பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை 1

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன். 

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன். 




“வேதாகமம்”

வேதாகமம்” என்னும் வார்த்தை "Biblios" என்னும் கிரேக்க வார்தையிலிருந்து வருகிறது. "Biblios" என்றால் “புத்தகம்” என்று பொருள்.

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்:1:4 - “பரிசுத்த வேதாகமங்கள்”, 2தீமோத்தேயு: 3:15 - பரிசுத்த வேத எழுத்துக்கள்” என்றும், ரோமர்: 3:2 - “தேவனுடைய வாக்கியங்கள்” என்றும் அழைக்கிறார்.

பல வசனங்களில் வேதாகமம் “பரிசுத்த வேத எழுத்துக்கள்” என்று பொருள்படும். “வேத வாக்கியங்கள் என்னும் பெயரினாலும் அழைக்கப்படுகிறது. (மத்தேயு்: 22:29; மாற்கு: 12:24; லூக்கா: 24:27; யோவான்: 5:39; அப்போஸ்தலர்: 17:11; ரோமர்: 1:2; மற்றும் பல...)


இரண்டு உடன்படிக்கைகள்”

வேதாகமம் இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. பழைய ஏற்பாடு
2.புதிய ஏற்பாடு

பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன.
இரண்டும் சோ்த்து முழு வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன.

“ஏற்பாடு என்ற வார்த்தையின் உண்மையான மொழிப்பெயர்பபு “உடன்படிக்கை” என்பதாகும். பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டும் தேவன் தம் மக்களோடு செய்த ஒரு உடன்படிக்கைக்கு அடையாளமாக உள்ளன.

பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் அல்லது உடன்படிக்கைக்குப் பதிலாக இப்போது கிறிஸ்துவினால் உறுதிப்படுத்தப்பட்ட (எபிரேயா்: 8:6 - 10:18) புதிய “உடன்படிக்கை” (ஏற்பாடு) பின்பற்றப்படுகிறது.

பழைய ஏற்பாடு நீக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவின் கிரியை நிறைவேற்றப்பட்டதினால் அது “முக்கியப்படுத்தப்படுகிறது”.


பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆா்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திாியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன். 

இதில் கேள்வி கேட்பவா்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிா்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன். 

        
மிகவும் நன்று தம்பி சார்லஸ்... உங்களுக்கு என் பாராட்டுக்கள். "இதில் கேள்வி கேட்பவா்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் " என்று சொல்கிறீர்கள். மிகவும் நன்று. அதைப்போலவே, நீங்களும் பதில் சொல்லும் போது அந்தந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் பதில் சொல்லும்படியாக உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆதியாகமத்தைக் குறித்து பேசும் போது ஒரே தாவில் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு செல்லுவது, உடனே சங்கீதத்திற்கு வருவது, எசாயாவை பேசும்போது மத்தேயு சுவிசேசத்திற்கு செல்லுவது, பிரசங்கி குறித்து பேசும் போது உடனே யாக்கோபுக்கு செல்வது போன்ற தாவல்களைத் தவிர்க்கும்படி உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் தம்பி. சுருக்கமாகச் சொன்னால் சுற்றி வளைத்துப் பேசுவதை (beating round the bush ) தவிர்க்கவும் தம்பி. அப்போதுதான் இந்தத் திரியை உறவுகள் விரும்புவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 


பழைய ஏற்பாடு”

“மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளிலெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்கு சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே” - என்று இயேசு கூறினார். (லூக்கா: 24:14).

இ‌‌யேசு கிறிஸ்துவின் வாத்தைகளின் அடிப்படையில், பழைய ஏற்பாடு பொதுவாக 3 பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. நியாயப்பிரமாணம்: (The Law)

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்

இந்த 5 புத்தகங்களும் “பஞ்சாகமம்”(Pentateuch) என அழைக்கப்படுகிறது. இது “தோரா” (Torah) என்று அழைக்கப்படுகிறது. The Law - அதாவது “சட்டபுத்தகம்” - “நியாயப்பிரமாணம்” என எபிரேய பாஷையில் அழைக்கப்படுகிறது.

2. தீர்க்கதரிசிகள்: (The Prophets):

தீர்க்கதரிசிகள் - 2 பகுதி உண்டு.

