அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது
சாத்தான் தன் காவலிலிருந்து
விடுதலையாகி, பூமியின் நான்கு
திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய
கோகையும் மாகோகையும்
மோசம்போக்கும்படிக்கும், அவர்களை
யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும்
புறப்படுவான்; அவர்களுடைய தொகை
கடற்கரை மணலத்தனையாயிருக்கும்
அவர்கள் பூமியெங்கும் பரம்பி,
பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும்,
பிரியமான நகரத்தையும்
வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது
தேவனால் வானத்திலிருந்து அக்கினி
இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது -
(வெளிப்படுத்தின விசேஷம் 20:7-9)
கர்த்தரின் ஆயிரம் வருஷ அரசாட்சி முடியும்
போது, சாத்தான் சற்றுக்காலம்
விடுவிக்கப்படுவான். அப்போதும் அவன்
தன்னை பாதாளத்தில் தள்ளின
தேவக்குமாரனுக்கு எதிராக புறப்பட்டு வந்து,
பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள
ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும்
மோசம்போக்கும்படிக்கும், அவர்களை
யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும்
புறப்படுவான். அநேகர் சிறையில் பத்து
வருடங்கள் இருக்கும்போது மனம் திருந்தி
விட்டதாக கூறுவார்கள். ஆனால் சாத்தானோ
ஆயிரம் வருடங்கள் கழிந்தும் தன் குணத்தில்
சற்றும் மாறாதவனாக, தன்னை போன்ற குணம்
கொண்ட மற்றவர்களை கூட்டிச்சேர்க்கிறான்.
அவனோடு சேர்ந்து வருபவர்கள்,
பரிசுத்தவான்கள் அல்ல, ஆனால் ஆயிரம் வருட
அரசாட்சியில் பிறந்த பிள்ளைகளாய் இருக்க
வேண்டும். அவர்கள் எந்தவிதத்திலும்
பாவத்தினால் சோதிக்கப்பட்டிருக்க
சாத்தியமில்லை. ஏனெனில் பாவத்தை
கொண்டு வருகிற சாத்தான் ஆயிரம் வருடங்கள் பாதாளத்தில் தள்ளப்பட்டபடியால். ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படுகிற பரிட்சையில்
அவர்கள் தோற்றுப்போய், சாத்தானோடு
சேர்ந்து கொள்வார்கள்.
ஆயிரம் வருடங்கள் கிறிஸ்துவினுடைய
அருமையான களங்கமில்லாத, பரிசுத்தமான,
நீதியான, நியாயமான ஆட்சியை கண்டிருந்த
கடற்கரை மணலத்தனையான ஜனம், தங்கள்
குணத்திலும் சற்றும் மாறாதவர்களாக,
சாத்தானோடுக்கூட சேர்ந்து பிரியமான
நகரமாகிய எருசலேமை சூழ்ந்து
கொள்வார்கள். மனித இதயம் எத்தனை
திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாய்
இருக்கிறது!
அப்படி சேர்ந்து வரும்போது, தேவனால்
வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப்
பட்சித்துப்போட்டது. ஒரே நிமிடத்தில்
சங்காரமாகிப் போவார்கள். அவர்களின் முடிவு
சடுதியில் ஏற்படும்.
'மேலும் அவர்களை மோசம்போக்கின
பிசாசானவன், மிருகமும்
கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய
அக்கினியும் கந்தகமுமான கடலிலே
தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும்
சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்' (10ம்
வசனம்). ஏற்கனவே அக்கினியும், கந்தகமுமான
அக்கினியிலே தள்ளப்பட்டு வாதிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிற மிருகமும்,
கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடத்திலே
சாத்தானும் தள்ளப்படுவான். எத்தனை
பரிதாபமான காரியம்! அவர்கள் இரவும் பகலும்
சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்!
முடிவே இல்லாத நித்தியத்தை அவர்கள்
தழுவிக்கொள்வார்கள்.
