Type Here to Get Search Results !

உன்னை தெரிந்துகொண்டவர் உண்மையுள்ளவர்....


உன்னை தெரிந்துகொண்டவர் உண்மையுள்ளவர்....

“நீங்கள் என்னை தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;......” – யோவான் 15:16

கல்லூரி நாட்கள் அவை. எல்லாம் நன்றாய்ப் போய்க்கொண்டிருந்தது. விளையாட்டு அணிகள் தெரிந்தெடுக்கப்படும்வரை! விளையாட்டு அணித்தலைவர்கள் தாங்கள் தெரிந்துகொண்ட வீரர்களின் பெயர்களை கூறி அழைக்கும்போது அவ்விடத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. ஒரு அணியில் கடைசியாக பெயர் வாசிக்கப்பட்ட ஒரு மாணவன் கவலையடைந்தான். “ஓ ஆண்டவரே நான் கடைசியில் தெரிந்தெடுக்கப்படுவதை வெறுக்கிறேன். வேறு ஆள் இல்லாமல் என் பெயரை தெரிந்தெடுக்கிறார்களே! என்னை யாரும் விரும்பி தெரிந்தெடுக்கமாட்டார்களா!” என்று மனதிற்குள் நொந்து கொண்டான்.

நீங்கள் எப்போதாவது விரும்பி தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டா? அப்படியென்றால் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன். வாலிபனே, நீ உன் தாயின் கருவிலிருக்கும்போதே உன்னை தேவன் தெரிந்துகொண்டார். அவர் உன்னை விரும்பி தெரிந்து கொண்டுள்ளார். உன்னுடைய கல்வி, திறமை, பெலன் இவற்றினிமித்தமல்ல; உன்னிடம் காணப்படும் சிறப்பும் நேர்த்தியும் கூட காரணமல்ல, அவர் தமது சித்தத்தின்படி உன்னை தெரிந்தெடுத்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குமுன் ஒரு குடும்பத்திலுள்ள தனிநபரை தெரிந்து கொள்ளும்படி கர்த்தர், சாமுவேல் தீர்க்கதரிசியை அனுப்புகிறார். அது ஈசாயின் வீடு. அந்த குடும்பத்திற்கு எத்தனை பெரிய மதிப்பு பாருங்கள். ஈசாயின் குமாரர்கள் ஒவ்வொருவராய் சாமுவேலின் முன் அனுப்பப்படுகின்றனர். மிக அழகுள்ளவர்களும் வாட்டசாட்டமுள்ளவர்களும் இராணுவ வீரர்களாகவும் இருந்த அவர்கள் எவரையும் தேவன் ராஜாவாய் தெரிந்தெடுக்கவில்லை. 7 குமாரரும் கடந்து போனபின் சாமுவேல் ஈசாயிடம் இவர்களில் ஒருவனையும் கர்த்தர் தெரிந்தெடுக்கவில்லை. “உன் குமாரர் இவ்வளவுதானா?” என்று கேட்டார். “இல்லை இளையவன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறான். அவன் அரச அம்சமுடையவனல்ல” என்றார். பின்னர் தாவீது அழைத்துவரப்பட்டு இராஜாவாய் அபிஷேகம் பண்ணப்பட்டான்.

அன்பு வாலிபரே! ஒருவேளை நீங்கள் உலகத்தாரால் விரும்பி தெரிந்தெடுக்கக்கூடிய நபராய் இல்லாதிருக்கலாம். ஏன் உங்கள் குடும்பத்தாரால் கூட நீங்கள் மறக்கப்பட்டுப் போகலாம். “ஐயோ நான் யாருடைய நினைவிலும் வராத யாருக்கும் பிரயோஜனமற்ற ஒருவனோ, ஒருத்தியோ என நீங்கள் உங்களைக் குறித்து எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால் போர் அனுபவமற்ற ஆடு மேய்த்த தாவீதை கோலியாத் முன் நிறுத்தி வெற்றி பெறச் செய்வதற்காகவே தாவீதை தெரிந்துகொண்ட தேவன், உன்னைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்யும்படியே, உன்னையும் தெரிந்தெடுத்துள்ளார். உங்கள் வாழ்க்கையிலே கோலியாத் போன்ற பெரும் பிரச்சனைகளை சந்திக்கும்போது நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளுங்கள்.


வாட்ஸ்ஆப் பகிர்வு

Post a Comment

0 Comments