தேவனுடைய பார்வை, மனுஷ பார்வை

தேவனுடைய பார்வை, மனுஷ பார்வை

எந்த ஒரு விஷயத்தையும் கர்த்தர் பார்க்கும் விதமும், மனிதர்கள் நாம் பார்க்கும் விதமும் வித்தியாசப்படும். உதாரணத்திற்கு 2 காசுகள் காணிக்கையாக கொடுத்த விதவை அதிகமாகக் கொடுத்தாள் என்று இயேசு சொன்னது நமக்கு ஆச்சரியத்தைத் தரலாம், ஆனால் இதுதான் தேவனின் பார்வை. இந்த பார்வை நமக்கும் வேண்டும் என கர்த்தர் எதிர்பார்க்கிறார். அப்போதுதான் அவர் எதை மேன்மையாக எண்ணுகிறாரோ அதையே நாமும் மேன்மையாக எண்ணமுடியும்.

சிமிர்னா சபைக்கு ஆண்டவர் எழுதும்போது,

வெளி 2:9
“நீ ஐஸ்வர்யவானாயிருந்தும் உனக்கிருக்கும் தரித்திரத்தை அறிந்திருக்கிறேன்” என்றார்.

இதன் அர்த்தம் என்ன? ஒரே நேரத்தில் இவர்கள் எப்படி ஐஸ்வர்யவானாகவும், தரித்திரராகவும் இருக்கமுடியும், ஆம் பிரியமானவர்களே, தேவன் மட்டுமே இப்படி பார்க்கமுடியும்.

சிமிர்னா சபை விசுவாசிகள் பொருளாதாரரீதியாக மிகவும் கொடிய தரித்திரத்தில் இருந்தனர், ஆனால் அதே சமயம் அவர்களின் ஆவிக்குரிய வாழ்கை அவ்வளவு ஐஸ்வர்யம் நிறைந்ததாய் இருந்தது. ஆவிக்குரிய வாழ்க்கையில் தரித்திரமாக வாழும் ஒருவர் உலகவாழ்க்கையில் ஐஸ்வர்யவானாக இருந்தாலும் அதனால் பிரயோஜனமென்ன?

இன்றைக்கு கர்த்தர் எந்த ஐஸ்வர்யத்தை விரும்புகிறார்? இயேசு சொன்னார் உங்கள் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்துவையுங்கள் என்று, அதை இந்த சிமிர்னா சபையினர் அப்படியே நிறைவேற்றினர், தேவனுடைய பார்வையில் அவர்கள் ஐஸ்வர்யமுள்ளவர்கள்.

இன்றைக்கு இதை வாசிக்கும் நீங்கள் யாருடைய பார்வையில் ஐஸ்வர்யவானாக திகழவிரும்புகிறீர்கள்? மனுஷன் இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

உங்கள் ஜெபத்தில் இந்த கேள்விகளை மட்டும் கேளுங்கள்,

1) ஆண்டவரே நான் உங்களுடைய பார்வையில் ஐஸ்வரயவானா, தரித்திரனா?
2) ஆண்டவரே நான் எந்த ஐஸ்வர்யத்திற்காக இதுவரை உழைத்துக்கொண்டிருக்கிறேன்?
3) ஆண்டவரே இதுவரைக்கும் நான் எந்த ஐஸ்வர்யத்தை உங்களிடம் அதிகமாக கேட்டுள்ளேன்?
4) ஆண்டவரே என்னுடைய வாழ்க்கையில் இப்போதுள்ள பொருளாதார ஐஸ்வர்யம், ஆவிக்குரிய ஐஸ்வர்யம் இவை இரண்டில் எதன் அளவு அதிகமாக உள்ளது?
5) என் வாழ்க்கையில் குறிக்கிடும் இந்த இரண்டு ஐஸ்வர்யவானில் யாருக்கு அதிக முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கிறேன்?

இந்த கேள்விகளுக்கு தேவன் தான் பதில் தரவேண்டும் என்பதில்லை, உங்களிடமே பதில் இருக்கிறது நிதானித்துப்பாருங்கள்.

தேவனுடைய பார்வையில் நீங்கள் யார்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.