இதுவரை சாத்தான் நரக அக்கினியிலே
வாதிக்கப்படவில்லை. ஏனெனில் அவன் ஆயிரம்
வருடங்கள் முடிவற்ற பாதாளத்தில்தான்
தள்ளப்படுகிறான். ஆனால் இப்போதோ
அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே
தள்ளப்படுவான். அங்கு அவன் தலைவனாக
இருப்பானா? ஒரு போதும் இல்லை, ஏனெனில்
வசனம் சொல்கிறது, அவர்கள் இரவும் பகலும்
சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்
என்று.
சாத்தான் வல்லமையும் தந்திரமுள்ளவனாக
இருந்தாலும், அவனுடைய போராட்டங்கள்
எப்போதும் தோல்வியே கண்டிருக்கிறது. அவன்
ஒருபோதும் ஜெயிக்கிறவனல்ல, எப்போதும்
தோற்று போகிறவன்தான்! அவனுடைய
முடிவு எழுதப்பட்டாயிற்று. அவனை
பின்பற்றுகிறவர்களும் அவனோடுக்கூட
அக்கினிக்கடலிலே வாதிக்கப்படுவார்கள்.
'பின்பு, நான் பெரிய வெள்ளைச்
சிங்காசனத்தையும் அதின்மேல்
வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய
சமுகத்திலிருந்து பூமியும் வானமும்
அகன்றுபோயின; அவைகளுக்கு
இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய
சிறியோரையும் பெரியோரையும்
தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்;
அப்பொழுது புஸ்தகங்கள்
திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு
புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப்
புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படயே
மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக
நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம்
தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது;
மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள
மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே
நியாயத்தீர்ப்படைந்தார்கள்
அப்பொழுது
மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே
தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக்
காணப்படாதவனெவனோ அவன்
அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்' (20:11-15)
வேதத்தில் அநேக நியாயத்தீர்ப்புகளைக்
குறித்து காண்கிறோம். ஒவ்வொரு பாவியின்
நிமித்தமாக இயேசுகிறிஸ்து சிலுவையில்
நியாயந்தீர்க்கப்பட்டார். நாம் பட வேண்டிய
ஆக்கினையை அவர் சிலுவையில் சுமந்து
தீர்த்தபடியால், நம்முடைய பாவங்கள்
இயேசுகிறிஸ்துவின் சிலுவையில்
நியாயந்தீர்க்கப்படுகிறது. அதினால், நாம்
கிறிஸ்துவை சொந்த இரட்சகராக
ஏற்றுக்கொள்ளும்போது, நமக்கு வர இருந்த
மரணத்திலிருந்து ஜீவனுக்குள்
பிரவேசிக்கிறோம். அடுத்த நியாயத்தீர்ப்பு,
நம்மை நாமே நியாயந்தீர்ப்பது. 'நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம்
நியாயந்தீர்க்கப்படோம்'
(1கொரிந்தியர் 11:31)
அடுத்தது, கிறிஸ்துவின் நியாயசனம்.
'நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய
நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே
(ரோமர் 14:10) ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும்
தன்னைக்குறித்துத் தேவனுக்குக்
கணக்கொப்புவிப்பான்' (ரோமர் 14:12) என்று
இயேசுகிறிஸ்துவின் நியாயசனத்தைக்
குறித்தும், இரட்சிக்கப்பட்டவர்கள்
அடையப்போகும் நியாயத்தீர்ப்பைக்
குறித்தும்
எழுதப்பட்டுள்ளது.
பின்பு, நான் பெரிய வெள்ளைச்
சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும்
கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும்
அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. -
(வெளிப்படுததின விசேஷம் 20:11).
புதிய வானமும் புதிய பூமியும் தோன்றுமுன்பு இந்த வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு உண்டாகிறது.
வெள்ளை என்பது தூய்மையையும், தேவனுடைய பரிசுத்தத்தையும்
குறிக்கிறது. அந்த பரிசுத்த சிங்காசனத்திற்கு
முன்பாகத்தான் 'மரித்தோராகிய சிறியோரையும்
பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்;
அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன;
ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும்
திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில்
எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள்
கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்'
இந்த சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பவர்
இயேசுகிறிஸ்துதான். ஏனெனில்
'அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும்
குமாரனையும்
கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும்
நியாயத்தீர்ப்புச்
செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும்
அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு
ஒப்புக்கொடுத்திருக்கிறார்' (யோவான் 5:22) என்று
எழுதப்பட்டிருக்கிறது.
