வேதாகமம் ஓர் விளவுரை 6


4. ரோமப் பேரரசு: (கி.மு.63 முதல்)

ரோமுலஸ் என்னும் பேரரசனால் கி.மு.63 வது ஆண்டில் ரோம சாம்ராஜ்யம் ஏற்படுத்தப்பட்டது. கி.மு.63வது ஆண்டில் பாம்ப்பே என்னும் ரோம அரசன் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றினான். இக்காலத்தில் ரோமப் பேரரசு உலக வல்லரசாக மாறியது. இதற்கு முன்பு வல்லரசாக விளங்கிய கிரேக்கப் பேரரசு வீழ்ச்சியுற்றது.

அகஸ்து, திபேரியு, கலிகுலா, கிலவுதியா, நீரோ, கல்பா, ஏதோ போன்ற பல மன்னர்களால் ரோம சாம்ராஜ்யம் விரிவடைந்து முழு உலகத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்தியது.

ரோம சாம்ராஜ்யம் பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் இராஜாவாக இருக்கிறவன் “இராயன்” என்று அழைக்கப்பட்டான். ஒவ்வொரு பிராந்தியத்திலே‌யும் யுத்த வீரர்களும், தளபதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தனர். ஆசியா, பொந்து, பித்தினியா, யூதேயா, சீப்புரு, பம்பிலியா, லீசியா, கலிலேயா போன்றவை சில பிராந்தியங்களாகும். 

ரோமப் பேரரசின் பிராந்தியங்களில் சமாதான பிராந்தியங்கள், நெருக்கடி பிராந்தியங்கள் என இரு பிரிவுகள் இருந்தன. சமாதானப் பிராந்தியங்கள், நெருக்கடி பிராந்தியங்கள் என இரு பிரிவுகள் இருந்தன. சமாதான பிராந்தியங்கள் அதிபதிகளால் ஆளப்பட்டது. நெருக்கடிப் பிராந்தியங்கள் இராயனுடைய நேரடிப் பார்வையில் இருந்தது.

புதிய ஏற்பாட்டில் “அதிபதி“, “இராயன்” என்னும் பதங்களைக் காணும்போது, இந்தப் பினனணியத்தை நினைவுக்குக் கொண்டு வருதல் விளங்கிக் கொள்ள பயன் தரும்.


அ) அன்றிபேற்றர்
கி.மு. 63 ம் ஆண்டு ரோம அரசனான பாம்ப்பே பாலஸ்தீனத்தை ஜெயித்து, யூதர்களை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இவன் அன்றிபேற்றர் என்னும் இதுமேயனை (ஏசா வழி வந்தவன்) யூதரின்மேல் ஆட்சி செய்யும்படி ஏற்படுத்தினான். 

இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த ஹாஸ்மோனியத் தலைவர்களை தன் வசப்படுத்தி, பாம்ப்பே மன்னனின் மனவிருப்பத்தின்படி நடந்து ஆட்சிக்கு வந்து தனது நிலையை உறுதி செய்து கொண்டவன் இந்த அன்றிபேற்றர் ஆவான்.

பாம்ப்பே மன்னனைத் தொடர்ந்து , ஜூலியஸ்சீசர், ஆண்டனி போன்ற ரோம அரசர்களின் காலத்தில் யூதர்கள் தனி நாட்டு மக்களாக அங்கீகாரம் பெற்றனர். என்றாலும், ரோமரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபடியால் ரோமப் ப‌ேரரசுக்குக் கப்பம் கட்டினர். 

ரோம ராயனால் விசாரிக்கப்பட வேண்டும் - என்று ஒரு குற்றவாளி ஒருவர் திட்டவட்டமாய் கேட்காத பட்சத்தில் தங்கள் வழக்குகளை தாங்களே விசாரித்துத் தீர்ப்பு செய்ய நீதிமன்றங்களை அமைத்துக் கொள்ளும் உரிமையும் பெற்றனர். 

சனகரிப் சங்கம் இப்பின்னணியத்தைக் கொண்டு எழுந்தத‌ே ஆகும். என்றாலும், ரோமப் பேரரசின் சட்டத்தை மீறும் ஒருவரின் வழக்கை விசாரித்துத் தீர்ப்புக்கூற, இவர்களுக்கு உரிமையில்லை. இவ்வகையான சலுகைகளுடன் கூடிய உரிமைகள் எகிப்து உட்பட பல தேசங்களிலும் குடியிருந்த யூதர் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.


ஆ) மகா ஏரோது
அன்றிபேற்றாருக்குப் பின்பு அவன் தனது மகன் மகா ஏரோதுவை பாலஸ்தீனத்தின் கலிலேயாப் பகுதியை ஆளும்படி வைத்தான். மகா ஏரோது கி.மு.37 - 3 வரை பாலஸ்தீனத்தை ஆண்டான். யூதருடைய நன்மதிப்பை பெறும்படி, பல யுக்திகளைக் கையாண்டான். யூத குலத்துடன் சம்பந்தங் கலந்தான். எருசலேம் தேவாலயத்தைப் புதுப்பித்துக் கட்டினான்.

ரோமப் பேரரசர்களுக்காக பாலஸ்தீனத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், மற்றும் யோர்தானை அடுத்த பகுதிகளை வென்று ரோம சாம்ராஜ்யத்துக்குட்படுத்தினான்.. மேலும், கிரேக்க - ரோம கலாச்சாரமும், பண்பாடும், தான் ஆண்டு வந்த பகுதிகளில் பரவி வளர ரோமப் பேரரசர்களுக்கு பேருதவியாயிருந்தான். எனவே, யூதேயா உட்பட பாலஸ்தீனத்தின் பெரும் பகுதிகளுக்கு அவனை மன்னனாக ரோமர்கள் முடிசூட்டினர்.

நமதாண்டவர் இயேசு பிறந்தபோது பாலஸ்தீனத்தை ஆண்டவன் இந்த மகா ஏரோதுவே. இயேசுவைக் கொலை செய்ய வகைதேடி குழந்தைகளைக் கொன்று குவித்தவனும் இவனே.

ஏரோதின் மரணத்திற்குப் பின் பாலஸ்தீனம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

1. யூதேயா - சமாரியா

2. பெரேயா

3. கலிலேயா

4. செசரியா - பிலிப்பி

இந்த 4 பகுதிகளும் ஏரோதியரின் வம்சத்தால் ஆளப்பட்டது. இந்த ஏரோதியர்களில் முக்கியமானவர்கள் ஆர்க்கலேயஸ், பிலிப்பு, அந்திப்பா, அகிரிப்பா போன்றோர் ஆவர். 