1. முந்திய தீர்க்கதரிசிகள் (Former)
2. பிந்தைய தீர்க்கதரிசிகள் (Latter)

முந்திய தீர்க்கதரிசிகள்:

யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல், இராஜாக்கள்

பிந்திய தீர்க்கதரிசிகள்: 

பிந்திய தீர்க்கதரிசிகளில் 2 பிரிவாக பிரிக்கலாம்.

அ) பெரிய தீர்க்கதரிகள்
ஆ) சிறிய தீர்க்கதரிசிகள்

அ)பெரிய தீர்க்கதரிசிகள்:

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல்.

ஆ) சிறிய தீர்க்கதரிசிகள்:

ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

தீர்க்கதரிசிகள் எபிரேய பாஷையில் (Nebhim) “ந‌ெபீம்” என அழைக்கப்பட்டனர்.


3. எழுத்துப்படைப்புக்கள்: The Writings:

கவிதை வடிவில் சார்ந்தவை: 

சங்கீதங்கள், நீதி மொழிகள், யோபு

ஐந்து சுருள்கள்: மகிலோத் (Megiloh): 

உன்னதப்பாட்டு, ரூத், புலம்பல், எஸ்தர், பிரசங்கி

சரித்திரம் சார்ந்தவை:

தானியேல், எஸ்றா, நெகேமியா, நாளாகம புத்தகங்கள்.

இவைகள் எபிரேய மொழியில் “கெத்துபீம்” (Kethubim) என அழைக்கப்படுகிறது.


“புதிய ஏற்பாடு”

புதிய ஏற்பாடு 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. சுவிஷேசங்கள்: 

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்

2. அப்போஸ்தலரின் நடபடிகள்

3. பவுலின் நிருபங்கள்:

ரோமர், 1கொரிந்தியர், 2கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1தெசலோனிக்க‌ேயர், 2தெசலோனிக்கேயர், 1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து, பிலமோன்

4. பொதுவான நிருபங்கள்:

எபிரேயர், யாக்கோபு, 1பேதுரு, 2பேதுரு, 1யோவான், 2யோவான், 3யோவான், யூதா

5. வெளிப்படுத்தின விஷேசம்


அதிகாரங்களும், வசனங்களும்”

வேதாகமம் - இன்றைக்கு வாசிப்பதற்கு எளிதாக இருப்பதுபோல், தொடக்க நிலையில் - வசனங்களாகவும் அதிகாரங்களாகவும் பிரிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம்.

இந்த அம்சங்கள், வேத வசனங்களை விரைவாகக் குறிப்பெடுக்கும் வசதிக்காக 600 ஆண்டுகளுக்கு முன்புதான் சோ்க்கப்பட்டன.



பல எழுத்தாளர்கள்...”
வேதாகமம் என்பது ஒரே புத்தகமாக இருந்தாலும், அது பல புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப் புத்தகங்கள் பரிசுத்தாவியினால் உந்தப்பட்ட ஏறக்குறைய 40 எழுத்தாளர்களால்எழுதப்பட்டன. அவர்கள் 60 தலைமுறைகளை உள்ளடக்கிய 1500 வருட காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள்.

வேதாகமத்தின் கடைசி எழுத்தாளர் 1900 வருடங்களுக்கு முன்பு மரித்தார். பல எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்தது கிடையாது. அவர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, முதலிய கண்டங்களிலும், உலகின் பல்வ‌ேறு பகுதிகளிலும் வாழ்ந்தார்கள்.

வேதாகமத்தின் எழுத்தாளர்களில் பலர், தங்களுக்குள் 100க்கணக்கான வருடங்கள் இடைவெளியில் வாழ்ந்தார்கள் வேதாகமத்தின் அடிப்படையான கருத்துக்களைக் குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு எந்த வழியும் இருந்திருக்க முடியாது.

அவர்கள் தாங்கள் வாழ்ந்த இடம் மற்றும் காலகட்டத்திற்கு ஏற்ப, வேத வாக்கியங்களின் சில பகுதிகளை வேறுபட்ட மொழிகளில் எழுதினார்கள். வேதாகமத்தின் புத்தகங்கள் 3 வேறுபட்ட மொழிகளில் எழுதப்பட்டன. அவையாவன: எபிரேயு, கிரேக்கு, மற்றும் அரபிய மொழி.

வேறுபட்ட எழுத்தாளர்கள், வேறுபட்ட காலங்கள், ஆனால் ஒரே செய்தி.



