வேதாகமம் ஓர் விளக்கவுரை 3

8. ஒரு பழைய ஏற்பாட்டு ஒப்புமைக்கு புதிய ஏற்பாட்டில் புதிய பொருள் அளிக்கப்பட்டிருக்கிறதா?

மனுக்குலத்தைக் குறித்த தேவனுடைய திட்டங்கள் வெளிப்பட்டவுடன், அவா் தம்முடைய மக்களோடு இடைபடும் முறையில் மாற்றம் ஏற்பட்டது. தேவகுமாரனுடைய வருகைக்காக இஸ்ரவேல் மக்கள் ஆயத்தப்பட வேண்டுமென்பதற்காக பல சட்டங்களடங்கிய மோசேயின் நியாயப்பிரமாணம் அவா்களுக்கு அளிக்கப்பட்டது. கலாத்தியா்: 3:24,25 வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன:


“இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. விசுவாசம் வந்த பின்பு உபாத்திக்கு கீழானவா்களல்லவே”.(ரோமா்: 7:6 வசனத்தை பாா்க்வும்).

சாித்திரத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த இஸ்ரேல் மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேகமான சட்டங்களை, இன்றைக்கும் கிறிஸ்தவா்கள் பின்பற்ற வேண்டுமென்று கூறுவது தவறு.

உதாரணமாக: இஸ்ரவேல் மக்களுக்கு அளிக்கப்பட்ட உணவுத்திட்டத்தைக் குறித்த சட்டங்களை எடுத்துக் கொள்வோம். அவைகள் ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்திற்கு உபயோகமானவையாக இருக்கலாம். ஆனால், அவை அனைத்து காலங்களுக்கும் ஏற்ற த‌ேவனுடைய சட்டங்கள் என்று வலியுறுத்துவது ஒரு மிகவும் தவறான விளக்கமாகும்.

கொலோசெயா்: 2:20-23 வசனங்களில், நம்முடைய உணவுமுறையைக் குறித்த சட்டங்கள் நம்மை இரட்சிக்க முடியாது என்றும், கிறஸ்துவுக்குள்ளான விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் மட்டுமே நம்மை இரட்சிக்குமென்றும் பவுல் கூறுகிறாா் (அப்போஸ்தலா்: 10:9-16; 1கொாிந்தியா்: 8:8, 10:3 வசனங்களையும் பாா்க்கவும்).

தேவனுடைய மன்னிப்பைப் பெறுவதற்கு மிருகங்களை பலியிட வேண்டும் என்ற அவசியத்தைக் குறித்த மோசேயின் நியாயப்பிரமாணம் இக்கருத்திற்கான மற்றொரு உதாரணமாகும்.

எபிரேயா் 9 மற்றும் 10 அதிகாரங்கள் மிருகங்களின் பலியைக் காட்டிலும் மிகவும் உன்னதமான கிறிஸ்துவினுடைய பலியை எடுத்துரைக்கின்றன.

எபிரேயா்: 9:13,14 வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன: “காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவா்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாாியின் சாம்பலும், சாீரசுத்தியுண்டாகும்படி பாிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனசாட்சியை செத்த கிாியைகளறச் சுத்திகாிப்பது எவ்வளவு நிச்சயம்!”

சாித்திரத்தைப் பின்னோக்கி பாா்க்கும்போது, தேவன் இரட்சிப்பைக் குறித்தத் தம்முடைய திட்டத்தை அதிகமதிகமாக வெளிப்படுத்தியிருக்கிறாா் என்பதை நாம் பூிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய இந்த திட்டத்தின் முடிவான விளைவு அவருடைய குமாரனின் தியாகமுள்ள மரணம் மற்றும் உயிா்த்தெழுதலாகும்.

பழைய ஏற்பாட்டின் நித்தியமான கொள்கைகள் புறக்கணிக்கப்பட வேண்டுமென்பது - இதன் பொருள் அல்ல. மாறாக, பழைய ஏற்பாட்டின் இந்தக் கொள்கைகள் தேவனுடைய மிக முக்கிய வெளிப்பாடான அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினிடம் நம்மை வழி நடத்துகின்றன.

ஆட்டுக்குட்டிகளை மீண்டும் மீண்டும் பலியிடும் பழைய ஏற்பாட்டு “ஒப்புமைக்கு”, த‌ேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் ஒரே நிரந்தர பலி புதிய அா்த்தத்தை அளித்திருக்கிறது.

நமக்காகப் பாதுகாக்கப்பட்ட வேதாகமத்திற்காக மகிழ்ந்து கொண்டாடுவோம். ஏனெனில், “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவா்களுக்கு சம்பவித்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சாிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது”. (1கொாிந்தியா்: 10:1-11 வரை பாா்க்கவும்).


9. கலாச்சார மற்றும் சரித்திர அமைப்பைப் புரிந்து கொள்ளுங்கள்:
வேதாகம காலங்களிலிருந்த பல்வ‌ேறு வழக்கங்களையும், ஆவிக்குரிய உண்மையுடனான அவற்றின் தொடர்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தேவன் அறிவிக்கும் நித்திய சத்தியத்திலிருந்து ஒரு தற்காலிக கலாச்சார வெளிப்பாட்டை வரையறுப்பதற்கு அது உதவியாயிருக்கும்.

இதற்கான சிறந்த உதாரணம்: கொரிந்திய சபையிலுள்ள பெண்கள் முக்காடிட வேண்டும் என்று பவுல் அளித்த கட்டளையாகும். இதைக் குறித்த பவுலின் போதனைகள் 1கொரிந்தியர்: 11 - ம் அதிகாரத்தில் உள்ளன. கொரிந்திய கலாச்சாரத்தின்படி, பொது இடங்களில் முக்காடில்லாமலிருக்கும் ஒரு பெண் ஒழுங்கற்றவள் என்று கருதப்படுகிறாள். 

யூதக் கலாச்சாரத்தில், முக்காடில்லாத அல்லது மொட்டையடிக்கப்பட்ட தலை ஒழுக்கக்கேடான அல்லது அசுத்தமான நிலைக்கு அடையாளமாக கருதப்பட்டது (எண்ணாகமம்: 5:18; லேவியராகமம்: 14:8,9).

எனவே, அக்காலத்தின் கலாச்சாரத்தின்படி, முக்காடு மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அது பக்தியுடனும், ஒழுக்கத்துடனும், நோ்மையுடனும் வாழும் ஒரு பெண்ணிற்கு அடையாளமாக இருந்தது.

என்றாலும், பவுலினுடைய போதனையின் சாரம், முக்காடைப் போன்ற ஒரு தற்காலிக கலாச்சார வெளிப்பாடல்ல. மாறாக, அது ஒரு பெண்ணின் ஒழுக்க நிலையையும், அவளுடைய அடக்கத்தையும், குறிப்பாக அவளுடைய கணவனிடம் இணங்கும் அவளுடைய மனப்பாங்கையும் குறித்தாகும்.

