மனிதன் பரிணாமத்தின் படி தோன்றியவனா ? - 1

மனிதன் பரிணாமத்தின் படி
தோன்றியவனா ? - 1

இப்போது மனிதனின் தோற்றம் பற்றி விஞ்ஞானம் கூறுவதை ஆராய்ந்து பார்ப்போம். பிரபஞ்சம் விரிவடைந்த போதே உயிரின் தோற்றமும் ஆரம்பித்து விட்டதாக விஞ்ஞானம் கூறுகிறது. அதாவது பிரபஞ்சம் வெடித்து விரிவடைந்த போது அணுவின் மூலக்கூறுகளான புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போன்றவைகள் தோன்றியதாம். இந்த மூலக்கூறுகளின் சேர்க்கையால் ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் போன்ற தனிமங்கள் உருவாகி, இந்த தனிமங்கள் வாயு நிலையை அடைந்த போது ஏற்பட்ட வேதியல் மாற்றத்தினால் அமினோ அமிலம் என்ற புதிய மூலக்கூறும் தோன்றியதாம். இந்த அமினோ அமிலம் ஸ்டார்ச்சுடன் இணைந்து புரோட்டின் என்ற கூட்டுப்பொருள் தோன்றி, இது பல்வேறு வேதியல் மாற்றத்துக்கு உட்பட்டு புரோட்டோ பிளாசமாக மாறியதாம். இந்த புரோட்டோ பிளாசம் காலப்போக்கில் ஒரு செல் உயிரினமாக மாறியது.  ( Ex: Amoeba அமீபா ), இந்த ஒரு செல் உயிரினம் தான் வருடங்கள் ஆக ஆக இரண்டு செல்களாகவும் இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும், எட்டு பதினாறாகவும் மாறி மாறி பல கோடிக்கணக்கான செல்கள் கொண்ட தண்ணீரில் வாழ்கின்றவைகளாகவும், பின்பு தண்ணீரிலும் நிலத்திலும் வாழ்கின்றவைகளாகவும், பின்பு நிலத்தில் மட்டும் வாழ்கின்றவைகளாகவும், நிலத்தில் உள்ள ஊர்வன நான்கு கால்கள் விலங்குகளாகவும் , இந்த நான்கு கால்கள், இரண்டு கால்களாகவும் அதாவது மனிதனாகவும் மாறியது என்று விஞ்ஞானம் கூறுகிறது ( டார்வின் பரிணாம கொள்கை ). இந்த பரிணாம மாற்றம் அல்லது வளர்ச்சி என்பது 100 ஆண்டுகளிலோ அல்லது 1000 ஆண்டுகளிலோ நடைபெற்ற மாற்றம் இல்லை. மாறாக மில்லியன் பில்லியன் ஆண்டுகளாக நடைபெற்ற மாற்றம் என்றும், இந்த மாற்றம் இன்றும் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் விஞ்ஞானம் கூறுகிறது.