ஆனால் ஒரு உண்மை நூலாசிரியர்”

வேதாகமத்தின் எழுத்தாளர்கள் பல வகையான தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். பல்வ‌ேறுபட்ட சமுதாயத்தில் வாழ்ந்தார்கள். வேறுபட்ட கல்வி நிலையைப் பெற்றிருந்தார்கள். அவா்கள் அரசர்களாகவும், இராஜதந்திரகளாகவும், போர்வீரர்களாகவும், வரிவசூலிப்பவர்களாகவும், வேத சாஸ்திரிகளாகவும், எழுத்தாளர்களாகவும், மருத்துவர்களாகவும், உக்கிராணக்காரர்களாகவும், மேய்ப்பர்களாகவும், மீனவர்களாகவும்; இன்னும் பலவித தொழில்களை செய்பவர்களாகவும் இருந்தனர்.

வேதாகமம் பல்வ‌ேறுபட்டஎழுத்தாளர்களால், பல்வேறுபட்டகாலங்களில், பல்வேறுபட்ட மொழிகளில், பல்வ‌ேறுபட்ட இடங்களிலிருந்து எழுதப்பட்டது.

என்றாலும், வேதாகமம் அளிக்கும் செய்தி அற்புதவிதமாக ஒன்றுபட்டதாகவும், ஒருங்கிணைந்ததாகவும் உள்ளது. வேதாகமத்திற்கு ஒரு உண்மை நூலாசிரியர் இருந்தார் என்பது தெளிவாகிறது. அந்த நூலாசிரியர் தேவனே.

நீங்கள் ஒரே தலைமுறையில், ஒரே கால கட்டத்தில், ஒரே நாட்டில், ஒரே மொழியை பேசும் 20 எழுத்தாளர்களை ஒன்று திரட்டி, ஒரே தலைப்பைக் குறித்து அவர்களை எழுதச் செய்வீர்களானால், அவர்கள் சந்தேகமில்லாமல் வித்தியாசமான அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவார்கள்!!

வேதாகமம் பல சிக்கலான, சர்ச்சைக்குரிய தலைப்புகளைஉள்ளடக்கியிருந்தாலும், அது இன்னும் ஒன்றுபட்ட ஒரே புத்தகமாக விளங்குகிறது.

எனவே, வ‌ேதாகமத்தின் கட்டமைப்பு மற்றும் நோக்கத்தின் மூலாதாரம், அனைத்தும் அறிந்த, அனைவரையும் நேசிக்கிற, அனைத்து வல்லமையும் படைத்த தேவன் மட்டுமே என்பது புலனாகிறது. 



அனைவரையும் சென்றடைதல்”

வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உள்ளன. அவற்றில் 55 புத்தகங்களின் எழுத்தாளர்கள், பாரம்பர்யத்தினாலும், சரித்திர ஆராய்ச்சியினாலும், சரியாக அடையாளங் காணப்பட்டிருக்கிறார்கள்.

பின்வரும் புத்தகங்களை எழுதினது யார் என்பதை இன்றைக்கும் வேத பண்டிதர்களால் துல்லியமாக கண்டு பிடிக்க முடியவில்லை. அவை: நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவ‌ேல், 2சாமுவேல், 1இராஜாக்கள், 2இராஜாக்கள், 1நாளாகமம், 2நாளாகமம், எஸ்தர், யோபு, எபிரேயர்.

என்றாலும், இந்தப் புத்தகங்கள் பரிசுத்த ஆவியானவரின் உந்துதலினால் எழுதப்பட்டவை என்றும், அவைகளின் உள்ளடக்கம் நம்பகமான தேவனுடைய வார்த்தை என்றும் நாம் முழு நிச்சயமாக நம்பலாம்.

முடிவாக, தேவன் ஒருவரே வேதாகமத்தினுடைய ஒவ்வொரு புத்தகத்தின் உண்மை நூலாசிரியர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆதியாகமம் அல்லது 1இராஜாக்கள் 2இராஜாக்கள் போன்ற வேதாகமத்தின் சில புத்தகங்கள், சரித்திரத்தின் நீண்டகால கட்டங்களில் நடந்தவைகளை விவரிக்கின்றன. பல்வ‌ேறு எழுத்தாளர்கள் எழுதிய பல்வ‌ேறு புத்தகங்களை, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு நபர் ஒரே புத்தகமாக தொகுத்திருக்கலாம்.