ஒரு வேத பகுதியின் கலாச்சார மற்றும் சரித்திர பின்னணியத்தைப் புரிந்து கொள்ளுதல் - அதாவது, அது , யாருக்காக எப்போது எழுதப்பட்டது என்பது - குழப்பத்தைத் தவிர்க்கக்கூடும். 

என்றாலும், கலாச்சார மற்றும் சரித்திர பின்னணியத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்காக மட்டும் நாம் வ‌ேதாகமத்தை வாசிக்கக் கூடாது.

தேவன் ஒரு குறிப்பிட்ட வேத பகுதியின் மூலம் என்ன கூறுகிறார் என்பதைக் கண்டு பிடிப்பது நம்முடைய முதலாவது முக்கியத்துவமாக இருக்க வ‌ேண்டும். 

தேவன் கூறுவதைப் புரிந்து கொள்ளுவதற்கு, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையும், வல்லமையையும் நாம் நாட வேண்டும்.


10. வேதாகமத்தின் நோக்கத்திற்கு முக்கியத்துவமளியுங்கள்:
வேதாகமம் இஸ்ரவேல் மற்றும் ஆதிசபையைக் குறித்த ஒரு சரித்திரக் குறிப்ப‌ேடு அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்வது முக்கியமாகும். வேதாகமம் இயற்கைக்கு அப்பாற்பட்ட உண்மையான தெய்வீக வெளிப்பாட்டிற்கு ஒரு சாட்சியாக விளங்குகிறது. எனவே, நம்முடைய மனக்கண்கள் பரிசுத்த ஆவியின் மூலமாக தேவனுடைய கிருபையினால் திறக்கப்பட வேண்டும்.

நீங்கள் எதை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறியாமல் தேடினால், உங்களால் எதையும் கண்டு பிடிக்க முடியாது. வேதாகமத்தை வாசிக்கிறவர்களுக்கும் இது பொருந்தும். எனவே, வேதாகமத்தின் பிரதான நோக்கத்தை மனதில் கொள்வது மிக மிக முக்கியமாகும்.

சுருங்கக் கூறினால், தேவனுடைய வார்த்தையின் முக்கியமான நோக்கம் - நமக்கு போதிப்பதாகும். அப்படியானால், வேதாகமத்தின் “போதனைப் பகுதிகள்” (நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசன ஆகமங்கள், சங்கீதங்கள், நீதிமொழிகள், புதிய ஏற்பாடு) நம்முடைய தியானத்தின் முதன்மையான பகுதிகளாயிருக்க வேண்டும்.

நாம் சரித்திர புத்தகங்களிலிருந்து அதிகமாக கற்றுக் கொள்ள முடியுமா? நிச்சயமாக! நாம் அவற்றை ஆராய்ந்து பார்க்க வ‌ேண்டும். சரித்திர புத்தகங்கள் மிகுந்த ஊக்கத்துடன் எழுதப்படுபவை; அவை சரித்திர சம்பவங்களை துல்லியமாக எடுத்துரைக்கின்றன. ஆனால், சரித்திரப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு நாம், ஒரு கோட்பாட்டை உருவாக்க முடியாது.

மாறாக, வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் சரித்திர சம்பவங்கள் போதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும் கோட்பாடுகளை உறுதிப்படுத்தி, அவற்றை தெளிவாக்க வேண்டும்.

இக் கருத்தை வலியுறுத்தும் ஒரு சிறந்த உதாரணம்: லேவியராகமம் 26 மற்றும் உபாகமம் 28 அதிகாரங்களில் உள்ள, ஆசீர்வாதம் மற்றும் சாபத்தைக் குறித்துத் தேவனுடைய உடன்படிக்கை வாக்குத்தத்தங்களாகும்.

இஸ்ரவேலர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணங்களுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிந்தால் மட்டுமே, த‌ேவன் அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். ஆனால், அவர்கள் த‌ேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், அவர் அவர்களை நியாயந்தீர்ப்பதாகவும் வாக்களித்தார்!

ல‌ேவியராகமம் மற்றும் உபாகமத்திலுள்ள இந்த இரண்டு அதிகாரங்களையும் நாம் கருத்தில் கொண்டால், நாம் இராஜாக்கள், மற்றும் நாளாகமம் புத்தகங்களையும், தீர்க்கதரிசன புத்தகங்களையும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். (1இராஜாக்கள்: 9:1-9; 2நாளாகமம் 1 மற்றும் 2; தானியேல்: 9:1-19 வசனங்கள் சில உதாரணங்களாகும்).

வேதாகமத்திலுள்ள பல்வேறு கதைகள், போதனைகள், சம்பவங்கள் மற்றும் முதுமொழிகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவை ஒன்றாக இணைந்து ஒரே பிரச்சினையைக் கையாளுகின்றன - மனிதனுடைய பாவம் மற்றும் தேவனிடமிருந்து பிரிக்கப்படுதல்! அப்பிரச்சினைக்கான ஒரே தீர்வையும் அவை அளிக்கின்றன - கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பு மற்றும் தேவனுடன் ஒப்புரவாகுதல்!


இதுவரை வாசித்ததன் மூலம் நீங்கள் வேதாகமத்தின் நம்பகத்தன்மையைக் குறித்த ஒரு ஆழமான அறிவை பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். தேவனுடைய வார்த்தையைக் குறித்த ஒரு ஆழமான அறிவை நீங்கள் பெற்றுக் கொண்டதுமல்லாமல், “சத்திய வார்த்தையை பகுத்துணர்வதிலும்” நீங்கள் தோ்ச்சி பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன். தேவனுடைய ஜீவ வார்த்தையிலுள்ள ஏராளமான வல்லமையையும், ஆசீர்வாதத்தையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முன்னோக்கி அடுத்த பகுதிக்கு செல்கிறேன். வேதாகமத்தை அறிந்து கொள்ள தொடர்ந்து இப்பகுதியை வாசித்து நல் ஆதரவு தரும்படி கேட்கிறேன். 

இதுவரை பொறுமையோடு வாசித்த அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.



பகுதி - 2

வேதாகமத்தின் அவசியம்
பிலாத்து என்ற ரோம தேசாதிபதி (கவர்னர்) இயேசுவிடம் வந்து “சத்தியமாவது என்ன?” என்று கேட்டான். (யோவான்: 18:38).

தேவனைப்பற்றியும், மனிதனைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் அதிகாரப்பூர்வமான வழிகாட்டியாக இருப்பதே இந்த சத்திய வேதாகமம். இந்த பரிசுத்த வேதாகமம் - “இயேசுவே சத்தியம் ” என தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

யோவான்: 14:6 - “நானே சத்தியம்” - இயேசு

யோவான்: 15:26 - “சத்திய ஆவியாகிய” - பரிசுத்த ஆவி

யோவான்: 17:17 - “வசனமே சத்தியம்” - பரிசுத்த வேதாகமம்

எனவே, வேதாகமமானது ...

