தானியேல் விளக்கவுரை அதிகாரம் 3

 பொற்சிலை(தானி.3:1)

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபது முழ(90அடி)  உயரமும் ஆறு முழ(9அடி) அகலமுமான ஒரு பொற்சிலையை பண்ணுவித்து, பாபிலோன் மகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான். இது ராஜாவின் சிலையாகவோ அல்லது பாபிலோனிய விக்கிரகங்களின் ரூபமாகவோ இருந்திருக்ககூடும். இரண்டாம் அதிகாரத்தில் ராஜா கண்ட சொப்பனத்தை தானியேல் கூறும் போது "பொன்னான தலை நீரே" என்று கூறுகிறார். ஒரு வேளை அதன் படி நேபுகாத்நேச்சார் தன் சிலையை நிறுவியிருக்கவும் கூடும். நேபுகாத்நேச்சார் தன்னுடைய ஆட்சியின் எந்த வருஷத்தில் இந்த சிலையை நிறுவினார் என வேதம் கூறவில்லை. ஆனால் அவருடைய ஆட்சியின் இருபத்திமூன்றாம் வருஷத்தில் நிறுவினதாக கருதப்படுகிறது. இந்த வேளையில் தானியேல் எங்கு காணப்பட்டார் என்றும் வேதத்தில் எழுதப்படவில்லை.



சிலையின் பிரதிஷ்டை(தானி.3:2,3)

நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் அவர் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வரும்படி அழைத்தான். அதன்படி அவர்கள் வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.

ராஜாவின் கட்டளை(தானி.3:4-6)

எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரரும் கேட்கும்போது, அனைவரும் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையை பணிந்து கொள்ளவேண்டும். எவனாகிலும் தாழவிழுந்து, பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவில் போடப்படுவான் என்பது ராஜாவின் கட்டளை என செய்தி அறிவிக்கிறவனால் கூறப்பட்டது.

ராஜாவின் கட்டளைக்கு ஜனங்கள் கீழ்படிதல்(தானி.3:7)

சகல ஜனங்களுக்கு முன்பாக இரண்டு காரியங்கள் காணப்பட்டது. ஒருபுறம் அக்கினி சூளை, மறுபுறம்  சிலை. ஒன்றில் சிலையை பணிந்து ராஜாவைப்பிரியப்படுத்தவேண்டும். இல்லையென்றால் அக்கினி சூளையில் போடப்பட்டு மரிக்கவேண்டும். நடந்தது என்னவென்றால், சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே,  தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொண்டார்கள்.

கல்தேயரால் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று யூத வாலிபர்கள் (தானி.3:8-12)

நேபுகாத்நேச்சார் என்னுடைய ஜனங்கள் என் கட்டளைக்கு கீழ்படிந்தார்கள் என்று எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்த வேளையில், அவனுடைய ஞானிகளாகிய கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாட்டினார்கள். ராஜாவே பாபிலோன் மகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை. அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யவுமில்லை. நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்ளவுமில்லை என்று குற்றம் சுமத்தினார்கள். இந்த கல்தேயர்கள் யூத வாலிபர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்கள். தானியோலோடு இவர்களும் சேர்ந்து ஜெபித்ததினால், மறைபொருள்களை விளக்குகிற தேவன், ராஜாவின் சொப்பனத்தை வெளிப்படுத்தினதால் கல்தேயர்களும் அவர்களுடைய வீடும் தப்பினது(தானி. 2:4,5). ஆனால் இப்பொழுது பொறாமையினால் நன்மைக்கு தீமை செய்கிறார்கள்.

ராஜாவின் விசாரணை(தானி.3:13-15)

நேபுகாத்நேச்சார் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான். உடனடியாய் அந்தப் மூன்று யூத புருஷரும் ராஜசமுகத்தில் கொண்டுவந்து விடப்பட்டார்கள். நேபுகாத்நேச்சார் அவர்களை பார்த்து, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா? என்று விசாரித்தான். இவர்கள் மூவரும் பாபிலோனில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்ததாலும், ராஜாவின் உண்மையுள்ள ஊழியக்காரர்களாக  இருந்ததாலும் ஒரு தருணத்தைக் கூட ராஜா கொடுக்கிறான். ஒரு முறை கூட எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தம் முழங்கும். அதை நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள். உங்களை என் கைக்குத் தப்பவிக்கப்போகிற தேவன் யார்? என்று மமதையோடு கூறுகிறான்.