பல நூலாசிரியர்கள் ஒரே புத்தகத்தின் வெவ்வேறு பகுதிகளை, ஒரே பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி எழுதியதற்கான சிறந்த உதாரணங்கள் சங்கீதங்களும், நீதிமொழிகளுமாகும்.

எனவே, உண்மையில் வேதாகமத்தை 40 எழுத்தாளர்களுக்கு மேல் எழுதியிருப்பார்கள்.

பெரும்பாலான எழுத்தாளர்கள் யூதர்களாயிருந்தபடியினால், அவர்கள் யூத மதத்தையும், கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதினார்கள். இருந்தாலும் , வேதாகமத்தின் வார்த்தைகள் அனைத்து தேசங்களின் மக்களையும், அனைத்து வயதினரையும், அனைத்து இனத்தவரையும், அனைத்து சமுதாயப் பிரிவினரையும் சென்றடைகிறது.

ஆனால், வேதாகமத்தில் எவையெல்லாம் சோ்க்கப்பட வ‌ேண்டுமென்று முடிவு செய்தது யார்? அது எவ்வாறு முடிவு செய்யப்பட்டது?



வேதாகமத்தின் புத்தகங்கள் தெரிந்து கொள்ளப்பட்டது எப்படி?
அளவுகோல்




வேதாகமம் எவ்வாறு த‌ேவனுடைய வார்த்தை என்பதைப் பார்த்தோம். ஆனால், வ‌ேதாகமத்தை தற்போதுள்ள அமைப்பில் நாம் எவ்வாறு பெற்றுக் கொண்டோம் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், அது தேவனுடைய வார்த்தையென்பதை நாம் ஏற்றுக் கொள்வது சரியல்ல.

பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடுகளிலுள்ள புத்தகங்களின் தொகுப்பு “வேதாகமத்தின் திருமுறை”என்று அழைக்கப்படுகிறது.

இந்த வார்த்தை “அளவுகோல்” அல்லது “அச்சுக்கோல்” என்று பொருள்படும் Kanon என்ற கிரேக்க வார்ததையிலிருந்து வருகிறது. பரிசுத்த வேத வாக்கியங்கள் என்று கருதப்படுவதற்கு “அளவுகோலாக,” குறிப்பிட்ட சில புத்தகங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு சட்டத்தை அல்லது நியமத்தை இது குறிக்கிறது.

வேதாகமத்தில் சோ்க்கப்படுவதற்காக கருதப்பட வ‌ேண்டிய புத்தகங்களுக்கு, சபைத் தலைவர்கள் தங்களுடைய இறுதியான ஒப்புதல் அல்லது உடன்பாட்டை அளிக்கும் முறை “திருமுறையுட் சோ்த்தல்” என்று அழைக்கப்படுகிறது. 

சபை அல்லது சபைத் தலைவர்கள் திருமுறையை உருவாக்கவில்லைஎன்பதை புரிந்து கொள்வது முக்கியம். அவர்கள் வேதாகமத்தின் புத்தகங்களுக்கு தெய்வீக அதிகாரத்தையும், வல்லமையையும் அளிக்கவில்லை.

“தேவனால் பிறப்பிக்கப்பட்ட துவக்கம் (உந்துதல்) வேதாகமத்திற்கு அபிஷேகத்தை அளித்து, பின்பு திருமுறையைச் சார்ந்த அதனுடைய நிலையை தீர்மானித்தது.”

ஆதி சபையும், அதன் தலைவர்களும் வேதாகமத்தில் சோ்க்கப்பட்ட புத்தகங்களின் மதிப்பைக் கண்டார்கள்; அப்புத்தகங்களில் ஏற்கனவே காணப்பட்ட தேவனுடைய உந்துதலை அவா்கள் அங்கீகரித்தார்கள்.வேதாகமத்தின் திருமுறை தேவனால் தீர்மானிக்கப்பட்டது. பின்பு மனிதர்களால் கண்டறியப்பட்டது.

1700 - ம் நூற்றாண்டில் வாழ்ந்த, அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்களின் மின்சாரத்தை “உருவாக்கவில்லை”. அவர் அதைக் கண்டு பிடித்து, அது இருக்கிற வண்ணமாகவே அதை அங்கீகரித்தார்

அதைப் போலவே, சபையின் மக்கள் வேத வாக்கியங்களை “உருவாக்கவில்லை”. தேவனால் பிறப்பிக்கப்பட்ட உந்துதலினால் எழுதப்பட்ட சில எழுத்துப் படைப்புகளை அவர்கள் அங்கீகரித்து, அவைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.