அன்பிற்குரியவர்களே! விஞ்ஞானத்தின் படி உலகில் உயிர்கள் தோன்றிய விளக்கத்தை தான் நான் இங்கே மிக சுருக்கமாக எழுதி இருக்கிறேன். இதை இன்றைய நவீன அறிவியலின் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப சில விஞ்ஞானிகள் சில சில மாற்றங்கள் செய்து விளக்கம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இதை பற்றிய விரிவான விளக்கம் நமக்கு தேவையில்லை. காரணம்  நாம் தெரிந்து கொள்ள வேண்டியது உலகில் மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்தும் தானாக தோன்றியதா? அல்லது கடவுள் படைத்தாரா? என்பதை மட்டும் தான். இந்த தலைப்பில் சிலர் என்னிடம் விவாதம் பண்ணினார்கள். அவர்களுடைய ஒருமித்த கருத்து கடவுள் என்ற ஒருவர் உலகில் இல்லை, அவர் மனிதனை படைக்கவும் இல்லை. கடவுள் தான் மனிதனை படைத்தார் என்பதற்கு ஆதாரமாக நான் காட்டிய பரிசுத்த வேதாகமத்தையும் அவர்கள் பொய் என்று கூறி விட்டார்கள். அதே நேரம் உலகில் மனிதன் தானாய் தோன்றினான் என்ற விளக்கத்துக்கு டார்வினின் பரிணாம கோட்பாடை தவிர வேறு எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்களால் கூற முடியவில்லை. டார்வினின் இந்த கோட்பாட்டின் படி தான் உலகில் மனிதன் தோன்றினான் என்று இன்றுவரை விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. என்னை பொறுத்த வரையில் கடவுள் தான் உயிரினங்களை படைத்தார் என்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை. ஒரே வரியில் இந்த உண்மையை நிரூபிக்க முடியும். எப்படியென்றால் டார்வின் கூற்று படி ஒவ்வொரு உயிரினமும் பூமியின் தகவமைப்புக்கு ஏற்ப ஒரு காலகட்டத்தில் இன்னொரு உயிரினமாக மாறியது. உதாரணத்திற்கு மீன் முதலையாக மாறியது. குரங்கு மனிதனாக மாறியது. அப்படியானால் இன்றும் அது போல் தானே மாறி கொண்டிருக்க வேண்டும்?  ஆனால் நாயிடம் இருந்து நாய் குட்டி தானே வருகிறது. குரங்கிடம் இருந்து குரங்கு தானே வருகிறது. எந்த மீனும் முதலை குட்டியாய் மாறவில்லையே? எந்த குரங்கும் பாதி மனிதனாக கூட மாறவில்லையே. காரணம் இது உண்மை இல்லை. மாறாக உண்மை என்பது பரிசுத்த  வேதாகம வார்த்தை தான். அதில் கடவுள் சொல்லி இருக்கிற  படி தான்  குரங்கிலிருந்து குரங்கு வருகிறது. மீனிலிருந்து மீன்  வருகிறது. முதலையிடம் முதலை வருகிறது. மனிதனிடமிருந்து மனிதன் வருகிறான். இது மிகவும் எளிதான, எல்லோர் கண்ணுக்கும் தெரிகின்ற, எல்லோராலும் ஏற்று கொள்ளக்கூடிய மிக பெரிய உண்மை. கண் முன்னால் தெரிகின்ற இந்த உண்மைக்கு ஏன்? மனிதன் இத்தனை ஆராய்ச்சிகள் எல்லாம் பண்ணிக்கொண்டிருக்கிறான் என்பது எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் தன்னை தானே குழப்பிக்கொண்டு , விடை தெரியாமல் தள்ளாடி கொண்டிருக்கிறவர்கள் நான் தருகிற இந்த விளக்கக்கங்ளை  நிதானித்து பாருங்கள். இதிலும் உங்கள் குழப்பங்கள் மாறவில்லை என்றால் உங்களை படைத்தவர் நேரடியாக வரும் போது உங்கள் சந்தேகங்கள் எல்லாமே தெளிவாகும். அதுவரை காத்திருங்கள். ஆனால் தெளிவு கிடைத்த பின் உங்களுக்கு எந்த பயனும் இருக்காது. என்பதையும் இங்கே சொல்லி கொள்கிறேன்.

விஞ்ஞானம் என்பது நிலையான கோட்பாடுகளை உடையது அல்ல. மாறாக ஒவ்வொரு விஞ்ஞானியின் அறிவுக்கு ஏற்றபடி புது புது கோட்பாடுகள் அவ்வப்போது தோன்றி கொண்டே இருக்க கூடியது. ஒரு விஞ்ஞானியின் கருத்தை விட இன்னொரு விஞ்ஞானியின் கருத்து சற்று ஏற்று கொள்ள கூடியதாய் இருந்தால், பழைய கோட்பாடு பொய்யாக போய் விடும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். ஏனென்றால் விஞ்ஞானத்தில் மனித அறிவின் படியே ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. மனித அறிவின் படியே கொள்கைகளும் வெளியிடப்படுகின்றன. விஞ்ஞானத்தின் படியும் டார்வின் கோட்பாட்டின் படியும் மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவனாய்  இருந்தால் அதில் பல குழப்பங்கள் இருக்கின்றன அவைகளில் முக்கியமான குழப்பங்களை பார்க்கலாம்.