‌ ஏரோதியர் ஆண்ட பகுதிகள் காற்பங்குகள் என அழைக்கப்பட்டது. அதை ஆண்ட ஏரோதியர்கள் “காற்பங்கு தேசாதிபதிகள்” என்று அழைக்கப்பட்டார்கள்.

மல்கியா முதல் கிறிஸ்து வரையுள்ள சுமார் 400 ஆண்டு கால அரசியல் பின்னணியம், அதில் யூதரின் நிலையும் இதுவ‌ே.


சமூக பொருளாதார உலகம்
சிறையிருப்பின் காலத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் காலம் வரைக்கும் யூதர்கள் எவ்வித அரசியல் மாற்றத்தின் ஊடாக சென்றார்கள் என்பதையும், அது புதிய ஏற்பாட்டு உலகத்தை எவ்விதம் வடிவமைத்தது என்பதையும் இதுவரை கண்டோம்.

இனி, கிரேக்க மற்றும் ரோம ஆளுகையின் கீழ் புதிய ஏற்பாடடு உலகத்தின் சமூக பொருளாதார நிலைகள் எவ்விதம் இருந்தன என்பதை சுருக்கமாக காண்போம். புதிய ஏற்பாட்டு புத்தகங்களை விளங்கிக் கொள்ள இவை பெரிதும் உதவும்.

புதிய ஏற்பாட்டு உலகத்தை கிரேக்க - ரோம உலகம் என்று அழைக்கலாம். கிரேக்க சாம்ராஜ்யத்திற்கு பிறகு ரோம சாம் ராஜ்யம் தலை தூக்கினாலும், மகா அலெக்சாண்டர் காலத்தில் வித்திடப்பட்டு, பரவி வளர்ந்த கிரேக்கக் கலாச்சாரம் வீழ்ச்சியடையவில்லை. ரோமர்களும் பெருமளவில் அக்கலாச்சாரத்தையே பின்பற்றி வந்தனர். எனவே, அக்காலத்தில் ரோமப் பேரரசு முழு உலகத்தின் மேலும் ஆட்சி செய்தாலும், கிரேக்க கலாச்சாரம் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது எனலாம்.


1. ரோமப் பேரரசின் சமூகப் பிரிவுகள்
அ) உயர்குடி மக்கள்:

அவர்கள் அரசியல் செல்வாக்கு, உயர்பதவிகள், செல்வம் உடையவர்கள். புதிய பட்டணங்கள் கட்டப்படும்போது இவ்வித மக்கள் குடியேற்றப்பட்டார்கள். பாலஸ்தீனத்தில் சதுசேயர்கள் இவ்வித உயர் குடிமக்களாக கருதப்பட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் ரோம அரசை ஆதரித்தார்கள். செல்வந்தர்களாகிய இவர்கள் ஏராளமான நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். தங்கள் நிலங்களை குத்தகைக்கு விட்டுவிட்டு வெளியூர்களில் சென்று இன்பமாய் வாழ்ந்தார்கள்.

ஆ) நடுத்தர மக்கள்:

நெசவு, மண்பாண்டம் செய்தல், தச்சுத் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்கள். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர். ஆசாரியரும், லேவியரும் இவ்வகுப்பைச் சார்ந்தவர்கள‌ே.

இ) கூலியாட்கள்:

தமக்கென்று சொத்து ஏதும் இல்லாத இவர்கள் சமுதாயத்தில் தன்னுரிமை பெற்றவர்கள். பொதுவாக உயர் குடிமக்கள் தங்கள் அடிமைகளைக் கொண்டே தங்கள் சொந்த வேலைகளைச் செய்தனர். இதனால், இக்கூலியாட்கள் வேலையின்றி சோம்பேறித்தனமாக இருந்தனர். (மத்த‌ேயு: 20 அதிகாரம்)

ஈ) அடிமைகள்: 

புதிய ஏற்பாட்டு நாட்களில் ரோம் நகரில் இருந்த பாதிபோ் அடிமைகளாக இருந்தார்கள். கட்டிட வேலை, கப்பலில் துடுப்பு வலித்தல், பயிர் செய்தல், சுரங்கத்தொழில் போன்றவற்றில் இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.


2. பாலஸ்தீனத்தின் சமூகப் பிரிவுகள்

அ) ஆயக்காரர்:

இவர்கள் வரிவசூலிக்கிறவர்கள். தனிப்பட்ட மனிதன் வரி செலுத்த வேண்டும். இது குடியுரிமை வரி. இதற்காக குடிமதிப்பு அல்லது மக்கட் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இது தவிர விற்பனை செய்யும் பொருட்களுக்கு சுங்கவரி விதிக்கப்பட்டது. வரிவசூலிக்கிறவர்கள் ரோம அரசாங்கத்திற்காக வேலை செய்தபடியாலும், தங்கள் மன விருப்பத்தின்படி அநியாயமாய் கடுமையான வரியை வசூலித்தபடியினாலும் நாட்டுப் பக‌ைஞர்கள் எனக் கருதப்பட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களாக இருந்தார்கள். மத்தேயு, சகேயு இவ்வித வேலை செய்தவர்கள்.

ஆ) பாவிகள்:

இவர்கள் பாவம் செய்தபடியால் பாவிகள் என அழைக்கப்படவில்லை. பரிசேயர், சதுசேயரைப்போல வேத பிரமாணங்களையும், மார்க்க சடங்காச்சாரங்களையும் கற்றுத் தேறாதவர்கள்.

பரிசேயர்கள் ஓய்வு நாளை கைக்கொள்வதற்கு மட்டும் 600 மார்க்க சடங்காச்சார சட்டதிட்டங்களை எழுதி வைத்திருந்தார்கள். தச்சுத் தொழில், விவசாயம், மீன்பிடித்தல் போன்ற தொழில்களை செய்து வந்த நடுத்தர கூட்டத்தாராகிய இம்மக்கள் இக்கட்டளைகளை பின்பற்ற இயலாதபடியால் பரிசேயரும், சதுசேயரும் இவர்களை பாவிகள், சபிக்கப்பட்டவர்கள், கல்லாதவர்கள் என பல பெயர்களில் அழைத்தார்கள். (யோவான்: 7:49; 9:34).

