*வற்றாத நீரூற்று!*

*"நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்"* (ஏசா. 58:11).

நீங்கள் ஒரு வற்றாத நீரூற்று! உங்கள் குடும்பத்துக்கும், தேசத்துக்கும் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட, ஒரு ஆசீர்வாத நீரூற்று. கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்யும்படி, தெரிந்துகொள்ளப்பட்ட அபிஷேகத்தின் நீரூற்று. மழை, ஆறு, ஏரி, குளம்,  எப்படி ஆசீர்வாதமானவைகளோ, அதுபோலவே வற்றாத நீரூற்றும் ஆசீர்வாதமானதாகும். யாரும் வறண்ட நிலத்தையோ, காய்ந்த பூமியையோ, விரும்புவதில்லை. நல்ல நீரூற்றைக் கண்டு, அகமகிழுகிறார்கள்.

நீரூற்றில் தண்ணீர், இரவும் பகலும், சுரந்துகொண்டேயிருக்கும். "கர்த்தருடைய கிருபையால், நான் என் வாழ்நாள் முழுவதும், வற்றாத நீரூற்றைப்போல ஆவியிலே வளர்ந்துகொண்டேயிருப்பேன்" என்று நீங்கள் விசுவாச அறிக்கை செய்யுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வாதத்தின் நீரூற்றாக, ஆயிரமாயிரமான பேர் பயன்பெறும்படி, கிருபையாய் பயன்படுத்துவார்.

இன்று எங்கு பார்த்தாலும், "மினரல் வாட்டர்" என்று சொல்லி, தண்ணீரை பாட்டிலிலே அடைத்து, விற்பனை செய்கிறார்கள். "இது சிறுவாணி  நீரூற்றிலுள்ள தண்ணீர், இது குற்றாலம் அருவியிலுள்ள தண்ணீர். ஏலகிரி மலையின் நீரூற்று" என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நீரூற்றிலுள்ள தண்ணீர், சுத்தமுள்ளதாகவும், சுவையுள்ளதாகவும், உடலுக்கு ஆரோக்கியமுள்ளதாகவும் இருக்கும்.

நான் சிறுவனாயிருந்தபோது, இலங்கையில் "கவுடுபலல" என்ற கிராமத்தில் இருந்தோம். மிகவும் அழகான மலைகளும், அடர்த்தியான காடுகளும், மரங்களும் உள்ள இடம். மலையின் அடிவாரத்தில் மிகவும் அழகான நீரூற்றுகள், பொங்கி பொங்கி, வந்துகொண்டேயிருக்கும். நீரூற்றை ஆடு மாடோ, மனிதரோ வந்து, தூர்த்து விடாதபடி, நான்கு புறங்களிலும் சுவர் வைத்து, பாதுகாப்பாக அடைத்திருக்கிறார்கள். அந்த நீரூற்றிலிருந்து வெளிவரும் தண்ணீர், ஒரு கால்வாயாக புறப்பட்டு ஓடும். அந்த கிராம மக்கள் அதில் குளித்து மகிழுவார்கள். கண் காண்கிற இட மெல்லாம் நெல் வயல்கள், பச்சை பசேல் என்று காணப்படும். அந்த நீரூற்றினால், இன்றைக்கும், அந்த கிராமம் செழிப்பாக விளங்குகிறது.

ஒருவேளை இன்றைக்கு நீங்கள் வேலையில்லா திண்டாட்டத்தினாலும், கடன் பிரச்சனையினாலும், வறுமையினாலும் வாடி, "ஐயோ, நான் வெறுமையாய் நிற்கிறேனே, மற்றவர்களுக்குப் பாரமாய் இருக்கிறேனே, நான் இந்த உலகத்தில் வாழ்ந்து என்ன பயன்?" என்று துக்கத்தோடே சொல்லக்கூடும். அல்லது  யாருக்கும் பிரயோஜனமற்ற பாழும் கிணறு, கனியற்ற மரம் என்று நொந்துகொள்ளக்கூடும். தேவபிள்ளைகளே, இன்றைக்கு கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே குறுக்கிட விரும்புகிறார். உங்களை ஆசீர்வாதமான நீரூற்றாக்க விரும்புகிறார். உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார். கண்ணீரை ஆனந்தக் களிப்பாய் மாற்றுவார். மாராவாகிய கசப்பை மதுரமான, ஏலிமாக மாற்றுவார். தோல்வியை ஜெயமாக மாறப்பண்ணுவார். இருளை வெளிச்சமாக மாற்றுவார்.
இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குத் தரும் வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொண்டு "என் வறுமையின் நாட்களும், போராட்டத்தின் நாட்களும் முடிந்துபோயின. நான் ஒரு ஆசீர்வாதமான நீரூற்று. நான் என் குடும்பத்துக்கும், என் உறவினருக்கும், என் தேசத்துக்குமே ஆசீர்வாதமாக விளங்குவேன்" என்று விசுவாச அறிக்கை செய்யுங்கள்.

நினைவிற்கு:- *"அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்"* (சங். 114:8).

சகோ. J. சாம் ஜெபத்துரை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.