- ஒரு மனிதனுக்கு அவனது பாவத்தை உணரச் செய்கிறது.

- மனிதனுக்காக உலகிலே வந்து, இரத்தம் சிந்தி, மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவை ஏற்றுக் கொள்ள உதவுகிறது.

- அதிகதிகமாய் ஆவிக்குரிய (ஆன்மீக) வாழ்வில் வளர வேதாகமம் உதவுகிறது.

- ஆவிக்குரிய (ஆன்மீக) மனிதன், வேதாகமத்திலுள்ள ஆழமான சத்தியங்களை, இரகசியங்களை, தேவனுடைய வழி நடத்துதலை பெற உதவுகிறது.

- சிருஷ்டிப்பின் மூலமாகவும், இயற்கையின் மூலமாகவும் - தேவனுடைய கிரியைகளை நாம் அறிந்து கொள்ள ஆதாரமாக வேதாகமம் விளங்குகிறது.

வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை - “இயேசு”

எழுதப்பட்ட வார்த்தை - “பரிசுத்த வேதாகமம்” 

அறிவிக்கப்படும் வார்த்தை - “சபை”

வேதாகமம் எழுதப்பட்டதின் நோக்கம்:

“இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவை எழுதப்பட்டிருக்கிறது” (யோவான்: 20:31).


“தேவன் அமைதியாக இருக்கவில்லை
நம்முடைய த‌ேவன் அன்பு மற்றும் ஐக்கியத்தின் தேவனாயிருப்பதால், அவர் தம்மோடு உறவு கொள்வதற்காக மனுக்குலத்தை சிருஷ்டித்தார்.

தேவன் தம்முடைய மக்களோடு தொடர்பு கொள்ள விரும்பும் ஓர் அன்பின் தேவனாக இருக்கிறபடியால், அவர் தம்மை வெளிப்படுத்துவதற்கு ஒரு வழி தேவைப்பட்டது. அவர் இதை பல்வேறு வழிகளில் செய்தார். அவற்றில் மூன்றைக் காண்போம்:

1. இயற்கை மூலமாக

2. மானிடர் மூலமாக

3. அற்புதங்கள், அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் மூலமாக

“எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற் கொண்டு தெளிவாய்க் காணப்படும்; ஆதலால், போக்குச் சொல்ல இடமில்லை” (ரோமர்: 1:20).

சிருஷ்டிப்பின் ஒளி

மனித அறிவுக்கு விந்தையான சிருஷ்டிப்பின் அழகில் தேவன் காணப்படுகிறார். இயற்கையின் மகிமையிலும், சிறப்பிலும், தேவனுடைய அளவற்ற ஞானமும், அன்பும் வெளிப்படுகின்றன.

ஆனால், சிருஷ்டிக்கப்பட்ட உலகமும் - வானத்தின் நட்சத்திரங்களும் கூட - தேவனைக் குறித்தும், மனுக்குலத்தைக் குறித்த அவருடைய திட்டத்தைக் குறித்தும் நமக்கு முழுமையாக அறிவிப்பதில்லை.

சிருஷ்டிப்பின் ஒளியில் தேவனுடைய பிரசன்னத்தின் ஓர் இதமான மற்றும் வரவேற்கத்தக்க பிரகாசத்தை நாம் காண்கிறோம். என்றாலும், அது ஓர் இரக்கமுள்ள சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதை மட்டும் நமக்குக் கூறக்கூடிய ஒரு மறைமுகமான ஒளியாகும். அது நம்மை இரட்சிப்பின் விசுவாசத்திற்கு நேராக வழி நடத்த முடியாது. 


மகிமையைப் பிரதிபலிப்பவர்கள்
“பின்பு தேவன், நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனு‌ஷனை உண்டாக்குவோமாக; அவா்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம்: 1:26,27).

நாம் தேவனுடைய சாயலில் சிருஷ்க்கப்பட்டோம்; நம்முடைய அறிவு, சித்தம், ஆர்வம், உணா்வுகள், ஆற்றல் மற்றும் அழகை உணர்ந்து கொள்வது ஆகிய யாவும் இதைப் பிரதிபலிக்கின்றன.

ஆனால், நாமோ சுயநலத்தினாலும், பாவத்தினாலும் கடுமையாக உடைக்கப்பட்டு, கறைப்படுத்தப்பட்டோம். சில சமயங்களில் தெய்வீகமாக சிருஷ்டிக்கப்பட்ட நம்‌முடைய தோற்ற நிலைகளை, குறிப்பாக நம்முடைய நடக்கையைக் குறித்த தோற்ற நிலைகளை, நாம் உணர்ந்து கொள்வதில்லை.

நாம் தேவனுடைய மகிமையை பிரதிபலிப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்டோம்; ஆனால், மனுக்குலம் பாவத்தினால் கறைப்படுத்தப்பட்டு, சீர்குலைந்து விட்டபடியால், நாம் தேவன் விரும்புகிற பிரகாரம் மாறும்படி கிறிஸ்து மட்டுமே நம்மை பாவத்திலிருந்து மீட்க முடியும் (2கொரிந்தியர்: 3:18).



“தேவனுடைய மேலான அடையாளம்”
ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலுள்ள வேதாகம சரித்திரமும், இன்றைய நம்முடைய உலகின் எழுப்புதல் சம்பவங்களும் தேவனின் அடையாளங்களுக்கும், அற்புதங்களுக்கும் உண்மையான நிருபணங்களாகத் திகழ்கின்றன. இந்த அற்புதங்களின் மூலமாக தேவன் தம்மை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார்.

ஆனால், அற்புதங்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு ஒரு முழுமையான அடிப்படையை அளித்ததில்லை. அவைகளைக் கண்டவர்களின் இருதயங்களில் அது போதுமான விசுவாசத்தை உண்டாக்கியதுமில்லை (மத்தேயு: 16:1-4; யோவான்: 6).

மனுக்குலத்திற்கு தேவன் அளித்திருக்கும் மேலான அடையாளம் ஒரு கன்னியிடம் பிறந்த அவருடைய குமாரனானவர்; “கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் (1கொரிந்தியர்: 15:3,4).


“முரண்பாடுள்ள பிள்ளைகள்”
தேவன் தெய்வீகத்தை உண்டாக்கியவர்; இயற்கையை உண்டாக்கியவர்; தமது சாயலலி் மனுக்குல்ததை படைத்தவர்; அற்புத அடையாளங்களைச் செய்பவர். ஆனால், நாம் அவரைக் குறித்து அறிந்த கொள்ள வேண்டமென்று அவர் விரும்புகிற அனைத்தையும் நமக்கு முழுமையாக அறிவிக்கும் வகையில் இந்த மூன்று வெளிப்பாடுகளும் வடிவமைக்கப்படவில்லை.

