யோவான் 7 விளக்கவுரை

யோவான் 7 விளக்கவுரை

இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

அ) இயேசுவும் அவரது சகோதரர்களும் (யோவான் 7:1-13)


யோவான் 7:1-5

1 இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார். 2 யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. 3 அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். 4 பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5 அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
தன்னுடைய மகிமையைக் குறித்த இயேசுவின் சாட்சியினால் மக்கள் கூட்டம் திகைப்படைந்தது. அவருடைய நண்பர்களில் பலர் எருசலேமில் அவரைவிட்டு விலகினார்கள், சிலர் கலிலேயாவில் அவரைவிட்டுப் பின்வாங்கினார்கள். தலைநகரத்திலிருந்த குறுகிய சிந்தையுள்ளவர்கள் இந்த வாலிபன் எப்படி இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறவனாகவும் உலகத்தை நியாயம் தீர்க்கிறவனாகவும் இருக்க முடியும் என்று அவரை விசுவாசிக்கவில்லை. ஆனால் பக்தியுள்ள கலிலேயரோ அவர் தன்னுடைய மாம்சத்தை உண்டு தன்னுடைய இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்ற அவருடைய போதனையைக் கேட்டு வெறுப்படைந்து அவரை விசுவாசிக்க மறுத்தார்கள். அவை கர்த்தருடைய பந்தியின் அடையாளங்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறினார்கள்.
எருசலேமில் ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்த சிலர் இயேசுவைக் கொல்ல தீர்மானித்தார்கள். அவர்கள் இயேசுவைக் கைதுசெய்வதற்கு ஆணை பிறப்பித்து, அவரைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களை ஜெப ஆலயத்தைவிட்டும் இறைவனுடைய ஆசீர்வாதங்களைவிட்டும் புறம்பாக்குவோம் என்று பயமுறுத்தினார்கள். ஆலோசனைச் சங்கத்திலிருந்து வந்திருந்த உளவாளிகள் கலிலேயாவில் தேடி இயேசுவைக் குறித்து விசாரித்தார்கள். மக்கள்கூட்டம் இயேசுவின் முடிவற்ற இரட்சிப்பா அல்லது தேசத் தலைவர்களின் தண்டனையா என்று சிந்தித்து அவரை விட்டுப் பின்வாங்கிச் சென்றதொன்றும் ஆச்சரியமானதல்ல. அவர்கள் இவ்வுலக வாழ்க்கைக்குரிய முடிவை எடுத்தார்கள், இனிவரும் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படவில்லை. இறைவனுடைய கொடையைக் காட்டிலும் தங்களுடைய பாதுகாப்பையே அதிகம் விரும்பினார்கள்.
இயேசுவின் சகோதரர்களும் தாங்களும் சமூகத்தைவிட்டு ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்பதை எண்ணி பயந்தார்கள். எனவே அவர்கள் யூதர்களுடைய ஜெபஆலயங்களைவிட்டுப் புறம்பாக்கப்படாதபடி மக்கள் காணும்படி அவரை விட்டு விலகினார்கள் (மாற்கு 6:3). மேலும் அவர்கள் அவரைக் குறித்த தங்களுடைய பொறுப்பிலிருந்து விலகும்படி அவரை கலிலேயாவை விட்டுப் போகும்படியும் கேட்டுக்கொண்டார்கள். அவர் எருசலேமில் தன்னுடைய மகிமையை வெளிப்படுத்த அவர்கள் அவரை நிர்ப்பந்தித்திருக்கலாம். அத்தனை வருடங்கள் அவருடன் வாழ்ந்தவர்கள் அவருடைய இரக்கத்தையும் அன்பையும் சாதாரண காரியங்களாக நினைத்து அவருடைய தெய்வீகத்தை நம்ப மறுத்தார்ககள். பல விசுவாசிகள் இயேசுவின் அன்புக்காக அவரை மதிக்கிறார்களே தவிர அவரைப் பற்றிய சத்தியத்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
இயேசுவின் சகோதரர்களும் தாங்களும் சமூகத்தைவிட்டு ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்பதை எண்ணி பயந்தார்கள். எனவே அவர்கள் யூதர்களுடைய ஜெபஆலயங்களைவிட்டுப் புறம்பாக்கப்படாதபடி மக்கள் காணும்படி அவரை விட்டு விலகினார்கள் (மாற்கு 6:3). மேலும் அவர்கள் அவரைக் குறித்த தங்களுடைய பொறுப்பிலிருந்து விலகும்படி அவரை கலிலேயாவை விட்டுப் போகும்படியும் கேட்டுக்கொண்டார்கள். அவர் எருசலேமில் தன்னுடைய மகிமையை வெளிப்படுத்த அவர்கள் அவரை நிர்ப்பந்தித்திருக்கலாம். அத்தனை வருடங்கள் அவருடன் வாழ்ந்தவர்கள் அவருடைய இரக்கத்தையும் அன்பையும் சாதாரண காரியங்களாக நினைத்து அவருடைய தெய்வீகத்தை நம்ப மறுத்தார்ககள். பல விசுவாசிகள் இயேசுவின் அன்புக்காக அவரை மதிக்கிறார்களே தவிர அவரைப் பற்றிய சத்தியத்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
யோவான் 7:6-9
6 இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. 7 உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. 8 நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். 9 இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
பிசாசின் ஆவி மனிதர்களைக் கெடுத்துவிட்ட காரணத்தினால் அவர்கள் பெருமை மிகுந்தவர்களாயிருக்கிறார்கள். பெருமை என்பது ஆத்தும நோய்க்கான அறிகுறியாகவும் உளவியல் பிரச்சனைக்கான அடையாளமாகவும் காணப்படுகிறது. உண்மையில் யாரெல்லாம் இறைவனுக்கு எதிராயிருக்கிறார்களோ அவர்கள் சிறியவர்களாகவும், பெலவீனமானவர்களாகவும் மரணத்திற்கு விதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். தன்னுடைய பெலவீனத்தை மகிமையான அலங்காரத்தினால் மறைக்க முயற்சிக்கிறார்கள். தான் விரும்புவதைச் செய்யவும் அல்லது எதுவும் செய்யாதிருக்கவும் வல்லமையுள்ள சிறிய இறைவன் என்று பெருமையுள்ள மனிதன் தன்னைப் பற்றி கற்பனை செய்துகொள்கிறான். அவன் இறைவனை மறந்தவனாக தன்னுடைய நாளையும் வழிகளையும் குறித்துத் திட்டமிடுகிறான். சுபாவப்படி அவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு எதிராகக் கலகம் பண்ணுகிறான். மனிதன் தன்னைத்தான் நேசிக்கிறான் கடவுளை அல்ல. அவன் தன்னுடைய பெயரையே மகிமைப்படுத்துகிறான், பரலோக பிதாவின் நாமத்தை அவன் மகிமைப்படுத்துவதில்லை.
