தானியேல் விளக்கவுரை அதிகாரம் 4

 நேபுகாத்நேச்சாரின் நிருபம்(தானி.4:1-3)

முதல் மூன்று வசனங்களும் 3-ஆம் அதிகாரத்தின் தொடர்ச்சியாக காணப்படுகிறது. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் பாஷைக்காரருக்கும் கடிதம் எழுதுகிறான். அவன் யுத்தவீரனாக காணப்பட்ட போதிலும், சாமாதான வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறான். உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்தவது எனக்கு நன்மையாய் கண்டது. அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது. அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம். அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும் என்று  தேவனை மகிமைப்படுத்தி எழுதுகிறான்.


நேபுகாத்நேச்சார் கண்ட இரண்டாவது சொப்பனம்(தானி.4:4-10)

நேபுகாத்நேச்சார் தன் வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்து தன் அரண்மனையிலே வாழ்ந்துகொண்டிருந்தபோது ஒரு சொப்பனத்தைக் காண்கிறான். அந்த சொப்பனத்தின் மூலம்  திகிலையும் கலக்கத்தையும் அடைகிறான். அப்பொழுது சொப்பனத்தின் அர்த்தத்தை அவனுக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோன் ஞானிகளையெல்லாம் தன்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிடுகிறான். சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் அவனிடத்திலே வந்தார்கள். சொப்பனத்தை  அவர்களுக்குச் சொன்னபோதும் அவர்களால் அதின் அர்த்தத்தை  தெரிவிக்க கூடாமற்போயிற்று. 2-ஆம் அதிகாரத்தில் சொப்பனத்தையும் அர்த்தத்தையும் கூறாமல் போனால் துண்டித்துபோடக்கடவீர்கள், உங்கள் வீடுகள் எருக்களமாக்கப்படும்  என்று அச்சுறுத்தினான். ஆனால் இப்பொழுது அப்படி செய்யவில்லை. கடைசியிலே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேலை கொண்டுவரும்படி கட்டளையிடுகிறான்.   நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலின் தேவன் ஒருவரே தேவன் என்பதை இதுவரைக்கும் உண்மையாய் அறியதாதவனாக காணப்படுகிறான். ஆகையால் தான் தேவர்கள் என்று பன்மையில் கூறுகிறான். தானியேலினிடத்தில் தன் சொப்பனத்தை விவரித்து கூறி அர்த்தத்தை சொல்லும் படிக்கு கூறுகிறான்.

சொப்பனம் விவரிக்கப்படுதல்(தானி.4:10-18)

"நான் படுத்துக்கொண்டிருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன். அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. அதின் இலைகள் நேர்த்தியும் அதின் கனி மிகுதியுமாயிருந்தது. எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது. அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கின. அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினாலே போஷிக்கப்பட்டது. நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளானாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன். அவன் உரத்த சத்தமிட்டு: இந்த விருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள். இதின் கனிகளைச் சிதறடியுங்கள். இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும். ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும். இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக. மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது. அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது. இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான். நேபுகாத்நேச்சர் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே. இப்போதும் பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு, என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக்கூடாமற்போயிற்று. நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன். பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்"

இரண்டாம் அதிகாரத்தில் நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தை அவனால் கூறக்கூடாமல் போயிற்று. ஆனால் இங்கு சொப்பனத்தை அப்படியே கூறுகிறான். இரண்டாம் அதிகாரத்தில் இனி சம்பவிக்கப்போகிறவைகள் என்ன என்கிற நினைவுகள் அவனுக்குள் எழும்பினதாலே, எல்லாவற்றையும் அறிந்த தேவன், சொப்பனத்தின் மூலம் சம்பவிக்கப்போகிறவைகளை வெளிப்படுத்தினார். ஆனால் இங்கு மனுஷனுடைய அகந்தை அவனை தாழ்த்தும் என்பதைக் கற்றுக் கொடுக்கும் படி இந்த தரிசனத்தை ஆண்டவர் கொடுத்தார்.