நூற்றுக்கணக்கானோர் சாட்சியளிக்கிறார்கள்”
வேத வாக்கியங்கள் எழுதப்பட்டபோது, பல பொய்யான புத்தகங்களும், எழுத்துப் படைப்புகளும் அதில் சோ்க்கப்படுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.

சபைத் தலைவர்கள் பழமையான எழுத்துப் படைப்புகளை கவனமாக மதிப்பீடு செய்து, அவைகளில் பலவற்றை புறக்கணித்தார்கள். ஒரு புத்தகம் வேதாகமத்தில் இடம் பெற வேண்டுமென்றால், ஒரு தெய்வீகத் துவக்கம் அதன் அடிப்படையாக இருக்க வேண்டுமென்பதில் அவர்கள் மிகுந்த கவனத்தை செலுத்தினார்கள்.

வேதாகமத்தில் இடம் பெற வேண்டிய எழுத்துப் படைப்புகளைத் தீர்மானிப்பதற்கு உதவி செய்யக் கூடிய “வழிமுறைகளை” தேவனுடைய மக்கள் நிர்ணயிப்பது அவசியமாகியது.

வேதாகமத்தில் எவையெல்லாம் சோ்க்கப்பட வேண்டும் என்பதை, குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் தீர்மானிக்கவில்லையென்று என்று உறுதியளிப்பதற்கும் இந்தக் கொள்கைகள் உதவின.

வேதாகமத்தில் எழுதப்பட்டவை தேவனாலுண்டானவை என்று ஆயிரக்கணக்கானோர் அல்லாவிட்டாலும் பல நூற்றுக்கணக்கானோர் சாட்சியளிக்க வேண்டும்.
வேத வாக்கியங்களின் திருமுறையில் சோ்க்கப்பட வேண்டிய எழுத்துப்படைப்புகளை தெரிந்தெடுப்பதில் பின் வரும் கொள்கைகள் உதவின. அவை:



நம்பகத்தன்மையின் 5 சோதனைகள்”

1. தெய்வீக அதிகாரம்:


வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகமும் ஒரு தீர்க்கதரிசன அல்லது தெய்வீக அதிகாரத்தின் அறிவிப்பைப் பெற்றிருக்கிறது.

“...என்று கர்த்தர் கூறுகிறார்” அல்லது “கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி” போன்ற சொற்றொடர்களைப் பல இடங்களில் காணலாம்.

தேவன் தம்முடைய மக்களின் சரித்திரத்தில் நடப்பித்த கிரியைகளைக் கூறுவதிலும் இந்த தெய்வீக அதிகாரம் வெளிப்படுகிறது.

2. தீர்க்கதரிசன படைப்பு:

தேவனுடைய வார்த்தை, பரிசுத்தாவியினால் வழி நடத்தப்பட்ட, தேவனால் நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளின் மூலமாக தேவனுடைய மக்களுக்கு அளிக்கப்பட்டது. (எபிரேயர்: 1:1).

அங்கீகரிக்கப்பட்ட தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஆகியோர் எழுதின புத்தகங்கள் மட்டுமே வேதாகமத்தில் சோ்க்கப்படுவதற்காக கருதப்பட்டன.

3. நம்பத்தகுந்த உண்மை:

முரண்பாடான சமயக் கருத்துக்கள் அல்லது தவறான கோட்பாடுகளடங்கிய ஒரு புத்தகம் தேவனாலுண்டானது அல்ல என்பதால் அது விலக்கப்பட்டது. ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட வேதாகம வெளிப்பாட்டிற்கு முரணான புத்தகங்களும், ஆதாரமற்றவை என்று கருதி விலக்கப்பட்டன. (2பேதுரு: 2:1).

தேவன் பொய் கூறுபவரல்ல, தேவனால் அளிக்கப்பட்ட எந்தப் புத்தகத்திலும் பொய்யோ அல்லது முரண்பாடோ கிடையாது. தேவனுடைய உந்துதலினால் எழுதப்பட்ட புத்தகங்கள் ஒன்றோடொன்று ஒருங்கிணைந்தவையாக உள்ளன.

பெரேயா பட்டணத்தார் “மனோ வாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்” (அப்போஸ்தலர்: 17:11).