மனிதர்களுடைய சிந்தனைகளும் நோக்கங்களும் மட்டும் தீமையானவைகள் அல்ல, அவர்களுடைய முழுமையான செயல்களும் தீமையானவைகள்தான். கர்த்தரில்லாமல் வாழும் எவரும் அவருக்கு எதிராக வாழ்கிறார்கள். விஞ்ஞானத்தின் பெரும்பான்மையான கண்டுபிடிப்புகள், அரசியல் கொள்கைகள் மற்றும் தத்துவஞானக் கருத்துக்கள் அனைத்தும் பாவம் என்னும் காரியத்துடன் தொடர்புடையவையாகவே இருக்கிறது. அவைகளில் மரணத்தின் வித்துக்கள் இருக்கிறது.
இயேசு தான் விரும்பியதைச் செய்கிறவராக வராமல் தம்முடைய பிதாவோடு ஒன்றாக இருப்பராகவும் அவரோடு ஐக்கியப்பட்டு செயல்படுகிறவராகவும் வந்த காரணத்தினால்தான் உலகம் அவரைப் பகைத்தது என்பதை அவர் காண்பித்தார். இயேசு வலியுறுத்திய அன்பு சட்டத்தினால் உருவாகும் அன்பாயிராமல் தெய்வீக அன்பாயிருந்த காரணத்தினால் சமய பக்தியுள்ளவர்களுக்குக் கூட அவர் இடறலாகத்தான் இருந்தார். அவருடைய பிரசன்னம் சுயநீதியை அழித்த காரணத்தினால் அவர்கள் அவரை வெறுத்தார்கள்.
கிறிஸ்துவின் சகோதரர்கள் பரிசுத்த ஆவியானவரைப் புறக்கணித்தார்கள். அவர்கள் உலக ஆவியினால் நிரம்பியவர்களும் பரிசேயருடைய கொள்கைகளை அதிகம் ஏற்றுக்கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு விசுவாசம் இல்லை என்பது இறைவனுடைய அன்பின் ஆவியானவர் அவர்களில் இல்லை என்பதையே காண்பிக்கிறது. மாறாக அவர்களுக்குள் தங்களைக் குறித்துப் பெருமைப்படுகிறதும் இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறதுமான வேறொரு ஆவியினால் அவர்கள் நடத்தப்பட்டார்கள். அவர்கள் தங்கள் நற்செயல்களில் நம்பிக்கை வைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டார்கள்.
யோவான் 7:10-13
10 அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார். 11 பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள். 12 ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். 13 ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.
ஒவ்வொரு வருடமும் யூதர்கள் தங்களுடைய கூடாரப்பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். அவர்கள் வீட்டின் மேல்தளத்தில் அல்லது தெருவோரங்களில் மரக்கிளைகளைக் கொண்டு கூடாரங்களை உண்டுபண்ணி அவற்றில் தங்குவார்கள். மக்கள் ஒருவரையொருவர் அக்கூடாரங்களில் சென்று சந்தித்து, சுவையான உணவுகளை உண்டு மகிழ்வார்கள். இறைவன் தங்களுக்குக் கொடுத்த நிறைவான விளைச்சலுக்கு நன்றி செலுத்தும் ஒரு பண்டிகையாக இது கொண்டாடப்பட்டது. அந்த கூடாரங்கள் அவர்களுடைய வனாந்தர வாழ்க்கையை நினைவுபடுத்தியது. அவர்களுக்கு நிலையான நகரம் இவ்வுலகத்தில் இல்லை.
இயேசு தம்முடைய சீடர்களோடு துன்பப்படுத்தப்பட்ட காரணத்தினால் விருந்தின் மகிழ்ச்சியில் அவர் நிலைத்திருக்கவில்லை. அவருடைய சொந்த சகோதரர்களே அவரைவிட்டுப் போய்விட அவர் அனுமதித்தார். பின்பு அவர் உலகத்தில் தம்முடைய சொந்த நகரமான கலிலேயாவிற்கு பிரியாவிடை கொடுத்து எருசலேமை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். அவருடைய மரணத்தின் மூலமாக இறைவனுடைய கோபாக்கினையிலிருந்து நம்மை விடுவிக்கும் வரலாற்றின் உச்சகட்டமான முக்கியமான தருணத்திற்கு அவர் வந்தார்.
யூதர்கள் நடுவில் இயேசுவைக் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் நிலவியது. சிலர் அவர் இறைவனிடமிருந்து வந்தவர் என்றும் நல்ல மனிதர் என்றும் ஒரு சீர்திருத்தவாதி என்றும் கருதினார்கள். வேறு சிலர் அவர் மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்வதால் மரணத்திற்குப் பாத்திரமானவர் என்று கருதினார்கள். அவர் அவர்கள் நடுவில் இருப்பதால் அது அவர்கள்மீது இறைவனுடைய கோபத்தை வருவித்து அவர்களுடைய பண்டிகைகளையும் கெடுத்துவிடும் என்றும் கருதினார்கள். சனகதரின் சங்கம் அவரைப் பின்பற்றுபவர்கள் நடுவில் தயக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவருக்கு எதிரான அறிவிப்பை அனைத்துப் பகுதிகளிலும் கொடுத்திருந்தார்கள். இவையனைத்திற்கும் பிறகு யாரும் இயேசுவைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் துணியவில்லை.

ஆ) மக்கள் நடுவிலும் ஆலோசனைச் சங்கத்திலும் இயேசுவைக் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் (யோவான் 7:14-53)


யோவான் 7:14-18
14 பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். 15 அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். 16 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. 17 அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
இயேசு தன்னுடைய மரணத்தை நினைத்தோ எதிரிகள் தனக்குச் செய்யப்போகும் தீமையை நினைத்தோ பயப்படவில்லை. அவர் தம்முடைய பிதாவின் சித்தத்திற்கு ஏற்றதுபோல நடக்க வேண்டும் என்பதற்காகவே எருசலேமிற்கு இரகசியமாகப் போனார். அங்கு அவர் ஒழிந்திருக்காமல், ஆலயப்பிரகாரத்திற்குச் சென்று அங்கீகரிக்கப்பட்ட போதகராக தன்னுடைய நற்செய்தியை அறிவித்தார். இறைவனே தங்களிடம் நேரடியாகப் பேசுவதாக மக்கள் உணர்ந்தார்கள். ஆகவே அவர்கள் ஒருவரொருவரை நோக்கி, “இந்த வாலிபனுக்கு இத்தனை ஆளமான இறையியல் அறிவு எங்கிருந்து வந்தது? வேதாகமத்தின் புகழ்பெற்ற போதகர் ஒருவரிடமும் இவர் கற்கவில்லையே. ஒரு தச்சனுக்கு கல்வியறிவின்றி இறைவனுடைய சத்தியத்தைப்பற்றிய முழுமையான அறிவு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டுக் கொண்டார்கள்.
