மறக்கப்படுவதில்லை

"யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்;  இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை" (ஏசா. 44:21).

ஒருவன், மரித்துப்போன தன்னுடைய நண்பனின், முதலாவது ஆண்டை நினைவுகூர்ந்து, நினைவு அஞ்சலி ஒன்றை அச்சடித்திருந்தான். அதிலே உள்ளத்தைத் தொடும் வாசகம் இருந்தது. "பார், உன்னை மறந்தால் தானே, நினைப்பதற்கு?" அநேகரது அன்பும், நட்புறவும் இனிமையாயிருக்கிறது. மறக்க முடிவதில்லை.

நான் கல்லூரியில் படிக்கும்போது, எனக்கு அநேக நண்பர்கள் இருந்தார்கள். படிப்பு முடிவில் பிரிந்து செல்லும்போது, ஆட்டோகிராப் எழுதுவார்கள். "வானம், சூரியனை மறந்தாலும், மலர்கள் மணத்தை மறந்தாலும், உன்னை எப்படி மறப்பேன்?" என்று, எழுதுகிற எழுத்தினால் உள்ளம் மகிழ்ச்சியாயிருக்கும். ஆறு மாதத்திற்கு பிறகு, அவர்கள் என்ன ஆனார்கள்? என்றே தெரியாது.

"தாஜ்மஹால்" ஒரு நினைவுச் சின்னம். சிலர், மற்றவர்களின் பிறந்த நாளை நினைவுகூர்ந்து, அன்பளிப்புகளை அனுப்புவார்கள். தாவீது, சவுலுக்குப் பயந்து, காடுகளில் வாழும் போது, எருசலேமை நினைத்தார். "எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக. நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும் போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக" (சங். 137:5,6).

தாவீது, தனது பாவத்தினிமித்தம் நோய்கொண்டு, ஒடுங்கிப்போனபோது,  துக்கத்தோடு சொன்னார், "செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப் பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்" (சங். 31:12) என்றார். ஆனால் தாவீதை நினைவுகூர்ந்த கர்த்தர், தம்முடைய தீர்க்கதரிசியாகிய நாத்தானை, தாவீதண்டை  அனுப்பினார். நாத்தான், பாவத்தை உணர்த்தி, தாவீதோடு பேசியதால், தாவீது பாவங்களை அறிக்கையிட்டார். தேவனோடு ஐக்கியமானார். மறுபடியுயும் இருவருக்குமிடையே அன்பு துளிர்த்தது. கர்த்தர் தயவுள்ளவர், காருண்யமுள்ளவர். அவர் உங்களை நினைத்திருக்கிறார்.

அநேகர், "கர்த்தர் என்னை கைவிட்டார்; ஆண்டவர் மறந்தார்" என்று புலம்பு கிறார்கள். ஆனால் கர்த்தர் என்ன சொல்லுகிறார்? "ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக் கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது" (ஏசா. 49:15,16).

கணவனால், மனைவி கைவிடப்படலாம். பெற்றோரால், பிள்ளைகள் கைவிடப் படலாம். ஆனால் கர்த்தர் உங்களை ஒருநாளும் கைவிடமாட்டார். துயர நேரத்தில், யோபு சொன்னார், "என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்" (யோபு. 19:14). அவருடைய மனைவியும்கூட, அவரை கைவிட்டு, "நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்" (யோபு 2:9).

ஆனால் கர்த்தரோ, "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" (யோசுவா 1:5) என்று அன்போடு உடன்படிக்கை செய்திருக்கிறார். "இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்த படியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்" (யோவா. 13:1).

நினைவிற்கு:- "எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர் களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை" (சங். 9:18).

சகோ. J. சாம் ஜெபத்துரை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.