1.  ஒரு உயிரி புவியின் தகவமைப்புக்கு ஏற்ப தன்னை படிப்படியாக மாற்றி கொள்வதை தான் பரிணாமம் என்கிறோம். இந்த பரிணாம கோட்பாட்டின் படி பரிணாம வளர்ச்சி என்பது எதாவது ஒரு கால கட்டத்தோடு முடிந்து போக கூடிய ஒன்றல்ல. மாறாக தொடர்ந்து கொண்டே இருக்கக்கூடியது. இதன்     அடிப்படையில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால் அல்லது குரங்கு மனிதனாக மாறி இருந்தால் மனிதனும் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து ஒரு புதிய உயிரினமாக மாறி  இருக்க வேண்டும். அப்படி மாறி இருந்தால் தான் டார்வின் கோட்பாடு 100 சதவீதம் உண்மையாக இருக்க முடியும். ஆனால் இன்றும் மனிதன் மனிதனாக தான் இருக்கிறான். அப்படியானால் பரிணாம வளர்ச்சி மனிதனோடு முடிந்து விட்டதா? விஞ்ஞானத்தின் படி மனிதனுக்கு மேற்பட்ட உயிரினம் பிரபஞ்சத்தில் எங்கும் கண்டு பிடிக்கப்படவில்லையே. அல்லது இருப்பதாகவும் எந்தவித தெளிவான ஆதாரங்களும் இன்றுவரை கிடைக்கவில்லையே. நல்லவேளை டார்வின் கண்களில் வானதூதர்கள் யாரும் தென்படவில்லை. இல்லாவிட்டால் வானதூதர்கள் தான் மனிதனுக்கு மேற்பட்ட வளர்ச்சி அடைந்த உயிரினம் என்று சொல்லி இருப்பர். இன்னும் சில புத்திசாலிகள் மனிதனில் இன்னும் பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது முழுமையடைய ஒரு லட்சம் வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள். இந்த மாதிரி பதில்கள் அவர்களுக்கு தாங்கள் அறிவு பூர்வமாக பேசுவது போல் இருக்கும். ஏனென்றால் இந்த ஒரு லட்சம் வருடத்தில் கேள்வி கேட்டவனும் இருக்க மாட்டான், பதில் சொல்கிறவனும் இருக்க மாட்டான். இவர்கள் சந்ததிகள் இருக்குமா என்பதே சந்தேகம். சில விஞ்ஞானிகளும் இன்றைய பல கேள்விகளுக்கு இது போன்ற பதில்களை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். சரி இதை ஏற்று கொண்டால் கூட நான்கு கால்கள் இரண்டு கால்களாக மாறி இருக்கும் போது,  இந்த இரண்டு கால்களும் குறைந்த பட்சம் இன்று ஒரு கால்களாகவாது  மாறி இருக்க வேண்டும் அல்லவா? சிந்தித்து பாருங்கள். மேலும் இதில் சிரிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இயேசு கிறிஸ்து வருகிறார் என்று 2000 வருடங்களாக கிறிஸ்தவர்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை அவர் வரவில்லை. எனவே இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை என்று சொல்கிற மனிதர்கள், மனிதன் இன்னொன்றாக மாற ஒரு லட்சம் வருடங்கள் ஆகும் என்பதை மனப்பூர்வமாக ஏற்று கொள்கிறார்கள். இது தான் சிரிப்பை வரவழைக்கிறது.

2.  பூமியில் மனிதன் வாழ்ந்ததை பற்றிய வரலாற்று ஆதாரங்கள் மனிதனுக்கு கிமு 8000 வருடத்தில் இருந்து தான் இன்றுவரை  கிடைத்திருக்கின்றன. இந்த கிமு 8000 ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் இருந்து இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆதாரங்களும் சந்தேகத்திற்கு இடமாக கூட கிடைக்கவில்லை. எனவே தான் கிமு 8000 வருடங்களுக்கு முந்தைய காலங்களை வரலாறு ஆசிரியர்கள் "வரலாற்றுக்கு முந்தைய காலங்கள் "என்று சொல்கிறார்கள். இந்த காலங்கள் எல்லாமே ஒரு யூகத்தின் அடிப்படையில் இருக்கலாம் என்று தான் இன்று வரை இருக்கின்றன. இந்த கிமு 8000 வருடத்தில் இருந்து இன்று வரை  ஒரு குரங்கு மனிதனாக மாறியதாகவோ அல்லது ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறியதாகவோ எந்த ஒரு மனிதனும் பார்த்ததாகவோ அல்லது எழுதி வைத்ததாகவோ எந்த ஒரு வரலாற்று ஆதாரங்களும் இன்று வரை  கிடைக்கவில்லை. ஒரு வேளை பரிணாம வளர்ச்சிக்கு ஒரு லட்சம் வருடங்கள் ஆகும் என்பதை நாம் ஏற்று கொண்டாலும் இந்த 10,000 வருடங்களை பரிணாம வளர்ச்சி தொடங்கிய 1 லட்சம் வருடத்தின் முடிவான காலமாக ஏன் எடுத்து கொள்ள கூடாது ? அதாவது 90,000 வருடங்கள் முடிந்து விட்டது என்று  நாம் ஏன் எடுத்து கொள்ள கூடாது ? ஏனென்றால் இந்த வருடத்தில் இருந்து இந்த வருடம் வரை இது இதாக மாறியது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. அப்படி பார்த்தாலும் இன்று உலகில் எந்த உயிரினமும் இன்னொரு உயிரினத்தின் பாதி பாதியாக கூட இல்லையே.  அது ஏன்?