இயேசு அவர்களுக்கு, “ஆம். நான் போதிக்கிறேன், நான் சத்தியத்தைப் போதிப்பவர் மட்டுமல்ல, இறைவனுடைய வார்த்தையே நான்தான். இறைவனுடைய ஒவ்வொரு சிந்தையும் விருப்பமும் என்னில் இருக்கிறது. என்னுடைய போதனை எனக்குச் சொந்தமானது அல்ல, நான் இறைவனுடைய சத்தம், எனக்குப் போதிப்பவர் என்னுடைய பிதா. நான் அவருடைய திட்டங்கள், சிந்தனைகள், நோக்கங்கள் மற்றும் வல்லமைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறேன். நான் என்னுடைய சொந்த சிந்தனைகளுடன் வரவில்லை, ஏனெனில் இறைவனுடைய சிந்தனைகளே சத்தியமானவைகள்” என்பது போல பதிலளித்தார்.
இவ்வாறு அவர் பிதாவை மகிமைப்படுத்தி, அவருக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தார். தன்னை இறைவனுடைய அப்போஸ்தலன் என்று அழைத்தார். அவர் தன்னுடைய சொந்த விருப்பத்தின்படி வராமல், பிதாவின் நாமத்தில் முழு அதிகாரமுடையவராக வந்தார். ஆகவே ஒரே வேளையில் இறைவனுடைய மகனாகவும் அப்போஸ்தலனாகவும் இருக்கும் இயேசுவும் நம்முடைய விசுவாசத்திற்கும், கவனத்திற்கும், ஆராதனைக்கும் பிதாவைப் போலவே பாத்திரராயிருக்கிறார்.
யூதர்கள் தன்னை விசுவாசிக்க வகைசெய்யும்படியாக, தன்னுடைய போதனைகள் இறைவனுடைய சித்தத்திற்கு ஒத்திருக்கிறது என்று நிச்சயப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு ஒரு நடைமுறை வழியைக் காண்பித்தார். இயேசுவும் அவருடைய போதனைகளும் மெய்யானவை என்பதைக் காண்பிக்கும் இறுதியான அத்தாட்சி எது? அவர் சொன்னார், “நீங்கள் என்னுடைய நற்செய்தியின்படி வாழ முயற்சி செய்யுங்கள், அப்பொழுது அதன் மேன்மையை நீங்கள் கண்டு பிடிப்பீர்கள். அவருடைய வார்த்தைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்துங்கள். அப்பொழுது அவை வெறும் மனித வார்த்தைகள் அல்ல தெய்வீகமானவை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”
கிறிஸ்துவின் போதனையை நீங்கள் பின்பற்ற முதலில் நீங்கள் அதைக் குறித்து ஒரு முடிவெடுக்க வேண்டும். அவர் விரும்புவதை நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுடைய சித்தமும் இறைவனுடைய சித்தமும் ஒன்றாகச் சேரவில்லையென்றால் கர்த்தரைப் பற்றி உண்மையான அறிவை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது. எங்கெல்லாம் நீங்கள் உங்களுடைய சித்தத்தைவிட்டு கிறிஸ்துவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறீர்களோ, நீங்கள் புதிய நிலையில் உணர்வடைந்து இறைவனை அவர் இருக்கிற வண்ணமாகவே அறிந்துகொள்வீர்கள்.
இயேசு நமக்குக் கற்பித்தபடி யாரெல்லாம் பிதாவினுடைய சித்தத்தைச் செய்யும்படி தங்களைப் பயிற்றுவிக்கிறார்களோ, அவர்கள் நற்செய்திக்கும் சட்டத்திற்கும் இடையிலிருக்கும் பெரிய வேறுபாட்டை அறிந்துகொள்வார்கள். நம்முடைய கர்த்தர் நம்மால் சுமக்க முடியாத பாரமான சுமையை வெறுமனே நம்முடைய தோள்களில் சுமத்தாமல், அதைச் சுமப்பதற்குத் தேவையான வல்லமையையும் தருகிறார். அப்பொழுது நீங்கள் அவருடைய சித்தத்தை மகிழ்வுடன் நிறைவேற்றுபவராயிருப்பீர்கள். யாரெல்லாம் கிறிஸ்துவினுடைய கட்டளைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்களோ, அவர்கள் அவருடைய அன்பை வாழ்ந்து காட்டுவதற்கான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறார்கள். மோசேயினுடைய சட்டத்தைப்போல அவருடைய போதனைகள் நம்மைத் தோல்விக்கு நடத்தாமல், இறைவனுடைய கிருபையின் முழுமையில் வாழ்வதற்கு வழிநடத்தும். கிறிஸ்துவின் போதனைகளில் வெளிப்பட்ட இறைவனுடைய சித்தத்தைச் செய்ய யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் இறைவனோடு தனிப்பட்ட முறையில் இணைக்கப்பட்டு, கிறிஸ்து மனிதப் போதகர்களில் ஒருவர் அல்ல என்றும் அவர் மாம்சத்தில் வந்த இறைவார்த்தையாகவே இருக்கிறார் என்றும் உணர்ந்துகொள்வார்கள். அவர் வெற்று தத்துவ ஞானத்துடன் வராமல், நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்புடன் வந்து, இறைவனுடைய வாழ்வை வாழும் வல்லமையை நமக்குத் தருகிறார்.
யோவான் 7:19-20
19 மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார். 20 ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
கிறிஸ்து பரிசுத்த நடக்கையுள்ளவராக இருந்த காரணத்தினால் யூதர்களைப் பார்த்து, “நீங்கள் சட்டத்தைப் பெற்றுக்கொண்டீர்கள், ஆனால் அதைச் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை” என்று கூறக்கூடியவராக இருந்தார். யூத இனத்தினுடைய இருதயத்தை இந்தக் கூற்று உருவக்குத்தியது. பழைய ஏற்பாட்டிற்குரியவர்கள் யாருமே சட்டத்தின் கோரிக்கைகளை சரிவர நிறைவேற்றவில்லை. ஒருவன் நியாயப்பிரமாணத்தின் ஒரு கட்டளையை மீறினாலும் அனைத்துக் கட்டளையையும் மீறிய குற்றவாளியாகி இறைவனுடைய கோபத்திற்கு ஆளாவான். இந்த அறிவிப்பின் மூலமாக தாங்கள் நீதிமான்கள் என்ற யூதர்களுடைய கோரிக்கையை நிராகரித்து, சட்டவாதிகளுடைய முயற்சியும் வைராக்கியமும் வெறும் நயவஞ்சகமே என்பதைக் காண்பித்தார்.