இ) ஏரோதியர்:

இவர்கள் யூதர் மத்தியில் காணப்பட்ட அரசியல் கட்சியினர், ரோம ஆட்சி பாலஸ்தீனத்தில் நிலவவேண்டும் என விரும்பியவர்கள். இது தங்கள் சொந்த குடும்ப ஆதாயத்திற்காக கொண்டிருந்த நிலையே ஆகும்.


3. பிற சமூக நிலைகள்
அ) குடும்ப நிலை:

கிரேக்கக் கலாச்சாராத்தில் பெண்கள் மிகவும் தாழ்வாக மதிக்கப்பட்டார்கள். என்றாலும், அலெக்சாண்டர் காலத்திற்குப் பின்பு பெண்களுடைய நிலை உயர்த்தப்பட்டது. ரோமப் பேரரசின் காலத்திலும் இந்நிலை தொடர்ந்தது. என்றாலும், யூத சமுதாயத்தில் கிரேக்க ரோம சமூகங்களைப் போலவே விவாகரத்துப் பெருகியிருந்தது. பெண்களுக்கு யூதர்கள் ஆராதனையில் சம அந்தஸ்து கொடுக்கவில்லை.

ஆ) ஒழுக்க நிலை:

கிரேக்க ரோம கலாச்சாரத்தின் கீழ் புதிய ஏற்பாட்டு உலகத்தில் ஒழுக்கநிலை மிகவும் சீர்கெட்டதாயிருந்தது. அடிமைகள் கொடுமைப்படுத்தப்படுதல், விலைமாதரின் பெருக்கம், அடிமைகள் விபசாரத்தில் பயன்படுத்தப்படுதல், போன்ற இழிநிலைகள் காணப்பட்டது. அத்துடன் 1கொரிந்தியர்: 5; கலாத்தியர்: 5; ரோமர்: 1 அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள பாவங்களால் நிறைந்து காணப்பட்டது புதிய ஏற்பாட்டு உலகம்.


4. கலாச்சாரம்
கிரேக்க-ரோம ஆளுகைகளில் இலக்கியம், கட்டிடக் கலை, இசை, நாடகம், மொழிகள், கல்வி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கலையரங்கங்கள், விளையாட்டு மைதானங்கள் பொழுது போக்கு இடங்களாக காணப்பட்டன. இந்த அரங்குகளில் பசியோடுள்ள மிருகங்களுடன் அடிமைகள் அல்லது குற்றவாளிகள் சண்டைபோட அனுப்பப்படுவார்கள். அந்த விலங்குகள் இவா்களை அடித்துத் தின்பதை மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்.

லத்தீன், கிரேக்க, அரமேயு, எபிரேயு அகிய மொழிகள் பிரதான மொழிகளாயிருந்தன. 

வேதாகமம் எபிரேயு மொழியில் எழுதப்பட்டது. ஆனால், மக்கள் அரமேயு மொழியை ப‌ேசினார்கள். எனவே, எபிரேய மொழி எழுத்தளவில் உள்ள மொழி என்றும், அரமேயு மொழி பேச்சளவில் உள்ள மொழி என்றும் சொல்லப்படலாம்.

அப்படியே லத்தீன் மொழி - நீதிமன்றங்கள் மற்றும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது.

கிரேக்க மொழி - அறிஞர்கள், கல்விமான்களால் பயன்படுத்தப்பட்டது.

மார்க்க உலகம் (அல்லது) சமய உலகம்
புதிய ஏற்பாட்டு உலகத்தை சமய உலகம் என்றும் அழைக்கலாம். இவற்றை 4 பிரிவாகப் பிரிக்கலாம்.

1. கிரேக்கரின் சமய நிலை

2. ரோமரின் சமய நிலை

3. தத்துவங்கள்

4. யூதரின் சமய நிலை

கிரேக்கர்களும், ரோமர்களும் ஆவி வணக்கம் மற்றும் பல தேவ வணக்கம் உடையவர்கள். மூடநம்பிக்கை, குறி சொல்லுதல் போன்றவை மிகுந்து காணப்பட்டது.

ஸீயஸ் கிரேக்கர்களின் பிரதான தெய்வம். ஆனால், ரோமர்கள் தங்களது அரசன் கடவுளின் பிரதிநிதியாய் இருக்கிறான் என்று நம்பினார்கள். என்வே, பிற்காலத்தில் அகஸ்து, கலிகுலா, டொமிசியன் போன்ற ரோம மன்னர்கள் தங்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி, மக்கள் தங்களை வணங்க வ‌ேண்டுமென்று கட்டாயப்படுத்தினர்.

யாரை வணங்கவேண்டுமென்று மக்கள் குழம்பிப்போன சூழ்நிலையில் கிரேக்க - ரோம உலகில் தத்துவ ஞானிகள் தோன்றினார்கள். சாக்கரடீஸ், பிளாட்டோ, அரிஷ்டாடில் போன்றவர்கள் முக்கிய தத்துவ ஞானிகள்.

சினிசிசம், எப்பிகூரியனிசம், நாஸ்டிசிசம், செப்டிசிசம் போன்றவை முக்கிய தத்துவங்கள்.

இவை தவிர மர்ம மார்க்கங்கள், மறை சமயங்கள், ஆர்டிக் சமயம், மாபெரும் தாய் சமயம், மித்ரா சமயம், எகிப்து நாட்டு ஐசிஸ் தொழுகை போன்ற மார்க்கங்களும் புதிய ஏற்பாட்டு உலகில் தலைதூக்கி நின்றன.

மேற்கூறியவற்றை விரிவாக படிக்க இங்கு இடம் போதாது. எனவே, யூதரின் மார்க்க நிலை குறித்து சற்று விரிவாகப் பார்த்து தொடர்ந்து முன்னேறுவோம்...
யூத மாா்க்கம்
ஆபிரகாமின் வழிவந்தவர்கள்தான் யூதர்கள். இவர்களுடைய மதம் யூத மதம். ஒரே தெய்வ வணக்கத்தை வற்புறுத்திய மதம். “யெகோவா” தான் யூதரின் கடவுள். இந்த யூத மார்க்த்திலிருந்து பிறந்ததுதான் கிறிஸ்தவ மார்க்கம். 

