“பழைய புத்தகங்கள் கண்காட்சி” ஒன்றிலே, ஒரு மேஜையில் 3 வேதாகமங்களும் இடம் பெற்றிருந்தன. அதில் ஒன்று புத்தம் புதிதாய், ரொம்ப அழகாய் இருந்தது. மற்றொன்று சற்று நெளிந்து வளைந்து இருந்தது. மூன்றாவது வேதாகமம் தனது இயல்பான அளவை விட பெருத்து, ஆங்காங்கே மடங்கி, சுருண்டு, ஓரங்களெல்லாம் அழுக்காகி பரிதாபமாக காணப்பட்டது. அமைதியாயிருந்த அவைகள் மூன்றும் சற்று நேரத்தில் ஒன்றொடொன்று பேச ஆரம்பித்தன. என்ன பேசுகின்றன என்று நாமும் கேட்போமா?
பைபிள் 1:- “எங்க எஜமான் ரொம்ப ரொம்ப நல்லவர், என்ன எவ்வளவு பாதுகாப்பா வைத்திருந்தாரு தெரியுமா? அவரது திருமண நாளன்று அவங்க மனைவி என்னை பரிசாக கொடுத்தாங்க. அவர் என்னை தனது வீட்டு வரவேற்பறையிலுள்ள ஒரு கண்ணாடி ஷோகேஸில் வைத்து, என் மேல் ஒரு தூசி கூட படாதபடி பத்திரமாய் மூடி வைத்தார். அதுக்கப்புறம் இன்றைக்குத்தான் வெளியே வந்து உலகத்தையே பார்க்கிறேன்” என்றது.
பைபிள் 2:- இதுவும் ரொம்ப ஆசையா பேச ஆரம்பித்தது. “எங்க எஜமானும் ரொம்ப நல்லவர். வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி ஆனவுடன் “போனவாரம் இங்கதானே வைச்சேன்” என்று முணுமுணுத்துக் கொண்டே என்னை அவசரமா பரபரப்போட தேடுவார். என்னை கண்டுபிடித்து நெஞ்சோட அணைத்துக்கொண்டு ஆலயத்திற்கு செல்வார். பிரசங்கம் ஆரம்பித்தவுடன் என்னை திறக்கணும் என்று தான் நினைப்பார். அதற்குள் அவர் கண்களை தூக்கம் தழுவ என்னை அப்படியே வைத்து சாய்ந்து தூங்கிவிடுவார். அதனால்தான் நான் வளைந்து, நெளிந்து இருக்கிறேன்” என்றது.
பைபிள் 3:- “எங்க எஜமான் படுத்துற பாட்டை என் கேட்கிறீங்க! தினமும் என் முகத்தில தான் விழிப்பார். பின் அவரது பையில் வைத்துக்கொண்டு எல்லா இடத்திற்கும் என்னை தூக்கிக் கொண்டு போய் விடுவார். டெய்லி மூன்று தடவையாவது என்னை திறந்து வாசிப்பார். வசனத்தை கோடிடுவார். அப்படி வாசிக்கும் போது இருதயத்தில் உணர்த்தப்பட்டார் என்றால், கண்களிலிருந்து மாலைமாலையாய் கண்ணீர் வரும், மனுஷன் அதை சட்டையில் துடைப்பாரு என்று பார்த்தா அதுவும் என் மேல தான் விழும். இப்படி நான் அடிக்கடி கண்ணீரில் ஊறி ஊறி நொந்து நூடுல்ஸாகி விட்டேன்” என்றது.
கிறிஸ்தவ நண்பர்களே! நியாயத்தீர்ப்பு நாளில் உங்கள் வேதாகமம் உங்களது வேதவாசிப்பைக் குறித்து என்ன சாட்சி சொல்லும்?.....
