மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும், கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். – நீதிமொழிகள் 29:25
மனிதர்களுக்கு பயப்படும் பயம் இருக்கக்கூடாது என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம், ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.(மத் 10:28) இரண்டு வகையான பயம் இருக்கிறது, ஒன்று மனுஷனுக்கு பயப்படுகிற பயம், மற்றொன்று தேவனுக்கு பயப்படும் பயம். மனிதர்களுக்கு பயப்படும் பயம் காணப்படும் போது, உங்களிடத்திலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும், கண்ணியை கொண்டுவரும், உங்கள் பிரயாசங்கள் எல்லாவற்றையும் தடுத்துவிடும். ஆனால் நீங்கள் தேவனுக்கு பயப்படும் போது நீங்கள் பாவத்திற்கு விலகி இருப்பீர்கள், பரிசுத்தமான வாழ்வை நாடுவீர்கள், நீங்கள் தேவனுடைய ஞானத்தில் வளருவீர்கள். நீங்கள் தேவனுக்கு பயப்படும் போது, மனிதனுடைய எல்லா கண்ணிகளுக்கும் விடுவிக்கப்படுவீர்கள். தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை, உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.(1சாமு 17:32) பெலிஸ்தனாகிய கோலியாத்தின் வார்த்தைகள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு பயத்தை கொடுத்தது. அவனுடைய தோற்றத்தையும், அவனுடைய சத்தத்தையும் கேட்ட இஸ்ரவேல் ஜனங்களும், இராஜாவாகிய சவுலும் கோலியாத்தின் முகத்துக்கு விலகி ஓடினார்கள். இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப் போவார்கள்.(1 சாமு 17:24) தாவீது ஒருவன் மாத்திரமே இவன் நிமித்தம் ஒருவருடைய இருதயமும் கலங்க வேண்டாம் என்று சொல்லுகிறான். தாவீது முழுவதுமாக தேவனை சார்ந்திருந்தபடியினால் இந்த வார்த்தையை சொல்ல முடிந்தது. தேவன் தனக்கு கோலியாத்தின் மீது ஜெயத்தை கொடுப்பார் என்று தாவீது விசுவாசித்தான். தாவீது சவுலைப் பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன், அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து,அதை அடித்துக் கொன்றுபோட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன், விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான், அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான். பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான், அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ. கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான். (1சாமு 14:34-37) தாவீது கோலியாத்திற்கு பயப்படவில்லை எனவே அவன் கோலியாத்தை ஜெயித்தான். தாவீதுக்கு தேவனுக்கு பயப்படும் பயம் இருந்தது. எனவே அவன் தேவனுக்கு பிரியமில்லா காரியங்களை செய்யும்போதும், பாவம் செய்யும் போதும், அதை தேவன் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதையும், அவன் செய்யும் காரியங்கள் தேவனுக்கு விரோதமானவைகள் என்பதை அவன் நம்பினான். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன், நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.(சங் 51:2-4) பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் எல்லா இரகசியங்களையும் தேவன் அறிவார் என்பதை மறவாதீர்கள். யோசேப்பு போத்திபார் வீட்டில் இருந்த போது, போத்திபாரின் மனைவி அவனை பாவம் செய்யும்படி சொன்னபோது, யோசேப்பு தேவனுக்கு பயந்த படியினால், நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை, நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.(ஆதி 39:7-9) தேவனுடைய பிள்ளைகளே, நீங்கள் எதை செய்தாலும் தேவன் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும். அப்பொழுது மனிதனுக்கு பயப்படுகிற பயம் உங்களுக்கு காணப்படாது.
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். – 2தீமோத்தேயு 1:7
Pastor. Daniel karthikeyan
Church of the Firstborn
