சங்கீதம் 37:1-11 --
1கொரிந்தியர் 4:1-7
சில நேரங்களில் சிலர் பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்படுவதுண்டு. சொல்லாததைச் சொன்னதாகவும். செய்யாததைச் செய்ததாகவும் பழி சுமத்தப்படுவதுண்டு. ஆயினும் அவர்களுக்காக தேவன் எதையும் செய்வதில்லை. அவர்கள் ஐயோ அநீதி, ஐயோ அநீதி என்ற கூக்குரலிட்டாலும். அவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் வேறு பல விஷயங்களில் குற்றவாளிகளாகவும், தவறானவர்களாகவும் இருப்பார்கள். சிலர் தவறுகள் பல புரிந்தும் நல்லவர்கள் போல சாட்சி பெற்றிருப்பார்கள். குற்றங்கள் பல புரிந்தும் அவைகளை யாருக்கும் தெரியாமல் எளிதாக மறைத்திருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு தேவன் உதவி செய்வதில்லை. மோசேக்கு ஏதிராக ஆரோனும், மிரியாமும் பேசினார்கள். ஆனால் தேவன் அங்கு வந்து அவனுக்கு ஆதரவாக சாட்சி தந்தார். ஏனென்றால் மோசே அனைத்து வாழ்க்கைப் பகுதிகளிலும் உண்மையுள்ளவனாயிருந்தான். சில இடங்களில் மட்டும் அல்ல. எங்கும் அவன் உண்மையோடும், உத்தமத்தோடும், தேவ பயத்தோடும் நடந்து கொண்டான். (எண். 12:7)
ஆம்.
நாம் பொய்யாகப் பழிசாட்டப்படும்போதும், தவறாகக் குற்றஞ்சாட்டப்படும்போதும் இங்கேயே இப்போதே நமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இப்போதே நம்முடைய குற்றமற்ற நிலமையை தேவன் நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று ஜெபிப்போம். ஆனால் தேவன் எதையுமே அவசரப்படாமல் அதற்குரிய வேளையிலேயே செய்வார். அநீதியையும், ஆகாத குற்றச்சாட்டுகளையும், தவறாகப் பேசப்படுதலையும் நாம் சிலகாலம் சகிக்க வேண்டிய தேவை உண்டு. தேவனுடைய நீதி வெளிப்படும் என்ற விசுவாசத்தோடு காத்திருக்க வேண்டிய தேவையும் உண்டு. தேவன் எதையும் உடனுக்குடன் செய்யாமல் உரிய நேரத்தில் செய்வதையே விரும்புகின்றார்.
கர்த்தருடைய வேளைக்காக நாம் பொருமையோடு காத்திருக்க வேண்டும். தேவன் ஒரு நாள் நற்சாட்சி பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையோடு மனிதர்களின் பொய்சாட்சிகளினால் வருகின்ற எரிச்சல்களைச் சகிக்கவும் பழகவேண்டும். அப்பொழுது அவர் நம்முடைய நீதியை வெளிச்சத்தைப் போலவும், நம்முடைய நியாத்தைப் பட்டபகலைப் போலவும் விளங்கப்பண்ணுவார். (சங்கீதம் 37:6) யோசேப்பின் உண்மையையும், குற்றமற்ற வாழ்க்கையையும் அறிந்திருந்த தேவன். அவன் அநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்பட்டபோது உடனடியாக வந்து அவனுடைய குற்றமற்ற வாழ்க்கைக்கு சாட்சி தரவில்லை. ஆனால் உரிய வேளையில் அவன் நீதிமான் என்பதை உலகம் அறியும்படியாகச் செய்திட அவர் மறக்கவில்லை.
தேவனுக்கு முன்பாகக் குற்றமற்றவனாக நிற்க விரும்புகிறவனை உலகம் அதிக நாள் குற்றவாளியாக நிறுத்த முடியாது.
வாட்ஸ்ஸாப் பகிர்வு