சொப்பனத்தின் விளக்கத்தை தானியேல் கூறுதல்(தானி.4:19-27)

தானியேல் ஒருவிசை சொப்பனத்தின் அர்த்தத்தை அறிந்து  சிந்தித்துக் கலங்கினான். காரணம், தானியேல் ராஜாவுக்கு உண்மையுள்ள ஊழியக்காரன். இராஜா வாழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவன்.  சொப்பனத்தின் அர்த்தம் அவனை கலங்கப்பண்ணிற்று. ஆனால் நேபுகாத்நேச்சார் அவனிடம் பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை. உடனே தானியேல் என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது என்று கூறி சொப்பனத்தின் அர்த்தத்தைக் கூறுகிறான்.

இரண்டாம் அதிகாரத்தில் பொன்னாலான தலை நீரே என்று கூறியதுபோல இங்கும்  வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தம் காணப்பட்டு வானபரியந்தம் வளர்ந்த விருட்சம் நீரே. அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியாயுமிருந்தது. எல்லா ஜீவனுக்கும் அதிலே ஆகாரம் உண்டாயிருந்தது. அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது. அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது. 
நேபுகாத்நேச்சாருடைய ராஜ்யபாரம் பூமியெங்கும் பரந்து விரிந்து காணப்பட்டது. மகத்துவமும் வல்லமையுமுள்ள ராஜா. உமது மகத்துவம் பெருகி, வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது.
இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள். ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும், வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக. ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்திலிருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே. ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானம் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர். வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர். மாடுகளைப்போலப் புல்லை மேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்து கொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்து போக வேண்டும். ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும். இதுவே சொப்பனத்தின் அர்த்தம்.

ராஜாவுக்கு தானியேலின் ஆலோசனை (தானி. 4:27)

ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும். அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான். நேபுகாத்நேச்சார் வளர்ந்து செழித்து காணப்படுகிற விருட்சம் தான், ஆளுகை, பராக்கிரமம் எல்லாம் வல்லமையுடையவர் தான். ஆனாலும் அவனும் கேட்க வேண்டிய ஆலோசனை உண்டு. செம்மைபடுத்த வேண்டிய காரியங்கள் உண்டு. தீங்கு வருவதற்கு முன்பு தேவன் கொடுக்கிறது தான் ஆலோசனையும், தவணையுமாய் காணப்படுகிறது. தேவன் பூமியை வெள்ளத்தினால் அழிப்பதற்கு முன்பு நூற்றியிருபது வருஷம் நோவாவின் நாட்களில் காணப்பட்டவர்களுக்கு தவணை கொடுத்தார். நினிவேக்கு நாற்பது நாட்கள் கிருபையாய் கொடுத்தார். அது போல நேபுகாத்நேச்சாருக்கும் பன்னிரண்டு மாதங்கள் தவணையாக கொடுக்கிறார்.
"நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்". அநீதி எல்லாம் பாவம் என வேதம் கூறுகிறது. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்(நீதி.28:13). துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை, அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்(எசே.18:21,22).
சிறுமையானவர்களுக்கு அக்கிரமம் செய்யாமல் இரக்கம் பாராட்டவேண்டும் எனவும் ஆலோசனை கூறுகிறார். சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்(சங்.41:1) என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம். எளியவர்களுக்கு, அனாதைகளுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யும் போது தீங்கு வரும்போது கர்த்தர் விடுவிப்பார்.
நேபுகாத்நேச்சார் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு கீழ்படிந்ததாக வேதம் கூறவில்லை. காரணம் இரண்டாம் அதிகாரத்தில் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தையும், அர்த்தத்தையும் தானியேல் அறிவித்த போது ராஜா தானியேலையும் அவனுடைய தேவனையும் மிகவும் புகழ்ந்தான். இங்கு தானியேலைப்பற்றியும் அவனுடைய தேவனைப்பற்றியும்  ஒன்றும் கூறவில்லை. அழிவுக்கு முன்னானது அகந்தை: விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை(நீதி.16:18). தன்னைத்தாழ்த்த அவனுக்கு மனமில்லாமல்போயிற்று.

