1 சாமுவேல்  3:19

அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போக விடவில்லை. - 1 சாமுவேல்  3:19

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, சாமுவேல் சிறுவனாக இருந்த போது, தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலைக் குறித்தும், ஏலியின் குடும்பத்தைக் குறித்தும், அவர்களுக்கு வரவிருக்கிற காரியங்களைக் குறித்தும் தீரக்கதரிசனமாக சொல்லுகிறார். அந்த காரியங்களை சிறுவனாகிய சாமுவேல் ஒன்றையும் மறைக்காமல் ஏலியினிடத்தில அறிவிக்கிறதை முந்தின வசனங்களில் நாம் வாசிக்கிறோம். அந்த சாமுவேல் வளர்ந்த பிறகு கர்த்தர் அவனோடு கூட இருந்தார் என்றும், கர்த்தர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையில் விழுந்து போக விடாதபடி சாமுவேல் மூலமாக சொன்ன எல்லாவற்றையும் நிறைவேற்றினார் என்றும் வாசிக்கிறோம்.

சாமுவேல் வளர்ந்த பிறகு 1 சாமு.9:6ம் வசனத்தில் காணாமற்போன சவுலின் தகப்பனுடைய கழுதைகளை கண்டுபிடிக்க அனுப்பும்போது, சவுலின் வேலைக்காரன், இதோ, இந்த பட்டணத்தில் தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர், அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும். அங்கே போவோம், ஒருவேளை நாம் போகவேண்டிய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்று சொல்லுகிறதை இந்த வசனத்தில் வாசிக்கிறோம். சாமுவேல் கர்த்தருடைய வாயாக இருந்து கர்த்தருடைய ஆலோசனையைக் சவுலுக்குக் கொடுக்கிறதை அந்த அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். கர்த்தர் சாமுவேல் மூலமாக அவர்களுக்குக் கொடுத்த ஆலோசனையின்படி நடந்தார்கள், காணாமற்போன கழுதையை கண்டுப்பிடித்தார்கள் என்று பார்க்கிறோம்.

பிரியமானவர்களே, சின்ன சாமுவேல் கர்த்தருடைய ஸ்தானாபதியாக இருந்து எதை சொன்னாரோ அதை கர்த்தர் ஒன்றும் தவறவிடாமல் நிறைவேற்றினார். இன்றைக்கும் நாம் சாமுவேலைப் போல நம்மை அர்ப்பணிப்போமானால் கர்த்தர் நிச்சயமாக நம்முடைய வார்த்தைகளை ஆம் என்றும், ஆமென் என்றும் நிறைவேற்றுவார். ஏசா.44:26ம் வசனத்தில் நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

பிரியமானவர்களே, இந்த சத்திய வசனத்தை வாசிக்கிற நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய ஊழியக்காரர்களாய் இருப்போமானால் நம்முடைய வாயிலே கர்த்தர் கொடுக்கிற வார்த்தைகளை கர்த்தர் நிலைப்படுத்துவார். அவருடைய ஸ்தானாபதிகளாகிய நம்முடைய ஆலோசனைகளை அப்படியே நிறைவேற்றி தருவார். ஆகவே நம்மை நாம் அர்ப்பணித்து, ஆண்டவரே எங்களுடைய வாயின் வார்த்தைகளை நிலைப்படுத்தும். எங்களுடைய ஆலோசனைகளை நிறைவேற்றும் என்று ஜெபிப்போம். கர்த்தர் அப்படியே நிறைவேற்றுவார்.     

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களோடிருப்பாராக, உங்களை நடத்துவாராக.            

நன்றி

சகோதரி மேரி அக்ஸிலியா

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.