மேலும் டார்வினின் பரிணாம வளர்ச்சி என்பது மேலான நிலைகளை அடைந்து கொண்டிருக்க ( ஒரு செல் உயிரினம் சிந்திக்கும் மனிதனாக மாறியது ) மனிதன் மட்டும் கீழான ஒரு நிலையை நோக்கி அல்லவா போய் கொண்டிருக்கிறான். ஒருவேளை பூமியின் தகவமைப்புக்கு ஏற்ப ஒரு உயிரி தன்னை படிப்படியாக மாற்றி கொள்வது  தான் பரிணாம வளர்ச்சி என்று சொல்வதற்கேற்ப இன்று மனிதன் அவன் மட்டும் வாழ தன்னைத்தான் அழித்து கொண்டும், பூமியை அழித்து கொண்டும், மற்ற உயிரினங்களை அழித்து கொண்டும் படிப்படியாக எந்திர மனிதனாக மாறி கொண்டிருப்பது தான் பரிணாம வளர்ச்சியா?  மேலும் ஒரு உயிரி தன்னை படிப்படியாக மாற்றிக்கொண்டு இன்னொரு உயிரினமாக மாறுமானால் அதற்கு முந்தைய உயிரினம் இருக்க கூடாதே. எல்லாமே மனிதனாக தானே இருக்க வேண்டும்? காரணம் ஒரு செல் உயிரியின் பரிணாம வளர்ச்சி தானே தற்போதைய மனித நிலை.  ஆனால்  இன்றும் ஒரு செல் உயிரி இருக்கிறதே. எனவே இதை வாசிப்பவர்கள் தெளிவாக சிந்தித்து பாருங்கள். இந்த முட்டாள் தனமான கோட்பாடை மற்றவர்களுடன் விவாதித்து தர்க்கம் பண்ணுவதை விட, தாங்களே தனக்குள் கேள்வி கேட்டு தனக்குள்ளே முதலில் தர்கித்து வாதியுங்கள். அப்போது தான் உண்மை தெரியும்.

3. மேலும் இதே விஞ்ஞானம் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கிற ஜீன் ஆராய்ச்சிகளின் படி( Genome Research) மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவன் அல்ல. மாறாக ஒரு கருப்பு நிற பெண்ணிடமிருந்து தான் தோன்றினான் என்றும் வெளியிட்டிருக்கிறது.  இப்போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. முதலில் குரங்கிலிருந்து தோன்றினான் என்று கூறிய விஞ்ஞானம் இரண்டாவது மனிதனிடமிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்கிறது. இந்த இரண்டு கருத்துக்களும் விஞ்ஞானத்தில் இருந்து தான் வந்தது, விஞ்ஞான ஆராய்ச்சிகளின் படி தான் வந்தது. இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரான கருத்துக்கள். எனவே விஞ்ஞானம் எந்த அளவிற்கு மனிதனை குழப்பக்கூடியது என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள். ஆனால் விஞ்ஞானம் இல்லாத காலத்தில் எழுதப்பட்ட பரிசுத்தவேதாகமம் இன்றைய  நவீன காலத்தில் எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்த போதிலும், அதில் எந்த வார்த்தைகளும் மாற்றபடவில்லை என்பதையும், மாற்றி சொல்ல வில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