ஒரே தெய்வத்தை வணங்க வேண்டிய யூதர்கள், பாலஸ்தீனத்தை சுற்றியிருந்த புறஜாதிகளின் பல தெய்வங்களை வணங்கி தேவ கோபத்திற்கு ஆளானார்கள்.

இதற்குத் தணடனையாக வடக்கு இராஜ்யம் கி.மு.722 ல் அசீரியாவிற்கும், தெற்கு இராஜ்யம் கி.மு.586 ல் பாபிலோனிற்கும் சிறைப்பட்டுப் போனார்கள்.

சிறையிருப்பின் காலத்தில் இவர்கள் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம் என தீர்மானம் பண்ணினார்கள். சிறையிருப்புக்குப் பின் யூதர் விக்கிரக ஆராதனை என்ற பாவத்தை மறுபடியும் செய்யவில்லை.

யூத மார்க்கத்தின் அடிப்படை இறையியல்
1. தேவனாகிய கர்த்தர் ஒருவரே (உபாகமம்: 6:4)

2. தேவன் பிதா என்னும் நிலையில் இஸ்ரவேலின் தகப்பன். எனவே, பிள்ளைகள் (உபாகமம்: 14:11) த‌ேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வ‌ேண்டும்.

3. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சுயாதீனத்தின்படி யூதர்கள் தேவ கட்டளைக‌ளுக்குக் கீழ்ப்படிந்தால் ஜீவனும், கீழ்ப்படியா விட்டால் மரணமும் கிடைக்கும்.

4. தேவன் கொடுத்த 10 கட்டளைகள் மற்றும் எல்லா ஒழுங்குகளையும் (பண்டிகை, விருத்தசேதனம்) ஆசரிக்க வ‌ேண்டும்.

5. உயிர்த்தெழுதலில் நம்பிக்கை உண்டு.

யூதர்கள் கீழ்க்காணும் காரியங்களை தேவனோடு தொடர்பு கொள்ளும் ஏதுக்களாகப் பயன்படுத்தினர்.

- நியாயப்பிரமாணம்

- ஆசரிப்புக் கூடாரம்

- பண்டிகைகள்

- பலிகள்

- ஆசாரியத்துவம்

தேவாலயம்
யூதர்களுக்கு மிகமிக முக்கியமான இந்த தேவாலயம் சாலமோன் காலத்தில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் இஸ்ரவேலின் 12 கோத்திரத்தை இணைக்கும் மையமாக எருசல‌ேமில் இருந்தது. 

கி.மு. 586 ல் இந்த தேவாலயம் நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்பட்டது. கி.மு.536 ல் சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்தவர்களால் திரும்பவும் கி.மு.516 ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கி.மு.168 ல் அந்தியோக்கஸ் எப்பிபனேஸ் என்பவன் இந்த தேவாலயத்தை தீட்டுப்படுத்தினான். மூன்று ஆண்டுகள் கழித்து யூதாஸ் மக்கபேயு இந்த ஆலயத்தை சுத்திகரித்தான்.

கி.மு.37 ல் தேவாலயத்தின் ஒரு பகுதி தீப்பிடித்தது. அதற்குப்பிறகு இந்த ஆலயத்தை புதுப்பிக்க 40 வருஷம் ஆனது. அதனால், இது மகா ஏரோது வின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கி.மு.19, 20 ல் பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் கட்டப்பட்டது.

இந்த பரிசுத்த ஸ்தலத்தில் சமூகத்தப்ப மேஜை, ஏழு அகல்கள் உள்ள குத்துவிளக்கு, தூபபீடம் ஆகியவை இருந்தன. மகா பரிசுத்தஸ்தலத்தில் ஒரு தொங்கு திரை இருந்தது. 

இந்த தேவாலயத்தில் பெண்கள் , புறஜாதியார், ஆசாரியர் ஆகியோருக்கு தனித்தனி இடங்கள் இருந்தன. இந்த தேவாலயம் கி.பி.70 ம் ஆண்டு தீத்து என்ற ரோம பேரரசனால் முற்றிலும் அழிக்கப்பட்டது.


ஜெப ஆலயம்
இந்த ஜெபாலயங்கள் யூதர்களின் பாபிலோனிய சிறையிருப்பின் காலத்தில் உருவாக்கப்பட்டது. சிறையிருப்பின் காலத்தில் யூதர்களுக்கு தேவாலயமோ, ஆராதிக்க தனி இடமோ இல்லை. ஆகவே, தாங்கள் கூடி ஆராதிக்க பல இடங்களில் ஜெப ஆலயங்களை ஆரம்பித்தனர். இந்த ஜெப ஆலயங்கள் சமூகக் கூடமாகவும், கல்வி கூடமாகவும், வழிபாட்டு இடமாகவும் இயங்கி வந்தது. இந்த ஜெப ஆலயங்களில் ரபிமார்கள் முக்கியமானவர்களாக கருதப்பட்டனர். (மாற்கு: 5:22).

ஒவ்வொரு ஜெப ஆலயத்திலும் நியாயப்பிரமாணத்தை பாதுகாக்க ஒரு இடம் இருந்தது. ஜெப ஆலயத்தின் ஆராதனையில் நியாயப்பிரமாணம் வாசிக்கப்பட்ட பிறகு ஒரு ஜெபம் ஏறெடுக்கப்படும். ஆதியாகமம் முதல் உபாகமம் வரையுள்ள ஆகமங்களை 154 பகுதிகளாக பிரித்திருந்தார்கள்.

ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட காலங்களில் வாசிப்பார்கள். இது தவிர தீர்க்கதரிசன புத்தகங்களையும் வாசித்தார்கள். (லூக்கா: 4:16). வாசிக்கப்பட்ட வேத பகுதிக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பிரசங்கம் பண்ணப்படும்.

இந்த ஜெப ஆலயத்தின் ஆராதனையைத் தான் ஆதி அப்போஸ்தலர் தங்கள் ஆராதனையில் பின்பற்றினர். இயேசுவும், அவருடைய சீஷரும், பவுலும் ஜெப ஆலயம் இருந்த இடங்களுக்கு சென்றனர் என வேதம் கூறுகிறது. (அப்போஸ்தலர்: 13:5, 15-43; 14:1; 17:1-3, 10:17; 18:4,8).

