முதலில் குடும்ப ஜெபம் செய்வது சுலபமானதல்ல என்பதை நாம் நன்கு அறிய வேண்டும்.
குடும்ப ஜெபம் செய்ய எல்லாரும் தேவனை தேடும் எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் எல்லோரும் அப்படி இருப்பது சாத்தியமல்ல.
குடும்பத்தில் ஒரே ஒருவர் குடும்ப ஜெபம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் நேரம், குடும்ப சூழ்நிலை மற்றும் மற்றவர்களின் புரிந்து கொள்ளுதல் எதுவும் சரியாக அமைந்து விடாது.
ஜெபம் என்றாலே எதிர்ப்பு தான் வரும். இதை நன்கு அறியவும். எனவே மற்றவர்களை ஊக்கப்படுத்தி முழங்காலிட வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
நீங்கள் இப்படி குடும்ப ஜெபத்துக்காக உங்கள் மனைவி / கணவரை அழைத்தால், அல்லது பிள்ளைகள்/ பெற்றோரை அழைத்தால் பதில் இவ்வாறு வரக்கூடும்.
1. நான் தனியா பண்ணிட்டேன், வேணாம்.
2. எனக்கு மூடு சரியில்லை.
3. எனக்கு நிறைய வேலை இருக்கு
4. இப்போ அதுக்கு நேரம் இல்ல
5. நீங்களே பண்ணிக்கோங்க
6. அப்புறமாக பண்ணலாம்...
7. நீங்க என்ன அவ்ளோ பக்திமானா, யோக்கியமா ?
8. உன் வேலைய பாரு, என்னலாம் சும்மா கூப்பிடாத
இவ்வாறு மனிதரின் பதில்கள் நீண்டு கொண்டே போகலாம். இது உங்களுக்கு அவர்கள் கொடுத்த பதில் அல்ல, மாறாக அவர்களுக்கு முன்பாக நீட்டப்பட்ட தேவகரத்திற்கு அவர்கள் கொடுத்த பதில் என்பதை அறிய வேண்டும். எனவே நீங்கள் கோபப்பட்டு மொத்தமாக உறவுகளை அழிக்க வேண்டாம். வீட்டில் உள்ள ஆத்துமக்களை ஆதாயப்படுத்துவது சுலபம் அல்ல.
இரண்டாவது, நீங்கள் அவர்களை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.
உடனடியாக கோபப்பட்டு கத்தினால் அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து அடங்கலாம், அல்லது சண்டையிடலாம். ஆனால் உறவுகள் நிச்சயம் பாதிக்கப்படும்.
எனவே வராதவர்களை விட்டுவிட்டு ...இப்போது இருக்கும் ஆட்களை கொண்டு உங்கள் குடும்ப ஜெப வாழ்க்கையை தொடங்குங்கள்.
முதலில் 3 அல்லது 4 தெரிந்த பாடல்களை கொண்டு துவக்கவும். வீட்டில் யார் ஜெபத்துக்கு வராமல் இருக்கிறார்களோ, அவர்கள் வந்தால்....அவர்களுக்கு தெரிந்த பாடலை மட்டும் உபயோகிக்கவும். எனவே பக்திக்கேதுவான காரியங்கள் அவர்கள் மனதிலே நடக்கும்.
பின்னர் அவர்களின் ஜெப வேண்டுதலுக்காக ஜெபிக்கவும். ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும் போது, பிரச்சனைகள் மாறும்.
மேலும் ஒவ்வொரு ஜெபக்குறிப்பு முடியும் போதும், ஒரு சிறிய சரணத்தை பாடினால் தூக்கம் வராது. அந்த சரணம் அந்த ஜெபக்குறிப்பை பற்றி இருந்தால் இன்னும் நலம்.
கடைசியாக யாராவது சிறிய செய்தியை தரும்படி கேட்கவும் அல்லது இன்று வேதத்தில் என்ன வாசித்தீர்கள் என யாரையாவது கேட்டு அவர்களை சொல்ல வைத்தால் நலம்.
எதுவும் இல்லாத போது, ஒரு வேதபகுதியை வாசித்து ஜெபித்து முடிக்கவும். மொத்தமாக எல்லாமே 20 நிமிடம் மேல் போகாமல் பார்த்து கொள்ளவும்.
சில குறிப்புகள்.
1. யாராவது வராவிட்டால் வலுக்கட்டாயமாக திணிக்க முயல வேண்டாம். விட்டு விடுங்கள். தேவன் நிச்சயம் கொண்டு வருவார்.
2. ஜெபத்தில் குடும்ப பிரச்சனையை வேதவசனத்தினால் கண்டிக்க முயல வேண்டாம். மாறாக தேவனை பற்றிய அறிவை மட்டும் தொடர்ந்து போதியுங்கள், தேவன் மறைமுகமாக அவர்களை மாற்றுவார்.
3. இரட்சிக்கப்படாதவர்கள் மேல் மட்டும் பட்சமாக பேசி, அன்பாலே எல்லாவற்றையும் செய்யவும். கர்த்தர் அவர்களை நிச்சயம் தொடுவார்
4. மேலும் பிள்ளைகள் பள்ளி செல்லும் நேரம், நாம் அலுவலகம் செல்லும் நேரம், சாப்பிடும் நேரம் என எல்லாவற்றிலும் ஜெபத்தை முக்கியப்படுத்தவும்.
5. ஒரே நேரத்தை இரவு உணவுக்கு வைத்தால், அதை குடும்ப ஜெபம் செய்ய பயன்படுத்தலாம்.
6. எனக்கு தெரிந்தவரை டிவி வைத்திருக்கும் குடும்பங்கள் ஜெபிப்பதில்லை. டிவியை ஜெபத்தின் போது அணைக்கவும், நீங்கள் தேவபக்தியோடு இருக்க விரும்பினால் , டிவியை வாங்கவே வேண்டாம்.