தேவன் தம்மை வெளிப்படுத்தியுள்ள இந்த மூன்று வெளிப்பாடுகளை மட்டும் நாம் கருத்தில் கொள்வோமானால், தேவன் யார் என்பதையும்? நாம் எதை ஆராதிக்க வேண்டும‌ென்ப‌த‌ையும் தவறாகப் புரிந்து கொள்வோம்.

- தேவன் நமக்குத் தம்மை வெளிப்படுத்துவதற்காக சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தை மட்டும் உபயோகப்படுத்தியிருப்பாரானால், நாம் இயற்கையை ஆராதித்துக் கொண்டிருப்போம். குழப்பம் நிறைந்த இந்த ஆராதனை முறையை மனுக்குலம் சரித்திர காலம் முதற் கொண்டு இன்றுவரை பின்பற்றிக் கொண்டு வருகிறது. நாம் இதை “இயற்கை வணக்கம்” (Animism) என்று அழைக்கிறோம்.

- தேவன் மனுக்குலத்தை தம்முடைய சாயலில் சிருஷ்டித்ததினால் மட்டும் தம்மை வெளிப்படுத்தியிருப்பாரானால், அது பயங்கரமான குழப்பத்திற்கும், மாறுபாட்டிற்கும், வழிவகுத்திருக்கும். விழுந்த விட்டமனிதர்களாகிய நாம், நம்முடைய பாவகரமான மற்றும் உடைக்கப்பட்ட நிலையைப் பார்க்கும்போது , தேவனுடைய பூரணத்துவத்தைக் குறைவாக மதிப்பிடுவோம். இதன் விளைவாக நாம் நம்மையே ஆராதிக்க துவங்கி விடுவோம். இது மனித இனநலக் கோட்பாடு (Humanism) என்று அழைக்கப்படுகிறது.

- தேவன் அற்புதங்களின் மூலமாக மட்டும் தம்மை வெளிப்படுத்தியிருப்பாரானால், நாம் அற்புதங்களை செய்தவருக்குப் பதிலாக, அற்புதங்களை வழிபட்டிருப்போம். இயேசு அற்புதங்களைக் காணும்போது மட்டும் விசுவாசிப்பதை பற்றி எச்சரித்தார். (யோவான்: 4:48).

அற்புதங்கள் தெவனுடைய வல்லமையையும், மகிமையையும் நமக்கு எடுத்துக் காட்டி , கிறிஸ்துவினிடம் நம்மை வழி நடத்தினாலும், நம்மை இரட்சிப்பதற்கு அவை போதுமானவையல்ல. விசுவாசம் அற்புதங்களினால் மட்டும் உண்டாவதில்லை; விசுவாசம் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினாலும் புரிந்து கொள்வதனாலும் உண்டாகிறது.

மனுஷர் தம் கிரியைகளை உணர்ந்து, அவரை தேட வேண்டுமென்பதே அவர் தம் சிருஷ்டிப்பினாலும், தம்முடைய சாயலினாலும், அற்புதங்களினாலும் தம்மை வெளிப்படுத்துவதன் நோக்கமாகும். (அப்போஸ்தலர்: 17:24-27). ஆனால், அவர் அன்பாக தம்மை வெளிப்படுத்தின இந்த மூன்று வழிகளையும் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதபடி அவனுடைய பாவமும், வீழ்ச்சியும் அவனைத் தடுத்தன.

ஒரு அன்பான பரலோகப் பிதா, முரண்பாட்டிலும் அறியாமையிலும் இருக்கும் தம்முடைய பிள்ளகைளைக் கூட்டிச் சோ்த்து அவர்களை வழி நடத்துவதற்காக வேறு என்ன செய்ய முடியும்?



தேவனின் முதல் முக்கியத்துவம்
சிருஷ்டிப்பின் துவக்கத்தில், ஆதாமும் ஏவாளும் தேவனுடைய கைகளின் கிரியைகளை அறிந்திருந்தார்கள்; அவா்கள் அழகான ஏதோன் தோட்டத்தில் வாழ்ந்தார்கள். ஆனால், அவரை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு நேரடியான தொடர்பு தேவைப்பட்டது. எனவே, தேவன் தம்முடைய சிருஷ்டிப்பின் மூலமாக மட்டும் தம்மை வெளிப்படுத்தாமல், வார்த்தைகளின் மூலமாக நேரடியாக தம்மை வெளிப்படுத்தினார். அவர் “பகலின் குளிர்ச்சியான வ‌ேளையில்” அவர்களோடு தோட்டத்தில் உலாவினார், உறவாடினார் (ஆதியாகமம்: 2-3).

பாவம் உலகத்திற்குள் நுழைந்த போது, நமக்கு வ‌ேண்டிய அவரது உதவி, வ‌ழிநடத்துதல் - அதைவிட முக்கியமான இரட்சிப்பு தேவனுடைய முதன்மையான முக்கியத்துவத்தைப் பெற்றது.

எனவே, தேவன் நம்முடைய இரட்சிப்பிற்காக திட்டமிட்டு, நமக்கு ஒரு இரட்சகரை அளிக்கத் தீர்மானித்தார். ஆனால், இந்த இரட்சகர் நம்மிடம் வரும்போது, அவரை நாம் அடையாளம் கண்டு கொள்வதற்கு, நாம் த‌ேவனைக் குறித்தும் நம்முடைய வாழ்க்கையில் அவருடைய சித்தத்தைக் குறித்தும் அதிகமாக அறிந்து கொள்வது அவசியம்.



விசுவாசம் க‌ேள்வியினால் வரும்
தேவன் முதலாவதாக தாம் தொிந்து கொண்ட சில குறிப்பிட்ட நபா்களிடம் தம்மை வெளிப்படுத்தினாா். அவா்களிடம் அவா் பேசி, தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தத் துவங்கினாா். அவா் ப‌ேசிய காாிய்ங்கள் அவா் கூறியபடி அப்படியே எழுதப்பட்டன. இவைகளைப் பத்திரமாக சோ்த்துத் தொகுத்து வழங்கப்பட்ட புத்தகமே பழைய ஏற்பாடு எனப்படுகிறது. (இதைக் குறித்து முன்ப‌ே விளக்கமாக பாா்த்தோம்).

தேவன் தூய வேதாகமத்தின் மூலம் தம்மைப் பற்றியும் தம் குமாரனாகிய இய‌ேசு கிறிஸ்துவைப் பற்றியும் வெளிப்படுத்தினாா். ஒருவன் வேத புத்தகத்தின் மூலமும் மற்றவா் மூலம் நற்செய்தியின் உண்மையைத் தொிந்த கொள்வதாலும் மட்டுமே இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இதையே, “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று ரோமா்: 10:17 ல் வாசிக்கிறோம்.