பவுலின் உபதேசம் பழைய ஏற்பாட்டிலுள்ள தேவனுடைய முந்தின வெளிப்பாட்டை ஒத்திருக்கிறதா என்பதை அவா்கள் ஞானமாக சோதித்துப் பார்த்தார்கள்.

4. ஆற்றல் மிக்க வல்லமை:

வேதாகமத்தின் புத்தகங்களில் அடங்கியுள்ள வாழ்க்கையை மாற்றும் ஆற்றல் மிக்க வல்லமையின் அளவை கண்டறிவது மிகக் கடினமாகும்.

“தேவனுடைய வார்த்தையானது ஜீவனு‌ம் வல்லமையும்...”உள்ளதாயிருப்பதால் “அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைபடிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2தீமோத்தேயு: 3:16).

தேவனால் பிறப்பிக்கப்பட்ட நிறைவான போதனை, தன்னுடைய தெய்வீக, ஆற்றல் மிக்க வல்லமையின் மூலமாக நம்மைக் கட்டியெழுப்பி, அறிவுறுத்தி, விடுவிக்கிறது(2தீமோத்தேயு்: 3:15; 1பேதுரு: 1:23; யோவான்: 8:32).

தவறான போதனை நம்மை அதைரியப்படுத்தி, வீழ்த்தி, அடிமைத்தனத்திற்கு வழி நடத்தும்;அது மக்களை வஞ்சித்து, ஒரே உண்மை தேவனையும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் ஆராதிப்பதிலிருந்து அவர்களை வழி தவறச் செய்கிறது.

5. பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுதல்:
ஒரு புத்தகம் “தேவனால் பிறப்பிக்கப்பட்டதா”என்பதை தீர்மானிக்க மற்றொரு சோதனை உபயோகிக்கப்பட்டது. அது சபைகளால் அங்கீகரிக்கப்பட்டதா? அது தேவனுடைய மக்களால், தேவனுடைய வார்த்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, சேகரிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்டதா?
பண்டைய காலங்களில் மக்கள் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக இருந்தன; எனவே, வேத வாக்கியங்களின் திருமுறையில் அனைத்து 66 புத்தகங்களும் சோ்க்கப்பட வேண்டுமென்று ஏற்றுக் கொள்வதற்கு பல பல வருடங்கள் சென்றன.என்றாலும், த‌ேவனுடைய மக்கள் மோசே மற்றும் அப்போஸ்தலனாகிய பவுல் போன்றவர்கள் எழுதிய பல புத்தகங்களை தாமதமில்லாமல் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், மற்ற புத்தகங்கள் அதிகமான ஆய்வையும், காலத்தின் சோதனையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பழைய ஏற்பாட்டின் திருமுறை 400 கி.முவில் எபிரேயர்களால் நிறைவேற்றப்பட்டது; புதிய ஏற்பாட்டு திருமுறை 170 கி.பி.யில் நிறைவேற்றப்பட்டது.



வேதாகமம் இன்றைக்கும் பிழையின்றி உள்ளது என்பதை எவ்வாறு அறிய முடியும்?

அற்புதமான பாதுகாப்பு
இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வேதாகமம் நமக்கு எவ்வாறு கிடைத்தது என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரமாகும். அதில், தேவன் தம்முடைய விலையேறப்பெற்ற வார்த்தையை எவ்வாறு பாதுகாத்தார் - என்பதைக் குறித்த அற்புதமான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

வேதாகமத்தின் புத்தகங்களை தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் “பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு” எழுதினார்கள் - என்பதே இதன் துவக்கமாகும். (2பேதுரு: 1:20-21; 2தீமோத்தேயு: 3:16).


பழைய ஏற்பாடு - முற்றிலுமாகப் பிழையற்றது
பழைய ஏற்பாட்டு வேத வாக்கியங்கள் சந்தேகமின்றி முதலில் மிருகங்களினுடைய தோல்களின் மீது எழுதப்பட்டன. பழைய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்தில், காகிதத்தைவிட பதனிட்ட தோல் மிகவும் எளிதாகக் கிடைத்தது. 

மிருகங்களின் தோல்கள் பலவற்றை ஒன்றாக தைத்துச் சுருள்கள் தயாரிக்கப்பட்டன. அச்சுருள்கள் சில அடிகள் அளவிலான சிறிய சுருள்களாகவும், 100 அடி அல்லது அதற்கும் மேற்பட்ட அளவிலான பெரிய சுருள்களாகவும் இருந்தன. சுருள்களை ஒன்று அல்லது இரண்டு கைத்தடிகளில் சுருட்டினார்கள்.

