எஸ்தர் 10 விளக்கவுரை

எஸ்தர் 10 விளக்கவுரை

மொர்தெகாயின் உயர்ந்த நிலை
வசனம் 10:1-2

ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான்.

வல்லமையும் பராக்கிரமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.


அகாஸ்வேரு இராஜா அவனுடைய தேசத்தின் நாடுகள்மேலும் தீவுகள்மேலும் புதிய வரிகள் பகுதிகள் ஏற்படுத்தினான். அதுபோல வரி போடுவது, இப்போதும் எப்போதும் உள்ளதுபோன்றதொரு ஆட்சிக்கடனேயாகும். ஆனால் அவன் ஏன் அதைச் செய்தான் என்று வேதத்தில் கூறப்படவில்லை. ஆனால் அந்த வரிவிதிப்பை அவன் இராஜ்யத்தின் எல்லா நாடுகளிலும் ஒருகோடியிலிருந்து மறுகோடிவரைக்கும் விதித்தான் என்று பார்க்கிறோம்.

அகாஸ்வேரு இராஜா மிகவும் வல்லமை உள்ளவனாக அவன் செய்த எல்லா மகத்துவமான காரியங்களும், அவனுடைய வலிமையும் அதிகாரமும்பற்றிய எல்லா வர்த்தமானங்களும் மேதியா, பெர்சியா இராஜாக்களின் நடபடி புத்தகத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ளன. இராஜாக்களும் ஆட்சியாளர் அனைவரும் தங்களின் சிறந்த செயல்கள் அனைத்தையும் வரலாற்றில் எப்பொழுதும் நினைவுகூரும்படி நடபடிகளின் புத்தகங்களில் எழுதிவைப்பது முறையாக இன்றுவரை நடைபெற்றுவருகிறது. இது ஒரு சாதாரண நடைமுறைதான். ஆனால் ஆகாஸ்வேரு இராஜா அவனுடைய சிறப்புச் செயல்களை மட்டுமன்றி, மொர்தெகாயின் அனைத்துச் சிறப்புக்களையும், இராஜா அவனை உயர்த்திய அந்த நிலையில் அவன் ஆற்றிய அனைத்துச் செயல்களையும்கூட எழுதிவைத்தான்.

மொர்தெகாய் எவ்வாறெல்லாம் சிறப்புற உயர்ந்துள்ளான். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்தில் இராஜாவின் அரண்மனை வாசலண்டை நின்றிருந்த ஒரு சாதாரண வாயில் காப்போனாக நாம் அவனைக் காண்கிறோம். ஆனால் செயல்படவேண்டிய தருணங்கள் வந்துற்றபோது அவன் உறுதியாக நின்று செய்ல்ப்பட்டானன்றோ? அதன் விளைவாக அவன் அந்த இராஜ்யத்தின் மிக உயர்ந்த பதவிக்கன்றோ உயர்த்தப்பட்டான். தேவன் உரைப்பதாவது என்னை கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் என்பதே (1.சாமு.2:30). அது இன்றும் நிலைபெற்று நிகழ்கிறதை நாம் காணமுடிகிறது.

வசனம் 10:3

யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றித் தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.

இந்தக் கடைசி வசனத்தில் மொர்தெகாய், அதிகாரத்தில் அமர்த்தப்பட்டபோது அவன் எவ்வாறு இருந்தான் என்று நாம் வாசித்தறிகிறோம். நாம் தாழ்மையான நிலையில் இருக்கும்போது செயல்ப்படவேண்டிய முறைகள் வேறு. அது குறைவானது. அதே நேரத்தில் நாம் பதவி உயர்த்தப்பட்டு அதிகாரத்தில் இருக்கும்போது செயல்ப்படவேண்டிய முறைகள் வேறு. மொர்தெகாயும் அதுபோலவே செயல்ப்பட்டான். சிறந்து விளங்கினான் என்று வேதம் கூறுகிறது.

(1) யூதர்களுக்குள் பெரியவனானான்.

(2) தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்தான்

(3) தன் ஜனங்களுடைய நன்மையை நாடினவனாயிருந்தான்

(4) தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனாயுமிருந்தான்.

மொர்தெகாய்க்குத்தான் எத்தனை பாராட்டுகள்! முதலாவது அவன் யூதருக்கெல்லாம் பெரியவனாகவிருந்தான். அவனுடைய இனத்தாரால் மிகவும் விரும்பப்பட்டவனாகவும் இருந்தான். இது ஒரு பெரிய சாதனை. ஒருவேளை அவன் செய்த பெரியதான காரியங்களுக்காக அப்படியிருக்கலாம். மொர்தெகாய் அந்த வெற்றிகளினால் பெருமையடைந்து அமைதிகொள்ளவில்லை. தொடர்ந்து அவனுடைய மக்களுக்காக உழைத்துக்கொண்டேயிருந்தான். அவன் தொடர்ந்து செயல்ப்பட்டான். நன்மை செய்வதில் அவன் சோர்ந்துபோகவில்லை (கலா.6:9). அதே நேரத்தில் அவன் தனது சொந்த நன்மைக்காகச் செயல்ப்படாமல் அவனுடைய அனைத்து மக்களின் நன்மைகளுக்காகப் பாடுபட்டான்.

கடைசியாக அவன் தன் ஜனங்களுடைய நன்மையை நாடி தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனாயிருந்தான். இந்தச் செயலில் அவன் சாத்தானை எதிர்த்து நமக்காகப் பாடுபடும் நமது ஆண்டராகிய இயேசுவை நமக்கு நினைவூட்டுகிறவனாக உள்ளான். நமது ஆண்டவர் அதோடு நில்லாமல் பரலோகத்திலே நமக்காக பரிந்து பேசுகிற பரம ஆசாரியனாக இருக்கிறார் அல்லவோ? இன்னும் நமக்காகப் பரிசுத்தாவியானவரை அனுப்பி அனைத்துலகிலுமுள்ள நாம் அனைவரும் அவரில் உறுதிப்படவும், அவரை அறியாதவர்களை அவரிடத்தில் சேர்க்கவும் இவ்வளவாய் அன்புகூர்ந்தாரல்லவா?

மொர்தெகாய் மேலும் மேலும் உயர்ந்து வருவதை நாம் கண்டு அதை உணர்ந்தவர்களாகச் செயல்ப்படக்கூடிய குறிப்புகளை நாம் இந்தப் புத்தகத்தில் கடைசியாக வாசிக்கிறோம். அவ்வாறு முன்னேற்றப் பாதையிலேயே சென்று மறையும் ஒருவனுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியான தொன்றன்றோ?

Thanks - Tamil Christian Assembly

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.