சொப்பனம் நிறைவேறுதல் (தானி. 4:28-33)

தேவன் மாறாதவராய் இருக்கிறது போல அவருடைய வார்த்தையும் மாறாது. குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை(ஆப.2:6).
 இந்த காரியங்கள் எல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது. பன்னிரண்டு மாதம் கடந்துவிட்டது. சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் நேபுகாத்நேச்சார் மறந்துபோனான். ஆனால் தேவன் தான் கூறின வார்த்தையை மறந்துபோகவில்லை. ஒருநாள் ராஜா தன்  அரமனையின் மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்றும், ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை பூமியில் மனுஷனுக்கு சத்துவத்தையும் ஆளுகையையும் கொடுக்கிற கர்த்தருக்கு பிரியமில்லாமல் காணப்பட்டது. ஆகையால், ராஜா இந்த வார்த்தைகளை கூறின வேளையிலே, தான் கண்ட சொப்பனத்தின் அர்த்தம் அவனுடைய வாழ்க்கையில் நடந்தது.

தேவனுடைய சத்தம் வானத்திலிருந்து உண்டாகி,  ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று, மனுஷரினின்று தள்ளப்படுவாய், வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய், மாடுகளைப்போல் புல்லை மேய்வாய், உன்னதமான தேவன் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகிறவர், தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு ராஜ்யத்தை கொடுக்கிறவர் என்பதை அறிந்துகொள்ளுமட்டும் ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகவேண்டும் என்று உனக்குச் சொல்லப்பட்டது. அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று. அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான். அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போல  வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. பெரிய ராஜா ஒருநொடியில் மிருகத்தைப்போன்ற பறவையைப்போன்ற தோற்றமுடையவனாய் மாறிப்போகிறான்.

நேபுகாத்நேச்சார் தேவனிடம் திரும்புதல் (தானி. 4:34-37)

ஏழு வருஷம்(ஏழு காலங்கள்) சென்ற பின்பு நேபுகாத்நேச்சார் தன் கண்களை வானத்துக்கு ஏறெடுக்கிறான். ஒத்தாசை அனுப்புகிற பர்வதத்திற்கு நேராக கண்களை ஏறெடுக்கிறான். சிருஷ்டிகரை நோக்கிப்பார்க்கிறான். ஆளுகையை கொடுக்கிறவரை, ராஜாக்களை ஏற்படுத்துகிறவரை நோக்கிப்பார்க்கிறான். ஆண்டவர் இந்த நேரத்திற்காக காத்திருந்தார்.

தேவனை நோக்கிப்பார்த்த உடன் அவனுக்கு சுயபுத்தி திரும்பவருகிறது. சொப்பனத்தின் படி அடிமரம் துளிர்க்க ஆரம்பிக்கிறது. அப்பொழுது அவன் உன்னதமானவரை ஸ்தோத்தரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தி, அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும் என்று அறிக்கையிடுகிறான்.

அவருக்கு முன்பு பூமியின் குடிகள் ஒன்றுமில்லை. அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார். அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்று தேவனை மகிமைப்படுத்துகிறான். உடனே அவனுடைய ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக அவனுடைய மகிமையும், முகக்களையும்  திரும்பவருகிறது. அவனுடைய மந்திரிமாரும், பிரபுக்களும் தேடிவந்தார்கள். அவனுடைய  ராஜ்யத்திலே  ஸ்திரப்படுத்தப்பட்டான். அதிக மகத்துவத்தையும் கர்த்தர் அவனுக்கு கொடுத்தார்.
கடைசியாக,  நேபுகாத்நேச்சார் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்தி  அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமானவைகள் என்று அறிக்கையிடுகிறான். அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று அனுபவத்தோடு எழுதுகிறான். அகந்தை அழிவையும் தாழ்வையும் கொண்டுவரும்.

Pastor. David .T
Time Word of God Church
(Non-Denominational Full Gospel Tamil Church)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.