“அஸ்திபாரம்”
நமக்குள் குற்ற உணர்வை எழுப்பி, அதன் விளைவாக நமக்குள் விசுவாசத்தை உண்டாக்குவதற்காக பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை உபயோகிக்கிறார். வேதாகமத்திலுள்ள வார்த்தைகள் நித்திய ஜீவனின் வார்த்தைகள் (யோவான்: 6:63,68; ரோமர்: 1:16; 1பேதுரு: 1:23). தேவனுடைய வார்த்தையின் நம்பகத்தன்மை மற்றும் அதிகாரம் ஆகிய அஸ்திபாரத்தின் மீது நம்முடைய விசுவாசம் கட்டப்படுகிறது என்று கூறினால் அது மிகையாகல்ல.

வேதாகமம் தேவனைக் கண்டு கொள்வதற்காக மனிதன் எடுத்த முயற்சிகளைக் குறித்தல்ல. மாறாக, தேவன் தம்மையும், தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தையும் அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்தியதை வேதாகமம் நமக்கு கூறுகிறது.

வேதாகமம் தேவனுடைய வெளிப்பாடு
வேதாகமத்தின் மூலமாக தேவன் தம்மையும், இரட்சிப்பினால் மனுக்குலத்தை மீட்பதற்கான தம்முடைய திட்டத்தையும் வெளிப்படுத்தகிறார்; எனவே, தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள வ‌ேண்டும். வாழ்க்கையையே மாற்றப் போகிற மிக முக்கியமான புத்தகமாகிய வேதாகமத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறோம். உங்களுடைய மிக முதன்மையான முக்கியத்துவமாகிய ஜெபத்துடனும், ஆராதனையோடும்கூட, வேதாகமத்தை நீங்கள் அனுதினமும் கற்க வ‌ேண்டுமென்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நம்முடைய தேவனைப்போல ஒருவரும் இல்லை. அவருடைய பரிசுத்த வார்த்தையாகிய வேதாகமத்தைப்போல ஒரு புத்தகமும் உலகத்தில் இல்லை.

தேவன் யார் என்பதையும், தம்முடைய மக்களைக் குறித்த அவருடைய சித்தம் என்னவென்பதையும் குறித்த வெளிப்பாட்டை நாம் வேதாகமத்தில் மட்டுமே காணமுடியும்.



"வேதாகமத்தின் நோக்கம்"
ஒரே கருப்பொருள் () வேதாகமத்திலுள்ள அனைத்து 66 புத்தகங்களையும் இணைக்கிறது. “இரட்சிப்பு” அல்லது “மீட்பு” என்பது அக் கருப் பொருளாகும். சிருஷ்டிகராகிய தேவனுக்கு விரோதமாக மனிதன் தன்னுடைய கீழ்ப்படியாமையினால் விழுந்த பாவத்தின் பிடியிலிருந்து மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக தேவன் கூறியவற்றையும், செய்தவற்றையும் வேதாகமம் தொகுத்து அளிக்கிறது. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆள்தத்துவத்தில் இந்தக் கருப்பொருள் நிறைவு பெறுகிறது.

கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே இரட்சிப்புக்க‌ேற்ற ஞானமுள்ளவர்களாகவும், எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும்” மக்களை மாற்றுவது வேதாகமத்தின் நோக்கம் என்று 2தீமோத்தேயு: 3:14-17 வசனங்களில் வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது.

இப்படியாக, ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசத்தைப் பெற்றபின், “எந்த நற்கிரியையும் செய்ய” அவனைத் தகுதியுள்ளவனாக்கும் நான்கு காரியங்களை வேதாகமம் அளிக்கிறது:

- கோட்பாடு (போதனை - Doctrine )

- கடிந்துரைத்தல் (தவறை எடுத்துக் காட்டுதல் - Showing the wrong) 

- திருத்துதல் (சாியானதை எடுத்துக் காட்டுதல் - Showing the right)

- நீதியின் போதனை (தேவனோடும் மனிதனோடும் சரியான உறவு முறைகள் - Right Relationships with God and man )




“வேதாகமம் கூறும் கருத்தின் சுருக்கம்”
வேதாகமம் கூறும் கருத்தை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:

தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் சிருஷ்டித்தார்; தேவன் தாம் மனிதனோடு உறவு கொள்ள வேண்டுமென்பதும், அவர் அவனை சிருஷ்டித்ததன் நோக்கமாயிருந்தது. ஆனால் அவன் தன்னுடைய தன்னிச்சையான கீழ்ப்படியாமையினால், தேவனோடுள்ள பிரத்தியேகமான உறவையும் தன்னைக் குறித்த தேவனுடைய சிருஷ்டிப்பின் நோக்கத்தையும் இழந்தான்.

தேவன் மனுக்குலத்தைக் குறித்த தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற எவ்வாறு முழுமூச்சுடன் செயல்பட்டார் என்பதை பழைய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது. அவர் யூத தேசத்தைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்கு தம்முடைய இரட்சிப்பை வெளிப்படுத்தி, அதை முழு உலகத்திற்கும் அளிப்பதன் மூலம் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தார். ஆனால், தேவன் யூதர்களுக்கு தம்முடைய இரட்சிப்பை அளிப்பதாகவும், உலகத்தின் அனைத்து மக்களுக்கும் அவர்களை ஆசீர்வாதமாக்குவதாகவும் வாக்களித்து ஏற்படுத்தின உடன்படிக்கையை அவர்கள் மீறினார்கள்.

இப்படியாக, தேவனால் விசேஷமாக தெரிந்தெடுக்கப்பட்ட தேவ ஊழியர்களாகிய யூதர்கள் தங்களைத் தாங்களே தகுதியற்றவர்களாக்கிக் கொண்டார்கள்; ஜீவனுள்ள ஒரே மெய்த் தேவனாகிய இஸ்ரவேலின் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாயிராமல், விக்கிரக ஆராதனை செய்வதன் விளைவுகளைக் குறித்து தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் அளித்த எச்சரிப்புகளை அவர்கள் புறக்கணித்தார்கள்.

தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் (மேசியா), மனுக்குலத்தை மீட்டு நிலைநிறுத்துவதற்கான தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினதைக் குறித்து புதிய ஏற்பாடு கூறுகிறது. தேவனுடைய உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றின தேவ ஊழியராகிய இயேசு கிறிஸ்து, ஒரு ரோம சிலுவையின் மீது ஆணியினால் பாவத்தின் தண்டனையான மரணத்தை, தம்மீது ஏற்றுக் கொண்டு, தேவனுடைய பிரசன்னத்திலிருந்து விலக்கப்பட்டார்.