அவர்களுடைய தலைவர்கள் தன்னை அழிக்கத் தேடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு அவர் அறிவித்தார். இயேசுவுக்கு எதுவும் மறைவாயிருக்கவில்லை. தம்மைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை எச்சரித்து அவர்களது மேலோட்டமான வைராக்கியத்தைக் குறித்தும் அவரைப் பின்பற்றும்போது அவர்கள் செலுத்த வேண்டிய விலையைக் குறித்தும் எடுத்துரைத்தார்.
அதேவேளையில், “நீங்கள் ஏன் என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.
யாரும் நீதிமான்கள் இல்லை என்று இயேசு சொன்னபோது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுடைய பதில் அவர்களுடைய சதித்திட்டத்தை மறைப்பதாக இருந்தது: “யார் உன்னைக் கொல்லத் தேடினார்கள்?” சிலர் ஒரு தீய ஆவிதான் அவர் மீது வந்து அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று சொன்னார்கள். அவர்கள் தங்கள் இருதயத்தில் குருடர்களாக இருந்த காரணத்தினால் தூய ஆவியின் செயலையும் தீய ஆவியின் செயலையும் பிரித்தறிய முடியாதவர்களாயிருந்தார்கள். இறையன்பை அறியும் உணர்வனைத்தையும் அவர்கள் இழந்துவிட்டார்கள்.

ஆ) மக்கள் நடுவிலும் ஆலோசனைச் சங்கத்திலும் இயேசுவைக் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் (யோவான் 7:14-53)


யோவான் 7:21-24
21 இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள். 22 விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள். 23 மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? 24 தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.
இயேசு தீய ஆவிபிடித்தவர் என்று யூதர்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு நேரடியாக அவர் பதிலளிக்கவில்லை. ஆனால் தனக்கு அவர்கள் அறிவித்த மரண தண்டனை அற்பமானது, நியாயமற்றது என்பதை அவர் மக்கள்கூட்டத்திற்குக் காண்பித்தார். பெத்சாயிதாவிலிருந்த வாத நோயாளியை ஓய்வுநாளில் குணமாக்கியதன் காரணத்தினாலேயே யூதத் தலைவர்கள் அவருக்கு எதிராக நியாயந்தீர்க்கிறார்கள் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார். அந்த நாளில் இயேசு வாத நோயாளியைப் பார்த்து, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னார். அவன் அற்புதமாகச் சுகமடைந்தான், அதற்காகவே அவர் மீது சொல்லப்பட்ட தண்டனையை நீக்க வேண்டும்.
அதன்பிறகு இயேசு சட்ட வல்லுநர்களே சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்று உறுதிபடக் கூறினார். அவர்களுடைய சட்டம் முரண்பட்டதாக காணப்பட்டது: விருத்தசேதனம் என்பது இறைவனுடனான உடன்படிக்கையின் அடையாளம். ஓய்வுநாள் என்பது பரிசுத்த இறைவனோடு ஓய்வில் ஐக்கியம் கொள்வது. மக்கள் தங்கள் குழந்தைகள் பிறந்து எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும். அது ஓய்வுநாளாகக் கூட இருக்கலாம். அவ்வாறு விருத்தசேதனம் செய்வது வேலையாகாதா?
நோய் பாவத்தின் ஒரு விளைவாக இருக்கிற காரணத்தினால், சுகம் கிடைப்பது இரட்சிப்பாகும். ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவற்றில் இறைவன் இரட்சிப்பைக் கொடுக்கிறார். ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்வதற்கும் ஒரு இரக்கத்தின் செயலைச் செய்வதற்கும் இடையில் எது சிறந்தது என்று மக்கள் சிந்திக்கத் தூணடினார் இயேசு. அவருடைய அன்பு, வல்லமை மற்றும் இரட்சிப்பு ஆகியவற்றின் அளவை அவர்கள் புரிந்துகொள்ளும்படி தர்க்கமுறையை இயேசு பயன்படுத்தினார். அந்த முயற்சியினால் பலன் கிடைக்கவில்லை. அவர்களுடைய காதுகள் செவிடானவைகளாகவும், அவர்களுடைய ஆவிகள் கடினப்பட்டும் இருந்தபடியால் ஒரு தீர்மானத்தை அல்லது சரியான முடிவை எடுப்பது அவர்களால் கூடாத காரியமாயிருந்தது.
யோவான் 7:25-27
25 அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலை செய்யத் தேடுகிறார்கள்? 26 இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ? 27 இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
எருசலேமைச் சேர்ந்தவர்கள் தேவாலயத்தில் வந்து பார்த்தபோது அங்கு மக்கள் கூட்டத்தைக் கண்டார்கள். மக்கள் கூட்டத்தின் கவனம் அவரைச் சூழ்ந்திருந்ததைப் பார்த்து அவர்கள் மிகவும் கோபம் கொண்டார்கள். ஏனெனில் அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று அவர்கள் அறிவித்திருந்தபோதிலும் அவர் தடையின்றி நடமாடிக்கொண்டிருந்தார். அந்தச் செய்தி பொதுவான அறிவாகக் காணப்பட்டது.
எருசலேமின் குடிகள் இந்தக் காரியத்தில் ஆலோசனைச் சங்கம் பெலவீனமாக நடந்துகொண்டதால் ஏளனம் செய்தார்கள். மரண தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை யூத ஆளுனர்களிடமிருந்து ரோமர்கள் நீக்கியிருந்தார்கள். “கைது செய்யப்பட வேண்டிய நபர் நகரத்தில் தடையின்றிச் சுற்றித் திரிகிறார், பயமின்றி தேவாலயப் பிரகாரங்களில் பிரசங்கிக்கிறார். அவரைத் தடைசெய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு வல்லமையில்லை. ஆசாரியர்களும் அவருடன் வாதிட்டு அவரை மேற்கொள்ள முடியவில்லை” என்று இகழ்ந்து பேசினார்கள்.
வேறு சிலர், “உங்களுக்கு விஷயம் புரியவில்லை. ஆட்சியாளர்களில் சிலரும் அவரை விசுவாசிக்கிறார்கள்” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவை கைதுசெய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அவர்கள் சொன்ன காரணம் இதுதான். பொதுக்கருத்து பல்வேறு குழுவுக்குக் குழு மாறுபட்டதாயிருந்தது.
