எதை தொலைத்து விட்டோம்?
தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். - (மத்தேயு 7:8).
காணாமற்போன ஒரு வெள்ளிக்காசை ஒரு ஸ்திரீ தேடி கண்டுபிடிப்பதை பற்றின உவமை வழிதப்பிப்போன ஆத்துமா மீண்டும் கிறிஸ்துவண்டை வருவதை குறித்து இயேசுகிறிஸ்து விளக்குவதை நாம் வாசித்திருக்கிறோம். அதே உவமையை நாம் சற்று வேறு கோணத்தில் சிந்திப்போமா?
ஒரு ஸ்திரீயிடம் 10 வெள்ளிக்காசுகள் இருந்தன. அதில் ஒரு வெள்ளிக்காசு தொலைந்து போயிற்று. அது எங்கே விழுந்ததென்று தெரியவில்லை. முன்பு 10 வெள்ளிகாசுகளும் பூரணமாயிருந்தன. இப்போதோ அவள் அதை தேடாமல் இருப்பாளோ? இல்லவே இல்லை. முதல் வேலையாக விளக்கை கொளுத்தி, வீட்டை முழுவதும் பெருக்கி அதை கண்டுபிடித்து விடுகிறாள். இதினிமித்தம் அவள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் பலவித ஆசீர்வாதங்களை தந்திருக்கிறார். ஆவிக்குரிய உலகத்திற்குரிய ஆசீர்வாதங்கள் இதில் அடங்கும். நாம் இரட்சிக்கப்பட்ட நாட்களிலோ, ஊழியம் செய்ய ஆரம்பித்த நாட்களிலோ நாமம்; தேவன் மேல் கொண்டிருந்த அன்பும், வைராக்கியமும் அதிகம். அதினிமித்தம் நாம் தேவனுக்காக செய்த காரியங்களும் அதிகமாயிருக்கலாம். நம்மில் காணப்பட்ட ஆவிக்குரிய குணநலன்களும் பூரணமாய் இருந்தது. ஆனால் காலப்போக்கில் மாறிய உங்கள் வாழ்க்கையில் ஏதோ முக்கியமான சிலவற்றை நீங்கள் தொலைத்து விட்டீர்கள். அது தேவனோடுள்ள ஐக்கியமாயிருக்கலாம். ஜெபம் வேதவாசிப்பு, அன்று ஏழைகளிடம் மீது கொண்ட கரிசனை, பிறருக்கு செய்யும் உதவி இப்படி ஏதோ ஒன்றை தொலைத்து விட்டீர்கள். அப்போது செய்ய வேண்டியதென்ன? முதலாவது அதை மீண்டும் பெற்று கொள்ள வேண்டுமென்று வாஞ்சிக்க வேண்டும்.
தொலைந்து போன வெள்ளிக்காசை கண்டுபிடிக்க அந்த ஸ்திரீ செய்ததென்ன? விளக்கை கொளுத்தி, வீட்டை சுத்தமாக பெருக்கி, வந்த குப்பையில் அதை தேடி ஆராய்ந்தாள். ஆம், நாமும் நம்முள் தொலைந்து போன ஆவிக்குரிய குணநலன்களை வேதத்தின் வெளிச்சத்திலே தேட வேண்டும். நமது தவறுகளையும் குறைவுகளையும் வேதத்தின் வெளிச்சத்தில் தான் இனம் காண முடியும். அந்த வெளிச்சத்தில் உங்களை ஆராய்ந்து சுத்திகரித்து கொள்ள வேண்டும். வேதத்தின் வெளிச்சத்தில் எந்த குப்பையும் மறைந்து கொள்ள முடியாது. அந்த வேண்டாத குப்பைகளை உங்கள் வாழ்விலிருந்து அகற்றுங்கள். நீங்கள் தொலைத்த ஆவிக்குரிய நற்குணத்தையும் பெற்று கொள்வீர்கள்.
பிரியமானவர்களே, சற்று சிந்தித்து பாருங்கள். உங்கள் சமீபத்திய செழிப்பான வாழ்வினால் தேவனோடுள்ள ஐக்கியத்தை தொலைத்து விட்டீர்களோ? தொடர் வெற்றியும், பிரமோஷனும் உங்கள் ஜெப நேரத்தை தொலைத்துவிட செய்து விட்டதோ, ஊழியத்தில் பிஸியினாலும் அதிக வேலை பளுவினாலும், வேதம் வாசிக்கும் நேரத்தை தொலைத்து விட்டீர்களோ? சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயர்ந்ததாலோ பெயர் புகழினாலோ, ஏழைகளோடுள்ள ஐக்கியத்தையும், அவர்களை விசாரிப்பதையும் தொலைத்து விட்டீர்களோ? தொலைந்த எது என்று தொலைத்த உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இன்றே தேடுங்கள். கண்டுபிடித்து கொள்வீர்கள். உங்களோடு தேவனும் உங்கள் ஐக்கியத்திலுள்ளவர்களும் சந்தோஷப்படுவது உறுதி. ஆமென் அல்லேலூயா!
உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்
உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும், தூயோனே உமக்கே
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஆதியிலே நாங்கள் உம்மீது கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டோம் தகப்பனே. வேதவாசிப்பிலும், ஜெபிப்பதிலும் நாங்கள் கொண்டிருந்த நாட்டத்தை உலக காரியங்களினால் குறைத்து விட்டோம் தகப்பனே. எங்களை மன்னிப்பீராக. வேதத்தின் வெளிச்சத்தில் எங்கள் குற்றங்களை நாங்கள் உணர்ந்து எங்களை திருத்தி கொள்ள எங்களுக்கு உதவி செய்வீராக. உம்மை வருத்தும் வழியில் நடந்தால் எங்களை திருத்த வேண்டும் ஐயா, வசனத்தினால் எங்களை உணர்த்தி, மீண்டும் உம்முடைய வழிகளில் நடக்க உதவி செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.