வேத வாக்கியங்களின் மூலப்படிவங்களைப் பார்த்து தோல்களின் மீது எழுதும் வேலையில் ஈடுபட்ட யூதர்கள், வ‌ேத வாக்கியங்களைக் குறித்த ஒரு தீவிரமான பக்தியைப் பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக, வ‌ேத வாக்கியங்களை முற்றிலுமாகப் பிழையின்றி எழுத வேண்டும் என்ற ஒரு மத வைராக்கியமுள்ள ஒழுங்கை, மிகவும் கவனத்துடன் அவர்கள் பின்பற்றினார்கள்.

அவர்கள் தாங்கள் எழுதினவற்றைச் சரிபார்ப்பதற்கு ஒரு மிகவும் சிக்கலான முறையை உபயோகப்படுத்தினார்கள். ஒவ்வொரு எழுத்தும், வார்த்தையும், வசனமும் சரிபார்க்கப்பட்டது! அவர்கள் வார்த்தைகளின் நடுவே உள்ள இடைவெளியையும் கூட கணக்கிட்டார்கள்; ஒரு முழு புத்தகத்தையும் பார்த்து எழுதுவதற்கு எவ்வளவு இடைவெளி தேவை என்பதையும் கூட அவர்கள் துல்லியமாக அறிந்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட நுட்பமான அளவுகளை உபயோகப்படுத்தி, அவர்கள் ஒவ்வொரு புதிய படிவத்தையும் கவனமாக சரிபார்ப்பார்கள். புதிய படிவத்திலுள்ள எழுத்து அல்லது வார்த்தைகளின் எண்ணிக்கை மூலப்படிவத்திலிருந்து வேறுபடுமானால், படிவங்களை எழுதுபவர்கள் எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்வார்கள். ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் ஒரு தவறு காணப்பட்டாலும், அந்த முழுப்பக்கமும் அழிக்கப்பட்டது.


முழுமையானதும், ச‌ேதமற்றதும்
வேதாகம எழுத்தாளர்கள் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் கவனம் செலுத்தினபடியால், பழைய ஏற்பாடு பிழையின்றி விரிவாக எழுதப்பட்டு, அதன் உண்மைத் தன்மை பாதுகாக்கப்பட்டது. நம்மிடம் மூலப் படிவங்கள் இல்லாவிட்டாலும், நம்மிடம் உள்ள படிவங்கள் முற்றிலுமாக பிழையற்றவை என்று நாம் உறுதியாகக் கூறலாம். 
வேத வாக்கியங்களின் மூலப்படிவங்கள் இப்போது நம்மிடம் இல்லை. மூலப்படிவங்கள் நம்மிடம் இல்லாததற்குக் காரணம், யூத எழுத்தர்களின் பக்தியும், கவனமுமாகும். வேத வாக்கியங்களின் ஒரு பிரதி பழமையாகி விட்டாலோ அல்லது எதிர்பாராமல் சேதமடைந்தாலோ, அதைப் போன்ற ஒரு புதிய சரியான மறுபடிவத்தை உருவாக்கிய பின் அது புதைக்கப்பட வேண்டும் அல்லது எரிக்கப்பட வ‌ேண்டும். 

ஒவ்வொரு முந்திய பிரதியிலிருந்தும் எழுதப்பட்ட படிவங்கள் உருக்குலையாமல் பாதுகாக்கப்படுவதற்காக இந்த முறை பின்பற்றப்பட்டது. 

நீங்கள் வாசிக்கும் சங்கீதங்களின் புத்தகம் ஒரு சேதப்பட்ட அல்லது முழுமை பெறாத மூலப்படிவத்திலிருந்து அரைகுறையாக எழுதப்பட்டது என்றால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? வ‌ேத வாக்கியங்களை நமக்காகப் பாதுகாப்பதற்காக தேவன் மிகுதியான முயற்சிகளை மேற்கொண்டார்.


உறுதியான நம்பிக்கை
சவக்கடல் சுருள்களை கண்டு பிடிக்கும் வரை, எபிரேய மொழியில் எழுதப்பட்ட மிகப் பழமையான படிவங்கள் 900 கி.பி.யைச் சோ்ந்தவையாக இருந்தன. பதனிட்ட தோல்களில் எழுதப்பட்டிருந்த இந்த சவக்கடல் சுருள்கள் 200 கி.மு. மற்றும் 68 கி.பி. க்கு இடைப்பட்ட காலத்தைச் சோ்ந்தவையாகும்.