மூன்றாவது கருத்து: மேசியா வருவதாயிருந்தால் அவர் மகிமையான உருவத்தில் வருவார், ஒரு சாதாரண மனிதனாக வரமாட்டார். ஆனால் இந்த வாலிபன் ஒரு மலைக் கிராமத்திலிருந்து வரும் தச்சனாக இருக்கிறார். உண்மையான மேசியா நேரடியாக வானத்திலிருந்து இறங்கி வருவார். மக்கள் நடுவில் நடமாடிக்கொண்டிருக்க மாட்டார்.
யோவான் 7:28-30
28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். 29 நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். 30 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
இயேசு தான் இவ்வுலகில் எங்கிருந்து வந்தார் என்ற அவர்களுடைய வாதங்களை கேட்டார். அவர்களைப் பார்த்து, “நான் யார் என்று உங்களுக்கு உண்மையில் தெரியுமா? நான் எங்கிருந்து வருகிறேன் என்று அறிவீர்களா? உங்களுடைய நியாயத்தீர்ப்புகள் மேலோட்டமானவைகள். நான் யார் என்பது அடிப்படையில் உங்களுக்குத் தெரியாது. எனக்குச் செவிகொடுங்கள் என் ஆவிக்குள் ஆழமாகச் சென்று ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுது நான் யார் என்றும் எங்கிருந்து வருகிறேன் என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்று கூறினார்.
இயேசு தன்னைத்தான் அனுப்பவில்லை, அவர் இறைவனிடமிருந்து புறப்பட்டு வந்தார்; அவருடைய பிதாதான் அவரை அனுப்பியவர். மேலும் அவர், “நீங்கள் பிதா இந்த ஆலயத்தில் இருக்கிறார் என்று கருதினாலும் உங்களில் யாருக்கும் பிதாவைத் தெரியாது. உங்கள் ஆசாரியர்கள் இறைவனைக் காண முடியாத குருடர்களாகவும் உண்மையில் அவருடைய சத்தத்தைக் கேட்க முடியாத செவிடராகவும் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் உங்களையே வஞ்சித்துக்கொள்கிறீர்கள்.”
நான் அவரை அறிவேன்” என்று பிறகு அவர் சொன்னார். இயேசு இறைவனை அறிந்திருக்கிறார், அவர் பிதாவினுடைய நாமத்தையும் அன்பையும் நமக்கு அறிவிக்கிறார் என்பதே நற்செய்தியின் சாரமாகும். நசரேயனாகிய இயேசு பாவமற்றவரும் பிதாவுடன் தொடர்ச்சியான ஐக்கியத்தில் வாழ்ந்தவராகவும் காணப்பட்டார். ஆனால் மற்ற அனைவரும் தங்கள் பாவத்தினிமித்தமாக தங்களை இறைவனிடமிருந்து பிரித்துக்கொள்கிறார்கள்.
இயேசு தங்களை நியாயம் தீர்க்கிறார் என்று அவருடைய வார்த்தைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட சிலர், “அவர் தேவாலயத்திற்கு எதிராக தூஷணம் பேசி நம்மை அவிசுவாசிகள் என்று கூறுகிறார்” என்று கதறினார்கள். அவர்கள் கடுங்கோபமடைந்து இரைச்சலிட்டுக் கொண்டு அவரைப் பிடிக்கப் பாய்ந்தார்கள். ஆனால் தேவதூதர்கள் அவரைக் காத்துக்கொண்டிருந்த காரணத்தினால் யாருக்கும் அவரை நெருங்க முடியவில்லை. இவ்வுலகத்தில் அவருடைய இறுதி சாட்சிக்கான நேரம் இன்னும் வரவில்லை. கிறிஸ்து மனுக்குலத்தை மீட்கும் சரியான நேரத்தை பிதா ஏற்கனவே முன்குறித்திருந்தார். அதை எந்த மனிதனும் மாற்ற முடியாது.

யோவான் 7:31-32
31 ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள். 32 ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்.
எருசலேமில் பாதகமான சூழ்நிலை காணப்பட்டபோதிலும் பலர் இயேசுவில் செயல்பட்ட வல்லமையை விசுவாசித்தார்கள். அவர்கள், “இவர் ஒருவேளை மேசியாவாக இருக்கக்கூடும்; அவர் மக்கள் விசுவாசிக்கும்படி பல அற்புத அடையாளங்களைச் செய்கிறாரே. தலைநகரத்தில் கூட இயேசுவைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களே” என்று பேசிக் கொண்டார்கள்.
பரிசேயர்கள் தங்கள் உளவாளிகள் மூலமாக மக்கள் நடுவில் ஒரு உயிர்மீட்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவருடைய இயக்கம் எருசலேமிலும் வேரூன்றி வருகிறது என்றும் அறிந்தபோது தங்கள் எதிரிகளாகிய ஆசாரியர் மற்றும் சதுசேயருடன் கூட்டுச் சேர்ந்து இயேசுவை எதிர்க்கத் திட்டம் பண்ணினார்கள். ஆலயத்திற்குப் பொறுப்பானவர்களாகிய அவர்கள் மூலம் இயேசுவை தேவாலயத்திற்குள் தடைசெய்ய முயற்சித்தார்கள். ஆசாரியர்கள் இயேசுவைக் கைதுசெய்யும் இந்தக் காரியத்தில் அவர்களுடன் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டார்கள்.
கர்த்தருடைய தூதர்கள் தேவாலயப் பிரகாரங்களில் இருந்து இயேசுவைக் கைது செய்வதற்கான அதிகாரிகளுடைய கட்டளைகளை வேலைக்காரர்கள் நிறைவேற்ற முடியாதபடி தடுத்தார்கள். இந்த வேலைக்காரர்களைப் பார்த்தபோது இயேசு பயந்து ஓடவில்லை, மாறாக தன்னுடைய மகிமையை வெளிப்படுத்தினார். இறைவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை வெளிப்படுத்தும்படி நற்செய்தியாளன் இதை நமக்காகப் பதிவுசெய்திருக்கிறார்.
யோவான் 7:33-36
33 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். 34 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார். 35 அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ? 36 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
இயேசு எருசலேமில் சில காலம் இருக்கப்போவதாக தன்னுடைய எதிரிகளுக்கு அறிவித்தார். தான் இறைவனுடைய ஆட்டுக்குட்டியாக மரிப்பார் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அதேவேளையில் அவர் தன்னுடைய உயிர்த்தெழுதல், பரமேறுதல், மற்றும் பிதாவினிடம் திரும்புதல் ஆகியவற்றின் காலங்களையும் நன்கு அறிந்திருந்தார். நம்மை இரட்சிப்பதற்காக தன்னை அனுப்பிய பிதாவுக்காக அவர் ஏங்கினார். நம்மீது வைத்த அன்பினால் அவர் தன்னுடைய வீட்டைவிட்டு வெகுதூரம்வந்து நம்முடைய உலகத்தில் வாழ்ந்தார்.
அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலைக் கண்டு அவருடைய சீடர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவரோடு பரலோகத்திற்கு எழுந்தருளிப் போகும் ஆவிக்குரிய சரீரம் அவர்களிடமில்லாத காரணத்தினால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள். அதேபோல அவருடைய எதிரிகள் முத்திரையிடப்பட்ட கல்லறையிலிருந்து காணாமல்போகும் அவருடைய சரீரத்தைத் தேடுவார்கள் என்றும் அறிந்திருந்தார். இரட்சகரை அன்புசெய்யாதவர்களுக்கு ஐயோ. அவர்கள் அவருடைய மகிமையைப் பெறவோ பரலோகத்திற்குச் செல்லவோ இயலாதவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய பாவம் அவர்களை இறைவனிடமிருந்து பிரிக்கிறது. அவிசுவாசம் அவர்களை கிருபையின் ஆளுகைக்குப் புறம்பாக்குகிறது.
இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளத் தவறிய யூதர்கள் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள கிரேக்க நகரங்களில் உள்ள ஜெபஆலயங்களில் அவர் சுற்றித்திரிவார் என்று மனித வழிகளில் சிந்தித்தார்கள். எபிரெய வேதாகமத்தை அறியாத அந்த கிரேக்க மக்களைத் தன்னைப் பின்பற்றுபவர்களாக்கும்படி அப்படிச் செய்வார் என்று கருதினார்கள். வேறுசிலர், “அவருக்குப் பிரபலமான பேச்சாளராக ஆக வேண்டும் என்றும் கிரேக்கத் தத்துவ ஞானிகளுக்குத் தன்னுடைய கருத்துக்களைச் சொல்லி அவர்களை உயிருள்ள இறைவனிடம் கொண்டுவர வேண்டும் என்றும் விருப்பமிருக்கலாம்” என்று கருதினார்கள்.
யோவான் இந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்தபோது அவர் எபேசுவில் கிரேக்கர்கள் நடுவில் இருந்தார். இரட்சிப்பைக் குறித்த நற்செய்தி அங்கிருந்த யூதர்களுக்கும் பல கிரேக்கர்களுக்கும் எட்டியிருந்தது. கிரேக்கர்கள் நடுவில் பெரிய போதகராயிருக்க வேண்டும் என்று யூதர்கள் கூறியதில் இயேசுவின் வார்த்தைகளை அவர்கள் கேலிசெய்தார்கள் என்று நற்செய்தியாளன் கருதுகிறார். அவர் வெறுமனே தத்துவத்தையும் நல்ல காலத்தையும் போதிப்பவரல்ல. அவர் உயிரைக் கொடுப்பவர். அவரிலிருந்து அழியாத வல்லமை புறப்பட்டு வருகிறது.

யோவான் 7:37-38
37 பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். 38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
பண்டிகையின்போது இயேசு மறுபடியும் தேவாலயப் பிரகாரத்தில் மக்களுக்குப் பிரசங்கம் செய்தார். அவர்கள் பிரதான ஆசாரியன் பலிபீடத்தின் மீது தண்ணீரை ஊற்றுவதற்காகக் காத்திருந்தார்கள். இறைவனுக்கு முன்பாக தண்ணீரை ஊற்றும்படி ஆசாரியர்கள் அணிவகுத்து நடந்து வந்தார்கள். அது நன்றி பலியாகவும், வருகிற வருடத்திற்குரிய ஆசீர்வாதத்தை அவர்கள் இறைவனிடம் தேடுவதற்கான அடையாளமாகவும் காணப்பட்டது. “இரட்சிப்பின் ஊற்றுக்களை மகிழ்ச்சியோடு மொண்டுகொள்வார்கள்” என்ற ஏசாயாவின் வார்த்தைகளை இந்தச் செயலுக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தார்கள்.
அனைத்து சடங்குகளையும் அனுசரித்த போதிலும் இரட்சிப்பைக் கண்டடையாத தாகமுள்ள ஆத்துமாக்களை இயேசு கண்டார். எதிர்பார்ப்புடன் இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “தாகமுள்ளவர்களே என்னிடத்தில் வந்து இலவசமாக ஜீவ தண்ணீரைப் பெற்றுக்கொள்ளுங்கள். தாகமுள்ளவன் என்னிடத்தில் வரக்கடவன். நானே ஜீவ ஊற்று” என்று அழைத்தார்.
தெய்வீக வாழ்வுக்காக ஏங்காதவர்கள் இரட்சகரிடத்தில் வருவதில்லை. ஆனால் இயேசுவினிடத்தில் வருகிறவர்களிடம் அவர், “என்னை விசுவாசித்து என்னோடு தன்னை இணைத்துக் கொண்டவன் அநேகருக்கு ஆசீர்வாதமான ஊற்றாக மாறுகிறான். என்னில் விசுவாசம் வைக்கும்படி வேதாகமம் உங்களை ஊக்குவிக்கிறது. நீங்கள் என்னிடத்தில் வந்து வாழ்வையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இறைவனும் கட்டளையிடுகிறார். கிறிஸ்துவினிடத்தில் தைரியமாக வந்து அவருடைய வார்த்தைகளைப் பருகி, அவருடைய ஆவியினால் நிரப்பப்படுகிறவர்கள் மறுரூபமடைவார்கள். தாகமுள்ளவன் நீரூற்றாக மாறுகிறான்; தீமையுள்ள சுயபெருமைக்காரன் உண்மையுள்ள வேலைக்காரனாகிறான்.
இயேசுவின் பராமரிப்பை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? அவர் உங்களை தெளிந்த நீருள்ள கிணறாக மாற்ற விரும்புகிறார். உங்கள் இருதயம் தீமையான சிந்தனைகளையே வெளிக்கொண்டு வருகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இயேசு உங்கள் இருதயத்தையும் உங்கள் உதடுகளையும் சுத்திகரித்து அநேகருக்கு உங்களை ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாற்ற முடியும்.