இயேசு எல்லா ஜெப ஆலயத்திலும் தேவனுடைய ராஜ்ஜியத்தை குறித்த பிரசங்கித்தார். (மத்தேயு: 4:23). கி.பி.70 ல் எருசலேம் அழிந்தபோது சிதறிப்போன யூதர்கள் புறஜாதி மக்கள் மத்தியில் ஜெப ஆலயங்களை கட்டினார்கள். (அப்போஸ்தலர்: 6:9; 13:14; 17:1).


யூதரின் பண்டிகைகள்
இஸ்ரவேலர் கொண்டாடும்படி தேவனால் கொடுக்கப்பட்ட பிரதான பண்டிகைகள் மூன்று. (உபாகமம்: 16:16; யாத்திராகமம்: 23:14-19). அவ‌ை:

1. பஸ்கா பண்டிகை - வருடத்தின் முதல் மாதத்தில் கொண்டாடப்பட்டது.

2. பெந்தெகொஸ்தே - பண்டிகை வருடத்தின் மூன்றாம் மாததத்தில் கொண்டாடப்பட்டது.

3. கூடாரப் பண்டிகை - வருடத்தின் ஏழாம் மாததத்தில் கொண்டாடப்பட்டது.

இவை மூன்றும் ஏழு பண்டிகைகளாகப் பிரித்து கொண்டாடப்பட்டன. அவை:

1. பஸ்கா பண்டிகை (லேவியராகமம்: 23:4,5)

2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை (ல‌ேவியராகமம்: 23:6-8)

3. முதல் கனிகளின் பண்டிகை (லேவியராகமம்: 23:9-14)

4. பெந்தெகொஸ்தே பண்டிகை (லேவியராகமம்: 23:15-22)

5. எக்காளப் பண்டிகை (லேவியராகமம்: 23:23-25)

6. பிராயச்சித்த நாள் பண்டிகை (லேவியராகமம்: 23:23-25)

7. கூடாரப் பண்டிகை (லேவியராகமம்: 23:33-34)


விளக்குப் பண்டிகையும், பூரிம் பண்டிகையும் மோசேயின் பிரமாணத்தில் கொடுக்கப்படாமல், சிறையிருப்பின் காலத்துக்குப் பின்பு தோன்றியவையாகும்.

இவற்றில் 3 பிரதான பண்டிகைப் பிரிவுகளில் உள்ள பண்டிகைகள் குறித்த குறிப்புக்களை சுவிசேஷங்களில் நாம் காண்கிறோம்.

யூதரின் கல்வி முறை
யூத மார்க்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யூத குழந்தைகளுக்கு நியாயப்பிரமாணத்தை எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஜெப ஆலயத்திலும், எருசலேம் தேவாலயத்திலும் வைத்து கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. யூதருடைய பாடப் புத்தகம் பழைய ஏற்பாடு. 16 வயதிற்குட்ப்பட்ட எல்லா பிள்ளைகளுக்கும் கட்டாயக் கல்வி கொடுக்கப்பட்டது. யூத மார்க்கத்தின் சடங்காச்சாரங்களும், பாரம்பரியங்களும் நியாயப்பிரமாணத்துக்கடுத்து படித்தறிய வேண்டியவைகள்.

கி.மு.75 க்குப் பின் பாலஸ்தீனத்தின் எல்லா பட்டணங்களிலும் பொதுவான பள்ளிகள் நிறுவப்பட்டன. நியாயப் பிரமாணம், யூத பாரம்பரியங்கள், மற்றும் சடங்காச்சாரங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டதோடு, தொழிற் கல்வியும் பிரதானமாய் கற்றுக் கொடுக்கப்பட்டது. (மாற்கு: 6:3; அப்போஸ்தலர்: 18:3). ஜெப ஆலயங்களில் பெண்களுக்கு கல்வி கொடுக்கப்படவில்லை.


சனகெரிப் சங்கம் (Sanhedrin)
“சுனட்ரியான்” என்ற கிரேக்க சொல் எபிரேய மொழியில் “சன்கட்ரீன்” என்று வழக்கில் வந்துள்ளது. அது தமிழில் “சனகெரிப்” என்று மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. “சனகெரிப்” என்றால் “சங்கம்” என்று பொருள்படும். எண்ணாகமம்: 11:16 ல் மோசேயினால் தெரிந்தெடுக்கப்பட்ட 70 தலைவர்களே இம் மன்றத்தின் துவக்கம் என்று தல்மூத் (Talmud) சொல்லியுள்ளது. (தல்மூத் என்பது யூதர்கள் பின்பற்றிய பாரம்பரிய புத்தகமாகும்).

யூதர்கள் அந்நியர்களால் ஆளப்பட்ட காலத்திலிருந்து தங்களது சமய, சுக காரியங்களை கவனிப்பதற்கு ஒரு மன்றம் தேவைப்பட்டதால் அத் தேவையை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே சனகெரிப் சங்கமாகும். இதை சனகெரிப் மன்றம் என்றும் அழைக்கலாம். வேதாகமத்தில் “ஆலோசனைச் சங்கம்” எனக் கூறப்பட்டுள்ளது. 

இது உயர்நீதி மன்றமாகவும், நிர்வாக மன்றமாகவும் செயலாற்றியது எனக் காண்கிறோம். 70 அங்கத்தினர்கள் கொண்ட இச் சங்கத்தில் ஆசாரியரும், சதுசேயரும், பரிசேயரும் உறுப்பினராயிருந்தார்கள். பிரதான ஆசாரியனே இம்மன்றத்தின் தலைவன்.

நியாயப்பிரமாண விதிகளை மீறிய வழக்குகள், திருமணம், விவாகரத்துகள், துர் உபதேசங்கள், வம்ச வரலாறு குறித்த விவாதங்கள், காலக் குறிப்புகள் முதலியவற்றைப் பற்றி எழுந்த சில சிக்கல்களை இம்மன்றம் தீர்த்து வைத்தது. 

பாலஸ்தீனத்திற்கு வெளியே குடியிருந்து ரோமப் பேரரசின் ஆளுகைக்குட்பட்ட சிதறிப்போன யூத மக்களின் வழக்கை நேரடியாக விசாரித்து தீர்ப்புக் கூற இம்மன்றத்திற்கு உரிமையில்லை.