தானியேல் இரண்டாவது அதிகாரத்தில் உங்கள் தேவனே இராஜாக்களுக்கு தேவன் என்று அறிக்கையிட்ட நேபுகாத்நேச்சார் இப்போது இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராக சவால் விடுகிறான். பாபிலோனிய ராஜா ஒருவேளை பல தேசங்களுக்கு ராஜாவாக காணப்படலாம். ஆனால் நம்முடைய  தேவனோ சர்வவல்லமையுள்ள ராஜா.  இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனின் கைக்கு தப்புவித்தவர். தாவீதை சிங்கத்தின்வாய்க்கும், கரடியின் வாய்க்கும், கோலியாத்தின்  கைக்கும் தப்புவித்தவர். அவரே தப்புவிக்கிற தேவன்.

மூன்று யூத வாலிபர்களுடைய விசுவாசம்(தானி.3:16-17)

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவிடம், இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு பதில் சொல்ல அவசியமில்லை.  காரணம் நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்(யாத்.20.3-5)" என்பது கர்த்தருடைய கட்டளை. "நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்(ஏசா.42:8)" என்பதும் அவருடைய வாக்கு. ஆகையால் அவருக்கு கொடுக்க வேண்டிய கனத்தை விக்கிரகங்களுக்கு கொடுக்கவும் முடியாது, பணியவும் முடியாது  என்று விசுவாசத்தோடு பதில் கூறினார்கள்.

ஒருவேளை விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்று உறுதியாக கூறினார்கள். விடுவியாமற்போனாலும் என்ற வார்த்தை, அவிசுவாசத்தினாலோ, சந்தேகத்தினாலோ உண்டான வார்த்தை அல்ல. ஆண்டவருடைய சித்தத்திற்கு பூரணமாய் ஒப்புக்கொடுத்து  கூறின வார்த்தையாகும்.  எபிரெயர்.11-ல் வாசிக்கும் போது, விசுவாசத்தினால்  ஒருகூட்டபக்தர்கள், சிங்கங்களின் வாய்களை கட்டினார்கள், ஸ்திரீகள் சாககொடுத்த தங்களுடையவர்களை உயிரோnடழுந்திருக்க பெற்றார்கள். ஆனால் விசுவாசத்தின் மறுபகுதியில், வேறுசிலர் அதே விசுவாசத்தோடு கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், அடிகளையும், காவலையும் ஏற்றுக்கொண்டு மரித்தார்கள். இரண்டும் விசுவாசத்தினால் உண்டானவைகளே.  இந்த மூன்று வாலிபருக்குள்ளும் தேவன் எங்களை தப்புவிக்க போதுமானவர் என்று உறுதியான விசுவாசம் காணப்பட்டது, ஒருவேளை தப்புவிப்பது தேவனுடைய சித்தம் இல்லையென்றாலும், அக்கினியில் இரத்த சாட்சியாய் மரிப்பதே மேல், என்பதை தெரிந்துகொண்டு, இந்த சிலையை பணிந்து கொள்ள போவதில்லை என்று திடமாக கூறுகிறார்கள். விக்கிரகங்களுக்கு முன்பாக விழுந்து நித்தியத்தை இழந்து போவதைக்காட்டிலும் அக்கினிசூளையில் மரித்து பரலோகத்தை சுதந்தரிப்பது மேலானதாக அவர்களுக்கு காணப்பட்டது. மூன்று பேருக்குள்ளும் ஒரே விசுவாசம் காணப்பட்டது மேன்மையான காரியம். ஒருவர் இடறியிருந்தாலும் விசுவாசம் தள்ளாடியிருக்கும்.
அதிகாரத்தில் உள்ளவர்களை கனம் பண்ண வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இராயனுக்குரியதை இராயனுக்கும் தேவனுக்குரியதை தேவனுக்கும் கொடுக்க வேண்டும் என்று இயேசு கூறினார். வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஐமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்கு பயப்படுகிறவர்களாக கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்(கொலோ.3:22). ராஜாக்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. ஆனால் ராஜாக்களின் சட்டங்கள் தேவனுடைய பிரமாணங்களுக்கு, வசனங்களுக்கு  எதிராக காணப்படும் போது தேவனுக்கு கீழ்படிய வேண்டும். மனுஷனுக்கு கீழ்படிவதைக்காட்டிலும் தேவனுக்கு கீழ்படிவதே மேல்.