இச்சுருள்களில் ஒன்று ஏசாயா புத்தகத்தின் ஒரு முழமையான படிவமாகும். அப்படியென்றால், இந்தப் பிரதி வெத பண்டிதா்கள் வைத்திருந்த எந்த முந்திய பிரதியைக் காட்டிலும் ஓராயிரம் வருடங்கள் பழமையானது.

சவக்கடல் சுருள்ளகளின் கண்டுபிடிப்பில் ஒரு மிக முக்கியமான உண்மை என்னவென்றால், அந்த சுருள்களுக்கும், ஏற்கனவே உள்ள மற்ற படிவங்களுக்குமிடையே உள்ள ஒற்றுமையாகும்.

யூத எழுத்தர்கள் வேத வாக்கியங்களை மூலப்படிவங்களிலிருந்து மிகவும் சரியாகவும், அசாதாரண நுட்பத்துடனும் எழுதினார்கள் என்பதற்கு சவக்கடல் சுருள்கள் ஒரு முடிவான, போதுமான சான்றாக விளங்குகின்றன. 

ஓராயிரம் வருடங்கள் இடைவெளியில் வாழ்ந்த இரண்டு யூதர்கள், மூலப்படிவங்களிலிருந்து ஒரே புத்தகத்தைப் பார்த்து எழுதிய இரண்டு படிவங்களை ஒப்பிடும்போது, அவைகளுக்குள் குறிப்பிடத்தக்க அல்லது முக்கியமான வேறுபாடுகளோ அல்லது முரண்பாடுகளோ காணப்படவில்லை. இன்றைக்கு நாம் வாசிக்கும் வேதாகமம் அதனுடைய மூலபிரதியை ஒத்திருக்கிறது என்பதை நாம் நம்புவதற்கு ஒரு உறுதியான காரணத்தை இது நமக்கு அளிக்கிறது.


புதிய ஏற்பாடு

மிகுதியான சான்று
40 கி.பி. மற்றும் 95 கி.பி.க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் அனைத்தும் ஒரு விதமான காகிதத்தில் எழுதப்பட்டன. 

இந்தக் காகிதம் “பாப்பிரஸ்” என்கிற ஒரு வகை இலையை உபயோகித்து தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட காகிதங்களை தனிதாளாகவும், பல தாள்களை இணைத்து சுருட்டப்பட்ட சுருள்களாகவும் பயன்படுத்தினார்கள்.

புதிய ஏற்பாட்டின் மூலப்பிரதி முற்றிலுமாக முரண்பாடற்றது என்பதற்கு மிகுதியானசான்றுகள் உள்ளன. எந்தப் பழமையான எழுத்துப் படைப்புகளைக் காட்டிலும் தன்னுடைய பிழையற்ற தன்மைக்கும் , நம்பகத்தன்மைக்கும் ஆதாரப்பூர்வமான போதிய சான்றுகளை வ‌ேதாகமம் பெற்றிருக்கிறது.

புதிய ஏற்பாட்டின் மூலப்பிரதி எழுதப்பட்டபின் 20 அல்லது 30 ஆண்டுகளுக்குள் (ஒரு தலைமுறைக்குள்ளாக - இயேசுவை அறிந்த மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில்!) அம்மூலப்பிரதியின் 24,000 படிவங்கள் எழுதப்பட்டன.

இவைகளில் 5,400 படிவங்கள், புதிய ஏற்பாட்டின் மூலப்படிவம் எழுதப்பட்ட கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. இந்தப் படிவங்களை ஒன்றோடொன்று ஒப்பிடும்போது, ஒவ்வொரு படிவமும் மற்ற படிவங்களை 100 சதவீதம் ஒத்திருக்கிறது.

உலகத்தில் தோன்றிய எந்தப் பழமையான எழுத்துப் படைப்பைக் காட்டிலும், புதிய ஏற்பாடு உண்மையென உறுதிப்படுத்தப்பட்டதாயும் சரிபார்க்கப்பட்டதாயும் உள்ளது.

தேவனுடைய பரிசுத்த வார்த்தைக்காக அவரைத் துதியுங்கள். “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” (ஏசாயா: 40:8).



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.