சமய வழக்குகள் மட்டுமல்லாது சொத்துரிமை வழக்குகள், கடன் பற்றிய வழக்குகளையும் இம்மன்றம் விசாரித்துத் தீர்ப்பு செய்தது. குற்ற வழக்குகளையும் விசாரிக்க அதற்கு உரிமை உண்டு என்றும், ஆனால், கொலைத் தீர்ப்புக் கொடுக்கும் உரிமை கிடையாது என்று யோவான்: 18:31 ன் மூலம் அறிகிறோம். எனவேதான், நமது ஆண்டவர் இயேசுவை பிலாத்துவினிடத்தில் கொண்டு போனார்கள்.

யூத பிரிவுகள்

1. பரிசேயர்கள்:


புதிய ஏற்பாட்டு காலத்தில் மிகவும் செல்வாக்குள்ள எண்ணிக்கையில் அதிகமானவர்கள்தான் இந்த பரிசேயர்கள். இவா்களுடைய பெயர் “பிரிந்திருத்தல்” என்னும் மூலப் பொருளிலிருந்து வந்தது. இவர்கள் எல்லா தீமையான தொடர்புகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு, சொல்லப்பட்ட, எழுதப்பட்ட ஒவ்வொரு நியாயப்பிரமாணத்திற்கும் கீழ்ப்படிவதற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள்.

மக்கபேயர்களின் காலத்திற்குப் பின்பு இவர்கள் தனிக் குழுவாகத் தங்களைப் பிரித்துக் கொண்டு கி.மு. 135 ல் யூத மார்க்கத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தார்கள்.

அவர்களுடைய இறையியல் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. அவர்கள் தேவதூதர்கள் இருப்பதையும், ஆத்துமா அழிவில்லாதது என்பதையும், உயிர்த்தெழுதல் உண்டு என்பதையும் நம்பினார்கள். சடங்காச்சார ஜெபங்களையும், உபவாசத்தையும் கைக் கொண்டார்கள். ஓய்வு நாளை மிகவும் கண்டிப்பாக ஆசரித்தார்கள். எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினார்கள். அவர்களில் அநேகர் மாயக்காரர்களாக இருந்தாலும் அனைவரும் மாயக்காரர்கள் அல்ல. அனைவரும் சுயநீதி உடையவர்கள் அல்ல. உதாரணம்: நிக்கோதேமு.

2. சதுசேயா்கள்:

பாரம்பரியத்தின்படி சதுசேயர்கள் தங்களுடைய பெயரை , தாவீதின் நாட்களில் பிரதான ஆசாரியனாக இருந்த சாதோக் () என்பவரிடமிருந்து பெற்றனர். 

இவர்கள் நியாயப்பிரமாணத்தை மாத்திரம் வியாக்கியானப்படுத்தி, தீர்க்கதரிசனம் மற்றும் மற்ற புத்தகங்களை விட நியாயப்பிரமாணம‌ே அதிப அதிகாரம் உடையது என்று கூறினர். பரிசேயர்கள் ஆர்வமுடன் கற்ற, சொல்லிய பாரம்பரியங்களுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

தேவதூதர்கள் மற்றும் ஆவிகள் உண்டென்பதை மறுத்தனர். மேலும் ஆத்துமா அழிவில்லாதது என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. உயிர்த்தெழுதலையும் அவர்கள் நம்பவில்லை. 

அரசியல் ரீதியாக ஆளுகை செய்யும் நபர்களுடன் ஐக்கியம் வைத்துத் தங்களுடைய செல்வாக்கையும் மதிப்பையும் தொடர்ந்து நிலை நாட்டிக் கொண்டனர். பரிசேயர்களுக்கு எதிரானவர்கள்.


3. எசனேயர்கள்:

இவர்களை சந்நியாசி பிரிவினர் எனலாம். சமய நெறியைச் சரிவரக் கைக்கொள்ளும்படி சமுகத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தவர்கள். 

இவர்கள் “பிதகோரியா” என்ற வகுப்பாரிலிருந்து தோன்றினவர்கள். இல்லற வாழ்க்கையைத் துறந்து வாழ்ந்தவர்கள். அனைத்து சொத்துக்களையும் பொதுவாக வைத்து அனுபவித்தபடியால் அவர்களில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை. சுபாவத்தில் அமைதியானவர்கள். ஆணையிட மாட்டார்கள். ஓய்வு நாளை ஆசரித்தார்கள். இவர்களுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படியாதவர்கள‌ை சமுதாயத்தை விட்டு தள்ளி வைத்தனர்.


4. செலோத்த‌ேயர்கள்:

பரிசேயர்கள், எசனேயர்களைப் போன்று இவர்கள் யூத மதப் பிரிவைச் சார்ந்தவர்கள் அல்ல. இவர்கள் தேசப்பற்றுக் கொண்ட அரசியல்வாதிகள். ரோம ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெறுவதற்கு வன்முறையே வழி என நம்புவர்கள். அப்போஸ்தலர்: 21:38 ல் சொல்லப்பட்ட கொலை பாதகர் ஒருவேளை இவர்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். இயேசுவின் சீஷர்களில் ஒருவரான சீமோன் இந்த வகுப்பைச் சோ்ந்தவர். (லூக்கா: 6:15; அப்போஸ்தலர்: 1:13).

“தள்ளுபடி ஆகமங்கள்”
யூதர்களுடைய இலக்கியங்களுள் பிரதானமானது பழைய ஏற்பாடு. அதிலும், நியாயப்பிரமாணம் (“தோரா” என்ற மோசேயின் 5 புத்தகங்கள்) தேவனுடைய சத்தம் என்று கருதப்பட்டதால், எந்த யூதனும் அதை மாற்றக் கூடாது. பழைய , புதிய ஏற்பாடுகளுக்கிடையே உள்ள காலத்தில் “தள்ளுபடி ஆகமங்கள்” என அறியப்படும் யூதரின் இலக்கியங்கள் தோன்றின.

ஆதிகாலம் தொட்டே, இன்று நம் கையிலுள்ள பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களும் அங்கீகரிக்கப்பட்ட வேத எழுத்துக்களாய் கொள்ளப்பட்டன. ஆனால், எபிரேய வேதாகமம் (பழைய ஏற்பாடு) கிரேக்க பாஷையில் மொழிபெயர்க்கப்பட்டு "LXX" அல்லது “செப்துவஜிந்து” என்னும் வேதாகமமாய் வெளி வந்தபோது, அதில் பல புதிய நூல்களும் சோ்க்கப்பட்டு, அந்த வேதாகமம் பெரிதாகிக் கொண்டே வந்தது.