இராஜாவின் தீர்ப்பு (தானி.3:19-23)

மூன்று வாலிபர்களும் சிலையை பணியமாட்டோம் என்று உறுதியாக கூறினதினால் நேபுகாத்நேச்சாருக்கு கடுங்கோபம் உண்டாயிற்று. அவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது. அதினிமித்தம் சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவு கொடுத்தான்.  சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்ளையிட்டான். அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும்  பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டவர்களாய், எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்று போட்டது.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
ஏன் ஆண்டவருடைய பிள்ளைகளுக்கு பாடுகள், உபத்திரவங்கள், வேதனைகள்?. ஏன் அக்கினியைப்போன்ற சோதனைகள்?  அவைகள் அனைத்தும் ஆவிக்குரிய ஜீவியத்தின் வளர்ச்சிக்காக வருகிறவைகள்  ஆகும். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும். அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்(1பேது.1:7). அன்றியும்  கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்(2தீமோ.3:12). சிலுவையில்லாத படி சிங்காசனம் இல்லை. அவரோடு பாடுகளை சகித்தால் அவரோடு ஆளுகையும் செய்யலாம். இதோ, உன்னைப் புடமிட்டேன், ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னை தெரிந்துகொண்டேன்(ஏசா.48:10). அக்கினியைப்போன்ற உபத்திரவங்கள் நம்முடைய விசுவாசத்தை சுத்திகரித்து விலையேறப்பெற்றதாக விளங்கச்செய்யும்.

நேபுகாத்நேச்சாரின் பிரமிப்பு(தானி.3:24-27)

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான். அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை. நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். தேசாதிபதிகளும், அதிகாரிகளும்,  தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள். மூன்று வாலிபர்களும் விசுவாசத்தினாலே அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள் (எபி. 11:34).

அக்கினியின் மத்தியில் நான்காவது மனுஷனாய் தோன்றின தேவபுத்திரன்

தேவபுத்திரன் என்றும் தேவதூதன்(3:28) என்றும் ஒருமையில் குறிப்பிடுவது இயேசுவை குறிக்கிறது. நான்காவது மனுஷன் அக்கினியில் போடப்படுவதற்கு முன்பு வெளிப்படவில்லை. அக்கினியில் போடப்படும்போது வெளிப்படவில்லை. போடப்பட்டபின்பு அவர்களோடு அக்கினியின் மத்தியில் நின்றார்.  நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது(ஏசா.43:2). விசுவாசத்திற்காக ஆண்டவருடைய பிள்ளைகள் துன்பத்தை சகிக்கும் போது இயேசு அவர்களோடு காணப்படுவார். பவுல் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தும் படி கடந்து சென்ற போது நீ துன்பபடுத்துகிற இயேசு நானே என்று கூறுகிறார். அவர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய போதுமானவர். மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாது என்று இயேசு கூறியிருக்கிறார். ஆகையால் தேவ பிள்ளைகள் பாடுகள், சோதனைகள், உபத்திரவங்கள்  வரும் போது கலங்க தேவையில்லை. சோதனையூடாய் கடந்து சென்ற ஆண்டவர் நம்மோடுண்டு. அவர் நம்மை விடுவிக்க போதுமானவர்.

இஸ்ரவேலின் தேவனே விடுவிக்கிறவர்(தானி.3:28-30)

நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலின் தேவனே விடுவிக்கிறவர் என்பதை அறிந்துகொள்ளுகிறான். அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான். அவர் தம்முடையவர்களை தப்புவிக்கிறவர் என்றும் அறிக்கையிடுகிறான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாக தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான். அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று தீர்மானமானமும் போடுகிறாhன்.
உங்களை என் கைக்கு தப்புவிக்கபோகிற தேவன் யார்? என்று கேட்ட ராஜா இப்போது இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்று அறிக்கையிடுகிறான்.  பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான். பாடுகள் மூலம் உயர்வு வருகிறது.

Pastor. David .T
Time Word of God Church
(Non-Denominational Full Gospel Tamil Church)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.