“நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.” – சங்.68:13
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டும் என்பதுபோல நம் தேவாதிதேவன் ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாளைப் படைத்தார். தேவனால் உருவாக்கப்பட்ட பெண்ணினம் பெரும் பாக்கியசாலிகள், விலைமதிக்கமுடியாத முத்துக்கள். குடும்பத்தில் கிரீடமாய் ஜொலிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
அமெரிக்காவில் எலிசபெத் மார்க்வெல் என்ற பெண் தன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஒரு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தாள். பெண்களுக்கும் ஆண் டாக்டர்களே சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் கூச்சப்பட்ட ஒரு பெண், “எலிசபெத், உன்னைப் போன்ற ஒரு பெண் மருத்துவராய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றாள். தான் எப்படியாவது மருத்துவராகி பெண்களுக்கு பணியாற்ற வேண்டுமென்று அன்றே தன் மனதில் தீர்மானித்தாள் எலிசபெத்.
மருத்துவப் படிப்புக்காக அநேக மருத்துவ கல்லூரிகளில் ஏறி இறங்கினார். இடம் தர மறுத்த நிலையில் ஜெனிவாவிலுள்ள கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆண்கள் பலர் மத்தியில் ஒற்றைப் பெண்ணாய் கேலி கிண்டல்களுக்கிடையில் பயின்றார். 1849ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி வெற்றிகரமாக தன் மருத்துவப்படிப்பை முடித்து உலகின் முதல் அலோபதி டாக்டர் ஆனார். பெண் என்ற காரணத்தால் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி பெற மறுக்கப்பட்ட நிலையில் முயற்சியுடன் அறுவைசிகிச்சை பயில பிரான்ஸ் சென்றார். மருத்துவர் கருத்தரங்கில், “நீ ஏன் டாக்டராக வேண்டும்? நர்சாக பணிபுரி” என புறக்கணிக்கப்பட்டார். மனம் தளராமல் செயிண்ட் பார்தோலோமங்க்ஸ் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி டாக்டர் ஆனார். இங்கிலாந்தில் 1857ல் பெண்கள் மருத்துவமனை, 1876ல் பெண்கள் மருத்துவக்கல்லூரியையும் ஆரம்பித்தார். 1865ம் ஆண்டு இங்கிலாந்து அரசு முதல் பெண்டாக்டர் என்ற அங்கீகாரத்தை இவருக்கு அளித்து கெளரவித்தது.
எனக்கன்பான சகோதரிகளே! பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அன்று இயேசுவின் கல்லறைக்குச் செல்ல சீஷர்களே தயங்கி, பயந்து நின்ற நேரத்தில் அந்த அதிகாலை இருட்டிலே பெண்கள் அங்கு சென்று ஆண்டவரை முதலில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றனர். வேதத்திலே நற்கிரியை செய்தாள் என புகழப்பட்டது மரியாள் என்ற பெண்ணே! நீங்களும் ஆண்டவருக்காக எதையாவது செய்ய விரும்பியும் தடைவருகிறதே என சோர்ந்து போய் அங்கீகாரமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறீர்களோ? தேவனின் பார்வையில் விலையேறப் பெற்றவர்களான நீங்கள் நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதீர்கள். நீங்கள் இருக்கும் இடத்திலே தேவனுக்கு மகிமையாய் வாழமுடியும். ஆம், சிறுமையானவர்களுக்கு கையைத் திறவுங்கள். ஏழைகளுக்கு கரத்தை நீட்டுங்கள். தயையுள்ள போதகத்தினால் பிறரை ஆதாயப்படுத்துங்கள். உங்களது தன்னலமற்ற தியாகச் செயல்களும் தேவராஜ்யத்தின் கட்டுமானப்பணியின் முக்கிய செங்கல்கள் என்பதை அறிந்து உற்சாகமாய் செயல்படுங்கள். தேவன் நிச்சயம் ஆசீர்வதித்து உயர்த்துவார்.