இதுவே நொறுங்குதல்

இதுவே நொறுங்குதல்

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். - (சங்கீதம் 51:17).

தேவன் நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணியார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.. அப்படி நொறுங்குதல் என்றால், நம் துன்பங்களின் நடுவில் கர்த்தரிடம் கதறுவதா? அல்லது மற்றவர்கள் செய்த துன்பத்தில் மனம் உடைந்து நொறுங்கிப் போவதா? நொறுங்குதல் என்றால் என்ன? இந்த நொறுங்குதலை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல! ஆனால், இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது அவரிடமிருந்து ஏற்பட்டப் பிரதிபலிப்பிலிருந்து இதற்கான விடையை தெளிவாகக் காணலாம்.

  • என் சாட்சி வாழ்விற்கு களங்கம் கற்பிக்கப்படும் போதும், வேண்டுமென்றே என்னைக் குறித்துப் பொய்யாய் திரித்துப் பேசப்படும்போதும், என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, என் இயேசுவும் அவ்வாறு பொய்யாய் குற்றம் சாட்டப்படுகையில் வாய் திறவாமல் இருந்ததை நினைவு கூர்ந்தேன். அப்பொழுது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் நான் குற்றம் சாட்டப்பட்டதைச் சிறிதும் நியாயப்படுத்த முயற்சிக்காமல் அப்படியே ஏற்றுகொண்டேன். இதுவே நொறுங்குதல்.
    பகிரங்கமாய் என்னை உதாசீனம் செய்துவிட்டு எனக்கு முன்பாக வேறொருவரை உயர்த்தும்போது, என்விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து அவரையும் ஜனங்கள்  ‘இவரை அகற்றும், பரபாசை எஙகளுக்கு விடுதலையாக்கும்’  என சத்தமிட்டதை நினைவுகூர்ந்தேன். அப்போது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் நான் தள்ளுண்டதை ஏற்றுக் கொளகிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்

  • நான் ஒழுங்குபடுத்திய திட்டங்கள் அனைத்தும் நசுங்குண்டு, நான் பல்லாண்டுகளாக பிரயாசப்பட்ட என் உழைப்புகள் அத்தனையும் சிலருடைய சுயநல விருப்பத்தால் நாசமாக்கப்பட்டதைக் காணும்போதும், என் விழிகள் இயேசுவை நோக்கிப் பார்த்து, தன்னைப் புறம்பே தள்ளி சிலுவையில் அறைந்தவர்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து, தோல்வி என கருதப்பட்ட ஸ்தானத்தை அவர் ஏற்றுக் கொண்டதை நினைவு கூர்ந்தேன். இப்போது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கொஞ்சமும் கசப்புணர்வு இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்.

  • தேவனோடு சீர் பொருந்தி பரிசுத்தமாய் வாழ்வதற்கு பிறரிடம் மன்னிப்பு கேட்டு இவ்வொப்புரவாகுதலின் தாழ்மை வழியை நான் நிச்சயமாய் கடந்து சென்றே ஆகவேண்டும் என்று அறிந்த போது, என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, இயேசுவும் தன்னைத்தானே வெறுமையாக்கி,  சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்படிந்து தன்னைத்தானே தாழ்த்தினார் என்ற வசனத்தை நினைவு கூர்ந்தேன். இவ்வித ஒப்புவாகுதலால் பகிரங்கமாக்கப்படும் என் அவமானத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்.

  • ஒருவர் என்னிடம் நடந்து கொள்ளும் விதமானது இனி மன்னிக்கவே முடியாது என்ற உச்சக்கட்டத்தை எட்டும்போது மனம் வெதும்ப என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, அவர் கொடூரமாய் சிலுவையில் அறையப்பட்ட போதும் 'பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள்செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என ஜெபித்ததை நினைவு கூர்ந்தேன். அப்போது என் சிரம்தாழ்த்தி, மற்றவர்களின் எப்பேர்ப்பட்டக் கொடியச் செய்கைகளும் என் அன்பின் பிதாவின் அனுமதியுடனேயே சம்பவிக்கிறது என ஏற்றுக்கொண்டேன். இதுவே நொறுங்குதல்.



இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். -  (1 பேதுரு 2:21-23)
இதுபோன்று எல்லாவிதத்திலும் இயேசுகிறிஸ்து பாடுகளை சகித்து நமக்கு முன்மாதிரியாக நொறுக்கப்பட்டார்.

நம்முடையப் பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். - (எபிரேயர் 4:15).  ஆகவே சோர்ந்து போகாதிருப்போம்.  நம் பிரச்சனையில் கர்த்தர் நம்முடனே இருக்கிறார். அல்லேலூயா!
கிறிஸ்துவின் பொருட்டு நொறுக்கப்பட்டால்

  • பாக்கியம் நமக்கு பாக்கியமே

    சோர்ந்து போகாதே நீ

    சோர்ந்து போகாதே

    அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

    இந்த லேசான உபத்திரவம்  
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும்; எங்கள் நல்லத் தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் படும் எந்த பாடுகளையும் எங்கள் இயேசு முதலிலே சுமந்து தீர்த்துவிட்டார் என நாங்கள் அறியும்போது, எங்கள் பாரங்கள், எங்கள் சுமைகள் எங்களுக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றுகிறது. எங்கள் பாடுகளின் மத்தியில் அதை மாற்றுவதற்கும் எங்களைத் தேற்றுவதற்கும் எங்கள் இரட்சகர் எங்களுக்கு இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம்.   எங்கள் ஜெபத்தைக் கேட்டு எங்களுக்குப் பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்லப் பிதாவே ஆமென்!அல்லேலூயா!

வாட்ஸ்ஸாப் பகிர்வுவுவு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.