பிதாவானவரும், ஆவியானவரும் அங்கு
பிரசன்னமாயிருந்தாலும்,
இயேசுகிறிஸ்துவே நியாயத்தீர்ப்பு செய்வார்.
விசுவாசிகள் மாத்திரம் உயிர்த்தெழப்வோவதில்லை,
அவிசுவாசிகளும்
மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தரிப்பார்கள். 'மரித்தோராகிய
சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக
நிற்கக்கண்டேன்;...
சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும்
தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள்
தங்கள்
கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்' (20:12-13).
இந்த சமயத்தில் மரித்தோர் யாவரும் உயிர்த்தெழுந்து,
தேவனுக்கு முன்பாக
நியாயந்தீர்க்கப்பட நிற்பார்கள்.
இந்த இரண்டு உயிர்த்தெழுதலைக்குறித்தும், வேதத்தில்
ஏற்கனவே
எழுதப்பட்டிருக்கிறது. 'பூமியின் தூளிலே
நித்திரைபண்ணுகிறவர்களாகிய
அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும்
இகழ்ச்சிக்கும்
விழித்து எழுந்திருப்பார்கள்' (தானியேல் 12:2)
'இதைக்குறித்து
நீங்கள்
ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால்
பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்
அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்;
அப்பொழுது,
நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி
எழுந்திருக்கிறவர்களாகவும்,
தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி
எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்'
(யோவான் 5:28-29) 'நீதிமான்களும்
அநீதிமான்களுமாகிய
மரித்தோர் உயிர்தெழுந்திருப்பது உண்டென்று
இவர்கள் தேவனிடத்தில்
நம்பிக்கைகொண்டிருக்கிறதுபோல, நானும்
நம்பிக்கைகொண்டிருக்கிறேன்'
(அப்போஸ்தல நடபடிகள் 24:15) .
இந்த வசனங்கள் அநீதி
செய்கிறவர்களும், தீமை செய்தவர்களும் உயிரோடு
எழுந்து
நியாயத்தீர்ப்புக்காக வந்து நிற்பார்கள் என்று
விளக்குகிறது.
'அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன;
ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு
புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப்
புஸ்தகங்களில்
எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள்
கிரியைகளுக்குத்தக்கதாக
நியாயத்தீர்ப்படைந்தார்கள்'. ஒவ்வொருவரும்
புஸ்தகத்தில்
எழுதப்பட்டிருக்கிறபடி நியாயத்தீர்ப்படைவார்கள்.
ஒவ்வொருவருடைய
கிரியையும் பாவங்களும், நன்மைகளும் அந்த புஸ்தகத்தில்
எழுதப்பட்டிருக்கும். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால்
கழுவப்பட்டிராத
ஒவ்வொருவரின் பாவங்களும்
வெளியரங்கமாகும். சிறியோர்,பெரியோர்
ஒவ்வொருவருக்கும் முன்பாகவும், அவர்களுடைய
வாழ்க்கை அப்படியே
தெரியும். ஒருவரும் ஒன்றும் பேச முடியாது.
ஒவ்வொருவரின் இரகசிய
பாவங்களும் அங்கு வெளியாகும். யாருக்கும்
தெரியாது என்று நாம்
நினைத்து செய்கிற பாவங்கள் அங்கு
வெளியரங்கமாய் தெரியும். கிறிஸ்து
இல்லாதபடி மரிக்கிற ஒவ்வொருவரின் கதியும்
இதுவே. எல்லா
பாவங்களையும் விட இயேசுகிறிஸ்துவை
ஏற்றுக்கொள்ளாதபடி
புறக்கணித்த பாவமே மிகப்பெரிய பாவமாக
கருதப்படும்.