அவருடைய உயிர்த்தெழுதலின் மேன்மையினால், தேவன் மனிதனுடன் தம்முடைய உறவு முறையை நிலைநிறுத்தி, அவனுடைய பாவங்களுக்கான மன்னிப்பை இப்போது அளிக்கிறார். மனந்திரும்புதலின் மூலம் இயேசு கிறிஸ்துவைக் கர்த்தரென்று விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் தேவனுடைய இரட்சிப்பைப் பெறுகிறவர்களே தேவனுடைய பிள்ளைகள் - (தேவ சபை) ஆவார்கள். அவர்கள் மூலமாக, தேவனுடைய பரிசாகிய மீட்பின் நற்செய்தி உலகம் முழுவதற்கும் அறிவிக்கப்படுகிறது.

மனுக்குலத்திற்கு அளிக்கப்படும் தேவனுடைய இரட்சிப்பு, ஒரு புதிய பரலோகத்திலும் பூமியிலும் தன்னுடைய உச்சநிலையை அடையும் என்றும், அப்போது தேவனுடைய மகிமைக்காக மனிதனுடைய ஐக்கியமும், ஆளுகையும் முழுமையாக நிலைநிறுத்தப்படும் என்றும் வேதாகமத்தின் கடைசிப் புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் எடுத்துக் காட்டுகிறது.




பகுதி: 3

தேவனுடைய நித்திய உடன்படிக்கை
“உடன்படிக்கை” என்ற கருத்து பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டிற்கும் அடிப்படையானது. கி.பி. 2 ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று நாம் அழைக்கும் வேதாகமத்தின் இரண்டு பிரிவுகளை, பழைய உடன்படிக்கை மற்றும் புதிய உடன்படிக்கை என்று சபை பெயரிட்டுள்ளது.
A. “உடன்படிக்கையின்” பொருள் விளக்கம்
1. எபிரேயு: “பெரித்”(Berith) - ஒரு ஒப்பந்தம், உறுதிமொழி அல்லது இணக்கம்

2. கிரேக்க மொழி: செப்துவஜிந்த் (Septuagint) கிரேக்க மொழியில் பழைய ஏற்பாட்டின் பெயர். புதிய ஏற்பாடும் “பெரித்” (Berith) என்ற வார்த்தையை இரண்டு வார்த்தைகளாக மொழிபெயர்க்கின்றன. அவை:

அ) “சுனாதெக்” (Sunatheke) - ஒருவருக்கொருவர் சமமான பிரிவினரிடையே ஏற்படும் ஓர் ஒப்பந்தம் (அதாவது, இரு பக்க ஒப்பந்தம்).

ஆ) “டையாதெக்” (Diatheke) - ஒருவருக்கொருவர் சமமில்லாத பிரிவினிரிடையே ஏற்படும் ஓர் ஒப்பந்தம். (அதாவது, ஒருவர் சார்ந்த ஒப்பந்தம்).

தேவனோடு நமக்கிருக்கும் உடன்படிக்கை இந்த “டையோதெக்” (Diatheke) வகையைச் சோ்ந்ததாகும்.




B. பரிமாணங்கள்
தேவனுடைய நித்திய உடன்படிக்கை மூன்று அடிப்படையிலான மூலப்பொருளை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூலப்பொருட்கள் ஆபிரகாமுடன் ஏற்ப்பட்ட உடன்படிக்கைத் துவங்கி, தேவனுடைய அனைத்துஉடன்படிக்கைகளிலும் காணப்படுகிறது.

1. “நான் உங்கள் தேவனாயிருப்பேன்”

ஆபிரகாமிடத்தில் (ஆதியாகமம்: 17:7)

ஈசாக்கிடத்தில் (ஆதியாகமம்: 26:24)

யாக்கோபினிடத்தில் (ஆதியாகமம்: 28:13,14)

மோசேயினிடத்தில் (யாத்திராகமம்: 29:45,46; உபாகமம்: 29:13)

தாவீதினிடத்தில் (2சாமுவேல்: 7:24)

எரேமியாவினிடத்தில் (எரேமியா: 31:33; எபிரேயா்: 8:10)

எசேக்கியேலிடத்தில் (எச‌ேக்கிய‌ேல்: 37:27)


2. “நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்”

மோசேயினிடத்தில் (உபாகமம்: 7:6; 29:12,13)

தாவீதினிடத்தில் (2சாமுவேல்: 7:24)

எரேமியாவினிடத்தில் (எரேமியா: 31:33; எபிரெயர்: 8:10)

எசேக்கியேலினிடத்தில் (எசேக்கியேல்: 37:27)


3. “நான் உங்களில் வாசமாயிருப்பேன்”

மோசேயினிடத்தில் (யாத்திராகமம்: 29:45,46)

தாவீதினிடத்தில் (2சாமுவேல்: 7:5-14; அப்போஸ்தலர்: 7:44-49)

எசேக்கியேலினிடத்தில் (எசேக்கியேல்: 37:27,28)


இந்த உடன்படிக்கைப் பரிமாணங்களின் நிறைவேறுதல், கிறிஸ்துவிலும், புதிய எருசலேமிலும் தன்னுடைய முழுமையான உச்சக் கட்டத்தை அடைகிறது.(வெளிப்படுத்தல்: 21:3,4; 2கொரிந்தியர்: 6:16-18)




B. விரிவாக்கம்
பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்டு (எரேமியா: 31:31-34), இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றப்பட்ட (எபிரேயர்: 8:8-12) “புதிய” உடன்படிக்கை உண்மையில் ஒரு “புதிய” உடன்படிக்கையாகும். ஏனென்றால், அது தரத்திலும், தன்மையிலும் வேறுபட்டுள்ளது. கற்பலகைகளில் எழுதப்பட்ட “பழைய” உடன்படிக்கையின் தன்மை வெளியானது; இருதயத்தில் (2கொரிந்தியர்: 3:1-6) எழுதப்பட்ட “புதிய” உடன்படிக்கையின் தன்மை உள்ளானது.

