சக்கேயு (உயரமானான்)

சக்கேயு (உயரமானான்)

இயேசுவும் சீடர்களும் எரிகோ எனும் நகருக்குள் நுழைந்து அந்நகரின் தெரு ஒன்றின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அவர் செல்லும் வழிகளிலும் இரண்டு புறமும் மக்கள் பெரும்கூட்டமாக நின்று அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஊரில் சக்கேயு என்னும் மனிதர் இருந்தார். அவர் வரி வசூலிப்பவர்களின் தலைவர். மிகப்பெரிய செல்வந்தர். வரி வசூலிக்கும் ஆயக்காரர்களை மக்கள் பாவிகளின் கூட்டம் என்று சொல்லி ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

அளவுக்கு அதிகமான வரியை வசூலித்தும், நேர்மைக்குப் புறம்பாகப் பணம் சம்பாதித்தும் தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.

சக்கேயுவுக்கு இயேசுவைக் காணவேண்டும் என்னும் ஆர்வம் மிகுந்தது. அவர் இயேசுவைப்பற்றி பலமுறை கேள்விப்பட்டிருக்கிறார். அவர் செய்திருக்கின்ற அதிசயச் செயல்களையும், பாவிகளையும், தன்னைப் போன்ற வரி வசூலிப்பவர்களையும் வெறுக்காத இயேசுவின் குணத்தையும் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தார்.

இயேசுவின் முக்கியச் சீடர்களில் ஒருவரான மத்தேயு ஒரு வரி வசூலிப்பாளராக இருந்தவர் என்பதையும் சக்கேயு அறிந்திருந்தார்.

சக்கேயு ஒரு குள்ளன். அதனால் அவரால் இயேசுவைக் காண முடியவில்லை. எனவே அவர் முன்னே ஓடி ஒரு அத்திமரத்தில் ஏறினார். தனது பணக்காரத் தனத்தையெல்லாம் மாற்றி வைத்து விட்டு மரத்தின் கிளையில் தொங்கி ஏறினார்.

மரத்தின் உயரமான ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு அவர் தெருவை கவனித்துக் கொண்டே இருந்தார்.

இயேசு அந்தத் தெருவழியே வந்தார். இயேசு தூரத்திலிருந்து வருவதைக் கண்ட சக்கேயு மிகவும் மன மகிழ்ச்சியடைந்தார்.

அந்த மரத்தின் அருகே வந்ததும் இயேசு நின்றார்.  சக்கேயு தன்னைக் காண்பதற்காக மரத்தில் ஏறி நிற்கிறான் என்பதை இயேசு உள்ளத்தில் அறிந்தார். அவர் அத்திமரத்தின் அருகே வந்து சக்கேயுவை ஏறிட்டுப் பார்த்தார்.

‘சக்கேயுவே கீழே இறங்கி வா… இன்று நான் உன் வீட்டில் உணவருந்தவேண்டும்’ இயேசு சக்கேயுவின் பெயர் சொல்லி அழைக்க, சக்கேயு ஆச்சரியமடைந்தார். உடனே மரத்திலிருந்து கீழே குதித்தார்.

‘என்ன இவர் இந்தப் பாவியின் வீட்டில் உணவருந்தப் போகிறாரா ?’

‘இவன் ஊரறிந்த ஏமாற்றுக்காரனாயிற்றே.. அது இயேசுவுக்குத் தெரியாதா ?’

‘இவன் வீட்டிலெல்லாம் சென்றால் இவரை இறைவாக்கினர் என்று யாராவது மதிப்பார்களா ?’

மக்கள் கூட்டத்தினர் முணுமுணுத்தார்கள்.

இயேசு கூட்டத்தினரின் பேச்சுக்களுக்குச் செவிகொடுக்காமல் சக்கேயுவின் வீட்டுக்குச் சென்றார். சக்கேயு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

இயேசுவைக் காண முடியுமா என்னும் ஆவலில் இருந்தவருடைய வீட்டுக்கு இயேசுவே வந்திருக்கிறார்.

இயேசுவை அவர் நன்றாக உபசரித்தார். உணவருந்தி முடித்ததும் சக்கேயு அவருக்கு முன்பாகப் பணிந்து,

‘இயேசுவே என்னுடைய சொத்தில் பாதியை நான் இப்போதே ஏழைகளுக்கு வழங்குகிறேன், யாரையாவது ஏமாற்றி எதையாவது பறித்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிச் செலுத்துகிறேன்’ என்றார். குள்ளமான மனிதர் சட்டென இதயத்தால் உயரமானார்.

‘இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று !’ இயேசு சொன்னார். சக்கேயு சிலிர்த்தார்.

இயேசு கூட்டத்தினரைப் பார்த்து,

‘இழந்தவற்றைத் தேடி மீட்கவே மானிடமகன் பூமிக்கு வந்திருக்கிறார். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்போது நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் தான் உங்களுக்கும் அளக்கப்படும். இவரும் ஆபிரகாமின் மகனே !’ என்றார்

சக்கேயுவின் வாழ்க்கை சில முக்கியமான பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது.

இயேசுவைக் காணவேண்டும் எனும் ஆர்வம் அவனுக்குள் இருந்தது.

“குள்ளன்” எனும் தனது குறையைக் காரணம் காட்டி அவன் இயேசுவைச் சந்திப்பதை தவிர்க்கவில்லை.

வேறு நபர்கள் மூலமாக இயேசுவை அறிவதை விட நேரடியாய் சந்திப்பதே மேல் என நினைத்தான்.

இயேசுவைச் சந்தித்ததும் அவரை வீட்டில் ஏற்றுக் கொண்டான். மாற்றத்தை மனதில் ஏற்றுக் கொண்டான்.

மாற்றம் என்பது செயலிலும் வெளிப்படவேண்டும் என்பதைப் புரிந்து செயல்பட்டான்.

மீட்பு என்பது பாவத்தின் அடர்த்தியைப் பொறுத்தல்ல, மன்னிப்பு கேட்கும் மனிதரைப் பொறுத்ததே என்பதைப் புரியவைத்தான்.

இயேசு வாழ்க்கையில் வந்தபின் செல்வங்களெல்லாம் அவனுக்கு முக்கியமற்றதாகிவிட்டன.

சக்கேயு பெரிய செல்வந்தனாய் இருந்தார். செல்வர்கள் எப்படி விண்ணகம் செல்லலாம் என்பதை வாழ்க்கையில் விளக்கினார்.

இயேசு அந்த வழியாகச் சென்ற கடைசிப் பயணம் அது. கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே இயேசுவை பற்றிக் கொள்ளவேண்டும் என்பதை புரியவைத்தார்.

இயேசு நம்மைத் தேடி வந்து பெயர் சொல்லி அழைக்கிறார், அழைப்புக்கு செவிகொடுப்பதே நமது வேலை என்பதை கற்றுத் தருகிறார்.

இந்த பாடங்களையெல்லாம் சக்கேயுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.