4. பரிணாம கொள்கையின் படி உடல் அமைப்பில் மாற்றம் நிகழ்வதாக கொண்டால், உதாரணத்திற்கு பாம்புகளில் பல இனங்கள் உள்ளன. குரங்குகளில் பல இனங்கள் உள்ளன. நாய்களில் பல இனங்கள் உள்ளன. ஆனால் நல்ல பாம்பில் 10 பாம்புகளை ஓரிடத்தில் ஒன்றாக  நிற்க வைத்து இந்த 10 பாம்புகளுக்கும் வித்தியாசம் காட்ட முடியுமா? அதுபோல் 10 பொமரேனியன் நாய்களை ஓரிடத்தில் ஒன்றாக நிற்க வைத்து இந்த 10 நாய்களுக்குள்ளும் வித்தியாசம் காட்ட முடியுமா? இவ்வாறு கொரில்லா, சிம்பன்சி, குரங்குகளுக்கும் வித்தியாசம் காட்ட முடியுமா?  இப்படி மனிதனுக்கு கீழான எந்த உயிரினங்களை எடுத்து கொண்டாலும் அந்த இனத்தில் அவைகளை வித்தியாசம் காட்ட முடியாது. ஆனால் 10 வெள்ளை இனத்தவர்களை, 10மங்கோலியர்களை, 10 நீக்ரோ இனத்தவர்களை, 10 இந்தியர்களை ஓரிடத்தில் ஒன்றாக நிற்க வைத்து இந்த மனிதர்களுக்குள் வித்தியாசம் காட்ட முடியுமா என்றால் மிக எளிமையாக காட்டி விடலாம். எனவே எந்த உயிரினங்களுக்கும் இல்லாத இந்த வித்தியாசம் மனிதனுக்கு மட்டும் எப்படி வந்தது? 10 பொமரேனியன் நாய்களுக்கிடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத மனிதன் குரங்கின் முகத்தோற்றம் மனிதனின் முகத்தோற்றம் போல் இருக்கிறது என்று கூறுகிறான்.

5.  பிரபஞ்சம் விரிவடைந்த போதே உயிரின் தோற்றமும் ஆரம்பித்து விட்டதாக விஞ்ஞானம் கூறி இருந்ததை நாம் முதலில் பார்த்தோம். விஞ்ஞானம் கூறிய இந்த உயிரின் தோற்றம் உண்மையானால் பிரபஞ்சத்தில் தோன்றிய உயிரினம் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் அல்லவா? அப்படி பிரபஞ்சம் முழுவதும் இல்லாவிட்டாலும் பிரபஞ்சத்தின் ஒரு சில இடங்களிலாவது இருக்கவேண்டும் அல்லவா? ஆனால் பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லையே. இது எப்படி சாத்தியமாகும்? ஒருவேளை கண்ணுக்கு தெரியாத நுண்ணிய உயிரினங்கள் பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானம் சொன்னாலும் கூட, அந்த கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் பூமியில் மட்டும் தான் மனிதனாகவும், விலங்குகளாகவும் மாறியதா? அணுவின் மூலக்கூறுகள் பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் போது இந்த பூமியில் மட்டும் உயிர்கள் எப்படி உருவானது? பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் போன்ற தனிமங்கள் இருக்கிறதே. அவைகள் இருக்கும் சதவீதத்தில் வேண்டுமானால் வேறுபாடுகள் காணப்படலாம். இப்படி இருக்கும் போது பூமியில் மட்டும் உயிர்கள் தோன்ற காரணம் என்ன? பூமியில் மட்டும் உயிர்கள் சுவாசிக்கும் அளவுக்கு ஆக்ஸிஜன் இருக்க காரணம் என்ன? பூமியில் மட்டும் ஹைட்ரஜனும்,  ஆக்ஸிஜனும் சேர்ந்து திரவ நிலை தண்ணீராக மாறி இருக்க காரணம் என்ன? இதை நன்றாக சிந்தித்து பாருங்கள். பிரபஞ்சத்தில் தானாய் தோன்றிய  உயிர்கள் இந்த பூமியில் மட்டும் தான் இருக்குமா?

கடவுள் பூமியில் மட்டும் தான் உயிர்களை உண்டாக்கினார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. மாறாக பிரபஞ்சம்  முழுவதும் உயிர்களை உண்டாக்கினார் என்று எழுதி இருந்தால் இன்றைய விஞ்ஞானம் இது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தடுமாறி கொண்டிருக்காது. எல்லையற்ற பிரபஞ்சத்தின் இரகசியங்கள் அனைத்தையும் மனிதனின் உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கும். பதில் சொல்ல தெரியாமலே உயிர் அப்படி தோன்றியது,  இப்படி தோன்றியது, அங்கே தோன்றியது என்று விஞ்ஞானிகள் மக்களை நம்ப வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது பதில் மட்டும் கிடைத்திருந்தால் ஒட்டு மொத்த மக்களின் நிலை என்ன? இப்படி பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு எல்லாம் பரிசுத்த வேதாகமம் பதில் சொல்லும் போது அந்த பதிலை ஏற்றுக்கொள்ளாமலும், கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமலும் இருக்கின்றவர்களை நாம் என்ன சொல்வது? கடவுளை விட பெரியவன் ஆக வேண்டும் என்ற அறிவின் மமதை தான் காரணமா?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.