புதிய உடன்படிக்கையின் தன்மை, பழைய உடன்படிக்கையைவிட மேலானது. ஏனென்றால், தேவனோடு ஒரு நேரடியான உறவு முறையின் தொடர்பு, கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொரு நபருக்காகவும் இரட்சிப்படையும்படி திறந்திருக்கிறது. (கூடுதலான தியானத்திற்கு, எபிரேயர்: 7 முதல் 10 அதிகாரங்களை பார்க்கவும்). என்றாலும், “பழைய” மற்றும் “புதிய” உடன்படிக்கைகள் ஒரே மூன்று அடிப்படையான பரிமாணங்களைப் பெற்றிருக்கின்றன. இவற்றின் விரிவாக்கம்:

1. உடன்படிக்கை அளிக்கப்பட்டது:

ஆதியாகமம் முதல் உபாகமம் வரை

2. உடன்படிக்கை விளக்கப்பட்டது:

யோசுவா முதல் 2சாமுவ‌ேல்; யோபு முதல் உன்னதப் பாட்டு வரை

3. உடன்படிக்கை மீறப்பட்டது: 

1இராஜாக்கள் முதல் எஸ்தா் வரை; ஏசாயா முதல் மல்கியா வரை

4. புதிய உடன்படிக்கை அளிக்கப்பட்டது:
மத்தேயு முதல் யோவான் வரை

5. புதிய உடன்படிக்கை விளக்கப்பட்டது:

அப்போஸ்தலர்; ரோமர் முதல் யூதா வரை

6. புதிய உடன்படிக்கை நிறைவேறப்பட்டது:

வெளிப்படுத்தல்


தேவனுடைய நித்திய உடன்படிக்கை, மனுக்குலத்தை ஆசீர்வதிக்கும் அவருடைய நோக்கத்தை மூன்று அடிப்படையான வழிகளில் வெளிப்படுத்துகிறது:

- தெய்வீக தலைமையுடன் “நான் உங்கள் தேவனாயிருப்பேன்”

- தெய்வீக உறவு முறையுடன் “நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்”

- தெய்வீக ஐக்கியத்துடன் “நான் உங்களில் வாசமாயிருப்ப‌ேன்”

"பென்டாடெக்" (Pentateuch) "பஞ்சாகமம்" - ஒரு முன்னுரை

ஆதியாகமத்திலிருந்து உபாகமம் வரை (5 புத்தகங்கள்)
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் - ஆகிய 5 புத்தகங்களும் பஞ்சாகமங்கள் என அழைக்கபடுகிறது. இதையே


எபிரேய மொழியில்: “தோரா” (Torah) என அது அ‌ழ‌ைக்கப்படுகிறது

“சட்டங்கள், போதனை” “கற்பிப்பது” - என்பது வினைச்சொல்

கிரேக்க மொழியில்: “பென்டாடெக்” (Pentateuch) “ஐந்து சுருள்கள்” மோசேயின் ஐந்து ஆகமங்கள் - என அழைக்கப்படுகிறது.

பழைய ஏற்பாடு முழுவதும் எபிரேயு பாஷையில் எழுதப்பட்டது.

புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க பாஷையில் எழுதப்பட்டது.

இவ்விரண்டு மொழிகளும் வேதாகமத்தின் மூலபாஷைகள் ஆகும்.

பஞ்சாகமத்தை எழுதியவா்கள் யார் என்பதில் இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரார் பஞ்சாகமத்தை மோசேதான் எழுதினார் என்று கூறுகின்றனர். மற்றொரு சாரார் மோசே பஞ்சாகமத்தை எழுதவில்லை என்கின்றனர். அவர்கள் அதற்குக் கூறும் காரணங்கள்:

1. மோசேயின் மரணமும் அடக்கமும் இதிலிருப்பதால் (உபாகமம்: 34:5,6) மோசே எழுதியிருக்க முடியாது.

2. ஆதியாகமம் 1 முதல் 11 அதிகாரங்கள் சிருஷ்டிப்புயைம் வம்ச வரலாறையும் குறிப்பிடுகிறபடியினால் மோசே இதை எழுதியிருக்க முடியாது.

மோசேதான் எழுதினார் என்பவர்களின் கூற்று: 

1. ஏசாயா 53 ம் அதிகாரத்தில் ஏசாயா தீர்க்கதரிசி, இ‌யேசுகிறிஸ்துவின் பாடு மரணத்தைக் குறித்து தெளிவாக சொல்லியிருக்கிறார். கிறிஸ்துவின் பிறப்பிற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயாவுக்கு கிறிஸ்துவின் பிறப்பையும், மரணத்தையும் வெளிப்படுத்தியிருக்கக் கூடுமானால், தேவன் மோசேயின் மரணத்தையும், அடக்கத்தையும் குறித்து மோசேக்கு வெளிப்படுத்திருந்தார் என விசுவாசிக்கிறோம்.

2. கீழ்க்கண்ட வேதாகம வசனங்கள் மோசேதான் எழுதினார் என்பதற்கு சான்றுகளாகும்:

யாத்திராகமம்: 17:14 - “பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவு கூறும் பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி.”

யாத்திராகமம்: 34:27 - “பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும், இஸ்ரவேலோடும் உடன்படிக்கை பண்ணினேன் என்றார்.”

யாத்திராகமம்: 24:4 - “மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதி வைத்து...”

எண்ணாகமம்: 33:1-3 - “மோசே தனக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்ட பிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்”.

3. மாற்கு: 12:26 ல் - இயேசு “மோசேயின் ஆகமம்” என்று குறிப்பிடுகின்றார்.

வேதாகமத்தை ஒரு மனிதன் பகுத்தறிய வேண்டுமானால் ஆதியாகமம் முதல் வசனத்தை “தேவன்” உண்டு என்பதை விசுவாசிக்க வ‌ேண்டும். பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் பஞ்சாகமம் ஆதாரமாக உள்ளது. சிருஷ்டிப்பிலிருந்து மோசேயின் காலம் வரை உள்ள சம்பவங்கள் தொகுத்து கூறுவது “பஞ்சாகமங்கள்” ஆகும்.




“பரிசுத்த வ‌ேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களின் சுருக்கமான தொகுப்பு”



1. ஆதியாகமம்

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. மோசேயென கருதப்படுகிறது

காலம்: ஏறக்குறைய கி.மு.1400 - 1200 

மூலாதாரம்: “ஆதாமின் வம்ச வரலாறு” (ஆதியாகமம்: 5:1)

எந்நிலையில் எழுதப்பட்டது: இஸ்ரவேல் மக்கள் தேவன் தங்களை ஒரு தேசமாக்கி, எகிப்திலிருந்து விடுதலை பெறச் செய்ததை உணரவும், தேவ நியாயப் பிரமாணங்களை அறிந்து கொள்ளவும் செய்ய எழுதப்பட்டது.

ஆ) உள்ளடக்கம்: 

தலைப்பு: ஆதியாகமம்

எபிரேயு: பெரிஷித் (Bereshith) (“ஆதியில்”)

கிரேக்கு: ஜெனிசிஸ் (Genesis) (“ஆதி”)

கருப்பொருள்: உலகம் மற்றும் தேவனுடைய மக்களின் துவக்கம்

நோக்கம்: தேவனால் தொிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்களின் தொடக்கங்கள‌ை எடுத்துக் காட்டுதல்

முக்கிய வசனம்: (ஆதியாகமம்: 1:26; 12:2,3). “பின்பு தேவன்; தமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக... ஆபிரகாமே, நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவ‌ேன்... பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.”