இந்த செப்துவஜிந்தில் காணப்பட்ட அனைத்து நூல்களையும், சபைப்பிதாக்களில் ஒருவராகிய ஜெரோம் என்பவர் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு “வல்கேட்” (Vulgate) என அழைக்கப்படுகிறது.

கி.பி.405 ல் மொழி பெயர்க்கப்பட்ட இந்த “வல்கேட்” மொழிபெயர்பபைத்தான் கத்தோலிக்க சபையார் இன்று பயன்படுத்துகிறார்கள். கத்தோலிக்கரது தமிழ் வேதாகமம் லத்தீன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். இதை புராட்டஸ்டாண்டு சபையினர் வேதமாக ஏற்றுக் கொள்ளாமல், தள்ளி விட்டபடியால் அவை “தள்ளுபடி ஆகமங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

இப்படி தள்ளி விடப்பட்ட நூல்களிலிருந்துதான் இன்று கத்தோலிக்க சபையினர் நமது வேதாகம உபதேசங்களுக்கு முரணாக பின்பற்றி வரும் பல மார்க்கப் பழக்கவழக்கங்களும், சடங்காச்சாரங்களும், ஆராதனை முறைமைகளும் வந்தன. மரித்தோருக்காக ஜெபித்தல், பரிசுத்தவான்களை மத்தியஸ்தராக கொண்டு இயேசுவிடம் செல்லுதல், கிரியைகள் மூலம் இரட்சிப்பு போன்ற பல துர் உபதேசங்கள் இந்நூல்களின் வழியாகவே வந்தன.

இவை, எபிரேய வேதாகமத்தைப் பயன்படுத்திய யூதர்களால் அறவே அங்கீகரிக்கப்படாத நூல்களாகும். என்றாலும், கிரேக்க வேதாகமத்தை பயன்படுத்திய யூதர் அவற்றை வேதமாக அங்கீகரித்தனர். ஆதி கிறிஸ்தவர்களும் இவற்றில் சில நூல்களின் சில காரியங்களைப் பின்னணி இலக்கியங்களாக அங்கீகரித்தனர். ஆனால், சபையில் புராட்டஸ்டாண்டு இயக்கம் தோன்றிய பின்பே இவை முற்றிலும் தள்ளிவிடப்பட்டன.



“சூடோகிரிப்பா”
மேற்கண்ட தள்ளுபடி ஆகமங்கள் தவிர, புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட முதல் 100 ஆண்டுகளிலும், அதற்கு அடுத்த நூற்றாண்டிலும் “சூடோகிரிப்பா” (பொய்யான எழுத்துக்கள்) "Pseudepgrapha" என்னும் இலக்கிய தொகுப்புக்கள் தள்ளுபடி ஆகமங்களுக்கு இணையாக எழுந்தன. இவற்றை யூதரும், கிறிஸ்தவர்களும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தள்ளுபடி ஆகமங்களும், பொய்யான எழுத்துக்கள் என்று அழைக்கப்படும் ஆகமங்களும் யூத, கிறிஸ்தவ திருநூல் சட்டத்தின்படி வேத எழுத்துக்களாய் அங்கீகரிக்கப்படாவிடினும் அவற்றில் காணப்படும் பாரம்பரியக் கதைகள் பல சுவாரசியமானவைகள் என்பது அவற்றைப் படித்தால் விளங்கும்.

பல்வெறு பின்னணியங்களையும், பாரம்பரியங்களையும் சுவாரசியக் கதைகளாகவும், அறிவு புகட்டும் எழுத்துக்களாகவும் மேற்படி ஆகமங்கள் தந்தாலும், தகுந்த காரணங்களைக் கொண்டே புராட்டஸ்டாண்டு திருச்சபை இவற்றை புறக்கணித்தன அல்லது தள்ளி விட்டன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

நமது விசுவாசத்திற்கும், நம்பிக்கைக்கும், இரட்சிப்புக்கும், கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் மேற்கண்ட இவ்விரு நூல்களும் அத்தியாவசியமானவையல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.


புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள்


பொதுவான முன்னுரை
இயேசு கிறிஸ்துவின் மூலம் மனுமக்களுடன் தேவாதி தேவன் ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையின் விபரங்கள் இப்புத்தகங்களில் அடங்கியுள்ளன என்று கூறலாம்.

தேவன் பரிசுத்த ஆவியினால் அருளிய வெளிப்பாடு புதிய உடன்படிக்கையாக இய‌ேசு கிறிஸ்துவின் வார்த்தகைளாலும் அவரைப் பற்றிய அப்போஸ்தலரின் வார்த்தைகள் மூலமாயும், நமக்குக் கிடைத்துள்ளது. 

- இவை மொத்தம் 27 புத்தகங்கள்

- 8 ஆசிரியர்களால் எழுதப்பட்டவை

- கி.பி.45 க்கும் கி.பி.100 க்கும் இடைப்பட்ட 50 ஆண்டு காலங்களில் எழுதப்பட்டவை

- இதன் சரித்திரம் கி.பி. முதலாம் நூற்றாண்டு முழுமையையும் உள்ளடக்குகிறது. பின்னணியமும், கலாச்சாரமும் கி.மு.500 ஆண்டுகள் வரை எட்டிப் பார்க்கின்றன.

புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களையும்...

1. புத்தகங்கள்

2. ஆசிரியர்கள்

3. எழுதப்பட்ட காலம் - என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. புத்தகங்கள்
அ) சரித்திரம்:

மத்த‌ேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர் நடபடிகள் ஆகிய முதல் நான்கு புத்தகங்களும் இயேசுவின் வா‌ழ்க்கையை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகின்றன.

அப்போஸ்தலரின் நடபடிகள் இயேசுவின் பின்னடியார்கள் அவர் விட்டுச் சென்ற ஊழியத்தை எங்ஙனம் நிறைவேற்றினர் என்பதை விளக்குகிறது. பேதுருவின் தலைமைத்துவ ஊழியமும், பவுலின் தலைமைத்துவ ஊழியமும் விளக்கப்பட்டுள்ளன. சபைச் சரித்திரத்தின் ஆரம்பப் புத்தகம் இதுவே.