அவர் உங்கள் மனதையும் ஆத்துமாவையும் மட்டுமல்ல உங்கள் உடலையும் தூய்மைப்படுத்த விரும்புகிறார். அப்பொழுது நீங்கள் இறைவனுக்குப் பிரியமான ஜீவபலியாக மாறி இழந்து போனவர்களுக்கு சேவை செய்ய முடியும். அவர் உங்கள் முழுமையான பரிசுத்தமாகுதலைத் நோக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்போதுதான் நீங்கள் உங்களுக்காக வாழாமல் உங்கள் பலத்தை மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் இலவசமாகப் பயன்படுத்துவீர்கள். யாரெல்லாம் இயேசுவுக்குத் தங்களை நிபந்தனையற்ற முறையில் ஒப்புக்கொடுக்கிறார்களோ அவர்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக மாறுவார்கள்.
யோவான் 7:39
39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.
யாரெல்லாம் இயேசுவை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள். நாம் இன்னும் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்வதால், நம்முடைய தலைமுறையில் ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது ஒரு அற்புதமான செயலாகும். அவர் சாதாரண தேவதூதனோ மாயாவியோ அல்ல, அவர் பரிசுத்தத்தினாலும் அன்பினாலும் நிறைந்த இறைவனாகவே இருக்கிறார். ஆவியானவர் தூய்மையான தீக்கொழுந்தைப் போலவும் சக்தியுள்ள மின்சாரத்தைப் போலவும் இருக்கிறார். அதேவேளையில் அவர் உருக்கமாக ஆறுதல்படுத்துபவராகவும் இருக்கிறார். ஒவ்வொரு மெய்க்கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியின் ஆலயமாக மாறுகிறான்.
கிறிஸ்துவின் காலத்தில் தெய்வீக ஆவியானவர் அனைவரின் மீதும் ஊற்றப்படவில்லை, ஏனெனில் பாவம் மனுக்குலத்தை அவர்களுடைய கர்த்தரிடத்திலிருந்து பிரித்திருந்தது. குற்றச் செயல்கள் என்னும் பெரிய மலை பரிசுத்த ஆவியானவருக்கும் மனித குலத்திற்கும் நடுவில் தடையாக இருந்தது. ஆனால் இயேசு தன்னுடைய மரணத்தின் மூலமாக பாவத்தை மேற்கொண்டு, பரலோகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்த பிறகு, பிதாவும் அவரும் ஐக்கியப்பட்டு அவருடைய அன்பின் ஆவியானவரை எங்குமிருக்கும் விசுவாசிகள் மீது பொழிந்தருளினார். இறைவன் ஆவியாயிருக்கிற காரணத்தினால் அவர் எங்கும் எப்போதும் இருக்கக்கூடியவர். கிறிஸ்துவின் இரத்தத்தினால் தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட ஒரு விசுவாசியினுடைய உள்ளத்தில் அவரால் வாழமுடியும். என் சகோதரனே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா? கிறிஸ்துவின் வல்லமை உங்கள் மீது வந்திருக்கிறதா? உயிர்மீட்சிக்கும் ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாகிய இயேசுவிடம் வாருங்கள். அவர், “என்னிடத்தில் வருகிற எவனும் பசியடையான், என்னை விசுவாசிக்கிறவன் எவனும் தாகமடையான்” என்று உறுதியளிக்கிறார். யாரெல்லாம் அவரை விசுவாசிக்கிறார்களோ அவர்களுடைய இருதயத்திலிருந்து ஜீவ தண்ணீருள்ள நதிகள் புறப்பட்டுவரும் என்று வேதாகமம் கூறுகிறது.
யோவான் 7:40-44
40 ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். 41 வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? 42 தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லெகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். 43 இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. 44 அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
இயேசுவினுடைய வார்த்தைகளிலுள்ள சத்தியத்தின் வல்லமையை சிலர் உணர்ந்து அதற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். இறைவனுடைய சித்தத்தை அறிந்து, மனிதருடைய இருதயத்தின் இரகசியங்களை நிதானிக்கும் ஒரு தீர்க்கதரிசிதான் அவர் என்று அவர்கள் பொதுமக்கள் நடுவில் அறிக்கை செய்தார்கள். இறைவனுடனிருந்த ஐக்கியத்தின் மூலமாக பழைய ஏற்பாட்டில் மக்களை வெற்றிக்கு மேல் வெற்றிக்கு வழிநடத்திச் சென்ற மோசேக்கு வாக்குப்பண்ணப்பட்ட தீர்க்கதரிசி இவர்தான். இந்த வகையில் நசரேயனாகிய இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்று அவர்களில் சிலர் அறிக்கையிட்டார்கள்.
ஆயினும் பரிசேயர்கள் இதை எதிர்த்து இவ்வாறு வாதிட்டார்கள்: “இவர் நாசரேத்திலிருந்து வருகிறார். ஆனால் மேசியா வரும்போது தாவீதின் நகரத்திலும் தாவீதின் வித்திலுமிருந்துதானே வருவார்?” அவர்கள் மேற்கோள்காட்டும் வேதப்பகுதி சரியானதுதான். அப்படியானால் தான் பெத்தலகேமில்தான் பிறந்தார் என்று இயேசு ஏன் அவர்களுக்கு அறிவிக்கவில்லை? அதற்கு சில காரணங்கள் உண்டு: முதலாவது, ஏரோது தன்னுடைய அரசகுலத்திலிருந்தல்லாமல் வேறு அரசனை அனுமதிக்க மாட்டான். அவர்கள் அதிகாரத்தில் இருப்பதற்காக ஆயிரக் கணக்கான மக்களைக் கொல்லவும் ஆயத்தமாயிருந்தார்கள். இரண்டாவது, இயேசு வரலாற்று ஆதாரங்களினால் தனக்கு விசுவாசிகளை உருவாக்க விரும்பவில்லை. அவர் தம்முடைய அன்பினாலும் அவருடைய சர்வ ஏகாதிபத்தியத்தை அவர்கள் கண்டு உணருவதினாலுமே அவர்களுடைய நம்பிக்கையைப் பெற விளைந்தார். இவ்வாறு அவர் காணாமல் விசுவாசிப்பவர்களையே தன்பக்கம் இழுத்துக்கொண்டார்.
மக்கள் கூட்டத்தின் நடுவில் முரண்பாடு முற்றி பிளவுபட்டார்கள். சிலர் அவரை மேசியா என்று அறிக்கையிட்டார்கள் சிலர் மறுதலித்தார்கள். தேவாலயத்துச் சேவகர்கள் அவரைக் கைது செய்யும் நோக்கத்தோடு காத்திருந்தார்கள்; ஆனால் அவருடைய வார்த்தைகளிலிருந்த சர்வஏகாதிபத்திய மகத்துவம் அவர்களை அச்சுறுத்தியதால் யாரும் அவருக்கு அருகில் செல்ல இயலாதிருந்தார்கள்.

