில் பதினொரு சீடர்களும் உலகத்திற்கு நற்செய்தியைப் பிரசங்கம் செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களைத் திரும்பக் கட்டுவதைக் குறித்தே சிந்தித்தார்கள். மற்ற அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து பேதுரு, இயேசுவின் சீடர்கள் அனைவரையும் கூட்டி, அவர்களில் ஒருவரை அப்பணிக்காக தெரிவுசெய்யும்படி முயற்சி செய்தார். இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறவராகிய கர்த்தரே ஆத்துமாவின் நோக்கங்களை அறிந்தவராயிருப்பதால் இறுதி முடிவை அவருடைய கரத்திலேயே அவர்கள் விட்டுவிட்டார்கள். பேதுரு இங்கு ஒரு பிஷப்பைப்போல மேலான அதிகாரத்துடன் செயல்படவில்லை என்பதையும் இங்கு அப்பணிக்கான தேர்தல் ஒரு ஜனநாயகத் தேர்தலைப் போல பெரும்பான்மையானவர்களுடைய வாக்குகளின் அடிப்படையில் நடத்தப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் அனைவரும் இறைவனிடத்தில் கூடிவந்து, அவருடைய தெய்வீக நியாயத்தையும் உடனடியான வழிநடத்துதலையும் நாடினார்கள்.
பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதற்கு முன்பாக இறைவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிப்பதற்காக சீட்டுப் போட்டார்கள். அதன்பிறகு, அவர்கள் உதவிக்காரர்களைத் தெரிவுசெய்யும்போது, அப்போஸ்தலர்களே திருச்சபையை வழிநடத்தினார்கள். அவ்விதமாகவே அந்தியோக்கியாவிலும் மூப்பர்கள் விண்ணப்பத்தோடும் உபவாசத்தோடும் கிறிஸ்துவின் வழிநடத்துதலை நாடியபோது, பரிசுத்த ஆவியானவரே பவுலையும் பர்னபாவையும் தெரிவுசெய்து அனுப்பினார். உண்மையில் அப்போஸ்தலர்களுடைய வரலாறு கிறிஸ்துவினுடைய வரலாறாகவே இருக்கிறது. அது இறைவனுடைய அரசை விரிவுபடுத்துவதற்கான அவருடைய செயல்பாடுகளின் வரலாறாகும். நாம் போப்பின் அதிகாரத்திற்கு கீழாகவோ, ஜனநாயக அரசியலுக்குக் கீழாகவோ, சோசலிச சர்வாதிகாரத்திற்குக் கீழாகவோ இல்லை. மாறாக நாம் கிறிஸ்துவின் ஆளுகைக்கும் வழிநடத்துதலுக்கும் கீழாக இருக்கிறோம். அவருடைய வல்லமை விசுவாசிகளுடைய இருதயத்தில் செயல்படும் பரிசுத்த ஆவியானவரினால் உணரப்படுகிறது.
மூப்பர்கள், உதவிக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு துணையாயிருப்பவர்களிடம் நாம் பொறுப்புகளை ஒப்படைப்பது நல்லது. நம்முடைய அறிவையோ, சித்தத்தையோ, குடும்பத் தகுதிகளையோ நாம் சார்ந்திராமல் இறைவனை விண்ணப்பத்தில் சார்ந்திருக்க வேண்டும். இயேசுவே திருச்சபைத் தலைவர்களை அவர்களுடைய செல்வம், திறமைகள் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்காமல் தம்முடைய சொந்த விருப்பத்தின்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாம் எப்போதும் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது மட்டுமே கர்த்தருடைய பணி நிறைவேறும், அவருடைய பணியாளர்கள் பரிசுத்த ஆவியானவரினால் நிரப்பப்படுவார்கள். ஒரு ஆசாரியனுடைய, மூப்பருடைய அல்லது பிஷப்பினுடைய வெற்றியானது அவருடைய இறையியல் பட்டத்திலோ, அவருக்கும் மற்ற உயர்வகுப்பினருக்கும் இடையிலுள்ள தொடர்பிலோ சார்ந்திராமல், அவருக்கும் கிறிஸ்துவுக்கும் இடையிலான தொடர்பிலும், அவருடைய நேரடியான அழைப்பிலுமே சார்ந்திருக்கிறது. இந்த அழைப்பைப் பெற்றுக்கொள்ளாமல், இறைவனுடைய ஊழியத்தில் ஈடுபடுபவர்கள் சடுதியில் நரகத்திற்குச் செல்லும் ஆபத்திற்கு உட்பட்டவர்களாயிருக்கிறார்கள்.
பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் சேவையை தங்களுடைய விருப்பத்தின் பகிர்ந்துகொடுக்கவில்லை. யாருமே மனிதர்களுடைய இருதயத்தையும், மனநிலைகளையும், தாலந்துகளையும், மனிதர்களுடைய உண்மைத் தன்மையையும் அறியமுடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். நூற்றியிருபது சகோதர்கள் ஒருமித்துக்கூடி, தங்களில் ஒருவரை இந்தக் கிருபையின் சேவைக்காக கர்த்தர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதற்கான வல்லமையை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்கள். நற்செய்திப் பணியாளர்களை நியமிப்பதில் இறைமைந்தன் இடைப்படாவிட்டால் அனைத்துப் பணிகளும் பயனற்றதாகவே போய்விடும்.
அந்தப் பணிக்காக அவர்கள் இரண்டுபேரைத் தெரிவுசெய்தார்கள். சம அளவு தகுதி வாய்ந்த இந்த இரண்டுபேரைப் பற்றிய மற்ற விவரங்கள் நமக்குத் தெரியாது. அவர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு எவ்விதமாக சீட்டுப் போட்டார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளப்பட்டவர் முதலாவது நபர் அல்ல. அறியப்படாத மத்தியா என்பவரே தெரிவு செய்யப்பட்டார். அவர்தான் புதிய அப்போஸ்தலனாக இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சில நாட்களுக்குள்ளாகவே கிறிஸ்து அவரையும் பரிசுத்த ஆவியானவரினால் நிறைத்து, அவருடைய அழைப்பை உறுதிப்படுத்தினார். தெரிந்துகொள்ளப்பட்ட மத்தியாவைப் பற்றிய வேறு தகவல் எதுவும் நமக்குத் தெரியாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.