ஆ) உபதேசம்:

1 கொரிந்தியர், 2கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலேசெயர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், எபிரேயர், யாக்கோபு, 1பேதுரு, 2பேதுரு, யூதா, 1யோவான் ஆகிய நிருபங்கள் கடித வடிவில் எழுதப்பட்டுள்ளன. அவை “நிருபங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இவை. இவை எழுதப்பட்ட குறிப்பிட்ட காலங்களில் சபையில் காணப்பட்ட உபதேச விகற்ப்பங்களை சரிசெய்யவும், ஆவிக்குரிய வளர்ச்சி, மற்றும் நடைமுறை பிரச்சினைகளுக்கு ஆலோசனை தரவும் இந் நிருபங்கள் எழுதப்பட்டன. கிறிஸ்தவ விசுவாசம், நடத்தை, அறநெறி ஆகியவை இவற்றில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இ) தனிப்பட்ட கடிதங்கள்:

1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து, பிலமோன், 1யோவான், 2யோவான், 3யோவான் ஆகிய புத்தகங்கள் இவ்வகையில் அடங்கும். இவை தனிப்பட்ட மனிதர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களாகும். தனிப்பட்ட மனிதருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் எப்படி அனைவரும் வாசிக்கும் நிலையில் பிரசுரமாயிற்று என்ற கேள்வி எழலாம். இந்த நிருபங்கள் தனிப்பட்ட நபர்களுக்கு எழுதப்பட்டாலும், அவர்கள் சபைப் போதகர்களாயும், மூப்பராயும் இருந்தமையால், அந்நிலையிலுள்ள அனைவருக்கும் இக்கடிதங்கள் பயன் கொடுக்கும் வகையில் இங்கு சோ்க்கப்ட்டுள்ளன எனலாம்.

ஈ) தீர்க்கதரிசனம்:

“வெளிப்படுத்தின விசேஷம்” தீர்க்கதரிசனப் புத்தகமாக புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளது.

2. ஆசிரியர்கள்:

எபிரெயருக்கு எழுதின நிருபத்தையும் பவுல்தான் எழுதினார் என்னும் அனுமானத்தில்தான் புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் 8 பேரென குறிப்பிட்டுள்ளோம். இவர்களுள் லூக்காவைத் தவிர மற்ற அனைவரும் யூதர்.

- மத்தேயு, பேதுரு, யோவான் ஆகியோர் அப்போஸ்தலர்கள்; இயேசுவோடு இருந்தவர்கள்.

- மாற்கு, யூதா, யாக்கோபு ஆகியோர் ஆதி சபையில் முக்கியமானவர்கள். இவர்கள் இய‌ேசுவின் நாட்களிலேயே அப்போஸ்தலரோடு நெருங்கிய தொடர்பு உடையவர்களாய் இருந்திருக்க வேண்டும்.

- லூக்காவும், பவுலும் நமதாண்டவர் இயேசுவை நேரில் தரிசிக்காவிடினும், அவருடன் இருந்தவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.

3. எழுதப்பட்ட காலம்:

புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள் அனைத்தும் கி.பி. முதல் நூற்றாண்டில் எழுதி முடிக்கப்பட்டு விட்டன. இந்த 100 ஆண்டு காலத்தையும் மூன்று பிரிவுகளாக பகுத்து ஒவ்வொரு புத்தகமும் எழுதப்பட்ட காலத்தை கணிப்பது அப்புத்தகங்களை விளங்கிக் கொள்ள உதவும்.

1. கி.மு. 6 - கி.பி.29 வரை

2. கி.பி.29 - கி.பி.60 வரை

3. கி.பி. 60 - கி.பி.100 வரை

1. கி.மு. 6 முதல் கி.பி.29 வரை:

இக்காலம் நமதாண்டவர் இயேசு இப்பூவுலகில் சஞ்சரித்த காலமாகும். சுவிசேஷங்களில் நான்கும் பெரும்பாலும் இந்த குறிப்பிட்ட காலத்துக்குட்பட்ட சரித்திரத்தையே எடுத்துரைக்கின்றன.

2. கி.பி.29 முதல் கி.பி.60 வரை:

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டு, சபை பிறந்தது. ஊழியம் வளர ஆரம்பித்தது. உலகெங்கும் பரவவும் ஆரம்பித்தது. பல இடங்களில், யூதர் மற்றும் புறஜாதியர் எல்லைகளில் சபைகள் நிறுவப்பட்டன. நற்செய்தி எருசலேம் எல்லை துவங்கி ரோம் பட்டணம் வரை பரவிச் சென்றது. அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம், இக்காலத்தில் புறஜாதியார் மத்தியில் பவுல் செய்த ஊழிய விபரங்களை நமக்குத் தருகிறது. தனது பெரும்பாலான நிருபங்களை இந்த நற்செய்தி பரப்பும் பயண நாட்களில்தான் பவுல் எழுதினார். புறஜாதியர் மத்தியில் சபைகளின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி இந்நிருபங்களின் வாயிலாக நாம் அறிகிறோம்.

3. கிபி.60 முதல் கி.பி.100 வரை:

இக்கால சபை சரித்திரக் குறிப்புகள் அதிகமாக நமக்கு கிடைக்கவில்லை. இந்த மூன்றாம் கால பகுதியில் ஆரம்பத்தில் பவுலின் நிருபங்களும், பேதுருவின் நிருபங்களும் எழுதப்பட்டன. இதற்கு முந்திய காலகட்டங்களில் எழுதப்பட்ட மத்தேயு, மாற்கு, லூக்கா. யோவான் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் இக்காலத்தில் பிரசுரிக்கப்பட்டன. இவற்றில் மாற்கு எல்லாவற்றிற்கும் முந்தையது எனினும், இக்குறிப்பிட்ட காலத்தில் தான் பரவலாக பிரசுரிக்கப்பட்டது.

மேற்கண்ட புத்தகங்களின் மூலம் சில சரித்திரக் குறிப்புகள் சபையைக் குறித்து நமக்குக் கிடைக்கின்றன. இப்புத்தகங்கள் மூலம், சபையானது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தாபனமாய் இக்காலத்தில் மாறிவிட்டிருந்தது என்பதை நாம் அறிகிறோம். சபையில் எழுந்த தவறான உபதேச கோட்பாடுகள் குறித்தும் இந்நூல்களே நமக்குக் தெரிவிக்கின்றன. சபைக்கு வந்துவிட்ட உபத்திரவம் பற்றியும் இப்புத்தகங்களின் வாயிலாக நாம் அறிகிறோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.