ஜீவ புஸ்தகம் பரலோகத்திற்கு செல்லும் விசுவாசிகளுடைய
பெயர் எழுதப்பட்டிருக்கும் புத்தகமாகும். அது இங்கு ஏன் எடுத்து வரப்படுகிறது
என்றால், சிலர், தாங்கள் செய்த நன்மையான
காரியங்களை குறித்து
சொல்லி, தாங்கள் பரலோகத்திற்கு பாத்திரர்கள்
என்று கர்த்தரிடம்
முறையிடலாம்.
அப்போது ஒருவேளை தேவன் அவர்களுக்கு
அவர்களுடைய
பெயர்கள் அதில் எழுதப்பட்டிருக்கிறதா
என்று பார்க்க
அனுமதிப்பார்.
பாவிகள் அத்தனைப்பேரும் மனம் திரும்பி, அவர்களுடைய
பெயர்களும்
ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால் எத்தனை
நலமாயிருக்கும்!
. 'அப்பொழுது மரணமும் பாதாளமும்
அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன.
இது இரண்டாம் மரணம்' (20:14) .
இது இரண்டாம்
மரணம் என்று ஏன்
எழுதப்பட்டிருக்கிறது என்றால், முதலாம்
மரணத்திற்குப்பின் அதாவது சரீரம்
மரணமடைந்தப்பின் ஏற்படும் மரணமாகும். இந்த மரணம்
ஜீவனில்லாமல்
எப்போதும் உயிரோடு இருப்பதாகும். நித்திய மரணம் ஆனால்
நித்தியமாய் வேதனையை அனுபவிப்பது.
நரகத்தில் அதிக வேதனை, குறைந்த வேதனை என்று பிரிவுகள் உண்டா?
உண்டாயிருக்கும் என்று வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள்,
ஏனெனில் வசனம் கூறுகிறது, 'தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும்
ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி
செய்யாமலும் இருந்த
ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
அறியாதவனாயிருந்து,
அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள்
அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்
கொடுக்கப்படுகிறதோ
அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய்
ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க்
கேட்பார்கள்' (லூக்கா
12:47-48) வேதம் கூறுகிறது, மரித்தோர் தங்கள்
கிரியைகளுக்குத்தக்கதாக
நியாயத்தீர்ப்படைந்தார்கள் என்று.
ஆம், அவர்களுடைய
கிரியைகளுக்கேற்றப்படி வித்தியாசங்கள் இருந்தாலும்,
நரகம் நரகமே!
அதில் மாற்றம் ஏதுமில்லை!
இரண்டாவது மரணம் என்பது, முழு மனிதனும் தேவனுடைய,
தேவ பிரசன்னத்திலிருந்து பிரிப்பதாகும். இந்த இரண்டாவது
மரணம், சந்தோஷம்,
சமாதானம், மகிழ்ச்சி எல்லாவற்றிலுமிருந்து
யுகாயுகமாய்
பிரிக்கப்படுவதாகும். தேவனிடமிருந்தும், பரலோகத்தினின்றும்,
சொந்த இரத்தப்பாசங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால்
அவர்களிடமிருந்தும்
என்றென்றும் பிரிப்பதாகும். எரிகிற அக்கினியை விட
இந்த கொடூரமான
பிரிவே அதிக வேதனைக்குள்ளாக்கும்.
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத யாவருக்கும்
இந்த நிலைமையே
ஏற்படும். இதை வாசிக்கிற நாம், நம்மோடு வேலை
செய்பவர்கள், நமக்கு
தெரிந்த அவிசுவாசியானவர்கள், கர்த்தரை
ஏற்றுக்கொள்ளாத நம்
உறவினர்கள் இரட்சிக்கப்பட என்ன பாரத்தை
கொண்டிருக்கிறோம்? நாம்
பரலோகம் சென்றால் அதுப்போதும் என்று நினைத்து மகிழ்ந்து
கொண்டிருக்கிறோமா? மற்றவர்கள் நரகத்திற்கு
செல்வது எத்தனை கொடிய காரியம்! அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டியது
நம்முடைய கடமையல்லவா? அவர்களுக்கு சத்தியத்தை
சொல்லி,கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டியது நமது
கடமையல்லவா?
செய்வோமா? கர்த்தர் சீக்கிரம் வருகிறார்!
ஆமென் அல்லேலூயா!