யோவான் 7:45-49
45 பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள். 46 சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள். 47 அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? 48 அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? 49 வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
இயேசு தேவலயத்தில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கும்போது சேவகர்கள் அவரைக் கைதுசெய்து தங்களிடத்தில் கொண்டுவருவார்கள் என்று பரிசேயர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். ஒரே பிரதான ஆசாரியன்தான் தன்னுடைய வாழ்நாளில் ஆலோசனைச் சங்கத்திற்குத் தலைமை வகிப்பான். ஆனால் இங்கு பிரதான ஆசாரியர்கள் என்று பன்மையில் வழங்கப்பட்டுள்ளது. ரோம அரசாங்கங்கள் அவர்களை அவ்வப்போது பதவி விலக்குவதால் இவ்வாறிருந்திருக்க வேண்டும். இந்தப் பிரதான ஆசாரியர்கள் சதுசேயர்களாகவும், சுய சிந்தனைக்கு அதிக இடம் தருபவர்களாகவும், பரிசேயர்களுடைய சட்டவாதத்தை இரக்கமின்றிக் கண்டிப்பவர்களாகவும் காணப்பட்டார்கள்.
பரிசேயர்கள் ஆசாரியர்களுடன் ஆலோசனைச் சங்கத்தில் இருந்தார்கள். சட்டவாதிகளாகிய அவர்கள் கிரேக்க சிந்தனையைப் புறக்கணித்து அவர்களுடைய கட்சியின் விசுவாசத்திற்கும் செயல்களுக்கும் நியாயப்பிரமாணத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கடின இருதயத்துடன் தங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் கடுமையைக் காண்பிப்பதன் மூலமாக இறைவனைக் கனப்படுத்த முயற்சிப்பவர்கள்.
இயேசுவைக் கைதுசெய்யவில்லை என்பது பரிசேயர், சதுசேயர் ஆகிய இருவரையும் கோபப்படுத்தியது. அவருடைய சீடர்கள் அவரைப் பாதுகாக்கவில்லை, மக்களும் அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கவில்லை. ஆனால் அவருடைய வார்த்தைகள் அனைவரையும் கவர்ந்தது. அதனால் அவர்கள் அவரைக் கட்டப் பயந்தார்கள். அவர்கள் இயேசுவின் மூலம் புறப்பட்டு வந்துகொண்டிருந்த இறைவனுடைய வல்லமையை அறிந்தார்கள்.
பரிசேயர்கள் கோபமடைந்து, சேவகர்களைப் பார்த்து, “நீங்களும் இந்த வஞ்சகனுடைய வலையில் விழுந்து விட்டீர்களா? ஆலோசனைச் சங்கத்திலிருக்கும் மதிப்பிற்குரிய அங்கத்துவர்கள் யாரும் அவனை விசுவாசிக்கவில்லை. எந்த நேர்மையான விசுவாசியும் இந்தக் கலிலேயனை பின்பற்ற மாட்டார்கள்” என்று கத்தினார்கள்.
பலர் இயேசுவை நேசித்தார்கள். ஆனால் அவர்கள் எளிமையானவர்களும், புறக்கணிக்கப்பட்டவர்களும், பாவிகளும், ஒழுக்கமற்றவர்களாகவும் இருந்தனர். அவர் அவர்களுடன் பந்தியமர்ந்து, அவருடைய பிரசன்னத்தினால் அவர்களைக் கனப்படுத்தினார். ஆனால் பக்தியுள்ளவர்கள் அப்படிப்பட்ட மக்களை புறக்கணித்து அவர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் என்று கருதினார்கள். அவர்களை அவர்கள் சட்டவாதக் கண்ணாடியின் மூலமாகப் பார்த்தார்கள். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மக்கள்கூட்டம்தான் இயேசுவைப் பின்பற்றியது. அவர்களில் சிலர் தங்களுடைய பாவங்களை யோவான் ஸ்நானகனிடம் அறிக்கையிட்டிருந்தார்கள். அந்த மக்களும் தங்கள் மொழியைப் பேசுபவர்கள் என்றும் தங்கள் பழக்கவழக்கங்களையே பின்பற்றியவர்கள் என்பதையும் மறந்து அந்தக் கூட்டத்தைத் தலைவர்கள் வெறுத்தார்கள். அவர்கள் நடுவில் எந்தவகையான பிரிவினைகளும் வகுப்புகளும் காணப்பட்டபோதிலும் அவர்கள் அனைவரும் ஒரே மக்களே.
யோவான் 7:50-53
50 இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி: 51 ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். 52 அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள். 53 பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.
அந்த ஆலோசனைச் சங்கத்திலிருந்தவர்களில் சங்கத்தின் முடிவினால் மனவேதனையடைந்த ஒருவர் இருந்தார். அது இரவில் இயேசுவைச் சந்திக்க வந்த நிக்கோதேமு. மறுபிறப்பின் அவசியத்தை இயேசு அவருக்குப் போதித்திருந்தார். இந்த மனிதன் இன்னும் இயேசுவின் செல்வாக்கிற்கு உட்பட்டவராக இருந்து, தான் இயேசுவை ஆதரிப்பதாக வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் அவருக்காகப் பரிந்துபேச விரும்பினார். நீதிமன்றத்தில் இல்லாத ஒருவரை நியாயந்தீர்க்கக்கூடாது என்ற முறையை அவர் பயன்படுத்தினார்.
நியாயாதிபதிகள் இந்த மனிதனுடைய மனசாட்சியைப் பார்த்து பரிகசித்தார்கள். நீதிமன்றம் கூட்டப்பட்டாலும் குற்றமற்றவர்களை நேர்மையற்ற முறையில் தண்டிப்பதுதான் பொதுவாக நடைபெறுவது. நியாயப்பிரமாணத்தைக் குறித்து கவனமற்றிருக்கும் கலிலேயாவைச் சேர்ந்தவராக இயேசு இருப்பதால் அவர் பொய்த் தீர்க்கதரிசியாகத்தான் இருக்க வேண்டும் என்று சதித்திட்டத்தைத் தீட்டியவர்கள் தீர்மானித்தார்கள். அந்தப் பகுதியிலிருந்து இறுதி நாட்களில் மேசியா வருவார் என்று எந்த வேதப்பகுதியும் கூறவில்லை. இயேசு போலித் தீர்க்கதரிசி என்று பரிசேயர்கள் உறுதியாக நம்பிய காரணத்தினால் அவர்கள் நிக்கோதேமுவை பரிகசித்தார்கள். ஏனெனில் இயேசு நிக்கோதேமுவை வலுவான வார்த்தைகளினால் நம்பச் செய்ததைப் போல, நிக்கோதேமுவும் சங்கத்திலுள்ளவர்களை வலுவான வார்த்தைகளினால் இணங்கச் செய்ய முயற்சித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.