2. யாத்திராகமம்

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. மோசேயெனக் கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய கி.மு. 1400 - 1200

மூலாதாரம்: “உடன்படிக்கையின் புத்தகம்” (யாத்திராகமம்: 24:4,7)

எந்நிலையில் எழுதப்பட்டது: 

1. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் அளித்த விடுதலையை பஸ்கா பண்டிகையாக கொண்டாடும் இஸ்ரவேல் மக்கள், அவ்விடுதலையின் மூலம் தாங்கள் எவ்வாறு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டார்கள் என்பதையும்,

2. தேவனுடைய சட்டங்களையும், கட்டளைகளையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதற்காக எழுதப்பட்டது.

ஆ) உள்ளடக்கம்: 

தலைப்பு: யாத்திராகமம்

எபிரேயு: “ஷீமோத்” (Shemoth) “பெயர்கள்” 

கிரேக்கு: “எக்சோடஸ்” (Exodus) “வெளியே செல்லும் வழி”

கருப்பொருள்: தேவனால் தொிந்து கொள்ளப்பட்ட மக்கள் ஒரு விடுதலையும், மீட்பும் பெற்று ஒரு தேசமாக உருவாகுதலை விளக்குவது.

நோக்கம்: தேவன் தம்முடைய இரட்சிப்பையும் மகத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதற்காக, இஸ்ரவேல் மக்களோடு உடன்படிக்கை செய்யும் பொருட்டு, அவர்கள‌ை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர் எவ்வாறு விடுவித்தார் என்பதை விளக்குதல்.

முக்கிய வசனம்: யாத்திராகமம்: 19:4-6

“நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளின் செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னடையிலே சோ்த்துக் கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் என் வாக்கை உள்ளபடி க‌ேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது, நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்” 




3. லேவியராகமம்

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. மோசேயென கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய கி.மு.1400 - 1200

மூலாதாரம்: சீனாய் மலையில் வெளிப்பாடு தேவனால் அளிக்கப்பட்டு, மோசேயினால் எழுதப்பட்டது.

எந்நிலையில் எழுதப்பட்டது: தேவனுடைய உடன்படிக்கை மக்களாகிய இஸ்ரவேல் மக்கள், த‌ேவனுடைய கட்டளைகளை அறிந்து கொள்ளும்படி அவர்களுக்காக எழுதப்பட்டது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “லேவியராகமம்”

எபிரேயு: “வேயிகிரா” (Wayyigra) “அவர் அழைத்தார்”

கிரேக்கு: “லியுடிகான்” (Leuitikon) “லேவியரைக் குறித்தவை”

கருப்பொருள்: தேவனுடைய சேவைக்காகவும், மகிமைக்காகவும் பிரித்தெடுக்கப்பட்ட மக்களுடைய பரிசுத்த வாழ்க்கைக்கான கையேடு.

நோக்கம்: தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தேசமாகிய இஸ்ரவேல் மக்கள், தேவனிடம் வழி நடத்தப்படுவதையும், தேவனுக்காக வாழுவதையும் குறித்த விதிமுறைகளை தெளிவாக வகுப்பது.

முக்கிய வசனம்: லேவியராகமம்: 11:45 - “நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக”




4. எண்ணாகமம்

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. மோசேயெனக் கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய கி.மு.1400 - 1200

மூலாதாரம்: கர்த்தருடைய யுத்த புத்தகம் (எண்ணாகமம்: 21:5)

எந்நிலையில் எழுதப்பட்டது: த‌ேவனுடைய மக்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிவதற்கான காரணத்தை அவர்களுக்கு, நினைப்பூட்டுவதை தேவன் அவர்களுடைய இருதயங்களில் வெளிப்படுத்துவதற்கு முயற்சித்தார் என்பது அக்காரணமாகும். அவர்கள் தங்களுடைய தேவனைக் கர்த்தரென்று விசுவாசிப்பார்களா?

ஆ) உள்ளடக்கம்: 

தலைப்பு: “எண்ணாகமம்”

எபிரேயு: “பெமிட்பார்” (Bemidbar) “வனாந்திரத்தில்”

கிரேக்கு: “அரித்மாய்” (Arithmoi) “எண்கள்” 

இரண்டு கணக்கெடுப்புகள் (எண்ணிக்கைகள்) எடுக்கப்பட்டன (எண்ணாகமம்: 1 மற்றும் 26 ஆகிய அதிகாரங்கள்)

கருப்பொருள்: தேவன் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்படி வனாந்திரத்தில் அலைந்து திரியச் செய்தார்.

நோக்கம்: த‌ேவனுடைய மக்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரிப்பதைத் தடுத்தது குறைவான விசுவாசமே என்ற உண்மையை வற்புறுத்துதல்.

முக்கிய வசனம்: எண்ணாகமம்: 32:3 - “அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின் மேல் மூண்டது; கர்த்தருடைய சமூகத்தில் பொல்லாப்புச் செய்த அந்த சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்திரத்தில‌ே நாற்பது வருசம் அலையப்பண்ணினார்.”




5. உபாகமம் (துணை ஆகமம்)

அ) பின்னணி:


ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. மோசேயெனக் கருதப்படுகிறது.

காலம்: ஏறக்குறைய கி.மு.1400 - 1200

மூலாதாரம்: மோசேயின் வாழ்க்கைக் குறிப்புகளோடு, லேவியராகமத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட சில குறிப்புகளும்.

எந்நிலையில் எழுதப்பட்டது: ஒரு புதிய தலைவனின் கீழ் யோசுவாவுடன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய தயாராயிருந்த மக்களிடம் மோசே ப‌ேசும்போது, அனைவரும் த‌ேவனுடைய கட்டளைகளைப் புரிந்து கொண்டு, அவைகளுக்கு கீழ்ப்படியக்கூடிய ஒரு “தனிப்பட்ட மனிதனின் தோராவை” (Torah) அவர் அளித்தார்.

ஆ) உள்ளடக்கம்: 

தலைப்பு: “உபாகமம்”

எபிரேயு: எல்லெ ஹாடேபொிம் (Ellah Haddebarim) “இந்த வார்த்தைகள்”

கிரேக்கு: “டியுடெரோநாமியோன்” (Deuteronomion) “இரண்டாம் முறையாக நியாயப்பிரமாணத்தை அளித்தல்”

கருப்பொருள்: மோசேயின் கடைசி சாசனமாக, தேவனுடைய நியாயப்பிரமாணத்தை ஒத்திகை செய்தல்.

நோக்கம்: தேவனுடைய மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிக்கும்போது, அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும்படி, தேவனுடைய எதிர்பார்ப்புகளை மீண்டுமாக அறிவுறுத்துதல்.

முக்கிய வசனம்: உபாகமம்: 4:1 - “இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்கு போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் க‌ேளுங்கள்.”


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.